Saturday, November 8, 2008

மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்.
"மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.
திகாயத் மேலும் கூறுகையில், ""1966ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. 1966ல் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்தது. இன்று வாரத்தில் 3 நாள்கள் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. 1966ல் 100 கிலோ கொண்ட ஒரு கோதுமை மூட்டையை விற்று 5 மூட்டை சிமெண்ட் வாங்கினோம். இன்று 1 மூட்டை சிமெண்ட் வாங்க 5 மூட்டை கோதுமையை விற்க வேண்டும். 10 கிராம் தங்கம் அன்று ரூ. 250. இன்று ரூ. 11,000. அன்று கோதுமைக்கு ரூ. 760 என்றும் கரும்புக்கு ரூ. 130 (1 டன்) என்றும் நிர்ணயித்தார்கள். இன்று கோதுமைக்கு ரூ. 1,000 என்றும் கரும்புக்கு ரூ. 818 என்றும் நிர்ணயமாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த விலையேற்ற அடிப்படையில் கவனித்து கோதுமைக்குரிய விலை ரூ. 3,000 என்றும் கரும்புக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயம் செய்வதுதான் நியாயம்''.
திகாயத் கூறியுள்ளதை இன்றுள்ள எதார்த்தங்களை வைத்து கவனித்தால் அவர் கூறியுள்ளதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
உலகமயமாதல் விளைவால் விற்பனைப் பொருள்களில் தடையற்ற வணிகம் என்பது ஏனோ அரிசி, கோதுமைக்கு இல்லை. அரிசிக்கும் கோதுமைக்கும் மட்டுமே கட்டுப்பாடான பொருளாதாரம் உள்ளது. அரசு, ஏகபோகமே நிகழ்கிறது. அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. அப்படி நிர்ணயிக்கப்படும் விலைக்கும் விஷம்போல் ஏறிவரும் சாகுபடிச் செலவுக்கும் தொடர்பே இல்லை. இந்திய விவசாயிகளில் ஐந்தில் நான்கு பேர் நடுத்தர சிறு குறுவிவசாயிகள். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்வோரும் அடக்கம். பஞ்சாப் ஹரியாணா போன்ற மாநிலங்களில் நிலத்தின் விலை ஏறியதாலும் குத்தகையும் ஏறியதாலும் குத்தகை விவசாயிகளுக்கு நிறைய நஷ்டம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை 2005 06ம் ஆண்டில் நிகழ்த்திய ஆய்வின்படி 1 ஏக்கர் கோதுமை சாகுபடி செய்ய சுமார் ரூ. 11,000 செலவாகிறதாம். அதில் குத்தகை முன்பணம் மட்டுமே ரூ. 5,000. அதன்பின் கூலி ஆள்கள் சம்பளம் ரூ. 1,700. இயந்திரங்கள், டிராக்டர், டிரில்லர் செலவு ரூ. 2,000. விதை ரூ. 400. உரம் ரூ. 1,100. பூச்சிமருந்து ரூ. 300. வட்டி ரூ. 200. இத்யாதி. இத்யாதி.
கேரள மாநிலத்தில் 2004 05ல் நிகழ்த்திய ஆய்வில் 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யவும் ஏறத்தாழ ரூ. 10,500 வரை ஆகிறதாம். இங்கு கூலி ஆள் சம்பளம் மட்டுமே ரூ. 6,000 ஆவதால் கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி அழிந்து வருவதுபோல் ஹரியாணாவில் கோதுமை சாகுபடி அழிந்து வருவதாக அப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வு கூறுகிறது. பசுமைப்புரட்சியில் கொடிகட்டிப் பறந்த பஞ்சாப், மேற்கு உத்திரப் பிரதேச மாநிலங்களிலும் கேரள வியாதி வந்துள்ளது. கூலிவேலை செய்ய பிகாரிகள் வருகின்றனராம். கூலி ஆள் சம்பளம் பற்றி அந்த நாள்களுடன் இந்த நாள்களை ஒப்பிட்ட திகாயத் கூறும் ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.
"கூலிக்கு ஆள்கள் மலிவாகக் கிட்டிய காலத்தில் கூலி ஆள்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இன்று 1 நாள் ஆண் கூலி ரூ. 120, பெண்கூலி ரூ. 70. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. கூலியை நெல்லாகவோ கோதுமையாகவோ வழங்கப்பட்ட அந்தக் காலத்தில் வேலை இல்லாத நாள்களில் பட்டினியிருக்க மாட்டார்கள். கூலி உயர்வு இருந்தாலும், பணவீக்கம் விலை ஏற்றம் காரணமாக கூலியாள்கள் இன்று வேலையில்லாத நாள்களில் பட்டினி கிடப்பதால் மகிழ்ச்சியாக இல்லை'. எனினும் சாகுபடிச் செலவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் கூலிச் செலவு உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சம்பளம் கொடுக்க வக்கில்லாத விவசாயிகளின் மானம் காற்றில் பறந்து கொண்டுள்ளது. விவசாயிகளின் மானம் மரியாதை மட்டுமல்ல; விவசாயமே மானம் இழந்துவிட்டதே. மண்ணுக்கும் மரியாதை குறைந்து வருகிறது.
உரங்களைப் பற்றிய உண்மை நிலவரம் மிகவும் கசப்பாயுள்ளது. 2002க்குப்பின் உரத்திற்குரிய விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. உர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம் இதனால் படிப்படியாக உயர்ந்து மானியத் தேவை ரூ. 1,19,772 கோடியாக உயர்ந்தது. விவசாயிகளின் நலன் கருதி உரவிலை உயர்த்தப்படவும் இல்லை. அதேசமயம் பட்ஜெட்டில் போதுமான அளவு உரமானியம் ஒதுக்க இயலாமல் துண்டு விழுந்தது. பல உர நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் துண்டுபோட்டுக் கொண்டன. அதாவது மூடுவிழா. யூரியா உற்பத்தியில் முதல்நிலை வகித்த ஃபர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபர்ட்டிலைசர் லிமிடெட் போன்றவை யூரியா, உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டன. உரமானியம் வழங்கப்படாத காரணத்தினால் மட்டுமல்ல, இறக்குமதி மூலப்பொருள் நாஃப்தா விலை உயர்வு காரணமாகவும் யூரியா விலை உயர்ந்தது.
இனி முழுக்க முழுக்க இறக்குமதி உரத்தை நம்பி இந்தியா வாழப் போகிறதா? இயற்கை விவசாயத்தை நம்பித்தான் வாழப் போகிறதா? இதற்குக் காலம் பதில் சொல்வது இருக்கட்டும். பூச்சிமருந்து விஷயத்தில் ஆரோக்கியமான மாற்றம் தென்படுகிறது.
பூச்சிமருந்து என்பது கொடிய நஞ்சு. அதனால் மனிதருக்கு நோய் ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல; இந்த விஷத்தின் விலையேற்றமும் (இரண்டு ஆண்டுகளில் 100 சதம்) காரணமாக மாற்றுப் பூச்சிமருந்தாக மூலிகைப்பூச்சி விரட்டி, வசம்பு, பூண்டு, மஞ்சள், திரிகடுகம், திரிபலா, வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றின் பயன் அதிகரித்துவிட்டது. ஆந்திரப்பிரதேசத்தில் பல கிராமங்களில் பூச்சிமருந்து முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சற்றுக் கூடுதல் விலையில் பயோமருந்துகளும் அறிமுகமாகிவிட்டன.
எனினும், விவசாயம் மானம் இழக்க மற்றொரு முக்கியக் காரணம் விதை. தன்மானமுள்ள ஒரு விவசாயி காய்கறி விதைகளாகட்டும், நெல், புஞ்சைதானியம், கோதுமை, பயறுவகை விதைகளாகட்டும் சொந்தமாகத் தயாரித்துச் சேமித்தார். வீரியரக விதைகள் அறிமுகமான காலகட்டத்தில் வேளாண்மைத்துறையின் விதைவிற்பனை நிலையங்களைச் சார்ந்து நின்று, விவசாயிகள் தாங்களே அறுவடை செய்து வந்த பாரம்பரிய நெல் ரகங்களைச் சேமிக்காமல், ஐ.ஆர்.8 மற்றும் தைச்சுங் ஜீன் பொருந்திய ஏடிடி எண் வரிசைகளை நம்பி நெல்விதை சேமிக்கும் மரபை இழந்தபோதே இந்திய விவசாயம் மானம் இழந்தது.
""ஆத்தூரு கிச்சடிச்சம்பா, ஆற்காடு கிச்சடிச்சம்பா, ஆனைக்கொம்பன், வையக்குண்டான், தங்கச்சம்பா, குதிரைவால், டொப்பி போன்ற பல நூற்றுக்கணக்கான விதைநெல் யாவும் தமிழ்மண்ணில் கற்பரசிகளுக்குப் பிறந்தவை. வீரியரக நெல் விதைகள் அன்னிய மண்ணில் பிறந்தவை. வீரியரக விதை நம்மிடம் குடிகொண்டபோதே மண்ணின் மானம் கப்பலேறியது. ஜீன் மாற்று விதைகளை அதிக விலை கொடுத்து மஹைக்கோ, மான்சென்டோ போன்ற பன்னாட்டு நிறுவன விதைகளுக்கு இந்திய விவசாயம் அடிமையாகி இந்த மண்ணின் மானம் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குப் போனதால் இந்திய விவசாயிகள் இன்று அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். வீரிய ரக விதைகளை கிலோ ரூ. 20க்கு வாங்கி வந்த காலம் மாறிப்போய் இன்று ஜீன் மாற்று விதைகள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,000 வரை விலை கொடுத்து வாங்கிப் போதிய அளவு விளைந்தும்கூட அதற்குரிய விலைகளை விற்கும்போது பெற முடியவில்லை. திகாயத் கூறுவதுபோல், கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த விதைகளின் சாகுபடிச் செலவும் கூடுதல் என்பதை கவனித்தல் நலம்.
விவசாயிகளைச் சுரண்டும் ஒரு புதிய விதைக் கொள்கை விவசாயத்தை மானமிழக்க வைத்துள்ளது. 2004 விதைச்சட்டம் 1966 விதைச்சட்டத்தைச் செல்லாக்காசாக்கிவிட்டது. புதிய விதைச்சட்டத்தில் தனியார் ஆதிக்கம் ஓங்கிப் பொதுத்துறை கேலிக்குரியதாகிவிட்டது. இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் அரசுப் பணத்தைக் கொண்டு விதை ஆராய்ச்சி செய்து மாநில வேளாண்மைத் துறைக்கு விதைகளை அனுப்பியது. கட்டாக், ஆடுதுறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எல்லாம் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்துக்குக் கட்டுப்பட்டவை. வீரியரக விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்கப்பட்டன. ஆனால் அரசு ஏகபோகத்தை அகற்றிவிட்டுப் பன்னாட்டு விதை நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டது. பன்னாட்டு விதை நிறுவனங்களின் விரிவாக்கப் பணியின் சுறுசுறுப்பு பொதுத்துறையில் இல்லாத காரணத்தால் பன்னாட்டு விதை நிறுவனங்களின் வீரிய ஒட்டு மற்றும் ஜீன் மாற்று பிடிடி விதைகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதில் மற்றொரு கொடுமை, வேளாண் விஞ்ஞானிகளின் துரோகச் செயல். அரசுத்துறையில் மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்ற இந்த விஞ்ஞானிகளைத் தனியார் பன்னாட்டு விதை நிறுவனங்கள் ஐந்து லகர சம்பளம் கொடுத்து வாங்கின.
அரசுப் பணியிலிருந்து தனியார் விதை நிறுவனங்களுக்குச் செல்லும்போது இந்த விஞ்ஞானிகள் அரசுப்பணத்தில் ஆராய்ச்சி செய்த மூலப்பொருள் சாதனங்களையும் கொண்டு போய்விட்டனர். அரசுத்துறை ஆராய்ச்சியே தனியார் ஆராய்ச்சியாக மாறியுள்ளது. பொதுத்துறை வழங்கிய வீரிய ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள் சேமித்து அடுத்த நடவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் வீரிய ஒட்டு பி.டிடி விதைகள் ஒரு அறுவடைக்குப் பின் மலடாகிவிடும். ஆகவே, ஒரு விவசாயி தன் கையை நம்பக்கூடிய ஒரு தற்சார்பை இழந்து விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகிவிட்டார். விஞ்ஞானிகள் துரோகிகளாகிவிட்டனர்.
இன்று பன்னாட்டு விதை நிறுவனங்கள் அளிக்கும் வீரிய ஒட்டு ஜீன் மாற்றம் பி.டிடி ரக விதைகளை மலட்டு விதைகளை என்று பயன்படுத்தினோமோ, அன்றே விவசாயத்தின் மானபங்கம் வெளிச்சமாகிவிட்டது. அன்று திரெளபதியின் வஸ்திரோபகர்ணத்திற்கு அதை நிகழ்த்த முடியாதபடி கண்ணபரமாத்மா காப்பாற்றினார். ஆனால் இந்தக் கலியுகத்தில் விவசாயம் விவசாயிகளின் வஸ்திரோபகர்ணத்தைக் காப்பாற்ற அந்தக் கண்ணபரமாத்மா வரவில்லையே, ஏன்? துரியோதனர்களின் சபைக்கூட்டம் தொடர்வதினால்தானோ!
ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

சாலை விபத்துகளைத் தவிர்க்க என்ன வழி?

நாளிதழ்களைப் புரட்டினாலோ, தொலைக்காட்சியைப் பார்த்தாலோ சாதாரணமாகக் காணப்படுவது சாலை விபத்துகள் பற்றிய செய்திகள்தான்.
லாரிகார் மோதல், பஸ் மீது ரயில் மோதல், சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது போன்றவை அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.
விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் சாலை விபத்துகளைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என்பதை உணரலாம்.
ஒரு நாளைக்கு இந்தியாவில் சராசரியாக 280 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. 2007ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழகத்தில் 59,140 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 65,726 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.
இதனால், உயிரிழந்தவர்கள் 12,036 பேர். காயமுற்றவர்கள் எண்ணிக்கை 83,135 பேர். தக்க நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை நாம் பெருமளவு குறைக்க முடியும். இதனால், விலை மதிக்க முடியாத உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.
மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால், சாலைகள் போதிய அளவு அதிகப்படுத்தப்படவில்லை. மாறாக ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகிவிட்டன. இதனால், சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்று காரணம் கூறப்படுகிறது. அப்படியானால் நான்கு வழிப்பாதையில் விபத்துகள் ஏற்படுவதில்லையா? சாலை விபத்துகளுக்கு இவை மட்டுமே காரணம் அல்ல.
உரிமம் பெறாமல் வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, குடிபோதை மற்றும் தூக்கக் கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவது, விவேகமில்லாத வேகத்தில் செல்வது, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, பழுதுள்ள வாகனங்களை ஓட்டுவது ஆகியவற்றால் சாலை விபத்துகள் நடக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
சாலை விபத்துகளைத் தடுக்க என்னதான் வழி? ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர் அந்த வாகனம் இயங்கும் விதம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். இதனால், நாம் எரிபொருளையும் சிக்கனப்படுத்த முடியும். விபத்துக் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முதலுதவி செய்வது எப்படி என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
சாலை விதிகளை மீறிச் சென்றால் அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டினால் தகுந்த வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இரவு 12 மணிக்கு மேல் 4 மணிக்குள்தான் அதிகமான பெரிய விபத்துகள் நேர்கின்றன. தூக்கக் கலக்கமே இதற்குக் காரணம்.
ஆகவே, இந்த நேரத்தில் வாகனங்களை ஓட்டவே கூடாது என்று தடை விதிக்க வேண்டும். பால், நாளிதழ் போன்றவை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் ஆம்புலன்ல் வண்டிகளுக்கும், காவல்துறை வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கலாம்.
குறித்த நேரப்படி நீண்ட தூரம் செல்லும், உதாரணமாக சென்னைகோவைபஸ்களுக்கு இந்த நேரத்தில் ஓட்ட அனுமதி அளிக்கலாம். இதன் மூலம் குற்றங்களையும் தடுக்க முடியும்.
செல்போன் எமதர்மராஜனின் பாசக்கயிறாக மாறி வருகிறது. தற்கால சாலை விபத்துகளைப் பற்றி ஆழ விசாரித்தால் அதில் செல்போன் சம்பந்தப்பட்டிருக்கும். ஆகவே, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டினால் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.
விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அமைக்கலாம். பஸ்கள் அதிக வேகம் செல்வதற்கு முக்கியக் காரணம் அதிகமான வேகத்தடைகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்.
வாகனங்களில் முறையான ஆவணங்கள் வைத்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இரவில் வாகனங்களின் பின்புறம் அவசியம் சிவப்பு விளக்கு எரிய வேண்டும். லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதைத் தடை செய்ய வேண்டும். அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், ஆட்டோக்கள் தடுக்கப்பட வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்யலாம். பள்ளிப் பாடத்திட்டத்தில் வாகனங்கள் ஓட்டும் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும். இவற்றை எல்லாம் கடுமையாக அமல்படுத்தினால் விபத்துகள் குறைவது திண்ணம்.
இ. சுப்பிரமணியம்
நன்றி : தினமணி

தேவை சுயாட்சி அதிகாரம் பெற்ற மாநிலம்

இலங்கைத் தமிழ் மக்களிடையே காணும் உணர்ச்சிகளின் வேகமும், ஒற்றுமைக் குறைவும் தோல்விகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டன. இலங்கை வாழ் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட்டு வருகின்றன. மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கு வாழ்வு கொடுத்த ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகள் உண்டு. வியாபாரங்கள், தொழில்கள் செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து சென்ற இந்தியத் தமிழர்களும் பிற பகுதியைச் சேர்ந்த இந்தியர்களும் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர். கொழும்பு நகரில் வியாபாரம், தொழில்கள் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்திய அரசு, இலங்கை அரசோடு செய்துகொண்ட லால் பகதூர் சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் விளைவாக லட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களும், வியாபாரம், தொழில்கள் நடத்தியவர்களும் இலங்கையைவிட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சரித்திர நிகழ்ச்சியும் நடந்தது. இந்த ஒப்பந்தத்தை அறிஞர் அண்ணா கடுமையாக எதிர்த்தார். இந்தியத் தமிழர்கள் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களைத் திட்டமிட்டு குடியேற்றிய சிங்கள அரசின் துர்பாக்கிய நிகழ்ச்சியும் நடந்தது. கிழக்கு மாநிலத் தலைநகர் திரிகோணமலை. திரிகோணமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கோனேஸ்வரன் மலைக்கோயில் உள்ளது. பூர்வீகத் தமிழரான சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று கிழக்கு மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த அமைச்சரவையில் முஸ்லிம் தமிழர் இஸ்புல்லாவும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் தமிழர் 1977ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவராக இருந்தார். வட பகுதியில் வாழும் தமிழர்களோடு சேர்ந்து ஒரு தனி மாநிலமாக அமைய வேண்டும் என்று போராடியவர்தான், கிழக்கு மாநிலத்தின் இன்றைய முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன். இவர் விடுதலைப் புலிக் குழுவைச் சேர்ந்தவர் தான். கருணா என அழைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி இயக்கத் தளபதி விநாயகமூர்த்தி முரளீதரனுடன் போராட்டக் குழுவில் இருந்தவர்தான் முதலமைச்சராக அமர்ந்துள்ளார்.
மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் தலைவராகத் தோன்றி இலங்கை அமைச்சராகப் பணியாற்றியவர் செளமியமூர்த்தி பாஸ்கரத் தொண்டைமான். இவர் என்னுடைய திருப்பத்தூர் தொகுதியில் புதூர் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது அவரைச் சந்தித்துப் பேசியது நினைவில் நிற்கிறது. இவருடைய உறவினர் ஆறுமுகத் தொண்டைமான் இன்றும் மலையகத் தமிழர்களின் தலைவராகவும், இந்தியத் தமிழ் மக்களின் சார்பாக இலங்கை அரசில் அமைச்சராகவும் உள்ளார். மலையகத் தொழிலாளர்களிடம் பேசியது தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தது, அந்தப் பகுதியில் முக்கிய நகரமான நுரேலியாப் பகுதிக்குச் சென்றது, அந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ் வியாபாரிகளைச் சந்தித்தது எல்லாம் நினைவில் நிற்கிறது.
இந்தியத் தமிழர்கள் இலங்கையில் பல பகுதிகளில் வாழ்ந்தனர். தமிழன் அரசாண்ட கண்டிப் பகுதிக்குச் சென்றதும் நினைவுக்கு வருகிறது. இப்படிப் பல பகுதிகளுக்குச் சென்று இந்தியத் தமிழர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் வாழும் அனைவரும் போற்றிப் புகழும் கதிர்காமம் முருகன் கோயில் நினைவுக்கு வருகிறது. தமிழர் பண்பாடு காத்து வளர்த்திடும் பல கோயில்கள் தமிழர்களால் பாதுகாக்கப்படுவது உண்மை வரலாறு.
1955ம் ஆண்டுக்குப் பிறகுதான் சிங்கள ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது. முதலில் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள், கல்வியில் சிறந்து, நீதிபதிகளாக, சிறந்த வழக்கறிஞர்களாக, அரசுத் துறைகளில் உயர் பதவிகள் வகித்தது சரித்திர உண்மைகள்.
சிங்கள மக்களின் எதிர்ப்பு உணர்வு வளர்ந்தது. சிங்களம் மட்டும் தான் ஆட்சிமொழி என்ற கொள்கை 1956ம் ஆண்டில் சட்டமாக அமல்படத் தொடங்கி தமிழர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அரசியல் ஆதிக்கம் தோன்றத் தொடங்கியது. தமிழர் தலைவரான ஈழத் தந்தை செல்வநாயகம் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபடுத்த முயன்றார். 1957ம் ஆண்டு பண்டாரநாயகா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965ல் டட்லி சேனநாயக செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற இரண்டு ஒப்பந்தங்களை இலங்கைத் தமிழர்கள் உரிமைகளைப் பெற்றிட ஈழத் தந்தை செல்வா இலங்கை அரசோடு செய்து கொண்டு சரித்திரம் படைத்தார். ஆனால் சிங்களத் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தால் செயல்படுத்தப்படாமல் ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டன. இலங்கை அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை.
ஜனநாயக முயற்சிகள் வெற்றி தராததால் சிங்கள ஆதிக்கக்காரர்களின் வெறித்தன்மையை அழித்திட ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற உணர்வு தமிழ் தீவிரவாதத்திற்கு வித்திட்டது. ஈழத் தந்தை செல்வா மறைவிற்குப் பின் தமிழ் தீவிரவாதம் அதிகரித்தது. தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்த பல ஈழத் தலைவர்கள் தீவிரவாதத்திற்குப் பலியாகினர். ஈழத் தந்தை செல்வாவின் மகனே இன்று இந்தியாவில் அகதியாக வாழ்கின்ற நிலை ஏற்பட்டது.
தீவிரவாதத்திற்கு இந்திய அரசு ஒத்துழைப்புத் தந்தது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டிலும் மாநில அரசும் ஆதரவு தரும் நிலை ஏற்பட்டது. ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் பாடுபட அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி முன்வந்தார். ஏராளமான பண உதவி செய்யப்பட்டது. இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பினார். இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் இருந்து பூர்வீகத் தமிழர்களைக் காப்பாற்றினார். இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தன்னைத்தானே தலைகுனிந்து கொண்டு தப்பிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோம். பிற்காலத்தில் இந்தத் தமிழ் மண்ணிலேயே தீவிரவாதத்திற்குப் பலியானார்.
ஆனால் அவர் செய்துகொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கை அரசின் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் தமிழர்கள் மாநில சுயாட்சியோடு ஆட்சி செய்கின்ற உரிமைகளைத் தர வேண்டும் என்ற இந்தியாவின் வேண்டுகோளை இலங்கை அரசு நிறைவேற்ற ஒப்புக்கொள்ளச் செய்தது பெரும் சாதனையாகும். அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டாலும் இன்னும் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பால் தடைபட்டுக் கொண்டே உள்ளது. இந்த ஒப்பந்தப்படி செயல்பட, இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளைப் பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேள்விகளை நான் எழுப்பினேன். பிற்காலத்தில் பிரதம அமைச்சரான அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைத் தமிழ்த் தீவிரவாதிகளுடன் இதுபற்றிப் பேசினால் உள்ள ஆபத்துகளை என்னிடத்தில் விளக்கிக் கூறினார்.
ராஜீவ் காந்தி அடித்தளம் போட்ட இலங்கை அரசின் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பதின்மூன்றாவது திருத்தம் என்ற பெயரில் 1987ல் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் காந்தி முயற்சியால் இலங்கை நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டாலும் அமல் நடத்துவதில் சிக்கல் தொடர்கிறது. இந்தத் திருத்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தோற்றம் கொண்டது. இதன்படி மாநில அரசுகள் அமைய வேண்டும். மாநில சட்டசபைகள் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் லிஸ்ட் 1 பட்டியலில் அடங்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் லிஸ்ட் 3 பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியும் இலங்கையில் ஆட்சிமொழியாக ஆகிட 13வது திருத்தச் சட்டம் வகை செய்துள்ளது. ஆங்கிலம் தொடர்பு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி சில மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு மாநில ஆட்சியாக நிர்வாகத்தை நடத்திடவும் வழிவகை தரப்பட்டுள்ளது. இதன்மூலம் பூர்வீகத் தமிழர்கள் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாநிலங்கள் எதிர்காலத்தில் ஒற்றுமையாகச் செயல்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் நிதியினை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து கொடுத்திட இந்தியாவில் இருப்பதைப்போல் நிதிக் கமிஷன் நியமித்து நிதிப் பங்கீட்டுக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் 13வது திருத்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் பூர்ணமாக நல்ல நோக்கத்தோடு மாநில அரசுகள் அமைந்திட இன்றைய இலங்கை அரசு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது. மாநிலங்கள் சுயாட்சி உரிமை பெற்றுச் சுதந்திரமாக அதிகாரங்களையும், நிதி உதவிகளையும் பெற்றிட வழிவகைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பூர்வீகத் தமிழர்கள் (ஈழத் தமிழர்கள்), மலையகத் தமிழர்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகளாக 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 225 பேர். அனைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் உரிமைகள் பெற்றிடும் வகையில் அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமைந்திட அனைத்துக் கட்சிக் குழுவில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
ராஜீவ் காந்தி முயற்சியால் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்த மாநில ஆட்சி உரிமைகள் இந்திய நாட்டில் உள்ளதுபோல் அமைந்திட இன்றைய இந்திய அரசு முயற்சி எடுத்தால் இலங்கையில் அமைதி தோன்றிட வாய்ப்புள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி கற்றிடும் வாய்ப்புகளிலும் ஒதுக்கீடு செய்து வழி வகுக்கப்படுமானால் இன்னும் சிறப்பாக ஒற்றுமை தோன்றிட வாய்ப்புள்ளது. சிங்களவர்கள் நிறைந்த இன்றைய ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் இந்திய அரசோடு ஒத்துழைக்கும் எண்ணம் கொண்ட கட்சிகளாக இருப்பது சாதகமான சூழ்நிலையாகும். தாய்த் தமிழக அரசியல் கட்சிகள் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை பிரிந்திட ஆதரவு தராமல் இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு தந்திட முயற்சிக்க வேண்டும். 25 மாவட்டங்களைக் கொண்ட இலங்கை முழுவதும் தமிழர்கள் அமைதியுடனும் உரிமையுடனும் வாழ்ந்திட எண்ணிட வேண்டும். இலங்கை மக்கள்தொகையில் சுமார் 25 சதவிகிதத்திற்கு குறையாது வாழும் இலங்கைத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நிலை ஏற்பட வேண்டும்.
இன்று மீண்டும் இலங்கைத் தமிழர் வாழும் வடக்குப் பகுதிகளில் ராணுவத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. போர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. தமிழ்த் தீவிரவாதிகள் தங்கள் வசம் உள்ள போர் விமானத்தின் மூலம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்தியதாக ஏற்கெனவே செய்தி வந்தது. மீண்டும் இன்று தீவிரவாதிகள் போர் விமானம் கொழும்பில் மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை நாட்டுக் கப்பல் மீது தீவிரவாதிகள் தங்கள் கப்பல் படை மூலம் தாக்கி அழித்தனர் என்று செய்தியும் வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்குப் பேராபத்து தொடரும் நிலையில் தாய்த் தமிழகத்தின் தமிழர்கள் எல்லாம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று ஒன்று சேர்ந்திருப்பது சரித்திர நிகழ்ச்சியாகும். இந்த ஒற்றுமை தொடர்ந்து இலங்கையில் வாழ்கின்ற தமிழர் பகுதிகளில் எல்லாம் சுயாட்சி அதிகாரம் பெற்ற மாநிலங்கள் உருவாகிட, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள், ஆட்சி அமைப்புகள், நீதிமன்றங்கள் என்று அனைத்துத் துறைகளிலும் அங்கம் பெறும் உரிமை உள்ள வாய்ப்புகளைத் தந்து, உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சம உரிமை வழங்கும் முறையிலும், சிங்களவர்களின் தனி ஆதிக்கம் இல்லாது வாழ்கின்ற நிலையைப் பெற்றிடும் புதிய சரித்திரம் தோன்றிட தாய்த் தமிழர்களின் ஒற்றுமை பயன்பட வேண்டும். அதற்கேற்ற முறையில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படத் தாய்த் தமிழக மக்களின் ஒற்றுமை உறுதுணையாக அமைந்திட வேண்டும்.
செ. மாதவன்
நன்றி : தினமணி

தவறா? குற்றமா?

சங்க காலம் முதல் நிகழ் காலம் வரை, ஒரு செயல் தவறா அல்லது குற்றமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது.
சோழ மன்னர் ஒருவர், பசு தன் கன்றை இழந்த மணியோசை கேட்டு, தவறு செய்தவன் தன் மகனேயாகினும், அது குற்றமே எனக்கருதி, அதற்குரிய தண்டனையும் வழங்கி, மனுநீதிச் சோழன் எனப்பெயர் பெற்றார் என்கிறது சரித்திரம்.
பாண்டியமன்னரின் அரசவையில் புலவர் நக்கீரன், ஈசன் எழுதிய பாடலில் குறை கண்டார் என அறிவோம். அக்குறையைத் தவறு எனக்கொள்ளாது, தமிழ் உயிரினும் மேலானது என்ற காரணம் கருதி, குற்றம் என்றே கண்டார் என்றும் அறிவோம். ஈசனே நேரில் வந்து நெற்றிக்கண்ணைக் காட்டினும் தான் கண்ட குற்றம் குற்றமே எனவும் வாதிட்டார் என்பதையும் அறிவோம்.
மன்னர்கள் காலத்தில் குற்றங்கள் தர்ம அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதை இதுபோன்ற காவியங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில், தர்ம நியாயங்களுக்குத் தனியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு செயல் தவறா அல்லது குற்றமா என்பது பெரும்பாலும் சட்ட நியாயத்தின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண தவறுகள்கூட இடம், பொருள் மற்றும் காலம் காரணமாகக் குற்றங்களாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, புகை பிடிப்பது தவறு என்றால், தடை செய்யப்பட்ட இடங்களில் பிடிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. அதேபோல, கண்ட இடங்களில் சாலையைக் கடப்பது தவறு என்றால், தடை செய்யப்பட்ட தடங்களில் கடப்பது குற்றமாகக் கொள்ளப்படுகிறது. எனவே இன்றைய சூழ்நிலையில், தவறுகளுக்கும் குற்றங்களுக்குமான இடைவெளி மெல்லியதாகி சில இடங்களில் மறைந்துவிடுவதையும் காணலாம். இத்தகைய தவறுகளிலிருந்து, மன்னிக்கக்கூடாத குற்றங்களை வேறுபடுத்திப் பார்க்கத்தெரிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், தவறுகள் மறக்கப்பட வேண்டும், மன்னிக்கப்பட வேண்டும். குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியிருக்கும்.
ஒருவர் மற்றொருவருக்கு இழைக்கும் தவறுகளால் இன்னல்கள் வருவது உறுதி. அத்தகைய இன்னல்களை மறப்பதும், அவர்களின் தவறுகளை மன்னிப்பதும் மனித நேயத்திற்கும் குடும்ப ஒற்றுமைக்கும் மிக மிக இன்றியமையாததாகும்.
இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர், ""இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்'' என்று சொன்னதோடு விடாமல், ""இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு'' என்றும் சொல்லி அக்கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த உண்மையினைப் புரிந்து கொள்ளவில்லையெனின், சிறு தவறுகளைக்கூட மிகைப்படுத்தி, குறை மேல் குறை கண்டு, பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றமாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம்.
பிறர் மற்றொருவருக்கு இழைக்கும் தவறுகளை மன்னிக்கவும் இன்னல்களை மறக்கவும், வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மிகவும் அவசியம். அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல்களும் அதைத்தொடர்ந்து வரும் நிகழ்ச்சி நிரல்களும் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போட்டியிடப் போகும் நபர்களின் விவரங்கள் தெரிய ஆரம்பித்துவிடும். அவர்களின் தகுதி, திறமை மற்றும் அந்தரங்கங்கள் உள்பட அனைத்தும் அலசி எடுக்கப்பட்டுவிடும். தேர்தல் நெருங்க நெருங்க ஒருவரையொருவர் கொள்கையளவில் சாடுவதும் சொற்போர் நடத்துவதும் நாடு முழுவதும் ஒளிபரப்பாகும். போட்டி முடிந்து வெற்றி பெற்றவர் அதிபராக அறிவிக்கப்பட்டுவிடுவார்.
வெற்றி பெற்ற அதிபரின் மனைவிக்கு, தோல்வியடைந்த (நடப்பு அதிபராக இருந்து இரண்டாம் தவணையாக போட்டியிட்ட) அதிபரின் மனைவி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையைச் சுற்றிக்காட்டி, அதன் அலுவலர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைப்பது வழக்கம். அதேபோல், வெற்றி பெற்ற அதிபரும், தன்னிடம் தோல்வியடைந்தவருக்கு வெள்ளை மாளிகையில் தேநீர் விருந்து கொடுப்பது சம்பிரதாயம்.
இதுபோன்ற வழக்கங்களும் சம்பிரதாயங்களும் மனிதகுல நாகரிக வளர்ச்சியின் சின்னங்கள். மனிதர்கள் ஒருவருக்கொருவர் இழைக்கும் தவறுகளையும் இன்னல்களையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் சமுதாயம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பங்கள். இந்த உண்மையினை இவர்கள் அமெரிக்காவில் நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார்கள். எனவேதான் முன்னாள் அதிபர்களான ஜிம்மி கார்ட்டரும், ஜெரால்டு போர்டும் அரசியலில் கருத்து வேறுபட்டாலும் வாழ்க்கையில் நண்பர்களாக வாழ முடிந்தது. வில்லியம் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும் அரசியலில் நண்பர்களாக இல்லாவிடினும், வாழ்க்கையில் அன்பர்களாக வாழ முடிகிறது.
நம் வாழ்விலும் இதைக் கடைப்பிடித்தால், நெஞ்சுக்கு நிம்மதியும் நாம் வாழ்ந்த வாழ்விற்கு நிறைவும் கிடைப்பது உறுதி.
ராம் ராமனாதன்
நன்றி தினமணி

Thursday, November 6, 2008

காலம் கடந்த ஞானம்

20ம் நூற்றாண்டில் மகத்தான அறிவியல் சாதனைகளின் காரணமாக உணவுப்பொருள் உற்பத்தி பன்மடங்கு பெருகியபோதிலும் உலகின் பல பகுதிகளில் மக்கள் கால் வயிறு, அரை வயிறு உணவு மட்டுமே பெற முடிவது மனித இனத்துக்கே தலைகுனிவை உண்டாக்கும் விஷயம்.
இயற்கையைப் பாதுகாக்கிறதாகச் சொல்லிக்கொண்டு வதந்திகளையும் புரளிகளையும் பரப்புகிற ஒரு கூட்டம்தான் இந்த விஷயத்தில் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள். உதாரணமாக மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தருவதாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவற்றை எதிர்த்துக் கூச்சல் போட எல்லா நாடுகளிலும் ஒரு கூட்டம் இருக்கிறது.
இளவரசர் சார்லஸ் போன்ற பிரமுகர்கள் மரபு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்துக் குரலெழுப்பும்போது குறிப்பாக மேலைநாட்டு ஊடகங்கள் அவர்களுக்குப் பெரும் விளம்பரத்தை அளிக்கின்றன. மரபு மாற்றம் செய்த பருத்தியைச் சரியான முறையில் சாகுபடி செய்து லாபம் சம்பாதித்த விவசாயிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. மாறாக, போலி விதைகளையும் தவறான உத்திகளையும் கையாண்டு சீரழிந்த விவசாயிகளைத்தான் அவை பிரபலப்படுத்துகின்றன. இத்தகைய விஷமங்களுக்கு மேலை நாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நிகழும் அதர்மப் போட்டியே காரணம்.
1960களில் இயற்கையைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு அணுமின் நிலையங்கள் நிறுவப்படுவதை இக்கூட்டம் தடுத்தது. அதன் காரணமாகவே இன்று பெட்ரோல், டீசல் விலையேற்றமும் ஆற்றல் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளன. இன்று அதே கூட்டம் எத்தனால் பெட்ரோலை உற்பத்தி செய்வதற்காக சோளம், கரும்பு போன்ற பயிர்களைப் பயிரிட உதவித்தொகை தரும்படி அரசுகளைக் கட்டாயப்படுத்துகிறது. அதன் காரணமாக உணவுப் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்து இயற்கைக் காவலர்கள் மனிதச் செயல்களால் உலகின் சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டிருப்பதாகவும், துருவப் பகுதிகளிலுள்ள பனியாறுகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து பல கடற்கரையோர ஊர்களையும், சிறு தீவுகளையும் இன்னும் பத்தாண்டுகளில் மூழ்கடித்துவிடும் என்று மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலை நாடுகளின் அரசுகளும் தொழிலதிபர்களும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்களே இதற்குப் பொறுப்பு எனப் பழி போடுகின்றனர். அதன் மூலம் வளரும் நாடுகளின் தொழில் வளப் பெருக்க வேகத்தை முடக்குவதே அவற்றின் இலக்கு என்பது தெளிவு.
ரஷிய விஞ்ஞானிகள் தென்துருவத்தில் 3.5 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து பனிக்கட்டி மாதிரிகளை எடுத்துச் சோதித்துக் கடந்த நான்கு லட்சம் ஆண்டுகளில் வாயு மண்டலத்தின் கூட்டமைப்பிலும் உலகளாவிய வெப்பநிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் உலக வெப்ப நிலை உயர்வுக்குக் கரியமில வாயுச்செறிவு அதிகரித்தது காரணமில்லை எனவும் அதற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்தது தான் கரியமில வாயுச்செறிவு அதிகரித்ததற்குக் காரணம் என்று அவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். வாயு மண்டல வெப்பநிலை உயர்ந்து 500, 600 ஆண்டுகளுக்குப் பின்னரே கரியமில வாயுச்செறிவு உயரத் தொடங்குகிறது. அதாவது இன்று வாயு மண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு உயர்வதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மேலைநாட்டுத் தொழிற்புரட்சிச் சம்பவங்களே கூடக் காரணமாயிருக்கலாம்.
அத்துடன் கரியமில வாயுவைவிட 5 முதல் 10 மடங்கு அதிகமான செறிவில் நீராவி வாயு மண்டலத்தில் பரவியிருக்கிறது. வாயு மண்டலத்தின் வெப்பநிலை உயர்வுக்குக் கரியமில வாயுவைவிட நீராவியன் பங்குப்பணி பன்மடங்கு அதிகம் என ரஷிய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சூரியப்புள்ளிக் கதிர்வீச்சு, பூமியின் அச்சுத் தலையாட்டம் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், கடலின் மேற்பரப்பில் உப்பின் செறிவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களாலும் உலகளாவிய வெப்பநிலை உயரும். எனவே கரியமில வாயுவை மட்டும் அதற்குப் பொறுப்பாக்கக் கூடாது. உண்மையில் வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகமாகிறபோது கடல்களிலும் நிலங்களிலும் தாவரங்களும், பயிர்களும் காடுகளும் பெருகியிருக்கின்றன என்று ரஷிய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இன்றிருப்பதைவிடப் பத்து லட்சம் மடங்கு அதிகமான செறிவில் கரியமிலவாயு பரவியிருந்த காலகட்டங்களில் கூட உயிரினப் பரிணாமம் குலைந்து விடவில்லை என அருட்யுனாவ் என்ற ரஷிய விஞ்ஞானி கூறுகிறார். உலகின் சமன்செய்யும் அமைப்புகள் வானிலையில் ஏற்படும் தீவிர மாற்றங்களின் கடுமையைக் குறைத்து விடுகின்றன. உதாரணமாக வெப்பநிலை உயர்ந்தால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாகிக் கனத்த மேகங்கள் தோன்றிச் சூரியக்கதிர்களைத் தடுத்துப் பூமிப்பரப்பின் வெப்பத்தைக் குறைக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வளிமண்டல வெப்பநிலை உயர்வைத் தடுப்பதற்கான கியோட்டோ விதிமுறைகள் மேலைநாடுகளின் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் வளர்ந்து வரும் நாடுகளை முடக்கி விடச் செய்த சதி என கபிட்சா என்ற ரஷிய அறிஞர் கூறுகிறார். அவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கூறுகிறவர்களுக்குச் சர்வதேச அரங்குகளில் பேச அனுமதி கிடைப்பதில்லை. மேலைநாட்டு ஊடகங்கள் அவர்களை இருட்டடிப்புச் செய்கின்றன. அவர்களுடைய ஆய்வுக்கட்டுரைகள் மர்மமாகக் காணாமல் போக்கப்படுகின்றன.
ஆற்றல் செலவைக் குறைக்கவும், அதிகச் செயல்திறனுள்ள தொழில் உத்திகளை உருவாக்கவும் கியோட்டோ விதிமுறைகள் செய்யும் முயற்சிகளை வரவேற்கலாம். ஆனால் அது நிஜமான சுற்றுச்சூழல் பிரச்னைகளையும், நிலமும் நீரும் தொழில் துறையினரால் மாசுபடுத்தப்படுவதையும் கண்டுகொள்வதில்லை. அது கரியமில வாயுவில் மட்டுமே அளவுக்கு அதிகமான கவனத்தைச் செலுத்துகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்படும் இஊஇ வாயுக்கள் வளிமண்டல மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தை அழித்து ஓட்டையாக்குவதாகவும் அதன் மூலம் மக்களுக்குத் தோல் புற்றுநோய் உண்டாகும் எனவும் பெரிதாகப் பிரசாரம் செய்யப்பட்டது. 1982ல் மான்ட்ரியால் விதிமுறைகள் அந்த வாயுக்களின் பயன்பாட்டைத் தடை செய்தது. அதற்கு மாற்றாக பிரியான் என்ற வாயுவைப் பயன்படுத்த உலக நாடுகள் வற்புறுத்தப்பட்டன. அதற்கு ஏகபோகக் காப்புரிமை பெற்றிருந்து டூபான்ட் என்ற அமெரிக்க நிறுவனம் பல்லாயிரம் கோடி டாலர் லாபமடைய அந்தத் தடை உதவியது. ஆனால் இஊஇ வாயுக்கள் ஓசோன் படலத்துக்கு அருகில் கூடப் போவதில்லை என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. பிரியான் வாயு நச்சுத்தன்மையும், வெடிக்கும் தன்மையும் கொண்டது என்று தெரிய வந்ததும் பிரியான் விற்பனை படுத்துவிட்டது.
1970களில் உலக வெப்பநிலை சற்றுக்குறைந்தபோது இதே மேலை நாட்டு அறிஞர்கள் பனியுகம் வரப்போவதாயும் உலகம் முழுவதும் உறைந்து விடப் போவதாயும் பெருங்குரல் எழுப்பினார்கள். அதற்கு வளரும் நாடுகளின் தொழில் துறைகள் வெளியிடும் புகையும் தூசுகளும் சூரியக் கதிர்களைத் தடுப்பதாகக் காரணம் சொன்னார்கள்.
உண்மையில் சூரியப்புள்ளி விளைவு காரணமாக 30 ஆண்டுகளுக்கு வாயுமண்டல வெப்பநிலை படிப்படியாகக் குறைவதும் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் படிப்படியாக அதிகரிப்பதாயும் தான் இருக்கிறது என்று ரஷிய ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அன்டார்டிக்காவில் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதாயும் அங்குள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்து வருவதாயும் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கே.என். ராமசந்திரன்
நன்றி : தினமணி

வெள்ளை மாளிகையின் கறுப்பு நிலா!

1964ம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியர் இர்விங் வேலஸ் எழுதிய "தி மேன்' என்கிற புத்தகம் வெளிவந்தபோது, அவரது கற்பனை அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்குள் நனவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் டக்ளஸ் தில்மன் என்கிற கறுப்பர் இன அமெரிக்க செனட்டின் தலைவரை, அதிபராக்கி வெள்ளை மாளிகையில் கோலோச்ச வைப்பதும், தில்மன் அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதமும்தான் இர்விங் வேலஸுடைய நாவலின் கரு.
"தி மேன்' நாவலின் நாயகன் டக்ளஸ் தில்மனுக்கும், அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கும், இருவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தவித ஒற்றுமையும் கிடையாது. ஆனால், "தி மேன்' நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்த பல லட்சம் வாசகர்களின் கனவு இன்று நனவாகி இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்கிய பெருமை பராக் ஒபாமாவைச் சாரும்.
பராக் ஒபாமாவின் வெற்றியும், ஒரு கறுப்பர் இனத்தவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இன்னொரு நாள். பராக் ஒபாமாவின் வெற்றி, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மானுடம் இன வேறுபாடுகளையும், நிற வேறுபாடுகளையும் கடந்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சரித்திரச் சான்று பகர்ந்திருக்கிறது என்பது 21ம் நூற்றாண்டுக்கே கிடைத்திருக்கும் வெற்றி இது!
பராக் ஒபாமாவின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது, அவர் நிறவெறிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய குடியரசுக் கட்சியின் பிரதிநிதி அல்லர். மாறாக, அடிமைத்தனத்தை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். முதலாளிகளின் கட்சி என்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்ட ஜனநாயகக் கட்சி, தனது வேட்பாளராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியைத் தேர்ந்தெடுக்காமல், கறுப்பர் இனத்தவரான பராக் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது என்பதே மிகப்பெரிய சமுதாயப் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.
இரண்டாவதாக, கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் அல்லாதவரின் வாக்குகளை மட்டும் பராக் ஒபாமா பெற்றிருந்தால், வெற்றிக்கு அருகில்கூட போயிருக்க முடியாது. பெருவாரியாக உள்ள அமெரிக்க வெள்ளையர்கள் வாக்களித்து ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
""கறுப்பர் என்பதால் தகுதியில்லாத ஒருவரை ஆதரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்று சொன்ன மார்டின் லூதர்கிங்கின் அறிவுரையை அமெரிக்க வெள்ளையர்கள் பின்பற்றி இருக்கிறார்கள் என்றால், பராக் ஒபாமாவின் தகுதி நிர்ணாயகமான பங்கு வகித்திருக்கிறது. இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட உலகத்தை, அதை நடத்திக்காட்டி அதிசயிக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்க வாக்காளர்கள். மக்களாட்சித் தத்துவத்துக்கு தாங்கள்தான் முன்னோடிகள் என்பதையும், சமுதாய மாற்றங்களுக்கும் அமெரிக்கா முன்னுதாரணமாக இருக்கும் என்பதையும் பராக் ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்து நிரூபித்திருக்கும் அமெரிக்கக் குடிமக்களை உலகமே தலைவணங்கிப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவின் அணுகுமுறையிலும், உலகளாவிய கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுமா என்றால் சந்தேகம்தான். பொருளாதாரக் கொள்கையிலும் சரி, வெளிவிவகாரக் கொள்கையிலும் சரி, ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மேலும், 1929க்குப் பிறகு, அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதாரக் குழப்பத்தை எதிர்கொண்டு சமாளிக்கும் பொறுப்பை அதிபர் பராக் ஒபாமா ஏற்றிருக்கும் வேளை இது. இந்தச் சூழலில் முந்தைய ஜார்ஜ் புஷ் அரசின் நடவடிக்கைகளிலும், கொள்கைகளிலும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்த அவரால் நிச்சயம் முடியாது.
அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த அமெரிக்காவுக்கும் இன்றைய அமெரிக்காவுக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றமுண்டு. உலகின் பல பகுதியைச் சேர்ந்த இனத்தவர்களும் அமெரிக்காவில் குடியேறி அதை ஓர் உலகக் கலாசாரங்களின் கலவையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கறுப்பர் இனத்தவர் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது தார்மிக ரீதியாக, அந்த நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள உத்வேகத்தையும், நெஞ்சுரத்தையும் அளிக்கும்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் சாதுர்யம் இருப்பவர்தான் புத்திசாலி. நல்ல தலைவர். வெள்ளை மாளிகையில் உதித்திருக்கும் கறுப்பு நிலாவான பராக் ஹுசைன் ஒபாமா தன்னை ஒரு நல்ல தலைவர் என்று நிரூபிக்க நமது மனமார்ந்த வாழ்த்துகள்!
நன்றி : தினமணி

நனவாகுமா கனவு?

அனைவருக்கும் கல்வி என்கிற முழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே எழுப்பப்பட்டு, தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பு அடித்தட்டு ஏழை, எளிய மக்கள்வரை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய மெளனப் புரட்சி என்றுதான் கூற வேண்டும். என் குழந்தை எதற்காகப் படிக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்குக் கல்வி எதற்கு என்றெல்லாம் கேட்ட காலம் கனவாக மறைந்திருப்பது ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம்.
கடந்த 60 ஆண்டுகளாக அரசுத் தரப்பில் என்னென்னவோ முயற்சிகள் செய்தும், இன்னும் முழுமையாகப் பள்ளிக்குச் செல்லும் ஒரு தலைமுறையினரை இந்தியா காணவில்லை என்பது நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கும் விஷயம். பணக்காரர்களும், உயர் மத்திய தர வகுப்பினரும் பெறும் கல்வி, மத்தியதர வகுப்பினருக்குக் கிடைப்பதில்லை என்றால், ஏழை, எளிய மக்களும், வசதி இல்லாதவர்களும் தரமான கல்வியைக் கனவுகூடக் காண முடியாது என்கிற நிலைமை இன்னும் பல மாநிலங்களில் தொடர்கிறது.
பெற்றோருக்கு ஆசை இருந்தும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையும், அதற்கான செலவைத் தாங்கிக் கொள்ளும் வசதியும் இல்லாதவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்; இந்த அப்பட்டமான உண்மையை நம்மில் பலரும் உணரவோ ஏற்றுக்கொள்ளவோகூடத் தயாராக இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அடிப்படைக் கல்வி பெறுவதை ஒவ்வொரு குழந்தையின் ஜீவாதார உரிமையாக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் குரலெழுப்பத் தொடங்கினார்கள். அதன் தொடர்விளைவாக, 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளின் அடிப்படை உரிமையாக கல்வி கற்றுத் தரப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதியில் சொல்லத் தொடங்கின. கல்வி பெறும் உரிமைச் சட்டம் என்கிற பெயரில் ஒரு மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாகும்போது, அது அனைவருக்கும் கல்வி என்கிற கனவை நனவாக்கும் முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட 86வது அரசியல் சட்டத் திருத்தப்படி, இலவசக் கட்டாயக் கல்வி என்பது ஒவ்வோர் இந்தியக் குழந்தையின் ஜீவாதார உரிமையாக்கப்பட்டதே தவிர அந்த உரிமையைப் பெற்றுத் தருவதற்கு எந்த வழிமுறையும் கூறப்படவில்லை. இந்த மசோதா சட்டமாவதன் மூலம் அந்தக் குறை தீர்க்கப்படும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாநில மற்றும் மத்திய அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகளை வகுப்பதுடன், அத்தனை இந்தியக் குழந்தைகளும் கல்வி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி, இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வழிகோலும் என்பதுதான் இதன் முக்கியத்துவத்துக்குக் காரணம். தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பும், இந்தத் திட்டத்தை முறையாக நிறைவேற்றும் கடமையும் அரசுக்கு ஏற்படுகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
கடந்த இரண்டாண்டுகளாகக் கடுமையான எதிர்ப்பை இந்த மசோதா சந்தித்து வந்தது. நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவை ஏதாவது காரணம் காட்டி இந்த மசோதாவுக்கு முட்டுக்கட்டை போட்டவண்ணம் இருந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்தபோது, திட்டக் கமிஷனின் குறுக்கீட்டால் இந்த மசோதா அமைச்சரவையின் உயர்நிலைக் குழுவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு விட்டது. அதற்குக் காரணம், கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது என்பதால், ஒதுக்கப்பட்ட நிதியை, எப்படி பகிர்ந்து கொள்வது என்கிற பிரச்னை எழுந்ததுதான்.
இப்போது ஒரு வழியாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டது என்றாலும், இந்த மசோதாவின் தலையெழுத்து இன்னமும் தீர்மானமாகி விட்டதாகக் கருத முடியாது. மசோதா, அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடரில் நிறைவேற்றப்படாமல் போனால், இந்த அவை கலைக்கப்படுவதுடன் மசோதாவும் காலாவதியாகிவிடும். அடுத்துவரும் அரசு, முதலிலிருந்து மறுபடி தொடங்கி மீண்டும் இந்த மசோதாவை அடுத்த அமைச்சரவையின் ஒப்புதலுடன் நிறைவேற்ற வேண்டிவரும்.
தரமான அடிப்படைக் கல்வி, பள்ளி இறுதித் தேர்வுவரை இந்தியாவிலுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். பள்ளி இறுதித் தேர்வுவரை அனைத்துப் பள்ளிகளுமே அரசுப் பள்ளிகளாகச் செயல்பட வேண்டும். ஏழை, பணக்காரன், மேலோன், கீழோன், ஆண்டான், அடிமை என்கிற பாகுபாடுகள் அகல, அதுதான் அடிப்படையாக இருக்கும். அப்படியொரு கனவு நனவாகிறதோ இல்லையோ, ஒவ்வோர் இந்தியக் குழந்தையும் கல்வி அறிவு பெற்ற குழந்தையாகவாவது இருத்தல் வேண்டும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் என்பது ஒரு நீண்ட நாள் கனவு. அதை மன்மோகன் சிங் அரசு நனவாக்குமேயானால், இந்த அரசின் மிகப்பெரிய சாதனை அதுவாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி

Wednesday, November 5, 2008

மத முலாம் பூசாதீர்கள்!

மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றதன் பிறகு எப்போதாவது எங்கோ ஓரிடத்தில் நடந்து வந்த குண்டுவெடிப்புச் சம்பவம், அவ்வப்போது அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது என்பதை ஊரறியும்.
கடந்த வாரத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் பல உயிர்களைப் பலி வாங்கி இருப்பதுடன் நூற்றுக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தி இருக்கின்றன. இதுவரை இதுபோன்ற குண்டுவெடிப்புகள் மாநிலத் தலைநகரங்களில்தான் நடந்தன. இப்போது, அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே வெடித்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. எந்த அளவுக்கு நமது பாதுகாப்புத் துறை எச்சரிக்கையாக இருக்கிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு!
இந்தப் பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி என்கிற தீவிரவாத அமைப்புதான் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும், வங்க தேசத்திலும் இதுபோன்ற பல பயங்கரவாதச் செயல்களில் இந்த அமைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் இந்த அமைப்புதான் காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நாம் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது. இந்திய அரசு அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டது முதல், இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது என்பதுதான் அந்த உண்மை. அமெரிக்காவின் மீதான தங்களது கோபத்தைக் காட்ட முடியாத பயங்கரவாத அமைப்புகள், அந்த நாட்டிடம் நட்புறவு நாடும் இந்தியாவின் மீது காட்டித் தணித்துக் கொள்கின்றனவோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.
அது போகட்டும். நாங்கள் பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்ள மாட்டோம், தக்க நடவடிக்கை எடுப்போம் என்று வாய்ப்பந்தலிடும் மத்திய அரசு, இதுவரை பாதுகாப்பை அதிகரிக்கவும், உளவுத் துறையை முடுக்கிவிடவும், கடுமையான சட்டங்களை இயற்றி காவல்துறையைப் பலப்படுத்தவும் என்ன செய்திருக்கிறது? பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும், ஈடுபட்டவர்களையும் தண்டித்தால் தனது வாக்கு வங்கிக்குச் சேதம் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படும் அரசு இது என்பதுதானே நிஜம்?
பயங்கரவாதச் செயல்களை எந்தவொரு மதமும் அங்கீகரிப்பதில்லை. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதால் ஒரு மதத்தினரின் மனம் புண்படும் என்று இந்த அரசு நினைக்குமேயானால், அது அந்த மதத்தினரையே கேவலப்படுத்துகிறது என்றுதான் அர்த்தம். பயங்கரவாதிகளுக்கு ஜாதி மற்றும் மத முலாம் பூச முற்படுவது இந்த அரசின் மிகப்பெரிய அரசியல் மோசடி!
அசாமில் நூற்றுக்கணக்கில் தொடங்கி அது ஆயிரம், லட்சம் என்று நாளும் பொழுதும் அகதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இதுவரை சுமார் 5 கோடி பேர் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. நமது மேற்கு எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணித்ததுபோல நாம் கிழக்கு எல்லையில் கடந்த 30 ஆண்டுகளாக வங்கதேச அகதிகளைத் தடுக்காமல் இருக்கிறோமே, ஏன்?
அசாமில் இந்த அகதிகளை இந்தியப் பிரஜைகளாக்குகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார் முதல்வர் தருண் கோகோய். அகதிகளுக்குக் குடியுரிமை அளிக்கும் அதிகாரத்தை முதல்வர்களுக்கு அளித்தது யார்? சுமார் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் வங்கதேச அகதிகள் அசாமில் இருப்பதால், அந்த மாநிலத்தின் தலையெழுத்தே அன்னிய நாட்டு அகதிகள் கையில் இருப்பதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை என்பதுதானே உண்மை?
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்தால், வீட்டு உடைமையாளிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தியா முழுவதும், எந்தவொரு மாநிலமும் விதிவிலக்கில்லாமல், இப்போது வங்கதேச அகதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் மூலம், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யும் இந்தியாவின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் சீர்குலைக்க எண்ணும் அன்னிய சக்திகளும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன. வங்கதேச அகதிகளை உடனடியாகக் கணக்கெடுத்து, களையெடுக்கத் தவறினால், அதன் விளைவுகள் மாவட்டம்தோறும் வெடிகுண்டுகளாக வெடித்துச் சிதறும் என்று மன்மோகன் சிங் அரசுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக எத்தனையோ எச்சரிக்கைகள் செய்யப்பட்டும், அரசு அசைந்து கொடுக்கவில்லையே, ஏன்?
பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சக்தி இல்லாவிட்டால்கூடத் தவறில்லை. இந்த அரசுக்கு அதற்கான மனத்துணிவுகூட இல்லை. இதையும் அமெரிக்காவும், உலக வங்கியும் பார்த்துக் கொள்ள ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தலாம் என்று பிரதமர் நினைக்கிறாரோ என்னவோ?
நன்றி : தினமணி

மாணவர் வி(டு)தி!

அரசுக் கல்லூரி மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று பல ஊர்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆய்வுக் குழு நேரில் சென்று விசாரணை நடத்தி, மாணவர்களைச் சமாதானம் செய்தனர். ஆனால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர் விடுதிகள் அனைத்திலும் உணவும் உறைவிடமும் எந்த அளவுக்குத் தரமானதாக உள்ளன என்று பதில் அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்காக அரசு பல நூறு கோடி ரூபாயை ஒதுக்கிய போதிலும், இந்த மாணவர்களுக்கு தரமான உணவு, உறைவிடம், கழிப்பிட வசதிகள், சுகாதாரமான குடிநீர்கூட கிடைக்கவில்லை என்று அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தொடுத்த பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதியரசர்கள் பி. சத்யசிவம், ஆப்தாப் ஹாலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.
அரசுக் கல்லூரி மாணவர் விடுதிகளைப் பொருத்தவரை, தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள பொது விடுதிகளில்கூட தரமான உணவு கிடைப்பதில்லை என்பதே உண்மை நிலை.
அரசின் இலவச மாணவர் விடுதிகளில் ஒவ்வொருவருக்கும் உணவுக்காக மாதம் ரூ. 550 வரை அரசு செலவிடப்படுகிறது. இது மிகக் குறைவான தொகை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் இந்தத் தொகையிலும்கூட, முறைகேடு இல்லாமல் இருக்கும்பட்சத்தில், தரமான உணவு அளிக்க முடியும் என்பதே மாணவர்களின் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணம்.
அரசுக் கல்லூரி மாணவர் விடுதிகள் எந்த ஊரில் இருந்தாலும், அவை மிகவும் மோசமான நிலையில், சிதிலமாகியும், கழிப்பறைகள் பராமரிப்பு இல்லாமலும், சில ஆண்டுகளே ஆனபோதிலும் மழைக்கு ஒழுகும் கூரைகளுமாகவே இருக்கின்றன. இந்த மாணவர்கள் படிக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக இத்தனை அசௌகரியங்களையும் சகித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அரசு மாணவர் விடுதிகளைப் பொருத்தவரை பணம் போதவில்லை என்று சொல்லிக்கொண்டே முறைகேடு நடக்கிறது என்றால், தனியார் கல்லூரிகளின் முறைகேடு இதற்கு நேர்எதிரானது. அவர்கள் அதிகமான பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில்லை.
தேர்ச்சி வரிசையில் முன்னிலை வகிக்கும் சில கல்லூரிகளைத் தவிர்த்து, பெரும்பாலான கல்லூரிகளில் பெற்றோர் கொடுக்கும் பணத்துக்கும், மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவு, வசதிகளுக்கும் இடைவெளி அதிகம்.
விடுதிக் கட்டணங்களை மாதம்தோறும் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மிக அரிது. ஒரு ஆண்டுக்கான முழுக் கட்டணத்தையும் (ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை) தொடக்கத்திலேயே வசூலித்து விடுகிறார்கள். இடையில் விலகினால், ஒரு செமஸ்ட்டருக்கான கட்டணம் முழுவதையும் பிடித்துக்கொண்டு மிச்சம் (இருந்தால்) கொடுக்கிற புதிய வழக்கத்துக்கு மாறியுள்ளன இக்கல்லூரிகள்.
இவ்வளவு கட்டணம் வாங்கும் இவர்கள் அளிக்கும் உணவு, அரசுக் கல்லூரி விடுதிகளைவிட பரவாயில்லை என்று சமாதானம் அடையலாமே தவிர, தரமானது என்று சொல்ல முடியாது. கல்லூரி நிர்வாகமே கட்டிய கட்டடம் உறுதியாக இருந்தாலும், கழிப்பிட, இருப்பிட வசதிகள் அங்கு தங்கியுள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் இருப்பதில்லை.
அண்மைக் காலமாக நிலவும் மின்தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, "தண்ணி காட்டிய' விடுதிகள் பற்றிய நிறைய கதைகள் மாணவர்களிடம் உள்ளன. துணியைத் துவைக்காமல் லாண்டரிக்குப் போடத் தூண்டுவதும், அதற்கும் "ஒப்பந்தம்' போட்டு காசு பார்ப்பதும் தனிக்கதை.
அரசுக் கல்லூரி விடுதிகளிலும் "சாப்பிடுகிறார்கள்'. கேட்கிற பணத்தை பெற்றோர் கொட்டியழும் விடுதிகளிலும் "சாப்பிடுகிறார்கள்' மாணவர்களைத் தவிர!
நன்றி : தினமணி

Monday, November 3, 2008

அமெரிக்கத் தேர்தலில் புதுமையும், நுணுக்கமும்

அமெரிக்காவில் வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளைப் பொருத்துதான் அமெரிக்க அரசியல் நடைபெறுகிறது. தேர்தல் போட்டிகளும், வெற்றி, தோல்விகளும் இந்த இரு கட்சி அரசியல் வட்டத்திற்குள் அடங்கி இருக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்க செனட் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என இருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினரின் தேர்தல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் மட்டுமே. அமெரிக்கக் கூட்டாட்சியின் மத்திய அமைப்புகளைத் தவிர மாநிலங்கள்தோறும் உள்ள ஆளுநர், மாநிலத்துக்கான செனட் பிரதிநிதி உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட பதவிக் காலத்திற்குப் பிறகு நடைபெறும் தேர்தல்கள், அமெரிக்க அதிபர், செனட் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல்களுடன் இணைத்து ஒரே சமயத்தில் நடத்தப்படுகின்றன.
எல்லோருக்கும் சமமான மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அமெரிக்க அரசமைப்புச் சட்டம் 1788ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் அமெரிக்காவில் குடியேற்றப்பட்டு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த கருப்பு இனத்தவர்களுக்குக் குடிமக்கள் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் நீண்ட காலமாகத் தரப்படாமல் இருந்தது. கருப்பர்களின் சமஉரிமைக்காகப் போராடிய ஆப்ரகாம் லிங்கன் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுக் கருப்பர்களின் அடிமைத்தனத்தைச் சட்டப்படி நீக்கினாலும், நடைமுறையில் பலகாலம் கருப்பர்களுக்குச் சமஉரிமை வழங்கப்படவில்லை. அவருக்குப் பிறகு நீக்ரோ இனத்தவர்களுக்கு உரிமைகள் தருவதற்காக நான்கு முறைகள் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இருப்பினும் வாக்களிக்கும் உரிமையைத் தடுக்கும் வகையில் பல தடைகளைத் தென் மாநிலங்கள் போட்டிருந்தன.
1964ல் வந்த 24வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்தான் தடைகளை நீக்கி நீக்ரோ மக்களுக்கும் வாக்குரிமையை உறுதிப்படத் தந்தது.
தேர்தலில் நின்று அமெரிக்க செனட் சபைக்கு இதுவரை பின்வரும் மூன்று கருப்பு இனத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: 1. எட்வர்ட் புரூக் (1967 79, மாசசூஸெட்ஸ்), 2. கரோல் மோஸ்லீ பிரெளன் (முதல் கருப்பு இனப் பெண்மணி, 199298, இல்லினாய்ஸ்), 3. பாரக் ஒபாமா (2004 முதல் இல்லினாய்ஸ்). ஆயினும் முதன்முறையாக அமெரிக்க கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபருக்கான தொடக்கத் தேர்தலில் வெற்றி பெற்று இதுவரை வந்துள்ள கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இதற்கு மேலாக, அமெரிக்கத் தேர்தலில் சில புதுமைகளும், தேர்தல் நுணுக்கங்களும் வெளிப்படுகின்றன. ஜனநாயககுடியரசு ஆகிய இரு முக்கியக் கட்சிகளைத் தவிர, அமெரிக்க மாநிலங்களில் உள்ள விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றின் சார்பாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்களும் ஆங்காங்கு தமக்கு ஆதரவான மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் சீட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.
அமெரிக்காவின் அதிபர், துணை அதிபர் பதவிகளுக்கு 11 கட்சிகள் போட்டியிடுகின்றன. பின்வரும் நான்கு கட்சிகள் அதிகாரபூர்வமாகப் பல மாநிலங்களில் தேர்தலைச் சந்திக்கின்றன. 1. அரசமைப்புச் சட்டக் கட்சி, 36 மாநிலங்களில் 2. விடுதலையாளர் கட்சி, 44 மாநிலங்களில் 3. பசுமைக் கட்சி, 31 மாநிலங்களில் 4. சுயேச்சை இதர கட்சிகளின் அணி 45 மாநிலங்களில்.
11 கட்சிகள் சில மாநிலங்களில் அதிபர் துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றன. மற்றும் 6 கட்சிகள் அதிபர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகின்றன. ஆக, அதிபர் தேர்தலில் ஜனநாயக குடியரசுக் கட்சிகளைத் தவிர்த்து, 17 கட்சிகள் போட்டியிடுகின்றன.
இருப்பினும், சில மாநிலங்களில் இத்தகைய போட்டிக் கட்சிகள் வாக்குகளைப் பிரித்துக்கொள்ளும்போது, பெரிய இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் மாறக்கூடும். எடுத்துக்காட்டாக, ரால்ப் நேடர் அமெரிக்க அதிபர் தேர்தலில் 1992ல் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். 2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் பெற்ற வாக்குகள் 29,10,299; ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,09,911; அந்தச் சமயத்தில் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரால்ப் நேடர் பெற்ற வாக்குகள் 96,839. அல்கோருக்கு வரவிருந்த வாக்குகளை நேடர் பிரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அப்பொழுது வந்தது. புளோரிடா வாக்குகளில் பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால் அல்கோர் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார். ஆக, பல கட்சிகள் போட்டியிடுவது முக்கியமான இரு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும்.
அமெரிக்கத் தேர்தலில் எழுதி வாக்களித்தல் எனும் முறை இருக்கிறது. அதாவது, அங்கீகாரம் பெறாத ஒரு வேட்பாளரின் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாது. இருப்பினும், அமெரிக்கத் தேர்தல் முறையில் வாக்குச்சீட்டில் ஒரு வெற்றிடம் தரப்பட்டு அதில் வாக்காளர்கள் விரும்பினால் அங்கீகாரம் பெறாத வேட்பாளரின் பெயரை எழுதி ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு எழுதி வாக்களிக்கும் முறையால் அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. 1954ல் ஜேம்ஸ் ஸ்ட்ரோம் தர்மண்ட் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு "எழுதி வாக்களித்தல்' முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 2008ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் 65 வேட்பாளர்கள் "எழுதி வாக்களித்தல்' முறையில் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்கத் தேர்தல் 2008ம் ஆண்டு நவம்பர் 4ல் நடைபெறும் என்று இருந்தபோதிலும் அதற்கு முன்னதாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 31 மாநிலங்களில் தேர்தல் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்குச் சட்டபூர்வமான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் அக்டோபர் 13ம் தேதி தொடங்கி அக்டோபர் 30 வரை குறிப்பிட்ட சில இடங்களில் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது.
2000ம் ஆண்டு தேர்தலில் 16 சதவிகித வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தினர். 2004 தேர்தலில் 22 சதவிகித வாக்காளர்கள் முன்னதாக வாக்களித்தனர். தற்போதைய 2008 தேர்தலில் 30 சதவிகித அளவுக்கு முன்கூட்டி வாக்களிப்பவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வாக்களிப்பவரின் பெயரும், வரிசை எண்ணும், ஒளிப்படமும் தேர்தல் சாவடியில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. முன்னதாக வாக்களிக்கும் முறையால் ஒரு வாக்காளர் பலமுறை வாக்களிக்கும் மோசடி இதுவரை எதுவும் நடைபெறவில்லை என்று தேர்தல் குழு தெரிவிக்கிறது. உடல்நலம் குன்றிய ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குக் காரில் அழைத்துவரப்பட்டால், வாக்குச்சீட்டைத் தேர்தல் அதிகாரி எடுத்துச்சென்று ரகசியமாக அவருடைய வாக்கைப் பதிவு செய்ய வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு முன்கூட்டி நடைபெறும் வாக்குப் பதிவுகளை முறையாகப் பாதுகாத்து, நவம்பர் 4ம் தேதி போடப்படும் வாக்குகளுடன் சேர்த்து ஒரே நாளில் எண்ணப்படும்.
அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டில் வாக்காளர்கள் அதிகமாக 60 சதவிகிதத்திற்குக் குறையாமல் வாக்களிக்க முன்வருகின்றனர். அதிபருக்கான வேட்பாளருக்கு நேரடியாக வாக்காளர்கள் தம்முடைய வாக்குகளைத் தந்தாலும், கடைசியில் 540 பேர்களைக் கொண்ட தேர்தல் குழுவினர் தரும் ஆதரவை வைத்துத்தான் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபருக்கான தேர்தல் குழு என்பது அமெரிக்காவில் ஒரு வினோதமான அமைப்பு. மக்கள்தொகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் குழு உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இதன்படி கலிபோர்னியா 54, டெக்ஸாஸ் 34, இல்லினாய்ஸ் 32, நியூயார்க் 31, புளோரிடா 26 எனத் தொடங்கி அலாஸ்கா, டென்வர் போன்ற சிறிய மாநிலங்களுக்குக் குறைந்தபட்சமாக 3 உறுப்பினர்கள் தரப்படுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கலிபோர்னியா மாநிலத்தில் விழும் வாக்குகளில் 50.01 சதவிகிதம் கிடைத்த வேட்பாளருக்கு அந்த மாநிலத்திற்கான 54 அதிபர் தேர்தல் குழு உறுப்பினர்களும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் முறை இருக்கிறது. இதனால் வாக்களித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற அதிபருக்கான வேட்பாளர் தோற்றுவிடும் நிலை ஏற்படலாம்.
எடுத்துக்காட்டாக, 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அமெரிக்கா முழுவதிலும் ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5 கோடி 10 லட்சத்துக்கு மேல். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் பெற்ற மொத்த வாக்குகள் 5 கோடி 5 லட்சத்துக்கும் குறைவானது. இருப்பினும், தேர்தல் குழு கணக்குப்படி புஷ் 271 பேர்களின் ஆதரவையும், அல்கோர் 266 பேர்களின் ஆதரவையும் பெற்றதால் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புளோரிடா மாநிலத்தில் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,12,253; புஷ் பெற்ற வாக்குகள் 29,12,790. இதன் விளைவாக, 543 வாக்குகள் அதிகம் பெற்ற புஷ் புளோரிடா மாநிலத்தின் 26 தேர்தல் குழுவினரின் ஒட்டுமொத்தமான எண்ணிக்கையை கூடுதலாகப் பெற்று அதிபர் ஆகிவிட்டார். இதைக் கவனிக்கும்பொழுது, அமெரிக்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கு அதிகமான வாக்குளை அல்கோர் பெற்றிருந்தாலும், புளோரிடா மாநிலத்தில் 543 வாக்குகள் குறைந்ததால், அவருக்கு அதிபர் பதவி கிடைக்கவில்லை.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வினோதமான அதிபர் தேர்தல் குழு மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது அமெரிக்காவில் பேராதரவு உள்ளவராகத் திகழும் பாரக் ஒபாமா சில மாநிலங்களில் ஏற்படும் தடுமாற்றங்களை மீறி, அவரே அதிகமான ஆதரவுடன், வாக்குகளுடன் அதிபராக வெளிப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
நன்றி : தினமணி

அனைவருக்கும்... பங்கு?

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ. 1 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஆசிரியர் அமைப்புகளே கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த முறைகேடுகளை முறைப்படி விசாரிக்க வேண்டும் என்று தமிழக கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் வேலூர் மாவட்டத்தில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்துள்ளன என்று ஆசிரியர் அமைப்புகள் சொல்லும்போது கல்வித் துறை மீது நமக்கு மேலதிகமான கவலை ஏற்படுகிறது.
சர்வ சிக்ஷ அபியான் (எஸ்எஸ்ஏ) எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டமானது, மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்புடன், 2010ம் ஆண்டுக்குள், 6 வயது முதல் 14 வயதுள்ள அனைவரையும் கல்வி கற்கச் செய்யும் திட்டம்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக, புதிய பள்ளிகளை உருவாக்குதல், புதிய கற்றல் சூழலை உருவாக்குதல், கழிவறைகள் மற்றும் கூடுதல் கட்டடங்களை ஏற்படுத்துதல், கற்றல் கருவிகள் வாங்கித் தருதல், ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிதியுதவி செய்தல், ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் நடத்துதல், தொடக்கப் பள்ளி அளவிலேயே கணினியை அறிமுகம் செய்தல், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமுதாய நிகழ்ச்சிகளை நடத்துதல் எனத் திட்டத்தின் நோக்கம் பலவாக விரிந்து கொண்டே செல்கிறது.
மத்திய அரசின் அறிக்கைப்படி, 20072008 நிதியாண்டில், மார்ச் 2008 வரை மத்திய அரசின் பங்காக ரூ.464 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.197 கோடியும் நிதி அளிக்கப்பட்டு, ரூ.614 கோடி செலவழிக்கப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதில் புதிய பள்ளிக் கட்டடங்களுக்காக ரூ.100 கோடியும், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.77 கோடியும் கற்றல் கருவிகள் வாங்க ரூ.5 கோடியும் செலவிடப்பட்டது என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள புள்ளிவிவரம்.
கற்றல் கருவிகளை பள்ளித் தலைமையாசிரியரே வாங்கலாம் என திட்டம் அனுமதித்தாலும், இவை மாவட்ட அளவில் ஒரே அதிகாரியால் ஒரே கடையில் கொள்முதல் செய்யப்பட்டு, பல நேரங்களில் ஒரே ரசீது மட்டுமே அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளாட்சித் தணிக்கையின்போது மாவட்ட அளவில் "சுழல்கிறது'. இந்த ரசீதுகளில் நம்பகத்தன்மை இல்லாதது குறித்து உள்ளாட்சி தணிக்கைத் துறை அலுவலர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பு எழுதி வைத்தும்கூட, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கற்றல் கருவி வாங்குவது மிகச் சிறிய அளவிலான செலவுதான். ஆனால் கட்டடங்கள் கட்டுவதற்கான நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. தலைமையாசிரியர் பெயருக்கு நிதி வழங்கப்பட்டாலும், பள்ளி அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் தலைவரும் பள்ளித் தலைமையாசிரியரும் வங்கியில் கூட்டுக்கணக்கு தொடங்கி, இந்தப் பணத்தை கட்டடத்துக்காக செலவிட்டு, கணக்குகளை தணிக்கைத் துறைக்கு காட்ட வேண்டும்.
ஆனால், இதில் 50 சதவீதத்துக்கு அதிகமான பணம், கட்டடத்துக்குப் போகவில்லை என்பதும், உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் இதில் நிறைய விளையாடியதுடன், இந்த "ஆட்டத்தில்' கல்வித் துறை அலுவலர்களையும் சேர்த்துக்கொள்வதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடந்துள்ளது என்று ஆசிரியர் அமைப்புகள் சொல்லும்போது, இத்தனை காலம் ஏன் இந்தப் பிரச்னையை எழுப்பாமல் காலம் கடத்தினார்கள் என்று அவர்கள் மீது தார்மிக கோபம் இயல்பாக எழுகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் முறைகேடு நடந்ததால்தான் இத்திட்டத்தில் நடைபெற்றுவரும் அனைத்து முறைகேடும் தற்போது வெளியே வரத்தொடங்கியுள்ளன.
ஊனமுற்ற குழந்தை ஒவ்வொன்றுக்கும் ரூ. 1200 செலவிடவும் அந்தக் குழந்தைகள் பள்ளிகளுக்கு சக்கர நாற்காலியில் வந்தால் அவர்கள் சிரமம் இல்லாமல் வகுப்பறைக்குச் செல்ல சாய்தளம் அமைக்கவும்கூட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவற்றை காண்பது அரிது.
கிராமத் தொடக்கப் பள்ளி என்றாலும்கூட, கணிப்பொறியை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்டத்துக்கு ரூ. 50 லட்சம் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் திட்டமும் முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. சமூக மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 50 லட்சம் நிதியை இத்திட்டம் அனுமதிக்கிறது. ஆனால் நாம் பார்த்ததெல்லாம், பள்ளிக் குழந்தைகளுடன் அந்தந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஒருநாள் ஊர்வலம் மட்டுமே.
இந்த முறைகேடுகளைக் கண்டறிய தனிக் குழுக்கள் அமைத்து மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.
நன்றி :தினமணி

தாராளமயம் தந்த "பரிசு'

அனைத்து கெட்ட காரியங்களுக்கும் பணம்தான் மூல காரணம் என்கிறது பைபிள். போதுமான பணமின்மைதான் கெட்ட காரியங்களின் ஆணி வேர் என்கிறார் தத்துவமேதை பெர்னார்ட் ஷா.
இந்த இரண்டு விஷயங்களும் பொருந்துமிடம் ஒன்று உள்ளது என்றால் அது பங்குச் சந்தைதான்.
பங்குச் சந்தையில் சிறிய முதலீட்டாளராக இருந்தாலும் சரி, அல்லது அதிக அளவில் முதலீடு செய்பவராக இருந்தாலும் சரி வானவில்லின் அழகிய தோற்றம் போன்ற பங்குச் சந்தை ஏற்றத்தால் ஈர்க்கப்படுவர். வானம் மட்டுமல்ல வானவில்லும் தொட்டுவிடும் தூரம்தான் என பங்குச் சந்தையில் உயரே பறப்பவர் அதிகம். பணத்தின் மீதான தேடலைப்பொருத்து மனிதனுக்கு மனிதன் இது மாறுபடும்.
கடைசியில் வானவில்லை பிடிக்கப் போன மனிதனுக்கு என்ன கதி ஏற்படுமோ அந்த கதியைத்தான் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் இன்று 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழாகச் சரிந்து விட்டது.
இதற்குக் காரணம் என்ன? இந்தியப் பங்குச் சந்தை என்ற சிறிய வட்டத்திலிருந்து, உலக பங்குச் சந்தையாக மாறியதுதான் முக்கியக் காரணம். ஆம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கதவுகள் திறந்து விட்டதிலிருந்தே இப்பிரச்னை தொடங்கிவிட்டது.
இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச அளவில் சரிவைச் சந்திக்கும்போது அதன் தாக்கத்தையும் இந்திய முதலீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம். அமெரிக்காவில் தொடங்கி இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தையை மட்டுமல்ல, தொடர்ச்சியாக பல்வேறு துறைகளையும் இது பாதிக்கும். இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் பல நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன.
1930களில் இதுபோல அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு அது பிற நாடுகளை பாதித்தது. இந்தியாவில் அதன் தாக்கம் தெரிந்ததா? என்பதை உணர முடியாத நிலை. அதற்குக் காரணம் அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததுதான்.
ஆனால் "பெரு மந்தம்' எனப்படும் தேக்க நிலை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகி அது பல நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதுதான் உண்மை. ஆனால் ஒவ்வொரு முறையும் சரிவுக்கான காரணம் மாறிக் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்புத் தன்மை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமயமாக்கலை அமெரிக்கா தொடங்கி, பிற நாடுகள் தம்மை சார்ந்திருக்கும் சூழலை உருவாக்கியது. அதனால்தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டாலும், கத்தரீனா சூறாவளி வீசினாலும் இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
இதனால்தான் தற்போதைய சிக்கலுக்கு உலக நாடுகளுடன் சேர்ந்து தீர்வு காண அமெரிக்கா முயல்கிறது. அதற்காகத்தான் தனி மாநாட்டை கூட்டியிருக்கிறார் அதிபர் புஷ்.
1991களில் பொருளாதார தாராளமயம் என்ற கடிவாளம் இல்லாத காட்டுக் குதிரையில் சவாரி செய்ய அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு வழிகாட்டியவர் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான்.
கட்டுப்பாடற்ற வர்த்தக முறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற மாயையில் அடுத்து வந்த பாஜக அரசும் இதே பாணியைத் தொடர்ந்தது. தற்போது சோனியா தயவால் பிரதமர் பதவியில் உள்ள பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையில் அவரை அடியொற்றி பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் ப. சிதம்பரமும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார்.
பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் சதவிகிதம் வெகு சொற்பமே. ஆனால் அவர்களின் நலன் காக்க ஏறக்குறைய ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு இனங்களில் ரிசர்வ் வங்கி மூலம் விடுவித்துள்ளார் சிதம்பரம்.
ஆனால் பங்குச் சந்தை பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது ஓராண்டுக்கு மேலாகும் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் வங்கிகளை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு என்பதே சாதாரண ஏழை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும் என்ற நிலையில் அதைக் காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிர்.
தாராளமயத்தைக் கடைப்பிடித்த போதிலும் சுயச் சார்பு நிலையைக் கைவிடாததால், சர்வதேச தாக்கம் சீனாவில் அதிக அதிர்வலையை ஏற்படுத்தவில்லை. இதை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்தால் மட்டுமே நமக்கு விமோசனம்.
சுதந்திரத்துக்கு முன்னரே சுயச் சார்புக் கொள்கையை வகுத்தவர் மகாத்மா. பொருளாதார வளர்ச்சிக்கு அரசுத் துறை நிறுவனங்களை உருவாக்கியவர் ஜவாஹர்லால் நேரு. ஆனால் தாராளமய கொள்கையைக் கைக்கொண்ட பிறகு அரசுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்படவில்லை. நாட்டின் பிரதானமான வேளாண்துறை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சேவைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் இருக்கும் நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் தனியார்மயக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா பாடம் கற்றுத் திருந்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சர்வதேச தாக்குதல்கள் இந்தியாவை பாதிக்காமலிருக்கும். ஏழை இந்தியனின் நலன் காக்கப்படும்.
எம். ரமேஷ்
நன்றி : தினமணி

Friday, October 31, 2008

பத்திரமானவைதானா இந்திய வங்கிகள்?

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் பீதியடைந்துள்ள இந்திய மக்கள், இந்திய வங்கிகள் நம்பத்தகுந்தவையா, அவற்றில் போடப்பட்டுள்ள முதலீடுகள் பத்திரமாகவே இருக்குமா என்ற எளிதான, நேரடியான கேள்விக்கு விடை உண்டா என்பதை அறிய ஆவலாக இருக்கிறார்கள்.
இந்தச் சந்தேகத்தைத் தெளிவிப்பதற்குப் பதிலாக, வங்கிகள் ஏதேதோ சுற்றிவளைத்துக் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக நினைத்து, சந்தேகத்தை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
முதலீட்டாளர்களிடையே பரவலாகக் காணப்படும் இந்த அச்சத்தை நியாயமற்றவை என்றோ அளவுக்கு அதிகமானவை என்றோ கூறி ஒதுக்கிவிட முடியாது. தனிநபர்களின் சேமிப்புகளில் 55% வங்கிகளில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.
முதலீடுகளுக்கு வங்கிகள் தரும் வட்டி வீதம் மிகவும் சொற்பமானவைதான் என்றாலும் வங்கிகள் மீதுள்ள நம்பகத்தன்மை காரணமாகவே, கஷ்டப்பட்டு தாங்கள் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளுக்காக வங்கிகளில் சேமிக்கிறார்கள். இது சாதாரணமாகத் தெரிந்தாலும் இப்படிப்பட்ட சேமிப்புகளின் மொத்த மதிப்பு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களாகும்.
ரிசர்வ் வங்கியின் 2008 செப்டம்பர் 12 புள்ளிவிவரப்படி இந்த முதலீடுகளின் மதிப்பு மொத்தம் 34.05 லட்சம் கோடி ரூபாய்களாகும். இது இந்தியாவின் ஓராண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 80% என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பணம் எப்படி பயன்படுத்தப்படுகிறது? பொதுமக்களிடம் இப்படி முதலீடுகளாகத் திரட்டும் தொகையை வங்கிகள் எப்படிச் செலவு செய்கின்றன என்ற முழுமையான, துல்லியமான தகவல்கள்தான் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும். பிரதம மந்திரியும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் அளிக்கும் வாக்குறுதிகளும், நம்பிக்கைகளும் அதற்குப் பிறகுதான்.
இப்படிப்பட்ட முழுமையான, துல்லியமான தகவல்களை எங்கிருந்து பெற முடியும். இந்திய ரிசர்வ் வங்கி தொகுத்துள்ள புள்ளிவிவரங்கள் ஓரளவுக்கு இந்தத் தகவல்களைத் தர முடியும்; அதே போன்றவைதான் வங்கிகளின் லாபநஷ்டக் கணக்கு அறிக்கையும். இந்த அறிக்கைகளை எல்லா சாமானியர்களாலும் படித்து எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்பதும், இந்த அறிக்கையும் வங்கிகள் உண்மையிலேயே எப்படிச் செயல்படுகின்றன என்பதைத் தெரிவித்துவிட முடியாது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இருந்தாலும் இந்த அறிக்கைகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்குப் போதுமான மூலதனம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. திரும்பி வருமோ வராதோ என்று சொல்ல முடியாத கடன்களின் மதிப்பைவிட 4% கூடுதலான அளவுக்கு அதாவது 13% அளவுக்கு இந்திய வங்கிகளின் மூலதனம் இருக்கிறது.
இதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம். வங்கிகள் திரட்டும் மூலதனம் 100 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதில் "ரிஸ்க்' எடுத்து தரப்படும் கடன்களின் மதிப்பு 9 கோடி ரூபாய் என்றால் வங்கிகள் அதற்கு இணையான மதிப்புக்கு தங்கள் வசம் மூலதனம் திரட்டி வைத்திருக்க வேண்டும். "ரிஸ்க்' இனத்தில் கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் வங்கிகள் சுய மூலதனத்தை இட்டு அதை நிரப்ப முடியும். இந்தியாவில் இந்த மூலதனம் 13% ஆக, அதாவது தேவையைவிட 4% அதிகமாகவே இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் இந்த அம்சத்தில் அஞ்சத் தேவையில்லை.
இந்தியாவில் அரசுத்துறை, தனியார்துறை, அன்னிய நாட்டு வங்கிகள் என்று அனைத்தும் சேர்த்து கடன்கள், கடன் அட்டை இன முன்பணக் கடன்கள், வங்கி இருப்புக்கும் மேல் செலவு செய்ய அனுமதிக்கப்படும் கூடுதல் கடன் அளவு போன்றவற்றை அதிகரித்து வருகின்றன. இந்தத் தொகை ரூ.24.91 லட்சம் கோடியாகும். இது வங்கிகள் அனைத்தும் திரட்டி வைத்துள்ள முதலீட்டு மதிப்பில் 73% ஆகும்.
வங்கிகள் பங்கு பத்திரங்களில் மொத்தம் ரூ.10.05 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன. இதில் ரூ.9.86 லட்சம் கோடி மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகளாகும். எஞ்சிய 0.19 லட்சம் கோடி, அங்கீகரிக்கப்பட்ட இதர பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகளாகும்.
கட்டாய கையிருப்பு விகிதம்: வங்கிகள் தாங்கள் பெறும் முதலீடுகளைவிட அதிகத் தொகையைக் கடனாகக் கொடுத்துவிட்டு, கடனை வசூலிக்க முடியாமல் திவாலாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய ரிசர்வ் வங்கி சட்டப்பூர்வமாகவே சில கடமைகளை வங்கிகள் மீது திணித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை, சட்டப்பூர்வமான ரொக்க கையிருப்பு விகிதம் (எஸ்.எல்.ஆர்.), குறைந்தபட்ச கட்டாய ரொக்க கையிருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) ஆகும். இதன்படி வங்கிகள் தாங்கள் திரட்டும் முதலீடுகளின் மதிப்பில் 25% தொகையை ரொக்கமாகவும், வங்கிகளின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடாகவோ பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
இதுபோக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது இடும் கட்டளைக்கு ஏற்ப "கட்டாய ரொக்க கையிருப்பு விகிதத்தை' பின்பற்ற வேண்டும். இது 3% முதல் 15% வரை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். வங்கிகள் கடன் தர போதிய ரொக்கம் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும், முதலீட்டாளர்களின் பணம் அளவுக்கு அதிகமாக ஏதாவது ஒரு இனத்தில் போய் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட ஏற்பாடு அமெரிக்காவில் கிடையாது.
இந்தியாவில் மொத்த முதலீட்டாளர்களின் மதிப்பில் மூன்றில் இரு மடங்கு மட்டுமே கடனாகத் தர அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்க வங்கிகளோ தாங்கள் திரட்டிய முதலீட்டு மதிப்பைவிட ஐந்து அல்லது ஆறு மடங்குக்குக் கடன்களை அள்ளித்தந்து விடுகின்றன. கடன் வாங்கியவருக்கு அதைத் திருப்பிக் கட்டும் பொருளாதாரச் சக்தி இருக்கிறதா, அவர் வாங்கும் அல்லது கட்டும் வீடு உண்மையிலேயே நல்ல விலை மதிப்புள்ளதா என்றெல்லாம் பாராமலேயே கண்மூடித்தனமாக அமெரிக்க வங்கிகள் கடன் தந்துவிடுகின்றன. அதனாலேயே அங்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவில் இப்படிப்பட்ட நிலைமை கிடையாது.
அமெரிக்காவில் நெருக்கடியைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் அவசரகால நடவடிக்கைகளை நாம் நிரந்தரமாகவே எடுத்துவருகிறோம். அமெரிக்க வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் அவற்றுக்கு 35 லட்சம் கோடி ரூபாயைத் தந்து உதவுகிறது. அதாவது அந்த வங்கிகளை அரசே தனது உடைமையாக்கிக்கொண்டுவிட்டது என்றும் இதைக் கூறலாம்.
இந்தியாவில் அரசுடைமை வங்கிகள்தான் அதிகம். அவை நாட்டின் மொத்த முதலீடுகளில் 74.2%ஐத் திரட்டி வைத்துள்ளன. கடன் தொகையில் 73%ஐ அரசுடைமை வங்கிகள்தான் அளித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று என்னவென்றால் அரசு வங்கியானாலும் தனியார் வங்கியானாலும் அவை மக்களின் பணத்தை முதலீடாக வைத்துதான் வியாபாரம் செய்கின்றன. அவற்றின் பணியோ இடைத்தரகர் வேலையைப் போன்றதே.
"பெரியதன்' விளைவு: எத்தனைதான் சொன்னாலும் விளக்கினாலும் எங்கோ ஓரிடத்தில் இடிக்கிறது. நம் நாட்டு வங்கிகளின் அதிலும் குறிப்பாக அரசு வங்கிகளின் நிதி நிலைமை நன்றாக இருக்கும்பட்சத்தில் அரசு அடுக்கடுக்காக பல நடவடிக்கைகளை எடுப்பானேன், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் நிதித்துறை நிபுணர்களும் கூடிக்கூடிப் பேசுவானேன்? வெளிநாட்டு வர்த்தகத்துக்கு கதவைத் திறந்துவிட்டபிறகு, அங்கே அடிக்கும் காற்று நம்பக்கமும் வீசாது என்று நம்புவது பேதமை.
பங்குச் சந்தைகள் நேரடியாக வாங்கிக் கொண்டிருக்கும் அடிகளைப் பற்றி விளக்கவே தேவையில்லை. அன்னிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொண்டுவந்து முதலீடு செய்தபோது இந்திய பங்குச்சந்தை உப்பிப்பருத்தது. அவையே முதலீட்டைத் திரும்பப்பெற ஆரம்பித்ததும் சூம்பிச் சிறுத்துவிட்டது. அதே போல அமெரிக்க டாலர்களுக்கு தேவை அதிகம் ஏற்பட்டவுடன் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. ரூபாயின் மதிப்பு சரிந்ததால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை ஆராய இந்தக் கட்டுரை போதாது.
வங்கிகளுக்கும் பங்குச் சந்தைக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. எனவே அவற்றுக்கு ஆபத்து இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. எந்த அளவுக்கு என்பதுதான் விடை தேட வேண்டிய வினா.
வரவுசெலவு கணக்கு கூறுவது என்ன? வங்கிகள் ஆண்டுதோறும் வெளியிடும் வரவுசெலவு அறிக்கை, நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் அளித்துவிடுவதில்லை; அதே சமயம் அவை தரும் சில தகவல்கள் முக்கியமானவை. சில விஷயங்களை நாம் ஊகித்தறிய அவை பெரிதும் உதவுகின்றன. ""அவசர செலவு இனத்தில்'' 200708ம் ஆண்டில் ரூ.18.57 லட்சம் கோடி செலவாகியிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு (200607) இது ரூ.12.70 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முந்தைய ஆண்டைவிட 46.16% அதிகம். இந்தத் தகவல் இந்திய வங்கிகள் சங்கம், அரசுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தனியார் வங்கிகளைப்பொருத்தவரை இந்தத் தொகை இதைவிட அதிகமாக இருக்கிறது. அனைத்து தனியார் வங்கிகளும் சேர்த்து 200708ல் ரூ.23.61 லட்சம் கோடியை இந்த இனத்தில் செலவாகக் காட்டியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 77.53% அதிகமாகும். முந்தைய ஆண்டு இத் தொகை ரூ.13.30 லட்சம் கோடியாகும்.
தனியார்துறையில் உள்ள 16 வங்கிகளில் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ள 8 வங்கிகள் மொத்தமாக ரூ.22.50 லட்சம் கோடியை இந்த இனத்தில் கணக்கு காட்டியுள்ளன. அனுபவம் உள்ள பிற 8 தனியார் வங்கிகள் இந்த இனத்தில் காட்டியுள்ள தொகை ரூ.1.11 லட்சம் கோடிதான். தனியார் துறையில் இப்போது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குதான் இதில் அதிகம். அது 48.76% அளவுக்கு அவசர செலவு இனத்தில் கணக்கு காட்டியிருக்கிறது. வரவுசெலவு கணக்கில் வராத தொகையாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி குறிப்பிட்டுள்ள ரூ.11.51 லட்சம் கோடியானது, வரவுசெலவு கணக்கில் அது குறிப்பிட்டுள்ள ரூ.3.99 லட்சம் கோடியைவிட 288% அதிகமாகும். அந்த வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை அளவும் ரூ.5.62 கோடி அளவுக்கு அதிகமாகியிருக்கிறது.
அரசு வங்கிகளிடையே எஸ்.பி.ஐ. இதில் முதலிடம் வகிக்கிறது. அதன் பங்கு 43.66% ஆகும். வரவுசெலவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பணப்பரிமாற்றத்தைவிட, அதில் குறிப்பிடப்படாத பரிமாற்றம்தான் இந்த வங்கியைப் பொருத்தவரை அதிகம்.
வரவுசெலவில் வராத இனத்தில் இடம்பெறுபவை, டெரிவேடிவ்ஸ் எனப்படும் ஊக வாணிக குறியீடு, முன்பேர வர்த்தக ஒப்பந்தம், எதிர்கால ரொக்க மதிப்பு தொடர்பான வியாபாரம் போன்றவை. இவையெல்லாம் சாமானிய மனிதனுக்கு என்னவென்றே புரியாது. ஆனால் இவையெல்லாம்தான் மேலை நாடுகள் அனுபவிப்பதைப்போல ஆபத்தை உண்டாக்கவல்ல காரணிகள். எனவே ரிசர்வ் வங்கி இவற்றையெல்லாம் வரவுசெலவு கணக்கு மதிப்பீட்டு அறிக்கையிலேயே கொண்டுவர வேண்டும் என்று பணித்ததுடன் இந்த இனங்களில் நடந்துள்ள பரிமாற்றங்களையும் ஆய்வுக்கு உள்படுத்தியிருக்கிறது. இது சரியான நடவடிக்கை. இதன் முழு விளைவை அடுத்த ஆண்டு வரவுசெலவு அறிக்கையில்தான் நம்மால் உணர முடியும்.
இந்தத் தகவல்கள் எல்லாம் உணர்த்துவது ஒன்றுதான், உரிய காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நிதி அமைச்சரும் ரிசர்வ் வங்கி கவர்னரும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு வங்கியாக தனித்தனியாகப் பிரித்து அவற்றின் நிதிநிலையை ஆராய வேண்டும். அமெரிக்க நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி வங்கிகளையும் பொதுச்சேமிப்புகளையும் பத்திரமாக பாதுகாக்கும் வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

நஷ்டங்கள் மட்டுமே நாட்டுடைமையாகும்

உலக நிதிச்சந்தை நெருக்கடியின் பரிமாணங்கள் விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. அமெரிக்காவில் திவாலாகிப் போன வங்கிகளைக் காப்பாற்றிக் கடைத்தேற்றுவதற்காக மக்கள் வரிப் பணத்திலிருந்து 70,000 கோடி டாலர்களை அந்நாட்டு நாடாளுமன்றம் சட்டம் இயற்றி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் அடங்கிய 7 நாடுகள் மட்டுமே 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலர்களை இதே வகையில் ஒதுக்கீடு செய்துள்ளன.
"அமெரிக்காவில் நிகழ்ந்த நிதிச்சந்தை நெருக்கடி இந்தியாவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்று வீரவசனம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூட இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக 1 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் பயன்படுத்திக் கொள்வதற்காகத் திறந்துவிடச் செய்துள்ளார்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அரசின் முடிவைச் செயல்படுத்தியுள்ள வங்கிகளுக்கு, அந்தவகையில் ரூ.25,000 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக மேலும் 20,000 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் மூலமாகப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்துள்ளது. "கடன் வழங்குவதைத் தங்கு தடையின்றித் தொடர்க; பணப்புழக்கத்தைத் தேவையான அளவுக்கு அதிகரிக்கிறோம்' என்று நிதியமைச்சகம் நம் நாட்டு வங்கிகளுக்கு "அறிவுரை' வழங்கியிருக்கிறது.
இந்திய நாட்டின் பங்குச் சந்தை வியாபாரத்தை சரிவிலிருந்து மீட்கவும், வங்கித் துறையை பாதிப்பிலிருந்து காப்பாற்றவும் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் எந்தக் குறைவும் வைக்காமல் செய்து தருகிறோம் என்று பிரதமரும், நிதியமைச்சரும், திட்டக்குழுத் துணைத் தலைவரும், ரிசர்வ் வங்கி கவர்னரும், நிதியமைச்சகச் செயலாளரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும் நாள் தவறாமல் அபயக்குரலை அருள்வாக்காகக் கூறி வருகிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், மத்திய அரசு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை உள்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்திருக்கிறது விளங்கும்.
நிதிச்சந்தை நெருக்கடி தொடர்பான பரபரப்புச் செய்திகள் அன்றாடம் தலைப்புச் செய்திகளாகப் பத்திரிகைகளையும், தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், நாடு முழுவதும் காய்கறிச் சந்தைக்கும், மளிகைக் கடைகளுக்கும் அன்றாடம் சென்று வருகிற கோடிக்கணக்கான சாதாரண மக்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வுப் பிரச்னை திட்டமிட்டே பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
விலைவாசி கடுமையாக உயர்ந்து, அரசாங்கத்தின் புள்ளிவிவரக் கணக்கின்படி பணவீக்கம் 12 சதவிகிதத்தைத் தாண்டிய நிலையில், சில வாரங்களுக்கு முன்பாகக் கூட நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் விலைவாசி உயர்வுக்கு உள்நாட்டில் பணப்புழக்கம் கூடுதலாக இருப்பதுதான் காரணம் என்று சொன்னார்கள். இந்தப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே தலையாய கடமை என்று ஏற்றுக் கொண்டு, இன்று எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நேர் எதிராக, வங்கிகளில் இருந்த பணத்தை உறிஞ்சி எடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது; ரொக்க இருப்பு விகிதத்தைக் கூட்டியது. இன்றும் பணவீக்கம் 11.8 சதவிகிதம் என்ற அளவிலேயே நிலை கொண்டிருக்கிறது என்பதும், சந்தையில் மக்களின் அன்றாடத் தேவைக்கான பண்டங்களின் விலைகள் மேலும் உயர்ந்து வருவதும், ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்காமல் போயிருப்பது வேதனையான நிகழ்வு. மிதமிஞ்சிய பணப்புழக்கம்தான் பணவீக்கத்திற்குக் காரணம் என்று முன்னர் சொன்னது உண்மையானால், இப்போது மடைதிறந்து விடப்படும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கத்தைக் கூடுதலாக்கும்; அதன் விளைவாக விலைவாசி உயர்வு மேலும் கொடிகட்டிப் பறக்கும் என்பதும் நிச்சயமான ஒன்றுதானே!
நிதித்துறை நெருக்கடி, பணவீக்க உயர்வு இரண்டுமே இந்த அரசின் முன்பாகவுள்ள முன்னுரிமைப் பிரச்னைகள் என்று அண்மையில் கூறிய நிதியமைச்சர் சிதம்பரம், இரண்டாவது பிரச்னையை மட்டும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடம் பங்குச்சந்தை திசை நோக்கிக் கவனத்தைச் செலுத்துவது ஏன்? பங்குச் சந்தைக் குறியீடுகளான "சென்செக்ஸ்' 30 கம்பெனிகளையும், "நிஃப்டி' 50 கம்பெனிகளையும் மட்டும் சார்ந்தவை என்பதை இப்போது புதிதாய்க் கண்டுபிடித்தது போல் சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், அந்தப் புள்ளிகளின் சரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவற்றைத் தாங்கிப் பிடித்து மேலே தள்ளுவதற்கு ஓய்வு ஒழிச்சலின்றிக் கடமையாற்றுவது ஏன்? பங்குச் சந்தை வியாபாரத்தில் நிகழும் ஏற்ற, இறக்கங்கள், பங்குகளில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்களை பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அந்த சிறுமுதலீட்டாளர்கள் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் மிகச்சிறிய சதவிகிதம் தானே! அவர்களின் நலன்களைக் காப்பதில் ஆர்வம் காட்டுவதாகவே ஆட்சியாளர்களின் இன்றைய அவசர நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், மற்ற பெருந்திரளான மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசிப் பிரச்னையில் அக்கறையின்றி அரசு மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது அல்லவா?
விலைவாசி உயர்வுக்கு அடிப்படையான காரணிகளில் முக்கியமான ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 120 டாலரைத் தொட்டபோது ஏற்றிய விலையை, அதன் விலை 80 டாலராகச் சரிந்து நிற்கிற இப்போதும் குறைக்க மறுப்பது எந்த வகையில் நியாயமாகும்?
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்த நிதிச்சந்தை நெருக்கடியை எதிர் கொள்வதற்காக மக்கள் வரிப்பணத்தில் மூன்றரை லட்சம் கோடி டாலர்களை அள்ளியெடுத்துத் தாரை வார்ப்பதற்கு எதிர்வினைக் கேள்விகள் வலுவாக எழுந்து வருகின்றன. இதைச் சமாளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கையாண்ட தந்திரம், தனியார் நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் திவால் நிலைமைக்குத் தள்ளப்பட்ட வங்கிகளை அரசாங்கம் தேசியமயமாக்கும்; அவற்றுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் அரசாங்கத்தின் பங்குகளாகக் கணக்கிடப்பட்டு, அந்த வங்கி நிர்வாகங்கள் அரசின் பொறுப்பிலும், கட்டுப்பாட்டிலும் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். கார்டன் பிரவுனின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்காவிலும் கோரிக்கை எழவே, அதிபர் ஜார்ஜ் புஷ் இப்போது அதே பாணியில், அரசாங்கத்தின் நிதி உதவி, சம்பந்தப்பட்ட வங்கிகளில் பங்கு மூலதனமாகவே செலுத்தப்படும். அவை "தாற்காலிகமாக' தேசியமயமாக்கப்படும், அந்த வங்கிகளின் நிலைமை சீரடைந்தபிறகு, அதன் நிர்வாகங்கள் அரசாங்கத்தின் கையிலுள்ள பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்க நேர்ந்தது.
இந்த நிகழ்ச்சிப் போக்குகள் உணர்த்துகிற உண்மைகள், பொருளாதார சீர்திருத்தங்களை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்தவர்களுக்குக் கசப்பானவையாகவே உள்ளன. உலகமயம் தாராளமயம் என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற சதிராட்டத்திற்கு வழிவகுத்துவிட்டது. அதன் பயன்பாடு உலக நாடுகளின் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சிக்கு எள்ளளவும் உதவி செய்யாமல், நிதிச்சந்தை சூதாட்டத்தின் மூலம் ஒரு சிலர் சில பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிக் குடும்பங்கள், அவற்றின் உயர் அதிகாரிகள் மட்டும் கொள்ளை லாபம் கொழிப்பதற்கு இட்டுச் சென்றுவிட்டது.
கடிவாளம் இல்லாத குதிரையாக சந்தைப் பொருளாதாரத்தைப் பாய்ச்சல் மேற்கொள்ள இனியும் அனுமதிக்க முடியாது. கட்டுப்பாடுகள் தேவை. கண்மூடித்தனமான தனியார்மயம் தீங்கானது. நிதி நிறுவனங்களைத் தேசியமயமாக்குவது தாற்காலிகமாகவேனும், முழுமையாக இல்லாமல் பகுதியாகவாவது மிக மிக அவசியம். இவையே அந்தக் கசப்பான உண்மைகள்.
இவற்றுக்கு அப்பால் பொதிந்து கிடக்கிற அடிப்படையான அம்சம் ஒன்றையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை வியந்து பாராட்டும் உலகமயதாராளமயப் பொருளாதாரக் கோட்பாடு, "லாபம் என்றால் தனியார்மயம், நஷ்டம் வந்தால் நாட்டுடைமை' என்பதையே தவிர்க்க முடியாத விதியாக உருவாக்கி இருக்கிறது என்பதே அந்த அடிப்படையான அம்சம்! "இப்போது நெருக்கடியில் சிக்கிவிட்ட நிலையில் அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டாலும், லாபம் வரத்தொடங்கிய பின்னர் அரசாங்கத்தின் பங்குகளைத் திருப்பவும் தனியாரிடம் ஒப்படைப்போம்' என்று அமெரிக்க அதிபர் "தேசியமயம் தாற்காலிகமானதே' என்று வாக்குறுதி தருவதும் இந்த விதியை அடியொற்றித்தான். இந்தியாவில் அமெரிக்காவைப் போலவோ, ஐரோப்பிய நாடுகளைப் போலவோ, நிதித்துறை முழுமையாகத் தனியார் மயமாகி விடவில்லை இன்றுவரை! இடதுசாரிகளின் கொத்தடிமையாகவே செயல்பட நேரிட்டதாகப் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டினாரே அதில் வேறு எந்த உண்மையும் இல்லாமல் போனாலும், அவரும், ப. சிதம்பரமும் மேற்கொள்ளத்துடித்த நிதித்துறைச் சீர்த்திருத்தங்களுக்கு இடதுசாரிகள் நந்தியாகக் குறுக்கே நின்று தடுத்து வந்தனர் என்பது மட்டும் கடந்த நான்காண்டுகள் காட்டியுள்ள உண்மை.
இன்று சர்வதேச நிதிச்சந்தையில் ஓங்கி அடிக்கும் சுனாமிப் பேரழிவு அலைகள் ஓயாத நிலையிலும், நிதித்துறைச் சீர்திருத்தங்களை விரைவில் செயல்படுத்துவது அவசியம் என்று நம் நாட்டின் நிதியமைச்சர் வலியுறுத்தி வருவது யாருடைய நன்மைக்காக என்ற கேள்வி முன் நிற்கிறது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1969ல் 14 பெரிய வங்கிகள் தேசியமயமானது வரை 488 தனியார் வங்கிகள் திவாலாகி விட்டன என்பது பழைய வரலாறு. அதற்குப் பிறகு 1969 முதல் 2004 வரையிலான 35 வருடங்களில் 24 தனியார் வங்கிகள் திவாலாகி விட்டன என்பது புதிய வரலாறு. இந்த திவாலாகிப் போன வங்கிகளையெல்லாம் இணைத்துக் கொண்டு அவ்வங்கிகளின் வாடிக்கையாளர் சேமிப்பையும், வங்கித் துறையின் மீது நம்பிக்கைகளையும் உயர்த்திப் பிடிப்பது பொதுத் துறை வங்கிகள் தாம். இருப்பினும் தனியார்மய மோகம் சற்றும் குறையவில்லை ஆட்சியாளர்களிடம் என்று பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி என்ற வங்கி ஊழியர் மாத ஏடு சுட்டிக்காட்டியுள்ளது நிதர்சனமான உண்மை. இந்த வகையில் "நஷ்டங்கள் மட்டுமே நாட்டுடைமையாகும்' "லாபங்கள் அனைத்தும் தனியார்மயம்' என்ற கோட்பாட்டை மேலை நாடுகளுக்கே "கொடையாக'த் தந்துள்ள பெருமை இந்தியாவின் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களைச் சாரும்!
உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி

Thursday, October 30, 2008

பெற்றோரைத் திணறடிக்கும் அதிவேகக் குழந்தைகள்

தற்போதைய தலைமுறைக் குழந்தைகளின் அதிவேகமும், துடுக்குத்தனமும், கேள்வி கேட்கும் திறனும் பெற்றோர்களை பெருமிதம் கொள்ளச் செய்தாலும் பல நேரங்களில் அவர்களது பிடிவாதப் போக்கும், கடுமையான செயல்பாடுகளும் முகம் சுளிக்க வைப்பது நிதர்சனமான உண்மை.
அவர்களது வேகம் பல நேரங்களில் அவர்களையே பாதிப்படையச் செய்வது வேதனைக்குரிய ஒன்று. இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.
இக்குழந்தைகளால் அதிகம் பாதிப்புக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாவது பெற்றோர்தான். அதிலும் தாய், தந்தை இருவரும் பணிக்குச் செல்பவராக இருப்பின், இக்குழந்தைகளைப் பராமரிப்பது மேலும் சிரமமாகிறது.
இவ்வகை குழந்தைகளை அதீத சுறுசுறுப்பு மற்றும் கவனச் சிதறல் உள்ள குழந்தைகள் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் குழந்தைகள் வளர, வளர அவர்களது வேகம் அதிகரிப்பதுடன், வகுப்பறையில் கவனச் சிதறல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்களது வேகத்தை ஆரம்ப நிலையிலேயே திசை திருப்பாவிடில், அது அவர்களை எதிர்மறைப் போக்கில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளை உரிய மனோதத்துவ நிபுணரிடம் பரிசோதனை செய்து, அவர்களது வேகத்துக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
பாதிப்பு அதிகம் இருந்தால்மட்டுமே மருந்து தேவைப்படும். இல்லையேல், இவ்வகைக் குழந்தைகளுக்கு எளிமையான பயிற்சிகளே போதுமானது. இது நோயல்ல; நடத்தை சம்பந்தப்பட்ட குறைபாடு மட்டுமே என்கின்றனர் மருத்துவர்கள்.
இவ்வகை குழந்தைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் அவர்களின் ஆற்றலை நீச்சல், ஸ்கேட்டிங், ஓவியம் தீட்டுதல் போன்று பிற செயல்களில் செலவிடச் செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களது வேகம் குறைவதோடு, கவனமும் அதிகரிக்குமாம்.
குழந்தைகள் அதிக நேரம் பெற்றோரை விட்டுப் பிரிந்து இருப்பது அவர்களை மனதளவில் பாதிப்புக்கு ஆளாக்குகிறது.
அதிலும் இதுபோன்ற அதிவேகக் குழந்தைகளுக்கு பெற்றோர் பிரிவு பிடிவாதப் போக்கை அதிகரிக்கச் செய்கிறது.
பொருள்களை விட்டெறிவது, அடிப்பது போன்ற முரட்டுச் செயல்களில் ஈடுபடவும் வைக்கிறது.
எனவே, இவ் வகை நடத்தையுள்ள குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களது தேவையைக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். அவர்களது தேவையை அச்சமின்றி வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அவர்கள் அழும்போதோ, பிடிவாதமாகச் செயல்படும்போது அவர்களை அதிகம் பொருட்படுத்தக்கூடாது. நாம் அப்படி செயல்பட்டாலே அவர்களது போக்கு மாறிவிடும். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்களை சமாதானப்படுத்தலாம்.
அதைவிடுத்து, அவர்களது வேகத்தைக் கட்டுப்படுத்த அவர்களை அடிப்பது, கடிந்து கொள்வது, அவர்கள் மீது அதீதக் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
இது அவர்களது வேகத்தை மேலும் அதிகரிக்குமே தவிர, குறைக்காது. குழந்தைகளை தொலைக்காட்சியில் அதிவேகக் காட்சிகளைக் காணச் செய்யக் கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
இந்தப் பிரச்னை குழந்தை வளரும் சூழ்நிலையில் ஏற்படுவதே தவிர, பிறவியில் ஏற்படுவதல்ல. வீட்டில் ஒரே குழந்தையாய் வளர்வது, பெற்றோர் அதிகமாகச் செல்லம் கொடுப்பது மற்றும் தொலைக்காட்சியில் பார்க்கும் சம்பவங்கள் போன்றவை இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறதே தவிர, உரிய காரணம் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்கின்றனர் அவர்கள்.
எல்.கே. கவிதா
நன்றி : தினமணி

வாய்ப்பை நழுவ விடலாகாது!

சமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உரியவை. இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காண அதிபர் ராஜபக்ஷ தயாராக இருப்பது உண்மையானால், அவருடன் ஒத்துழைக்கவும், நல்லதொரு தீர்வு காணவும் நாம் தயங்கக்கூடாது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்க முடியும்.
அந்த நேர்காணலில் அதிபர் ராஜபக்ஷ இந்திய இலங்கை உறவு குறித்தும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வரின் பங்கு பற்றியும் கூறியிருக்கிறார். இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய இலங்கை உறவு சுமுகமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அதிபர் ராஜபக்ஷ, இந்தியாவின் ஒத்துழைப்பும் தலையீடும் இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
அவர் தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து இதனினும் முக்கியத்துவம் வாய்ந்ததும், இந்தப் பிரச்னையில் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுத்தரும் வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அது, அதிபர் ராஜபக்ஷ தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான மதிப்பும் மரியாதையும்தான்.
இந்தியாவிலேயே முதிர்ந்த அரசியல் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது தனக்கு மிகுந்த மரியாதை எப்போதுமே உண்டு என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண விரும்பும் அவருடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் திறந்த மனதுடன் தான் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷ. இந்திய அரசின் மூலம் முதல்வர் கருணாநிதியைத் தங்கள் அரசு விருந்தினராக அழைத்து அவருடைய ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண விழைவதாகவும் அதிபர் ராஜபக்ஷ தெரிவித்திருப்பது முடிவு தெரியாத இருட்டு குகைக்குள் ஒளிக்கீற்று பாய்ந்தது போல இருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்னை இந்த அளவுக்கு ஒரு இடியாப்பச் சிக்கலாக மாறியதற்கு முக்கியக் காரணமே, அந்தப் பிரச்னையின் ஆழத்தையும் கெளரவத்தையும் புரிந்து கொள்ளாத அதிகாரிகள் மூலம் இந்திய அரசு அதை அணுக முற்பட்டதுதான். ஆரம்பத்திலேயே இந்தியா முனைப்புடன் செயல்பட்டு இதற்கு அரசியல் தீர்வு காண முற்பட்டிருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு மோசமாகி இருக்காது என்பதுதான் உண்மை.
அதிபர் ராஜபக்ஷ கூறியிருப்பதுபோல அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமானால், அது ராணுவத்தின் மூலமோ அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தை மூலமோ நிச்சயமாக ஏற்பட வாய்ப்பில்லை. முதல்வர் கருணாநிதியின் மீது தனக்கிருக்கும் பெருமதிப்பை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் அதிபர் ராஜபக்ஷ நிச்சயமாக அவரது தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், சமரசத்திற்கும் உடன்படுவார் என்று நாம் நம்பலாம்.
எங்கிருந்தோ வருகின்ற, இந்தப் பிரச்னையின் ஆழம் தெரியாத, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நார்வே தூதுக் குழுவோ, தில்லியிலிருந்து அனுப்பப்படும் அதிகாரிகளின் குழுவோ இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதேநேரத்தில், அதிபர் ராஜபக்ஷவின் நன்மதிப்பைப் பெற்ற முதல்வர் கருணாநிதியின் தலைமையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு மற்றும் தேசியத் தலைவர்களான முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்களை உள்ளடக்கிய குழுவால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமரசத் தீர்வு காண வாய்ப்பிருக்கிறது.
அதெல்லாம் இயலாத ஒன்று, உடனடியாக நடக்கும் விஷயமல்ல என்று கருதினால், முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒரு குழு உடனடியாக கொழும்பு சென்று இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் என்ன தடை இருக்க முடியும்? முதல்வர் மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருக்கும் இந்திய மற்றும் இலங்கை அரசுகள் அதை மனதார வரவேற்காமல் இருக்குமா, என்ன?
இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும், அங்கே நடைபெறும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கும் முதல்வர் கருணாநிதிக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல்வர் கருணாநிதியே முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தும்போது விடுதலைப் புலிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அவரது முடிவுக்குக் கட்டுப்படுவார்கள் என்பது உறுதி.
இலங்கை அதிபர் ராஜபக்ஷ அளித்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களின் துயரை நிரந்தரமாகத் தீர்ப்பதன் மூலம் மட்டும்தான் முதல்வர் கருணாநிதி தன்னைத் "தமிழினத் தலைவர்' என்று சரித்திரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இந்தப் பொன்னான வாய்ப்பை அவர் நழுவ விடலாகாது!
நன்றி : தினமணி

Wednesday, October 29, 2008

துயரை திசைதிருப்பும் துதிபாடிகள் - பழ. நெடுமாறன்

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவெறிப் படுகொலைகள் குறித்த பிரச்னையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வரவேற்கத்தக்க பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 14102008 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுவில் பெரும் உற்சாகத்தை ஊட்டியுள்ளன.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுமே இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவது குறித்து பெரும் கவலை தெரிவித்தனர். போரை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்றவற்றை உடனடியாக அனுப்பி வைக்கவும், இனப் பிரச்னைக்கு அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும், ராணுவ ரீதியான தீர்வு ஒருபோதும் கூடாது, இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவி எதையும் செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தெரிவித்தனர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெளிப்படுத்திய இந்த உணர்வுகளின் அடிப்படையில் அக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
போரை நிறுத்தி உடனடியாக அமைதியை ஏற்படுத்த இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். 15 நாள்களுக்குள் இவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்தும் தனித்தனியாகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளன. தமிழக முதலமைச்சர்களினால் அவ்வப்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப் பெற்றும் அனைத்துக் கட்சித் தூதுக் குழுவாக தில்லி சென்று பிரதமரிடம் முறையீடுகள் அளிக்கப்பட்டும் வந்துள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இந்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நிலையிலும் அதிகாரிகள் நிலையிலும் பலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்தியாவின் ஆழ்ந்த கவலைகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. பிரதமர் இந்திராவின் காலத்தில் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருதரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டினையும், அதைப்போல பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டினையும் மதித்துச் செயல்படுத்த இலங்கை அரசு முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் இப்போது தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்துள்ள முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். கடந்த காலத்தில் இத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் சார்பில் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இந்த முடிவுகள் கருதப்பட வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டிய தீர்மானமும் அதைச் செய்யத் தவறினால் தமிழகம் எத்தகைய நிலையை மேற்கொள்ளும் என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 30 ஆண்டு கால வரலாற்றில் இத்தகைய திட்டவட்டமான நிலைமையை தமிழகம் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து இந்திய அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழ் மக்கள் அனைவரின் விருப்பமும் இதுதான்.
ஆனால் சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் மனம் இரங்காத சிலர் அனைத்துக் கட்சிகள் மேற்கொண்ட முடிவுகளைத் திரித்துப் பொய்ப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் வாயும் மனமும் கூசாமல் பேச முன்வந்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து விமானத் தாக்குதலாலும் பீரங்கிக் குண்டு வீச்சினாலும் செத்து மடியும் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உண்ண உணவின்றியும் இருக்க இடமின்றியும் நோய்களுக்கு மருந்தின்றியும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காடுகளிலும் வெட்ட வெளியிலும் துடிப்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள வல்லரக்கர்களின் கொடுஞ்செயலைக் கண்டிக்கவும் அவர்கள் முன்வரவில்லை. சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதையே தங்களின் பிறவிப் பயனாகக் கருதுகிறார்கள்.
ராஜீவ்காந்தி காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ள இந்திய அரசுகள் இலங்கை இனப் பிரச்னையில் கையாண்டு வரும் தவறான கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் உருவாகி இருப்பதை மேற்கண்டவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.
இந்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.
1. ஈழத் தமிழர்கள் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசின் நலன்களைக் காக்கும் வகையிலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
ஈழத் தமிழர் பிரச்னையில் சிங்கள அரசு வகுத்த தீர்வை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக சிங்கள அரசு தனது இன அழிப்புப் போரைத் தங்குதடையின்றி தொடர்வதற்கு அனுமதித்தது.
2. சுய நிர்ணய உரிமையுள்ள தமிழ்த் தாயகத்தை பெறுவதற்காக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டம் அங்கீகாரமற்றதாகவும் அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. தமிழ்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என வர்ணித்து ஒழித்துக் கட்டுவதற்கு சிங்கள அரசு முற்பட்டதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
3. ஈழத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு தொடர்ந்து செய்த முயற்சிகளைத் தடுக்க இந்திய அரசின் அணுகுமுறைகளினால் முடியவில்லை.
4. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட நாடான இலங்கையில் நேரு, இந்திரா காலங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலையில் இருந்த அன்னிய நாடுகள் இலங்கையில் கால் ஊன்றுவதற்கு ராஜீவின் கொள்கை இடம் அளித்துவிட்டது.
இக்கொள்கையால் ஏற்பட்ட தடுமாற்றங்களின் விளைவாக தென் ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்கு இந்திய அரசு மறைமுகமாகத் துணைபுரிந்துவிட்டது. இப்பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். இந்தியா அதனுடைய எல்லைகளுக்குள்ளாகவே அடங்கிக் கிடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்குள்ளும் தென் ஆசிய பகுதிக்குள்ளும் பலமான நிர்பந்தங்களை அமெரிக்கா உருவாக்குகிறது. இலங்கை அரசுக்குத் தான் நேரிடையாக உதவி செய்வதை விட தனது நட்பு நாடான பாகிஸ்தான் மூலம் உதவி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுத்த ஆயுதங்களின் ஒரு பகுதி இலங்கைக்குத் திருப்பிவிடப்பட்டு உள்ளது.
இலங்கையிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது. மேலும் அராபிய நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாகவே செல்கின்றன. கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் இலங்கையைத் தொட்டுச் செல்கின்றன. இந்துமாக் கடலில் கப்பல் போக்குவரத்துப் பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. எனவே, இந்தக் கடல் பாதைகள் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால் இலங்கை தனது ஆதிக்கத்திற்கு உள்பட்ட நாடாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது.
சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குத் தாராளமாக ராணுவ உதவிகள் அளிப்பதற்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. இந்த நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை ஒரு பெரிய சந்தை அல்ல. இலங்கையினால் இந்த நாடுகளுக்கு எந்தவிதமான ஆதாயமும் கிடையாது. ஆனாலும், சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இந்நாடுகள் உதவி செய்வதற்குக் காரணமே இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்திய அரசின் தவறான கொள்கையின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானதை விட இந்தியா மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இந்தியாவின் தென்வாயிலில் பேரபாயம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே பலர் எச்சரித்துள்ளனர்.
நேருவின் நண்பரும் சீனாவில் இந்தியத் தூதுவராக இருந்தவருமான சர்தார் கே.எம். பணிக்கர் இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்திருந்தார். ""இந்தியாவும் இந்துமாக் கடலும்'' என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியுள்ள நூலின் 7வது பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
""இந்தியாவைப் பாதிக்கும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தில் கடல் பகுதியை அலட்சியமாக ஒதுக்கி விடுகிற போக்கு இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவின் பாதுகாப்பு என்பது வடமேற்கு எல்லைப் பகுதிகளை மட்டும் பொருத்தது என்ற முடிவுடன் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்காலத்தை நில எல்லைகள் முடிவு செய்யவில்லை. மாறாக கடல்தான் எதிர்காலத்தை முடிவு செய்தது என்பதை மறந்துவிடக் கூடாது.''
வரலாற்று அறிஞரான டி.ஆர். இராமச்சந்திரராவ் ""இந்தியாவும் இலங்கையும் ஓர் ஆய்வு'' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலின் 8வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
""இந்துமாக் கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை உள்ளது. இந்துமாக் கடலின் பாதுகாப்பு அதைப் பொருத்ததேயாகும். நிலவியல் அடிப்படையிலும் அது நடு மையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியாகச் செல்லும் விமானத் தடங்களுக்கும் கப்பல் தடங்களுக்கும் இலங்கை நடு நாயகமாக உள்ளது.''
இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் நெருங்கி உறவாட இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இலங்கை ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உடன்பாடுகள் செய்து கொள்வதற்கும் இலங்கை தயங்கியதில்லை. 1962ம் ஆண்டு இந்தியாவின் எல்லைகளை சீனா ஆக்கிரமித்தபோது இந்திய சீனப் படைகளின் மோதல்கள் நிகழ்ந்து இரு நாடுகளின் உறவும் மிகவும் சீர்கெட்டிருந்தது. அந்த நிலையில் 1963ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையும் சீனாவும் கடல் உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டன. சீனப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்து போவதற்கான உடன்பாடும் இந்த உடன்படிக்கையில் செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் இந்தப் போக்குகளைக் கண்ட இந்திய ராணுவத் தளபதிகளும் இந்திய அரசுக்குத் தங்கள் கவலைகளைத் தெரியப்படுத்தினார்கள். இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான இரவி கெளல் என்பவர் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
""பிரிட்டனுக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமோ, சீனாவுக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதுபோன்று இந்தியாவுக்கு இலங்கை முக்கியமானதாகும். இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும்வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவுக்கு அதனால் ஆபத்து வந்துசேரும்''.
இந்தியாவுக்கு வரவிருக்கும் அபாயத்தைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சிங்களத் துதிபாடிகளுக்கு கொஞ்சமும் கவலையில்லை. அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் நலனிலும் அக்கறை இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள அபாயம் குறித்தும் கவலையில்லை. சிங்கள இனவெறியருக்கு இந்தியா தொடர்ந்து எல்லாவகை உதவிகளையும் செய்து ஈழத் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாகும். அதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தச் சிங்களத் துதிபாடிகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மேலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிட முடியாது என்றும் அடிக்கடி சொல்கிறார்கள்.
சிலவேளைகளில் இந்தியப் பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இத்தகையோருக்கு இந்தியாவின் கடந்தகால வரலாறு கொஞ்சமும் தெரியவில்லை. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்திரா காந்தி காலம் வரை எத்தகைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா கையாண்டு வந்திருக்கிறது என்பதை நம்முடைய பிரதமரோ அவருக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகளோ அல்லது அந்த அதிகாரிகளைத் திசைதிருப்ப முயலும் சிங்களத் துதிபாடிகளோ எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளை அரசாங்கம் கருப்பின மக்களுக்கு எதிராகக் கையாண்ட நிறவெறிக் கொள்கையை ஜவாஹர்லால் நேரு மிகக் கடுமையாக எதிர்த்தார். நிறவெறியைப் பின்பற்றுவது அந்நாட்டின் சொந்தப் பிரச்னை என அவர் ஒதுங்கி நிற்கவில்லை. 1961ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி லண்டனில் காமன்வெல்த் பிரதமர்களின் மாநாடு நடைபெற்றபோது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுக்குத் தலைமை தாங்கி தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கடுமையாகக் கண்டித்தார் நேரு. அதுமட்டுமல்ல, நிறவெறிக் கொள்கையை அந்நாடு மாற்றிக்கொள்ளாவிட்டால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அவர் வற்புறுத்தி மற்ற நாடுகளையும் ஏற்க வைத்து தென்னாப்பிரிக்காவை வெளியேற்றினார். அதே மார்ச் மாதம் 13ம் தேதியன்று ஐ.நா. பேரவையில் பேசும்போதும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
தென்னாப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையைக் கையாண்டு நீக்ரோக்கள், இந்தியர்கள் ஆகிய கருப்பின மக்களை ஒடுக்கியது. இலங்கை, இனவெறிக் கொள்கையைக் கையாண்டு தமிழர்களை ஒடுக்கி வருகிறது. நிறவெறிக்கும் இனவெறிக்கும் வேறுபாடு இல்லை. நிறவெறிக்கு எதிராக நேரு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் சிங்கள இனவெறிக்கு ஆதரவாக மன்மோகன் அரசு நடந்து கொள்கிறது.
பாகிஸ்தானின் ஓர் அங்கமான கிழக்கு வங்கத்தில் திட்டமிட்டு இனப்படுகொலைகளை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியபோது அது அந்நாட்டின் உள்விவகாரம் எனக் கருதி பிரதமர் இந்திரா ஒதுங்கி நிற்கவில்லை. வங்க மக்களின் துயரம் குறித்தும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருப்பது குறித்தும் தனது கவலையை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். எந்தப் பயனும் இல்லாத நிலைமையில் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்க மக்களுக்கு விடுதலை தேடித் தந்தார்.
எனவே, ஈழத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை எனப் பேசுபவர்களும், பக்கம்பக்கமாக எழுதுபவர்களும், வரலாறு புரியாதவர்கள் அல்லர். அவர்கள் வரலாற்றுப் புரட்டர்கள். உண்மைகளை மறைத்தும் திரித்தும் சுயநல நோக்கத்துடன் செயல்படுபவர்கள். இவர்கள் என்றைக்குமே தமிழர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்காத சிங்களத் துதிபாடிகள் ஆவார்கள். எது உள்நாட்டுப் பிரச்னை எது சர்வதேசப் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமல் குழப்புபவர்கள்.
உலகமே சிறுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், எந்த ஒரு நாட்டின் பிரச்னையும் அண்டை நாடுகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு உலகம் நெருங்கிப் பிணைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், பழைய ஏகாதிபத்திய மனோபாவத்துடன் இவர்கள் பேசுகிறார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன் மனைவி இடையே நடைபெறும் சச்சரவில் தலையிடுவது நாகரிகமாக இருக்க முடியாது. ஆனால் அந்தக் கணவன், மனைவியைக் கொலை செய்ய அரிவாளுடன் விரட்டும்போது அது அவர்களின் குடும்பப் பிரச்னை என்று ஒதுங்கிக் கொள்பவன் கோழை மனித நேயம் அற்றவன். அதைப்போலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறுபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பவர்கள்.
நன்றி : தினமணி