Wednesday, August 20, 2008

பாகிஸ்தான், இனி...

பாகிஸ்தானின் நான்காவது சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் பர்வீஸ் முஷாரப் தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்திருப்பது அந்த நாட்டின் சரித்திரத்தில் மிகப்பெரிய திருப்புமுனை என்றுதான் கூற வேண்டும். எந்த மக்கள் சக்தியைத் தனது ராணுவ பலத்தின் மூலம் ஓரங்கட்டிவிட்டு ஆட்சியைப் பிடித்தாரோ அதே மக்கள் சக்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பர்வீஸ் முஷாரபை பதவி விலகச் செய்திருக்கிறது.
ஆறு மாதத்திற்கு முன்னால் நடந்த தேர்தலில் தனது ஆதரவாளர்களின் கட்சி தோற்கடிக்கப்பட்டபோதே முஷாரப் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியும் ஒன்றுபட்டுச் செயல்பட முடியாது என்கிற எதிர்பார்ப்புதான் அவரை அப்போதே பதவி விலகாமல் இருக்க வைத்தது. எதிரியின் எதிரி நண்பன் என்று நவாஸ் ஷெரீபும், பேநசீர் புட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரியும் முஷாரபுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டபோது அவரது பிரித்தாளும் திட்டம் தகர்ந்தது.
முஷாரபின் பதவி விலகலுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமே காரணமல்ல. தங்களது முன்னாள் தளபதிக்கு ஆதரவாகச் செயல்பட பாகிஸ்தான் ராணுவம் தயாராக இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம். மக்களவையைக் கலைக்கும் அதிகாரம் அதிபராக இருந்த முஷாரபுக்கு இருந்தபோதிலும், ராணுவத்தின் பக்கபலம் இல்லாமல் அதைப் பயன்படுத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும்.
ராணுவம் அவரைக் கைவிட்டது மட்டுமல்ல, அமெரிக்காவும் அவரைக் கைவிட்டு விட்டது என்பதுதான் உண்மை. அதிபராக முஷாரப் தொடர்வதில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை. மேலும், முஷாரபின் வழிகாட்டுதலுடன் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு மறுபுறம் ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான் பயங்கரவாதிகளுக்கு உதவி வந்தது என்கிற சந்தேகம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுவிட்டிருந்தது.
ராணுவமும் அமெரிக்காவும் தன்னைக் கைவிட்டு விட்ட நிலையில், ராஜிநாமா என்பதைத் தவிர முஷாரபுக்கு வேறு வழியில்லாத நிலைமை. அந்தச் சூழ்நிலையில்கூட, சற்றும் பதற்றமும் குற்ற உணர்வும் இல்லாததுபோல அவர் பாகிஸ்தான் மக்களுக்கு ஆற்றிய தனது இறுதி உரையின் மூலம், ஒரு ராணுவத் தளபதி தனது உடலையும் மனதையும் உணர்ச்சிகளையும் எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சரி, முஷாரப் வெளியேறியாகிவிட்டது. இனிமேல்தான் பாகிஸ்தானிலுள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய நேரம். முஷாரப் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தைப் பறித்துக் கொள்வதுவரை எதிரும் புதிருமாக இருந்த சக்திகள் இப்போது கைகோர்த்துச் செயல்பட்டாக வேண்டும். தங்களது பொது எதிரியும் பதவி விலகிவிட்ட நிலையில், இவர்கள் ஒற்றுமையாகச் செயல்படாவிட்டால், மீண்டும் ராணுவம் மூக்கை நுழைக்க நேரிடும் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது மேலாண்மையை நிலைநாட்டியாக வேண்டும். அதற்கு முதல்படியாக, ஒருமனதாகப் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பது, முஷாரப் ஆட்சியில் அகற்றப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது, உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுக்குள் கொண்டு வருவது என்று பல தவறுகள் திருத்தப்பட்டாக வேண்டும்.
ராணுவம் சார்ந்த ஆட்சியைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாத செய்கைகளை எதிர்கொள்வது கடினம். தீவிரவாத சக்திகளை ஒடுக்குவதற்கு ராணுவத்தை நாடும்போது, ராணுவம் அதையே சாக்காக வைத்து ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் நிறையவே இருக்கிறது. நவாஸ் ஷெரீபின் ஆட்சியில் நடந்தது அதுதான். அந்தத் தவறு மீண்டும் நடைபெற்றுவிடக் கூடாது.
தீவிரவாதம் மட்டுமே பாகிஸ்தானின் பிரச்னையல்ல. விலைவாசி 25 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தற்போதைய கூட்டணி அரசு தவறினால், விளைவு மக்களின் கொந்தளிப்பாக இருக்கும். முற்றிலும் சீர்குலைந்திருக்கும் பொருளாதாரம் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு முன்புபோல அமெரிக்கா உதவுமா என்பதும் சந்தேகம்தான்.
ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான இந்தியாவும் பாகிஸ்தானும், பரஸ்பரம் சண்டை போட்டுக் கொள்வதை நிறுத்தி, ராணுவ ஒதுக்கீட்டைக் குறைத்து வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தினால் மட்டும்தான் தெற்காசியா அமைதியையும், பொருளாதார வளர்ச்சியையும், உலக அரங்கில் மரியாதையையும் பெற முடியும்.
முஷாரபின் ராஜிநாமா பாகிஸ்தானில் நிலையான மக்களாட்சி தொடர வழிகோலுமேயானால், அதுவே தெற்காசியாவின் வளமான வருங்காலத்திற்கான பிள்ளையார் சுழியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்!
நன்றி : தினமணி