Monday, September 1, 2008

வங்கிச் சேவை யாருக்காக?

கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்தில் குடியேறிய அந்த இளைஞர், தனது குடும்பத்தின் அவசரத் தேவைக்குப் பணம் புரட்ட வேண்டிய நிர்பந்தம்.
வட்டிக்குப் பணம் வாங்க நினைத்த அவரது கண்ணில் பிருந்தாவனமாய் பூத்துக் குலுங்கியது தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று.
காலை 10 மணிக்கு வங்கிக்குச் சென்ற அவர் ஓர் அலுவலரிடம் சென்று நகைக்கடன் வாங்க வேண்டும், யாரை அணுகுவது என்றார்.
காலை நேரப் பரபரப்புக்கு இடையே அந்த ஊழியர் ஏதோ நினைத்தபடி, ""நகைக் கடனா? மேலாளர் இல்லை; நாளை வாருங்கள்'' என்கிறார்.
நகைக் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு ஏமாற்றம். இருப்பினும், தனது ஐயம் தீர அருகே நாற்காலிகளில் அமர்ந்திருந்த முதியவர்கள் இருவரிடம் வினவினார். ""ஆம், நாங்களும் நகைக் கடனுக்கு இரு நாள்களாக வருகிறோம். இன்றைக்கு கிடைத்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள். அதான் வந்தோம். ஆனால்...'' என்று இழுத்தனர் இருவரும்.
பிறகு அவர்களில் ஒருவர் கூறிய யோசனைப்படி அதே வங்கியின் அடுத்த கிளைக்குச் சென்றார் அந்த இளைஞர். அந்தக் கிளையிலும் ""காலை 11 மணிக்கு வந்தால் நகைக் கடனெல்லாம் கிடைக்காது. காலை 9.45க்குள் வந்துவிட வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை. அதுவும் 7 பேருக்குத்தான் நகைக் கடன் வழங்கப்படும். இங்க வேலை செய்ய ஆளெல்லாம் கிடையாது. புரிஞ்சுதா?'' என்றார் அங்கிருந்த கடன் பிரிவு மேலாளர்.
மறுநாள் காலை... அந்த இளைஞர், தான் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கிக்கு மீண்டும் சென்றார். காலை நேரம் என்பதால் வழக்கம்போல் குறைந்த ஆள்கள். சரி! இங்கு நிற்பதால் பயனில்லை. இதன் வேறு ஒரு கிளைக்குச் செல்வோம் என யோசித்தபடி நடையைக்கட்டினார்.
பரபரப்பில் இருந்த வங்கி மேலாளரிடம் சென்று, நின்றார்... நின்றார்... 15 நிமிடங்கள் கழிந்தன. தலையை நிமிர்த்தி மேலாளர் பார்த்த விதம் ஏன் வந்தாய் என்பது கேட்பது போன்று இருந்தது கடன் வாங்க வந்தவருக்கு. ""என்ன வேண்டும்?'' நகைக் கடன் வேண்டும் சார்... ""இன்னிக்குப் போட முடியாது. நாளைக்கு வாருங்கள் பார்க்கலாம்'' என்றார்.
அதற்குப் பிறகு அசட்டை செய்தபடி வேலையில் மூழ்கிப்போனார் அவர். ஜடமாய் நின்ற அந்த இளைஞர் அங்கிருந்த வாசல் கதவை நோக்கி நகர்ந்தார் விரக்தியில்...
சரி! நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கே சென்று மீண்டும் முயற்சி செய்வோம் என்று தீர்மானித்தபடி வேகமாய் நடந்தார். அந்தக் கிளையில் மேலாளர் இருந்தார். நம்பிக்கை துளிர்விட்டது. ""சார் வணக்கம்'' என்றார். நகைக் கடன்தானே? என்று கேட்ட மேலாளரிடம், ஆமாம் சார் என்றார் புன்னகைத்தபடி. ""நகை மதிப்பீட்டாளர் வரவில்லை'' என்றார். ""சார் இரு தினங்களாக அலைகிறேன்'' என்ற பேச்சுக்கு, அதற்கு நான் என்ன செய்வது? என்றார் ஆக்ரோஷமாக.
""சார்... அவசரத் தேவைக்குத்தான் வங்கிக்கு வருகிறோம். இப்படிச் செய்தால் வாடிக்கையாளர்கள் எங்கே போவது'', விவாதம் தொடர்கிறது. ஒருவழியாக நகை மதிப்பீட்டாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வரச் சொன்னார் அந்த மேலாளர்.
நகை மதிப்பீட்டாளர் வந்தார். ""என்ன சார் லீவா?'' என்று நகை மதிப்பீட்டாளரிடம் பேச்சுக் கொடுத்தார் அந்த இளைஞர். ""ஆளே வர வேண்டாம் என்கின்றனர் சார். அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறையால் நகைக் கடன் வழங்குவதில் தாமதம் ஆகிறது என்றார் உண்மையை உரைத்தபடி.
பல மணி நேர பொறுமைக்குப் பின் ஒருவழியாகக் கடன் கிடைத்தது. ஆக, தேசிய வங்கியில் நகையை வைத்துக் கடன் பெற வேண்டுமானால் குறைந்தது இரு நாள்களைச் செலவிட வேண்டும் என்று தாமதமாகப் புரிந்துகொண்டார் அந்த இளைஞர்.
இதனிடையே, அவ்வங்கியின் நுழைவு வாசலில் இருந்து வெளியேறியபோது ஓரமாக வண்ணக் கலரில் தெரிந்தது அந்த டிஜிட்டல் போர்டு.
""இந்த வங்கிக் கிளையில் வாடிக்கையாளர் நலன் கருதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நகைக்கடன் தாராளமாக வழங்கப்படும்'' என அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே இருந்த மற்றொரு பலகையில் ""வங்கி ஊழியர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் வேலைநிறுத்தம், ஆதரவு தாரீர்''.
மேலே கூறப்பட்ட சம்பவம் கற்பனையாக புனையப்பட்டவை அல்ல. மதுரையில் ஒரு தேசியமயாக்கப்பட்ட வங்கிக் கிளையில் நகைக்கடன் பெற சென்றபோது கிடைத்த அனுபவம்தான்.
தனியார் வங்கிகளை விட தேசிய வங்கிகளில் அதுவும் சில குறிப்பிட்ட வங்கிகளில் நகைக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவு. பொதுமக்கள் இதற்காகத்தான் இவ் வங்கிகளை நாடிச் செல்கின்றனர்.
ஆனால், ஏன் இங்கு வருகிறீர்கள் என்று அடிக்காத குறையாக வங்கி ஊழியர்கள் சிலர் நடந்து கொள்வதுதான் வாடிக்கையாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.
ஊழியர் பற்றாக்குறை, ஆள்குறைப்பு நடவடிக்கை காரணமாக பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக வங்கி ஊழியர்கள் கூறுவதில் உண்மை இருக்கலாம்.
அதற்காக, அவசரத் தேவைக்கு வங்கியே கதியென நினைக்கும் பொது மக்களை அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?
வே. சுந்தரேஸ்வரன்
நன்றி : தினமணி

எல்லோருக்கும் நல்லவர்!

புதுச்சேரியில் நடைபெற்றிருக்கும் அரசியல் மாற்றத்தை, ஆட்சி மாற்றம் என்பதைவிடக் காட்சி மாற்றம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இப்போது ஏற்பட்டிருக்கும் முதலமைச்சர் மாற்றம், மீண்டும் தேசிய சக்திகள் பலப்படுவதற்கான அறிகுறியாக அமையுமானால் அதை வரவேற்காமல் இருக்க முடியாது.
அந்நிய ஆட்சிக் காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்த பெருமை புதுச்சேரிக்கு உண்டு. அரவிந்தர், பாரதி, வ.வே.சு. அய்யர் போன்றவர்களுக்குப் புகலிடமாக அமைந்த புதுவைக்கு எப்போதுமே தனித்துவமும், தமிழ் மணமும் இருந்து வந்திருக்கிறது. மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் வாழ்ந்த பெருமைக்குரிய பூமி அது.
ஆனால், இந்திய யூனியனில் இணைந்தது முதலே புதுவையின் அரசியல் சரித்திரம் நிலையற்ற ஆட்சிகளையும், அடிக்கொரு தரம் ஆட்சி மாற்றத்தையும் சந்தித்து வருவது ஏன் என்பதுதான் புதிராக இருக்கிறது. யூனியன் பிரதேசமாக இருந்த புதுச்சேரி இப்போது மாநில அந்தஸ்து பெற்ற பிறகும்கூட, இந்த நிலைமை ஏன் மாறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராக மீண்டும் பதவி ஏற்க இருக்கும் வைத்திலிங்கத்தைப் பொருத்தவரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஒரு நிலையான ஆட்சியை முதன்முதலில் நடத்திக் காட்டியவர் என்கிற பெருமைக்குரியவர். ஒரு மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்துக்கு சொந்தக்காரரும்கூட.
வைத்திலிங்கத்தின் பாட்டனார், பிரெஞ்சு ஆட்சிக்கு உள்பட்ட பாண்டிச்சேரியின் நெட்டப்பாக்கம் பகுதியில் மேயராக இருந்தவர். இவரது தந்தை வெங்கடசுப்பா ரெட்டியார் புதுவையின் முதல்வராகப் பலமுறை பதவி வகித்தவர் என்பது மட்டுமல்ல, அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இப்போதும் புதுச்சேரி மக்களால் போற்றப்படுபவர். புதுவையின் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் முன்வரிசைத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வெங்கடசுப்பா ரெட்டியார்.
இப்படி தனக்கென ஓர் அரசியல் பாரம்பரியத்தையும், சுமார் முப்பது ஆண்டுகால அரசியல் அனுபவத்தையும் உள்ளடக்கிய வைத்திலிங்கம், கடந்த முறை முதல்வராக இருந்த சூழ்நிலையிலிருந்து இப்போதைய சூழ்நிலை மிகவும் மாற்றமடைந்திருக்கிறது என்பதுதான் அவர் எதிர்நோக்க இருக்கும் மிகப்பெரிய சோதனை.
தனது கட்சிக்குள் அனைவரையும் அனுசரித்துப் போவது என்பது மட்டுமல்லாமல், ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் பாமகவையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய நிர்பந்தம் அவருக்கு உண்டு. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தியபோது துணிந்து பல முடிவுகளை அவர் எடுக்க முடிந்ததுபோல இப்போது செயல்பட முடியாது என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக இருக்கும்.
மேலும், "வாட்' வரிவிதிப்பு தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னால், புதுச்சேரியில் பொருள்களுக்குக் குறைந்த வரிகள் இருந்தன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடும் உதவிகளும் தாராளமாகக் கிடைத்தன. யூனியன் பிரதேசம் என்பதாலும், வரிகள் குறைவு என்பதாலும் வெளிமாநிலத்தவர் பலர் புதுச்சேரியில் முதலீடு செய்து தொழில் தொடங்கினார்கள். இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது.
வைத்திலிங்கத்தின் முந்தைய ஆட்சிக்காலத்தில் புதுச்சேரி பெரிய அளவில் தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் வளர்ச்சி என்று சாதனை நிகழ்த்தியது. இப்போது நிச்சயமாக மக்கள் அதேபோன்ற சாதனையை அவரிடம் எதிர்பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல, தேசிய சக்திகளை வலுப்படுத்தி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அவர் முயல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, கூட்டணிக் கட்சிகளைக் கோபப்படுத்தாமல், உள்கட்சி பூசல்களைச் சமாளித்துத் தனது பதவியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் முதல்வர் வைத்திலிங்கத்திற்கு உண்டு. அதை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? "எல்லோருக்கும் நல்லவர்' இனி எல்லோரையும்விட வல்லவராகச் செயல்படுவார் என்று எதிர்பார்ப்போம்!
நன்றி : தினமணி