Thursday, October 30, 2008

வாய்ப்பை நழுவ விடலாகாது!

சமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உரியவை. இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காண அதிபர் ராஜபக்ஷ தயாராக இருப்பது உண்மையானால், அவருடன் ஒத்துழைக்கவும், நல்லதொரு தீர்வு காணவும் நாம் தயங்கக்கூடாது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்க முடியும்.
அந்த நேர்காணலில் அதிபர் ராஜபக்ஷ இந்திய இலங்கை உறவு குறித்தும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வரின் பங்கு பற்றியும் கூறியிருக்கிறார். இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய இலங்கை உறவு சுமுகமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அதிபர் ராஜபக்ஷ, இந்தியாவின் ஒத்துழைப்பும் தலையீடும் இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
அவர் தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து இதனினும் முக்கியத்துவம் வாய்ந்ததும், இந்தப் பிரச்னையில் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுத்தரும் வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அது, அதிபர் ராஜபக்ஷ தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான மதிப்பும் மரியாதையும்தான்.
இந்தியாவிலேயே முதிர்ந்த அரசியல் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது தனக்கு மிகுந்த மரியாதை எப்போதுமே உண்டு என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண விரும்பும் அவருடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் திறந்த மனதுடன் தான் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷ. இந்திய அரசின் மூலம் முதல்வர் கருணாநிதியைத் தங்கள் அரசு விருந்தினராக அழைத்து அவருடைய ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண விழைவதாகவும் அதிபர் ராஜபக்ஷ தெரிவித்திருப்பது முடிவு தெரியாத இருட்டு குகைக்குள் ஒளிக்கீற்று பாய்ந்தது போல இருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்னை இந்த அளவுக்கு ஒரு இடியாப்பச் சிக்கலாக மாறியதற்கு முக்கியக் காரணமே, அந்தப் பிரச்னையின் ஆழத்தையும் கெளரவத்தையும் புரிந்து கொள்ளாத அதிகாரிகள் மூலம் இந்திய அரசு அதை அணுக முற்பட்டதுதான். ஆரம்பத்திலேயே இந்தியா முனைப்புடன் செயல்பட்டு இதற்கு அரசியல் தீர்வு காண முற்பட்டிருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு மோசமாகி இருக்காது என்பதுதான் உண்மை.
அதிபர் ராஜபக்ஷ கூறியிருப்பதுபோல அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமானால், அது ராணுவத்தின் மூலமோ அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தை மூலமோ நிச்சயமாக ஏற்பட வாய்ப்பில்லை. முதல்வர் கருணாநிதியின் மீது தனக்கிருக்கும் பெருமதிப்பை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் அதிபர் ராஜபக்ஷ நிச்சயமாக அவரது தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், சமரசத்திற்கும் உடன்படுவார் என்று நாம் நம்பலாம்.
எங்கிருந்தோ வருகின்ற, இந்தப் பிரச்னையின் ஆழம் தெரியாத, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத நார்வே தூதுக் குழுவோ, தில்லியிலிருந்து அனுப்பப்படும் அதிகாரிகளின் குழுவோ இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதேநேரத்தில், அதிபர் ராஜபக்ஷவின் நன்மதிப்பைப் பெற்ற முதல்வர் கருணாநிதியின் தலைமையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு மற்றும் தேசியத் தலைவர்களான முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்களை உள்ளடக்கிய குழுவால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமரசத் தீர்வு காண வாய்ப்பிருக்கிறது.
அதெல்லாம் இயலாத ஒன்று, உடனடியாக நடக்கும் விஷயமல்ல என்று கருதினால், முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒரு குழு உடனடியாக கொழும்பு சென்று இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் என்ன தடை இருக்க முடியும்? முதல்வர் மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருக்கும் இந்திய மற்றும் இலங்கை அரசுகள் அதை மனதார வரவேற்காமல் இருக்குமா, என்ன?
இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும், அங்கே நடைபெறும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கும் முதல்வர் கருணாநிதிக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல்வர் கருணாநிதியே முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தும்போது விடுதலைப் புலிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அவரது முடிவுக்குக் கட்டுப்படுவார்கள் என்பது உறுதி.
இலங்கை அதிபர் ராஜபக்ஷ அளித்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களின் துயரை நிரந்தரமாகத் தீர்ப்பதன் மூலம் மட்டும்தான் முதல்வர் கருணாநிதி தன்னைத் "தமிழினத் தலைவர்' என்று சரித்திரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இந்தப் பொன்னான வாய்ப்பை அவர் நழுவ விடலாகாது!
நன்றி : தினமணி

1 comments:

said...

எதுக்கு ஓசியில ஊர் சுத்துறதையா?