Saturday, August 30, 2008

தமிழர்களுக்கு தலைக்குனிவு!

மதுவின் சுவையே தெரியாமல் வளர்ந்த தலைமுறை ஒன்று உண்டு; அந்த ருசிக்கு அடிமையானவர்கள் கூட, குடிப்பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் குடித்த காலம் ஒன்று உண்டு.
""இருபது ஆண்டுகள் ஆண்டுவிட்டு எலியைத் தின்னச் சொன்னதாக'' கூறப்படும் காங்கிரஸ் கட்சி ஆண்ட ""இருண்ட காலம்'' அது. இப்போதோ, தமிழர்களின் நலனுக்காகவே அவதாரம் எடுத்துள்ள பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தமிழகம் முழுவதுமே தவிக்கிறது.
செங்கோட்டை அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 12வது வகுப்பு மாணவர்கள் இருவர் கடந்த திங்கள்கிழமை மது புட்டியுடன் பள்ளிக்கூடத்துக்கு போதையிலேயே வந்து, பையிலிருந்து எடுத்து மேலும் குடித்திருக்கின்றனர். சக மாணவர்கள் அவர்களை ஆசிரியரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். பிறகு, தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி பெற்றோரை வரவழைத்து பள்ளியைவிட்டு நீக்கியுள்ளார்
இந்த பள்ளிக்கூடத்தின் புகழ் இத்தோடு நின்றுவிடவில்லை, ஏற்கெனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் இதே போல குடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு வந்ததற்காக, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனராம்.
சென்னையிலே மற்றொரு சம்பவம். ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது திருமண நாளுக்கு முதல் நாள் இரவு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க மது அருந்தியிருக்கிறார். நண்பர்களில் ஒருவன் குடி போதையில், ""உனக்குப் பார்த்த பெண் அழகாக இல்லை'' என்று கூறியிருக்கிறார். அந்தக் குடி வெறியிலும் அதை அப்படியே எடுத்துக் கொண்ட மணமகன், ""எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம்'' என்று அந்தத் திருமண மண்டபத்தைவிட்டு வெளியேறி எங்கோ போய் உட்கார்ந்திருக்கிறார். போலீஸார் தலையிட்டு அவரை, சமாதானம் செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துவந்துள்ளனர். ""குடிகாரனைத் திருமணம் செய்துகொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடியாது'' என்று அந்த மணமகளோ சரியான முடிவெடுத்து அவரை நிராகரித்துவிட்டாள்.
இவ்விரு செய்திகளையும் படித்ததும் தமிழ்நாடு போகும் பாதை சரியானதுதானா என்ற கவலைதான் மேலிடுகிறது. தமிழ்நாட்டை ஆளும் கட்சியும், ஆளத்துடிக்கும் பிரதான எதிர்க்கட்சியும் மதுவிலக்கில் தங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்துவிட்டன.
இலவசத் திட்டங்களை அறிவித்து அதை ஏழைகளுக்குக் கொடுத்தாலே தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற புதிய உத்தியைக் கட்சிகள் கண்டுபிடித்துவிட்டன. ""கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க'' தமிழ் இனம் தயாராக இருக்கும்போது சுயநலத் தலைவர்களுக்கு இனி என்ன கவலை?
""தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு இனி சாத்தியமில்லை; கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுக்கும்; அதைத் தடுக்க நமது காவல்துறையைப் பத்து மடங்காகப் பெருக்கினாலும் போதாது; பிற மாநிலங்களுக்கு நம் தமிழர்கள் குடிப்பதற்காகவே குடியேறிவிடுவார்கள்; குடிப்பதை நிறுத்தினால் உடல் நலம் கெட்டு விரைவிலேயே பரலோகம் போவார்கள்; நம்முடைய நல திட்டங்களுக்குப் பணம் கிடைக்காமல் திண்டாட நேரிடும்; காமராஜ் காலத்திலேயே கள்ளச் சாராயத்தைத் தடுக்க முடியவில்லை'' என்றெல்லாம்தான் ஆள்வோர் தரப்பிலிருந்து பதிலாக வருகிறது.
மதுவிலக்கு அவசியம் என்று இப்போதைக்கு ஒரேயொரு கட்சிதான் கூறி வருகிறது. இந்தக் குரல் தனிக்குரலாக இருந்துவிடக்கூடாது. காந்தியவாதிகளும் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ள நல்லவர்களும் இதற்கு வலு சேர்க்க வேண்டும். இது சவாலான வேலைதான்; இந்தச் சவாலில் வெற்றி காணும் நாள்தான் தமிழர்களுக்கு உண்மையிலேயே நல்லநாள். தமிழர்களுக்கு எதிரி வெளியில் இல்லை, மது என்ற வடிவில் நம்முடனேயே இருக்கிறான். மதுவை ஒழிப்போம், மனிதர்களைக் காப்போம்.
நன்றி : தினமணி

சில சிந்தனைகள்

ஒகேனக்கல் பிரச்னைக்காக உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சிற்கு கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னடத்தில் ரஜினி படங்களை ஓட விட மாட்டோம் என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அன்று அது குறித்து எதுவும் கருத்துத் தெரிவிக்காத ரஜினி தனது படம் குசேலன் அங்கே திரையிடப்பட வேண்டுமென்பதற்காக பழைய கன்னட எதிர்ப்புப் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார். பயன் இரண்டு மாநிலங்களிலும் படம் ஓடவில்லை. உமியும் போய் தீயும் போயிட்டென்று ஒரு பழமொழி உண்டு தமிழில்.
உண்ணாவிரதம் என்கிற ஓர் அரிய போராட்டத்தை தேசத் தந்தை காந்தி அடிகள் அறிமுகம் செய்தார். இருபது நாள்கள் முப்பது நாள்கள் என்று உண்ணாவிரதம் இருந்தார் அந்தப் பெரியவர்.
ஆனால் தேசத் தந்தையின் அந்த உன்னதமான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஒரு நாள் அரை நாள் என்றெல்லாம் உண்ணாவிரதத்தை நடத்தத் தொடங்கி விட்டனர் நமது அரசியலார்.
மக்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பாபா ஆம்தே, மேதா பட்கர் போன்றவர்களின் தியாகத்தை எல்லாம் மறைத்து இந்தப் போலி உண்ணாவிரதங்களுக்கு விளம்பரங்கள் அதிகமாயின.
ரஜினி செய்த தவறு ஒன்றே ஒன்றுதான். கடவுளை முழுமையாக நம்புகின்ற ரஜினி நல்ல மழை தர வேண்டி இறைவனை வேண்டி நின்றிருக்க வேண்டும். சரியான மழை மட்டும் பெய்து விட்டால் எடியூரப்பாவோ தேவகெளடாவோ தண்ணீரை நிறுத்தி விட முடியுமா?
இன்னொன்றும் புரியவில்லை. ஒகேனக்கல் தமிழகத்தின் பகுதி. அதற்குள்ளே தண்ணீர் வந்து விட்ட பிறகு எதற்கு கர்நாடகத்தின் அனுமதி வேண்டும். அங்கே காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தலில் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்று நமது முதல்வர் கூட்டணி தர்மத்திற்காகச் செய்த வேலை இது.
எல்லாவற்றிலும் மத உணர்வுகளை மொழி உணர்வுகளைத் தூண்டியது நாம் தானே. அதன் பின்னர்தான் மற்றவர்கள் ஆரம்பித்தார்கள்.
மதுரை முத்து, தமிழர் படை துவக்கிய பின்னர்தான் மராட்டியத்தில் சிவசேனை, கர்நாடகத்தில் வட்டாள் நாகராஜின் இயக்கம் போன்றவை தோன்றின.
கேரளத்துப் பருவ மழைதான் குற்றாலத்தில் அருவியாகக் கொட்டுகின்றது.
நமது தமிழ்நாட்டிற்குள்ளேயே ஒரு ஊர்க்காரர்கள் மற்றொரு ஊருக்குத் தண்ணீர் தர மறுக்கின்றார்களே. இது என்ன கூத்து.
இயற்கையை அழிக்கின்ற அதில் பணம் சம்பாதிக்கின்ற ஒழுங்கீனத்தைக் கற்றுத் தந்தது யார்?
திரைப்படக் கலைஞர்களும் மனிதர்கள்தான். ஆனால் மொழி கடந்து மதம் கடந்து அவர்கள் வாழ்பவர்கள். அவர்களை இந்தச் சர்ச்சைகளுக்குள் இழுப்பது சரியல்ல.
ஒட்டுமொத்த மனித குலத்திற்கான போராட்டங்களில் கலைஞர்கள் ஈடுபடுவதுதான் அவர்களுக்குப் பெருமை.
அதேபோல் அரசியல் காரணங்களுக்காகத்தான் தமிழ்மொழி செம்மொழியென்று அறிவிக்கப்பட்டதென்று சொன்னபோது கோபப்பட்டவர்கள் இன்று உணர்வார்கள் கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாகப் போகின்ற காரணத்தை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் கூற்று மேடைக்கு மட்டும் என்ற நடிப்பினால்தான் நாம் மொழி பேசி இனம் பேசி அழிகின்றோம்.
மனிதர்கள் மனிதப் பண்பினை இழந்ததனாலேயும், பணம் ஒன்றே குறிக்கோளாக நமது தலைவர்கள் கோடிகளிலே புரள்வதனாலேயும் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையினை ஒழுங்கீனமான வாழ்க்கையினால் நமது மக்கள் பிரதிநிதிகள் பலர் காட்டியதனாலேயும் காடுகளை அழித்தேனும் பணம் சம்பாதிக்க சிலர் முற்பட்டதனாலேயும் உண்மையும் ஒழுக்கமும் போயிற்று; மழையும் போயிற்று.
மீண்டும் மீண்டும் ஒழுங்கீனமானவர்களையே பார்க்கின்ற படித்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் இந்தத் தவறானவர்களிடம் சிக்கியிருப்பதனைப் பார்த்து வெதும்புவதும் அதன் விளைவாக சிலர் ஆயுதம் ஏந்துவதும் அவர்களை நமது நாட்டுக் காவல் துறை வேட்டையாடுவதும் எந்த வகையில் நியாயம். நியாயம் அற்ற முறைகளிலே செல்வம் சேர்த்து அவர்கள் வாழ்க்கையோடும் எதிர்காலத்தோடும் விளையாடுகின்ற அந்த மக்கள் பிரதிநிதிகளையல்லவா கைது செய்ய வேண்டும்.
மின் வெட்டு என்று சொன்னால் உடனே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதைச் சொல்லத் தகுதியற்றவர் என்பதுவும் அவர் ஆட்சியிலே மின் வெட்டு அதிகம் என்பதுவும் எப்படி சரியான பதிலாகும். அதனால்தானே அவரை நீக்கி விட்டு உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
இதாவது பரவாயில்லை. இன்னொரு கூத்து வேறு மாநிலங்களைச் சுட்டிக்காட்டுவது. குஜராத்தில் இருக்கின்றதா உ.பி.யில் இருக்கின்றதா என்பது. எனக்குப் புத்தகங்கள் வேண்டும் என்று குழந்தைகள் தங்கள் தந்தையிடம் கேட்டால் எதிர்த்த வீட்டுக்காரர் அவர் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்திருக்கின்றாரா என்று ஒரு தந்தை கேட்பதுபோல் இல்லையா.
தி.மு.க. ஆகட்டும் அ.இ.அ.தி.மு.க. ஆகட்டும். யார் நல்லதே செய்தாலும் குறை கூறி நிற்கின்ற அரசியல்.
காங்கிரஸை எதிர்த்து 1967ல் தேர்தலில் இன்றைய முதல்வர் பேசியதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றனர்.
காமராசரை அவர் கேட்காத கேள்விகளா?
ஆனால் இன்று அவரை நோக்கிக் கேள்விகளை வைத்தால் "என் வயதென்ன... என் அனுபவமென்ன... என்னைக் கேட்கின்ற தகுதி இல்லாதவர்களெல்லாம் கேட்கின்றார்கள்' என்கின்றார்.
ஆனால் பெரியவர் இராஜாஜியையும் பெருந்தலைவர் காமராஜையும் இவர் கேட்ட போது இவர் வயசென்ன என்று அவர்கள் கேட்டதில்லை. மக்களாட்சியைக் கொண்டு வரப் பாடுபட்ட அந்தத் தலைவர்களுக்கு அதன் மகத்துவம் புரிந்திருக்கிறது.
பண்டித நேருவின் மருமகன்தான் முந்த்ரா ஊழலை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். தனது நல்ல நண்பர் என்று பார்க்காமல் டி.டி.கே.யை பதவி நீக்கம் செய்தார் நேரு.
சொந்த ஜாதியில் ஒருவர் இருக்கின்றார் என்று சிபாரிசு வந்தபோதும் நெ.து. சுந்தரவடிவேலுவைத்தான் கல்வித்துறை இயக்குநராகக் காமராஜ் நியமித்தார்.
உறவினர்கள் தம்மை வந்து பார்ப்பதைக் கூட காமராஜும், ராஜாஜி போன்றோரும் அனுமதித்ததில்லை.
உடுத்திய வேட்டிக்கு மாற்று வேட்டி இல்லாமல் உழவர்களுக்கும் ஏழைகளுக்கும் பாடுபட்டார் ஜீவா.
அரசியல் என்பது சேவை என்று வாழ்ந்தவர்கள் அவர்கள்.
ஆனால் அவர்களால் கிடைத்த இந்த வாழ்வில் ஒரு ஆட்சியைக் காப்பாற்ற நடந்த கூத்துகளை மொத்த நாடும் பார்த்து வெதும்பியது.
அரசியல் கூத்துகளுக்கென்று ஒரு பதக்கம் மட்டும் இருக்குமென்றால் அபிநவ் பிந்த்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார்.
நெல்லை கண்ணன்