Friday, October 31, 2008

பத்திரமானவைதானா இந்திய வங்கிகள்?

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் பீதியடைந்துள்ள இந்திய மக்கள், இந்திய வங்கிகள் நம்பத்தகுந்தவையா, அவற்றில் போடப்பட்டுள்ள முதலீடுகள் பத்திரமாகவே இருக்குமா என்ற எளிதான, நேரடியான கேள்விக்கு விடை உண்டா என்பதை அறிய ஆவலாக இருக்கிறார்கள்.
இந்தச் சந்தேகத்தைத் தெளிவிப்பதற்குப் பதிலாக, வங்கிகள் ஏதேதோ சுற்றிவளைத்துக் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக நினைத்து, சந்தேகத்தை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
முதலீட்டாளர்களிடையே பரவலாகக் காணப்படும் இந்த அச்சத்தை நியாயமற்றவை என்றோ அளவுக்கு அதிகமானவை என்றோ கூறி ஒதுக்கிவிட முடியாது. தனிநபர்களின் சேமிப்புகளில் 55% வங்கிகளில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.
முதலீடுகளுக்கு வங்கிகள் தரும் வட்டி வீதம் மிகவும் சொற்பமானவைதான் என்றாலும் வங்கிகள் மீதுள்ள நம்பகத்தன்மை காரணமாகவே, கஷ்டப்பட்டு தாங்கள் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளுக்காக வங்கிகளில் சேமிக்கிறார்கள். இது சாதாரணமாகத் தெரிந்தாலும் இப்படிப்பட்ட சேமிப்புகளின் மொத்த மதிப்பு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களாகும்.
ரிசர்வ் வங்கியின் 2008 செப்டம்பர் 12 புள்ளிவிவரப்படி இந்த முதலீடுகளின் மதிப்பு மொத்தம் 34.05 லட்சம் கோடி ரூபாய்களாகும். இது இந்தியாவின் ஓராண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 80% என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பணம் எப்படி பயன்படுத்தப்படுகிறது? பொதுமக்களிடம் இப்படி முதலீடுகளாகத் திரட்டும் தொகையை வங்கிகள் எப்படிச் செலவு செய்கின்றன என்ற முழுமையான, துல்லியமான தகவல்கள்தான் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும். பிரதம மந்திரியும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் அளிக்கும் வாக்குறுதிகளும், நம்பிக்கைகளும் அதற்குப் பிறகுதான்.
இப்படிப்பட்ட முழுமையான, துல்லியமான தகவல்களை எங்கிருந்து பெற முடியும். இந்திய ரிசர்வ் வங்கி தொகுத்துள்ள புள்ளிவிவரங்கள் ஓரளவுக்கு இந்தத் தகவல்களைத் தர முடியும்; அதே போன்றவைதான் வங்கிகளின் லாபநஷ்டக் கணக்கு அறிக்கையும். இந்த அறிக்கைகளை எல்லா சாமானியர்களாலும் படித்து எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்பதும், இந்த அறிக்கையும் வங்கிகள் உண்மையிலேயே எப்படிச் செயல்படுகின்றன என்பதைத் தெரிவித்துவிட முடியாது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இருந்தாலும் இந்த அறிக்கைகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்குப் போதுமான மூலதனம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. திரும்பி வருமோ வராதோ என்று சொல்ல முடியாத கடன்களின் மதிப்பைவிட 4% கூடுதலான அளவுக்கு அதாவது 13% அளவுக்கு இந்திய வங்கிகளின் மூலதனம் இருக்கிறது.
இதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம். வங்கிகள் திரட்டும் மூலதனம் 100 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதில் "ரிஸ்க்' எடுத்து தரப்படும் கடன்களின் மதிப்பு 9 கோடி ரூபாய் என்றால் வங்கிகள் அதற்கு இணையான மதிப்புக்கு தங்கள் வசம் மூலதனம் திரட்டி வைத்திருக்க வேண்டும். "ரிஸ்க்' இனத்தில் கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் வங்கிகள் சுய மூலதனத்தை இட்டு அதை நிரப்ப முடியும். இந்தியாவில் இந்த மூலதனம் 13% ஆக, அதாவது தேவையைவிட 4% அதிகமாகவே இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் இந்த அம்சத்தில் அஞ்சத் தேவையில்லை.
இந்தியாவில் அரசுத்துறை, தனியார்துறை, அன்னிய நாட்டு வங்கிகள் என்று அனைத்தும் சேர்த்து கடன்கள், கடன் அட்டை இன முன்பணக் கடன்கள், வங்கி இருப்புக்கும் மேல் செலவு செய்ய அனுமதிக்கப்படும் கூடுதல் கடன் அளவு போன்றவற்றை அதிகரித்து வருகின்றன. இந்தத் தொகை ரூ.24.91 லட்சம் கோடியாகும். இது வங்கிகள் அனைத்தும் திரட்டி வைத்துள்ள முதலீட்டு மதிப்பில் 73% ஆகும்.
வங்கிகள் பங்கு பத்திரங்களில் மொத்தம் ரூ.10.05 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன. இதில் ரூ.9.86 லட்சம் கோடி மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகளாகும். எஞ்சிய 0.19 லட்சம் கோடி, அங்கீகரிக்கப்பட்ட இதர பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகளாகும்.
கட்டாய கையிருப்பு விகிதம்: வங்கிகள் தாங்கள் பெறும் முதலீடுகளைவிட அதிகத் தொகையைக் கடனாகக் கொடுத்துவிட்டு, கடனை வசூலிக்க முடியாமல் திவாலாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய ரிசர்வ் வங்கி சட்டப்பூர்வமாகவே சில கடமைகளை வங்கிகள் மீது திணித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை, சட்டப்பூர்வமான ரொக்க கையிருப்பு விகிதம் (எஸ்.எல்.ஆர்.), குறைந்தபட்ச கட்டாய ரொக்க கையிருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.) ஆகும். இதன்படி வங்கிகள் தாங்கள் திரட்டும் முதலீடுகளின் மதிப்பில் 25% தொகையை ரொக்கமாகவும், வங்கிகளின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடாகவோ பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
இதுபோக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது இடும் கட்டளைக்கு ஏற்ப "கட்டாய ரொக்க கையிருப்பு விகிதத்தை' பின்பற்ற வேண்டும். இது 3% முதல் 15% வரை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். வங்கிகள் கடன் தர போதிய ரொக்கம் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும், முதலீட்டாளர்களின் பணம் அளவுக்கு அதிகமாக ஏதாவது ஒரு இனத்தில் போய் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட ஏற்பாடு அமெரிக்காவில் கிடையாது.
இந்தியாவில் மொத்த முதலீட்டாளர்களின் மதிப்பில் மூன்றில் இரு மடங்கு மட்டுமே கடனாகத் தர அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்க வங்கிகளோ தாங்கள் திரட்டிய முதலீட்டு மதிப்பைவிட ஐந்து அல்லது ஆறு மடங்குக்குக் கடன்களை அள்ளித்தந்து விடுகின்றன. கடன் வாங்கியவருக்கு அதைத் திருப்பிக் கட்டும் பொருளாதாரச் சக்தி இருக்கிறதா, அவர் வாங்கும் அல்லது கட்டும் வீடு உண்மையிலேயே நல்ல விலை மதிப்புள்ளதா என்றெல்லாம் பாராமலேயே கண்மூடித்தனமாக அமெரிக்க வங்கிகள் கடன் தந்துவிடுகின்றன. அதனாலேயே அங்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவில் இப்படிப்பட்ட நிலைமை கிடையாது.
அமெரிக்காவில் நெருக்கடியைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் அவசரகால நடவடிக்கைகளை நாம் நிரந்தரமாகவே எடுத்துவருகிறோம். அமெரிக்க வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் அவற்றுக்கு 35 லட்சம் கோடி ரூபாயைத் தந்து உதவுகிறது. அதாவது அந்த வங்கிகளை அரசே தனது உடைமையாக்கிக்கொண்டுவிட்டது என்றும் இதைக் கூறலாம்.
இந்தியாவில் அரசுடைமை வங்கிகள்தான் அதிகம். அவை நாட்டின் மொத்த முதலீடுகளில் 74.2%ஐத் திரட்டி வைத்துள்ளன. கடன் தொகையில் 73%ஐ அரசுடைமை வங்கிகள்தான் அளித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று என்னவென்றால் அரசு வங்கியானாலும் தனியார் வங்கியானாலும் அவை மக்களின் பணத்தை முதலீடாக வைத்துதான் வியாபாரம் செய்கின்றன. அவற்றின் பணியோ இடைத்தரகர் வேலையைப் போன்றதே.
"பெரியதன்' விளைவு: எத்தனைதான் சொன்னாலும் விளக்கினாலும் எங்கோ ஓரிடத்தில் இடிக்கிறது. நம் நாட்டு வங்கிகளின் அதிலும் குறிப்பாக அரசு வங்கிகளின் நிதி நிலைமை நன்றாக இருக்கும்பட்சத்தில் அரசு அடுக்கடுக்காக பல நடவடிக்கைகளை எடுப்பானேன், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் நிதித்துறை நிபுணர்களும் கூடிக்கூடிப் பேசுவானேன்? வெளிநாட்டு வர்த்தகத்துக்கு கதவைத் திறந்துவிட்டபிறகு, அங்கே அடிக்கும் காற்று நம்பக்கமும் வீசாது என்று நம்புவது பேதமை.
பங்குச் சந்தைகள் நேரடியாக வாங்கிக் கொண்டிருக்கும் அடிகளைப் பற்றி விளக்கவே தேவையில்லை. அன்னிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொண்டுவந்து முதலீடு செய்தபோது இந்திய பங்குச்சந்தை உப்பிப்பருத்தது. அவையே முதலீட்டைத் திரும்பப்பெற ஆரம்பித்ததும் சூம்பிச் சிறுத்துவிட்டது. அதே போல அமெரிக்க டாலர்களுக்கு தேவை அதிகம் ஏற்பட்டவுடன் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. ரூபாயின் மதிப்பு சரிந்ததால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை ஆராய இந்தக் கட்டுரை போதாது.
வங்கிகளுக்கும் பங்குச் சந்தைக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. எனவே அவற்றுக்கு ஆபத்து இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. எந்த அளவுக்கு என்பதுதான் விடை தேட வேண்டிய வினா.
வரவுசெலவு கணக்கு கூறுவது என்ன? வங்கிகள் ஆண்டுதோறும் வெளியிடும் வரவுசெலவு அறிக்கை, நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் அளித்துவிடுவதில்லை; அதே சமயம் அவை தரும் சில தகவல்கள் முக்கியமானவை. சில விஷயங்களை நாம் ஊகித்தறிய அவை பெரிதும் உதவுகின்றன. ""அவசர செலவு இனத்தில்'' 200708ம் ஆண்டில் ரூ.18.57 லட்சம் கோடி செலவாகியிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு (200607) இது ரூ.12.70 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முந்தைய ஆண்டைவிட 46.16% அதிகம். இந்தத் தகவல் இந்திய வங்கிகள் சங்கம், அரசுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தனியார் வங்கிகளைப்பொருத்தவரை இந்தத் தொகை இதைவிட அதிகமாக இருக்கிறது. அனைத்து தனியார் வங்கிகளும் சேர்த்து 200708ல் ரூ.23.61 லட்சம் கோடியை இந்த இனத்தில் செலவாகக் காட்டியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 77.53% அதிகமாகும். முந்தைய ஆண்டு இத் தொகை ரூ.13.30 லட்சம் கோடியாகும்.
தனியார்துறையில் உள்ள 16 வங்கிகளில் புதிதாகத் தொழில் தொடங்கியுள்ள 8 வங்கிகள் மொத்தமாக ரூ.22.50 லட்சம் கோடியை இந்த இனத்தில் கணக்கு காட்டியுள்ளன. அனுபவம் உள்ள பிற 8 தனியார் வங்கிகள் இந்த இனத்தில் காட்டியுள்ள தொகை ரூ.1.11 லட்சம் கோடிதான். தனியார் துறையில் இப்போது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குதான் இதில் அதிகம். அது 48.76% அளவுக்கு அவசர செலவு இனத்தில் கணக்கு காட்டியிருக்கிறது. வரவுசெலவு கணக்கில் வராத தொகையாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி குறிப்பிட்டுள்ள ரூ.11.51 லட்சம் கோடியானது, வரவுசெலவு கணக்கில் அது குறிப்பிட்டுள்ள ரூ.3.99 லட்சம் கோடியைவிட 288% அதிகமாகும். அந்த வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை அளவும் ரூ.5.62 கோடி அளவுக்கு அதிகமாகியிருக்கிறது.
அரசு வங்கிகளிடையே எஸ்.பி.ஐ. இதில் முதலிடம் வகிக்கிறது. அதன் பங்கு 43.66% ஆகும். வரவுசெலவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பணப்பரிமாற்றத்தைவிட, அதில் குறிப்பிடப்படாத பரிமாற்றம்தான் இந்த வங்கியைப் பொருத்தவரை அதிகம்.
வரவுசெலவில் வராத இனத்தில் இடம்பெறுபவை, டெரிவேடிவ்ஸ் எனப்படும் ஊக வாணிக குறியீடு, முன்பேர வர்த்தக ஒப்பந்தம், எதிர்கால ரொக்க மதிப்பு தொடர்பான வியாபாரம் போன்றவை. இவையெல்லாம் சாமானிய மனிதனுக்கு என்னவென்றே புரியாது. ஆனால் இவையெல்லாம்தான் மேலை நாடுகள் அனுபவிப்பதைப்போல ஆபத்தை உண்டாக்கவல்ல காரணிகள். எனவே ரிசர்வ் வங்கி இவற்றையெல்லாம் வரவுசெலவு கணக்கு மதிப்பீட்டு அறிக்கையிலேயே கொண்டுவர வேண்டும் என்று பணித்ததுடன் இந்த இனங்களில் நடந்துள்ள பரிமாற்றங்களையும் ஆய்வுக்கு உள்படுத்தியிருக்கிறது. இது சரியான நடவடிக்கை. இதன் முழு விளைவை அடுத்த ஆண்டு வரவுசெலவு அறிக்கையில்தான் நம்மால் உணர முடியும்.
இந்தத் தகவல்கள் எல்லாம் உணர்த்துவது ஒன்றுதான், உரிய காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நிதி அமைச்சரும் ரிசர்வ் வங்கி கவர்னரும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு வங்கியாக தனித்தனியாகப் பிரித்து அவற்றின் நிதிநிலையை ஆராய வேண்டும். அமெரிக்க நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நல்லதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி வங்கிகளையும் பொதுச்சேமிப்புகளையும் பத்திரமாக பாதுகாக்கும் வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

0 comments: