Monday, November 3, 2008

அனைவருக்கும்... பங்கு?

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ. 1 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக ஆசிரியர் அமைப்புகளே கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த முறைகேடுகளை முறைப்படி விசாரிக்க வேண்டும் என்று தமிழக கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் வேலூர் மாவட்டத்தில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்துள்ளன என்று ஆசிரியர் அமைப்புகள் சொல்லும்போது கல்வித் துறை மீது நமக்கு மேலதிகமான கவலை ஏற்படுகிறது.
சர்வ சிக்ஷ அபியான் (எஸ்எஸ்ஏ) எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டமானது, மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்புடன், 2010ம் ஆண்டுக்குள், 6 வயது முதல் 14 வயதுள்ள அனைவரையும் கல்வி கற்கச் செய்யும் திட்டம்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக, புதிய பள்ளிகளை உருவாக்குதல், புதிய கற்றல் சூழலை உருவாக்குதல், கழிவறைகள் மற்றும் கூடுதல் கட்டடங்களை ஏற்படுத்துதல், கற்றல் கருவிகள் வாங்கித் தருதல், ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிதியுதவி செய்தல், ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் நடத்துதல், தொடக்கப் பள்ளி அளவிலேயே கணினியை அறிமுகம் செய்தல், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமுதாய நிகழ்ச்சிகளை நடத்துதல் எனத் திட்டத்தின் நோக்கம் பலவாக விரிந்து கொண்டே செல்கிறது.
மத்திய அரசின் அறிக்கைப்படி, 20072008 நிதியாண்டில், மார்ச் 2008 வரை மத்திய அரசின் பங்காக ரூ.464 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.197 கோடியும் நிதி அளிக்கப்பட்டு, ரூ.614 கோடி செலவழிக்கப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதில் புதிய பள்ளிக் கட்டடங்களுக்காக ரூ.100 கோடியும், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.77 கோடியும் கற்றல் கருவிகள் வாங்க ரூ.5 கோடியும் செலவிடப்பட்டது என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள புள்ளிவிவரம்.
கற்றல் கருவிகளை பள்ளித் தலைமையாசிரியரே வாங்கலாம் என திட்டம் அனுமதித்தாலும், இவை மாவட்ட அளவில் ஒரே அதிகாரியால் ஒரே கடையில் கொள்முதல் செய்யப்பட்டு, பல நேரங்களில் ஒரே ரசீது மட்டுமே அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளாட்சித் தணிக்கையின்போது மாவட்ட அளவில் "சுழல்கிறது'. இந்த ரசீதுகளில் நம்பகத்தன்மை இல்லாதது குறித்து உள்ளாட்சி தணிக்கைத் துறை அலுவலர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பு எழுதி வைத்தும்கூட, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கற்றல் கருவி வாங்குவது மிகச் சிறிய அளவிலான செலவுதான். ஆனால் கட்டடங்கள் கட்டுவதற்கான நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. தலைமையாசிரியர் பெயருக்கு நிதி வழங்கப்பட்டாலும், பள்ளி அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் தலைவரும் பள்ளித் தலைமையாசிரியரும் வங்கியில் கூட்டுக்கணக்கு தொடங்கி, இந்தப் பணத்தை கட்டடத்துக்காக செலவிட்டு, கணக்குகளை தணிக்கைத் துறைக்கு காட்ட வேண்டும்.
ஆனால், இதில் 50 சதவீதத்துக்கு அதிகமான பணம், கட்டடத்துக்குப் போகவில்லை என்பதும், உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் இதில் நிறைய விளையாடியதுடன், இந்த "ஆட்டத்தில்' கல்வித் துறை அலுவலர்களையும் சேர்த்துக்கொள்வதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடந்துள்ளது என்று ஆசிரியர் அமைப்புகள் சொல்லும்போது, இத்தனை காலம் ஏன் இந்தப் பிரச்னையை எழுப்பாமல் காலம் கடத்தினார்கள் என்று அவர்கள் மீது தார்மிக கோபம் இயல்பாக எழுகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் முறைகேடு நடந்ததால்தான் இத்திட்டத்தில் நடைபெற்றுவரும் அனைத்து முறைகேடும் தற்போது வெளியே வரத்தொடங்கியுள்ளன.
ஊனமுற்ற குழந்தை ஒவ்வொன்றுக்கும் ரூ. 1200 செலவிடவும் அந்தக் குழந்தைகள் பள்ளிகளுக்கு சக்கர நாற்காலியில் வந்தால் அவர்கள் சிரமம் இல்லாமல் வகுப்பறைக்குச் செல்ல சாய்தளம் அமைக்கவும்கூட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவற்றை காண்பது அரிது.
கிராமத் தொடக்கப் பள்ளி என்றாலும்கூட, கணிப்பொறியை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்டத்துக்கு ரூ. 50 லட்சம் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் திட்டமும் முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. சமூக மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 50 லட்சம் நிதியை இத்திட்டம் அனுமதிக்கிறது. ஆனால் நாம் பார்த்ததெல்லாம், பள்ளிக் குழந்தைகளுடன் அந்தந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஒருநாள் ஊர்வலம் மட்டுமே.
இந்த முறைகேடுகளைக் கண்டறிய தனிக் குழுக்கள் அமைத்து மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்பதே ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.
நன்றி :தினமணி

0 comments: