Saturday, September 13, 2008

அரசியலில் என்.எஸ்.ஜி.யின் தாக்கம்

பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு மன்மோகன் சிங்குக்கு நிகரான வேறு ஆள் இல்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரே காரணம், அணு மூலப்பொருள் வர்த்தகத்தில் இந்தியா ஈடுபடுவதற்கு அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி) கிடைத்த அனுமதிதான். 2004ல் பிரதமர் பதவி வேண்டாம் என சோனியா மறுத்ததால் மன்மோகனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. தற்போது, நிலைமை நேர் எதிராகத் திரும்பியுள்ளது. மன்மோகன் மறுத்தால்தான் பிரதமர் பதவி வேறு யாருக்கும் கிடைக்கும்.
என்.எஸ்.ஜி.யின் அனுமதிக்குப் பிறகு எழுந்துள்ள நிலையால் மன்மோகன் சிங்கின் மரியாதை கட்சிக்குள்ளும் வெளியிலும் உயர்ந்திருக்கிறது. அதனால் பிரதமர் பதவிக்கு வேறு யாரையும் பரிந்துரை செய்ய முடியாத தர்மசங்கடமான நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. சோனியா காந்தியே கூட இந்தக் கருத்தை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். மன்மோகன் சிங்குக்குப் பதிலாக ராகுல் காந்தியை முன்னிறுத்துவது பெரிய பிரச்னையாகாது என்றாலும், அவருக்கு அனுபவம் போதாது என்பதே பலரது கருத்து. அவருக்கு இன்னும் கொஞ்சம் புகழ் சேர்ந்த பிறகு, இதுபற்றி பரிசீலிக்கலாம் என்றே கட்சியின் பெரும்பான்மையோர் கருதுகின்றனர்.
வாக்குகளைக் கவரும் தலைவராகவும் பிரசார பீரங்கியாகவும் சோனியா இருப்பார். ஆயினும் அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் இருக்கும் சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. வேறு யாரையும் முன்னிறுத்தினால், அணுசக்தி ஒப்பந்தத்தை பிரசார ஆயுதமாகப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். ஆக, அணுசக்தி ஒப்பந்தம்தான் இந்த ஆட்சியின் வரலாற்றுச் சாதனை என்று கூறினால், அதில் மன்மோகன் சிங்கைக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி மன்மோகனுக்குக் கிடையாது. அவரது தேர்தல் பிரசார கூட்டங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கட்சியினர் யாருமே அவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதில்லை. ஆனால், இப்போது அணுசக்தி ஒப்பந்தத்தின் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் அனைவருமே மன்மோகனுக்குப் பின்னால் அணி திரண்டிருக்கிறார்கள். அவரும் கடந்த நான்கரை ஆண்டுகளில் இருந்ததைவிட தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கியிருக்கிறார். இதனால், அவர் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
என்.எஸ்.ஜியில் கிடைத்த அனுமதியால் இந்தியாவில் பிரதமர் பதவிக்கான அரசியல் யுத்தம் சூடுபிடித்திருக்கிறது. எல்.கே. அத்வானி, மன்மோகன் சிங், மாயாவதி ஆகியோர்தான் இப்போதைக்கு யுத்த களத்தில் இருக்கிறார்கள். அதற்காக, இவர்களில் ஒருவர்தான் பிரதமராக வேண்டும் என்பதில்லை. அதுதான் இந்திய அரசியல்.
பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தையும் என்.எஸ்.ஜி.யின் "அனுமதி' உறுதி செய்திருக்கிறது. தேர்தலை எப்போது நடத்துவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இப்போது காங்கிரஸ் கட்சியின் கைக்கு வந்திருக்கிறது. அதனால், தங்களுக்குச் சாதகமான நேரத்தில் தேர்தலை அறிவிப்பதற்கு அந்தக் கட்சிக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்தால் எழுந்திருக்கும் ஆதரவான நிலையைப் பயன்படுத்தி உடனடியாகத் தேர்தலைச் சந்தித்தால் அது, காங்கிரஸுக்கு சாதகமாக அமையும்.
ஆனால், தேர்தலுக்கு காங்கிரஸ் இன்னும் தயாராகவில்லை. கூட்டாளிகளும் பிடிவாதக்காரர்கள். மக்களவையின் பதவிக்காலம் முடியும்வரை தேர்தல் நடத்தக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள். லாலுவுக்கு இந்த எதிர்ப்பில் முக்கியப் பங்கிருக்கிறது. என்.எஸ்.ஜி.யில் இந்தியாவுக்குக் கிடைத்த அனுமதிக்குப் பிறகும்கூட இந்தப் பிடிவாதம் தளரவில்லை. தேர்தலில் தமது கட்சிக்கு தற்போது இருக்கும் இடங்களைவிடக் குறைவாகவே கிடைக்கும் என லாலு பயப்படுவதே இதற்குக் காரணம்.
எது எப்படி இருந்தாலும் அக்டோபர் 17ல் தொடங்கும் கூட்டத் தொடரே 14வது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடராக இருக்கும் என ஆளும் அணியில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு மக்களவை கலைக்கப்பட்டு வரும் பிப்ரவரியில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை.
இப்போதைய சூழலில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது கடினமாக இருக்கும். அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைக் கொண்டு அரசுக்கு என்னென்ன நெருக்கடிகள் தரலாம் என எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை எழுதிய கடிதத்தில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய "ரகசியம்' அம்பலமான விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கும். நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியைப் பாதுகாக்க பிரதமர் தவறிவிட்டார் என்று பாஜகவும் இடதுசாரிகளும் கடுமையாகத் தாக்குவார்கள். அவர் மீது உரிமை மீறல் பிரச்னை அல்லது அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம். இத்தனை பிரச்னைகளை சந்திப்பதைவிட மக்களவையைக் கலைப்பதே மேல் என காங்கிரஸ் கருதுகிறது.
அடுத்ததாக சமாஜவாதி கட்சியின் நெருக்குதல் உத்தி. நம்பிக்கைத் தீர்மானத்தின்போது, அரசுக்கு முழு ஆதரவு கொடுத்தது சமாஜவாதி. அரசில் சேரவேண்டும் என்ற கோரிக்கையையும் படிப்படியாக விலக்கிக் கொண்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 8 முதல் 12 மக்களவைத் தொகுதிகளைத்தான் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க முடியும் என்று கூறியிருப்பதன் மூலம் கூட்டணிக்கு வேட்டு வைத்திருக்கிறார் அமர்சிங். இப்படிப்பட்டவர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதைவிட தேர்தலே சிறந்தது என காங்கிரஸ் நினைக்கிறது.
என்.எஸ்.ஜி. அனுமதியால் மூன்றாவது அணியிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளில் சில வேண்டாக வெறுப்பாக காங்கிரஸை ஆதரிக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால், என்.எஸ்.ஜி.யின் அனுமதிக்குப் பிறகு இந்த நிலை மாறியிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த கட்சிகள் அனைத்தும் மாயாவதியின் பின்னால் மூன்றாவது அணியாகத் திரண்டு கொண்டிருக்கிறன.
மாயாவதி, இடதுசாரிகள், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மூன்றாவது அணியை வலுப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். அதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் அரசியலாவதில் கவனிக்கத் தக்க மற்றொரு அம்சமும் இருக்கிறது. அது, இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதுதான். தேர்தல் நேரத்தில் அவர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதை இப்போதே கணிக்க முடியாது. எனினும், ஒப்பந்தத்தை வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசிவரும் மாயாவதியை முஸ்லிம்கள் ஆதரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இடதுசாரிகளின் ஆதரவும் அவருக்குக் கிடைத்திருப்பதால் இந்தக் கருத்து வலுப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இப்படி நடந்தால், நாட்டின் பிறபகுதிகளிலும் அது எதிரொலிக்கும். முஸ்லிம் தலைவர்களில் பெரும்பான்மையினர் உயர்ஜாதியினராக இருப்பதால், தலித்முஸ்லிம் கூட்டணி என்பது நடைமுறையில் கடினமானதாகவே இருக்கும் என்ற கருத்தும் உள்ளது. எனினும், இது சாத்தியமானால், அது காங்கிரஸுக்கு பெருத்த அடி.
அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலமாக அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இதனால், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக இந்தியாவும் வீரர்களை அனுப்ப வேண்டிய நிர்பந்தம் வரும். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா மேற்கொள்ளும் நிலைக்கு ஆதரவாகவே இந்தியாவும் முடிவு எடுக்கும் நிலை ஏற்படும். கடந்த 60 ஆண்டுகளில் நட்புறவுடன் இருந்த சில முஸ்லிம் நாடுகளுடன் கூட இந்தியாவுக்கு கசப்புணர்வு தோன்றும். மிக மிக நெருக்கடியான நிலை அது.
இந்த விஷயம், இந்திய முஸ்லிம்களின் மனநிலையில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அண்மைக் காலமாக சிமி இயக்கம் நாடு முழுவதும் வலுவடைந்துள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அமெரிக்காவின் பிடியில் இந்தியா சிக்குவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.
1991ல் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது, மிகப் பெரும் பொருளாதார மாற்றத்தைச் சந்தித்தது. அதற்கு அவரே காரணமாகவும் இருந்தார். அது ஒருவகையில் வெற்றி என்றே கூறலாம். தற்போது அவரே பிரதமராக இருக்கும் நிலையில், மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை இந்தியா சந்திக்கிறது. இது முன்னேற்றமா வீழ்ச்சியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

புரியாத புதிராய் அவசர சிகிச்சை மையங்கள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்து அவசர சிகிச்சை மையங்கள் விழிப்புணர்வுடன் இயங்குவதால், சாலை விபத்துகளில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்பது உண்மை.
ஆனால், விபத்தில் காயமடைந்தவர்கள் இந்த சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும்போது அவர்கள் உள்ளே சிக்கித் தவிக்கும் நிலைதான் பரிதாபமாக உள்ளது.
இதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் காயங்களுடன் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை.
அப்படியே காப்பாற்றினாலும்கூட, போலீஸ் விசாரணையில் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
இந்த நிலை இப்போது இல்லை. நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி அளிக்க அரசு ஆங்காங்கே விபத்து அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
20062007 புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் 50 கி.மீக்கு ஒரு விபத்து அவசர சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
மொத்தம் உள்ள 100 மையங்களில், 64 மையங்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
36 மையங்கள் அதிகபட்சம் மாதம் ரூ. 40 ஆயிரம் தமிழக அரசின் பங்களிப்பு நிதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த 36 மையங்களுக்கும் அரசு மாதம் ரூ. 1.74 கோடி, சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கி வருகிறது.
இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டதால் சாலை விபத்துகளில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
20062007 புள்ளிவிவரப்படி, கொடூர சாலை விபத்தில் உயிருக்கு போராடிய 16,796 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த அவசர சிகிச்சை மையங்களின் செயல்பாடுகளினால் உயிர்கள் காப்பாற்றப்படுவது என்பது உண்மை. ஆனால் அதற்கு பின்னணியில் உள்ள நிலையைப் பார்த்தால்தான் பரிதாபமாக உள்ளது.
தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்களே பெரும்பாலும் இந்த மையங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர். விபத்து நடத்தவுடன் காயமடைந்தவர்களை மீட்டு தங்கள் மருத்துவனைக்கு எடுத்து வருகின்றனர் இவர்கள்.
முதலில் முதலுதவி செய்ய வேண்டும். அதன்பிறகு, காயம் பலமாக இருந்தால் காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு எவ்வித கட்டணமும் இன்றி தீவிர சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்பது அரசு விதி.
காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற விரும்பினால், அதற்கு எவ்விதத் தடையும் இல்லை.
அவசர சிகிச்சை மையங்களை நடத்தும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் முதலுதவி என்ற பெயரில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை வார்டில் சேர்த்து விடுகின்றனர்.
உறவினர்கள் யாரையும் உள்ளே சென்று பார்ப்பதற்குகூட இவர்கள் அனுமதிப்பதில்லை
அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியோ தீவிர சிகிச்சை செய்வதற்கான அவசியம் குறித்தோ காயமடைந்தவர்களிடமோ, அல்லது அவரது உறவினர்களிடமோ மருத்துவர்கள் கூறுவதில்லை.
மணிக்கணக்கில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை வார்டில் வைத்து விடுகின்றனர். பிறகு உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகே, வெளியே உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கின்றனர்.
மருத்துவமனையை விட்டு செல்லும் போது சிகிச்சைக்குச் செலவாக பெரும் தொகையை சொல்லி அதை செலுத்த வேண்டும் என்கின்றனர்.
காயமடைந்தவரின் உயிருக்கு ஒருவேளை ஆபத்து ஏற்படும் என தெரிந்தால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விடுகின்றனர்.
அந்த வாகனத்திற்கான கட்டணத்தைக்கூட உறவினர்களிடம் வசூலித்து விடுகின்றனர்.
சில நேரங்களில் அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து இருப்பதாகக்கூறி ஏமாற்றிப் பணம் வசூலிப்பதாகவும் உறவினர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் ஏழைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் சில மருத்துவமனைகளில் உறவினர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்குமிடையே தகராறே ஏற்படுகிறது. இந்த குறையை யாரிடம் சென்று முறையிடுவது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இதனால் அவசர சிகிச்சை மையங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறும் இதுபோன்ற மருத்துவமனைகளை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். அந்த மருத்துவமனைகளில் போதுமான அடிப்படைக் கட்டமைப்பு மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.
புரியாத புதிராகவும், தொடர்ந்து தவறு செய்யும் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவனை மையங்களுக்கான அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும்.
சு . பழனி
நன்றி : தினமணி