Tuesday, August 19, 2008

ஓட்டு நன்மையைக் கருதாமல்...

இமயம் தொட்டு குமரி வரை இது ஒரேநாடு. இதை ஒரேநாடாக இன்றுவரை கட்டி காத்து வரும் பல அம்சங்களில் ஒன்று யாத்திரை. தனது வாழ்நாளில் ஒரு முறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என தினமும் பைசா பைசாவாகச் சேர்த்து ஓர் ஏழை விவசாயி வடக்கேயிருந்து புறப்பட்டு பக்தியுடன் யாத்திரை வருகிறான்.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்துக்கு என்ன சிறப்பு என வினவினால் நீங்கள் வேறு எதையோ சொல்வீர்கள். ஆனால் சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது தமிழகத்திலேயே கயிலாய யாத்திரை சென்றவர்கள் அதிகமுள்ள மாவட்டம் ஈரோடு என! தெற்கிலிருந்து வடக்கேயும் வடக்கிலிருந்து தெற்கேயும் ஓடக்கூடிய இந்த பக்தி ஓட்டம்தான் பாரதத்தாயின் ரத்த ஓட்டம்.
தென்பகுதியில் சபரிமலைக்கும், பழனிமலைக்கும் யாத்திரை போகிறார்கள். மேல்மருவத்தூருக்கும் யாத்திரை நடக்கின்றது. ஹிந்துக்களது வழிபாட்டினைப் பின்பற்றி வேளாங்கண்ணி யாத்திரையும் அவர்கள் துவக்கியிருக்கிறார்கள்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம். ஆள்பவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாத(?) கம்யூனிஸ்டுகளாகவே இருந்தாலும் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து தர வேண்டியது அரசின் கடமை.
ஆனால் மதசார்பற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற யாத்திரைக்கு வருபவர்களிடம் நுழைவு வரி, வாகன வரி, யாத்ரீகர் வரி என பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக உள்ளார்கள்.
இது தவிர தமிழகக் கோயிலில் விசேஷக் கட்டணங்கள் வேறு. ஆனால் அதற்குத் தக பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படவில்லை.
ஹிந்துக்கள் யாத்திரை செல்லும்போது வரி வசூலிப்பவர்கள் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குகிறார்களே என ஹிந்துக்கள் ஏற்கெனவே கோபத்தில் உள்ளார்கள்.
மதசார்பற்றவாதிகளது தாஜா செய்யும் போக்கு தாஜா செய்யப்படும் மதத்துக்கு எதிரான உணர்வை ஹிந்துக்களிடம் உண்டாக்கி விடுகிறது.
இதில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் அமர்நாத் சம்பவம். எங்கெல்லாம் லட்சக்கணக்கில் கூட்டம் கூடுகிறதோ அந்த பக்தி கேந்திரங்களின் மதிப்பைக் குறைக்க சில முயற்சிகள் திட்டமிட்டு நடைபெற்றன.
""சபரிமலை ஐயப்பன் சந்நதி தீட்டுபட்டு களங்கமாகிவிட்டது'' என ஒரு பிரசாரம்.
திருப்பதி மலை அருகிலேயே அரசின் ஆதரவுடன் கிறிஸ்தவ மதப் பிரசாரம். ""அமர்நாத் பனிலிங்கம் என்பது ஒரு மோசடி'' என ஒரு பிரசாரம். ஆனால் இந்தப் பிரசாரங்கள் எடுபடவில்லை.
அமர்நாத் பனிபடர்ந்த பகுதியில் உள்ளது. ஆண்டின் எல்லா நாள்களும் அங்கு செல்ல முடியாது. குறிப்பிட்ட இரண்டு மாதங்கள் மட்டுமே பனிலிங்கத்தை தரிசனம் செய்ய இயலும்.
இயற்கையின் இந்த கடும் குளிரைத் தாங்க இயலாமல் பலர் இறந்துபடுகிறார்கள். ஆனாலும் யாத்திரை வருபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.
பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பலர் மடிந்தார்கள். ஆனாலும் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்தது.
1996ல் நடைபெற்ற விபத்தின் காரணமாக 250 யாத்ரீகர்கள் இறந்துபட்டார்கள். இது குறித்து விசாரித்த சென்குப்தா குழு தனது அறிக்கையில் யாத்ரீகர்கள் தாற்காலிகமாகத் தங்குவதற்காக ஸ்திரமான கட்டடங்கள் தேவையென்றும், வைஷ்ணவதேவி ஆலயத்துக்காக உள்ளது போல ஒரு வாரியம் அமர்நாத்துக்கும் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. அந்த அமர்நாத் புனிதத்தலக் குழுவுக்கு ஆளுநரே தலைவராக இருப்பார் என்றும் பரிந்துரை செய்தது.
லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சின்ஹா ஆளுநராக இருந்தபோது 2003ம் ஆண்டே யாத்ரீகர்கள் தங்குவதற்கான தாற்காலிகக் குடியிருப்புகளைக் கட்டவும், தேவை முடிந்ததும் கட்டுமானப் பொருள்களைக் கழட்டி அகற்றுகின்ற வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமென வற்புறுத்தினார்.
எண்ணிக்கை அதிகமாக வருவதால் யாத்திரை காலத்தை 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்றும் ஆளுநர் பரிந்துரைத்தார். இதற்கு முதலமைச்சர் முப்தி முகமது சையத் 6 மாதத்துக்கு எந்த பதிலும் தரவில்லை.
இதற்கிடையே துணை முதலமைச்சர் மங்கத் ராம் சர்மா யாத்திரையின் காலம் 2 மாதங்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார்.
முதலமைச்சர் நிருபர் கூட்டத்தைக் கூட்டி அமர்நாத் யாத்திரை ஒரு மாதம்தான் என மறுத்து அறிவித்தார். மோதல் தொடங்கியது. இந்த விஷயத்திற்காக காங்கிரஸ் கட்சியின் 4 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தார்கள்.
முப்தி முகமது இந்த விஷயத்தை ஸ்ரீநகர் உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் நீதிமன்றமோ அமர்நாத் யாத்திரை குறித்த எல்லா விஷயங்களையும் முடிவு செய்யும் அதிகாரம் அமர்நாத் புனிதத்தல வாரியத்துக்குத்தான் உள்ளது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து முப்தி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.
2008 மே மாதம் உச்ச நீதிமன்றம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் தாற்காலிகக் குடியிருப்புகள் அமைக்க ஆணையிட்டுவிட்டது.
அதன் அடிப்படையில் அமைச்சரவை கூடி வனத்துறையின் 100 ஏக்கர் நிலத்தை வழங்க ஏகமனதாக பிடிபி உள்பட முடிவு செய்தது.
அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து தர அமர்நாத் புனிதத்தல வாரியம் ஒன்றினை அரசு அமைத்துள்ளது. அது அரசு நியமித்த வாரியம். அதன் உறுப்பினர்களையும் அரசே நியமிக்கின்றது. ஆளுநர் அதன் தலைவர்.
அந்த வாரியம் மாநில அரசுக்கு வாடகை முன்பணமாக ரூ. 2 கோடியே 31 லட்சம் செலுத்தியுள்ளது. அதன் பிறகே நிலத்தை ஒதுக்கித் தரச் சம்மதித்தது. எத்தனை நாள்களுக்கு? 2 மாதங்களுக்கு மட்டும். பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. வெறும் குத்தகைதான். நிலஉடமை வனத்துறையின் பொறுப்பிலேயே இருக்கும்.
எவருக்கும் தொந்தரவு இல்லாத வனப்பகுதியில் வெறும் 2 மாதங்களுக்குத் தாற்காலிகக் குடியிருப்புகளும், தாற்காலிகக் கழிவறைகளும் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கித் தந்தமைக்குத்தான் இந்த எதிர்ப்பு. மதவெறியர்களின் இந்த எதிர்ப்புக்கு "மதசார்பற்றவாதிகள்' கண்டனம் தெரிவிக்கவில்லை.
மதவெறியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பகிரங்கமாக இந்திய எதிர்ப்பு கோஷங்கள் முழங்கப்பட்டன.
இது நிலம் குறித்த பிரச்னை என என்னமாய் முகம் சிவந்து கோபப்படுகிறார் உமர் அப்துல்லா! 2 மாதம் நிலம் பயன்படுத்தியதால் என்ன நிலம் பறி போயிற்று?
இமயம் முதல் குமரி வரை உள்ள ஒவ்வொரு துளி மண்ணும் இந்தியனுக்குச் சொந்தம். உமர் அப்துல்லா பழையபடி பிரிவினை முழக்கம் துவக்கினால் நாமும் கோஹினூர் பங்களாவைத் தயார்ப்படுத்த வேண்டி வரும்.
தாற்காலிக ஹிந்து யாத்ரீகர்கள் வருவதால் மதரீதியான ஜனத்தொகை விகிதம் மாறிவிடும் என்றும் அவர்கள் பேசுகிறார்கள்.
சொந்த மண்ணிலிருந்து காஷ்மீரத்து பண்டிதர்களை அடித்து விரட்டி அதனால் லட்சக்கணக்கான காஷ்மீரத்து பண்டிதர்கள் காஷ்மீருக்கு வெளியே சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மதரீதியான ஜனத்தொகை மாற்றம் குறித்து பேசவே யோக்யதை அற்றவர்கள்.
இது ஏதோ காஷ்மீரத்து மக்கள் பிரச்னை அல்ல; அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் தமிழர்களும்கூட. அதுமாத்திரமல்ல. நியாயமான ஒரு கோரிக்கைக்காக ஜம்மு மக்கள் போரிடும்போது தென்கோடியில் உள்ள நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் எனக் காட்ட வேண்டாமா?
தேர்தல் நெருங்கி வருவதால் முஸ்லிம்கள் ஓட்டுகளைப் பெற பிடிபி துடிக்கிறது. ஹிந்துக்கள் தரப்பு வாதத்தை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பேசி வருகிறது.
காங்கிரசுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதனால் தெளிவில்லாமல், குழம்பிப் போய் உள்ளது. ஓட்டு நன்மை கருதாமல் நாட்டு நன்மை கருதிச் செயல்பட வேண்டிய விஷயம் இது.
இல. கணேசன்

நன்றி :தினமணி

கச்சத் தீவு தீர்வல்ல...

கடந்த வாரம் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இப்படி தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் புதியதல்ல. 1974 ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுமுதல் இந்தத் தாக்குதல்கள் முதலில் எப்போதாவது என்று தொடங்கி, சமீபகாலங்களில் வாராவாரம் என்று தொடர்கிறது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து வருகின்றன. தூத்துக்குடி துறைமுகமும், அனல் மின்நிலையமும் ஏற்பட்ட பிறகு, அந்தப் பகுதி மீனவர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர். முத்தெடுத்த காலம்போய், சிப்பிகூடக் கிடைக்காத அளவுக்குக் கடல்வளம் குன்றிவிட்டது.
தூத்துக்குடி அருகில் இருக்கும் முயல் தீவு ஒருகாலத்தில் மீன்களும், இறால்களும், நண்டுகளும் பெருத்துக் கிடந்த பகுதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு முயல் தீவைச் சுற்றி வலை விரித்தால் லாப்ஸ்டர்களும், சாளைகளும், பெளர்ணமி நண்டுகளும், கொள்ளை கொள்ளையாக அகப்படும் நிலைமை இருந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சிங்கரால் அந்தப் பகுதி மீனவர்களை செழிப்புடன் வைத்திருந்த காலமொன்று உண்டு.
தூத்துக்குடி அனல் மின்நிலையம் வந்ததன் விளைவாக, சாம்பல் கழிவுகள் தண்ணீரில் கரைத்து விடப்பட்டன. முயல்தீவுவரை நீண்டு கிடக்கும் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து சாம்பல் கழிவுகள் கடலில் கரைக்கப்பட்டு அவை கடற்பாறைகள்போல உறைந்து கிடக்கின்றன. விளைவு? சாம்பல் கழிவில் காணப்படும் ரசாயனப் பொருள்களால் மீன்கள் இனப்பெருக்கமற்று அழிந்து போய்விட்டன.
சேது சமுத்திரத் திட்டத்தின் விளைவாக, விரைவிலேயே ராமேஸ்வரம் மீனவர்களும் பாதிக்கப்படப் போவது நிச்சயம். ஆஸ்திரேலியாவிலும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் மட்டுமே காணப்படும் பவளப்பாறைகளின் வரைபடத்திலிருந்து விரைவிலேயே ராமேஸ்வரம் அகற்றப்பட்டுவிடும். பவளப்பாறைகள் போனால் அதன் காரணமாக மீன் உற்பத்தியும் குறைந்துவிடும்.
தூத்துக்குடிப் பகுதி மீனவர்களின் நிலைமைதான் சேது சமுத்திரத் திட்டத்துக்குப் பிறகு ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கும் ஏற்படப் போகிறது. துறைமுகத்தாலும், அனல் மின்நிலையத்தாலும், சேது சமுத்திரத் திட்டத்தாலும் பாதிக்கப்படுவது மீனவர்கள் வாழ்வாதாரம். கடலை மட்டுமே நம்பி, மீன்பிடிப்பது மட்டுமே தெரிந்த ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான?) மீனவர்கள் செய்யத் தொழிலின்றி அழியும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
பிரிட்டிஷ் இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு பகுதியாக இருந்ததுதான் கச்சத் தீவு. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இங்கே மீன்பிடிப்பதற்கான சகல உரிமைகளையும் பெற்றிருந்தனர். இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து வலைகளை உலர்த்தி சகோதரர்களாக இருந்த காலமொன்று உண்டு. அதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது.
தமிழக மீனவர்களைப் பொருத்தவரை அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டியாக வேண்டியுள்ளது. இந்திய எல்லைக்குள் மீன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இந்த நிலையில் நடுக்கடலில் இந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், எல்லை கடந்து வருகிறார்கள் என்பதும் என்ன நியாயம்?
தமிழக மீனவர்களைத் தாக்குவது நாங்களல்ல, விடுதலைப் புலிகள் என்கிற சிங்கள அரசின் விளக்கத்தில் உண்மையில்லை. பிறகு ஏன் பல தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? விடுதலைப் புலிகளை அடையாளம் கண்டு அவர்கள் ஆயுதம் கடத்துவதைத் தடுக்க முடியாமல் போனதற்கு, அப்பாவித் தமிழக மீனவர்கள்தானா பலியாக வேண்டும்? தங்களது கையாலாகாத்தனத்துக்கு, வாழ்வாதாரம் தேடி நடுக்கடலில் வலைவிரிக்கும் மீனவர்களையா பலிகடாவாக்குவது?
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடிக்கும் உரிமையைத் தமிழக அரசும், மத்திய அரசும் பெற்றுத்தர வேண்டும். அதற்கு கச்சத் தீவை மீட்பது மட்டுமே விடையாகாது. இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்குப் பொதுவாக்கப்பட வேண்டும். அதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!
நன்றி : தினமணி

அழிவின் அடையாளங்கள்!

புவி வெப்பமயமாதலின் விளைவை அனுபவிக்க உலகம் இன்னும் 100, 200 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை போலிருக்கிறது. நிகழ்காலத்திலேயே அதன் பலாபலன்கள் தெரியத் தொடங்கிவிட்டன.
மழை பொய்ப்பது, காலம்தவறிக் கொட்டித் தீர்ப்பது... இவை அனைத்துமே புவி வெப்பமயமாதலின் எதிரொலிதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தியாவின் விவசாயத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூனில் தொடங்கி 4 மாதங்கள் இந்தப் பருவமழை நீடித்தாலும் ஜூலை மாதத்தில் பெய்யும் மழையே அணைகளின் நீர் இருப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது.
ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாத மழை திருப்திகரமாக இல்லை. அத்துடன் காலம்தவறியும் பெய்தது. இதனால், பல இடங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
"மத்திய நீர் ஆணையம் கண்காணிக்கும் இந்தியா முழுவதிலும் உள்ள அணைகளின் கடந்த 10 ஆண்டுக் கால நீர்இருப்பு சராசரி (ஜூலை மாதத்தில்) 52 சதவீதம். அது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்திருக்கிறது.
தென் இந்தியாவில் உள்ள முக்கியமான 30 அணைகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 78 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, இந்த ஆண்டு அதே மாதம் 46.3 சதவீதமாக குறைந்திருப்பதாக' பத்திரிகைச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பொய்த்து, ஆடி மாதத்தில்கூட அக்னிபோல வெயில் கொளுத்துவதும், அணைப் பகுதியில்கூட மழையே இல்லாததும் கண்கூடு.
பெரிய அணைகள்தான் என்றில்லை... சிறிய குளங்கள், ஏரிகளும் நீரின்றி காய்கின்றன. இந்த நிலைக்கு மனிதர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஒரு பூதாகரமான பிரச்னை. இதில் அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை.
பல இடங்களில் பஸ்நிலையம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவைகூட இப்படி நீர்நிலைகளை அழித்துதான் அமைக்கப்பட்டுள்ளன.
மழைவளத்தை அதிகரிப்பதற்காக மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு அறிவிக்கிறது. இத் திட்டம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் திட்டம் என்றே தோன்றுகிறது. திட்டம் அறிவிக்கப்பட்டு மரக்கன்றுகளும் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் நடப்படுகின்றன.
ஆனால், தொடர்ந்து அந்த மரக்கன்றுகளைப் பராமரிக்கத்தான் யாரும் இல்லை. திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது என்பதும் தெரியவில்லை.
இது ஒருபுறம் என்றால், நதிகள் மாசுபடுத்தப்படுவது மறுபுறம். சாய ஆலைகளின் கழிவு, வீட்டுக் கழிவுகள், ஹோட்டல்களின் மிச்ச மீதிகள் என நதிகளின் மூச்சை நிறுத்தும் செயல்பாடுகள் ஏராளம். இதைத் தடுப்பதற்கான வழிகளை இன்னும் தேடிக்கொண்டே தான் இருக்கிறோம்.
தமிழகத்தின் ஜீவநதி என்றழைக்கப்படும் தாமிரபரணியில் அமலைச்செடிகளின் பெரும் ஆக்கிரமிப்பு. இதனால் பல இடங்களில் ஆறு, வாய்க்கால்போல குறுகிவிட்டது.
ஆற்றில் மணல் எடுக்க ஆர்வம்காட்டும் அரசு, இந்தச் செடிகளை அகற்றி ஆற்றை காக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது வேதனை.
கவுன்சிலர்களுக்கு செல்போன் வழங்குவது குறித்து விவாதிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் மற்றும் விவசாயத்தின் ஆணிவேரான ஆற்றின் நிலை குறித்து கண்டுகொள்வதில்லை.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, அதன்மூலம் நல்ல பலனும் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அத் திட்டம் இப்போது போன இடம் தெரியவில்லை.
அதுமட்டுமன்றி, மழைநீர் மண்ணுக்குள் இறங்காதவாறு தடுக்கும் மற்றொரு செயலும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்துப் பேரூராட்சிகளிலும் தெருக்களில் தார்சாலை, சிமென்ட் சாலை போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகனப் போக்குவரத்து இல்லாத தெருக்களில், அவசியமேயின்றி இப்படி தார்சாலை போடப்படுவதால், மண்ணில் உள்ள ஊற்றுக்கண்கள் அடைபட்டு மழைநீர் உள்ளே இறங்காமல் வீணாக வழிந்தோடிவிடுகிறது.
இதன்விளைவாக நீர்மட்டம் அடியோடு குறைந்து வீட்டுத் தோட்டங்களில் உள்ள கிணறுகளிலும், அடிகுழாய்களிலும் நீர்இருப்பு கணிசமாகக் குறைகிறது.
இத் திட்டத்தில் இப்படி ஓர் எதிர்மறை விளைவு இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இப்படி தெருக்களுக்கு தார்சாலை அமைக்க ஒதுக்கும் நிதியை மற்ற திட்டப் பணிகளுக்கு ஒதுக்கினால் பலன் கிடைக்கலாம்.
நாட்டில் நடக்கும் ஆக்கிரமிப்பு அநியாயங்கள் போதாது என்று, காடுகளிலும் மரங்களை வெட்டி அழிப்பது, வனப் பரப்பை ஆக்கிரமிப்பு செய்வது போன்ற காரணத்தால் வனப்பரப்பு குறுகி, மழைவாய்ப்பு தடுக்கப்படுகிறது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனப் புகை, வனவளம் அழிப்பு உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான மனிதகுலத்தின் மறைமுகப் போர் தீவிரமடைந்துவிட்டது. அதை நிறுத்தி, சுற்றுச்சூழலைப் பேணிக்காத்தால் தான் பெய்யெனப் பெய்யும் மழை!
எஸ். ராஜாராம்

நன்றி :தினமணி

யாருக்கும் லாபமில்லை!

ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது என்று மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவைத் தனது சுதந்திரதின உரையில் பிரதமர் தெரிவித்திருக்கிறார். சம்பள உயர்வை ஜனவரி1, 2006 முதல் அமல்படுத்தி, கடந்த 34 மாதங்கள் அதிகரித்துத் தரப்பட வேண்டிய சம்பளத் தொகை இரண்டு தவணைகளாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
55 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுகிறது என்பது அந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதிலும், இதன் மூலம் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று பிரதமர் நம்புவதிலும் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இதன் தொடர் விளைவுகள் இந்தியப் பொருளாதாரத்தையும், அரசு ஊழியர் அல்லாத 90 சதவிகித மக்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்பது தான் நமது வருத்தம்.
அரசு ஊழியர்களுக்கும் சரி, அதிகரித்த சம்பளம் கிடைக்கிறது என்று அடையப் போகும் சந்தோஷத்தை, அதிகரிக்க இருக்கும் விலைவாசியும், அதிகமாகத் தரப்போகும் வரிகளும் காணாமல் செய்துவிடப் போகின்றன. இந்தச் சம்பள உயர்வினால் மத்திய அரசுக்கு ஏற்படப்போகும் அதிகரித்த நிதிச் சுமை ரூ. 22,131 கோடி. ஆனால், அதில் ஏறத்தாழ 25 சதவிகிதம் வருமான வரியாகவும், 25 சதவிகிதம் மறைமுக வரிகளாகவும் மத்திய அரசுக்குக் கிடைத்துவிடும் என்று நிதியமைச்சகம் கருதுகிறது. அதாவது இந்தக் கையால் தந்து அந்தக் கையால் பறித்துக் கொள்கிறேன் என்கிறார்கள்.
மத்திய அரசின் சம்பள உயர்வால் ஏற்படப்போகும், உடனடி விளைவு, எல்லா மாநிலங்களிலும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கப் போகிறார்கள். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அந்தக் கோரிக்கைகளை ஏற்று மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப் போகின்றன மாநில அரசுகள். தமிழக முதல்வர் இப்போதே இந்த விஷயத்தில் முந்திக் கொண்டிருக்கிறார்.
மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாயில் ஏறத்தாழ 60 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை அரசு ஊழியர்களின் சம்பளம், படி, ஓய்வூதியம் என்று செலவிடப்படுகின்றன. சம்பளம் கொடுத்ததுபோக மீதமுள்ள சுமார் 30 சதவிகிதம்தான் வளர்ச்சிப் பணிகளுக்கும், சமூகப் பணிகளான கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் செலவிடப்படுகின்றன.
இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்போது, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் மேலும் குறையும். அதாவது, வசதியற்றவர்களும், குறைந்த வருவாய்ப் பிரிவினரும் மேலும் பாதிக்கப்படுவார்கள். தனியார் உதவியுடன் போடப்படும் கட்டணச் சாலைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிகரித்து, வளர்ச்சிப் பணிகளில் அரசின் பங்கு குறையும். அது சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பதுடன் சட்ட, ஒழுங்கு பராமரிப்பையும் பாதிக்கும்.
தனியார் துறையில் தரப்படும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தங்களுக்கு இப்போது கிடைக்கும் சம்பளம் குறைவு என்கிற அரசு ஊழியர்களின் வாதத்தில் நியாயமே இல்லை. தனியார் துறையில் இருக்கும் வேலைப்பளு இவர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, திறமையின்மைக்கு அங்கே இடமில்லை என்பது கூடவா தெரியாது? மேலும், அரசு ஊழியர்களுக்கு இருக்கும் நிரந்தரத் தன்மையும், இதர சலுகைகளும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடையாதே?
தேர்தல் நேரத்தில் சம்பள உயர்வு அளிப்பது என்பது தார்மிக ரீதியாகத் தவறு. சொல்லப்போனால் இது ஓர் அரசியல் மோசடி என்று கூற வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுப்பதற்கு ஒப்பான விஷயமல்லவா இது! தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வை அறிவித்தாக வேண்டும் என்று சட்டம் வந்தால் நல்லது.
108 கோடி மக்கள்தொகையுள்ள நாட்டில் அரசு ஊழியர்கள் அதிகம் போனால் சுமார் 10 சதவிகிதம். ஆனால், அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சம்பள உயர்வால் ஏற்கெனவே அதிகரித்திருக்கும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் 90 சதவிகிதம் மக்கள் மேலும் துன்பத்துக்கு ஆளாகப் போகிறார்கள். அவர்கள் மட்டுமா? அரசு ஊழியர்களும்தான்!
தவறான நேரத்தில் வந்திருக்கும் தவறான அறிவிப்பு இது. தவறான கணக்குப் போடும் பிரதமருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதுதான் இதன் முக்கியமான விளைவாக இருக்கும்!
நன்றி : தினமணி

Monday, August 18, 2008

இதுதான் மக்களாட்சி மகத்துவம்!

இந்திய ஜனநாயகம் 61 வயதினை அடைந்த பின்னர், அதனால் நமது மக்களுக்குக் கிடைத்த பலன்கள் என்ன என்பதனை ஆராய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். நாம் கடந்து வந்த பாதையை நோக்கும்போது நன்மை பயக்காமல், இந்திய ஜனநாயகம் பல தீமைகளை விளைவித்துள்ளதோ எனும் சந்தேகம் எழுகிறது. காரணம் இன்றும் 113 கோடி மக்களில், 83 கோடியே 60 லட்சம் பேர் ஒரு நாளைக்கு ரூ. 20க்கு கீழே வருமானம் உள்ளவர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.
ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன் உலகில் தோன்றி மறைந்து, அதன்பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி 20ம் நூற்றாண்டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது. சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அரசியல் தத்துவஞானி பிளாட்டோ கூறிய கருத்துகளின்படி ஜனநாயகம் மக்களுக்கு நல்லாட்சியைத் தர முடியாது.
ஜனநாயகத்தின் அடிப்படை மூன்று அம்சங்கள். அவை பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் சட்டவிதிமுறைகளாலான ஆட்சி ஆகியனவாகும். ஆனால், இவற்றைச் சரியான முறையில் உபயோகிக்க, ஜனநாயக ஆட்சிமுறையில் பங்கேற்று அரசுகளை அமைக்கும் சக்தியைப் பெற்ற பொதுமக்கள் விவரமறிந்தவர்களாக இருப்பது அவசியம் என பிளாட்டோ வாதிட்டார்.
""எல்லா மக்களுக்கும் அரசில் பதவி வகிக்கவும், பொது சட்டதிட்டங்களை உருவாக்கவும் உரிமை உண்டு எனும் விதி மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சிறப்பாகத் தெரிந்தாலும் நடைமுறையில் சரிவராது'' என்பது அவரது வாதம்.
கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை எனவும், இதுமாதிரியான மக்களை டெமஃகாக் என அழைக்கப்படும் மேடைப்பேச்சு வல்லுநர்களான தலைவர்கள் தவறான விளக்கங்களை அளித்து கெட்ட பாதைக்கு இட்டுச்சென்று அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து விடுவார்கள் என்றும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ஞானிகளான பிளாட்டோவும் அவரது ஆசான் சாக்ரட்டீசும் சொல்லி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. நடப்பு அரசியலை 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார்கள் என்பது தான் அதிசயம்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறி நமது ஜனநாயகம் வழங்கிய சுதந்திர அம்சங்களான பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை உபயோகித்து படிப்படியாக மக்கள் ஆதரவினைப் பெற்று அரசமைத்தார்கள் என்பதனை ஆராய்ந்தால் மேலே குறிப்பிட்ட கிரேக்க நாட்டு சித்தாந்தவாதிகளின் கூற்று உண்மை என நமக்குப் புரியும்.
திமுகவின் ஆரம்பகாலங்களில் தி.க.வில் பெற்ற அனுபவத்தால் மேடைப்பேச்சுகளும், நாடகங்களும், சினிமாவும் மக்களைக் கவர்ந்திழுக்கப் போதுமானது என்பது அக்கட்சியின் தலைவர்களுக்குப் புரிந்திருந்தது. அண்ணா இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.
தூத்துக்குடியில் கே.வி.கே.சாமி எனும் திமுகவைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர் 1956ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதற்கான இரங்கல் கூட்டத்தில் அண்ணாதுரை சொற்பொழிவாற்றும்போது, "கொடி கட்டி வாழ்ந்த தமிழகம், குடிகெட்டுப் போனதை இங்கு நான், இடிபட்ட மனதுடன் எடுத்துரைக்கின்றேன்! கே.வி.கே. சாமி காட்டிலே வெட்டப்பட்டிருந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். நாட்டிலே, நடுரோட்டிலே பட்டப்பகலிலே, பலர் மத்தியிலே வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது நாம் கட்டிக்காத்த நெறிமுறைகளை கொட்டிக் கவிழ்த்து விட்டதன்றோ?'' என்று பேசினார்.
இந்தமாதிரியான அடுக்குமொழி மேடைப்பேச்சினைக் கேட்கப் பல ஊர்களிலிருந்து மக்கள் பஸ்களில் சைக்கிள்களில் பயணம் செய்து, ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். எதுகை, மோனை சகிதம் ஒலிகளின் ஏற்ற இறக்கத்துடன் பேசுபவர்கள் பெரிய தலைவர்கள் எனக் கருதப்பட்டார்கள்.
இவ்வாறான பேச்சுகள் ஏதேனும் உருப்படியான கருத்துகளை, நல்வாழ்வுத் திட்டங்களை விளக்குகின்றனவா எனும் உணர்வு இல்லாமல் பெருந்திரளாகக் கூடிய சாதாரண மக்கள் தங்களது தகுதிக்கேற்ப நிதிகளையும் வழங்கினார்கள்.
பெரிய பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் பை ஏந்தி பண வசூல் செய்வார்கள். மகாநாடுகள் நடத்தப்படும். அதற்கு நுழைவுக் கட்டணமும் நிதிகளும் பெறப்படும். பெரிய தொகைகள் வசூலான விவரம் மேடைகளிலே அறிவிக்கப்பட்டு கரகோஷம் எழும்.
இதுமாதிரியான மேடைப்பேச்சு ஒருபுறமும் அரசியல் வசனங்கள் நிறைந்த நாடகங்கள் மறுபுறமும், மக்களைக் கவர்ந்திழுப்பதைக் கண்ட திமுக, பேச்சாளர்களை உருவாக்கி, பயிற்சியளித்து மாநிலமெங்கும் பொதுக்கூட்டங்களை நடத்தியது. அக்காலத்தில் "ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்?' எனும் கேள்வியை எழுப்பி, தென்மாநிலங்களான ஆந்திரம், மைசூர், கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றைச் சேர்த்து நாம் கேட்கும் திராவிட நாட்டைவிட, ஸ்வீடன், டென்மார்க், பல்கேரியா, யூகோஸ்லாவியா, ருமேனியா, மலேசியா, இத்தாலி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் சிறிய நாடுகள். நாம் உலகின் சிறந்த ஒரு நாடாக அமைய முடியும். தபால்துறை, டெலிபோன் துறை ஆகியன நம் கைக்கு வந்தால் நமது பணத்தை வடநாட்டுக்காரன் கொண்டு போக முடியாது'', என முழங்குவார்கள் திமுகவின் குட்டிப் பேச்சாளர்கள். இதுபோன்ற எண்ணற்ற கேலிக்கூத்துகளுக்கு ஒரு உதாரணம் தான் இது.
அடுத்து எழுத்து சுதந்திரம் என்ற போர்வையில் பத்திரிகையில் எந்த ஒரு சமுதாய தார்மிகப் பொறுப்புமற்ற செய்திகளும் விமர்சனங்களும் வெளிப்படும். 1967ம் ஆண்டு தேர்தலின்போது பெருந்தலைவர் காமராஜ் குடியிருந்த வாடகை வீட்டினைப் படம்பிடித்து பெரிய வால் போஸ்டர்களாக அச்சடித்து திமுக தமிழகமெங்கும் ஒட்டியது. போஸ்டரின் தலைப்பு, ""ஏழைப் பங்காளர் வசிக்கும் எட்டடி குச்சில் பாரீர்!''
இன்றைய இளைஞர்கள் மேலே சொன்ன சிறிய உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அலங்கார மேடைப்பேச்சுகள், நாடகங்கள், பத்திரிகைச் செய்திகள், பொய்ப் பிரசாரங்கள் மக்களை மாக்களாக மாற்றியது என்பதுதான்! படிப்பறிவில்லாத கிராமப்புற ஏழை எளிய மக்கள் இவர்களை மிகப்பெரிய தலைவர்கள் எனவும் இவர்கள் ஆட்சி மட்டும் ஏற்பட்டுவிட்டால் சுபிட்சம் தானாக வந்துவிடும் எனவும் நம்பினார்கள். 1967ல் இதுமாதிரியான மக்களின் ஆதரவினால் இவர்கள் ஆட்சியையும் பிடித்தார்கள்.
ஆட்சிமுறையில் மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது மேடைப் பேச்சு மாதிரியான எளிதான விஷயமல்ல என்பது புரிந்தது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரப்படும் என அரிசித் தட்டுப்பாடு தலையாய பிரச்னையாக இருந்த தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, அரசமைத்தபின் ரூபாய்க்கு ஒரு படி அரிசி ரேஷனில் கிடைக்கும் என அறிவித்துவிட்டு அதே அடுக்குமொழி வசனத்தில் முதல்வர் அண்ணா, ""முதலில் ஒருபடி, பின் படிப்படியாக எப்படியும் மூன்று படி'' எனும் வாக்குறுதியை உதிர்த்தார்! அடுத்த சில மாதங்களிலே ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது.
மக்களின் முன்னேற்றத்திற்கு அரசுகள் முக்கியத்துவம் அளிக்காமல் சாதாரணமான பிரச்னைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து உண்மையான மக்கள் பிரச்னைகள் பின்தள்ளப்படுகின்றன என்பதும் ஊழலும் சுயநலமும் உச்சகட்டத்தை அடைந்து நாடு சீரழிந்து வருகிறது என்பதும் 61 ஆண்டு ஜனநாயக அரசாட்சியின் பலன் எனலாம். தமிழகத்தில் 40 ஆண்டுகள் நாம் சாதித்தது முதல் 20 ஆண்டுகள் சாதித்ததைப்போல் இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
இக்கருத்து சரிதான் எனும் வகையில் பேசியுள்ளார், உலகின் தலைசிறந்த வளர்ச்சிப் பொருளாதார மேதை அமார்த்தியா சென். சுதந்திர தினத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய அவர் இந்தியாவில் நிலவி வரும் கொடுமையான மூன்று விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டன அரசுகள் எனக் கூறியுள்ளார்.
அவை: 1. பெருவாரியான ஏழைக் குழந்தைகள் சரியான ஊக்க உணவளிக்கப்படாமல் வளருவது. 2. ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி இல்லாதது. 3. இன்றளவும் ஆரம்பக் கல்விகூட எல்லா மக்களுக்கும் கிடைக்காமல் இருப்பது ஆகியனவாகும்.
அதற்குக் காரணம் இதுபோன்ற பிரச்னைகளை கையிலெடுக்காமல் அவற்றை மறைத்துவிடக் கூடிய பல விஷயங்களில் கவனம் செலுத்திப் போராட்டங்கள் செய்து வருகிறார்கள் நமது அரசியல்வாதிகள் என்பதை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.
அதாவது தமிழ் செம்மொழி ஆவதும், கிராமியக் கலைகள் சங்கமம் எனும் பெயரில் பெரிய விழாவாக பல நாள்கள் அரசு செலவில் கொண்டாடப்படுவதும், நிறைய சினிமாப் பின்னணி பாடல்களைப் பாடி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் விழா எடுப்பதும், நகராட்சியை மாநகராட்சியாக்க கோடிகள் செலவு செய்து விழா எடுப்பதும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள போது ஒரு லட்சம் டியூப் லைட்கள் சீரியல்கள் ஒளிவீசும் விழாக்கள் பல எடுப்பதும், பெட்ரோல், டீசல் விலைகள் மக்களை வாட்டி வதைக்கும்போது 250 கார்கள் புடை சூழ அமைச்சர்கள், அதிகாரிகள் இம்மாதிரி விழாக்களில் பங்கு கொள்வதும், இன்னும் பல விஷயங்களும், இலவசங்கள் உள்பட, அமார்த்தியா சென் சொன்ன ஏழைகளுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்து உணவு, மருத்துவ வசதி, கல்வி வசதி ஆகிய அம்சங்களில் சிறிதளவு பங்களிப்பும் செய்யாது.
1947ம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கு முன்னர் நடந்த விவாதங்களில் நமது தலைவர்கள், கிரேக்க நாடுகளிலும், பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உருவாகி நடந்து வந்த ஜனநாயக முறையிலான மக்களாட்சியை விடவும் அதிக சுதந்திரத் தன்மைகளை உள்ளடக்கிய அரசியல் சட்டத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்கள்.
பரவலான ஜனநாயக உரிமைகள் படிப்பறிவில்லாத ஜனங்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவிற்கு சரிப்பட்டு வராது எனும் கருத்தினை அன்றைய வைஸ்ராய் லார்ட் மவுண்ட்பேட்டன் கருதினார். தற்குறிகளான ஏழை எளியவர்களின் ஓட்டுகளை வசதி படைத்தவர்கள் விலைக்கு வாங்கி காங்கிரஸை அழித்து விடுவார்கள் என்பது அவரது கருத்து.
ஆனால் இதற்குப் பதிலாக பண்டித ஜவாஹர்லால் நேரு, ""ஆண்டாண்டுகாலம் அடிமைத்தளையில் இருந்த ஏழை எளிய மக்களின் கையில் ஓர் ஓட்டுச்சீட்டினைக் கொடுத்து, அவர்களைத் தேடி ஜமீன், மிட்டா மிராசு, படித்தவன், பணக்காரன் எல்லோரும் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஓட்டுக் கேட்கும் நிலைமையை உருவாக்குவேன், அது ஒன்றே போதும்!'' எனக் கூறினார்.
ஆனால், ஓட்டுகளை கையில் வைத்திருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டு தங்களைத் தாங்களே சீரழிப்பார்கள் என்பதை 61 ஆண்டு சுதந்திர இந்தியாவின் ஜனநாயகம் நமக்கு உணர்த்தியுள்ளது. பிளாட்டோவும், மவுண்ட்பேட்டனும் சரியாக நம்மைக் கணித்தார்கள் எனும் எண்ணமே, மிஞ்சுகிறது!
என். முருகன்
நன்றி : தினமணி

