Thursday, November 6, 2008

நனவாகுமா கனவு?

அனைவருக்கும் கல்வி என்கிற முழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே எழுப்பப்பட்டு, தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பு அடித்தட்டு ஏழை, எளிய மக்கள்வரை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய மெளனப் புரட்சி என்றுதான் கூற வேண்டும். என் குழந்தை எதற்காகப் படிக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்குக் கல்வி எதற்கு என்றெல்லாம் கேட்ட காலம் கனவாக மறைந்திருப்பது ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம்.
கடந்த 60 ஆண்டுகளாக அரசுத் தரப்பில் என்னென்னவோ முயற்சிகள் செய்தும், இன்னும் முழுமையாகப் பள்ளிக்குச் செல்லும் ஒரு தலைமுறையினரை இந்தியா காணவில்லை என்பது நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கும் விஷயம். பணக்காரர்களும், உயர் மத்திய தர வகுப்பினரும் பெறும் கல்வி, மத்தியதர வகுப்பினருக்குக் கிடைப்பதில்லை என்றால், ஏழை, எளிய மக்களும், வசதி இல்லாதவர்களும் தரமான கல்வியைக் கனவுகூடக் காண முடியாது என்கிற நிலைமை இன்னும் பல மாநிலங்களில் தொடர்கிறது.
பெற்றோருக்கு ஆசை இருந்தும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையும், அதற்கான செலவைத் தாங்கிக் கொள்ளும் வசதியும் இல்லாதவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்; இந்த அப்பட்டமான உண்மையை நம்மில் பலரும் உணரவோ ஏற்றுக்கொள்ளவோகூடத் தயாராக இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அடிப்படைக் கல்வி பெறுவதை ஒவ்வொரு குழந்தையின் ஜீவாதார உரிமையாக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் குரலெழுப்பத் தொடங்கினார்கள். அதன் தொடர்விளைவாக, 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளின் அடிப்படை உரிமையாக கல்வி கற்றுத் தரப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதியில் சொல்லத் தொடங்கின. கல்வி பெறும் உரிமைச் சட்டம் என்கிற பெயரில் ஒரு மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாகும்போது, அது அனைவருக்கும் கல்வி என்கிற கனவை நனவாக்கும் முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட 86வது அரசியல் சட்டத் திருத்தப்படி, இலவசக் கட்டாயக் கல்வி என்பது ஒவ்வோர் இந்தியக் குழந்தையின் ஜீவாதார உரிமையாக்கப்பட்டதே தவிர அந்த உரிமையைப் பெற்றுத் தருவதற்கு எந்த வழிமுறையும் கூறப்படவில்லை. இந்த மசோதா சட்டமாவதன் மூலம் அந்தக் குறை தீர்க்கப்படும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாநில மற்றும் மத்திய அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகளை வகுப்பதுடன், அத்தனை இந்தியக் குழந்தைகளும் கல்வி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி, இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வழிகோலும் என்பதுதான் இதன் முக்கியத்துவத்துக்குக் காரணம். தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பும், இந்தத் திட்டத்தை முறையாக நிறைவேற்றும் கடமையும் அரசுக்கு ஏற்படுகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
கடந்த இரண்டாண்டுகளாகக் கடுமையான எதிர்ப்பை இந்த மசோதா சந்தித்து வந்தது. நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவை ஏதாவது காரணம் காட்டி இந்த மசோதாவுக்கு முட்டுக்கட்டை போட்டவண்ணம் இருந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்தபோது, திட்டக் கமிஷனின் குறுக்கீட்டால் இந்த மசோதா அமைச்சரவையின் உயர்நிலைக் குழுவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு விட்டது. அதற்குக் காரணம், கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது என்பதால், ஒதுக்கப்பட்ட நிதியை, எப்படி பகிர்ந்து கொள்வது என்கிற பிரச்னை எழுந்ததுதான்.
இப்போது ஒரு வழியாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டது என்றாலும், இந்த மசோதாவின் தலையெழுத்து இன்னமும் தீர்மானமாகி விட்டதாகக் கருத முடியாது. மசோதா, அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடரில் நிறைவேற்றப்படாமல் போனால், இந்த அவை கலைக்கப்படுவதுடன் மசோதாவும் காலாவதியாகிவிடும். அடுத்துவரும் அரசு, முதலிலிருந்து மறுபடி தொடங்கி மீண்டும் இந்த மசோதாவை அடுத்த அமைச்சரவையின் ஒப்புதலுடன் நிறைவேற்ற வேண்டிவரும்.
தரமான அடிப்படைக் கல்வி, பள்ளி இறுதித் தேர்வுவரை இந்தியாவிலுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். பள்ளி இறுதித் தேர்வுவரை அனைத்துப் பள்ளிகளுமே அரசுப் பள்ளிகளாகச் செயல்பட வேண்டும். ஏழை, பணக்காரன், மேலோன், கீழோன், ஆண்டான், அடிமை என்கிற பாகுபாடுகள் அகல, அதுதான் அடிப்படையாக இருக்கும். அப்படியொரு கனவு நனவாகிறதோ இல்லையோ, ஒவ்வோர் இந்தியக் குழந்தையும் கல்வி அறிவு பெற்ற குழந்தையாகவாவது இருத்தல் வேண்டும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் என்பது ஒரு நீண்ட நாள் கனவு. அதை மன்மோகன் சிங் அரசு நனவாக்குமேயானால், இந்த அரசின் மிகப்பெரிய சாதனை அதுவாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி

0 comments: