Monday, October 27, 2008
சாது மிரண்டால்...
குற்ற நிகழ்வுகளுக்குப் பல காரணங்கள் கூறலாம். சமுதாய ஏற்றத்தாழ்வுகள், அரசின் திட்டங்களின் பயன்கள் எல்லோரையும் சென்றடையாததால் ஏற்படும் ஏமாற்றங்களின் வெளிப்பாடு, தனிப்பட்ட நபர்களின் முன்விரோதங்கள், நுகர்வணிகமயமாக்கத்தின் தாக்கம், நுகர் பொருள்களை அடைவதில் பேராசை, திடீர் பணக்காரனாகிவிடலாம் என்ற பகற்கனவின் தூண்டலில் நிகழும் மோசடிகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். குற்றங்கள் களையப்பட வேண்டும், குற்றங்கள் நடவாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
1861ல் அமலுக்கு வந்த இந்திய காவல் சட்டத்தில், குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, தகவல்கள் சேகரிப்பது என்பவை காவல்துறைக்கு அடிப்படைப் பணிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. சமுதாயம் சீராக இயங்கிட நடைமுறையில் உள்ள சட்டங்களைத் தனக்குக் கொடுக்கப்பட்ட வரம்புக்குள் அமல்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. காவல்துறை தனது பணிகளைத் திறம்படச் செய்திட மக்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். காவல்துறை தனிமையில் செயல்பட முடியாது. ஆங்கிலேயர் ஆட்சியில் காவல்துறையின் நிலைப்பாடு வேறு; சுதந்திர இந்தியாவில் அதன் அணுகுமுறை மக்கள் நலன் காப்பது ஒன்றுதான்.
சுமுகமான, அமைதியான சூழ்நிலை சமுதாயத்தில் நிலவிட காவல்துறை சட்டம் ஒழுங்கினை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எடுத்துக்கொண்ட திட்டங்களைச் செம்மையாக நிறைவேற்றிட முடியும். காவல்துறை தனது பணிகளில் மக்களின் ஒத்துழைப்பைப் பெற சமுதாயக் காவல்பணி என்ற சித்தாந்தம் உருவாக்கப்பட்டது.
உலகெங்கிலும் எந்த அளவு சமுதாயம் முன்னேறியுள்ளதோ அந்த அளவுக்குக் குற்றங்களின் பரிமாணங்களும் வளர்ந்துள்ளன. சட்ட மீறல் ஒரு படி மேலே சட்டம் கீழே என்ற நிலைதான் காணப்படுகிறது. சமீபத்தில் பெங்களூர், ஆமதாபாத் மற்றும் தில்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் எவ்வளவு எளிதாக தீவிரவாதிகள் தங்களது திட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என்பது பயங்கர உண்மையாகக் காட்சியளித்தாலும் அதை எவ்வாறு எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூ மெக்சிகோ நகரில் சமுதாய நல விரும்பிகள், சட்ட அமலாக்கப் பிரிவுகள், ஊடகங்கள் இவைகளின் கூட்டு முயற்சியோடு "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (குற்றங்கள் தடுத்தல்) என்ற அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் வளரும் குற்றங்களை கூட்டு முயற்சியோடு எதிர்கொள்வது. உரிய நேரத்தில் தகவல் கிடைத்தால்தான் குற்றங்களைத் தடுக்க முடியும். தகவல் சேகரிப்பது, தகவல் கொடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது என்பவை முக்கியக் குறிக்கோள்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கு ஏதுவாகக் கட்டணமில்லா தொலைபேசி, மக்கள் தொடர்பு கொள்வதற்கு க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பில் வைக்கப்பட்டது. குற்ற நிகழ்வுகள் பற்றி நேரில் பார்த்தவர்கள், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிந்திருந்தாலும் காவல்துறையிடம் நேரில் சென்று சொன்னால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் காவல்துறை விசாரணை, நீதிமன்றம், வழக்கு என்று அலைய வேண்டும் என்பதால் "நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி விடுகின்றனர் என்பது உண்மை நிலை. ஆனால் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பில் தகவல் மட்டும் கொடுத்தால் போதும். தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் தெரிவிக்க வேண்டியதில்லை. அவர்களது அடையாளம் காக்கப்படும் என்பது முக்கியமான அம்சம். மேலும் இந்த தொலைபேசித் தகவல்களைப் பெறுபவர்கள் காவல்துறை அல்லாத பொதுப் பணியாளர்கள். இந்தப் பணியாளர்களுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுப்பவரிடம் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு தகவல் பெற வேண்டும் என்று சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாகத் தகவல் கொடுப்பவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது. பொறுமையாகவும், கனிவாகவும் பேச வேண்டும். தகவல் கொடுப்பவர் விரும்பினால் மட்டுமே தங்களைப் பற்றிய அடையாளம் கொடுக்கலாம். அந்த அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும்.
தகவல் சேகரிக்கும் கூட்டு முயற்சி தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று 1200க்கும் மேற்பட்ட "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்புகள் உலகெங்கிலும் உள்ளன. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பெண்களைக் கடத்துதல், மோசடிகள் போன்ற குற்றங்களில் முக்கியமான தகவல்கள் சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்குக் கிடைக்கப் பெற்று குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் குற்றத் தடுப்பு அமைப்புகள் ஓய்வு பெற்ற நீதித்துறை, காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், சமுதாயத்தில் நல்லெண்ணம் படைத்தவர்கள் கொண்ட குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இந்த நிர்வாக அமைப்பு அந்த இடங்களின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் தகவல் சேகரிக்கும் முறையில் மாற்றமில்லை.
உதாரணமாக நெதர்லாந்து நாட்டில் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' தனியார் பொதுத்துறை கூட்டமைப்பாகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் மூலம் நிர்வாகச் செலவிற்கான தேவையான நிதி திரட்டப்படுகிறது. 2002ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2007 முடிய 50,000க்கும் மேற்பட்ட உபயோகமான தகவல்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 6,000 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 4,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு மையம் காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 தொலைபேசி அழைப்புகள் பெறப்படுகின்றன. பெறப்படும் தகவல்களில் காவல்துறைக்கு உபயோகமானவை 57 சதவீதம், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை 16 சதவீதம், மின் திருட்டு சம்பந்தப்பட்டவை 7 சதவீதம் என்பது இந்த அமைப்புக்குக் கிடைத்த கணிசமான வெற்றி.
குற்றத்தடுப்பு நடைமுறைகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாகச் செயல்படுகின்றன. உலக அளவில் குற்றத்தடுப்பு கூட்டுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்த அமைப்பிற்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவிலும் குற்றத்தடுப்பு முறை அமைக்க வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் தடய அறிவியல் துறையில் ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற காந்தி காஜா இதை நிறுவுவதற்கு பெருமுயற்சி எடுத்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' பிரிவு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யாவால் தொடங்கப்பட்டது.
உலகில் முக்கியமான 20 நாடுகளுக்கு மேலாக உள்ள க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பின் வெற்றிக்கு முக்கியமான காரணம்: 1) சமுதாயத்தில் அமைதி காப்பதற்கு பொதுமக்களின் பங்கு பற்றி பெருகி வரும் விழிப்புணர்ச்சி 2) லாப நோக்கமின்றி தனியார், பொது மக்களின் கூட்டமைப்பு 3) அரசியல், அரசாங்கத் தலையீட்டிற்கு அப்பாற்பட்டு பொது நலம் ஒன்றையே குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தல். மேலை நாடுகளில் இத்தகைய தகவல் பரிவர்த்தனையால் கடந்த 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள போதைப் பொருள்களும், திருட்டு சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தகவல் கொடுப்பவர்கள் விரும்பினால், அவர்கள் கொடுக்கும் தகவல் உபயோகமான தகவலாகும்பட்சத்தில் வெகுமதியும் கொடுக்கப்படுகிறது.
பயமின்றி குற்ற நிகழ்வுகள் பற்றி தகவல் கொடுக்க மக்களுக்கு உதவும் மையமாக அமைந்துள்ளது. சில நாடுகளில் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் நிர்வாகக் குழுவில் அரசு பிரதிநிதிகள் இருந்தாலும் அவர்கள் அன்றாட நடைமுறையில் தலையிடுவதில்லை. சொல்லப்போனால் பல நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறது. பெறப்படும் தகவல்கள் காவல்துறை புலனாய்விற்குப் பெரிதும் பக்கபலமாக இருப்பதால் சட்ட அமலாக்கத் துறைகளும் தங்களது பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்குகின்றன.
சாதாரண வழக்குகள் தவிர ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள், மோசடி முறைகள், சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை இந்த அமைப்பு மூலம் பெற முடியும். குற்றத்தடுப்பு முறை வேரூன்றி வலுவு பெற்றால் தீவிரவாத இயக்கங்களின் நாட்டு விரோத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும்.
தமிழகத்தில் இத்தகைய குற்றத் தடுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும். பொது நலம் காப்பதில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு நிறுவுவதற்கு சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளும் ஒத்துழைப்பு நல்கும் என்று உறுதியாக நம்பலாம்.
இந்தியர்களுக்கு அதிலும் தமிழர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம். நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவற்றை பெறுவதற்குத் தயங்குகிறோம். சிபாரிசு இருந்தால் தான் நடக்கும் என்று எண்ணுகிறோம். கடைகளில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கும்பொழுது அதன் தரத்தைப் பற்றி நாம் பார்ப்பதில்லை. நுகர்வோர் விழிப்புணர்ச்சி மந்தநிலையில் உள்ளது. உரிமைகள் பாதிக்கப்பட்டால் நாம் கேள்வி கேட்பதில்லை. சுயமரியாதை பறிபோனால் கண்டுகொள்வதில்லை. அரசு அலுவலர்கள் கடமை தவறினால் முறையிடுவதில்லை. இந்த சகிப்புத் தன்மைதான் குற்ற நிகழ்வுகளில் காண முடிகிறது. நம்மைப் பாதிக்காதவரை நாம் ஒதுங்கியிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். போர் பயங்கர விளைவுகளை உள்ளடக்கியதால் ராணுவத் தளபதிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது'' என்பது முதுமொழி. அதேபோல் உள்நாட்டு அமைதி காப்பது காவல்துறையால் மட்டும் இயலாது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். திரண்டு பலப்படுத்துவதற்குப் பதிலாக மருண்டு விடுகிறோம். சமுதாயக் குற்றங்களுக்கெதிராக வெகுண்டெழுவதில்லை. சுருண்டு விடுகிறோம். சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைந்த எதிர்கொளல்தான் உள்நாட்டு அமைதிக்கு அடித்தளம். அதற்கு க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பு போர் வாளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆர். நடராஜ்
நன்றி : தினமணி
Wednesday, August 13, 2008
அரசியலில் சிக்கிய அமர்நாத்
பல்வேறு கலாசார, இன மக்கள் சேர்ந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படை இந்தியக் கோட்பாட்டையும், "காஷ்மீரியத்' கொள்கையின் உண்மையான அர்த்தத்தையும் விளக்க அவர் முற்பட்டார். அதனால்தான் அவருக்கு இந்தப் பாராட்டு.
ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை, இந்தியாவின் அடிப்படையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பையே சிதைத்திருக்கிறது.
கடந்த மே 20ல் அமர்நாத் கோயிலுக்கு 100 ஏக்கர் நிலத்தை தாற்காலிகமாக வழங்குவது என ஜம்முகாஷ்மீர் மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால், அமர்நாத் கோயில், பிரச்னையின் மையப் புள்ளியானது. இந்த விவகாரத்தால், கடந்த 60 ஆண்டுகளாக மாநிலத்தில் நடந்துவரும் பல்வேறு பிரச்னைகளும் அரசியல் குறைபாடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஒன்றுமேயில்லாத விவகாரம் பெரிய பிரச்னையாவதற்கு இது நல்ல உதாரணம்.
காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் உள்ளிட்ட யாருமே அமர்நாத் யாத்திரையை நிறுத்த வேண்டும் எனக் கோரவில்லை. யாத்ரீகர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடு. அதனால், தற்போது நிகழ்ந்து வரும் பிரச்னை, நிலம் கொடுத்ததால் மட்டுமே ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது.
நிலத்தைக் கொடுப்பதால் சுற்றுச்சூழல் பிரச்னை எழும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதைப் பயன்படுத்தப் போகிறவர்கள் வெளியாட்கள் அல்லவே? அதனால், சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படும் என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது.
அதேபோல் 100 ஏக்கர் நிலத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்தி ஹிந்துக்கள் நிரந்தரமாகத் தங்கக்கூடும் என சிலர் கூறிவருகின்றனர். இதனால் காஷ்மீர் பகுதியில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. காரணம், 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் இருக்கும் அமர்நாத் கோயிலைச் சுற்றி மனிதர்களே வாழ முடியாது என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஓராண்டில் எட்டு மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், மனித வாழ்க்கை சாத்தியமேயில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அமர்நாத் கோயில் நிர்வாகத்துக்குத் தாற்காலிக அடிப்படையில்தான் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் விதிமுறைகள் மீறப்படும்போது திரும்பப் பெறும் உரிமை அரசுக்கு இருக்கிறது.
ஆனால், இந்த விவரங்களையெல்லாம் மாநில அரசு சரியான முறையில் விளக்காததால்தான், போராட்டம் வெடித்து, நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. தாற்காலிகமாகத்தான் நிலம் வழங்கப்பட்டது என்றாலும், "தேவைப்படும்வரை' பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதால், "நிரந்தரம்' என்பதே உண்மை என ஆளுநர் சின்ஹாவின் ஆலோசகர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலாயிற்று.
அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவது என்கிற முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசு இரு விஷயங்களைச் சிந்திக்கத் தவறிவிட்டது. ஒன்று எல்லையில் நிலவி வரும் பதற்றம், அடுத்தது கடந்த 60 ஆண்டுகளில் மத்திய அரசின் மீது காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மை. இந்த இரண்டையும் கணக்கில் கொண்டிருந்தால், இந்த விவகாரமே வந்திருக்காது.
உண்மையைக் கூறினால், அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கெனவே அமர்நாத் யாத்திரைக்குப் போதுமான ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டுதானிருந்தது. வேண்டுமானால் அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகவும், நவீனமாகவும்கூடச் செய்யலாம். அதற்கெல்லாம் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், அதைவிட்டுவிட்டு அரசியல் ரீதியாக அணுகியதுதான் பிரச்னைக்குக் காரணம்.
அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்மு பகுதி மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவது என்ற முடிவை குலாம் நபி ஆசாத் எடுத்தார்.
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் நிலம் வழங்கியதைப் போல, தாமும் எதையாவது செய்யவேண்டும் என்பதற்காக, அப்போதைய ஆளுநர் எஸ்.கே.சின்ஹா கொடுத்த ஆலோசனையாகவும் இது இருக்கலாம். அல்லது நண்பரான அவரை மகிழ்விக்க ஆசாத்தே இந்த முயற்சியைச் செய்திருக்கலாம்.
ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். வைஷ்ணவ தேவி கோயில் ஜம்மு பகுதியில் உள்ளது. அமர்நாத் குகைக் கோயில் முஸ்லிம்கள் நிறைந்த காஷ்மீர் பகுதியில் உள்ளது. அமர்நாத் குகைக் கோயில் இந்துக்களின் புனிதத் தலமாக இருந்தாலும், அதைக் கண்டுபிடித்த பெருமை முஸ்லிம்களையே சாரும். முஸ்லிம்கள் நிறைந்த பகுதியைத் தாண்டித்தான் அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல வேண்டும். 60 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், ஆண்டுதோறும் நடக்கும் யாத்திரை தடைபடுவதில்லை. முஸ்லிம்கள் எப்போதுமே அதைத் தடுக்க முனைந்ததுமில்லை.
இதில், அரசியல் புகுந்ததால்தான் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. நிலம் ஒதுக்கினால், காஷ்மீரை ஜம்முவிலிருந்து பிரித்து விடுவோம் என்று மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி கூறியது. இத்தனைக்கும், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவைதான் அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவதற்கும் ஒப்புதல் அளித்தது. அதிலும் இந்த விவகாரத்துக்கு பொறுப்பான வனத்துறை அமைச்சரே அந்தக் கட்சிக்காரர்தான்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்முவைச் சேர்ந்தவரான ஆசாத்துக்கு செல்வாக்கு கூடியது. அவர் சார்ந்த கட்சிக்கும் ஜம்முவில் அதிக இடங்கள் கிடைத்தன. இந்த ஆதரவை தங்கள் பக்கம் திருப்புவதற்காக அமர்நாத் நில விவகாரத்தை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம் ஆகியவையும் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு உதவுகின்றன.
மற்றொரு பக்கம், அமர்நாத் நில விவகாரத்தால் எழுந்துள்ள உணர்ச்சிபூர்வமான சூழலைப் பயன்படுத்தி மீண்டும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஹுரியத் தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.
ஜம்முவில் இந்துக்களின் விகிதாசாரம் அதிகரிக்கக்கூடும் என்ற முஸ்லிம்களின் பயத்தையும், தில்லி அரசின் மீது அவர்களுக்குள்ள அவநம்பிக்கையையும் ஹுரியத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில் ஹுரியத் மிதவாதி மிர்வைஸ் உமர் பரூக்குக்கும் தீவிரப் போக்குக் கொண்ட சையது அலி கிலானிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆக, ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த விவகாரத்தால் தாங்கள் அடையப் போகும் பலனைத்தான் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கோயிலுக்கு நிலம் வழங்குவதற்கு உத்தரவிட்ட பிறகு, நெருக்கடி ஏற்பட்டதால் அதைத் திரும்பப் பெற்றதே மோசமான அரசியலுக்கு உதாரணம். நிலம் வழங்குவதாக மாநில அரசு உத்தரவிட்ட அன்றே, அதைத் திரும்பப் பெற்றுவிடுமாறு உளவுத்துறை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்படிச் செய்திருந்தால்கூட, ஜம்முவில் வசிக்கும் ஹிந்துக்கள் இந்த அளவுக்குப் போராட்டத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள். ஆனால், சில வாரங்கள் கழித்துத்தான் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குள் விவகாரம் தீவிரமாகி, நடுநிலையான ஹிந்துக்கள்கூட போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
தற்போது அமர்நாத் நில விவகாரமும் அதைத் தொடர்ந்த வன்முறையும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்குள்ளேயே முடிந்துவிடும் நிலையில் இல்லை; நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையால் வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதியாகிவிட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீரில் பிரிவினைவாதிகளும் ஜம்முவில் பாஜகவும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.
நெருக்கடியான தருணங்களில் இந்தியாவை வழிநடத்தும் திறனுள்ள தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்பதுதான் பிரச்னை முடிவில்லாமல் தொடர்வதற்குக் காரணம். ஜம்முவும் காஷ்மீரும் மத அடிப்படையில் பிரிவதற்கான சாத்தியங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப் பிரிவதால் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.
அமர்நாத் நில விவகாரத்தால் புதிய காஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. முஸ்லிம்களுக்கு காஷ்மீர், ஹிந்துக்களுக்கு ஜம்மு, புத்த மதத்தினருக்கு லடாக் என மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரச்னை இன்னும் தீவிரமானால், இந்தியா எந்த மதத்தையும் சாராதது என்று கூறிக்கொள்ளும் அதே நேரத்தில் மாநிலங்களை மத அடிப்படையில் பிரிக்க நேரிடும். அப்படி நடந்தால், வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நமது தேசிய அடையாளம் அழிந்தே போகும், யாரும் விரும்பாவிட்டால்கூட.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
Monday, August 11, 2008
கம்ப்யூட்டருக்குள் ஒரு குட்டிச் சாத்தான்
எனவே போலீசார் எல்லா சைரன்களையும் ஒலித்துக் கொண்டு விரைந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட வீட்டில் போய்ப் பார்த்தால் அப்பாவி அமெரிக்கர் ஒருவர் திருதிருவென்று விழித்துக் கொண்டு நிற்கிறார். அவருடைய கம்ப்யூட்டரை அல்லது நெட் இணைப்பைப் பயன்படுத்தி வேறு யாரோ மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் அவரிடம் தீவிர விசாரணை செய்து லேப்டாப்பைப் பிடுங்கி வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் உருப்படியாக எதுவும் சிக்குவது சந்தேகம்தான்.
கணிப் பொறி கிரிமினல்களால் நம்முடைய கம்ப்யூட்டரை உபயோகித்து நமக்குத் தெரியாமலே என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்; மெயில் அனுப்புவது உள்பட. கம்ப்யூட்டர் வைரஸ்கள் பற்றி எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். இன்னும் கணினிப் புழு, ட்ரோஜன் குதிரை என்று பல வடிவங்களில் போக்கிரி மென்பொருட்கள் வருகின்றன. இவை எழுதப்படும் விதத்தில்தான் வித்தியாசமே தவிர, செய்யும் வேலை ஒன்றுதான்: நாசவேலை! உதாரணமாக, ஈஞந தாக்குதல் என்று இருக்கிறது.தங்களுக்கு வேண்டாதவர்களின் வலை மனைக்கு சரமாரியாக ஆயிரக்கணக்கான கோரிக்கைகளை அனுப்பித் தாக்கினால் அவர்களுடைய சர்வர் எனப்படும் தாய்க் கம்ப்யூட்டர் சமாளிக்க முடியாமல் மடங்கி விழுந்துவிடும். ஏகப்பட்ட குழந்தைகள் பெற்றுவிட்ட தாயாரை அத்தனையும் ஒரே சமயத்தில் "சாப்பாடு, பாத்ரூம், குச்சி மிட்டாய்' என்று பிடுங்கி எடுத்தால் அவள் ஆயாசப்பட்டுப் போவதில்லையா, அதுபோல்தான்.
பாட்கள் ( bots) என்பவை மென்பொருளால் செய்த தானியங்கி ரோபாட்கள். குட்டிச் சாத்தான் மாதிரி நம் கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, எங்கோ தூரத்திலிருக்கும் தன் எஜமானனின் ஏவல்களை நிறைவேற்றும். அப்படியே மலையாள மாந்திரீகம்தான்! சில பாட்கள் நம் கம்ப்யூட்டரைக் குடாய்ந்து பார்த்து ஏதாவது பாஸ் வேர்டு, கிரெடிட் கார்டு எண் அகப்படுகிறதா என்று தேடும். வேறு சில, நம் மின் அஞ்சல் முகவரிப் புத்தகத்தை அனுமதியில்லாமல் திறந்து பார்த்து அவர்களுக்கெல்லாம் ஏதாவது நய வஞ்சக மெயில் அனுப்பும்.
பாட்களை ஏவி விடும் திருடர்கள், பல்கலைக் கழகங்களிலும் அசட்டு அரசாங்க அலுவலகங்களிலும் நூற்றுக்கணக்கான கணினிகள் இருப்பதால் அவற்றைக் குறிவைத்துத் தாக்குவார்கள். பாட் ஒன்று ஒரு தடவை உள்ளே நுழைந்துவிட்டால் போதும்; தானாகவே அத்தனை கம்ப்யூட்டரிலும் தன்னுடைய ஜெராக்ஸ் காப்பிகளை அனுப்பி ஆக்கிரமித்துவிடும். ஹாலந்து நாட்டில் பொல்லாத பாட் ஒன்று ஒரே நேரத்தில் பதினைந்து லட்சம் கம்ப்யூட்டர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.
பாட்களை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நிறைய அக்கிரமங்கள். ""வயாகரா மாத்திரையை வாங்குங்கள், வாங்குங்கள்'' என்று வலியுறுத்தும் விளம்பரங்கள் அடிக்கடி உங்கள் மின் அஞ்சல் பெட்டியை நிரப்புவதைப் பார்த்து நொந்திருப்பீர்கள். இந்த மாதிரி ஹோல்சேலில் அனுப்பப்படும் அஞ்சல்கள் அநேகமாக பாட்களின் வேலையாக இருக்கலாம். பாட்டை ஏவிவிட்ட அந்த... (ஸாரி... கதிரின் கௌரவமான வாசக சபை முன் வைக்கலாகாத கெட்ட வார்த்தையை நானே எடிட் செய்து விடுகிறேன்) , தானே இத்தனை மெயிலும் அனுப்பினால் செலவாகும் என்பதால் "ஊரான் வீட்டு நெய்யே' என்று உங்கள் கம்ப்யூட்டரை உபயோகித்துக் கொள்கிறான். வெடிகுண்டு புரளிகள், ஜார்ஜ் புஷ்ஷுக்கு கொலை மிரட்டல் என்பது போன்ற சட்ட விரோத மெயில்களுக்கும் "பாட்'கள் மூலம் அப்பாவிகளின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்திக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. நம் கம்ப்யூட்டரிலிருந்து கெட்ட மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் சந்தேக ஊசி முதலில் நம்மைத்தான் காட்டும். "நான் அதை அனுப்பவே இல்லை' என்று நிரூபித்து வெளியே வருவதற்குள் எத்தனை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்குமோ.திருடர்களாலும் தீவிரவாதிகளாலும் நம் கம்ப்யூட்டர் ஹைஜாக் செய்யப்படாமல் காப்பாற்றுவது எப்படி? முதலாவதாக, நமக்கு வேண்டிய எல்லா மென் பொருள்களையும் முறையாகக் காசு கொடுத்து வாங்குவதே உத்தமம். (ஆம். விண்டோஸ் உட்பட) திருட்டுக் கூடாது என்று மகாத்மா காந்தி அறிவுரை கூறிச் சென்றது ஒரு புறமிருக்க, திருட்டு சாப்ட்வேரில்தான் வைரஸ்கள் வசிப்பதற்கு வாய்ப்பு அதிகம். கம்ப்யூட்டரை லோடு செய்யும் போது ஃபயர் வால் எனப்படும் தீச்சுவர்களை எழுப்பிப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பட்டனை அமுக்க வேண்டியதுதான். அந்தப் பட்டன் எங்கே என்று கண்டுபிடிப்பதுதான் பெரும்பாடு.
கம்ப்யூட்டரையும் நாய்க்குட்டி போல் அவ்வப்போது அதன் வெட்னரி டாக்டரிடம் காட்டித் தடுப்பூசி போட்டு வர வேண்டும். நார்ட்டன், மக்கஃபே போன்ற வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் எப்போதும் கைவசம் இருக்கட்டும். உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்தைவிட மசமசவென்று வேலை செய்தாலோ, திடீர் திடீரென்று காரணமில்லாமல் மண்டையைப் போட்டாலோ வைரஸ் தாக்குதல் காரணமாக இருக்கலாம். சில சமயம் கீ போர்டு, மவுஸ் எதற்கும் பதில் இருக்காது. பின்னணியில் வைரஸ் உக்கிரமாக வேலை செய்யும் போது மொத்த கம்ப்யூட்டரும் எதிர்பாராதவிதமாக நமீதாவை நேரில் கண்ட ரசிகன் போல் செயலிழந்து திகைத்து நின்றுவிடும். கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே ஸ்கான் செய்ய வேண்டும்.
இப்போதெல்லாம் பாட்களைக் கண்டுபிடித்து அழிக்கும் மென்பொருள் ஒன்று ஆண்டிபாட் என்று தனியாகவே கிடைக்கிறது. நியாயமாகப் பார்த்தால் அவர்கள் ஆண்ட்டி வைரஸுடன் இதையும்தான் சேர்த்துத் தரவேண்டும். ஆனால் இட்லிக்கு எக்ஸ்ட்ரா சாம்பார் கேட்டால் அதற்குச் சிலர் தனியாகக் காசு பிடுங்குவதுபோல் பாட் எதிர்ப்பு மென்பொருள்களையும் உபரியாக விற்கிறார்கள். இவர்களெல்லாம் கூடிய விரைவில் தொழில் போட்டி தாங்காமல் எல்லாவற்றையும் இலவசமாகவே கொடுத்துவிட்டு அண்டர்வேருடன் ஓடக் கடவதாக.
வைஃபை ( Wi-fi) என்ற ஒயர்லெஸ் தொழில் நுட்பத்தில் கம்பியில்லாமல் கணினியை நெட்டில் இணைத்துக் கொள்ள முடியும். மடிக் கணினியை எடுத்துக் கொண்டு வீடு பூரா சுற்றலாம், தோட்டத்தில் மாமரத்தடியில் உட்கார்ந்து மெயில் அனுப்பலாம். சுகமான விடுதலை! ஆனால் இதன் ரேடியோ அலைகள் நூறு மீட்டருக்கு மேல் பரவுவதால் பக்கத்து வீட்டுக்காரர்களும் உங்கள் செலவில் மெயில் அனுப்ப முடியும். நம் வீட்டு வாசலில் ஒரு ஓரமாக காரைப் பார்க் செய்துவிட்டு அதற்குள் உட்கார்ந்து கொண்டு தீவிரவாதிகளும் மெயில் அனுப்பலாம். நாளைக்கு ஏதாவது வில்லங்கம் என்றால் முதல் விலங்கு நமக்குத்தான்.
உங்களிடம் வைஃபை மோடம் இருந்தால் அதை ஜன்னல் ஓரமாக வைக்காதீர்கள். வீட்டின் நடுவே பொருத்திக் கொண்டால்தான் சற்று பாதுகாப்பு. ரேடியோ அலைகளின் சக்தியைக் குறைத்துத் தேவையான அளவுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளவும். இருப்பதிலேயே நீளமான பாஸ் வேர்டு போட்டு வையுங்கள். எங்கள் கட்டிடத்திலேயே பல அப்பாவிகள், பாஸ் வேர்ட் இல்லாமலேயே வைஃபை உபயோகிப்பது கண்டு பதறி ஓடிப் போய் எச்சரித்திருக்கிறேன். இன்னும் ஈஏஇடயை அணைத்து ரடஅ வை ஏற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்ல முற்பட்டால் அடிக்க வருவீர்கள். அக்கம்பக்கத்தில் மோட்டார் பைக் வைத்திருக்கும் இளைஞர்களிடம் கேட்டால் சொல்லித் தருவார்கள். நல்லவேளையாக இதெல்லாம் ஒருமுறை செய்தால் போதும்.
குண்டு வெடிப்பு மெயில் விவகாரத்தில் சிக்கியவர் அமெரிக்கராக இருந்ததால் அடி வாங்காமல் தப்பித்தார். நீங்களும் நானும் மாட்டியிருந்தால் லத்திக் குச்சியில் மிளகாய்ப் பொடியைத் தடவிக் கொண்டுதான் விசாரணையையே துவக்கியிருப்பார்கள். எனவே சற்றே கவனமாக நம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்போம்.
ராமன்ராஜா
நன்றி : தினமணி
Saturday, August 2, 2008
உளவுத்துறையில் மாற்றம் தேவை!
இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை கண்காணித்து வருகிறது. ஆனால் அவர்களது செயல்பாட்டை உளவுத்துறை அறிந்து கொள்ள முடியவில்லை. அதை முறியடிக்க முயற்சிகளையும் மேற்கொள்ள முற்படவில்லை.
மாநில அளவிலான உளவுத்துறையில் காவல்துறையைச் சேர்ந்தவர்களே உளவுத்துறைக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அந்தந்தப் பகுதியில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் சில சமயங்களில் உண்மையான தகவல்களை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடிவதில்லை.
காவல்துறையில் உளவுத்துறைக்கென தனியாகப் பணியிடங்களை நிரப்பி அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களை சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யக்கூடாது. மேலும் தற்போது உள்ள மாநில அளவிலான உளவுத்துறை, அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், சாதிய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் கூட்டங்கள், போராட்டங்கள் ஆகியவை குறித்து மட்டும் முன்கூட்டியே அரசுக்குத் தகவல் தெரிவிக்கும் துறையாகச் செயல்படுகிறது.
தமிழக உளவுத் துறையினர் தனது பகுதியில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? தீவிரவாத இயக்கங்களுடன் யார், யார் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதைக் கண்காணிப்பது இல்லை. அப்பகுதியில் உள்ள முக்கியப் பிரச்னை என்ன? அதனால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொள்வது இல்லை.
சமீபத்தில் விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதைப் பார்த்த ஒரு சிறுவன், ரயில்பாதையிலேயே ஓடிச்சென்று எதிர்வரும் ரயிலை நிறுத்தி மிகப்பெரிய விபத்தைத் தவிர்த்தான். அதுபோன்று மக்கள் தங்கள் பகுதியில் யாராவது புதிதாக குடிபெயர்ந்தாலோ அவர்களது நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருந்தாலோ போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம்.
வாடகை அதிகம் கொடுக்கிறார்கள் என்பதால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வீடு கேட்டு வந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரிக்காமல் வெளிமாநிலத்தவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதைத் தவிர்க்கலாம். விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து தங்கினால் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கலாம். இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபட்டால் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
தற்போதைய போலீஸ்துறை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தகவல் சொல்பவர்களையே புகார்தாரர்களாக ஆக்குவதால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கப் பயப்படுகின்றனர். மேலும் தகவல் சொல்பவர்களைப் பற்றி காவல்துறையே சில நேரங்களில் சமூகவிரோதிகளிடம் காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் தகவல் தெரிந்தால்கூட போலீஸாரிடம் சொல்ல அஞ்சும் நிலை உள்ளது.
எனவே காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்களிடம் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் உளவுத்துறையைவிட அதிகமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கி ஊக்குவிக்கலாம். அதையும் ரகசியமாகவே வழங்க வேண்டும். அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருவார்கள். நமது நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்று பொதுமக்கள் செயல்பட்டால் தீவிரவாதத்தை மக்கள் சக்தியால் முறியடிக்க முடியும்.
ஜி . சுந்தரராஜன்
நன்றி : தினமணி