Tuesday, September 16, 2008

வீடுதோறும் கஞ்சித்தொட்டி

அன்புப் பேரன் அநிருத்,
இந்தக் கடிதத்தை உன் தந்தை முகிலனுக்கு எழுத நினைத்தேன். அதில் பயனில்லை என்பதால் உனக்கு எழுதுகிறேன். உன் பெயரில் சம்ஸ்கிருதம் இருந்தாலும், உன் மரபீனியில் தமிழ் உணர்வு இருக்கவே செய்யும்.
ஆகவேதான். அரசின் உயர்அலுவலரின் மகனாகிய, இருசக்கர வாகனத்தில் பறக்கும் உனக்கு, ஏழைத் தமிழன் பற்றிச் சொல்லவே இக்கடிதம்.
தமிழகம் முழுவதும் எழும் வாழ்த்தொலிகள் உன் காதுகளையும் எட்டியிருக்கும். ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. என் தலைவர் அண்ணாவின் நூற்றாண்டு விழா அறிவிப்பு இது. ஆனால் எனக்கு இது மகிழ்ச்சி அளிக்கவில்லை.
மின்தொடர் வண்டிகளிலும், பேருந்துகளிலும் விற்கப்படும் மிகச்சிறிய வேர்கடலைப் பொட்டலங்கள்கூட ரூ.2 என்றாகிவிட்டது. கட்டணக் கழிப்பறைகளில்கூட ரூ.2 கட்டணம் ஒரு ரூபாய் என்பதற்கு இன்றைய உலகில் மதிப்பே இல்லை. ஆனால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஏன்? இது இலவசம் என்று சொல்லாமல் கொடுப்பதற்கு ஒப்பானது.
இதில் என்ன தவறு? வயிற்றுக்குச் சோறிட வேண்டும் என்பதுதானே பாரதியின் வரிகள் என்று கேட்பாய். அநிருத், உன் இளமனதுக்கு உலக இயல்புகள் தெரியா.
சமூகவியல் நூல்கள் எழுதிய அமெரிக்க அறிஞனின் நூல் "நடுத்தர மக்களின் துரோகம்' (Betrayal of Middle class). அந்த நூல் சொல்லும் விஷயம் இதுதான். மக்களாட்சியில் பத்து அல்லது பதினைந்து விழுக்காடு மக்கள் உன் தந்தையைப் போல, வசதியானவர்கள். அவர்களுக்குப் பணம் மட்டுமே குறிக்கோள். அதனால் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள். அடுத்த நிலையில் உள்ள நடுத்தர மக்கள் கல்வியறிவு, ஓரளவு நல்ல வாழ்க்கை பெற்றிருந்தபோதிலும், அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி படைத்திருந்தாலும் அவர்கள் கோழைகள். எதிர்க்கவே மாட்டார்கள். வீட்டுக்குள் இருந்தபடியே திட்டிக்கொண்டிருப்பார்கள். வாய்ச்சொல் வீரர்கள். அதிலும் இரு கட்சியாகப் பிரிந்து கிடப்பார்கள். நன்றி சிறுதும் இல்லாதவர்கள்.
ஆனால், தெருவில் இறங்கித் திட்டவும், கேள்வி கேட்கவும் துணிச்சல் உள்ளவன் ஏழை மட்டுமே. அரசனின் அம்மணத்தை எள்ளி நகையாடும் சிறுகுழந்தை போன்றவன் ஏழை. வெளிப்படையான மனிதன். நன்றி நினைப்பவன். உப்பிட்டவரை அது உள்ளவரை நினைப்பவன். ஆகவேதான் அவன் கேள்வி கேட்காமலும், வீதியில் இறங்காமலும் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறது அரசு. அவன் நன்றிக்கடன் பட்டவனாக, வாக்களிக்கும் நேரத்தில் அவன் மனச்சான்றை நன்றியால் மயங்கும்படி பார்த்துக்கொள்கிறது அரசு..
காய்கறி விலை உயர்கிறது. இன்றியமையா உணவுப்பொருள்களின் விலை உயர்கிறது. வாகன எரிபொருள் விலை உயர்கிறது. கல்விக் கட்டணம் லட்ச ரூபாய்க்கு மேலாகச் செல்கிறது. ஆனால் அரசுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. ஏனென்றால் இவற்றால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். உன் தந்தையைப் போன்று அரசின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இந்த விலையேற்றம் கவலையளிக்காது. விலையேற்றம் 12 விழுக்காடு உயர்ந்தால் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் 40 விழுக்காடு உயருமெனில், அதிலும் அவர்கள் அரசு இயந்திரத்தின் அங்கமாக இருப்பதால், அவர்களுக்கு இதுபற்றிய கவலை இல்லை.
ஆனால், விலையேற்றத்தின் வலி ஏழையைத் தொட்டுவிடக்கூடாது. ஆகவே அவனுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. அதாவது இலவசம் என்று சொல்லும் விலையில்!.
பொழுதுபோக்குக்கு வண்ணத் தொலைக்காட்சி. அடுத்து அரசு கேபிள் இலவசம். ஏழைக் குடிசைக்கு மின்சாரம் இலவசம். எரிவாயு இணைப்பு போல இதையும் இலவசமாக கொடுக்க இயலாதா? என்று நீ கேட்பாய். இயலாது. ஏனென்றால், உணவுப்பொருளை இலவசமாக பெறுவது பிச்சை என்ற உணர்வு இன்றும்கூட தமிழனிடம் மரத்துப்போகாமல் உள்ளது. கோயில் விழாக்களைத் தவிர (திருக்கோயில் அன்னதான திட்டத்தில்கூட, சாப்பிடும் பக்தர்கள் எத்தனைப் பேர்? போய்ப் பார்) மற்ற இடங்களில் இலவச உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தால் வாங்குதற்கு ஆள் இருக்காது. ஆகவேதான் இலவசம் போல, ஆனால் ஒரு ரூபாய் விலையில்!
அனைவருக்கும் பொதுவாக கஞ்சித் தொட்டி வைத்தால் ஏழைகள் பிச்சையெடுக்கும் அவமானம் கருதி வாங்கத் தயங்குவார்கள். அதனால் வீடுதோறும் கஞ்சித்தொட்டி என்கிற அளவில் இந்த "ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்'த் திட்டம்.
அநிருத், ஏழையின் தேவை மிகக் குறைவு. குடும்பத்துக்கான சோறு. அதற்கு ஊறு நேராமல் பார்த்துக்கொள்பவர் யாரு என்றாலும் அவனுக்கு அவர் நல்லவரு. "அளித்தல் அரசின் கடனே; அந்த அரசுக்கே வாக்களித்தல் நன்றிக்கடனே! இது அரசியல்நானூறு சொல்லும் பாடம்.
வயிற்றுக்கு சோறிட வேண்டும். ஆனால் அந்த சோறு கிடைக்கும் வழியைச் சொல்லி, உழைப்பைப் பெற்றுத்தான் தரவேண்டும். உணவு இலவசம் என்றால், ஒரு சமூகம் தன்மானத்தை இழக்கும். உழைப்பை மறக்கும் சமூகம் துன்பத்தை எதிர்கொள்கிறது என்பதே உலக வரலாறு.
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றையும் செய்பவன் இறைவன் என்கிறார்கள். மக்களாட்சியில் இதைச் செய்யக்கூடியது தேர்தல். அதாவது எலெக்ஷன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது அண்ணா சொன்னது. ஆனால் ஏழையின் சிரிப்பில் "எலக்ஷனை' காண்போம் என்றால்...
உனக்கு தமிழ் படிப்பது கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும் இந்த தாத்தாவுக்காக இந்தக் கடிதத்தை முழுதும் படிப்பாய் என நம்புகிறேன்.
அன்புடன்,
நெடுஞ்சேரலாதன்.
கட்டுரையாளர் :இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி