Tuesday, August 19, 2008

ஓட்டு நன்மையைக் கருதாமல்...

இமயம் தொட்டு குமரி வரை இது ஒரேநாடு. இதை ஒரேநாடாக இன்றுவரை கட்டி காத்து வரும் பல அம்சங்களில் ஒன்று யாத்திரை. தனது வாழ்நாளில் ஒரு முறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என தினமும் பைசா பைசாவாகச் சேர்த்து ஓர் ஏழை விவசாயி வடக்கேயிருந்து புறப்பட்டு பக்தியுடன் யாத்திரை வருகிறான்.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்துக்கு என்ன சிறப்பு என வினவினால் நீங்கள் வேறு எதையோ சொல்வீர்கள். ஆனால் சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது தமிழகத்திலேயே கயிலாய யாத்திரை சென்றவர்கள் அதிகமுள்ள மாவட்டம் ஈரோடு என! தெற்கிலிருந்து வடக்கேயும் வடக்கிலிருந்து தெற்கேயும் ஓடக்கூடிய இந்த பக்தி ஓட்டம்தான் பாரதத்தாயின் ரத்த ஓட்டம்.
தென்பகுதியில் சபரிமலைக்கும், பழனிமலைக்கும் யாத்திரை போகிறார்கள். மேல்மருவத்தூருக்கும் யாத்திரை நடக்கின்றது. ஹிந்துக்களது வழிபாட்டினைப் பின்பற்றி வேளாங்கண்ணி யாத்திரையும் அவர்கள் துவக்கியிருக்கிறார்கள்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். ஆள்பவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாத(?) கம்யூனிஸ்டுகளாகவே இருந்தாலும் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து தர வேண்டியது அரசின் கடமை.
ஆனால் மதசார்பற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற யாத்திரைக்கு வருபவர்களிடம் நுழைவு வரி, வாகன வரி, யாத்ரீகர் வரி என பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக உள்ளார்கள்.
இது தவிர தமிழகக் கோயிலில் விசேஷக் கட்டணங்கள் வேறு. ஆனால் அதற்குத் தக பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படவில்லை.
ஹிந்துக்கள் யாத்திரை செல்லும்போது வரி வசூலிப்பவர்கள் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குகிறார்களே என ஹிந்துக்கள் ஏற்கெனவே கோபத்தில் உள்ளார்கள்.
மதசார்பற்றவாதிகளது தாஜா செய்யும் போக்கு தாஜா செய்யப்படும் மதத்துக்கு எதிரான உணர்வை ஹிந்துக்களிடம் உண்டாக்கி விடுகிறது.
இதில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் அமர்நாத் சம்பவம். எங்கெல்லாம் லட்சக்கணக்கில் கூட்டம் கூடுகிறதோ அந்த பக்தி கேந்திரங்களின் மதிப்பைக் குறைக்க சில முயற்சிகள் திட்டமிட்டு நடைபெற்றன.
""சபரிமலை ஐயப்பன் சந்நதி தீட்டுபட்டு களங்கமாகிவிட்டது'' என ஒரு பிரசாரம்.
திருப்பதி மலை அருகிலேயே அரசின் ஆதரவுடன் கிறிஸ்தவ மதப் பிரசாரம். ""அமர்நாத் பனிலிங்கம் என்பது ஒரு மோசடி'' என ஒரு பிரசாரம். ஆனால் இந்தப் பிரசாரங்கள் எடுபடவில்லை.
அமர்நாத் பனிபடர்ந்த பகுதியில் உள்ளது. ஆண்டின் எல்லா நாள்களும் அங்கு செல்ல முடியாது. குறிப்பிட்ட இரண்டு மாதங்கள் மட்டுமே பனிலிங்கத்தை தரிசனம் செய்ய இயலும்.
இயற்கையின் இந்த கடும் குளிரைத் தாங்க இயலாமல் பலர் இறந்துபடுகிறார்கள். ஆனாலும் யாத்திரை வருபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.
பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பலர் மடிந்தார்கள். ஆனாலும் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்தது.
1996ல் நடைபெற்ற விபத்தின் காரணமாக 250 யாத்ரீகர்கள் இறந்துபட்டார்கள். இது குறித்து விசாரித்த சென்குப்தா குழு தனது அறிக்கையில் யாத்ரீகர்கள் தாற்காலிகமாகத் தங்குவதற்காக ஸ்திரமான கட்டடங்கள் தேவையென்றும், வைஷ்ணவதேவி ஆலயத்துக்காக உள்ளது போல ஒரு வாரியம் அமர்நாத்துக்கும் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. அந்த அமர்நாத் புனிதத்தலக் குழுவுக்கு ஆளுநரே தலைவராக இருப்பார் என்றும் பரிந்துரை செய்தது.
லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சின்ஹா ஆளுநராக இருந்தபோது 2003ம் ஆண்டே யாத்ரீகர்கள் தங்குவதற்கான தாற்காலிகக் குடியிருப்புகளைக் கட்டவும், தேவை முடிந்ததும் கட்டுமானப் பொருள்களைக் கழட்டி அகற்றுகின்ற வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமென வற்புறுத்தினார்.
எண்ணிக்கை அதிகமாக வருவதால் யாத்திரை காலத்தை 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்றும் ஆளுநர் பரிந்துரைத்தார். இதற்கு முதலமைச்சர் முப்தி முகமது சையத் 6 மாதத்துக்கு எந்த பதிலும் தரவில்லை.
இதற்கிடையே துணை முதலமைச்சர் மங்கத் ராம் சர்மா யாத்திரையின் காலம் 2 மாதங்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார்.
முதலமைச்சர் நிருபர் கூட்டத்தைக் கூட்டி அமர்நாத் யாத்திரை ஒரு மாதம்தான் என மறுத்து அறிவித்தார். மோதல் தொடங்கியது. இந்த விஷயத்திற்காக காங்கிரஸ் கட்சியின் 4 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தார்கள்.
முப்தி முகமது இந்த விஷயத்தை ஸ்ரீநகர் உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் நீதிமன்றமோ அமர்நாத் யாத்திரை குறித்த எல்லா விஷயங்களையும் முடிவு செய்யும் அதிகாரம் அமர்நாத் புனிதத்தல வாரியத்துக்குத்தான் உள்ளது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து முப்தி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.
2008 மே மாதம் உச்ச நீதிமன்றம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் தாற்காலிகக் குடியிருப்புகள் அமைக்க ஆணையிட்டுவிட்டது.
அதன் அடிப்படையில் அமைச்சரவை கூடி வனத்துறையின் 100 ஏக்கர் நிலத்தை வழங்க ஏகமனதாக பிடிபி உள்பட முடிவு செய்தது.
அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து தர அமர்நாத் புனிதத்தல வாரியம் ஒன்றினை அரசு அமைத்துள்ளது. அது அரசு நியமித்த வாரியம். அதன் உறுப்பினர்களையும் அரசே நியமிக்கின்றது. ஆளுநர் அதன் தலைவர்.
அந்த வாரியம் மாநில அரசுக்கு வாடகை முன்பணமாக ரூ. 2 கோடியே 31 லட்சம் செலுத்தியுள்ளது. அதன் பிறகே நிலத்தை ஒதுக்கித் தரச் சம்மதித்தது. எத்தனை நாள்களுக்கு? 2 மாதங்களுக்கு மட்டும். பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. வெறும் குத்தகைதான். நிலஉடமை வனத்துறையின் பொறுப்பிலேயே இருக்கும்.
எவருக்கும் தொந்தரவு இல்லாத வனப்பகுதியில் வெறும் 2 மாதங்களுக்குத் தாற்காலிகக் குடியிருப்புகளும், தாற்காலிகக் கழிவறைகளும் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கித் தந்தமைக்குத்தான் இந்த எதிர்ப்பு. மதவெறியர்களின் இந்த எதிர்ப்புக்கு "மதசார்பற்றவாதிகள்' கண்டனம் தெரிவிக்கவில்லை.
மதவெறியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பகிரங்கமாக இந்திய எதிர்ப்பு கோஷங்கள் முழங்கப்பட்டன.
இது நிலம் குறித்த பிரச்னை என என்னமாய் முகம் சிவந்து கோபப்படுகிறார் உமர் அப்துல்லா! 2 மாதம் நிலம் பயன்படுத்தியதால் என்ன நிலம் பறி போயிற்று?
இமயம் முதல் குமரி வரை உள்ள ஒவ்வொரு துளி மண்ணும் இந்தியனுக்குச் சொந்தம். உமர் அப்துல்லா பழையபடி பிரிவினை முழக்கம் துவக்கினால் நாமும் கோஹினூர் பங்களாவைத் தயார்ப்படுத்த வேண்டி வரும்.
தாற்காலிக ஹிந்து யாத்ரீகர்கள் வருவதால் மதரீதியான ஜனத்தொகை விகிதம் மாறிவிடும் என்றும் அவர்கள் பேசுகிறார்கள்.
சொந்த மண்ணிலிருந்து காஷ்மீரத்து பண்டிதர்களை அடித்து விரட்டி அதனால் லட்சக்கணக்கான காஷ்மீரத்து பண்டிதர்கள் காஷ்மீருக்கு வெளியே சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மதரீதியான ஜனத்தொகை மாற்றம் குறித்து பேசவே யோக்யதை அற்றவர்கள்.
இது ஏதோ காஷ்மீரத்து மக்கள் பிரச்னை அல்ல; அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் தமிழர்களும்கூட. அதுமாத்திரமல்ல. நியாயமான ஒரு கோரிக்கைக்காக ஜம்மு மக்கள் போரிடும்போது தென்கோடியில் உள்ள நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் எனக் காட்ட வேண்டாமா?
தேர்தல் நெருங்கி வருவதால் முஸ்லிம்கள் ஓட்டுகளைப் பெற பிடிபி துடிக்கிறது. ஹிந்துக்கள் தரப்பு வாதத்தை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பேசி வருகிறது.
காங்கிரசுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதனால் தெளிவில்லாமல், குழம்பிப் போய் உள்ளது. ஓட்டு நன்மை கருதாமல் நாட்டு நன்மை கருதிச் செயல்பட வேண்டிய விஷயம் இது.
இல. கணேசன்

நன்றி :தினமணி

கச்சத் தீவு தீர்வல்ல...

கடந்த வாரம் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இப்படி தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் புதியதல்ல. 1974 ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுமுதல் இந்தத் தாக்குதல்கள் முதலில் எப்போதாவது என்று தொடங்கி, சமீபகாலங்களில் வாராவாரம் என்று தொடர்கிறது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து வருகின்றன. தூத்துக்குடி துறைமுகமும், அனல் மின்நிலையமும் ஏற்பட்ட பிறகு, அந்தப் பகுதி மீனவர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர். முத்தெடுத்த காலம்போய், சிப்பிகூடக் கிடைக்காத அளவுக்குக் கடல்வளம் குன்றிவிட்டது.
தூத்துக்குடி அருகில் இருக்கும் முயல் தீவு ஒருகாலத்தில் மீன்களும், இறால்களும், நண்டுகளும் பெருத்துக் கிடந்த பகுதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு முயல் தீவைச் சுற்றி வலை விரித்தால் லாப்ஸ்டர்களும், சாளைகளும், பெளர்ணமி நண்டுகளும், கொள்ளை கொள்ளையாக அகப்படும் நிலைமை இருந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சிங்கரால் அந்தப் பகுதி மீனவர்களை செழிப்புடன் வைத்திருந்த காலமொன்று உண்டு.
தூத்துக்குடி அனல் மின்நிலையம் வந்ததன் விளைவாக, சாம்பல் கழிவுகள் தண்ணீரில் கரைத்து விடப்பட்டன. முயல்தீவுவரை நீண்டு கிடக்கும் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து சாம்பல் கழிவுகள் கடலில் கரைக்கப்பட்டு அவை கடற்பாறைகள்போல உறைந்து கிடக்கின்றன. விளைவு? சாம்பல் கழிவில் காணப்படும் ரசாயனப் பொருள்களால் மீன்கள் இனப்பெருக்கமற்று அழிந்து போய்விட்டன.
சேது சமுத்திரத் திட்டத்தின் விளைவாக, விரைவிலேயே ராமேஸ்வரம் மீனவர்களும் பாதிக்கப்படப் போவது நிச்சயம். ஆஸ்திரேலியாவிலும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் மட்டுமே காணப்படும் பவளப்பாறைகளின் வரைபடத்திலிருந்து விரைவிலேயே ராமேஸ்வரம் அகற்றப்பட்டுவிடும். பவளப்பாறைகள் போனால் அதன் காரணமாக மீன் உற்பத்தியும் குறைந்துவிடும்.
தூத்துக்குடிப் பகுதி மீனவர்களின் நிலைமைதான் சேது சமுத்திரத் திட்டத்துக்குப் பிறகு ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கும் ஏற்படப் போகிறது. துறைமுகத்தாலும், அனல் மின்நிலையத்தாலும், சேது சமுத்திரத் திட்டத்தாலும் பாதிக்கப்படுவது மீனவர்கள் வாழ்வாதாரம். கடலை மட்டுமே நம்பி, மீன்பிடிப்பது மட்டுமே தெரிந்த ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான?) மீனவர்கள் செய்யத் தொழிலின்றி அழியும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
பிரிட்டிஷ் இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு பகுதியாக இருந்ததுதான் கச்சத் தீவு. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இங்கே மீன்பிடிப்பதற்கான சகல உரிமைகளையும் பெற்றிருந்தனர். இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து வலைகளை உலர்த்தி சகோதரர்களாக இருந்த காலமொன்று உண்டு. அதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது.
தமிழக மீனவர்களைப் பொருத்தவரை அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டியாக வேண்டியுள்ளது. இந்திய எல்லைக்குள் மீன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இந்த நிலையில் நடுக்கடலில் இந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், எல்லை கடந்து வருகிறார்கள் என்பதும் என்ன நியாயம்?
தமிழக மீனவர்களைத் தாக்குவது நாங்களல்ல, விடுதலைப் புலிகள் என்கிற சிங்கள அரசின் விளக்கத்தில் உண்மையில்லை. பிறகு ஏன் பல தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? விடுதலைப் புலிகளை அடையாளம் கண்டு அவர்கள் ஆயுதம் கடத்துவதைத் தடுக்க முடியாமல் போனதற்கு, அப்பாவித் தமிழக மீனவர்கள்தானா பலியாக வேண்டும்? தங்களது கையாலாகாத்தனத்துக்கு, வாழ்வாதாரம் தேடி நடுக்கடலில் வலைவிரிக்கும் மீனவர்களையா பலிகடாவாக்குவது?
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடிக்கும் உரிமையைத் தமிழக அரசும், மத்திய அரசும் பெற்றுத்தர வேண்டும். அதற்கு கச்சத் தீவை மீட்பது மட்டுமே விடையாகாது. இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்குப் பொதுவாக்கப்பட வேண்டும். அதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!
நன்றி : தினமணி

அழிவின் அடையாளங்கள்!

புவி வெப்பமயமாதலின் விளைவை அனுபவிக்க உலகம் இன்னும் 100, 200 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை போலிருக்கிறது. நிகழ்காலத்திலேயே அதன் பலாபலன்கள் தெரியத் தொடங்கிவிட்டன.
மழை பொய்ப்பது, காலம்தவறிக் கொட்டித் தீர்ப்பது... இவை அனைத்துமே புவி வெப்பமயமாதலின் எதிரொலிதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தியாவின் விவசாயத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூனில் தொடங்கி 4 மாதங்கள் இந்தப் பருவமழை நீடித்தாலும் ஜூலை மாதத்தில் பெய்யும் மழையே அணைகளின் நீர் இருப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது.
ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாத மழை திருப்திகரமாக இல்லை. அத்துடன் காலம்தவறியும் பெய்தது. இதனால், பல இடங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
"மத்திய நீர் ஆணையம் கண்காணிக்கும் இந்தியா முழுவதிலும் உள்ள அணைகளின் கடந்த 10 ஆண்டுக் கால நீர்இருப்பு சராசரி (ஜூலை மாதத்தில்) 52 சதவீதம். அது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்திருக்கிறது.
தென் இந்தியாவில் உள்ள முக்கியமான 30 அணைகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 78 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, இந்த ஆண்டு அதே மாதம் 46.3 சதவீதமாக குறைந்திருப்பதாக' பத்திரிகைச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பொய்த்து, ஆடி மாதத்தில்கூட அக்னிபோல வெயில் கொளுத்துவதும், அணைப் பகுதியில்கூட மழையே இல்லாததும் கண்கூடு.
பெரிய அணைகள்தான் என்றில்லை... சிறிய குளங்கள், ஏரிகளும் நீரின்றி காய்கின்றன. இந்த நிலைக்கு மனிதர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஒரு பூதாகரமான பிரச்னை. இதில் அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை.
பல இடங்களில் பஸ்நிலையம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவைகூட இப்படி நீர்நிலைகளை அழித்துதான் அமைக்கப்பட்டுள்ளன.
மழைவளத்தை அதிகரிப்பதற்காக மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு அறிவிக்கிறது. இத் திட்டம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் திட்டம் என்றே தோன்றுகிறது. திட்டம் அறிவிக்கப்பட்டு மரக்கன்றுகளும் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் நடப்படுகின்றன.
ஆனால், தொடர்ந்து அந்த மரக்கன்றுகளைப் பராமரிக்கத்தான் யாரும் இல்லை. திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது என்பதும் தெரியவில்லை.
இது ஒருபுறம் என்றால், நதிகள் மாசுபடுத்தப்படுவது மறுபுறம். சாய ஆலைகளின் கழிவு, வீட்டுக் கழிவுகள், ஹோட்டல்களின் மிச்ச மீதிகள் என நதிகளின் மூச்சை நிறுத்தும் செயல்பாடுகள் ஏராளம். இதைத் தடுப்பதற்கான வழிகளை இன்னும் தேடிக்கொண்டே தான் இருக்கிறோம்.
தமிழகத்தின் ஜீவநதி என்றழைக்கப்படும் தாமிரபரணியில் அமலைச்செடிகளின் பெரும் ஆக்கிரமிப்பு. இதனால் பல இடங்களில் ஆறு, வாய்க்கால்போல குறுகிவிட்டது.
ஆற்றில் மணல் எடுக்க ஆர்வம்காட்டும் அரசு, இந்தச் செடிகளை அகற்றி ஆற்றை காக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது வேதனை.
கவுன்சிலர்களுக்கு செல்போன் வழங்குவது குறித்து விவாதிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் மற்றும் விவசாயத்தின் ஆணிவேரான ஆற்றின் நிலை குறித்து கண்டுகொள்வதில்லை.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, அதன்மூலம் நல்ல பலனும் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அத் திட்டம் இப்போது போன இடம் தெரியவில்லை.
அதுமட்டுமன்றி, மழைநீர் மண்ணுக்குள் இறங்காதவாறு தடுக்கும் மற்றொரு செயலும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்துப் பேரூராட்சிகளிலும் தெருக்களில் தார்சாலை, சிமென்ட் சாலை போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகனப் போக்குவரத்து இல்லாத தெருக்களில், அவசியமேயின்றி இப்படி தார்சாலை போடப்படுவதால், மண்ணில் உள்ள ஊற்றுக்கண்கள் அடைபட்டு மழைநீர் உள்ளே இறங்காமல் வீணாக வழிந்தோடிவிடுகிறது.
இதன்விளைவாக நீர்மட்டம் அடியோடு குறைந்து வீட்டுத் தோட்டங்களில் உள்ள கிணறுகளிலும், அடிகுழாய்களிலும் நீர்இருப்பு கணிசமாகக் குறைகிறது.
இத் திட்டத்தில் இப்படி ஓர் எதிர்மறை விளைவு இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இப்படி தெருக்களுக்கு தார்சாலை அமைக்க ஒதுக்கும் நிதியை மற்ற திட்டப் பணிகளுக்கு ஒதுக்கினால் பலன் கிடைக்கலாம்.
நாட்டில் நடக்கும் ஆக்கிரமிப்பு அநியாயங்கள் போதாது என்று, காடுகளிலும் மரங்களை வெட்டி அழிப்பது, வனப் பரப்பை ஆக்கிரமிப்பு செய்வது போன்ற காரணத்தால் வனப்பரப்பு குறுகி, மழைவாய்ப்பு தடுக்கப்படுகிறது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனப் புகை, வனவளம் அழிப்பு உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான மனிதகுலத்தின் மறைமுகப் போர் தீவிரமடைந்துவிட்டது. அதை நிறுத்தி, சுற்றுச்சூழலைப் பேணிக்காத்தால் தான் பெய்யெனப் பெய்யும் மழை!
எஸ். ராஜாராம்

நன்றி :தினமணி

யாருக்கும் லாபமில்லை!

ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது என்று மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவைத் தனது சுதந்திரதின உரையில் பிரதமர் தெரிவித்திருக்கிறார். சம்பள உயர்வை ஜனவரி1, 2006 முதல் அமல்படுத்தி, கடந்த 34 மாதங்கள் அதிகரித்துத் தரப்பட வேண்டிய சம்பளத் தொகை இரண்டு தவணைகளாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
55 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுகிறது என்பது அந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதிலும், இதன் மூலம் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று பிரதமர் நம்புவதிலும் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இதன் தொடர் விளைவுகள் இந்தியப் பொருளாதாரத்தையும், அரசு ஊழியர் அல்லாத 90 சதவிகித மக்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்பது தான் நமது வருத்தம்.
அரசு ஊழியர்களுக்கும் சரி, அதிகரித்த சம்பளம் கிடைக்கிறது என்று அடையப் போகும் சந்தோஷத்தை, அதிகரிக்க இருக்கும் விலைவாசியும், அதிகமாகத் தரப்போகும் வரிகளும் காணாமல் செய்துவிடப் போகின்றன. இந்தச் சம்பள உயர்வினால் மத்திய அரசுக்கு ஏற்படப்போகும் அதிகரித்த நிதிச் சுமை ரூ. 22,131 கோடி. ஆனால், அதில் ஏறத்தாழ 25 சதவிகிதம் வருமான வரியாகவும், 25 சதவிகிதம் மறைமுக வரிகளாகவும் மத்திய அரசுக்குக் கிடைத்துவிடும் என்று நிதியமைச்சகம் கருதுகிறது. அதாவது இந்தக் கையால் தந்து அந்தக் கையால் பறித்துக் கொள்கிறேன் என்கிறார்கள்.
மத்திய அரசின் சம்பள உயர்வால் ஏற்படப்போகும், உடனடி விளைவு, எல்லா மாநிலங்களிலும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கப் போகிறார்கள். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அந்தக் கோரிக்கைகளை ஏற்று மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப் போகின்றன மாநில அரசுகள். தமிழக முதல்வர் இப்போதே இந்த விஷயத்தில் முந்திக் கொண்டிருக்கிறார்.
மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாயில் ஏறத்தாழ 60 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை அரசு ஊழியர்களின் சம்பளம், படி, ஓய்வூதியம் என்று செலவிடப்படுகின்றன. சம்பளம் கொடுத்ததுபோக மீதமுள்ள சுமார் 30 சதவிகிதம்தான் வளர்ச்சிப் பணிகளுக்கும், சமூகப் பணிகளான கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் செலவிடப்படுகின்றன.
இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்போது, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் மேலும் குறையும். அதாவது, வசதியற்றவர்களும், குறைந்த வருவாய்ப் பிரிவினரும் மேலும் பாதிக்கப்படுவார்கள். தனியார் உதவியுடன் போடப்படும் கட்டணச் சாலைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிகரித்து, வளர்ச்சிப் பணிகளில் அரசின் பங்கு குறையும். அது சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பதுடன் சட்ட, ஒழுங்கு பராமரிப்பையும் பாதிக்கும்.
தனியார் துறையில் தரப்படும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தங்களுக்கு இப்போது கிடைக்கும் சம்பளம் குறைவு என்கிற அரசு ஊழியர்களின் வாதத்தில் நியாயமே இல்லை. தனியார் துறையில் இருக்கும் வேலைப்பளு இவர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, திறமையின்மைக்கு அங்கே இடமில்லை என்பது கூடவா தெரியாது? மேலும், அரசு ஊழியர்களுக்கு இருக்கும் நிரந்தரத் தன்மையும், இதர சலுகைகளும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடையாதே?
தேர்தல் நேரத்தில் சம்பள உயர்வு அளிப்பது என்பது தார்மிக ரீதியாகத் தவறு. சொல்லப்போனால் இது ஓர் அரசியல் மோசடி என்று கூற வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுப்பதற்கு ஒப்பான விஷயமல்லவா இது! தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வை அறிவித்தாக வேண்டும் என்று சட்டம் வந்தால் நல்லது.
108 கோடி மக்கள்தொகையுள்ள நாட்டில் அரசு ஊழியர்கள் அதிகம் போனால் சுமார் 10 சதவிகிதம். ஆனால், அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சம்பள உயர்வால் ஏற்கெனவே அதிகரித்திருக்கும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் 90 சதவிகிதம் மக்கள் மேலும் துன்பத்துக்கு ஆளாகப் போகிறார்கள். அவர்கள் மட்டுமா? அரசு ஊழியர்களும்தான்!
தவறான நேரத்தில் வந்திருக்கும் தவறான அறிவிப்பு இது. தவறான கணக்குப் போடும் பிரதமருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதுதான் இதன் முக்கியமான விளைவாக இருக்கும்!
நன்றி : தினமணி