Thursday, August 7, 2008

காலத்தின் கட்டாயம்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 49 லிருந்து 60 ஆக அதிகரிப்பதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழக அரசின் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் விரைவில் பரிசீலனை செய்து நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஆணையைப் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
லட்சக் கணக்கில் இந்தியா முழுவதும் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நமது மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு, நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கீழமை நீதிமன்றங்களில் தொடங்கி உயர் நீதிமன்றம் வரை இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. இப்படி நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் பலருடைய வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, விரைவாக முடிவுகள் எடுக்கப்படாததால் ஏற்படும் தாமதங்கள் தேசத்தின் வளர்ச்சியையும் தாமதப்படுத்துகிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்தியாவிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 876. ஆனால், நீதிபதிகள் நியமிக்கப்படாமல் 282 இடங்கள் காலியாக இருக்கின்றன. அதாவது, செயல்படும் நீதிபதிகள் 594 பேர்தான். ஏனைய நீதிபதிகள் ஏன் நியமிக்கப்படவில்லை என்பது அதைவிட வேடிக்கையான விஷயம்.
உயர் நீதிமன்றக் குழு பரிந்துரைக்கும் நீதிபதி தேர்வுக்கான பட்டியல், சில மாநில அரசுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போனால், நீதிபதிகள் நியமிக்கப்படாமலே தொடரும். அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தனது சம்மதத்தைத் தராமல் இழுத்தடிக்கும். ஆட்சியாளர்களின் பார்வையில் எல்லா ஜாதியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறதா, தங்களது கட்சிக்கோ, கூட்டணிக்கோ ஏற்புடைய நபர்கள் தானா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற விஷயங்கள் ஒத்துப்போனால்தான் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொள்வார்கள். அங்கே தகுதி, திறமை, நேர்மை போன்ற விஷயங்கள் எப்போதுமே இரண்டாம் பட்சம்தான்.
தீர்ப்புகள் பாரபட்சமற்ற முறையிலும், சட்டத்தின் அடிப்படையிலும், விரைவாகவும் வழங்கப்படாமல் போனால் அதன் விளைவுகள் தனிநபர் பாதிப்பாக மட்டுமல்லாமல், சமூக பாதிப்பாகவும் மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஜாதிக்கும், கட்சிக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கும்போது, ஏனைய ஜாதியைச் சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதன் எதிரொலி முதலில் நீதித் துறையின் மீதும் அதைத் தொடர்ந்து மக்களாட்சியின் மீதும் ஏற்படும் என்பதை நமது ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் 31, 2007 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் 37,43,060. இங்கே இப்படி என்றால், கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகள் முப்பது கோடியை எட்டும். உச்ச நீதிமன்றத்தில் மட்டும் ஏறத்தாழ அரை லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
1984 முதலே, நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நீதிமன்றங்கள் "ஷிஃப்ட்' முறையில் செயல்பட்டு அதிகமான வழக்குகளை விசாரித்துப் பைசல் செய்வது, தேவையில்லாமல் "வாய்தா' வழங்குவதைக் குறைத்து வழக்குகளை விரைவில் முடிக்க முயல்வது என்று பல்வேறு சிபாரிசுகள் செய்யப்பட்டு வருகின்றன. 1988ல் சமர்ப்பிக்கப்பட்ட சட்டக் கமிஷனின் 125 வது பரிந்துரையும், 2003ல் வெளிவந்த நீதிபதி மலிமத் கமிட்டியின் குற்றவியல் சீர்த்திருத்தப் பரிந்துரையும் முறையாகவும், முழுமையாகவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த விஷயத்தில் தமிழகம் எவ்வளவோ மேல். ஆட்சிகள் மாறினாலும், அரசின் உதவியுடன் உயர் நீதிமன்றம் பல புதிய நடைமுறைகள் மூலம் வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க முயன்று வருகிறது. கடந்த வருடம் நடைமுறைக்கு வந்திருக்கும் மாலை நேர நீதிமன்றங்கள் ஒரு புதிய முயற்சி. அப்படி இருந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 4,28,832 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
விரைவான நீதி கிடைக்காமல் போனால் அது மறுக்கப்பட்ட நீதி என்று தான் கொள்ளல் வேண்டும். இந்த விஷயத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன் நின்று விடாமல், தரமான நீதியும், விரைவான நீதியும் கீழமை நீதிமன்ற அளவில் கிடைப்பதற்கு அரசு வழிகோல வேண்டியது அவசியம். அது காலத்தின் கட்டாயமும் கூட!


நன்றி : தினமணி

நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

அண்மைக் காலமாக தமிழகத்தில் மது ஒழிப்பு பற்றி கருத்தாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒரு தீவிரமான கருத்துப் பரிமாற்றம் நடந்து வருகிறது.
மதுவை அரசு முனைந்து ஒழிக்க வேண்டும், மதுப் பழக்கத்திலிருந்து தமிழக இளைஞர்களையும், ஏழைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர், காந்தியச் சிந்தனையாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இதை ஓர் இயக்கமாகவே நடத்த ஆரம்பித்துவிட்டார். மது என்பதை ஒழிக்க முடியாது. பல மகான்கள் முயன்றும் தோற்றுப் போனார்கள், பல இயக்கங்களும் தோற்றுப் போயின. மதுபானக் கடைகளை அரசு மூடுவதால் மட்டுமே குடிக்கிறவர்களை குடியிலிருந்து காப்பாற்ற முடியாது, அவர்கள் எரிசாராயம் குடிக்கச் சென்று தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ள நேரிடும்.
அரசு மதுபானக் கடைகளுக்குப் பதிலாக கள்ளச் சாராயத்தை காவல்துறையால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்லாமல், அரசுக்கு நல்ல வருமானம் தரும் ஒரு கற்பகத்தருவை ஒழிக்கச் சொல்கிறீர்கள். இதனால் கள்ளச் சாராயம் பெருகும். கள்ளச் சாராயத்தை ஒழிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எனவே மது ஒழிப்பு என்பது ஒரு மாயை, எத்தனையோ பேர் முயன்று முடியாததை இன்று ஒழித்துவிட முடியுமா என்ற கேள்விகளைக் கேட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக முதல்வர்.
இந்த நிலையில் எரிசாராயம் அருந்தி சமீபத்தில் பலர் இறந்ததை பத்திரிகை மூலம் நாம் அனைவரும் அறிவோம். அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களைச் சந்திக்க இடதுசாரி இயக்கத் தலைவர்கள் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறும்போது, ஒட்டுமொத்தமாக அந்தக் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாகப் பெண்கள், இந்தத் தலைவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். மது விற்பனையை அரசின் மூலம் தடைசெய்யத் தாங்கள் உதவ வேண்டும். இல்லையென்றால் எங்கள் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்பதுதான் அது.
இந்த நிலையில் இன்னொரு விவாதம் வைக்கப்பட்டது. அதாவது எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் மக்கள் குடிப்பது தவறு, குடி எங்கள் குடியைக் கெடுக்கும், எங்கள் குடும்பங்களைக் கெடுக்கும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கெடுக்கும் என்று தீர்மானித்து மது எங்கள் பகுதிகளில் வேண்டாம் என முடிவு எடுக்கிறார்களோ அந்தப் பகுதிகளில் மது ஒழிக்கப்படல் வேண்டும்.
இதற்கு மகாராஷ்டிர மாநிலம் உள்ளாட்சிக்கு அதிகாரம் வழங்கிவிட்டது. எனவே இதேபோல் இங்கும் மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பளியுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அது மட்டுமல்ல, கள்ளச் சாராயம் காய்ச்சுவதைத் தடுத்த காரணத்திற்காக பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் கொலையுண்டதையும், ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.
மேற்கூறிய விவாதத்தின் அடிப்படை என்னவென்றால், மதுவை ஒழிப்பதற்குப் பதிலாக, மது மக்கள் மேல் திணிக்கப்படுகிறது என்பதுதான். ஆண்டுதோறும் வணிகம் நடத்துகிறவர்கள் தங்கள் வணிகத்துக்கு இலக்கு நிர்ணயித்து, அதை எவ்வாறு எட்ட முனைவார்களோ அதேபோல், தமிழக அரசும் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துச் செயல்பட ஆரம்பிப்பது மக்களின் மேல் மதுவைத் திணிப்பதற்குச் சமமாகும். எனவே இந்த மதுத் திணிப்பை மக்கள் புறக்கணிக்கும்போது அதைத் திணிக்க முயலக் கூடாது. அரசு மக்களை மறைமுகமாக குடிக்க வற்புறுத்தக்கூடாது என்ற நிபந்தனையை அடிப்படையாக வைத்தனர்.
இதற்குப் பதிலளிக்கும்போது அரசுத் தரப்பில் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதாவது, அரசு மதுபானக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் அந்த இடத்துக்கு வந்துவிடும். அதை ஒழிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம் என்ற வாதத்தை வைக்கிறது.
இதனால் ஊழல் பெருகலாமே தவிர குடிப்பது நிற்கப்போவது கிடையாது. அதுமட்டுமல்ல, தரம்கெட்ட மதுவைக் குடிப்பதால், மக்கள் உடல்நலம் பாதிக்கப்படும். அத்துடன் அரசு தனக்கு வரவேண்டிய வருமானத்தையும் இழக்க நேரிடும் என்ற வாதத்தை அரசு முன்வைக்கக் கூடாது.
இந்தப் பிரச்னையின் இன்னொரு கோணமும் இருக்கிறது. இன்றைக்கு நாம் விற்கும் மது முழுக்க முழுக்க ரசாயனக் கலவையால் உருவாக்கப்பட்டது. எனவே இதற்குப் பதிலாக கள்ளுக் கடைகளைத் திறப்பதன் மூலம் இந்த ரசாயனக் கலவையிலிருந்து தயாரிக்கும் மதுவுக்குப் பதிலாக இயற்கை வளத்தின் மூலம் கிடைக்கும் மது உடலைக் கெடுக்காது. அரசுக்கும் வருமானம் வரும் என்ற வாதத்தையும் வைக்கின்றனர்.
அரசு எப்படி இலக்கு நிர்ணயம் செய்தது என்றால், அரசு மதுபானக் கடை வருவதற்கு முன் கள்ளச் சாராயம் எவ்வளவு புழக்கத்தில் இருந்தது என்று காவல்துறையில் ஒரு தோராயக் கணக்கீடு இருந்த காரணத்தால் எப்படியும் குடிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளோர் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்து விடுகிறது. எனவே அந்த அளவுக்கு அரசு மதுபானக் கடைகளில் மது விற்கவில்லை என்றால், குடிப்போர் எங்கெங்கோ சென்று கள்ளச் சாராயத்தைக் குடிக்கின்றனர் என்று பொருள். இதன் மூலம் காவல்துறையினர் மாமூல் பெறுவர். எனவே அரசுக்கு வரும் வருமானம் குறையும். எனவே தான் தோராயமாக இலக்கு நிர்ணயித்து மதுபானம் விற்கப்படுகிறது. இதன்மூலம் காவல்துறைக்கு வரும் மாமூல் ஒழிக்கப்பட்டு, குடிப்போருக்கு நல்ல மது வழங்கப்பட்டு, அரசுக்கு வரும் நிதியைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடுவது என்ற வாதம் அரசுத் தரப்பில் வைக்கப்படுகிறது.
இதற்கு மது ஒழிப்பு பிரதானமாக்கப்பட வேண்டும் என்பவர்கள் வைக்கின்ற வாதம், மக்கள் கெட்டுப்போவோம் என்று பந்தயம் கட்டினால், அரசு அதை அனுமதிப்பதா, மக்களுக்கு நல்வழி காட்டுவதல்லவா அரசின் வேலை. குடியில் மயங்குவோரை மாற்றுவது அரசின் கடமையல்லவா, மக்கள் கெட்டுப்போவோம் என்று சொல்லும்போது நன்றாகக் கெட்டுப்போங்கள். ஆனால், அரசுக்குத் தரவேண்டிய வருமானத்தைத் தாருங்கள் என எண்ணி மக்கள் வீழ்ச்சியில் ஆதாயம் பார்ப்பதா அரசின் வேலை. அரசு மதுபானக் கடைகளை மூடிவிட்டால் எரிசாராயம் வீதிகளில் பவனிவரும். காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல, அரசுக்கு வரும் வருமானம் காவல்துறைக்கும், கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கும் செல்லும் என்று சொல்லுவது பொறுப்புள்ள அரசாங்கத்தின் பதில் அல்ல.
அரசாங்கத்தில் ஒரு துறையே அமலாக்கத்துக்காக இருக்கிறபோது, அந்தத் துறையில் உள்ள காவல்துறை அதிகாரிகளால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்றால் அப்படிப்பட்ட துறை நமக்கு எதற்கு? இப்படிப்பட்ட வாதமே அரசின் இயலாத் தன்மையை வெளிப்படுத்துவதாகும். இந்த வாதம் ஒரு கண்துடைப்பு என்று ஏற்க மறுக்கின்றனர் கருத்துகளை உருவாக்கும் அறிவுஜீவிகள்.
இந்தச் சூழலில் இன்னொரு சக்தி இந்த மதுவுக்குள் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவை மதுப் பொருளாதாரம் மற்றும் மது தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தப் பொருளாதாரத்தை கையில் வைத்திருப்போர் அரசைத் தொடர்ந்து நிர்பந்தப்படுத்துவார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி புதிய பொருளாதாரத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எதிர் துருவங்களாக இருந்தபோதும் பற்றிப் பிடித்துச் செயல்படுகின்றனவோ, அதேபோல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இந்த மதுப் பிரச்னையில் ஒரே அணுகுமுறையைக் கொண்டுள்ளன.
இந்தப் பிரச்னையில் இந்த இரண்டு கட்சிகளுமே சூழ்நிலைக் கைதிகள்தான். அரசு மது விற்பனையை நிறுத்தியவுடன் கள்ளச் சாராயத்தை காய்ச்சப்போவது சாதாரண மனிதர்கள் அல்ல. கட்சிக்காரர்கள் தான், இதைச் செய்ய முனைவார்கள். அப்படி அவர்கள் முனையும் போது அரசும், காவல்துறையும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கும்போது, கட்சிக்காரர்கள் கட்சிகளை விட்டு வெளியேற ஆரம்பிப்பார்கள். இந்தச் சூழல் ஆளும் கட்சியையும், பிரதான எதிர்க்கட்சியையும் பெருமளவில் பாதிக்கும்.
இன்று இதற்குப் பிரதானமான தீர்வு, அனைத்துக் கட்சிகளையும் கூட்டவேண்டும், விவாதிக்க வேண்டும், மதுவுக்கு எதிராக இந்தக் கட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய இயக்கத்தை நடத்த வேண்டும், அந்த நேரத்தில் மதுவுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது மது ஒழிக்கப்பட்டு விடும்; பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் நலம் காக்கப்படும்; எதிர்காலச் சந்ததியினர் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.


க.பழனித்துரை
(கட்டுரையாளர்: தலைவர், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக நிர்வாகவியல் துறை).

மீண்டும் வெண்மைப் புரட்சிக்கு வித்திடுவோம்!

மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் மிகவும் அத்தியாவசியப் பொருள்களில் முக்கியமாக இருப்பது பத்திரிகையும் (செய்தித்தாள்), பாலும்.
பால்காரர் அல்லது பத்திரிகை போடும் பையன் இவர்களில் யாராவது ஒருவர் நம்வீட்டுக்கு வராமல் ஒருநாள் "ஆப்சென்ட்' ஆனால் அன்றைய தினம்... வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
எனவேதான், மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம், மறியலின்போது கூட பால், பத்திரிகை வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
கிராமங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது பால் உற்பத்தி. அவர்கள் வீட்டில் ஓரிரு மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துகின்றனர். மழையாலும், வறட்சியாலும், விளைபொருள்களுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் விவசாயம் பொய்த்துப் போகும்போது அவர்களுக்கு கைகொடுப்பது அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம்தான்.
உலகில் உள்ள மொத்தக் கால்நடைகளில் 15 சதவீதம் இந்தியாவில் உள்ளன. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தாலும் உயர்ரக கறவை மாடுகள் வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
சமன்படுத்தப்பட்டது, கலோரி அதிகம் உள்ளது என பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் தற்போது லிட்டருக்கு ரூ. 20, ரூ. 22 வரை விற்கப்படுகிறது.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு உயர்த்திய பால் விலை உயர்வு, இன்று வரை கிராமங்களில் அமலாக்கப்படவில்லை. சில பகுதிகளில் ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 10, 11க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
கிராமங்களில் 11 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் பால், நகரங்களில் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பால் விலையை அரசு உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களைவிட, விற்பனையாளர்களுக்கே அதிகமாக பயன்கொடுத்துள்ளது.
தேசிய அளவில் குஜராத்தை அடுத்து தமிழகத்தில் நாள்தோறும் 47 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மொத்த பால் கொள்முதலில் ஆவின் நிறுவனம் 47 சதவீதமும், தனியார் நிறுவனங்கள் 53 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு அரசு சார்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து நகர்ப் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
பருவ காலங்களிலும், விற்பனை இலக்கைவிட பால் கொள்முதல் அளவு அதிகரிக்கும்போதும் குறிப்பிட்ட அளவு பால் பவுடராக மாற்றப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமும் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பணம் பட்டுவாடா செய்துவந்தது. மேலும், ஒவ்வொரு சங்கத்துக்கும் தனித்தனியாக குறிப்பிட்ட அளவு லாபத் தொகை வங்கிகளில் இருப்பு இருந்தது. ஆனால், இந்த கூட்டுறவு சங்கங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் "கைவைத்ததால்' பெரும்பாலான பால் உற்பத்தியாளர் சங்கங்களும் முடங்கி செயல்படமுடியாத அளவுக்குச் சென்றன. இதனால், கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல் தனியார் பால் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் காட்டினர்.
கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் அதே விலை, தேவையான நேரத்தில் முன் பணம், மற்றும் பிற சலுகைகளையும் தனியார் பால் நிறுவனங்கள் வாரி வழங்கியதால் பால் கொள்முதலில் குறுகிய காலத்தில் தனியார் பால் நிறுவனங்கள் வெற்றிபெற்றன.
சில இடங்களில் பால் கெட்டுப்போகாமல் இருக்க உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை பாலில் கலப்படம் செய்து சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இதைத் தடுக்கவும், ஆவின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழகம் முழுவதும் தனியார் பால் விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தி கலப்படப் பாலை பறிமுதல் செய்து அழித்தனர்.
வெளிநாடுகளில் விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு பராமரிப்பிற்காக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உயர் ரக மாடுகள் வளர்ப்பது அபூர்வமாக உள்ளது. இரண்டு முதல் அதிகபட்சம் 4 லிட்டர் வரை பால் கொடுக்கும் மாடுகளைத்தான் வளர்க்கின்றனர். இதனால், தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவற்றைக் கணக்கிடும்போது விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது அரிதாக உள்ளது.
எனவே, அதிக அளவில் பால் சுரக்கும் உயர் ரக மாடுகளை விவசாயிகளுக்கு வழங்கி, புதிய தொழில்நுட்பங்களையும், ஆலோசனைகளையும் அரசு வழங்கினால், தமிழகத்தை அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மாற்றமுடியும்.
இதன் மூலம் மற்றொரு வெண்மைப் புரட்சிக்கு வித்திட வேண்டும்.
சி.வேழவேந்தன்
நன்றி : தினமணி