Wednesday, October 29, 2008

துயரை திசைதிருப்பும் துதிபாடிகள் - பழ. நெடுமாறன்

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவெறிப் படுகொலைகள் குறித்த பிரச்னையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வரவேற்கத்தக்க பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 14102008 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுவில் பெரும் உற்சாகத்தை ஊட்டியுள்ளன.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுமே இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவது குறித்து பெரும் கவலை தெரிவித்தனர். போரை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்றவற்றை உடனடியாக அனுப்பி வைக்கவும், இனப் பிரச்னைக்கு அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும், ராணுவ ரீதியான தீர்வு ஒருபோதும் கூடாது, இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவி எதையும் செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தெரிவித்தனர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெளிப்படுத்திய இந்த உணர்வுகளின் அடிப்படையில் அக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
போரை நிறுத்தி உடனடியாக அமைதியை ஏற்படுத்த இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். 15 நாள்களுக்குள் இவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்தும் தனித்தனியாகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளன. தமிழக முதலமைச்சர்களினால் அவ்வப்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப் பெற்றும் அனைத்துக் கட்சித் தூதுக் குழுவாக தில்லி சென்று பிரதமரிடம் முறையீடுகள் அளிக்கப்பட்டும் வந்துள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இந்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நிலையிலும் அதிகாரிகள் நிலையிலும் பலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்தியாவின் ஆழ்ந்த கவலைகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. பிரதமர் இந்திராவின் காலத்தில் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருதரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டினையும், அதைப்போல பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டினையும் மதித்துச் செயல்படுத்த இலங்கை அரசு முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் இப்போது தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்துள்ள முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். கடந்த காலத்தில் இத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் சார்பில் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இந்த முடிவுகள் கருதப்பட வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டிய தீர்மானமும் அதைச் செய்யத் தவறினால் தமிழகம் எத்தகைய நிலையை மேற்கொள்ளும் என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 30 ஆண்டு கால வரலாற்றில் இத்தகைய திட்டவட்டமான நிலைமையை தமிழகம் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து இந்திய அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழ் மக்கள் அனைவரின் விருப்பமும் இதுதான்.
ஆனால் சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் மனம் இரங்காத சிலர் அனைத்துக் கட்சிகள் மேற்கொண்ட முடிவுகளைத் திரித்துப் பொய்ப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் வாயும் மனமும் கூசாமல் பேச முன்வந்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து விமானத் தாக்குதலாலும் பீரங்கிக் குண்டு வீச்சினாலும் செத்து மடியும் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உண்ண உணவின்றியும் இருக்க இடமின்றியும் நோய்களுக்கு மருந்தின்றியும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காடுகளிலும் வெட்ட வெளியிலும் துடிப்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள வல்லரக்கர்களின் கொடுஞ்செயலைக் கண்டிக்கவும் அவர்கள் முன்வரவில்லை. சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதையே தங்களின் பிறவிப் பயனாகக் கருதுகிறார்கள்.
ராஜீவ்காந்தி காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ள இந்திய அரசுகள் இலங்கை இனப் பிரச்னையில் கையாண்டு வரும் தவறான கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் உருவாகி இருப்பதை மேற்கண்டவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.
இந்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.
1. ஈழத் தமிழர்கள் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசின் நலன்களைக் காக்கும் வகையிலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
ஈழத் தமிழர் பிரச்னையில் சிங்கள அரசு வகுத்த தீர்வை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக சிங்கள அரசு தனது இன அழிப்புப் போரைத் தங்குதடையின்றி தொடர்வதற்கு அனுமதித்தது.
2. சுய நிர்ணய உரிமையுள்ள தமிழ்த் தாயகத்தை பெறுவதற்காக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டம் அங்கீகாரமற்றதாகவும் அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. தமிழ்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என வர்ணித்து ஒழித்துக் கட்டுவதற்கு சிங்கள அரசு முற்பட்டதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
3. ஈழத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு தொடர்ந்து செய்த முயற்சிகளைத் தடுக்க இந்திய அரசின் அணுகுமுறைகளினால் முடியவில்லை.
4. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட நாடான இலங்கையில் நேரு, இந்திரா காலங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலையில் இருந்த அன்னிய நாடுகள் இலங்கையில் கால் ஊன்றுவதற்கு ராஜீவின் கொள்கை இடம் அளித்துவிட்டது.
இக்கொள்கையால் ஏற்பட்ட தடுமாற்றங்களின் விளைவாக தென் ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்கு இந்திய அரசு மறைமுகமாகத் துணைபுரிந்துவிட்டது. இப்பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். இந்தியா அதனுடைய எல்லைகளுக்குள்ளாகவே அடங்கிக் கிடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்குள்ளும் தென் ஆசிய பகுதிக்குள்ளும் பலமான நிர்பந்தங்களை அமெரிக்கா உருவாக்குகிறது. இலங்கை அரசுக்குத் தான் நேரிடையாக உதவி செய்வதை விட தனது நட்பு நாடான பாகிஸ்தான் மூலம் உதவி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுத்த ஆயுதங்களின் ஒரு பகுதி இலங்கைக்குத் திருப்பிவிடப்பட்டு உள்ளது.
இலங்கையிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது. மேலும் அராபிய நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாகவே செல்கின்றன. கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் இலங்கையைத் தொட்டுச் செல்கின்றன. இந்துமாக் கடலில் கப்பல் போக்குவரத்துப் பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. எனவே, இந்தக் கடல் பாதைகள் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால் இலங்கை தனது ஆதிக்கத்திற்கு உள்பட்ட நாடாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது.
சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குத் தாராளமாக ராணுவ உதவிகள் அளிப்பதற்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. இந்த நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை ஒரு பெரிய சந்தை அல்ல. இலங்கையினால் இந்த நாடுகளுக்கு எந்தவிதமான ஆதாயமும் கிடையாது. ஆனாலும், சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இந்நாடுகள் உதவி செய்வதற்குக் காரணமே இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்திய அரசின் தவறான கொள்கையின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானதை விட இந்தியா மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இந்தியாவின் தென்வாயிலில் பேரபாயம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே பலர் எச்சரித்துள்ளனர்.
நேருவின் நண்பரும் சீனாவில் இந்தியத் தூதுவராக இருந்தவருமான சர்தார் கே.எம். பணிக்கர் இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்திருந்தார். ""இந்தியாவும் இந்துமாக் கடலும்'' என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியுள்ள நூலின் 7வது பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
""இந்தியாவைப் பாதிக்கும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தில் கடல் பகுதியை அலட்சியமாக ஒதுக்கி விடுகிற போக்கு இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவின் பாதுகாப்பு என்பது வடமேற்கு எல்லைப் பகுதிகளை மட்டும் பொருத்தது என்ற முடிவுடன் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்காலத்தை நில எல்லைகள் முடிவு செய்யவில்லை. மாறாக கடல்தான் எதிர்காலத்தை முடிவு செய்தது என்பதை மறந்துவிடக் கூடாது.''
வரலாற்று அறிஞரான டி.ஆர். இராமச்சந்திரராவ் ""இந்தியாவும் இலங்கையும் ஓர் ஆய்வு'' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலின் 8வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
""இந்துமாக் கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை உள்ளது. இந்துமாக் கடலின் பாதுகாப்பு அதைப் பொருத்ததேயாகும். நிலவியல் அடிப்படையிலும் அது நடு மையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியாகச் செல்லும் விமானத் தடங்களுக்கும் கப்பல் தடங்களுக்கும் இலங்கை நடு நாயகமாக உள்ளது.''
இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் நெருங்கி உறவாட இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இலங்கை ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உடன்பாடுகள் செய்து கொள்வதற்கும் இலங்கை தயங்கியதில்லை. 1962ம் ஆண்டு இந்தியாவின் எல்லைகளை சீனா ஆக்கிரமித்தபோது இந்திய சீனப் படைகளின் மோதல்கள் நிகழ்ந்து இரு நாடுகளின் உறவும் மிகவும் சீர்கெட்டிருந்தது. அந்த நிலையில் 1963ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையும் சீனாவும் கடல் உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டன. சீனப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்து போவதற்கான உடன்பாடும் இந்த உடன்படிக்கையில் செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் இந்தப் போக்குகளைக் கண்ட இந்திய ராணுவத் தளபதிகளும் இந்திய அரசுக்குத் தங்கள் கவலைகளைத் தெரியப்படுத்தினார்கள். இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான இரவி கெளல் என்பவர் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
""பிரிட்டனுக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமோ, சீனாவுக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதுபோன்று இந்தியாவுக்கு இலங்கை முக்கியமானதாகும். இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும்வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவுக்கு அதனால் ஆபத்து வந்துசேரும்''.
இந்தியாவுக்கு வரவிருக்கும் அபாயத்தைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சிங்களத் துதிபாடிகளுக்கு கொஞ்சமும் கவலையில்லை. அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் நலனிலும் அக்கறை இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள அபாயம் குறித்தும் கவலையில்லை. சிங்கள இனவெறியருக்கு இந்தியா தொடர்ந்து எல்லாவகை உதவிகளையும் செய்து ஈழத் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாகும். அதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தச் சிங்களத் துதிபாடிகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மேலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிட முடியாது என்றும் அடிக்கடி சொல்கிறார்கள்.
சிலவேளைகளில் இந்தியப் பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இத்தகையோருக்கு இந்தியாவின் கடந்தகால வரலாறு கொஞ்சமும் தெரியவில்லை. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்திரா காந்தி காலம் வரை எத்தகைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா கையாண்டு வந்திருக்கிறது என்பதை நம்முடைய பிரதமரோ அவருக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகளோ அல்லது அந்த அதிகாரிகளைத் திசைதிருப்ப முயலும் சிங்களத் துதிபாடிகளோ எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளை அரசாங்கம் கருப்பின மக்களுக்கு எதிராகக் கையாண்ட நிறவெறிக் கொள்கையை ஜவாஹர்லால் நேரு மிகக் கடுமையாக எதிர்த்தார். நிறவெறியைப் பின்பற்றுவது அந்நாட்டின் சொந்தப் பிரச்னை என அவர் ஒதுங்கி நிற்கவில்லை. 1961ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி லண்டனில் காமன்வெல்த் பிரதமர்களின் மாநாடு நடைபெற்றபோது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுக்குத் தலைமை தாங்கி தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கடுமையாகக் கண்டித்தார் நேரு. அதுமட்டுமல்ல, நிறவெறிக் கொள்கையை அந்நாடு மாற்றிக்கொள்ளாவிட்டால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அவர் வற்புறுத்தி மற்ற நாடுகளையும் ஏற்க வைத்து தென்னாப்பிரிக்காவை வெளியேற்றினார். அதே மார்ச் மாதம் 13ம் தேதியன்று ஐ.நா. பேரவையில் பேசும்போதும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
தென்னாப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையைக் கையாண்டு நீக்ரோக்கள், இந்தியர்கள் ஆகிய கருப்பின மக்களை ஒடுக்கியது. இலங்கை, இனவெறிக் கொள்கையைக் கையாண்டு தமிழர்களை ஒடுக்கி வருகிறது. நிறவெறிக்கும் இனவெறிக்கும் வேறுபாடு இல்லை. நிறவெறிக்கு எதிராக நேரு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் சிங்கள இனவெறிக்கு ஆதரவாக மன்மோகன் அரசு நடந்து கொள்கிறது.
பாகிஸ்தானின் ஓர் அங்கமான கிழக்கு வங்கத்தில் திட்டமிட்டு இனப்படுகொலைகளை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியபோது அது அந்நாட்டின் உள்விவகாரம் எனக் கருதி பிரதமர் இந்திரா ஒதுங்கி நிற்கவில்லை. வங்க மக்களின் துயரம் குறித்தும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருப்பது குறித்தும் தனது கவலையை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். எந்தப் பயனும் இல்லாத நிலைமையில் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்க மக்களுக்கு விடுதலை தேடித் தந்தார்.
எனவே, ஈழத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை எனப் பேசுபவர்களும், பக்கம்பக்கமாக எழுதுபவர்களும், வரலாறு புரியாதவர்கள் அல்லர். அவர்கள் வரலாற்றுப் புரட்டர்கள். உண்மைகளை மறைத்தும் திரித்தும் சுயநல நோக்கத்துடன் செயல்படுபவர்கள். இவர்கள் என்றைக்குமே தமிழர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்காத சிங்களத் துதிபாடிகள் ஆவார்கள். எது உள்நாட்டுப் பிரச்னை எது சர்வதேசப் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமல் குழப்புபவர்கள்.
உலகமே சிறுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், எந்த ஒரு நாட்டின் பிரச்னையும் அண்டை நாடுகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு உலகம் நெருங்கிப் பிணைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், பழைய ஏகாதிபத்திய மனோபாவத்துடன் இவர்கள் பேசுகிறார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன் மனைவி இடையே நடைபெறும் சச்சரவில் தலையிடுவது நாகரிகமாக இருக்க முடியாது. ஆனால் அந்தக் கணவன், மனைவியைக் கொலை செய்ய அரிவாளுடன் விரட்டும்போது அது அவர்களின் குடும்பப் பிரச்னை என்று ஒதுங்கிக் கொள்பவன் கோழை மனித நேயம் அற்றவன். அதைப்போலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறுபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பவர்கள்.
நன்றி : தினமணி

0 comments: