Wednesday, October 1, 2008

நீதித்துறையில் தப்புத் தாளங்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஊழியர்களின் பி.எப். பணத்தில் ரூ. 7 கோடி மோசடி நடந்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 நீதிபதிகளிடம் சி.பி.ஐ., ஊழல் சம்பந்தமாக விசாரிப்பது இதுவே முதல் தடவையாகும். காஸியாபாத் நீதிமன்றத்தில் இந்த மோசடி நடந்துள்ளது.

எட்டு ஆண்டுகளாக நடந்த இந்த மோசடியில் நீதிபதியாக இருந்தவர்கள் பொய்யான விண்ணப்பங்களுக்குத் தாங்களே கையெழுத்து போட்டு அனுமதி தந்துள்ளனர். இதில் பணம் மட்டும் இல்லாமல், விலை உயர்ந்த பொருள்களையும் நீதிபதிகள் கையூட்டாகப் பெற்றதாகத் தகவல்களும் உலவுகின்றன.

இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், ஏழு பேர் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், பனிரெண்டு பேர் உத்தரப்பிரதேச கீழாண்மை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும் மீதமுள்ள ஆறு பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாகவும் உள்ளனர். இவர்களை எல்லாம் விசாரித்து சி.பி.ஐ. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க நீதிபதிகள் அரிஜித் பசாயத், வி.எஸ். சிர்புர்கர், சிங்வி ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். துலாக்கோல் போன்று நீதியை வழங்கும் நீதிபதிகள் குற்றச்சாட்டுக்கு அப்பால் இருந்து தங்களின் பொறுப்பை உணர்ந்து பணியாற்றிய காலங்கள் உண்டு. நீதிபதிகள் சுப்பாராவ், எச்.ஆர். கன்னா, வி.ஆர். கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, துணைக் குடியரசுத் தலைவராக விளங்கிய இதயத்துல்லா போன்ற பல நீதிபதிகள் தாங்கள் வகித்த பதவிக்குப் பெருமை தேடித் தந்தனர்.

நமது நீதித்துறையின் நம்பகத்தன்மை 80களின் இறுதியிலிருந்து கேள்விக்குறியாகி விட்டது. நீதிபதி செளமித்ரா சென் 1993ல் இந்திய ஸ்டீல் ஆணையகம் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்கு இடையே நடந்த வழக்கில் ரூ. 32 லட்சத்தை வாங்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அந்தப் பணத்தைத் தன்னுடைய கணக்கில் வங்கியில் சேர்த்து விட்டார் என்றும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் 100 எம்.பி.க்கள் ஆதரவும், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களின் ஆதரவும் தேவை. ஏற்கெனவே 199192ல் நீதிபதி வி. இராமசாமி பிரச்னையில் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்று செளமித்ரா சென் விஷயத்திலும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீதிபதி சென் மற்றும் 26 நீதிபதிகளின் பிரச்னைகள் எழுப்பப்படும் என்று நம்பப்படுகிறது. நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் சங்கிலித் தொடர்போல நீட்சி அடைகிறது.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நீதிபதி வி. இராமசாமிக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இராமசாமி பணியாற்றியபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. புகார் எழுப்பப்பட்ட நேரத்தில் இராமசாமி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். தீர்மானத்தை முன்மொழிந்து 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 196 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். தீர்மானத்துக்கு 3ல் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காததால் நீதிபதி இராமசாமியைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் மீது அவர் குடும்பத்தார் நடத்திய வணிகத்திற்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எம். புன்ஜிக்கு எதிராக 1998ம் ஆண்டு 25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால், மூன்று முக்கிய நிபந்தனைகளை அவர்கள் நிறைவு செய்யவில்லை. நீதிபதிக்கு எதிராக எழுப்பப்படும் புகாரில் முழுமையான ஆதாரங்கள் இருக்க வேண்டும். அவற்றைத் தீர்மான நகலுடன் இணைக்க வேண்டும். குற்றச்சாட்டு பற்றிய விவரங்கள் முன்னணி ஊடகங்களில் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இந்த மூன்று நிபந்தனைகளையும் நீதிபதி எம்.எம். புன்ஜிக்கு எதிரான புகாரில் நிறைவு செய்ய புகார் எழுப்பிய எம்.பி.க்களால் இயலவில்லை. எனவே, இந்தப் புகார் நாடாளுமன்ற விவாதத்திற்கு வரவில்லை. இதே புன்ஜியைதான் மத்திய மாநில உறவுகளைக் குறித்து அறியும் குழுவின் தலைவராக இன்றைய மத்திய அரசு நியமித்துள்ளது.

நீதிபதி ஆனந்த் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆட்பட்டார். கோல்கத்தாவில் பகாபதி பிரசாத் பேனர்ஜி என்ற நீதிபதி அங்குள்ள உப்பு ஏரி அருகில் உள்ள விலையுயர்ந்த வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றார் என்றும் அதைத் திரும்ப வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டார்.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டுகள் எழும்பொழுது மாவட்ட மற்றும் கீழாண்மை நீதிமன்ற நீதிபதிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நீதிபதிகள் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் எழாவண்ணம் நீதித்துறையும், நீதித்துறையைச் சார்ந்தவர்களும் கவனம் செலுத்த வேண்டும். தற்பொழுது ஒரு நீதிபதியிடம் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் வாதாடினால் வழக்கில் வெற்றி பெறலாம் என்ற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நீதிமன்றங்களின் மீது தவறான குற்றச்சாட்டுகள் வலுவடையும் வகையில் அமையுமானால், அது ஜனநாயக அமைப்பிற்கு முற்றிலும் முரணானதாக ஆகிவிடும். தற்பொழுது நீதிமன்றங்களில் இடைக்கால நிவாரணங்கள் கொடுக்கும்பொழுது சரியான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு பிரச்னைக்கு ஒரு நீதிபதி இடைக்கால நிவாரணம் தருகிறார். அதே பிரச்னை வேறு நீதிபதியிடம் வரும்பொழுது இடைக்கால நிவாரணங்கள் மறுக்கப்படுகின்ற சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நீதித்துறையின் மீதான நம்பிக்கை காக்கப்பட வேண்டும்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் நீதித்துறை முக்கியத் தூணாகும். நீதிமன்றம் நாதியற்றவர்களுக்கு நம்பிக்கையாகவும், திக்கற்றவர்களுக்கு திசையாகவும் விளங்கக்கூடிய மக்களின் நம்பிக்கைக் கருவறையாகும். நீதித்துறை நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் செயல்பட கண்ணியமிக்க நீதிபதிகள் இன்றைக்குத் தேவை. நீதித்துறையிலும் இன்றைக்கு வம்சாவளி முறை புகுந்துவிட்டது. நீதிபதிகளின் உறவினர்கள் நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் தங்கள் தந்தையார் நீதிபதியாகப் பணியாற்றுகின்ற நீதிமன்றங்களில் இன்றைக்குப் பணிகளை மேற்கொள்வது பல சந்தேகங்களைக் கிளப்புகின்றன. இந்தியா முழுவதும் 540 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஏறத்தாழ 120 நீதிபதிகள் ஏற்கெனவே பதவி வகித்த நீதிபதிகளின் உறவினர்கள் என்ற புள்ளி விவரமும் உண்டு. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான நடைமுறைகளுக்காக கடைப்பிடிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியின் திடமான, நியாயமான செயல்பாடுகளுக்காக அந்நாட்டு வழக்கறிஞர்கள் அவரைப் பாராட்டியது மட்டுமல்லாமல் அந்நாட்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அது வழிவகை செய்தது. இன்றைக்கு நீதிபதிகளின் போக்கு கவலை அளிக்கிறது. அவர்கள் அன்பளிப்பு பெறுவதும், கேளிக்கை விருந்துகளில் கலந்துகொள்வதும் நீதித்துறைக்கு நல்லதல்ல. இதுபோன்ற கொடிய புற்றுநோய் வருவதற்கு முன் அதைத் தடுக்க வேண்டும்.

நீதிபதிகள் சமுதாயத்தில் கலக்கக் கூடாது என்ற எண்ணம் கிடையாது. ஆனால் அதுவே பல சந்தேகங்களுக்கும், பல பிரச்னைகளுக்கும் துணையாகி விடுமோ என்ற பயம் ஒருபக்கம் எழுகிறது.

நீதிபதிகளின் மீது பொதுவாக ஊழல், லஞ்சம், நடுநிலை இல்லாமை, சமூகப் பார்வை இல்லாமை என்ற கொடிய இயல்புகள் இருப்பதாக வி.ஆர். கிருஷ்ணய்யர் குறிப்பிடுகின்றார். சில நீதிபதிகள் வழக்குகளை விரைவில் முடிக்காமல் இழுத்தடிப்பதாலும் வழக்குகளின் தன்மைகள் புரியாமல் சில வழக்குகளின் தீர்ப்புகள் இருப்பதாலும் பிரச்னைகள் எழுகின்றன என அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

பிரபல மூத்த வழக்கறிஞர் சாந்திபூஷண், 40 சதவீதம் பேர் உயர் நீதிமன்றங்களிலும் 80 சதவீதம் பேர் கீழாண்மை நீதிமன்றங்களிலும் ஊழலில் சிக்கியுள்ளனர் என்றும், இதை ரகசியமாகப் பெறுவதால் புலன் விசாரித்தே நிரூபிக்க முடியும் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு ஊழல், மற்றொரு பக்கம் வழக்கை பைசல் செய்வதில் தாமதம் என்று பல பிரச்னைகள் மட்டுமில்லாமல் தற்பொழுது நீதித்துறை அவமதிப்பு வழக்குகள் அதிகமாகத் தாக்கல் செய்யப்படுவது போன்ற பல சூழல்கள் நீதித்துறையைப் பாதித்து வருகின்றன. நீதித்துறையைச் சீர்திருத்தவும், சரிசெய்யவும் திடமான நடவடிக்கைகள் இன்றைக்குத் தேவை. நீதித்துறையின் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய பிரச்னைகளை மத்திய மாநில அரசுகள் கவனிக்க வேண்டும்.

நீதிமன்றம் ஆலயத்திற்கு ஒப்பானது. பிரச்னைகள் வரும்போது பிரார்த்தனைகளோடு தங்களுக்கு ஏற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்வது போன்று சிக்கல்கள் ஏற்படும்போது பரிகாரம் தேட நீதிமன்றம் செல்கின்றனர். இன்றைக்கு மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப வழக்குகளும் அதிகமாகிவிட்டன. நீதிமன்றங்கள் அன்றாட மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகத் திகழ்கின்றன.

நீதிமன்றங்கள் சரிவர செயல்பட்டால்தான் ஜனநாயகத்தையும், அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மற்றும் பல சிவில் பிரச்னைகளையும் தீர்க்க முடியும். ஆனால், இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கவலையான சூழல் மேலும் பிரச்னைகளை உருவாக்கி விடக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஊழல், முறைகேடுகள் என்று இத்துறையில் புகுந்துவிட்டால் இதை யார் கண்காணிப்பது என்பதுதான் இன்றைய கவலையும் சலிப்பும் ஆகும்.

நன்றி : தினமணி

பி.எஸ்.ஆர். என்ற மாமனிதர்

இந்திய வரலாற்றில் 20ம் நூற்றாண்டுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. காரணம், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் தேசிய விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்து கூர்மை அடைந்த காலம். தேச விடுதலைக்கு அழைத்துச் சென்ற காலம். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி சுதந்திர இந்தியாவின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்காகத் திட்டங்கள், இயக்கங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலம். இந்த இரண்டு காலங்களிலும் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் வாழ்ந்து நாட்டு விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்ட முக்கிய போராளிகளில் ஒருவர்தான் பி. சீனிவாசராவ். 1907ம் ஆண்டு கர்நாடகத்தில் பிறந்து 1961 செப்டம்பரில் தஞ்சையில் இறந்தார். 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். இந்த குறுகிய காலத்தில் அவர் ஆற்றிய பணி, அவரது பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கர்நாடகாவில் தென்கனரா பகுதியில் பிறந்து பெங்களூரில் கல்வி பயின்றவர். சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தபோது ""மாணவர்களே ஆங்கிலேயர் கல்வி முறையை எதிர்த்து கல்விக்கூடங்களில் இருந்து வெளியேறுங்கள். பெற்றோர்களே! பிள்ளைகளை அவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அனுப்பாதீர்கள்'' என 1920ல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கட்டளையிட்டது. இந்த அறைகூவலை ஏற்று 1920களில் கல்லூரிப் படிப்பை தூக்கியெறிந்து விட்டு வெளியேறிய தேசப்பற்று மிக்க பல மாணவர்களில் பி. சீனிவாசராவும் ஒருவர்.

சுதந்திர வேட்கையால் கல்லூரியை விட்டு வெளியேறி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்ற அவர் பிறகு சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார். சென்னையில் 1930ம் ஆண்டு நடைபெற்ற அன்னிய துணி விற்பனைக்கு எதிரான மறியலில் கலந்து கொண்டார். காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய பி.எஸ்.ஆர். 1936ல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையில் தோழர்கள் பி. இராமமூர்த்தி மற்றும் ஜீவானந்தம் ஆகியோருடன் சேர்ந்தார். 1943ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தஞ்சையில் விவசாயிகளைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து பி.எஸ்.ஆர். தஞ்சைக்குச் சென்றார். தமிழகத்தின் மற்ற பகுதிகளை விடவும் அன்றைய தஞ்சையில் அரசியல், பொருளாதார, சமூகச் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. மாவட்டத்தில் நிலங்கள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலச்சுவான்தார்கள்; மடாதிபதிகள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோருக்குச் சொந்தமாக இருந்தது. தமிழகத்திலேயே நிலக்குவியல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிகம்; மறுபுறத்தில் விவசாயத்தில் அன்றாட சாகுபடி வேலைகளைச் செய்யும் பெரும்பான்மையோர் நிலமற்ற தலித் பண்ணையாள்களாக இருந்தார்கள். ஜாதி இந்து மக்களில் பெரும்பான்மையோர் குத்தகை சாகுபடிதாரர்களாக இருந்தார்கள். நிலச்சுவான்தார்கள் அனைவரும் ஜாதி இந்துக்கள். தலித் பண்ணையாள்கள் தீண்டாமை கொடுமைக்கும், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமையான சுரண்டலுக்கும் ஆளானார்கள். கீழத் தஞ்சையில் ஜாதியும், நிலவுடைமை ஆதிக்கமும் பின்னிப் பிணைந்திருந்தது.

பி.எஸ்.ஆருக்கு தமிழில் பேச முடியும். ஆனால் சரியாகப் படிக்கவும், எழுதவும் தெரியாது. மொழி புதிது; மக்களும் புதியவர்கள். இத்தகைய தடைகளையும் கடந்து பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்டத்திற்குச் சென்று கிராமப்புற விவசாயிகளைத் திரட்டினார்.

கீழத் தஞ்சையில் தீண்டாமை கொடுமை பல வடிவங்களில் இருந்தது. ஜாதி இந்துக்கள் தெருக்களில் தலித் மக்கள் செல்ல முடியாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. டீக்கடைகளில் தலித் மக்களுக்குச் சமமான இடமில்லை. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்களும், பெண்களும் சூரிய உதயத்திற்கு முன் வேலைக்குச் செல்ல வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகுதான் வீட்டிற்கு வர முடியும். இவ்வாறு வேலை செய்ய மறுப்போருக்கு சாட்டை அடியும், சாணிப்பாலும் தண்டனை. இப்படிப்பட்ட சூழலில்தான் பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்டத்திற்குச் சென்றார். கீழத்தஞ்சையில் மன்னார்குடி வட்டம், களப்பால் கிராமத்தில் களப்பால் குப்புவின் தலைமையில் பி.எஸ்.ஆருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்டு பி.எஸ்.ஆர். ஏற்புரை ஆற்றினார். ""நீங்கள் எல்லாம் தாய் வயிற்றில் 10 மாதம் கருவாகி, உருவாகி வெளியில் வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதாரர்களும், கார்வாரிகளும் கூட அப்படிப் பிறந்தவர்கள்தானே. அவர்களைப் போன்று நீங்களும் மனிதர்கள்தான். உங்களுக்கும், அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே. வேறு என்ன வித்தியாசம். உங்களுக்கு சாணிப்பால் புகட்டினால், சாட்டையால் அடித்தால் அது சட்டவிரோதம் அப்படித் தண்டிக்க வருவோரை கைகளை உயர்த்தி ஓட ஓட விரட்டியடியுங்கள். அடியாட்கள் ஆயுதங்களுடன் தாக்க வந்தால், பிடித்துக் கட்டிப் போடுங்கள். ஒருவர் இருவருக்குத் தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம். பி.எஸ்.ஆர். ஆற்றிய உரையை இப்போது படிப்போர் அன்றைய சூழலில் கீழத்தஞ்சையில் இருந்த அரசியல் சமூக பொருளாதார நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். பி.எஸ்.ஆர். ஆற்றிய உரை கூடியிருந்தவர்கள் சிந்தனையில் மின்சாரத்தைப் பாய்ச்சியது போல் ஆயிற்று. தினமும் கிராமம், கிராமமாக பி.எஸ்.ஆரும் மற்ற தலைவர்களும் சென்று விவசாயிகள் சங்கக் கொடியையும், கம்யூனிஸ்ட் கொடியையும் ஏற்றினார்கள். இது கீழத் தஞ்சை முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. மணலி கந்தசாமி, ஆர். தருமலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.கே. சுப்பையா, கே.ஆர். ஞானசம்பந்தம், ஏ.எம். கோபு, எம்.பி. கண்ணுசாமி, மணலூர் மணியம்மை போன்ற மாவட்டத் தலைவர்களும் பி.எஸ்.ஆர். உடன் கிராமம், கிராமமாகச் சென்றார்கள்.

சாணிப்பால் சாட்டையடி போன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும், பண்ணையாள்களுக்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளை எதிர்த்தும் குத்தகை விவசாயிகளுக்கு நியாயமான குத்தகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற வட்டங்களில் பரவலாக இயக்கம் துவங்கியது. இதனுடைய பிரதிபலிப்பாக கீழத்தஞ்சை முழுவதும் தலித் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சி ஏற்பட்டது.

இதன் விளைவாக காவல்துறை தலையிட்டு விவசாய சங்கப் பிரதிநிதிகளையும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி 1944ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. சாணிப்பால், சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, நிலச்சுவான்தார்களின் பிரதிநிதிகளும், தலித் பிரதிநிதிகளும் சரிசமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சுவான்தார்களின் கையிலிருந்த சாட்டையை கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாய சங்கமும் பறித்து அன்று நிலவிய மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இத்தகைய போராட்டத்தின்போது, ஆங்கிலேயர் அரசு கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டது. நிலச்சுவான்தார்களின் கொடுமை ஆங்கிலேயர் அரசின் அடக்குமுறை இவைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டுவதில் பி.எஸ்.ஆர். பிரதான பாத்திரம் வகித்தார். தான் மட்டுமல்ல. பல தலைவர்களையும் உருவாக்கினார்.

இதனால்தான் இவரை தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்று கூறினார்கள். தடியடி, கைது, சிறை என பல அடக்குமுறைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பினார். நாடு விடுதலை அடைந்த பிறகு சுதந்திர ஆட்சியில் பண்ணை ஆள்களுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும், விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. போராட்டம் தொடர்ந்தது.

1948 51ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பி.எஸ்.ஆர். மற்றும் மாநிலத் தலைவர்கள் தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தது. இவருடைய தலைக்கு அன்றைய மாநில அரசு விலை வைத்தது. உழைப்பாளி மக்களின் நலனே தன்னுடைய வாழ்க்கை என்ற அடிப்படையில் பல சிரமங்களையும் ஏற்று பி.எஸ்.ஆர். செயல்பட்டு வந்தார். 1952ம் ஆண்டு பழைய சென்னை மாகாணத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்றைய தமிழகப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் 6 இடங்கள் தஞ்சை மாவட்டத்தில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிக்காக பி.எஸ்.ஆர். பாடுபட்டார். அவர் தேர்தலில் நிற்கவில்லை.

தொடர்ச்சியாக நடந்த போராட்டத்தின் விளைவாக மாநில அரசு 1952ம் ஆண்டு பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. குத்தகை விவசாயிகளுக்கும், ஓரளவுக்குப் பாதுகாப்பு கிடைத்தது. 1958ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த கேரள அரசு நில உச்சவரம்புச் சட்டத்தை கொண்டு வந்தது. 5 பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இரு போக நிலம் 15 ஏக்கர் என இந்தச் சட்டம் நிர்ணயித்தது. இது இந்தியா முழுவதும் ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எல்லா மாநிலங்களிலும் 1959க்குள் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தது. தமிழகத்தில், 1960 ஏப்ரல் 6ம் தேதியன்று நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் உச்ச வரம்பு என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதர மாநில சட்டங்களில் இருந்த பாதகமான அம்சங்களெல்லாம் இச்சட்டத்தில் இருந்தன. இந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் திட்டமிட்டது. இம்மறியல் வெற்றி பெற விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் பி.எஸ்.ஆர். மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். ஓய்வின்றி அலைந்ததால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1961 செப்டம்பர் 30ம் தேதி தஞ்சையில் கட்சி அலுவலகத்தில் இறந்தார். தஞ்சை மாவட்டமே கண்ணீர் வடித்தது. அங்கிருந்து அவரது உடல் இறுதி நிகழ்ச்சிக்காக திருத்துறைப்பூண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது வழிநெடுகிலும் லட்சக்கணக்கில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடகத்தில் தென் கனராவில் பிறந்து பெங்களூரில் படித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி தஞ்சைக்குச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையையே பி.எஸ்.ஆர். அர்ப்பணித்தார். இன்றும் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது கீழத் தஞ்சையில்தான். இத்தகைய மாற்றத்திற்காக போராடிய அந்த மாமனிதரின் நினைவு நாள் செப்டம்பர் 30.

(கட்டுரையாளர்: மத்தியக் குழு உறுப்பினர் சி.பி.ஐ.(எம்))