Thursday, November 6, 2008

வெள்ளை மாளிகையின் கறுப்பு நிலா!

1964ம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியர் இர்விங் வேலஸ் எழுதிய "தி மேன்' என்கிற புத்தகம் வெளிவந்தபோது, அவரது கற்பனை அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்குள் நனவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் டக்ளஸ் தில்மன் என்கிற கறுப்பர் இன அமெரிக்க செனட்டின் தலைவரை, அதிபராக்கி வெள்ளை மாளிகையில் கோலோச்ச வைப்பதும், தில்மன் அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதமும்தான் இர்விங் வேலஸுடைய நாவலின் கரு.
"தி மேன்' நாவலின் நாயகன் டக்ளஸ் தில்மனுக்கும், அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கும், இருவரும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தவித ஒற்றுமையும் கிடையாது. ஆனால், "தி மேன்' நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்த பல லட்சம் வாசகர்களின் கனவு இன்று நனவாகி இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்கிய பெருமை பராக் ஒபாமாவைச் சாரும்.
பராக் ஒபாமாவின் வெற்றியும், ஒரு கறுப்பர் இனத்தவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இன்னொரு நாள். பராக் ஒபாமாவின் வெற்றி, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மானுடம் இன வேறுபாடுகளையும், நிற வேறுபாடுகளையும் கடந்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சரித்திரச் சான்று பகர்ந்திருக்கிறது என்பது 21ம் நூற்றாண்டுக்கே கிடைத்திருக்கும் வெற்றி இது!
பராக் ஒபாமாவின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது, அவர் நிறவெறிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய குடியரசுக் கட்சியின் பிரதிநிதி அல்லர். மாறாக, அடிமைத்தனத்தை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். முதலாளிகளின் கட்சி என்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்ட ஜனநாயகக் கட்சி, தனது வேட்பாளராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியைத் தேர்ந்தெடுக்காமல், கறுப்பர் இனத்தவரான பராக் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது என்பதே மிகப்பெரிய சமுதாயப் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.
இரண்டாவதாக, கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள் அல்லாதவரின் வாக்குகளை மட்டும் பராக் ஒபாமா பெற்றிருந்தால், வெற்றிக்கு அருகில்கூட போயிருக்க முடியாது. பெருவாரியாக உள்ள அமெரிக்க வெள்ளையர்கள் வாக்களித்து ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
""கறுப்பர் என்பதால் தகுதியில்லாத ஒருவரை ஆதரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்று சொன்ன மார்டின் லூதர்கிங்கின் அறிவுரையை அமெரிக்க வெள்ளையர்கள் பின்பற்றி இருக்கிறார்கள் என்றால், பராக் ஒபாமாவின் தகுதி நிர்ணாயகமான பங்கு வகித்திருக்கிறது. இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட உலகத்தை, அதை நடத்திக்காட்டி அதிசயிக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்க வாக்காளர்கள். மக்களாட்சித் தத்துவத்துக்கு தாங்கள்தான் முன்னோடிகள் என்பதையும், சமுதாய மாற்றங்களுக்கும் அமெரிக்கா முன்னுதாரணமாக இருக்கும் என்பதையும் பராக் ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்து நிரூபித்திருக்கும் அமெரிக்கக் குடிமக்களை உலகமே தலைவணங்கிப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவின் அணுகுமுறையிலும், உலகளாவிய கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுமா என்றால் சந்தேகம்தான். பொருளாதாரக் கொள்கையிலும் சரி, வெளிவிவகாரக் கொள்கையிலும் சரி, ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மேலும், 1929க்குப் பிறகு, அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதாரக் குழப்பத்தை எதிர்கொண்டு சமாளிக்கும் பொறுப்பை அதிபர் பராக் ஒபாமா ஏற்றிருக்கும் வேளை இது. இந்தச் சூழலில் முந்தைய ஜார்ஜ் புஷ் அரசின் நடவடிக்கைகளிலும், கொள்கைகளிலும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்த அவரால் நிச்சயம் முடியாது.
அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த அமெரிக்காவுக்கும் இன்றைய அமெரிக்காவுக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றமுண்டு. உலகின் பல பகுதியைச் சேர்ந்த இனத்தவர்களும் அமெரிக்காவில் குடியேறி அதை ஓர் உலகக் கலாசாரங்களின் கலவையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கறுப்பர் இனத்தவர் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது தார்மிக ரீதியாக, அந்த நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள உத்வேகத்தையும், நெஞ்சுரத்தையும் அளிக்கும்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் சாதுர்யம் இருப்பவர்தான் புத்திசாலி. நல்ல தலைவர். வெள்ளை மாளிகையில் உதித்திருக்கும் கறுப்பு நிலாவான பராக் ஹுசைன் ஒபாமா தன்னை ஒரு நல்ல தலைவர் என்று நிரூபிக்க நமது மனமார்ந்த வாழ்த்துகள்!
நன்றி : தினமணி

0 comments: