Saturday, November 8, 2008

மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்.
"மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.
திகாயத் மேலும் கூறுகையில், ""1966ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. 1966ல் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்தது. இன்று வாரத்தில் 3 நாள்கள் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. 1966ல் 100 கிலோ கொண்ட ஒரு கோதுமை மூட்டையை விற்று 5 மூட்டை சிமெண்ட் வாங்கினோம். இன்று 1 மூட்டை சிமெண்ட் வாங்க 5 மூட்டை கோதுமையை விற்க வேண்டும். 10 கிராம் தங்கம் அன்று ரூ. 250. இன்று ரூ. 11,000. அன்று கோதுமைக்கு ரூ. 760 என்றும் கரும்புக்கு ரூ. 130 (1 டன்) என்றும் நிர்ணயித்தார்கள். இன்று கோதுமைக்கு ரூ. 1,000 என்றும் கரும்புக்கு ரூ. 818 என்றும் நிர்ணயமாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த விலையேற்ற அடிப்படையில் கவனித்து கோதுமைக்குரிய விலை ரூ. 3,000 என்றும் கரும்புக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயம் செய்வதுதான் நியாயம்''.
திகாயத் கூறியுள்ளதை இன்றுள்ள எதார்த்தங்களை வைத்து கவனித்தால் அவர் கூறியுள்ளதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
உலகமயமாதல் விளைவால் விற்பனைப் பொருள்களில் தடையற்ற வணிகம் என்பது ஏனோ அரிசி, கோதுமைக்கு இல்லை. அரிசிக்கும் கோதுமைக்கும் மட்டுமே கட்டுப்பாடான பொருளாதாரம் உள்ளது. அரசு, ஏகபோகமே நிகழ்கிறது. அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. அப்படி நிர்ணயிக்கப்படும் விலைக்கும் விஷம்போல் ஏறிவரும் சாகுபடிச் செலவுக்கும் தொடர்பே இல்லை. இந்திய விவசாயிகளில் ஐந்தில் நான்கு பேர் நடுத்தர சிறு குறுவிவசாயிகள். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்வோரும் அடக்கம். பஞ்சாப் ஹரியாணா போன்ற மாநிலங்களில் நிலத்தின் விலை ஏறியதாலும் குத்தகையும் ஏறியதாலும் குத்தகை விவசாயிகளுக்கு நிறைய நஷ்டம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை 2005 06ம் ஆண்டில் நிகழ்த்திய ஆய்வின்படி 1 ஏக்கர் கோதுமை சாகுபடி செய்ய சுமார் ரூ. 11,000 செலவாகிறதாம். அதில் குத்தகை முன்பணம் மட்டுமே ரூ. 5,000. அதன்பின் கூலி ஆள்கள் சம்பளம் ரூ. 1,700. இயந்திரங்கள், டிராக்டர், டிரில்லர் செலவு ரூ. 2,000. விதை ரூ. 400. உரம் ரூ. 1,100. பூச்சிமருந்து ரூ. 300. வட்டி ரூ. 200. இத்யாதி. இத்யாதி.
கேரள மாநிலத்தில் 2004 05ல் நிகழ்த்திய ஆய்வில் 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யவும் ஏறத்தாழ ரூ. 10,500 வரை ஆகிறதாம். இங்கு கூலி ஆள் சம்பளம் மட்டுமே ரூ. 6,000 ஆவதால் கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி அழிந்து வருவதுபோல் ஹரியாணாவில் கோதுமை சாகுபடி அழிந்து வருவதாக அப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வு கூறுகிறது. பசுமைப்புரட்சியில் கொடிகட்டிப் பறந்த பஞ்சாப், மேற்கு உத்திரப் பிரதேச மாநிலங்களிலும் கேரள வியாதி வந்துள்ளது. கூலிவேலை செய்ய பிகாரிகள் வருகின்றனராம். கூலி ஆள் சம்பளம் பற்றி அந்த நாள்களுடன் இந்த நாள்களை ஒப்பிட்ட திகாயத் கூறும் ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.
"கூலிக்கு ஆள்கள் மலிவாகக் கிட்டிய காலத்தில் கூலி ஆள்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இன்று 1 நாள் ஆண் கூலி ரூ. 120, பெண்கூலி ரூ. 70. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. கூலியை நெல்லாகவோ கோதுமையாகவோ வழங்கப்பட்ட அந்தக் காலத்தில் வேலை இல்லாத நாள்களில் பட்டினியிருக்க மாட்டார்கள். கூலி உயர்வு இருந்தாலும், பணவீக்கம் விலை ஏற்றம் காரணமாக கூலியாள்கள் இன்று வேலையில்லாத நாள்களில் பட்டினி கிடப்பதால் மகிழ்ச்சியாக இல்லை'. எனினும் சாகுபடிச் செலவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் கூலிச் செலவு உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சம்பளம் கொடுக்க வக்கில்லாத விவசாயிகளின் மானம் காற்றில் பறந்து கொண்டுள்ளது. விவசாயிகளின் மானம் மரியாதை மட்டுமல்ல; விவசாயமே மானம் இழந்துவிட்டதே. மண்ணுக்கும் மரியாதை குறைந்து வருகிறது.
உரங்களைப் பற்றிய உண்மை நிலவரம் மிகவும் கசப்பாயுள்ளது. 2002க்குப்பின் உரத்திற்குரிய விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. உர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம் இதனால் படிப்படியாக உயர்ந்து மானியத் தேவை ரூ. 1,19,772 கோடியாக உயர்ந்தது. விவசாயிகளின் நலன் கருதி உரவிலை உயர்த்தப்படவும் இல்லை. அதேசமயம் பட்ஜெட்டில் போதுமான அளவு உரமானியம் ஒதுக்க இயலாமல் துண்டு விழுந்தது. பல உர நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் துண்டுபோட்டுக் கொண்டன. அதாவது மூடுவிழா. யூரியா உற்பத்தியில் முதல்நிலை வகித்த ஃபர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபர்ட்டிலைசர் லிமிடெட் போன்றவை யூரியா, உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டன. உரமானியம் வழங்கப்படாத காரணத்தினால் மட்டுமல்ல, இறக்குமதி மூலப்பொருள் நாஃப்தா விலை உயர்வு காரணமாகவும் யூரியா விலை உயர்ந்தது.
இனி முழுக்க முழுக்க இறக்குமதி உரத்தை நம்பி இந்தியா வாழப் போகிறதா? இயற்கை விவசாயத்தை நம்பித்தான் வாழப் போகிறதா? இதற்குக் காலம் பதில் சொல்வது இருக்கட்டும். பூச்சிமருந்து விஷயத்தில் ஆரோக்கியமான மாற்றம் தென்படுகிறது.
பூச்சிமருந்து என்பது கொடிய நஞ்சு. அதனால் மனிதருக்கு நோய் ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல; இந்த விஷத்தின் விலையேற்றமும் (இரண்டு ஆண்டுகளில் 100 சதம்) காரணமாக மாற்றுப் பூச்சிமருந்தாக மூலிகைப்பூச்சி விரட்டி, வசம்பு, பூண்டு, மஞ்சள், திரிகடுகம், திரிபலா, வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றின் பயன் அதிகரித்துவிட்டது. ஆந்திரப்பிரதேசத்தில் பல கிராமங்களில் பூச்சிமருந்து முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சற்றுக் கூடுதல் விலையில் பயோமருந்துகளும் அறிமுகமாகிவிட்டன.
எனினும், விவசாயம் மானம் இழக்க மற்றொரு முக்கியக் காரணம் விதை. தன்மானமுள்ள ஒரு விவசாயி காய்கறி விதைகளாகட்டும், நெல், புஞ்சைதானியம், கோதுமை, பயறுவகை விதைகளாகட்டும் சொந்தமாகத் தயாரித்துச் சேமித்தார். வீரியரக விதைகள் அறிமுகமான காலகட்டத்தில் வேளாண்மைத்துறையின் விதைவிற்பனை நிலையங்களைச் சார்ந்து நின்று, விவசாயிகள் தாங்களே அறுவடை செய்து வந்த பாரம்பரிய நெல் ரகங்களைச் சேமிக்காமல், ஐ.ஆர்.8 மற்றும் தைச்சுங் ஜீன் பொருந்திய ஏடிடி எண் வரிசைகளை நம்பி நெல்விதை சேமிக்கும் மரபை இழந்தபோதே இந்திய விவசாயம் மானம் இழந்தது.
""ஆத்தூரு கிச்சடிச்சம்பா, ஆற்காடு கிச்சடிச்சம்பா, ஆனைக்கொம்பன், வையக்குண்டான், தங்கச்சம்பா, குதிரைவால், டொப்பி போன்ற பல நூற்றுக்கணக்கான விதைநெல் யாவும் தமிழ்மண்ணில் கற்பரசிகளுக்குப் பிறந்தவை. வீரியரக நெல் விதைகள் அன்னிய மண்ணில் பிறந்தவை. வீரியரக விதை நம்மிடம் குடிகொண்டபோதே மண்ணின் மானம் கப்பலேறியது. ஜீன் மாற்று விதைகளை அதிக விலை கொடுத்து மஹைக்கோ, மான்சென்டோ போன்ற பன்னாட்டு நிறுவன விதைகளுக்கு இந்திய விவசாயம் அடிமையாகி இந்த மண்ணின் மானம் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குப் போனதால் இந்திய விவசாயிகள் இன்று அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். வீரிய ரக விதைகளை கிலோ ரூ. 20க்கு வாங்கி வந்த காலம் மாறிப்போய் இன்று ஜீன் மாற்று விதைகள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,000 வரை விலை கொடுத்து வாங்கிப் போதிய அளவு விளைந்தும்கூட அதற்குரிய விலைகளை விற்கும்போது பெற முடியவில்லை. திகாயத் கூறுவதுபோல், கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த விதைகளின் சாகுபடிச் செலவும் கூடுதல் என்பதை கவனித்தல் நலம்.
விவசாயிகளைச் சுரண்டும் ஒரு புதிய விதைக் கொள்கை விவசாயத்தை மானமிழக்க வைத்துள்ளது. 2004 விதைச்சட்டம் 1966 விதைச்சட்டத்தைச் செல்லாக்காசாக்கிவிட்டது. புதிய விதைச்சட்டத்தில் தனியார் ஆதிக்கம் ஓங்கிப் பொதுத்துறை கேலிக்குரியதாகிவிட்டது. இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் அரசுப் பணத்தைக் கொண்டு விதை ஆராய்ச்சி செய்து மாநில வேளாண்மைத் துறைக்கு விதைகளை அனுப்பியது. கட்டாக், ஆடுதுறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எல்லாம் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்துக்குக் கட்டுப்பட்டவை. வீரியரக விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்கப்பட்டன. ஆனால் அரசு ஏகபோகத்தை அகற்றிவிட்டுப் பன்னாட்டு விதை நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டது. பன்னாட்டு விதை நிறுவனங்களின் விரிவாக்கப் பணியின் சுறுசுறுப்பு பொதுத்துறையில் இல்லாத காரணத்தால் பன்னாட்டு விதை நிறுவனங்களின் வீரிய ஒட்டு மற்றும் ஜீன் மாற்று பிடிடி விதைகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதில் மற்றொரு கொடுமை, வேளாண் விஞ்ஞானிகளின் துரோகச் செயல். அரசுத்துறையில் மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்ற இந்த விஞ்ஞானிகளைத் தனியார் பன்னாட்டு விதை நிறுவனங்கள் ஐந்து லகர சம்பளம் கொடுத்து வாங்கின.
அரசுப் பணியிலிருந்து தனியார் விதை நிறுவனங்களுக்குச் செல்லும்போது இந்த விஞ்ஞானிகள் அரசுப்பணத்தில் ஆராய்ச்சி செய்த மூலப்பொருள் சாதனங்களையும் கொண்டு போய்விட்டனர். அரசுத்துறை ஆராய்ச்சியே தனியார் ஆராய்ச்சியாக மாறியுள்ளது. பொதுத்துறை வழங்கிய வீரிய ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள் சேமித்து அடுத்த நடவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் வீரிய ஒட்டு பி.டிடி விதைகள் ஒரு அறுவடைக்குப் பின் மலடாகிவிடும். ஆகவே, ஒரு விவசாயி தன் கையை நம்பக்கூடிய ஒரு தற்சார்பை இழந்து விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகிவிட்டார். விஞ்ஞானிகள் துரோகிகளாகிவிட்டனர்.
இன்று பன்னாட்டு விதை நிறுவனங்கள் அளிக்கும் வீரிய ஒட்டு ஜீன் மாற்றம் பி.டிடி ரக விதைகளை மலட்டு விதைகளை என்று பயன்படுத்தினோமோ, அன்றே விவசாயத்தின் மானபங்கம் வெளிச்சமாகிவிட்டது. அன்று திரெளபதியின் வஸ்திரோபகர்ணத்திற்கு அதை நிகழ்த்த முடியாதபடி கண்ணபரமாத்மா காப்பாற்றினார். ஆனால் இந்தக் கலியுகத்தில் விவசாயம் விவசாயிகளின் வஸ்திரோபகர்ணத்தைக் காப்பாற்ற அந்தக் கண்ணபரமாத்மா வரவில்லையே, ஏன்? துரியோதனர்களின் சபைக்கூட்டம் தொடர்வதினால்தானோ!
ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

1 comments:

said...

tamilan irupathai vituvitu parapatharku ponnan.munnoorkalin vivasaiyam maranthu, thavaranna arasuin kolkaiyaal indru varnthuvathu naam than .