Monday, October 27, 2008

சாது மிரண்டால்...

குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பினால் இன்றைய சூழலில் இது சாத்தியமற்றது என்றுதான் எல்லோரும் பதிலளிப்பார்கள். ஒவ்வொரு நாளும் பத்திரிகையைப் புரட்டினாலோ, தொலைக்காட்சி அலைவரிசைகளை அலசினாலோ குற்றம் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் பிரதானமாகத் தெரிகின்றன.
குற்ற நிகழ்வுகளுக்குப் பல காரணங்கள் கூறலாம். சமுதாய ஏற்றத்தாழ்வுகள், அரசின் திட்டங்களின் பயன்கள் எல்லோரையும் சென்றடையாததால் ஏற்படும் ஏமாற்றங்களின் வெளிப்பாடு, தனிப்பட்ட நபர்களின் முன்விரோதங்கள், நுகர்வணிகமயமாக்கத்தின் தாக்கம், நுகர் பொருள்களை அடைவதில் பேராசை, திடீர் பணக்காரனாகிவிடலாம் என்ற பகற்கனவின் தூண்டலில் நிகழும் மோசடிகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். குற்றங்கள் களையப்பட வேண்டும், குற்றங்கள் நடவாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
1861ல் அமலுக்கு வந்த இந்திய காவல் சட்டத்தில், குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, தகவல்கள் சேகரிப்பது என்பவை காவல்துறைக்கு அடிப்படைப் பணிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. சமுதாயம் சீராக இயங்கிட நடைமுறையில் உள்ள சட்டங்களைத் தனக்குக் கொடுக்கப்பட்ட வரம்புக்குள் அமல்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. காவல்துறை தனது பணிகளைத் திறம்படச் செய்திட மக்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். காவல்துறை தனிமையில் செயல்பட முடியாது. ஆங்கிலேயர் ஆட்சியில் காவல்துறையின் நிலைப்பாடு வேறு; சுதந்திர இந்தியாவில் அதன் அணுகுமுறை மக்கள் நலன் காப்பது ஒன்றுதான்.
சுமுகமான, அமைதியான சூழ்நிலை சமுதாயத்தில் நிலவிட காவல்துறை சட்டம் ஒழுங்கினை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எடுத்துக்கொண்ட திட்டங்களைச் செம்மையாக நிறைவேற்றிட முடியும். காவல்துறை தனது பணிகளில் மக்களின் ஒத்துழைப்பைப் பெற சமுதாயக் காவல்பணி என்ற சித்தாந்தம் உருவாக்கப்பட்டது.
உலகெங்கிலும் எந்த அளவு சமுதாயம் முன்னேறியுள்ளதோ அந்த அளவுக்குக் குற்றங்களின் பரிமாணங்களும் வளர்ந்துள்ளன. சட்ட மீறல் ஒரு படி மேலே சட்டம் கீழே என்ற நிலைதான் காணப்படுகிறது. சமீபத்தில் பெங்களூர், ஆமதாபாத் மற்றும் தில்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் எவ்வளவு எளிதாக தீவிரவாதிகள் தங்களது திட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என்பது பயங்கர உண்மையாகக் காட்சியளித்தாலும் அதை எவ்வாறு எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூ மெக்சிகோ நகரில் சமுதாய நல விரும்பிகள், சட்ட அமலாக்கப் பிரிவுகள், ஊடகங்கள் இவைகளின் கூட்டு முயற்சியோடு "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (குற்றங்கள் தடுத்தல்) என்ற அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் வளரும் குற்றங்களை கூட்டு முயற்சியோடு எதிர்கொள்வது. உரிய நேரத்தில் தகவல் கிடைத்தால்தான் குற்றங்களைத் தடுக்க முடியும். தகவல் சேகரிப்பது, தகவல் கொடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது என்பவை முக்கியக் குறிக்கோள்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கு ஏதுவாகக் கட்டணமில்லா தொலைபேசி, மக்கள் தொடர்பு கொள்வதற்கு க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பில் வைக்கப்பட்டது. குற்ற நிகழ்வுகள் பற்றி நேரில் பார்த்தவர்கள், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிந்திருந்தாலும் காவல்துறையிடம் நேரில் சென்று சொன்னால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் காவல்துறை விசாரணை, நீதிமன்றம், வழக்கு என்று அலைய வேண்டும் என்பதால் "நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி விடுகின்றனர் என்பது உண்மை நிலை. ஆனால் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பில் தகவல் மட்டும் கொடுத்தால் போதும். தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் தெரிவிக்க வேண்டியதில்லை. அவர்களது அடையாளம் காக்கப்படும் என்பது முக்கியமான அம்சம். மேலும் இந்த தொலைபேசித் தகவல்களைப் பெறுபவர்கள் காவல்துறை அல்லாத பொதுப் பணியாளர்கள். இந்தப் பணியாளர்களுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுப்பவரிடம் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு தகவல் பெற வேண்டும் என்று சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாகத் தகவல் கொடுப்பவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது. பொறுமையாகவும், கனிவாகவும் பேச வேண்டும். தகவல் கொடுப்பவர் விரும்பினால் மட்டுமே தங்களைப் பற்றிய அடையாளம் கொடுக்கலாம். அந்த அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும்.
தகவல் சேகரிக்கும் கூட்டு முயற்சி தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று 1200க்கும் மேற்பட்ட "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்புகள் உலகெங்கிலும் உள்ளன. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பெண்களைக் கடத்துதல், மோசடிகள் போன்ற குற்றங்களில் முக்கியமான தகவல்கள் சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்குக் கிடைக்கப் பெற்று குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் குற்றத் தடுப்பு அமைப்புகள் ஓய்வு பெற்ற நீதித்துறை, காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், சமுதாயத்தில் நல்லெண்ணம் படைத்தவர்கள் கொண்ட குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இந்த நிர்வாக அமைப்பு அந்த இடங்களின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் தகவல் சேகரிக்கும் முறையில் மாற்றமில்லை.
உதாரணமாக நெதர்லாந்து நாட்டில் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' தனியார் பொதுத்துறை கூட்டமைப்பாகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் மூலம் நிர்வாகச் செலவிற்கான தேவையான நிதி திரட்டப்படுகிறது. 2002ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2007 முடிய 50,000க்கும் மேற்பட்ட உபயோகமான தகவல்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 6,000 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 4,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு மையம் காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 தொலைபேசி அழைப்புகள் பெறப்படுகின்றன. பெறப்படும் தகவல்களில் காவல்துறைக்கு உபயோகமானவை 57 சதவீதம், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை 16 சதவீதம், மின் திருட்டு சம்பந்தப்பட்டவை 7 சதவீதம் என்பது இந்த அமைப்புக்குக் கிடைத்த கணிசமான வெற்றி.
குற்றத்தடுப்பு நடைமுறைகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாகச் செயல்படுகின்றன. உலக அளவில் குற்றத்தடுப்பு கூட்டுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்த அமைப்பிற்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவிலும் குற்றத்தடுப்பு முறை அமைக்க வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் தடய அறிவியல் துறையில் ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற காந்தி காஜா இதை நிறுவுவதற்கு பெருமுயற்சி எடுத்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' பிரிவு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யாவால் தொடங்கப்பட்டது.
உலகில் முக்கியமான 20 நாடுகளுக்கு மேலாக உள்ள க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பின் வெற்றிக்கு முக்கியமான காரணம்: 1) சமுதாயத்தில் அமைதி காப்பதற்கு பொதுமக்களின் பங்கு பற்றி பெருகி வரும் விழிப்புணர்ச்சி 2) லாப நோக்கமின்றி தனியார், பொது மக்களின் கூட்டமைப்பு 3) அரசியல், அரசாங்கத் தலையீட்டிற்கு அப்பாற்பட்டு பொது நலம் ஒன்றையே குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தல். மேலை நாடுகளில் இத்தகைய தகவல் பரிவர்த்தனையால் கடந்த 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள போதைப் பொருள்களும், திருட்டு சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தகவல் கொடுப்பவர்கள் விரும்பினால், அவர்கள் கொடுக்கும் தகவல் உபயோகமான தகவலாகும்பட்சத்தில் வெகுமதியும் கொடுக்கப்படுகிறது.
பயமின்றி குற்ற நிகழ்வுகள் பற்றி தகவல் கொடுக்க மக்களுக்கு உதவும் மையமாக அமைந்துள்ளது. சில நாடுகளில் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் நிர்வாகக் குழுவில் அரசு பிரதிநிதிகள் இருந்தாலும் அவர்கள் அன்றாட நடைமுறையில் தலையிடுவதில்லை. சொல்லப்போனால் பல நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறது. பெறப்படும் தகவல்கள் காவல்துறை புலனாய்விற்குப் பெரிதும் பக்கபலமாக இருப்பதால் சட்ட அமலாக்கத் துறைகளும் தங்களது பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்குகின்றன.
சாதாரண வழக்குகள் தவிர ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள், மோசடி முறைகள், சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை இந்த அமைப்பு மூலம் பெற முடியும். குற்றத்தடுப்பு முறை வேரூன்றி வலுவு பெற்றால் தீவிரவாத இயக்கங்களின் நாட்டு விரோத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும்.
தமிழகத்தில் இத்தகைய குற்றத் தடுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும். பொது நலம் காப்பதில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு நிறுவுவதற்கு சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளும் ஒத்துழைப்பு நல்கும் என்று உறுதியாக நம்பலாம்.
இந்தியர்களுக்கு அதிலும் தமிழர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம். நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவற்றை பெறுவதற்குத் தயங்குகிறோம். சிபாரிசு இருந்தால் தான் நடக்கும் என்று எண்ணுகிறோம். கடைகளில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கும்பொழுது அதன் தரத்தைப் பற்றி நாம் பார்ப்பதில்லை. நுகர்வோர் விழிப்புணர்ச்சி மந்தநிலையில் உள்ளது. உரிமைகள் பாதிக்கப்பட்டால் நாம் கேள்வி கேட்பதில்லை. சுயமரியாதை பறிபோனால் கண்டுகொள்வதில்லை. அரசு அலுவலர்கள் கடமை தவறினால் முறையிடுவதில்லை. இந்த சகிப்புத் தன்மைதான் குற்ற நிகழ்வுகளில் காண முடிகிறது. நம்மைப் பாதிக்காதவரை நாம் ஒதுங்கியிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். போர் பயங்கர விளைவுகளை உள்ளடக்கியதால் ராணுவத் தளபதிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது'' என்பது முதுமொழி. அதேபோல் உள்நாட்டு அமைதி காப்பது காவல்துறையால் மட்டும் இயலாது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். திரண்டு பலப்படுத்துவதற்குப் பதிலாக மருண்டு விடுகிறோம். சமுதாயக் குற்றங்களுக்கெதிராக வெகுண்டெழுவதில்லை. சுருண்டு விடுகிறோம். சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைந்த எதிர்கொளல்தான் உள்நாட்டு அமைதிக்கு அடித்தளம். அதற்கு க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பு போர் வாளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

திவாலாகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தானை இப்போது இரண்டு பிரச்னைகள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று தீவிரவாதம்; மற்றொன்று பொருளாதார நெருக்கடி. இந்த இரண்டுமே தற்போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் பிரச்னைதான். ஆனால், பாகிஸ்தானில் இவற்றின் வீரியம் அதிகம்.
பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 400 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைந்து விட்டது. இன்னும் 6 வார இறக்குமதிக்கே இது போதாது. கடன்பெறத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கும் அந்த நாடு, சர்வதேச கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் 300 கோடி டாலர்கள் கிடைக்காவிட்டால் நெருக்கடி முற்றிப்போகும்.
கடந்த சில மாதங்களாகவே பிரச்னை இருந்து வந்தாலும், அதை யாரும் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய அறிக்கை ஒன்று பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை, "பணம் இல்லை, எரிசக்தி இல்லை, அரசும் இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை திட்டமிட்டே ஊடகங்களுக்கும் கசியவிடப்பட்டது. இதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானின் உண்மையான நிதி நிலைமை வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவி செய்து வருவதால், தேவையான பண உதவியை அமெரிக்கா செய்யும் என பாகிஸ்தான் நம்பி வந்தது. அதனால்தான், வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டது. நாட்டின் எல்லைப் பகுதியில் அமெரிக்க விமானங்கள் குண்டுமழை பொழிந்தபோதுகூட பெரிய அளவில் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
ஆனால், நிதிப் பிரச்னை தீவிரமாகி பணம் தேவை என்கிறபோது அமெரிக்கா கையை விரித்துவிட்டது. யாராவது நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்பது போன்ற பரிதாப நிலைமையில் இருக்கும் அமெரிக்காவிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். பாகிஸ்தான் வந்த அந்நாட்டு அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் அதை பாகிஸ்தான் பிரதமரிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டார்.
அமெரிக்காவிடம் இல்லாவிட்டாலும் சீனாவிடம் பணத்தைப் பெற்றுவிடலாம் என்றுதான் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் நினைத்திருந்தார்கள். அதற்காகத்தான் அதிபர் ஜர்தாரி சீனாவுக்குச் சென்றார். அங்கு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பல திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனா சம்மதித்து. இரண்டு அணுமின் திட்டங்களை அமைப்பதற்கு உதவி செய்யவும் ஒப்புக் கொண்டது. ஆனால், பணம் தர முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டது. கடன் கேட்டு ஒவ்வொரு நாட்டுக்காகச் செல்லாமல், முறையான பொருளாதாரத் திட்டங்களுடன் சர்வதேச நாடுகளை அணுகுமாறு அறிவுரையும் கூறியது. ஜர்தாரிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்.
உண்மையில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமல்ல, உலகின் எந்த நாடும் பாகிஸ்தானை நம்பத் தயாராக இல்லை. இதற்குக் காரணம் "கடந்தகால' அனுபவங்கள்தான். இது தவிர, உலக நாடுகள் அனைத்தும் தங்களது நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பாகிஸ்தானுக்கு உதவுவதில் விருப்பம் காட்டவில்லை.
சீனாவும் கைவிட்ட பின்னர்தான் பாகிஸ்தான் எவ்வளவு பெரிய சிக்கலான நிலையில் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். "அனைத்து வழிகளும்' அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், சர்வதேச செலாவணி நிதியத்தை பாகிஸ்தான் நாடியிருக்கிறது. ஆனால், கடன் தருவதற்கு அந்த அமைப்பு விதிக்கும் நிபந்தனைகள் மிகக் கடுமையானவை. எதற்கும் மானியம் தரக்கூடாது என்பது அவற்றில் முக்கியமானது. இதுபோன்ற நிபந்தனைகளால் ஏழைகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமாகும். இந்த முடிவுக்குப் போக வேண்டாம் என நவாஸ் ஷரீபும் எச்சரித்திருக்கிறார். எனினும், பணம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், எத்தகைய நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளவதென பாகிஸ்தான் முடிவு செய்திருக்கிறது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்ததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு. முஷாரப் காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்துக்கும் மானியம் அளித்தது அவற்றுள் ஒன்று. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்தபோதும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. இரண்டாவது, பேநசீர் படுகொலையால் எழுந்த அரசியல் ஸ்திரமற்ற சூழல். இதனால், ரூபாயின் மதிப்பு சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, பணவீக்கம் உயர்வு என பொருளாதாரம் பலவீனமாகிவிட்டது.
இந்த நெருக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற சில நண்பர்கள் முயற்சித்து வருவதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். உண்மையில், அந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டியது உலகத்தின் கடமை. இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டுக்குள்ளே அடங்கிவிடக் கூடியதல்ல. அது, உலகத்தையே பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. ஏனெனில் அங்கு அணுகுண்டும் இருக்கிறது, கூடவே அல்காய்தாவும் இருக்கிறது.
எம். மணிகண்டன்
நன்றி : தினமணி