Saturday, November 8, 2008

தேவை சுயாட்சி அதிகாரம் பெற்ற மாநிலம்

இலங்கைத் தமிழ் மக்களிடையே காணும் உணர்ச்சிகளின் வேகமும், ஒற்றுமைக் குறைவும் தோல்விகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டன. இலங்கை வாழ் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட்டு வருகின்றன. மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கு வாழ்வு கொடுத்த ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகள் உண்டு. வியாபாரங்கள், தொழில்கள் செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து சென்ற இந்தியத் தமிழர்களும் பிற பகுதியைச் சேர்ந்த இந்தியர்களும் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர். கொழும்பு நகரில் வியாபாரம், தொழில்கள் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்திய அரசு, இலங்கை அரசோடு செய்துகொண்ட லால் பகதூர் சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் விளைவாக லட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களும், வியாபாரம், தொழில்கள் நடத்தியவர்களும் இலங்கையைவிட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சரித்திர நிகழ்ச்சியும் நடந்தது. இந்த ஒப்பந்தத்தை அறிஞர் அண்ணா கடுமையாக எதிர்த்தார். இந்தியத் தமிழர்கள் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களைத் திட்டமிட்டு குடியேற்றிய சிங்கள அரசின் துர்பாக்கிய நிகழ்ச்சியும் நடந்தது. கிழக்கு மாநிலத் தலைநகர் திரிகோணமலை. திரிகோணமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கோனேஸ்வரன் மலைக்கோயில் உள்ளது. பூர்வீகத் தமிழரான சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று கிழக்கு மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த அமைச்சரவையில் முஸ்லிம் தமிழர் இஸ்புல்லாவும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் தமிழர் 1977ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவராக இருந்தார். வட பகுதியில் வாழும் தமிழர்களோடு சேர்ந்து ஒரு தனி மாநிலமாக அமைய வேண்டும் என்று போராடியவர்தான், கிழக்கு மாநிலத்தின் இன்றைய முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன். இவர் விடுதலைப் புலிக் குழுவைச் சேர்ந்தவர் தான். கருணா என அழைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி இயக்கத் தளபதி விநாயகமூர்த்தி முரளீதரனுடன் போராட்டக் குழுவில் இருந்தவர்தான் முதலமைச்சராக அமர்ந்துள்ளார்.
மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் தலைவராகத் தோன்றி இலங்கை அமைச்சராகப் பணியாற்றியவர் செளமியமூர்த்தி பாஸ்கரத் தொண்டைமான். இவர் என்னுடைய திருப்பத்தூர் தொகுதியில் புதூர் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது அவரைச் சந்தித்துப் பேசியது நினைவில் நிற்கிறது. இவருடைய உறவினர் ஆறுமுகத் தொண்டைமான் இன்றும் மலையகத் தமிழர்களின் தலைவராகவும், இந்தியத் தமிழ் மக்களின் சார்பாக இலங்கை அரசில் அமைச்சராகவும் உள்ளார். மலையகத் தொழிலாளர்களிடம் பேசியது தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தது, அந்தப் பகுதியில் முக்கிய நகரமான நுரேலியாப் பகுதிக்குச் சென்றது, அந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ் வியாபாரிகளைச் சந்தித்தது எல்லாம் நினைவில் நிற்கிறது.
இந்தியத் தமிழர்கள் இலங்கையில் பல பகுதிகளில் வாழ்ந்தனர். தமிழன் அரசாண்ட கண்டிப் பகுதிக்குச் சென்றதும் நினைவுக்கு வருகிறது. இப்படிப் பல பகுதிகளுக்குச் சென்று இந்தியத் தமிழர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் வாழும் அனைவரும் போற்றிப் புகழும் கதிர்காமம் முருகன் கோயில் நினைவுக்கு வருகிறது. தமிழர் பண்பாடு காத்து வளர்த்திடும் பல கோயில்கள் தமிழர்களால் பாதுகாக்கப்படுவது உண்மை வரலாறு.
1955ம் ஆண்டுக்குப் பிறகுதான் சிங்கள ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது. முதலில் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள், கல்வியில் சிறந்து, நீதிபதிகளாக, சிறந்த வழக்கறிஞர்களாக, அரசுத் துறைகளில் உயர் பதவிகள் வகித்தது சரித்திர உண்மைகள்.
சிங்கள மக்களின் எதிர்ப்பு உணர்வு வளர்ந்தது. சிங்களம் மட்டும் தான் ஆட்சிமொழி என்ற கொள்கை 1956ம் ஆண்டில் சட்டமாக அமல்படத் தொடங்கி தமிழர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அரசியல் ஆதிக்கம் தோன்றத் தொடங்கியது. தமிழர் தலைவரான ஈழத் தந்தை செல்வநாயகம் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபடுத்த முயன்றார். 1957ம் ஆண்டு பண்டாரநாயகா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965ல் டட்லி சேனநாயக செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற இரண்டு ஒப்பந்தங்களை இலங்கைத் தமிழர்கள் உரிமைகளைப் பெற்றிட ஈழத் தந்தை செல்வா இலங்கை அரசோடு செய்து கொண்டு சரித்திரம் படைத்தார். ஆனால் சிங்களத் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தால் செயல்படுத்தப்படாமல் ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டன. இலங்கை அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை.
ஜனநாயக முயற்சிகள் வெற்றி தராததால் சிங்கள ஆதிக்கக்காரர்களின் வெறித்தன்மையை அழித்திட ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற உணர்வு தமிழ் தீவிரவாதத்திற்கு வித்திட்டது. ஈழத் தந்தை செல்வா மறைவிற்குப் பின் தமிழ் தீவிரவாதம் அதிகரித்தது. தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்த பல ஈழத் தலைவர்கள் தீவிரவாதத்திற்குப் பலியாகினர். ஈழத் தந்தை செல்வாவின் மகனே இன்று இந்தியாவில் அகதியாக வாழ்கின்ற நிலை ஏற்பட்டது.
தீவிரவாதத்திற்கு இந்திய அரசு ஒத்துழைப்புத் தந்தது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டிலும் மாநில அரசும் ஆதரவு தரும் நிலை ஏற்பட்டது. ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் பாடுபட அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி முன்வந்தார். ஏராளமான பண உதவி செய்யப்பட்டது. இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பினார். இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் இருந்து பூர்வீகத் தமிழர்களைக் காப்பாற்றினார். இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தன்னைத்தானே தலைகுனிந்து கொண்டு தப்பிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோம். பிற்காலத்தில் இந்தத் தமிழ் மண்ணிலேயே தீவிரவாதத்திற்குப் பலியானார்.
ஆனால் அவர் செய்துகொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கை அரசின் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் தமிழர்கள் மாநில சுயாட்சியோடு ஆட்சி செய்கின்ற உரிமைகளைத் தர வேண்டும் என்ற இந்தியாவின் வேண்டுகோளை இலங்கை அரசு நிறைவேற்ற ஒப்புக்கொள்ளச் செய்தது பெரும் சாதனையாகும். அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டாலும் இன்னும் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பால் தடைபட்டுக் கொண்டே உள்ளது. இந்த ஒப்பந்தப்படி செயல்பட, இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளைப் பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேள்விகளை நான் எழுப்பினேன். பிற்காலத்தில் பிரதம அமைச்சரான அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைத் தமிழ்த் தீவிரவாதிகளுடன் இதுபற்றிப் பேசினால் உள்ள ஆபத்துகளை என்னிடத்தில் விளக்கிக் கூறினார்.
ராஜீவ் காந்தி அடித்தளம் போட்ட இலங்கை அரசின் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பதின்மூன்றாவது திருத்தம் என்ற பெயரில் 1987ல் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் காந்தி முயற்சியால் இலங்கை நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டாலும் அமல் நடத்துவதில் சிக்கல் தொடர்கிறது. இந்தத் திருத்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தோற்றம் கொண்டது. இதன்படி மாநில அரசுகள் அமைய வேண்டும். மாநில சட்டசபைகள் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் லிஸ்ட் 1 பட்டியலில் அடங்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் லிஸ்ட் 3 பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியும் இலங்கையில் ஆட்சிமொழியாக ஆகிட 13வது திருத்தச் சட்டம் வகை செய்துள்ளது. ஆங்கிலம் தொடர்பு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி சில மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு மாநில ஆட்சியாக நிர்வாகத்தை நடத்திடவும் வழிவகை தரப்பட்டுள்ளது. இதன்மூலம் பூர்வீகத் தமிழர்கள் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாநிலங்கள் எதிர்காலத்தில் ஒற்றுமையாகச் செயல்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் நிதியினை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து கொடுத்திட இந்தியாவில் இருப்பதைப்போல் நிதிக் கமிஷன் நியமித்து நிதிப் பங்கீட்டுக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் 13வது திருத்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் பூர்ணமாக நல்ல நோக்கத்தோடு மாநில அரசுகள் அமைந்திட இன்றைய இலங்கை அரசு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது. மாநிலங்கள் சுயாட்சி உரிமை பெற்றுச் சுதந்திரமாக அதிகாரங்களையும், நிதி உதவிகளையும் பெற்றிட வழிவகைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பூர்வீகத் தமிழர்கள் (ஈழத் தமிழர்கள்), மலையகத் தமிழர்கள் ஆகியோர்களின் பிரதிநிதிகளாக 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 225 பேர். அனைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் உரிமைகள் பெற்றிடும் வகையில் அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமைந்திட அனைத்துக் கட்சிக் குழுவில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
ராஜீவ் காந்தி முயற்சியால் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்த மாநில ஆட்சி உரிமைகள் இந்திய நாட்டில் உள்ளதுபோல் அமைந்திட இன்றைய இந்திய அரசு முயற்சி எடுத்தால் இலங்கையில் அமைதி தோன்றிட வாய்ப்புள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி கற்றிடும் வாய்ப்புகளிலும் ஒதுக்கீடு செய்து வழி வகுக்கப்படுமானால் இன்னும் சிறப்பாக ஒற்றுமை தோன்றிட வாய்ப்புள்ளது. சிங்களவர்கள் நிறைந்த இன்றைய ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் இந்திய அரசோடு ஒத்துழைக்கும் எண்ணம் கொண்ட கட்சிகளாக இருப்பது சாதகமான சூழ்நிலையாகும். தாய்த் தமிழக அரசியல் கட்சிகள் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை பிரிந்திட ஆதரவு தராமல் இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு தந்திட முயற்சிக்க வேண்டும். 25 மாவட்டங்களைக் கொண்ட இலங்கை முழுவதும் தமிழர்கள் அமைதியுடனும் உரிமையுடனும் வாழ்ந்திட எண்ணிட வேண்டும். இலங்கை மக்கள்தொகையில் சுமார் 25 சதவிகிதத்திற்கு குறையாது வாழும் இலங்கைத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நிலை ஏற்பட வேண்டும்.
இன்று மீண்டும் இலங்கைத் தமிழர் வாழும் வடக்குப் பகுதிகளில் ராணுவத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. போர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. தமிழ்த் தீவிரவாதிகள் தங்கள் வசம் உள்ள போர் விமானத்தின் மூலம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்தியதாக ஏற்கெனவே செய்தி வந்தது. மீண்டும் இன்று தீவிரவாதிகள் போர் விமானம் கொழும்பில் மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை நாட்டுக் கப்பல் மீது தீவிரவாதிகள் தங்கள் கப்பல் படை மூலம் தாக்கி அழித்தனர் என்று செய்தியும் வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்குப் பேராபத்து தொடரும் நிலையில் தாய்த் தமிழகத்தின் தமிழர்கள் எல்லாம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று ஒன்று சேர்ந்திருப்பது சரித்திர நிகழ்ச்சியாகும். இந்த ஒற்றுமை தொடர்ந்து இலங்கையில் வாழ்கின்ற தமிழர் பகுதிகளில் எல்லாம் சுயாட்சி அதிகாரம் பெற்ற மாநிலங்கள் உருவாகிட, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள், ஆட்சி அமைப்புகள், நீதிமன்றங்கள் என்று அனைத்துத் துறைகளிலும் அங்கம் பெறும் உரிமை உள்ள வாய்ப்புகளைத் தந்து, உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சம உரிமை வழங்கும் முறையிலும், சிங்களவர்களின் தனி ஆதிக்கம் இல்லாது வாழ்கின்ற நிலையைப் பெற்றிடும் புதிய சரித்திரம் தோன்றிட தாய்த் தமிழர்களின் ஒற்றுமை பயன்பட வேண்டும். அதற்கேற்ற முறையில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படத் தாய்த் தமிழக மக்களின் ஒற்றுமை உறுதுணையாக அமைந்திட வேண்டும்.
செ. மாதவன்
நன்றி : தினமணி

0 comments: