Saturday, November 8, 2008

தவறா? குற்றமா?

சங்க காலம் முதல் நிகழ் காலம் வரை, ஒரு செயல் தவறா அல்லது குற்றமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது.
சோழ மன்னர் ஒருவர், பசு தன் கன்றை இழந்த மணியோசை கேட்டு, தவறு செய்தவன் தன் மகனேயாகினும், அது குற்றமே எனக்கருதி, அதற்குரிய தண்டனையும் வழங்கி, மனுநீதிச் சோழன் எனப்பெயர் பெற்றார் என்கிறது சரித்திரம்.
பாண்டியமன்னரின் அரசவையில் புலவர் நக்கீரன், ஈசன் எழுதிய பாடலில் குறை கண்டார் என அறிவோம். அக்குறையைத் தவறு எனக்கொள்ளாது, தமிழ் உயிரினும் மேலானது என்ற காரணம் கருதி, குற்றம் என்றே கண்டார் என்றும் அறிவோம். ஈசனே நேரில் வந்து நெற்றிக்கண்ணைக் காட்டினும் தான் கண்ட குற்றம் குற்றமே எனவும் வாதிட்டார் என்பதையும் அறிவோம்.
மன்னர்கள் காலத்தில் குற்றங்கள் தர்ம அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதை இதுபோன்ற காவியங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில், தர்ம நியாயங்களுக்குத் தனியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு செயல் தவறா அல்லது குற்றமா என்பது பெரும்பாலும் சட்ட நியாயத்தின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண தவறுகள்கூட இடம், பொருள் மற்றும் காலம் காரணமாகக் குற்றங்களாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, புகை பிடிப்பது தவறு என்றால், தடை செய்யப்பட்ட இடங்களில் பிடிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. அதேபோல, கண்ட இடங்களில் சாலையைக் கடப்பது தவறு என்றால், தடை செய்யப்பட்ட தடங்களில் கடப்பது குற்றமாகக் கொள்ளப்படுகிறது. எனவே இன்றைய சூழ்நிலையில், தவறுகளுக்கும் குற்றங்களுக்குமான இடைவெளி மெல்லியதாகி சில இடங்களில் மறைந்துவிடுவதையும் காணலாம். இத்தகைய தவறுகளிலிருந்து, மன்னிக்கக்கூடாத குற்றங்களை வேறுபடுத்திப் பார்க்கத்தெரிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், தவறுகள் மறக்கப்பட வேண்டும், மன்னிக்கப்பட வேண்டும். குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியிருக்கும்.
ஒருவர் மற்றொருவருக்கு இழைக்கும் தவறுகளால் இன்னல்கள் வருவது உறுதி. அத்தகைய இன்னல்களை மறப்பதும், அவர்களின் தவறுகளை மன்னிப்பதும் மனித நேயத்திற்கும் குடும்ப ஒற்றுமைக்கும் மிக மிக இன்றியமையாததாகும்.
இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர், ""இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்'' என்று சொன்னதோடு விடாமல், ""இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு'' என்றும் சொல்லி அக்கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த உண்மையினைப் புரிந்து கொள்ளவில்லையெனின், சிறு தவறுகளைக்கூட மிகைப்படுத்தி, குறை மேல் குறை கண்டு, பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றமாகக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம்.
பிறர் மற்றொருவருக்கு இழைக்கும் தவறுகளை மன்னிக்கவும் இன்னல்களை மறக்கவும், வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மிகவும் அவசியம். அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல்களும் அதைத்தொடர்ந்து வரும் நிகழ்ச்சி நிரல்களும் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போட்டியிடப் போகும் நபர்களின் விவரங்கள் தெரிய ஆரம்பித்துவிடும். அவர்களின் தகுதி, திறமை மற்றும் அந்தரங்கங்கள் உள்பட அனைத்தும் அலசி எடுக்கப்பட்டுவிடும். தேர்தல் நெருங்க நெருங்க ஒருவரையொருவர் கொள்கையளவில் சாடுவதும் சொற்போர் நடத்துவதும் நாடு முழுவதும் ஒளிபரப்பாகும். போட்டி முடிந்து வெற்றி பெற்றவர் அதிபராக அறிவிக்கப்பட்டுவிடுவார்.
வெற்றி பெற்ற அதிபரின் மனைவிக்கு, தோல்வியடைந்த (நடப்பு அதிபராக இருந்து இரண்டாம் தவணையாக போட்டியிட்ட) அதிபரின் மனைவி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையைச் சுற்றிக்காட்டி, அதன் அலுவலர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைப்பது வழக்கம். அதேபோல், வெற்றி பெற்ற அதிபரும், தன்னிடம் தோல்வியடைந்தவருக்கு வெள்ளை மாளிகையில் தேநீர் விருந்து கொடுப்பது சம்பிரதாயம்.
இதுபோன்ற வழக்கங்களும் சம்பிரதாயங்களும் மனிதகுல நாகரிக வளர்ச்சியின் சின்னங்கள். மனிதர்கள் ஒருவருக்கொருவர் இழைக்கும் தவறுகளையும் இன்னல்களையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் சமுதாயம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பங்கள். இந்த உண்மையினை இவர்கள் அமெரிக்காவில் நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார்கள். எனவேதான் முன்னாள் அதிபர்களான ஜிம்மி கார்ட்டரும், ஜெரால்டு போர்டும் அரசியலில் கருத்து வேறுபட்டாலும் வாழ்க்கையில் நண்பர்களாக வாழ முடிந்தது. வில்லியம் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும் அரசியலில் நண்பர்களாக இல்லாவிடினும், வாழ்க்கையில் அன்பர்களாக வாழ முடிகிறது.
நம் வாழ்விலும் இதைக் கடைப்பிடித்தால், நெஞ்சுக்கு நிம்மதியும் நாம் வாழ்ந்த வாழ்விற்கு நிறைவும் கிடைப்பது உறுதி.
ராம் ராமனாதன்
நன்றி தினமணி

0 comments: