Monday, November 3, 2008

தாராளமயம் தந்த "பரிசு'

அனைத்து கெட்ட காரியங்களுக்கும் பணம்தான் மூல காரணம் என்கிறது பைபிள். போதுமான பணமின்மைதான் கெட்ட காரியங்களின் ஆணி வேர் என்கிறார் தத்துவமேதை பெர்னார்ட் ஷா.
இந்த இரண்டு விஷயங்களும் பொருந்துமிடம் ஒன்று உள்ளது என்றால் அது பங்குச் சந்தைதான்.
பங்குச் சந்தையில் சிறிய முதலீட்டாளராக இருந்தாலும் சரி, அல்லது அதிக அளவில் முதலீடு செய்பவராக இருந்தாலும் சரி வானவில்லின் அழகிய தோற்றம் போன்ற பங்குச் சந்தை ஏற்றத்தால் ஈர்க்கப்படுவர். வானம் மட்டுமல்ல வானவில்லும் தொட்டுவிடும் தூரம்தான் என பங்குச் சந்தையில் உயரே பறப்பவர் அதிகம். பணத்தின் மீதான தேடலைப்பொருத்து மனிதனுக்கு மனிதன் இது மாறுபடும்.
கடைசியில் வானவில்லை பிடிக்கப் போன மனிதனுக்கு என்ன கதி ஏற்படுமோ அந்த கதியைத்தான் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் இன்று 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழாகச் சரிந்து விட்டது.
இதற்குக் காரணம் என்ன? இந்தியப் பங்குச் சந்தை என்ற சிறிய வட்டத்திலிருந்து, உலக பங்குச் சந்தையாக மாறியதுதான் முக்கியக் காரணம். ஆம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கதவுகள் திறந்து விட்டதிலிருந்தே இப்பிரச்னை தொடங்கிவிட்டது.
இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச அளவில் சரிவைச் சந்திக்கும்போது அதன் தாக்கத்தையும் இந்திய முதலீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம். அமெரிக்காவில் தொடங்கி இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தையை மட்டுமல்ல, தொடர்ச்சியாக பல்வேறு துறைகளையும் இது பாதிக்கும். இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் பல நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன.
1930களில் இதுபோல அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு அது பிற நாடுகளை பாதித்தது. இந்தியாவில் அதன் தாக்கம் தெரிந்ததா? என்பதை உணர முடியாத நிலை. அதற்குக் காரணம் அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததுதான்.
ஆனால் "பெரு மந்தம்' எனப்படும் தேக்க நிலை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகி அது பல நாடுகளையும் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதுதான் உண்மை. ஆனால் ஒவ்வொரு முறையும் சரிவுக்கான காரணம் மாறிக் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்புத் தன்மை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமயமாக்கலை அமெரிக்கா தொடங்கி, பிற நாடுகள் தம்மை சார்ந்திருக்கும் சூழலை உருவாக்கியது. அதனால்தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டாலும், கத்தரீனா சூறாவளி வீசினாலும் இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
இதனால்தான் தற்போதைய சிக்கலுக்கு உலக நாடுகளுடன் சேர்ந்து தீர்வு காண அமெரிக்கா முயல்கிறது. அதற்காகத்தான் தனி மாநாட்டை கூட்டியிருக்கிறார் அதிபர் புஷ்.
1991களில் பொருளாதார தாராளமயம் என்ற கடிவாளம் இல்லாத காட்டுக் குதிரையில் சவாரி செய்ய அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு வழிகாட்டியவர் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான்.
கட்டுப்பாடற்ற வர்த்தக முறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற மாயையில் அடுத்து வந்த பாஜக அரசும் இதே பாணியைத் தொடர்ந்தது. தற்போது சோனியா தயவால் பிரதமர் பதவியில் உள்ள பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையில் அவரை அடியொற்றி பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் ப. சிதம்பரமும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார்.
பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் சதவிகிதம் வெகு சொற்பமே. ஆனால் அவர்களின் நலன் காக்க ஏறக்குறைய ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு இனங்களில் ரிசர்வ் வங்கி மூலம் விடுவித்துள்ளார் சிதம்பரம்.
ஆனால் பங்குச் சந்தை பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது ஓராண்டுக்கு மேலாகும் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் வங்கிகளை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு என்பதே சாதாரண ஏழை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும் என்ற நிலையில் அதைக் காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிர்.
தாராளமயத்தைக் கடைப்பிடித்த போதிலும் சுயச் சார்பு நிலையைக் கைவிடாததால், சர்வதேச தாக்கம் சீனாவில் அதிக அதிர்வலையை ஏற்படுத்தவில்லை. இதை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்தால் மட்டுமே நமக்கு விமோசனம்.
சுதந்திரத்துக்கு முன்னரே சுயச் சார்புக் கொள்கையை வகுத்தவர் மகாத்மா. பொருளாதார வளர்ச்சிக்கு அரசுத் துறை நிறுவனங்களை உருவாக்கியவர் ஜவாஹர்லால் நேரு. ஆனால் தாராளமய கொள்கையைக் கைக்கொண்ட பிறகு அரசுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்படவில்லை. நாட்டின் பிரதானமான வேளாண்துறை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சேவைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் இருக்கும் நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் தனியார்மயக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா பாடம் கற்றுத் திருந்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சர்வதேச தாக்குதல்கள் இந்தியாவை பாதிக்காமலிருக்கும். ஏழை இந்தியனின் நலன் காக்கப்படும்.
எம். ரமேஷ்
நன்றி : தினமணி

0 comments: