Sunday, September 7, 2008

நோய் நாடி நோய் முதல் நாடி...

பணவீக்கம் என்ற பொருளாதாரச் சொல் இப்போது அனைவருக்குமே பரிச்சயமாகிவிட்டது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் உள்ள தொடர்புதான் இதற்குக் காரணம். அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக எல்லாம் நடந்தன. பணவீக்கம் மேலும் அதிகரித்தது; பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டது. அதேபோல், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் பணவீக்க விகிதத்துக்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பே இல்லாதது மாதிரிதான் சாதாரண மனிதனின் அனுபவம் இருக்கிறது.
அத்தியாவசியப் பொருள்களுக்கு மக்கள் தரும் விலைக்கும், பணவீக்கத்துக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது, மொத்த விற்பனை விலைக் குறியீட்டைக் கொண்டுதான் பணவீக்க விகிதம் மதிப்பிடப்படுகிறது; சில்லறை விற்பனை விலையைக் கொண்டு அல்ல. சரக்குப் போக்குவரத்துக்கான செலவு, கமிஷன், ஆதாயம் ஆகியவை மொத்த விற்பனை விலையுடன் சேர்ந்து கொள்வதால் சில்லறை விற்பனை விலை கணிசமாக அதிகரித்துவிடுகிறது.
இரண்டாவதாக, 435 பொருள்களின் மொத்த விற்பனை விலையைக் கொண்டே பணவீக்க விகிதம் மதிப்பிடப்படுகிறது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட இதில் இடமில்லை. பணவீக்க விகிதத்துக்கும் சில பொருள்களின் விலை உயர்வுக்கும் இதனால் தொடர்பே இருப்பதில்லை.
மூன்றாவதாக, மொத்த விற்பனைவிலைக் குறியீட்டில் உள்ள பொருள்கள், விலைஉயர்வில் அவற்றுக்கு இருக்கும் "செல்வாக்கின்' அடிப்படையில் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கென தனித்தனி மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த மதிப்பீடுகள்கூட நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டை பிரதிபலிப்பதாக அமையவில்லை.
அடுத்தது, பணவீக்கம் குறைந்தால், விலைகள் குறையும் என்பதில்லை; குறைவான விலைகள் விகிதத்தில் அதிகரிக்கும் என்பதே சரி. உதாரணமாக பணவீக்கம் 12 சதவீதமாக இருந்தால், ரூ. 100க்கு விற்ற பொருளின் விலை ரூ. 112ஆக உயரும். பின்னர் பணவீக்கம் 10க்குக் குறைந்தால் அந்தப் பொருளின் விலை ரூ.123.20 (10 சதவீத உயர்வு) ஆகும். இந்த விலை உயர்வின் வலியைத்தான் சில காலமாக சாதாரண மக்கள் அதிகமாக அனுபவித்து வருகிறார்கள்.
பணவீக்கம் 5 சதவீதம்வரை இருப்பதை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவு என்பார்கள். இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கை, இடைக்காலத்தில் பணவீக்கத்தை 3 சதவீதமாகக் குறைப்பதுடன், 5 சதவீதத்துக்குள் நிலைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்தக் கொள்கை கடந்த ஜூலையில் மறுஆய்வு செய்யப்பட்டபோது, நிதியாண்டின் முடிவில் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்குள் கொண்டுவருவதென திருத்தி அமைக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்காக ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய நிதி விகிதத்தை (சிஆர்ஆர்) 0.25 சதவீதம் அதிகரித்தது. அதேபோல், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியையும் 0.5 சதவீதம் உயர்த்தியது.
ஆனால், இந்த விகிதங்களை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பெரிய அளவில் பலன் ஏதும் கிடைக்காது என்பது கடந்த 18 மாத அனுபவத்தில் தெரிய வந்திருக்கிறது. 2007ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கடன்களுக்கான வட்டியை 4 முறை உயர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. 7.25 சதவீதமாக இருந்த வட்டி, 3 முறை 0.25 சதவீதமும் ஒருமுறை 0.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு, கடந்த ஜூனில் 8.5 சதவீதமாகியது. அதேபோல் 2006ம் ஆண்டு டிசம்பரில் இருந்து சிஆர்ஆர் 13 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. அது, 5 சதவீதத்தில் இருந்து கடந்த ஜூலையில் 8.75 சதவீதமாகியது. இந்த அதிவேக உயர்வால், இதே காலகட்டத்தில் 5.8 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் 12 சதவீதமாக உயர்ந்தது.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டால் கடன்கள் குறைந்து பணவீக்கம் ஓரளவுக்கு கட்டுப்படும் என்பதே ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கை பொய்த்துப் போனது, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களிலேயே தெரிகிறது. ஜூலை 2008 நிலவரப்படி, வங்கிக் கடன் ரூ. 4,85,709 கோடியாக இருந்தது. இது 25.9 சதவீத உயர்வு; ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறானது. அதேபோல், டெபாசிட்டுகளும் ரூ. 5,89,646 கோடியாக உயர்ந்தது. உயர்வு விகிதத்தில் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவுதான் என்றாலும், ரிசர்வ் வங்கி மதிப்பிட்டதை விட மிக அதிகம். கிரெடிட் கார்டுகள் மீதான கடன்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 87 சதவீதம் உயர்ந்து ரூ. 26,600 கோடியாகியது.
சிஆர்ஆர் விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியதன் மூலம் வர்த்தக வங்கிகளிடமிருந்த ரூ. 8 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கிக்குச் சென்றிருக்கிறது. இதனால் வங்கிகளுக்கு வட்டி மூலம் கிடைக்க வேண்டிய லாபம் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறை 0.25 சதவீதம் சிஆர்ஆர் உயர்த்தப்படும்போதும் வங்கிகள் ரூ. 500 கோடி நஷ்டமடைகின்றன.
இந்தச் சூழலில்தான் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தின. அதேபோல் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பணவீக்கத்தால் லாபமடையும் வகையில் டெபாசிட்டுகளுக்கான வட்டியும் உயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும், ஒப்பீட்டளவில் வங்கிகள் உயர்த்திய வட்டியைவிட பணவீக்கத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், வங்கியில் முதலீடு செய்பவர்களுக்கு உண்மையில் இழப்புதான் ஏற்படுகிறது.
கடன்களுக்கான வட்டி உயர்த்தப்படுவதால் தொழில்துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி விலையும் அதிகரிக்கிறது. இது, பணவீக்கத்தை இன்னும் அதிகரிக்குமே தவிர குறைக்கப்போவதில்லை. வட்டிவிகிதங்களுக்கு ஏற்ற வகையில் முதலீடு அதிகரிக்கப்படாவிட்டால், அது பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும். 8.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம், 8 சதவீதத்துக்கும் கீழே குறைந்தவிட்டதாக ரிசர்வ் வங்கியே அண்மையில் அறிவித்திருக்கிறது. அதேபோல், தொழில்துறை வளர்ச்சி 2007ம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்ததைவிட 2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் பாதியாகக் குறைந்து 5.2 சதவீதமாகி இருக்கிறது. அதற்கடுத்த காலாண்டிலும் இது தொடர்ந்திருக்கிறது.
ஆக, எந்த நோயால் "பணவீக்கம்' ஏற்பட்டது என்பதுகூட கண்டறியப்படவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, நோயைத் தவறாகக் கண்டறிந்து அதற்கொரு மருந்தும் கொடுத்து நோயை இன்னும் கடுமையாக்கிவிட்டிருக்கின்றனர். இந்த மருந்துகளைக் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நோயைவிட அந்த மருந்துகள்தான் இன்னும் பயங்கரமானவை.
பி.எஸ்.எம். ராவ்

நன்றி : தினமணி

கலாசார மாற்றத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக ஏற்றத்தாழ்வு, வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் வெறுப்பு, நோயின் கொடுமை உள்ளிட்டவை தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக இருந்தன. தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
ஆனால், இன்று வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள், தோல்விகள், இடர்பாடுகளுக்காகக்கூட தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டின் மொத்த இறப்பில் தற்கொலையின் விகிதம் 7.9 சதத்தில் இருந்து 10.3 சதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை மூலம் இறப்பைத் தழுவுகிறார். இவர்களில் 30 வயதுக்கும் குறைவான வயதுடைய இளைஞர்களே அதிகம். தற்கொலை செய்து கொள்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 வயது முதல் 30 வயதுக்குள்ளாக இருப்பவர்கள் விகிதம் 40 சதத்தை தாண்டுகிறது.
வட மாநிலங்களைவிட கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடந்தேறுகின்றன.
இதற்கு சமுதாய பிரச்னைகளும், ஏற்றத் தாழ்வுகளுமே முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
அதோடு, தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள்.
ஒருவர் தற்கொலை செய்துகொள்ள வறுமை, வேலையின்மை, காதல், விவாகரத்து, வரதட்சிணைக் கொடுமை, கல்வி, குடும்பம் என பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால், இவர்களில் கல்வியறிவு பெற்றவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல்தான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தற்கொலை செய்து கொள்பவர்களில் மொத்த விகிதத்தில் கல்வியறிவு அற்றவர்கள் 23.4 சதம்தான், எஞ்சியவர்கள் படித்த "மேதைகள்' தான்.
உடலை வருத்தி மரணத்தைத் தைரியமாக எதிர்கொள்ளும் மன தைரியமும், துணிச்சலும் இருக்கும் இவர்களிடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்கும் தைரியம் குறைவாக இருக்கிறது. இதற்கு மாறிப் போன நமது வாழ்க்கை முறையே முழுமுதல் காரணம் ஆகும்.
நமது வாழ்க்கை முறையில் இருந்து விலகி, நமது கலாசாரத்துக்கு சிறிதும் பொருந்தாத வாழ்க்கை முறைக்குள் செல்ல நினைப்பதும் ஒரு காரணம் ஆகும்.
பெற்றோர் ஏதோ ஒரு சிறு பிரச்னைக்கு கண்டித்தாலோ அல்லது கோபப்பட்டு திட்டினால்கூட இளைஞர்கள் தற்கொலையை நாடுவது அதிகரித்து வருகிறது.
சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் கஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்வதைவிட, சமுதாயத்தின் மேல்தட்டில் அனைத்து வசதிகளுடன் இருந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கையே அதிகம் என அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
மேலும், தற்போது வளர்ந்து வரும் மென்பொருள் துறையில் கணினி முன்பு ஒரு நாளில் முக்கால்வாசி பொழுதைக் கழிக்கும் இளைஞர்கள், மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் இருந்து அவர்கள் மீள முடியாமல், தற்கொலை அவர்களை ஆள்கொள்ளும் சம்பவம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் பெங்களூரில் மென்பொருள் துறையில் இருப்போர் அதிகமாக தற்கொலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாறிப்போன வாழ்க்கை முறை மட்டுமின்றி, கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் இளைஞர்களிடம் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி பயின்று இயங்குகின்றனர். இதனால், இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் பணத்தை பிரதானமாக நினைப்பதால், வேறு எந்த விஷயங்களும் அவர்களை நாடுவது இல்லை. இதன் காரணமாக ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் வெறுப்படைந்து, தற்கொலையை நாடுகின்றனர்.
மேலும் இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் வரம்பை மீறி அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இதில் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் சென்று விடும் சூழ்நிலையில் வெறுப்பின் உச்சத்துக்கு செல்லும் அவர்களின் அடுத்த முடிவு தற்கொலையாக இருக்கிறது.
வாழ்க்கையில் ஒரு பகுதி பணமும், செல்வமும் இருந்த காலம் சென்று, இப்போது பணம்தான் வாழ்க்கையில் அனைத்தும் என்ற நிலை வந்து விட்டது. இதனால், பணத்தைத் தேடி தனது வாழ்க்கை முழுவதும் இயந்திரமாக இயங்கும் ஒருவர், வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய இதர விஷயங்களை இழந்து விடுகிறார். வாழ்க்கையில் ஒரு நேரத்தில் இழந்த விஷயங்களை எண்ணி வெறுப்புற்று, தற்கொலை முடிவுக்கு செல்கிறார்.
இந்த நிலை மாற முதலில் பணத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சமூகம் மாற வேண்டும், அதற்கு அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மேலும், குழந்தைகளுக்குப் பணத்தை சம்பாதிக்கும் கருவியாக மட்டும் கல்வியைக் கற்றுக் கொடுக்காமல், மனிதனின் வாழ்வில் அனைத்துக் கட்டங்களிலும் உதவக் கூடிய கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழாதவரை தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.
கே. வாசுதேவன்
நன்றி : தினமணி