Friday, September 12, 2008

வயதும் வாகனமும்

கார்களின் விற்பனையைவிட இரு சக்கர வாகன விற்பனை கடந்த இரு மாதங்களாக அதிகமாக உள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஹீரோ ஹோண்டா நிறுவனம்தான் ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 3.05 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலத்தைவிட இது 26 விழுக்காடு அதிகம். டிவிஎஸ் நிறுவனம் 11 விழுக்காடும், பஜாஜ் நிறுவனம் 5 விழுக்காடும் அதிக விற்பனை செய்துள்ளன.
கார்களின் விலையேற்றத்தால் இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்கிறது என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் ஜூன், ஜூலை மாதங்களில் திறக்கப்படுகின்றன என்பதும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கித் தந்து மகிழ்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மாநகர, நகரப் பேருந்துகளில் பயணிகள் நெரிசலும் இதற்கு ஒரு காரணம்.
மாநகரம் மற்றும் நகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சைக்கிள்களின் எண்ணிக்கைக்கு இணையாக மோட்டார் சைக்கிள்கள் எண்ணிக்கையும் உள்ளன. மாணவர் மட்டுமன்றி வளர்இளம் பருவத்தினர் இரு சக்கர வாகனங்களில் சிட்டாகப் பறப்பதை சாலைகளில் காண முடிகிறது.
ஆனால் இவர்கள் யாருக்குமே ஓட்டுநர் உரிமம் கிடையாது; கிடைக்கவும் சட்டத்தில் வழியில்லை.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்த நபருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தோமேயானால், ஒரு மாணவன் அல்லது மாணவி கல்லூரியில் சேர்ந்து இரண்டாம் ஆண்டில்தான் ஓட்டுநர் உரிமம் பெற இயலும். இருந்தும்கூட சாலைகளில் மாணவர்களும் மாணவிகளும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களில் செல்வது நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 16 வயது நிறைவடைந்த ஒரு நபருக்கு 49.9 சிசி வாகனம் மட்டும் (அதாவது கியர் இல்லாத வாகனங்கள்) ஓட்டுவதற்கான உரிமம் அல்லது பழகுநர் உரிமம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெருந்தொகையைச் செலவிடும் பெற்றோர் கியர் உள்ள வாகனங்களையே தேர்வு செய்கின்றனர்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத இவர்கள் விபத்தை ஏற்படுத்தினாலோ அல்லது விபத்தைச் சந்திக்க நேர்ந்தாலோ இவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிற்பதைத் தவிர்க்கவே முடியாது. அதற்கான தண்டனைகளும் அபராதங்களும் அவர்களது வாழ்க்கையில் கருப்பு நிழலாகத் தொடர்ந்து வரும். வாகன காப்பீட்டுத் தொகை கிடைப்பது அரிது. பாதிக்கப்படுவோருக்கான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதும் கடினம். ஆகவே இந்த 18 வயது என்ற நிபந்தனையை ஏன் தளர்த்தக் கூடாது?
வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் வாழ்க்கைச் சூழல் வேறாக இருந்தது. வெளியுலகத்தை அறிந்துகொள்ளும் வசதி, வாய்ப்புகள் குறைவாக இருந்தன.
வளர்இளம் பருவத்தினர் சைக்கிள் வைத்திருப்பதே பெரிய விஷயமாகக் கருதப்பட்ட காலம் அது!. ஆனால் இன்றைய கணினி உலகம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சிறார்கள் கணினியைப் பயன்படுத்தவும் கேட்பாரற்றுக் கிடக்கும் இணையதளங்களில் நுழையவும் செய்கிறார்கள்.
ஆகவே காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்ற வேண்டியுள்ளது. பாஸ்போர்ட் பெறுவோரில் உயர்கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே "குடிபெயர்வு சான்று தேவை இல்லை' ( ECNR) என்ற விதி தளர்த்தப்பட்டு, எஸ்எஸ்எல்சி படித்திருந்தாலே போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதைப்போலவே, மோட்டார் வாகனச் சட்டத்திலும் குறிப்பிட்ட கல்வித் தகுதியை எட்டியவர்கள், 50 சிசிக்கும் அதிக சக்தியுள்ள இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் பெற வயது நிபந்தனையைத் தளர்த்த வேண்டும்.
ஒன்று, சட்டத்தைத் திருத்த வேண்டும். இல்லையெனில், சட்டத்தை பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும்.

நன்றி ; தினமணி

சகோதர, சகோதரிகளே...

சகோதர, சகோதரிகளே, இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளையும், பல்வேறு மதங்களையும் சேர்ந்த 6 ஆயிரம் பேர் அசைவற்று நின்றனர். அதுவரை அப்படியொரு வார்த்தையை அவர்கள் மேடைப்பேச்சில் கேட்டதே இல்லை.
சீமான்களே, சீமாட்டிகளே வார்த்தைகளுக்கு பழகிப் போன அவர்களது காதுகளுக்கு, அந்த வார்த்தை சற்றே அதிர்ச்சியையும், ஒருவித சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. முதல் வார்த்தையிலேயே அங்கு கூடியிருந்தவர்களை அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர், அடுத்து பேசிய வார்த்தைகளால் அனைவரையும் கட்டிப்போட்டார்.
காவி உடை தரித்து மேடையில் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் அன்று அனைவரையும் வசீகரித்தான். அந்த இளைஞன் பேச தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் அவரது குரல் வளத்துக்கும், வார்த்தைகளின் கருத்துச் செறிவுக்கும் தங்ளையே இழந்துவிட்டதாக அடுத்த நாள் அமெரிக்காவில் வெளியான பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.
1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இதே நாளில் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வமத மாநாட்டில், கடைசியாக பேச சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டபோது அவர் உரையை யாரும் கேட்பதற்குத் தயார் இல்லை என்ற தோரணையில் ஆங்காங்கு கூட்டமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் சகோதர, சகோதரிகளே என்று பேச்சைத் தொடங்கியதும், நிசப்தம் ஏற்பட்டது. அனைவரது பார்வையும், எண்ணங்களும் விவேகானந்தரை நோக்கி செல்லத் தொடங்கியது.
அவர் பேசத் தொடங்கும் வரை, இந்தியா அறிவு இல்லாத மக்கள் வசிக்கும் நாடு, பொருளாதாரத்தில் மட்டுமன்றி அறிவிலும் ஏழைகளே அங்கு வசிப்பர், இந்து மதம் துறவறத்தை மட்டும் வலியுறுத்தும் என பலவாறு தாங்கள் நினைத்ததைப் பேசி வந்த மேலைநாட்டு மேதைகள் விவேகானந்தரின் உரையைக் கேட்ட பின்னர், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.
பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதும், இந்து மதத்தின் மீதும் பிற நாட்டினர் வைத்திருந்த சில தவறான எண்ணங்களுக்கு, அவர் சில நிமிஷங்களிலே முடிவு கட்டினார்.
மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி உயர்வாகவும், அவர்கள் வணங்கும் இறைவனை பற்றி புகழ்ந்தும், தங்களது கலாசாரமே உயர்ந்தது என்றும் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், விவேகானந்தர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பற்றி பேசிவிட்டு, இறுதியாக இம் மாநாட்டில் ஒலிக்கும் மணி ஒலி, மத வெறிக்குச் சாவு மணியாக இருக்கட்டும் என்று கூறியபோது அனைத்து மதத் தலைவர்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து, ஒன்றுபடச் செய்தது.
அதன்பின்னர் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டங்களில், விவேகானந்தர் பேச்சைக் கேட்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடினர். விவேகானந்தர் பேச்சே 10 நாள் மாநாட்டின் பிரதானமாக இருந்தது.
மாநாட்டின் முன்புவரை இந்தியர்களுக்கு அறிமுகமாயிருந்த விவேகானந்தர், மாநாட்டிற்குப் பின்னர் உலகின் அனைத்து நாட்டினருக்கும் அறிமுகமானார். இந்தப் புகழை அவர் சாதாரணமாகவோ, எந்த கஷ்டமும் இல்லாமலோ பெற்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது.
சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலாலும், முயற்சியாலும், சிகாகோவுக்கு அந்த ஆண்டு மே மாதம் கப்பலில் புறப்பட்ட விவேகானந்தருக்கு ஜூலை மாதம் சர்வமத மாநாடு என்று கூறப்பட்டு இருந்தது. சிகாகோவில் இறங்கிய விவேகானந்தருக்கு இடியேன ஒரு செய்தி கிடைத்தது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, செப்டம்பர் மாதம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.
குறைவான பணத்துடனே சென்றிருந்த விவேகானந்தருக்கு அந்த குளிர் பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது என்ற பல பிரச்னைகள் எழத் தொடங்கின. ஒருவாறு, திடீரென அறிமுகமாகிய சில நண்பர்கள் வீட்டில் தங்கி, நாள்களை ஓட்டினார் விவேகானந்தர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பதிவுசெய்ய வேண்டிய தேதி முடிந்துபோன நிலையில், பின்னர் பதிவு செய்தவதற்காக அவர் ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.
பலவாறு கஷ்டப்பட்டு மாநாட்டுக்குச் சென்ற விவேகானந்தர், ஒட்டுமொத்த பாரதத்துக்காகவே பேசினார். விவேகானந்தர் பேச்சுக்கு அடிமையாகிப் போன அமெரிக்கர்கள், மாநாட்டுக்குப் பின்னர் அவரை உடனே நாடு திரும்ப விடவில்லை. அமெரிக்கர்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் எங்கெல்லாம் பேச அழைத்தார்களோ, அங்கெல்லாம் பேசினார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சுக்கும் அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டார்.
அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பிரசங்கம் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1897ம் ஆண்டு பாரதம் திரும்பினார். தாயகம் திரும்பிய விவேகானந்தர், முதல் வேளையாக பேலூரில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு மடத்தை உருவாக்கினார். அந்த மடத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்ய, தனது சீடர்களை பணித்தார்.
இன்றுவரை அந்த மடத்தின் மூலம் அவரது சீடர்கள் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்து வருகின்றனர். அதோடுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கீழ் பல ஆயிரம் பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
115 ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய புதிய முகாந்திரம்தான் இன்றளவும் நமக்கு வெளிநாடுகளில் உள்ளது. இந்தவேளையில், விவேகானந்தரையும், அவரது கருத்துகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
கே. வாசுதேவன்
நன்றி :தினமணி