Thursday, September 11, 2008

வரவேற்கத்தக்க நல்ல முடிவு!

நம்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்) திட்டத்தில் கட்டாயம் உறுப்பினராகச் சேர்வதற்கு வழிசெய்யும் நடவடிக்கைகளை இந்தியத் தொழிலாளர் நலத்துறை எடுத்துவருகிறது.
இதற்கான அறிவிப்பு ஒருசில நாள்களில் வெளியாகும். இந்தியாவின் சமூகநலத் திட்டங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் சேருவது சட்டபூர்வக் கடமையாக்கப்படும்.
இந்திய பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பி, இங்கு சில காலம் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், அவர்களும் இந்த திட்டத்துக்குச் சந்தா செலுத்துவது கட்டாயமாக்கப்படும்.
இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை ஊதியத்தில் 24%ஐ வருங்கால வைப்பு நிதிக்குச் செலுத்த வேண்டும். இதற்காக 1952ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரப்படும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இதற்கு சந்தா செலுத்துவது இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பணிபுரிந்துகொண்டு சம்பளம் வாங்கினாலும் தாங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்த நாட்டின் சமூகப் பாதுகாப்பு திட்டத்துக்குச் சந்தா செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்குப் "பணி முறிவு' ஏற்படுவதில்லை.
இனி நமது வருங்கால வைப்பு நிதிக்கு சந்தா செலுத்தும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பும்போது, அவர்களுடைய கணக்கில் சேர்ந்த தொகையை முழுதாகத் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். பிற நாடுகளில் இப்படி அனுமதிப்பது இல்லை. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணி புரிந்திருந்தால் மட்டுமே அவர்களுடைய வைப்பு நிதி சந்தாவைத் திரும்பத் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில ஆண்டுகள் மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இப்படி விட்டுவிட்டு வரும் தொகையே சில ஆயிரம் கோடிகள் இருக்கும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் வேலை அல்லது ஒப்பந்தம் முடிந்து அந்த நாடுகளிலிருந்து திரும்பும்போது, சமூகப்பாதுகாப்பு திட்டத்தில் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சந்தாவை முழுதாகத் திரும்பப்பெற, பல்வேறு வெளிநாடுகளுடன் இந்தியத் தொழிலாளர் நலத்துறை தனித்தனியாக இருதரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப் பேசிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஆலோசனை மற்றும் களப்பணிகளில் வேலை செய்யும் 80,000 இந்தியர்கள் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 6,750 கோடி ரூபாயை அமெரிக்க நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் தங்கள் பங்குக்குச் சந்தாவாகச் செலுத்துகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்களுடைய பணி அல்லது ஒப்பந்தம் முடிந்துவிட்டாலோ, அவர்களே ஏதாவது காரணத்துக்காக வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிவிட்டாலோ இந்தத் தொகை அவர்களுக்குத் தரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த அவல நிலையைப் போக்க பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தம் முடிந்துவிட்டது. பிரான்ஸ், ஹங்கேரி, செக். குடியரசு நாடு ஆகியவற்றுடன் பேச்சு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளுடன் இந்த மாதம் பேச்சு தொடங்கவிருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் பூர்வாங்க பேச்சு தொடங்கிவிட்டது. அமெரிக்கா ஒரு குழுவையே இதற்காக அனுப்பியிருக்கிறது.
வேலைக்காக சொந்த நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குப் போவோர் எண்ணிக்கை உலகிலேயே சீனாவில்தான் அதிகமாக இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். அடுத்த இடத்தை இந்தியா பிடிக்கிறது. இந்தியாவிலிருந்து 2 கோடிக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்றுள்ளனர்.
அதே சமயம், இந்தியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 57 லட்சம். நம்ப முடிகிறதா? இருந்தாலும் உண்மை இதுதான்.
வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோரின் நலன் கருதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கை உண்மையிலேயே அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.
நன்றி : தினமணி

மாற்று அணியே இப்போதைய தேவை

ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்சத் திட்ட அடிப்படையில் மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது' என ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்தேன்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வேண்டுமென பாமக கூறியுள்ளது. ஆனால் அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லை. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கான அறிகுறியும் இல்லை.
காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் இல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டுமென இடதுசாரி கட்சிகள் கூறியதோடு நில்லாமல் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றன. அகில இந்திய அளவில் இப்படி ஒரு நிலை எடுப்பது சரியாக இருக்கக் கூடும். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காங்கிரஸும் பாஜகவும் வலிமை வாய்ந்த கட்சிகள் அல்ல. இரு கழகங்களுக்குப் பின்னோடும் கட்சிகளே. இந்நிலையில் திமுகவைப் பொருத்தவரையில் காங்கிரஸுடனுள்ள கூட்டணியை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை. அதை எப்படியும் என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது. அதிமுகவைப் பொருத்தவரையில் தனது கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக் கொள்ள மறைமுகமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே கழகங்களுடன் கூட்டுச் சேருவது என்பது மறைமுகமாகக் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டுச் சேருவதாகிவிடும்.
தனித்துவிடப்பட்டுள்ள பாஜக., அதிமுகவுடன் அல்லது திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் காங்கிரஸ் பாஜக கட்சிகள் அல்லாத கூட்டணி என்று சொன்னால் அதிமுக கூட்டணியுடன்தான் கம்யூனிஸ்டுகள் கூட்டுச் சேர வேண்டியிருக்கும். இது எந்த வகையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு உதவும் என்பது சந்தேகத்திற்குரியது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற தியாகத் தழும்புகளை ஏற்ற கம்யூனிஸ்டுகள் நாடு விடுதலை பெற்ற பிறகும் விவசாயிகள் தொழிலாளர்கள் ஆகியோருக்காகத் தொடர்ந்து போராடி பல தியாகங்களைச் செய்தவர்கள். அடக்குமுறைகளை ஏற்றவர்கள். சேலம் சிறைப் படுகொலையை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. வெண்மணியில் ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பங்கள் நிலப் பிரபுக்களால் உயிருடன் கொளுத்தப்பட்டக் கொடூர நிகழ்ச்சி போன்றவற்றை தீரமுடன் சந்தித்த கம்யூனிஸ்டு தோழர்களின் போர்க்குணம் மங்கிவிட்டதாக நான் நினைக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய வேளை இது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில இடங்களுக்காக சமரசம் செய்து கொள்வது நாட்டிற்கும் மக்களுக்கும் பெருந்தீங்கை இழைத்துவிடும் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்க முடியாது.
மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் உரிமைகளைப் பெற பல போராட்டங்களை நடத்தி, பல உயிர்களை இழந்து தியாகத் தழும்புகளை ஏற்ற ஒரு கட்சி பாமக என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. தமிழ், தமிழகப் பிரச்னைகள், ஈழப் பிரச்னை ஆகியவற்றிலும் பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
திமுகவை எதிர்த்து அக்கட்சியை விட்டு வெளியேறி வந்து, அதிமுக ஆட்சியில் கொடிய பொடா சட்டத்திற்கு ஆளாகி தியாகத் தழும்புகள் ஏற்றும், தொடர்ந்து தமிழர் நலனுக்காகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்காகவும் குரல் கொடுத்து வரும் இயக்கம் மதிமுக.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களை வலுவான ஒரு சக்தியாக ஆக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. தமிழக உரிமைகளுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது.
மேலும் பல புதிய கட்சிகள் அமைக்கப்பட்டு யாருடன் கூட்டு என்பதை அறிவிக்காமல் உள்ளன. இக்கட்சிகளும் இரு கழகங்களும் கூட்டுச் சேராமல் செயல்படுமானால் அது வரவேற்கத்தக்கதாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் மாற்று அணி என்பது திமுக அதிமுக அல்லாத அணியாக மட்டுமே இருக்க முடியும். காங்கிரஸை எதிர்ப்பது என்ற பெயரிலேயோ மதவாத சக்திகளை எதிர்ப்பது என்ற பெயரிலேயோ இரு கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்பது எந்த வகையிலும் சரியானதாகவோ, தொலைநோக்குடன் கூடியதாகவோ இருக்க முடியாது. இரு கழகங்களும் தேர்தலுக்கு முன்பு இல்லாவிட்டாலும் தேர்தலுக்குப் பின்பு மத்தியில் காங்கிரஸோ அல்லது பாஜகவோ ஆட்சி அமைக்குமானால் அவர்களுடன் கைகோர்த்துக் கொள்ள போட்டி போடுவார்கள் என்பது கல்லின் மேல் எழுத்துப்போல உறுதியான ஒன்றாகும். 1971ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை இரு கழகங்களும் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டு சேரவும் மத்திய ஆட்சியில் பதவிகளைக் கேட்டுப் பெறவும் ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழ்நாட்டில் பலவீனமான நிலையில் இருக்கும் காங்கிரஸிற்கும் பாஜகவுக்கும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி மன்றங்களிலும் சில இடங்களைத் தாரை வார்த்து அக்கட்சிகளை உயிர்ப்பிக்கும் வேலையை இரு கழகங்களும்தான் மாறி மாறிச் செய்கின்றன. மாநிலத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக தில்லியில் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து நிற்க இரு கழகங்களும் கொஞ்சமும் தவறியதில்லை.
தமிழ்நாட்டில் தடம்பதிக்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாஜகவிற்கு ஆதரவு தந்து அவர்களைப் பல்லக்கிலே தூக்கிச் சுமந்து வளர்த்த பழியும் பாவமும் இரு கழகங்களையே சாரும். இன்று வரையிலும்கூட பாஜகவிற்கு எதிராக இரு கழகங்களும் குரல் கொடுக்கத் தயங்குகின்றன. ஏனென்றால் நாளை மீண்டும் தில்லியில் பாஜக ஆட்சி பீடம் ஏறுமானால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கை உணர்வின் விளைவே இதுவாகும்.
தமிழ்நாட்டிலிருந்து பத்து அல்லது பதினைந்து நாடாளுமன்றத் தொகுதிகள் தனக்குக் கிடைத்தால் போதும் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது. அதற்கிணங்க இரு கழகங்களுடனும் மாறி மாறிக் கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோமென மூச்சு விடாமல் முழங்கிக் கொண்டிருப்பது வேடிக்கையானதாகும். ஏனென்றால் தமிழகத்தின் கல்விக் கண்களைத் திறந்தவர் காமராஜ். அவரது பொற்கால ஆட்சியின் சிறந்த சாதனை இதுவேயாகும். ஆனால் கடந்த 40 ஆண்டு காலத்தில் இரு கழகங்களின் ஆட்சியில் கல்வி வணிகமாக்கப்பட்டுவிட்டது. காமராஜ் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற்றார்கள். இன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரிகளாகவும் இன்னும் பல துறைகளில் உயர் நிலையிலும் அவர்கள் உயர முடிந்ததென்று சொன்னால் காமராஜரின் தொலைநோக்குத் திட்டத்தின் விளைவாலேயே ஆகும். ஆனால் இரு கழகங்களின் ஆட்சியில் பணம் படைத்தோருக்கே கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது. கழகங்களின் இந்த பெருந்தவறுக்கு காங்கிரஸுக்காரர்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பதை காமராஜ் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
கடந்த 40 ஆண்டுகாலத்தில் இரு கழகங்களும் மாறி மாறி தமிழகத்தைச் சீரழித்ததைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சிங்காரவேலர், ராஜாஜி, பெரியார், திரு.வி.க., காமராஜ், ஜீவா, பி. இராமமூர்த்தி, ம.பொ.சி. போன்ற பெரும் தியாகத் தலைவர்கள் தம்முடைய வாழ்வை அர்ப்பணித்து எண்ணற்ற தியாகங்கள் செய்து உருவாக்கித் தந்த தமிழகம் எனும் பூங்கா குரங்கு கைப் பூமாலையாகச் சீரழிவதை எத்தனை நாளைக்கு நாம் அனுமதிக்கப் போகிறோம்?
இரு கழகங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்க வேண்டிய கடமை நம் முன் காத்து நிற்கிறது. தேர்தலில் போட்டி போடும் கட்சிகள், போட்டியிடாத கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தலித் அமைப்புகள், தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர் மாணவர் மகளிர் அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய அனைவரும் கரம் கோர்த்து நின்று போராட வேண்டிய வேளை வந்துவிட்டது. இது நமது நீங்காத கடமையாகும்.
இக்கடமையைச் செய்ய நாம் தவறினால் மக்கள் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
உண்மையில் இரு கழகங்களும் பலவீனமாக உள்ளன. 1967ம் ஆண்டிலிருந்து இன்று வரை கூட்டணி பலத்தினால் மட்டுமே இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கின்றன. இரு கழகங்களையும் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து நின்று தேர்தல் களத்தில் இறங்கினால் இரு கழகங்களின் உண்மை பலம் அம்பலமாகும். காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் இரு கழகங்களும் கூட்டுச் சேர்ந்தாலும் பயன் இருக்கப் போவதில்லை.
தேர்தலை விட, தமிழகத்தைப் பிற்போக்கு சக்திகளிடமிருந்து மீட்பது மிக மிக முக்கியமானது. அந்த மாபெருங்கடமை நம்மை எதிர்நோக்கியிருக்கிறது. கடமையாற்றுகிறோமா இல்லையா என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

சொல்லத் தெரியாமலே...

தமிழகத்தில் எந்தவொரு பட்டதாரி இளைஞரை எடுத்துக்கொண்டாலும் அவரது சான்றிதழ்களில் இருக்கும் மதிப்பெண்ணுக்கும் அவர்தம் திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தத் திறன் என்று கருதப்படுவதுகருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல், அந்தந்த சூழலுக்கு ஏற்ப செயல்படும் அறிவு, பொதுவாக மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவைதான்.
கல்லூரி வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண்களைவிட இந்த மூன்று விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன.
தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள்கூட, இந்த மூன்று எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோர் எந்தப் பாடப்பிரிவு மாணவர்களாக இருந்தாலும் தேர்வு செய்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "எல்லா பொறியியல் மாணவர்களுக்கும் ஒரளவு கணினி அறிவு இருக்கும். மேலும், வேலைக்குத் தேவையான கணினி அறிவை எங்கள் நிறுவனத்திலேயே பயிற்றுவிப்பது மிக எளிது' என்பதுதான்.
கருத்தை வெளிப்படுத்தும் திறன் இல்லாமல் போவதற்கு அடிப்படைக் காரணம் மொழியறிவு இல்லாததுதான். மொழியறிவு வேறு, மொழிப்புலமை வேறு. எல்லோரும் மொழிப்புலமை பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு தனித்தன்மை. நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் மொழியறிவு அனைவருக்கும் பொதுவானது.
இன்றைய தமிழக பட்டதாரி இளைஞர்களிடம் ஆங்கிலம் அல்லது தமிழில் 300 சொற்களில் எதைப் பற்றியாகிலும் எழுதும்படி சொன்னால், அவர்களால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவது இயலாத ஒன்று. இதற்குக் காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல. அதுதான் காரணம் என்றால், ஆங்கிலத்தையாவது தவறு இல்லாமல் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டுமே! மொழியறிவை வளர்த்துக்கொண்டு பேசவும், கருத்தை வெளிப்படுத்தவும் தனியாக எம்பிஏ படிக்க வேண்டும் என்ற அவல நிலை இன்றைய பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மொழிப்பாடம்தான் இப்போதும் உள்ளது. பெரிய மாற்றமில்லை. ஆனால் இன்றைய இளைஞனிடம் மட்டும் மொழியறிவு மறைந்தது ஏன் என்ற கேள்விக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
முதலாவதாக, ஒரு குழந்தை வீட்டிலும் தெருவிளையாட்டிலும் பயன்படும் தமிழ் மொழியை இயல்பாகக் கையாளும் திறன் பெறுவதற்கு முன்பே இன்னொரு மொழியைத் திணிக்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலம் என்பது அரசுப் பள்ளிகளில் 3ம் வகுப்பில்தான் தொடங்கியது. அதாவது, எல்கேஜி, யுகேஜி பிரபலமாகாத அந்த நாளில், 8 வயதில்தான் ஆங்கில அரிச்சுவடியை மாணவர் படிக்கத் தொடங்குவார். அந்த 8 வயது குழந்தை தமிழில் சரளமாகப் பேசவும், வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளின் பேச்சுக்குப் புத்திசாலித்தனமாகப் பதில் அளிக்கவும், கேட்ட கதையை மீட்டுரைப்பதிலும் திறம்பெற்றிருக்கும். ஒரு மொழியின் லாவகம் மனதிற்குப் பிடிபட்ட வயதில், அது இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் உள்வாங்குவது எளிதாக இருந்தது.
இரண்டாவதாக, இப்போது பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலத்தைத் தமிழில் சொல்லி பாடம் நடத்துவதால், மாணவர்கள் மனதுக்குள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வழக்கம் ஏற்பட்டு, அதுவே இரு மொழிக்கும் பெரும் மனத்தடையாக ஆகிவிடுகிறது. ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்கள் அதே மொழியில் பேசி, குழந்தைகளைப் பேசவைத்து பாடம் நடத்தும்போது மனம், ஒரு மொழிபெயர்ப்பு இயந்திரமாகச் செயல்படாமல், ஒரு கண்ணாடியைப்போல பிரதிபலிக்கும் கருவியாக மாறுகிறது. வேலைக்காக வேறு மாநிலம் செல்லும் படிப்பறியா இளைஞர்கள் அம்மாநில மொழியில் பேசும் திறன் பெறும் முறையும் இதுதான்.
இந்த இரு காரணங்களுமே நியாயமான காரணங்கள்தான். இதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தமிழக கல்வித் துறை ஈடுபட வேண்டும்.
எட்டாம் வகுப்புவரை மொழிக்கு மட்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி எதுவானபோதிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அறிவியல் மற்றும் கணிதத்தை அறிமுகம் செய்யும் அளவில் பாடதிட்டம் வைப்பதும், உயர்நிலைப் பள்ளி தொடங்கி மொழிப் பாடத்தைக் குறைத்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விலக்கி, அறிவியல் கணித, கணினி பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதுமான கல்விமுறைதான் இன்றைய தேவை.
நன்றி : தினமணி