Friday, August 15, 2008

காந்திக்காக ஏங்கும் உலகு

"மகாத்மா காந்தி' என்றும், "தேசப்பிதா' என்றும் இன்றளவும் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அண்ணல் காந்தியடிகள். ஆனால் அவரோ, தான் அவ்வாறு அழைக்கப்படுவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கவே விரும்பினார். சென்ற இடமெல்லாம் இடைவிடாத மக்களின் ஏகோபித்த இக்கோஷங்களிடையே அவர் நினைத்தது நடைபெறாமல் போனது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் தரிசனத்திற்குச் சென்ற காந்தி, மக்கள் கூட்டம் "மகாத்மா காந்திக்கு ஜே' என்று கோஷமிட்டபோதும் மிகவும் எரிச்சலடைந்தார். "கோயிலுக்குள் மகாத்மாவை (விஸ்வநாதர்) தரிசனம் செய்ய இங்கு வந்தால் இங்குள்ள மகாத்மாக்களின் (தன்னை மகாத்மா என்று கோஷமிடும் மக்கள்) தொல்லை தாங்க முடியவில்லையே. நீங்கள் மகாத்மா என்று கோஷமிடுவதை முதலில் நிறுத்துங்கள். கோயிலை இவ்வளவு அசுத்தமாக வைத்திருக்கிறீர்களே. வெளிநாட்டினர் இக்கோயிலைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக நம்மை நினைப்பார்கள்' என்று கோபமாகப் பேசினார் காந்தி.
அண்ணல் காந்தியடிகளை, மகாத்மா காந்தி என்று அழைக்கும்போது அவரது சிறந்த அரசியல் மேதமை, மனித நேயப் பண்புகள் சார்ந்த ஆளுமை குறைத்து மதிப்பிடப்படுவதாகவே யோகேஷ் சதா போன்ற வரலாற்று அறிஞர்கள் உணர்கிறார்கள். ஏனெனில் ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா என்ற பதங்களுக்கு விளக்கவுரை ஆற்றிய ஆன்மிகவாதியல்ல காந்தி. மிகச் சாதாரண மனிதராகத் தன்னை ஏற்றுக்கொள்ளும் சுபாவமே காந்தியிடம் கடைசி வரையிலும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் தன்னை ஓர் அற்ப ஆத்மாவாக என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சாதாரண மனிதராகவே தன்னை நினைத்து வந்தார்.
1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு ஜவாஹர்லால் நேரு தலைமை வகித்தார். உடனடியாக சுதந்திரப் பிரகடனத்தை அறிவியுங்கள் என்று எங்கும் குரல் ஒலித்தபோது என்ன செய்வதென்று தெரியவில்லை. முழுச் சுதந்திரம் எனும் அர்த்தம் பொதிந்த சுயராஜ் (நஜ்ஹழ்ஹத்) தீர்மானத்தை மிக அவசரமாக காந்தி கொண்டு வந்தார். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். சுயராஜ் பற்றி விளக்கம் கேட்டபோது தாகூரிடம் "என்னைச் சுற்றி இருட்டு பரவியுள்ளது. ஏதேனும் ஒரு ஒளி கூட எனக்குத் தோன்றவில்லை, என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை' என்று ஒரு சாதாரண மனிதரைப் போல் தனது இயலாமையை வெளிப்படுத்துகிறார் காந்தி. ஒரு தீர்க்கதரிசியைப் போன்றோ, எல்லாம் முற்றுணர்ந்த மகாத்மா போன்றோ அவர் என்றும் தன்னைக் காண்பித்துக் கொள்ளவில்லை.
காந்தியடிகளை தேசப்பிதா என்று அழைக்கும்போதும் மறுபடியும் இதுபோன்ற கேள்விகள்தான் மேலோங்கி வருகிறது. ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு காந்தி ஒரு மிகப் பெரிய காரணமாக இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து அவர் இந்தியாவிற்கு வருவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வரலாற்று அரசியல் தீவிர தன்மையோடு நடைபெறத்தான் செய்தது. இருப்பினும் தலைவர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்ட இந்திய விடுதலை உணர்வை மக்களுக்கு எடுத்துச் சென்ற மாமனிதராக காந்தி ஒருவரே இருந்தார். காந்தியை தேசப்பிதா என்று அழைக்கும்போதும், இந்தியா என்ற குறுகிய சிமிழுக்குள் காந்தியை அடைக்கும் முயற்சியாகவே பொருத்தமற்ற ஒன்றாக இருக்கிறது என்று இன்றைய வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியும், தலைசிறந்த மனிதப் பண்பும், உலக அநீதியை எதிர்க்கும் குரலாகவும் உள்ள காந்தியின் ஆளுமை இவ்விதமான அடைமொழி வார்த்தைகளால் நீர்த்துப் போவதும், சில நேரங்களில் அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், இன்றைய வன்முறை சார்ந்த உலக அரசியல் சூழலில், நீதி சார்ந்த ஒரு தலைவனுக்காக ஏங்கும் உலக மக்களுக்கான ஒரு குறியீடாகத் திகழ்கிறார் காந்தி.
அன்றைய தேசியத் தலைவர்களையும், மக்களையும் ஒரு சேர நேசித்தது, அவர்களுடன் பழகியது, தமக்கு எதிரான கருத்துகளுடைய அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தது போன்ற சமூக நட்புறவுப் பண்புகள் காந்தி ஒருவரிடமே குவிந்திருந்தன. ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், முகம்மது அலி ஜின்னா, அம்பேத்கர், மவுன்ட்பேட்டன் பிரபு, இர்வின் போன்ற வைஸ்ராய்கள் போன்ற பல எதிரெதிரான கொள்கைகள் உடைய தலைவர்களிடம் நல்லுறவு வைத்துக் கொள்ளும் சமூகப் பண்பு காந்தி ஒருவரிடமே இருந்தது. பால்ய காலத்திலும், தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும் மற்றவரோடு பழகுவதில் மிகக் கூச்ச சுபாவம் உடையவராகவே காந்தி திகழ்ந்தார். பிற்காலங்களில்தான் தனக்கு எதிரான கருத்து உடையவர்களோடும், ஏன் முப்பது கோடி மக்களால் கவரப்படக்கூடிய அளவிற்கு சமூக நட்புணர்வுப் பண்புகளைப் பெற்றிருந்தார் காந்தி. டேனியல் கோல்மேன் போன்ற நவீன நிர்வாகவியல் அறிஞர்கள் வலியுறுத்தி வரும் இந்த சமூக நட்புணர்வுப் பண்புகளை காந்தி அக்காலத்தே பெற்றிருந்தது இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த எளிய மனிதரிடம் முப்பது கோடி மக்களைத் தன் பக்கம் இழுத்த அரிய சக்தி எப்படி வந்தது என்றெல்லாம் உலகம் வியக்கும் அளவிற்கு அதிசயமான மனிதராகவே இன்றும் தோன்றுகிறார் காந்தி. வாலிபத்தில் சிறைக்குச் சென்று வயோதிகராக வெளிவந்த, "சிறையிலும் வாடாத கறுப்பு மலர்' என்று அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா சிறையிலிருந்தபோது தினம்தினம் அண்ணல் காந்தியையே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.
தென்னாப்பிரிக்காவில் மைக்கேல் கோட்ஸ் என்ற பாதிரியார் காந்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற நினைத்தபோதும், அவர் கழுத்தில் அணிந்துள்ள துளசி மாலையை உடைக்க முயன்ற போதும் கோபம் கொள்ளவில்லை காந்தி. மாறாக எனது அன்னை அளித்த புனிதமான அன்பளிப்பு இது; கிறிஸ்தவத்தை எப்போதும் மதிக்கின்ற நான் ஓர் இந்துவாகவே இருக்க விரும்புகிறேன் என்று அன்போடு மறுத்தார்.
சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் பிரிந்த பிறகு, காந்தியை தீர்த்துக் கட்டும் அபாயம் இருப்பதால் காந்திக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வல்லபபாய் பட்டேல் அவரிடம் வேண்டிக்கொண்ட போதும் காந்தி பிடிவாதமாக அதை மறுத்துவிட்டார். "எனது பிரார்த்தனைக் கூட்டத்தில் வருபவரைச் சோதனை இடுவதைப் போன்ற அநாகரிகம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. எனது உயிருக்கு அளிக்கும் பாதுகாப்பை, சாதாரண மனிதருக்கு உங்களால் அளிக்க முடியுமா? என் உயிரை உங்களால் பாதுகாக்க முடியாது. கடவுள் ஒருவர் மட்டும் தான் அதைப் பாதுகாக்க முடியும் என்று படேலிடம் கோபமாகப் பேசினார் காந்தி.
தன் கடைசி நாளில் தன்னைப் பார்க்க வந்த வல்லபாய் பட்டேலிடம் "லண்டனிலிருந்து வெளிவந்த டைம்ஸ் இதழைக் காண்பித்து உங்களுக்கும் நேருவுக்கும் உள்ள கருத்து வேற்றுமை லண்டன் வரை சென்றுள்ளதைப் பாருங்கள். உங்கள் கருத்து வேற்றுமை நாட்டின் அழிவிற்குத்தான் வழிவகுக்கும். இருவரில் ஒருவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். அதை யார் என்று பிறகு சொல்கிறேன் என்றார் காந்தி. மாலை 5 மணி. கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடங்கள் காலதாமதமாகவே சென்றார். பொதுமக்களைப் பார்த்து அவர்களைக் காக்க வைத்த குற்ற உணர்வோடு "நமஸ்கார்' என்று இரு கரங்களாலும் மக்களை வணங்கினார் காந்தி. சிறிது நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காக்கி உடை அணிந்த கோட்சே எனும் வாலிபன் ஒருவன் கூட்டத்தை விலக்கி விட்டு வேகமாக காந்தி முன் வந்து நின்றான். அவரை இருகரம் கூப்பி வணங்கினான். அடுத்த நொடியே, மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான். காந்தியின் கும்பிட்ட கரங்கள் தற்போது அவிழ்ந்து விழுந்தன. ஹே ராம் என்று காந்தியின் உதடுகள் முணுமுணுத்தன. ரோஜாப் பூ போன்ற மென்மையான காந்தியின் உடல் தரையில் விழுந்தது. இன்றும் காந்திக்காக ஏங்கி நிற்கிறது இந்த உலகு.

தேனுகா

நன்றி : தினமணி

தேசியக் கொடிக்கு வீர வணக்கம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பரப்பளவில் 7வது பெரிய நாடாகவும் விளங்கும் இந்தியாவின் கடந்தகால வரலாறுகளை இக்கால இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய மகான்களும், ரிஷிகளும் பிறந்த இந்த புண்ணிய பூமியை, இன்றைய அரசியல்வாதிகள் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக் கூறுபோடப் பார்க்கின்றனர்.
இளைஞர்களே! நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள்! ஊழல் களமாக மக்களவை மாறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பணம் கட்டுக்கட்டாய் பறக்கிறது.
ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்றோம்! இன்றோ அழுக்கு நிறைந்த அரசியல்வாதிகளே வெளியேறி விடுங்கள் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
நமது நாட்டைக் காக்க எத்தனை பேர் எப்படி எல்லாம் போராடி மறைந்தார்கள். அரசுப் பதவியில் இருந்த ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் ஆட்சி செய்தார்கள் என்பதை சுதந்திர தின நாளன்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்! நாகரிகத் திருடர்களாக வலம் வரும் அரசியல்வாதிகளும் தெரிந்து கொள்ளட்டும். ஒவ்வொரு கசையடிக்கும் மகாத்மா காந்தி வாழ்க என்று மகிழ்ச்சியோடு உரக்கக் கத்திய இளைஞன் யதீந்திர தாஸ்; கிரிமினல் குற்றவாளியைப் போல் என்னைத் தூக்கில் தொங்கவிட்டு விடாதீர்கள்; துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுங்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சினான் பகத்சிங்.
எனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடாதீர்கள். என்னைப் போல் பலபேர் உருவாக என்னைத் தூக்கில் போடுவதுதான் நல்லது என்ற இளைஞனின் பெயர் சந்திரசேகர ஆசாத்.
எத்தனை முறை அடித்தாலும் என் கையில் இருக்கும் என் நாட்டின் கொடியை மட்டும் விட்டுவிட மாட்டேன் என அடிக்க அடிக்க கையில் கொடியுடன் மண்ணில் சாய்ந்த இளைஞன் திருப்பூர் குமரன்.
நம் தாய்நாட்டுக்காக மரணத்தை மகிழ்ச்சியோடு முத்தமிட்ட இந்த முத்துகள் அத்தனையும் 25 வயது கூட நிரம்பாத சின்னஞ்சிறு பிஞ்சுகள்.
ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் ஆங்கில ஆதிக்கத்தை சாடிவிட்டு எல்லோரையும் போல் மேடையை விட்டு இறங்காமல் அந்த மேடையிலேயே நம் நாட்டின் தேசியக் கொடியைப் பறக்க விட்டவர் மும்பையைச் சேர்ந்த மேடம் காமா என்ற பெண்மணி. அந்தக் கொடியில் காவி, சிவப்பு, பச்சை வண்ணங்கள் இருந்தன. அப்போது இந்தியாவின் 8 மாகாணங்களைக் குறிக்கும் வகையில் 8 தாமரை மலர்களும் வந்தே மாதரம் என்ற வாசகமும், கொடியின் ஒரு புறத்தில் பிறையும் மறுபுறத்தில் உதயசூரியனும் இடம்பெற்றிருந்தன.
மேடம் காமாவின் கணவர் இந்திய விடுதலையில் ஆர்வம் இல்லாதவராக இருந்ததால் அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த மேடம் காமா தான், நம் நாட்டின் தேசியக் கொடியை (1907) முதன் முதலில் பறக்க விட்ட முதல் பெண்மணி.
பாரதத் தாய் சிலை அமைக்க முடிவு செய்த போது சிலை ஏழ்மையாக இருக்க வேண்டுமா அல்லது ஆபரணங்களுடன் இருக்கட்டுமா என்று சிற்பி கேட்டார் மகாகவி பாரதியிடம்.
போதுமான வளங்களும், நிறைவான செல்வங்களும் என் பாரதத் தாய்க்கு இருப்பதால் ஆபரணங்களுடன் இருக்கட்டும் என்றாராம் பாரதி.
என் தாயை எப்படி ஏழ்மையாக இருக்கட்டுமா என்று கேட்டீர்கள் என்று சிற்பியிடம் கோபமாகத் திருப்பிக் கேட்டாராம் அவர். பெற்ற தாயைவிட பிறந்த மண்ணை பாரதி உயிராக நேசிப்பதை அறிந்த சிற்பி வியந்து போனாராம். பாரதியின் வேண்டுகோளின்படி பாரதத்தாய் பூரண ஆபரணங்களுடன் வடிவமைக்கப்பட்டாள்.
வாக்களித்த மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு அமைச்சர்கள் காரில் சென்றது அந்தக் காலம். வாக்களித்தவர்கள் பெருமைப் பட வேண்டும் என்பதற்காகவே 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க அமைச்சர்கள் செல்வது இந்தக் காலம்.
அரசு தனக்கு அனுப்புகிற சம்பளத்தில் ரூ. 25 மிச்சமாகிறது. இனி சம்பளம் அனுப்பும் போது ரூ. 25ஐ எடுத்துக் கொண்டு மிச்சத்தை அனுப்பினால் போதும் என்று கடிதம் எழுதியவர் நம் நாட்டின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி.
மகள் தேர்வில் தோற்று விட்டாள். மறு மதிப்பீடு செய்ய தந்தையிடம் கேட்டபோது, வேண்டாம் என்று மீண்டும் தேர்வு எழுதச் சொல்லி விட்டார்.
மறுமதிப்பீட்டில் நீ வெற்றி பெற்றதாக அறிவித்தால் நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிட்டேன் என்பார்கள் என்றார். மனம் வெறுத்த மகளோ தற்கொலை செய்து கொண்டார். இப்படிச் சொன்னவர் நம் நாட்டின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்.
ஆசிரியர் ஒருவர் காமராஜை பார்த்து அவருக்கு மாலை அணிவித்தார். என்னய்யா இது! படிக்காதவர்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய நீங்கள், படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே என்றாராம்.
மரியாதை செய்ய வந்த ஆசிரியர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதாம். 5 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 4 முறை எம்.பி.யாகவும், 9 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த படிக்காத மேதை காமராஜ்.
அரசு மருத்துவமனையில் உடல் நலம் குன்றி உயிரிழந்த பின்பே அவர் காமராஜ் ஆட்சிக் காலத்தில் காவல்துறை மந்திரியாக இருந்தவர் என்பது தெரியும். அவர் தான் கக்கன்.
விமான நிலையத்தில் காத்திருந்த தொழில் அதிபரின் காரில் ஏற மறுத்து வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்த முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். பாரதிக்கு நினைவு மண்டபம் கட்ட தன்னிடம் கடைசியாக இருந்த 50 ரூபாயையும் மகிழ்ச்சியாகக் கொடுத்த மற்றொரு முதல்வர் குமாரசாமிராஜா. இந்த மாமனிதர்கள், தடம் பார்த்து நடக்கவில்லை. தடம் பதித்து நடந்தார்கள்.
அரசுப் பணி செய்ய ஒரு விளக்கையும், சொந்தப் பணி செய்ய ஒரு விளக்கையும் பயன்படுத்தியது அந்தக் கால அரசியல்வாதிகள். அரசுப்பணி செய்ய ஒரு பேனாவும், சொந்த விஷயங்களை எழுத ஒரு பேனாவும் வைத்திருந்தார்கள் அன்றைய அரசியல்வாதிகள். ஆனால் இன்றோ அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்லும் போது தன் மகனையும் அழைத்துச் செல்கிறார் ஒருவர்.
நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்காத அரசியல்வாதிகளைப் பார்ப்பது இன்று அரிதாக இருக்கிறது.
கத்தரிக்காய், வெண்டைக்காய் வாங்கும்போதுகூட பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனிமேலாவது மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருப்போம் என்று இன்று உறுதி எடுத்துக் கொண்டு நம் நாட்டின் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
தேசத்தின் வாழ்வுக்கும், மேன்மைக்கும் சிறந்த பாலமாக இருந்து சுதந்திர வானில் சிறகடித்துப் பறப்போம், வாருங்கள்!
எஸ். ஜோதிதாசன்
நன்றி : தினமணி