Wednesday, September 3, 2008

பள்ளிகளில் புகுந்துவிட்ட கலாசார சீரழிவு

மேலை நாடுகளில் பிறந்த கலாசார சீர்குலைவுகள் தமிழகத்தின் பெரு நகரங்களில் மெல்ல நுழைந்து, தவழ்ந்து வளர்ந்து விட்ட நிலையில் தமிழகப் பள்ளிகளிலும் இத்தகைய சீரழிவுகள் புகுந்து விட்டதை எண்ணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அரசுப் பள்ளியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மது பாட்டிலுடன் போதையில் பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவர்கள் இருவர், பள்ளிக்கு வந்து மது பாட்டிலை எடுத்து குடித்துள்ளனர்.
இந்தச் செய்தியைப் படித்த அனைத்துப் பெற்றோரும் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.
தாமிரபரணி தண்ணீரை மட்டுமே குடித்துப் பழக்கப்பட்ட பெரும்பாலான திருநெல்வேலி மக்களுக்கு இச் செய்தி தலை மேல் இடியாய் விழுந்ததென்னவோ உண்மை.
மேலை நாடுகளில் இது போன்ற நிகழ்வுகள் சர்வசாதாரணம். ஆனால், இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இது மிகவும் மோசமான கலாசார சீரழிவு என்பதை மாணவர்கள் உணரவில்லை என்பதைத்தான் இந்தச் செய்தி காட்டுகிறது.
இத்தகைய கலாசார சீரழிவுகள் எப்படி மாணவர்கள் மத்தியில் தோன்றியிருக்க முடியும் என்பதை பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும்.
பொதுவாக, இத்தகைய கலாசார சீரழிவிற்கு வித்திடுவதே தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு ஊடகங்கள்தான். வெளி மாநில அலைவரிசைகள் முதல் மேலை நாடுகளின் அலைவரிசைகள் வரை அனைத்து வகை சேனல்களும் பட்டிதொட்டி, நகரம், கிராமம் என வேறுபாடு இன்றி பரவி இருப்பதும் இந்த நிலைக்கு காரணம் எனலாம்.
மேலை நாடுகளின் சில சேனல்கள் நமது கலாசாரத்திற்கு பெரும் சோதனையாக உள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இதைப் பார்க்கும் மாணவர்களுக்கு அதுபோல் நாமும் செய்தால் என்ன என்ற எண்ணத்தை அத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிகழ்ச்சியை காணும் மாணவன் ஒருவன் அதில் காட்டப்படும் விஷயங்களைத் தனது வாழ்க்கையிலும் செயல்படுத்த முயலுவதுதான் இத்தகைய கலாசார சீரழிவுக்கு காரணமாக அமைகிறது.
இந்த மாணவர்களின் வித்தியாசமான போக்கிற்கு வேறு ஒரு முக்கிய காரணமும் உண்டு. அது என்னவென்றால் தவறு இழைக்கும் மாணவர்களை சரி செய்ய ஆசிரியர்கள் முன்வராததுதான்.
இதற்கு ஆசிரியர்கள் தெரிவிக்கும் காரணங்கள் அதிர்ச்சியாகவும் அதே சமயம் உண்மையாகவும் தெரிகிறது. முன்பெல்லாம் கல்விக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பித்தல் என்ற உயரிய பணியைச் செய்ததுடன் அவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டனர்.
பள்ளியில் மாணவன் ஒருவன் தவறு செய்யும்போது, அவனை சரியான நேரத்தில் கண்டித்து அல்லது தண்டித்து ஆசிரியர்கள் திருத்த முற்பட்டனர். இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ் என்கின்றனர் ஆசிரியர்கள். தற்போது பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிக்க முடிவதில்லை. ஏன் தவறு செய்தாய் என்று கூட கேட்க முடிவதில்லை. அப்படி ஆசிரியர்கள் கண்டித்தால் உடனடியாக மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து "எனது மகனை நானே இப்படி கண்டித்ததில்லை. நீங்கள் (அதுவும் ஒருமையில் நீ) எப்படி கண்டிக்கலாம் என திட்டும்' நிலைதான் உள்ளது. அரசும் மாணவர்களைக் கண்டிப்பதைத் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு வழியின்றி எல்லை மீறும் மாணவர்களைக் கண்டிக்கும் சில ஆசிரியர்கள் காவல் நிலையம் வரை சென்ற கதையும் அரங்கேறி உள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் புதிதாகச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவரை மாணவர்கள் சிலர் சாக்பீஸ் வீசி எறிந்தது உள்ளிட்ட கீழ்த்தரமான செயல்களை செய்துள்ளனர். இதனால் வேதனையடைந்த ஆசிரியை உடனடியாக இடமாறுதல் பெற்றுச் சென்றுள்ளார்.
ஆனால், இச் சம்பவம் தொடர்பாக மாணவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.
எனவே, வருங்காலங்களில் மாணவர்கள் இத்தகைய கலாசார சீரழிவுகளில் ஈடுபடாமல் தடுக்க, சேனல்கள் வீடுகளுக்குள் வருவதை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதைவிட முக்கியமாக, மாணவர்களின் நிலைமையை அவரது பெற்றோர் பள்ளிகளுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று ஆசிரியர்களிடம் கேட்டறிய வேண்டும். அத்துடன் தவறு செய்யும் மாணவர்களைக் கண்டிக்கவும் பெற்றோர் அனுமதித்தால் மட்டுமே இத்தகைய சீரழிவுகளிலிருந்து தமிழக மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என்பதே நிதர்சனம்.
வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி