Thursday, September 18, 2008

புரிதல் இருந்தால் சாதிக்கலாம்!

மாணவர்களுக்கு கல்வி சுமையாவதும், சுவையாவதும் அவர்களுக்கு அமையும் ஆசிரியர்களைப் பொருத்தே நடக்கிறது. மாணவர்கள் நெறிப்படுவதும் தரமான கல்வியால்தான். ஆனால் எத்தனை பேருக்கு வாய்க்கிறது தரமான கல்வி?
"பணமிருந்தால் பவிசாய்ப் படிக்கலாம்' என்ற நிலையில் தான் இன்றைய கல்வி முறை இருக்கிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்தே கணினி முதல் நீச்சல் வரை, உயர்தரப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது. இதற்குக் கட்டணமும் லகரங்களில் வசூலிக்கப்படுகிறது என்பது வேறு விஷயம். அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுடன் இயங்கி வரும் இதுபோன்ற பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, குழந்தைகளுக்குக்கூட பள்ளியில் மாலை நேர டியூசன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் குழந்தைகள் படித்து வரும் அரசுப் பள்ளிகள் இன்றும் பரிதாபகரமான நிலையிலேயே இயங்கி வருகின்றன. சத்துணவு என்ற பெயரில் வழங்கப்படும் மதிய உணவிலாகட்டும், சுகாதாரத்தைப் பேணவேண்டிய கழிப்பிடமாகட்டும் எல்லாமே இங்கு பிரச்னைதான். இடிந்து விழும் நிலையிலான மேற்கூரை; ஆடிக் காற்றுக்கு அடியோடு சாய்ந்து விடுமோ என அச்சுறுத்தும் பக்கச் சுவர்கள்; மழை பெய்தால் மரத்தடிக் கல்வி; சுற்றுச்சுவர் இல்லாமல் பாம்பு, பல்லிகள் பள்ளிக்குள் படையெடுப்பு என மாணவர்கள் சந்திக்கும் துயரப் பட்டியல் நீளும்.
இது எல்லாவற்றையும் விட முக்கியம் ஆசிரியர்கள். அனேகப் பள்ளிகள் இன்றும் ஓராசிரியர் பள்ளிகளாகவே இயங்கிவருவது துரதிஷ்டவசமானது. இருக்கும் ஒரு ஆசிரியரும் திடீரென்று முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் வெளியில் காத்திருந்து விட்டு திரும்பிச் செல்லவேண்டிய நிலை.
கிராமப் பகுதி, நகர் பகுதி என பாகுபாடில்லாமல் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது பொதுவான விஷயமாகிவிட்டது. இதனால் பள்ளியில் பாதி நேரம் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் நேரத்தைப் போக்க வேண்டியுள்ளது; அல்லது இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்கள் ஒன்றாக அமர வைத்து பாடம் போதிக்கப்படுகிறது. சிறிய வகுப்பறைகளில் அதிகளவிலான மாணவர்கள் அடைக்கப்படுகையில் அவர்கள் பாடத்தை கவனிப்பதைவிடவும் சேஷ்டைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுவதுதான் அதிகம்.
சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை டீ வாங்கவும், போண்டா வாங்கவும் அனுப்புவதாக புகார்கள் அடிக்கடி வருவது உண்டு. கிராமப்புறங்களில் வீட்டு வேலைகளைக் கூட ஆசிரியர்கள் செய்ய வைப்பதாக மாணவர்கள் புலம்புவதும் உண்டு. இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் காட்டும் "ஒத்துழைப்பை' வைத்துத்தான் அவர்களுக்கு "முக்கியத்துவம்' காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பணி நேரத்தில் பள்ளியிலேயே சீட்டுப் பிடிப்பது முதல் புடவை வியாபாரம் வரை செய்யும் பொறுப்பான(?) சில ஆசிரியப் பெருந்தகைகளையும் இங்கு பார்க்கலாம். தனியார் பள்ளிகள் போல் இங்கு ஆசிரியர்கள் வேலைப் பளுவால் கசக்கிப் பிழியப்படுவதில்லை என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு "ஆல் பாஸ்' முறை அமலானது. இதனால், சில ஆசிரியர்களுக்கு வேலை இன்னும் சுலபமாகிவிட்டது எனலாம். ஆசிரியர்கள் வகுப்புக்கே வருவதில்லை என கல்லூரி மாணவர்கள் போராடிய நிலை மாறி, இன்று பள்ளி மாணவர்களும் "நல்ல ஆசிரியர்கள்' கேட்டு நடுத்தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டனர்.
அண்மையில்..கோவையில் ஒரு அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பாடம் நடத்தும் ஆசிரியர் வகுப்புக்கே வருவதில்லை என்றும், வந்தாலும் பாடம் நடத்துவதில்லை என்றும் கூறி பள்ளிக்கு வெளியில் வந்து மாணவர்கள் போராடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உடனடி நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதேபோல் மற்றொரு பள்ளியிலும், "ஆசிரியைகள் சரிவர பாடம் நடத்துவதில்லை; அவர்களை மாற்றவேண்டும்' என்று மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனுக் கொடுத்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது அதிகரித்து வருவது ஆபத்தானது. "எஸ்எஸ்ஏ' எனப்படும் "சர்வ சிக்ஷ அபியான்' திட்டம் மூலம் பள்ளி இடைநிற்றல் மாணவர்களை திரும்பவும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப் புறங்களில் மிகுந்த அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் வெற்றி பெறுவது சாத்தியம். ஆனால், திரும்பவும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தே இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து தீர்மானிக்கலாம்.
எனவே, ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்படாத பட்சத்தில் மாணவர்கள் திசைமாறும் நிலை நிச்சயம் ஏற்படும். அவர்களது எதிர்காலத்தையே இது கேள்விக்குறியாக்கும். ஆசிரியர்மாணவர் புரிதல் இருந்தால் மட்டுமே சாதனைகள் சாத்தியமாகும்.
கோவை ஜீவா
நன்றி : தினமணி