Wednesday, October 22, 2008

பின்தங்குகிறோமே, ஏன்?

அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள் சில வெளியாகி இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய அரசுப் பணியில் தொடங்கி, எல்லா அகில இந்திய ரீதியிலான தேர்வுகளிலும் தமிழகம் முதலிடம் வகித்ததுபோக, இப்போது அறிஞர் அண்ணா எழுதியதுபோல "ஏ, தாழ்ந்த தமிழகமே....' என்று நாமெல்லாம் அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது. அதற்குக் காரணம், நமது தவறான கல்விக் கொள்கையும், தவறான அணுகுமுறையும்தான்!
இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மிக அதிகமான இடங்களில் ஆந்திரப் பிரதேசம், புது தில்லி, மகாராஷ்டிரம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்திருக்கும்போது, தமிழகம் எங்கோ பின்னணியில் பரிதாபமாக இருக்கும் நிலைமை. வெற்றி பெற்று இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படிக்க நுழைவு பெற்றவர்களில் 1,697 பேர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 202 பேர்தான். மிகவும் பின்தங்கிய, சிறிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 236 பேர் நுழைவு பெற்றிருக்கும்போது, அந்த அளவுக்குக் கூடத் தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியவில்லையே, ஏன்?
இந்தியத் தொழில்நுட்பக் கழக நுழைவுத் தேர்வுகளில் மட்டுமல்ல, எல்லா அகில இந்திய ரீதியிலான தேர்வுகளிலும் நமது தமிழக பாடத்திட்ட முறையில் படிக்கும் மாணவர்கள், ஏனைய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் போட்டி போட முடியாத நிலைமை காணப்படுகிறது.
நமது மாநிலக் கல்வித் திட்டத்தில், பழைய "மெக்காலே' கல்வி முறையின் மனப்பாடம் செய்யும் அடிப்படை தொடர்கிறது. ஆனால், மத்திய பள்ளிக் கல்வி ஆணையம் என்று சொல்லப்படும் சி.பி.எஸ்.சி. முறையில் செய்முறை அடிப்படையில் கல்வி அளிக்கப்படுகிறது. அகில இந்திய ரீதியிலான எல்லாத் தேர்வுகளும் இந்த செய்முறை அடிப்படையிலான கல்வியை ஆதாரமாகக் கொண்டவை என்பதால் நமது மாணவர்களால், அந்த தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றிபெற முடிவதில்லை.
மதிப்பெண்கள் பெறுவதிலும் சரி, நமது மாநிலத் தேர்வு முறை மாணவர்களுக்கு பாதகமாக இருக்கிறது. "சி.பி.எஸ்.இ.' முறையில் ஒரு தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையில் மாணவர்களுக்குப் படித்ததை மறு ஆய்வு செய்ய வசதியாக நான்கைந்து நாள்கள் இடைவெளி தரப்படுகிறது. மாநிலத் தேர்வு முறையில் அதற்கு வாய்ப்பளிப்பதில்லை. கேட்டால், கேள்வித் தாள் வெளியாகிவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். பத்திரமாகக் கேள்வித் தாளை பாதுகாக்கக்கூட கையாலாகாத நிலையில் நமது மாநிலத் தேர்வு ஆணையம் செயல்படுகிறது என்றால், அதைவிட வெட்கக்கேடான விஷயம் இருக்க முடியுமா?
திருச்சியில் பிராந்திய பொறியியற் கல்லூரி என்று இருந்ததை இப்போது தேசிய தொழில்நுட்பக் கழகம் என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். அங்கே போய்ப் பார்த்தால், படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் வெளிமாநிலத்தவர். ஆனால், ஆசிரியர்கள் நம்மவர்கள். மாநிலத்துக்கு முன்பு தரப்பட்ட ஒதுக்கீடு இப்போது தேசிய தொழில்நுட்பக் கழகமானபோது ரத்து செய்யப்பட்டு விட்டது. தேசிய அளவிலான தேர்வில் தமிழக மாணவர்களால் பெருமளவில் வெற்றி பெற முடியவில்லை என்பதால், பெருவாரியான இடங்கள் அகில இந்திய ரீதியில் வெற்றி பெற்ற வெளிமாநில மாணவர்களுக்குப் போய்விடுகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இல்லாத பாதுகாப்பான சூழ்நிலையில் அமைந்த தென்னிந்தியாவிலுள்ள மூன்று தேசிய தொழில்நுட்பக் கழகங்களை வடநாட்டு மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்வதில் ஆச்சரியமில்லை. பாதுகாப்புக்குப் பாதுகாப்பும், படிக்க வசதியான சூழலும், சிறந்த தென்னிந்திய ஆசிரியர்களும் அமைந்திருக்கும்போது, அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்!
கேந்த்ரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள், மத்திய பள்ளிக் கல்வி ஆணையம் போன்றவை நமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், அகில இந்திய ரீதியில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் மாற்றங்களுக்கும் தயாராக இருந்தும் நமது மாநில ஆட்சியாளர்கள் அதற்குத் தடையாய் இருப்பதுதான், உயர்கல்வியில் தமிழகம் பின்னடைவை சந்திப்பதற்குக் காரணம். தமிழகத்தில் தமிழும் ஒரு கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையுடன், தேசிய அளவிலான கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இதற்குத் தீர்வு!
நன்றி : தினமணி

சந்திரனுக்கு எதற்கு விண்கலம்?

அமெரிக்கா 1969ம் ஆண்டு தொடங்கி சந்திரனுக்கு அப்போலோ விண்கலங்கள் மூலம் 12 விண்வெளி வீரர்களை அனுப்பி சந்திரனை ஆராய்ந்தது. சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து கல்லையும் மண்ணையும் அள்ளி வந்தனர். அவை விரிவாக ஆராயப்பட்டு விட்டன. ரஷ்யாவோ (அப்போதைய சோவியத் யூனியன்) சந்திரனுக்கு ரஷ்ய விண்வெளி வீர்ரகளை அனுப்பாமலேயே தானியங்கிக் கருவிகள் மூலம் சந்திரனிலிருந்து இதே போல கல்லையும் மண்ணையும் கொண்டு வந்தது. இதெல்லாம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
இந்த நிலையில் 2007 செப்டம்பரில் ஜப்பான் ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பியது. அது சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே ஆண்டு அக்டோபரில் சீனா இதே போல ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்ப அதுவும் சந்திரனை சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திராயன்1 என்று பெயர் சூட்டப்பட்ட ஆளில்லா விண்கலத்தை இந்தியா இப்போது சந்திரனுக்கு அனுப்ப இருக்கிறது.
இந்தியா எதற்கு இப்போது சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும்? எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இத் திட்டத்துக்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது? இதுவரை கண்டுபிடிக்காத விஷயங்களை இந்திய விண்கலம் போய் கண்டுபிடிக்கப் போகிறதா? எங்களாலும் சாதிக்க முடியும் என்ற வெறும் பெருமைக்காக இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இப்படியெல்லாம் கேட்க முடியும்.
முதலாவதாக ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சந்திரனைப் பற்றி எல்லா விஷயங்களும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்தால் அது தவறு. சந்திரனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. சொல்லப்போனால் சந்திரன் தோன்றியது எப்படி என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சந்திரனில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று அண்மைக்காலமாக ஒரு கருத்து இருந்தாலும் இதுவும் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்திரனில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கிறது என்று தெரிய வந்தால் விண்வெளி வீரர்களும் ஆராய்ச்சியாளர்களும் சந்திரனில் தளம் அமைத்துக் கொண்டு அங்கேயே தங்கி பல ஆய்வுகளை நடத்த முடியும்.
சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்று கண்டுபிடிப்பதில் இந்திய விண்கலம் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது. 2020ம் ஆண்டு வாக்கில் சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஒரு தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இப் பின்னணியில் இந்திய விண்கலம் செய்யும் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். இதிலிருந்து இந்தியாவின் விண்கல திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
சந்திராயன் விண்கலத்தில் 11 ஆராய்ச்சிக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் படப்பிடிப்புக் கருவிகள் உள்பட ஐந்து கருவிகள் இந்தியா உருவாக்கியவை. அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா அனுப்பிய இரு கருவிகள், ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய மூன்று கருவிகள், ரஷ்யா அளித்துள்ள ஒரு கருவி என ஆறு கருவிகள் இந்த விண்கலத்தில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க நாஸா அமைப்பும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தை எந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதுகிறது என்பதை இது காட்டுகிது.
இங்கு வேறு ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு செயற்கைக்கோளிலிருந்து நுட்பமான படங்களை எடுப்பது தொலையுணர்வு தொழில் நுட்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் பல செயற்கைக்கோள்கள் உயரே பறந்தபடி பூமியைப் படம் எடுப்பதில் ஈடுபட்டுள்ளன. இத் தொழில் நுட்பத்தில் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை வகிக்கிறது இந்தியா. இப்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனுக்கு மேலாகப் பறந்து சந்திரனைச் சுற்றிச் சுற்றி வரும்போது இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சந்திரனை முப்பரிமாணப் படங்களை எடுக்கப் போகிறது. சந்திரனில் மேடு, பள்ளம் எது, சமதரை எது என்பதை இப் படங்கள் விவரமாகக் காட்டும்.
இதுவரை சந்திரனின் மிகத் துல்லியமான முப்பரிமாணப் படங்கள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இது குறித்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளது என்றாலும் இதில் அமெரிக்காவை இந்தியா முந்திக்கொண்டுவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க வீரர்கள் சந்திரனின் தென் துருவப் பகுதியில் போய் இறங்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக தென் துருவப் பகுதியில் உள்ள நில அமைப்பு பற்றி அறிந்து கொள்ள பூமியிலிருந்தபடி ராடார் கருவிகள் மூலம் தென் துருவப் பகுதியின் முப்பரிமாணப் படங்களைத் தயாரிப்பதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அப்படிப் பார்க்கும் போது சந்திரன் முழுவதுக்குமான விரிவான முப்பரிமாணப் படங்களை முதன் முதலாக எடுக்கப் போவது இந்திய விண்கலமாகவே இருக்கும்.
இந்தியா 2011ம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திராயன்2 என்னும் பெயர் கொண்ட இன்னொரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. அந்த விண்கலத்திலிருந்து ஓர் ஆய்வுக் கலமும் தானியங்கி வாகனமும் கீழே சந்திரனின் தரையில் இறங்கும். இவற்றை சந்திரனில் எங்கு இறக்குவது என்று முடிவு எடுப்பதில் இப்போது எடுக்கப்பட இருக்கும் முப்பரிமாணப் படங்கள் மிகவும் உதவியாக இருக்கும். சந்திரனில் சமதரை என்பது அபூர்வம். சந்திரனின் நிலப்பரப்பில் சிறியதும் பெரியதுமாக சுமார் 5 லட்சம் பள்ளங்கள் உள்ளன. சந்திரனில் இறக்கப்படும் ஆய்வுக் கலம் சரிவான இடத்தில் இறங்கினால் உருண்டு விழுந்து செயல்படாமல் போகலாம்.
இந்திய விண்கலம் சந்திரனில் இப்போது மேற்கொள்ள இருக்கும் இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் உள்ளதா என்பது தொடர்பானது. தண்ணீர் ஆராய்ச்சிக்கு மட்டும் சந்திராயன்1 விண்கலத்தில் நான்கு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ள வேறு ஒரு கருவி சந்திரனின் நிலத்துக்கு அடியில் சில மீட்டர் ஆழம் வரை ஊடுருவி ஆராயும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரனின் நிலப்பரப்பில் யுரேனியம், தோரியம் போன்ற அணுசக்தி வளங்கள் உள்ளனவா என்று கண்டறிவதும் சந்திராயனின் ஆய்வுத் திட்டங்களில் அடங்கும்.
இந்தியா கடந்த பல ஆண்டுகளில் பூமியைச் சுற்றும் வகையில் எவ்வளவோ செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. ஆனால் சந்திரனைச் சுற்ற ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது இதுவே முதல் தடவை.
சந்திராயன் விண்கலம் சென்னைக்கு வடக்கே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும். அந்த விண்கலம் முதலில் பூமியை சில முறை சுற்றி வரும். அதன் பிறகு அது சந்திரனை நோக்கிக் கிளம்பும். பூமியிலிருந்து சந்திரன் 3 லட்சத்து 86 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சந்திராயன் விண்கலம் சந்திரனுக்குப் போய்ச்சேர ஐந்தரை நாட்கள் ஆகும். அதன் பின்னர் அது சந்திரனை சுற்றிவர ஆரம்பிக்கும். சந்திரனின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி அது சந்திரனைச் சுற்றும். சந்திரனை அது நிலையாக சுற்ற ஆரம்பித்த பிறகு 29 கிலோ எடையுள்ள ஆய்வுக்கலம் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனை நோக்கி கீழே இறங்கி இறுதியில் தரையில் மோதி நொறுங்கும். சந்திரனுக்கு அடுத்த தடவை ஒரு விண்கலத்தை அனுப்பும் போது இறங்கு கலத்தை எப்படி கீழே இறக்குவது என்பதற்கு இப்போதைய பரிசோதனை உதவியாக இருக்கும்.
சந்திராயன் விண்கலம் சுமார் 2 ஆண்டுகள் சந்திரனை சுற்றிச் சுற்றி வந்து படங்களை எடுக்கும். பல ஆய்வுகளை நடத்தும்.
சந்திரனுக்கு விண்கலத்தை செலுத்த இருக்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டானது பிற நாடுகளின் ராக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில் எடை அளவிலும் திறன் அளவிலும் சிறியதுதான். ஆனால் மூர்த்தி (உருவம்) சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்ற அளவில் அந்த ராக்கெட் தொடர்ந்து 12 தடவை வெற்றி கண்டுள்ளதாகும்.
இந்தியாவின் இப்போதைய திட்டம் எதிர்காலத்தில் சந்திரனில் ஆய்வுகளை நடத்துவதற்கும் அங்குள்ள கனி வளங்களை எடுத்து வருவதற்கும் இந்தியாவுக்கு உரிமை கிடைக்க வழி செய்யலாம்.
முன்னர் இந்தியா ஆழ்கடல்களில் தரையில் கிடைக்கின்ற விலை மதிப்பு கொண்ட உலோக உருண்டைகள் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்தியது. பின்னர் இவற்றை மேலே எடுப்பது குறித்து உலகின் பல நாடுகளும் மாநாடு நடத்தி உடன்பாட்டை உருவாக்கிய போது ஏற்கெனவே இத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்ட முன்னோடி நாடு என்ற முறையில் இந்துமாக்கடலின் தரையில் கிடக்கின்ற உலோகக் கட்டிகளை மேலே எடுப்பதற்கு இந்தியாவுக்கு தனி உரிமை வழங்கப்பட்டது. அதுபோல இந்தியா இப்போது சந்திரனில் மேற்கொள்கிற ஆய்வுகளின் பலனாக எதிர்காலத்தில் சந்திரனில் உள்ள அரிய கனி வளங்களை எடுப்பதற்கு இந்தியாவுக்கு உரிமை கிடைக்கலாம். அந்த அளவில் சந்திரனுக்கு இப்போது விண்கலத்தை அனுப்புவதை வீணான முயற்சி என்று கருதிவிடலாகாது.
என். ராமதுரை
நன்றி : தினமணி

தீர்க்க முடியாததல்ல

தமிழகத்தையே வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது மின்வெட்டுப் பிரச்னை. இது தாற்காலிகமானதல்ல என்னும் உண்மை நிலைமையை மேலும் மோசமானதாக்குகிறது.
அரசு எந்தளவுக்கு பிரச்னையை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ரூபாய் அரிசியையும் ஐம்பது ரூபாய் மளிகைப் பொருள்களையும் காட்டி இப்பிரச்னையை எதிர்கொண்டுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் இந்த அரசை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை வேறொன்று இருக்க முடியாது.
இப்போதும்கூட பிரச்னை கை மீறிப் போய்விடவில்லை. பிரச்னையை நேர்மையாகக் கையாளும் மனமிருந்தால் அடுத்த கோடைக்குள் நிலைமையை ஓரளவு சீரமைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். சில தீர்வுகள்:
1. முதலாவதாக அரசு. அடுத்து, உண்மையான நிலைமையை மக்களுக்கு விளக்க வேண்டும். பிரச்னையின் தீவிரத்தையும் மின் சிக்கனத்தின் அவசியத்தையும் மக்கள் புரிந்துகொள்ளவும் ஒத்துழைப்பு அளிக்கவும் இது உதவும்.
2. தமிழக மின் விநியோகத்தில் தொழில் துறை 39.6 சதமும் விவசாயத் துறை 27 சதமும் குடியிருப்புகள் 24 சதமும் நுகர்கின்றன என்று கூறப்பட்டாலும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் 45 சதம் வரை தண்ணீருக்காகவே நாம் பயன்படுத்துகிறோம்.
நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தினால் நம்முடைய மின் தேவையை வெகுவாகக் குறைக்க முடியும். தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 961.9 மி.மீ. இதில் 67 சதத்துக்கும் மேலான நீர் வீணாகிறது. மழைநீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மையைக் கட்டாயமாக்கினால் பெரியளவில் நம்மால் நீரையும் மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.
மேலும், நம்முடைய நீர்த்தேவையில் 40 சதவீதத்துக்கும் மேலாக பூர்த்திசெய்யும் நிலத்தடி நீராதாரத்தையும் இதன் மூலம் பாதுகாக்க முடியும்.
3. சிறிய அணைத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். 20 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு, குறு அணைத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நம்முடைய நீர் மின் உற்பத்தியை மூன்று மடங்காக்க முடியும்.
4. ஆண்டின் பெரும்பாலான நாட்கள் முழு சூரிய வெளிச்சத்தைப் பெறும் நாம், சூரிய மின் சக்தியை அற்புதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழகத்தின் நிலப்பரப்பில் 0.25 சதத்தை சூரிய மின்சக்தி உற்பத்திக்காக நாம் ஒதுக்கினால்கூட நம்முடைய மின் தேவையில் சரி பாதியை அது பூர்த்தி செய்யும். மற்றொரு வகையில், சுதந்திரமான சுயசார்பிலான தனிநபர் மின் உற்பத்திக்கும்கூட சூரிய மின்சக்தி வழிவகுக்கும்.
ஒழுங்காக திட்டமிட்டால், வீடுகள்தோறும் சூரிய மின் உற்பத்திச் சாதனங்களை நிறுவி அந்தந்த வீடுகளின் மின் தேவையை அவரவரே பூர்த்தி செய்துகொள்ள வழிவகுக்க முடியும்.
5. காற்றாலை மின்சாதனச் சந்தையில் சர்வதேச அளவில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும், காற்றாலை மின்சார உற்பத்தியில் நம்முடைய பங்களிப்பு மிகக் குறைவு. வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் காற்றாலைகளை நிறுவுவதன் மூலம் மரபுசாரா எரிசக்தித் துறையில் புதிய பயணத்தைத் தொடங்க முடியும்.
6. மின் விநியோகத்தில் 17% வரை வீணாவதாக அரசே ஒப்புக்கொள்கிறது. மின் திருட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மாநாடுகளிலிருந்தே தொடங்கலாம்.
7. குடியிருப்புகளின் முக்கிய தேவை விளக்குகள், மின்விசிறிகள். குடியிருப்புகளுக்கான அதிக மின் பயன்பாட்டை கோருபவையும் இவைதான்.
குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் "காம்பாக்ட் ஃப்ளோரசன்ட்' மற்றும் "லைட் எமிட்டிங் டயோடு' விளக்குகளை அரசே சலுகை விலையில் அளிக்கலாம். தமிழகத்தில் இந்த விளக்குகளின்
பயன்பாடு ஒரு சதவீதத்தைக்கூட எட்டவில்லை. இவ்விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் விளக்குகளுக்கான மின் பயன்பாட்டில் 60 சதம் வரை மிச்சப்படுத்த முடியும்.
8. பிரச்னையின் தீவிரம் குறையும்வரை மின் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்படுத்தலாம். ஐந்து பேர் கொண்ட சாதாரண ஒரு குடும்பம் வாழ்வதற்கான வீட்டின் மின் தேவையைக் கணக்கிட்டு மின் பயன்பாட்டுக்கு வரையறையைநிர்ணயிக்கலாம்.
9. குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனம், குளிர்பதனப்பெட்டி, வெப்பக்கலன், மின்கணப்பு உள்ளிட்ட அதீத மின் பயன்பாட்டு சாதனங்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தலாம். அதாவது, கூடுதல் வரி, கூடுதல் பயன்பாட்டுக் கட்டணம்.
இவையெல்லாம் தொலைநோக்கிலான நீண்ட கால பயனளிக்கக்கூடிய தீர்வுகள். பிரச்னையை எப்படியேனும் தீர்க்க
வேண்டும் என்று நினைக்கக்கூடிய, பிரச்னையை ஆக்கபூர்வமாக அணுகக்கூடிய அரசு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள்.
இதிலெல்லாம் நம்பிக்கையில்லை எனில், எளிதாக இன்னொரு "தீர்வு' இருக்கிறது. இந்த அரசுக்கு ரொம்பவும் அது பிடித்தமானதாக இருக்கக்கூடும். ஆம், மின்சாரமும் இலவசம் என்று அறிவித்துவிடலாம்!
மன்னை சமஸ்
நன்றி : தினமணி