பத்து ரூபாய் போராட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமம் தீர்த்தான்பட்டி. சில வாரங்களுக்கு முன் ஒரு நாள் இந்தக் கிராம மக்களால் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகம் முற்றுகையிடப்பட்டது.
அதற்கு முதல் வாரம் பெரம்பலூர் மாவட்டத்தில் பசும்பலூர் அருகேயுள்ள சிற்றூர், இரூர்சிற்றூர், செட்டிக்குளம்சிற்றூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அடுத்தடுத்த நாள்களில் கடும் வெயிலில் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டையும் போலீஸாரின் கண்மூடித்தனமான தடியடி தாக்குதலையும் சந்தித்தனர் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டணை கிராம மக்கள்.
இவையெல்லாம் எதற்காகத் தெரியுமா?
பத்து ரூபாய்க்காக!
ஆமாம். ஆச்சரியப்படாதீர்கள். இந்தப் பத்து ரூபாய்க்கான போராட்டக் காட்சிகள் மத்திய அரசின் வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் மிக சகஜமானவை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவுத் திட்டமாகவும் அக்கட்சியின் "இளவரசர்' ராகுல் காந்தியின் விருப்பத் திட்டமாகவும் "சிலாகிக்கப்படும்' திட்டம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்.
புதிய பொருளாதாரக் கொள்கையால் கிராமப்புற வேலைவாய்ப்புகளை ஒழித்துக்கட்டிய பாவத்திலிருந்து தப்பிக்க காங்கிரஸ் தேடிக்கொண்ட ஓட்டுவேட்டை வழிகளில் இதுவும் ஒன்று.
நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், கிராமப்புறங்களில் வாழும் ஒரு குடும்பத்துக்கு, ஓர் ஆண்டில் வெறும் 100 நாள்கள் மட்டும் சாதாரண உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. (மீதி நாள்களில் வயிற்றில் ஈரத்துணிதான்).
நீர்நிலைகளைத் தூர்வாரும் சீரமைக்கும் பணி, பாசன மேம்பாட்டுப் பணி, ஊரகப் பகுதிகளில் இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கியப் பணிகளாகும். கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களில் 18 வயதான கூலி வேலைசெய்யத் தயாராகவுள்ள அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யத் தகுதியுடையோர்.
வேலை வேண்டுவோர் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டு தங்களுக்கான வேலையைக் கேட்டு ஊராட்சி நிர்வாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அளிக்கப்படும் வேலை ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் அளிக்கப்படலாம். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்சக் கூலி வாரக் கடைசியிலோ 15 நாள்களுக்குள்ளாகவோ வழங்கப்படும்.
சரி. கூலி எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு ரூ. 80!
ஆனால் இந்த எண்பது ரூபாயும்கூட வேலை செய்வோருக்கு முழுமையாகக் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் இப்போதைய பிரச்னை.
ஏன்?
இத்திட்டத்தின் கீழ், ஒரு பணி மேற்கொள்ளப்படும்போது அதற்கான திட்ட மதிப்பீட்டையும் காலக்கெடுவையும் மதிப்பிடும் அலுவலர்கள், தங்கள் கணக்குத் தவறும்போது தொழிலாளர்கள் தலையில் கை வைத்துவிடுவதே காரணம்.
இதற்கு நம் அலுவலர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
""இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வேலைகள் பெரும்பாலும் மண் வேலைகள். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ. 80 கூலியாக பெற சாதாரண மண் உள்ள பகுதியில் 83.70 கன அடி; கடின மண் உள்ள பகுதியில் 57.56 கன அடி வேலை பார்க்க வேண்டும். குழு குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கான வேலையையும் குறிப்பிட்டே தருகிறோம். ஆனால், சிலர் சரியாக வேலை பார்ப்பதில்லை. எஞ்சும் வேலையால் திட்ட மதிப்பீட்டு நாள்கள் கூடுதலாகிவிடுகிறது. எனவே, கூலியைப் பகிர்ந்து தர வேண்டியதாகிவிடுகிறது. இதனாலேயே, ரூ. 80க்குப் பதிலாக ரூ. 70, ரூ. 60 எனக் கூலியைக் குறைத்துத் தர வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள் நம் அலுவலர்கள்.
ஆனால், தொழிலாளர்கள் சொல்லும் காரணங்கள் வேறு.
""மழைக்காலத்தில் மண் வெட்டும் பணி இலகுவாக இருக்கும். ஆனால், கோடையில் பதம் மாறும். தவிர, ஊருக்கு ஊர், பகுதிக்குப் பகுதி மண்வாகு மாறுபடும். ஆனால், அலுவலர்களோ இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அறைக்குள் உட்கார்ந்து அவர்கள் போடும் கணக்கு, நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை'' என்கிறார்கள் தொழிலாளர்கள்.
அலுவலர்களின் வாதத்தையே எடுத்துக்கொள்வோம். சிலர் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதற்காக எல்லோருடைய வயிற்றிலும் அடிப்பது எப்படி நியாயமாகும்? வேலையை ஆள் வைத்துக் கண்காணிக்காதது யாருடைய தவறு?
பத்து ரூபாய் என்பது அத்தனை சாதாரணமானதல்ல அலுவலர்களே!
நன்றி : தினமணி

படாத பாடு படுத்தும் பத்து வினாடி!


உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்திய அணி விளையாடத் தகுதி பெற்றது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஒரு சிக்கல்: ஆட்ட விதிகளின்படி ஷூ போட்டுக் கொண்டுதான் பந்தாட வேண்டும். ஆனால் இந்திய அணியோ, பயணத்திற்கே கோவணத்தை விற்றுத்தான் டிக்கெட் வாங்க வேண்டிய பொருளாதார நிலையில் இருந்தது. அவர்களை வாயிற் காவலர்கள் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ""புழுதிக் காலெல்லாம் கூடாது, பூட்ஸுக் காலுக்குத்தான் அனுமதி'' என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்திய ஃபுட்பால், அன்றைக்குச் சுருண்டு படுத்ததுதான்!
வெறும் கால் நாட்களிலிருந்து வெகு தூரம் வந்துவிட்டது ஸ்போர்ட்ஸ் விஞ்ஞானம். இன்றைக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதே டெக்னாலஜிதான்:
* இந்த முறை பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நூறு மீட்டர் ஓட்டத்தின் சாம்பியனான பாவெல், காலில் இறகு அணிந்து கொண்டு ஓடுகிறார். பிரத்தியேகமான பாலிமர் இழைகளால் கம்பளம் நெய்வதுபோல் தயாரிக்கப்பட்ட அவருடைய ஷூவின் எடை சுமார் நூறு கிராம்தான். காலில் ஷூ இருப்பதோ, ஏன் கால் என்று ஒன்று இருப்பதோ கூடத் தெரியாது! செவ்வாய் கிரகத்திற்குச் சென்ற மார்ஸ் ரோவர் வாகனத்தில் பயன்பட்ட அதே விண்வெளி தொழில்நுட்பத்தில் விளைந்தது இந்த பாலிமர்.
* மைதானத் தரை கூட மாறிவிட்டது. பந்தயம் ஓடுவதற்கான ட்ராக் முன்னேயெல்லாம் வெறும் கட்டாந்தரையாக இருக்கும். இப்போது அதுவும் ஹைடெக். அதன் மேல் தாவும் கால்களின் சக்தியை உள்வாங்கி வெளியிட்டு ஸ்பிரிங் மாதிரி எகிறச் செய்கிறது. அடியில் ஓர் உறுதியான ஆதார லேயர், அதன் மீது ரப்பர் நுரை, அதன் மேல் சிவப்பு நிற பாலியூரித்தேன் அடுக்கு என்று கலர் கலராக சுதந்திர தின கேக் மாதிரி அமைக்கிறார்கள். பார்த்தால் அப்படியே கடித்துத் தின்று விடலாம் போல் இருக்கிறது!
*888 அன்று பெய்ஜிங் ஒலிம்பிக்ஸின் துவக்க விழாவில் பத்து கோடி டாலர் செலவில் வாண வேடிக்கை விட்டுக் காசைக் கரியாக அடித்தார்கள். உலகிலேயே காஸ்ட்லியான இந்தத் தீபாவளியை டிசைன் செய்தவர் கை என்ற சுருக்கமான பெயர் கொண்ட சீனஅமெரிக்கர்; பைரோ டெக்னிக்கில் கை தேர்ந்தவர். ஒவ்வொரு பட்டாசும் துல்லியமாகத் தத்தமது நேரத்தில் வெடிப்பதற்காக அவற்றுக்குள் சிலிக்கான் சில்லு பொருத்தி கம்ப்யூட்டர் உதவியால் நெருப்பு நடனங்களை வடிவமைத்தார்.
* உலகிலேயே காற்றில் மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று பெய்ஜிங். மென்னியைப் பிடிக்கிற பொல்யூஷன்! சர்வ தேச விளையாட்டு வீரர்கள் இருமப் போகிறார்களே என்பதற்காகப் பல மாதமாகவே புகையைக் குறைக்கப் பாடுபட்டு வருகிறது சீனா. கம்யூனிச நாட்டில் ஒரு சௌகரியம், தொழிற்சங்கத் தொல்லைகள் கிடையாது. எனவே பல தொழிற்சாலைகளை ஒரேயடியாக மூடிவிட்டார்கள். ரோட்டில் கார்கள் போவதற்குக் கட்டுப்பாடுகள். மணிக்கு ஒரு முறை காற்றின் தூய்மையை அளந்து பார்த்து கந்தகம் ஓசோன், தூசு மாசு எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.
* எல்லாவகை ஆட்டக்காரர்களுமே தாங்கள் பயிற்சி செய்வதை டிஜிட்டல் காமிராக்களில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். கோச்சுடன் உட்கார்ந்து அதை ஸ்லோ மோஷனில் போட்டுப் போட்டுப் பார்த்து அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு அசைவையும் செப்பனிட்டுக் கொள்வார்கள். ஒலிம்பிக்ஸ் தரத்து போட்டிகளில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே மயிரிழைதான் இடைவெளி. ஒரு செகண்டின் நூறில் ஒரு பாகம்கூட முக்கியம். எனவே மனித உடம்பு, உடை, காற்று போன்றவற்றின் இயற்பியலை அக்கக்காக அலசி எல்லாவற்றையும் உன்னதமாகத் தீட்டிக் கொள்கிறார்கள்.
* அடுத்த ஒலிம்பிக்கிற்காக ஆஸ்திரேலியாவில் இப்போதே ஒரு புத்திசாலி நீச்சல் குளம் அமைத்திருக்கிறார்கள். குளம் முழுவதும் தண்ணீருக்கு மேலேயும் அடியிலும் காமிராக்கள். (நீச்சல் வீரர்கள் நழுவாத ஜட்டி அணிவது அவசியம்). அங்கங்கே காந்தக் கதவுகள், எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தி நேரம், வேகம் எல்லாவற்றையும் நுணுக்கமாக அளந்து, போட்டியின் ஒவ்வொரு கணத்தையும் நீச்சல் குளமே பதிவு செய்துவிடுகிறது.
* ஸ்பீடோ கம்பெனி ஒலிம்பிக்ஸை மனதில் வைத்து லேசர் ரேஸர் என்று ஒரு நீச்சல் உடை தயாரித்திருக்கிறது. உடலோடு ஒட்டி மற்றொரு தோல் மாதிரி இருக்கும் இந்த உடையை அணிந்து கொண்டால் நாமும் வாளை மீனாய் நீந்த ஆரம்பித்து விடுவோமாம். நவீன ஃபாஷன் டிசைனரால் வடிவமைக்கப்பட்டு, நாசாவின் ஆராய்ச்சி சாலைகளில் பரிசோதனை செய்யப்பட்ட இந்த ஹைடெக் நீச்சல் உடை, கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஐம்பது புதிய நீச்சல் ரெக்கார்டுகளை உருவாக்கியிருக்கிறது. ""இனிமேல் ரேஸர் இல்லாமல் நீச்சல் போட்டியில் இறங்க யாரும் துணிய மாட்டார்கள்'' என்று பேசிக்கொள்கிறார்கள்.
* போல்வால்ட் (இதற்குத் தமிழ் என்ன? கோல் தாண்டல்? போட்டியில் முதலில் ஹிக்கரி மரக் குச்சிகளைத்தான் உபயோகித்து வந்தார்கள். ஐந்து மீட்டர் உயரம் என்பது உலக ரிக்கார்டாக இருந்தது. பிறகு மூங்கிலை அனுமதித்தார்கள். மூங்கில் லேசாக இருப்பதால் சற்று அதிக உயரம் தாண்ட முடிந்தது. 1960 வாக்கில் கண்ணாடி ஃபைபர் குச்சிகள் வந்த பிறகு அநாயசமாக ஆறரை மீட்டர் தாண்ட ஆரம்பித்துவிட்டார்கள். உச்சியில் இருக்கும்போது குச்சி மளுக்கென்று முறியாது என்ற நம்பிக்கை வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு மனிதன் நூறு மீட்டர் ஓட்டத்தை முடிக்கும் தூரம் வருடா வருடம் இம்மி இம்மியாகக் குறைந்து கொண்டே வருகிறது, இம்மி என்றால் எம்மி? ஒரு செகண்டில் ஆயிரத்தில் ஒரு பாகம்! இவ்வளவு நுணுக்கமாக நேரத்தை அளக்க வேண்டுமென்றால் பாரம்பரியமான ஸ்டாப் வாட்ச் வைத்துக் கொண்டு நிற்கும் குண்டு அம்பயரின் விரல்களுக்கு வேகம் போதாது. வினாடிக்கு ஆயிரம் தடவை துடிக்கும் ஒளி இழைகளையும் ஃபோட்டோ சென்ஸர் என்கிற ஒளி உணரும் கருவியையும் வைத்துக் கொண்டுதான் வெற்றி தோல்விகள் நிச்சயிக்கப்படுகின்றன.
* ஈட்டி எறிதல், வட்டு வீசுதல் போன்ற போட்டிகளுக்குத் தேவைப்படும் இயற்பியல், விமானங்களை வடிவமைக்கும் அதே விஞ்ஞானம். காட் (இஅஈ) மென்பொருள் வைத்துக்கொண்டு இவற்றை டிசைன் செய்ய ஆரம்பித்ததில் இந்த ஸ்போர்ட்ஸ் எங்கேயோ போய்விட்டது. 1906ல் ஐம்பது மீட்டருக்கு ஈட்டி வீசினால் உலக ரெக்கார்ட். இப்போது நூறு மீட்டர்கூட சர்வ சாதாரணம். ஒரேயடியாக எதிர்ப் பக்க காலரியில் பாய்ந்து பார்வையாளர் யாரையாவது தீர்த்துக் கட்டிவிடப் போகிறதே என்று கவலையாக இருக்கிறது.
* ஒலிம்பிக்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் சம்பிரதாயமாக ஒரு தீவட்டியை எடுத்துக்கொண்டு நாடு நாடாக ஓட வருவார்களே, அதில் கூட ப்ரோபேன், ப்யூடேன் போன்ற திரவ எரிபொருள்கள், காற்று மழையில் அணையாமல் இருக்க தனிப்பட்ட பர்னர் அமைப்பு என்று சிக்கலான டெக்னாலஜி இருக்கிறது. தண்ணீருக்கு அடியிலும் இமயமலை உச்சியிலும் நின்று எரியும் கெமிக்கல் தீவட்டிகள் உண்டு. 1976 ஒலிம்பிக்ஸில் கிரேக்க நாட்டில் ஏற்றப்பட்ட தீவட்டியின் சக்தியை மின்சார அலைகளாக மாற்றி சாட்டிலைட் வழியாக கனடாவுக்கு அனுப்பி, அங்கே லேசர் வைத்து ஜோதியை மறுபடி ஏற்றினார்கள்.
* எதிராளியைவிட எப்படியாவது சில மில்லிசெகண்ட் அல்லது சில மில்லி மீட்டர் முந்திவிட வேண்டும் என்ற வெறியில் விளையாட்டு வீரர்களும் நம் அரசியல்வாதிகள் மாதிரி நிழலான செயல்களில் இறங்கிவிட்டார்கள். ஜீன் டோபிங் (ஞ்ங்ய்ங் க்ர்ல்ண்ய்ஞ்) என்பது, உடலின் தசைகளுக்குள் செயற்கை மரபீனிகளைப் புகுத்தி அவற்றை வலுவாக்கும் முறை. இந்த விளையாட்டெல்லாம் கடைசியில் கான்சரில் போய் முடிந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை; அந்த பத்து செகண்ட் போட்டியில் வாழ்நாளில் ஒரு முறை வென்றால் போதும்!
* ஆர்வக் கோளாறில் நம் ஊரிலும் ஒலிம்பிக்ஸை நடத்திப் பார்க்க வேண்டுமென்று யாருக்காவது தோன்றினால், ஒரு நடை கனடாவுக்குப் போய் விசாரித்துவிட்டு வரவும். 1976ல் மாண்ட்ரியால் நகரம் தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி ஒலிம்பிக்ஸை நடத்தியது. அடுத்த முப்பது வருடம் வயிற்றில் ஈரத் துணி போட்டுக் கொண்டு கடனை அடைக்க வேண்டியிருந்தது!
நன்றி : தினமணி

Sunday, August 17, 2008

சரித்திரத்தில் நிலைபெற்ற இஸ்ரேல்!

உலக நாடுகளில் இஸ்ரேல் நாடு இரண்டு உலகப் போர்களின் வரலாற்றில் இடம்பெற்ற நாடாக விளங்குகிறது. யூதர்கள் வாழ்கின்ற நாடு. உலகம் போற்றும் ஏசுநாதர் பிறந்த பூமி. ஹீப்ரு மொழி பேசும் நாடு. கிறிஸ்தவ சமுதாயத்தின் வழிபாட்டுக்குரிய ஜெருசலேம் அமைந்துள்ள நாடு. இன்று யூதர்கள், இஸ்லாமியர்கள் போராட்டக் களமாகத் தொடர்கின்ற நாடாக அமைந்துவிட்டது.
இந்த நாட்டில் யூதர்கள் குடியேறினார்கள். இஸ்லாமியர்களை வெளியேற்றுகிறார்கள் என்று ஒரு தரப்பில் போர் முழக்கம் செய்யப்படுகிறது. இஸ்ரேல் நாடும், பாலஸ்தீன நாடும் சுதந்திரமாக அந்த மண்ணில் மலர்ந்திட வேண்டும் என்றும் நல்லவர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாமிய நாடாகிய ஈரான் நாட்டில் வசிக்கும் பெண் எழுத்தாளர் வழக்கறிஞர் முனைவர் ஷிரின் எபாடி ஈழ். நட்ண்ழ்ண்ய் உக்ஷஹக்ண் நோபல் பரிசு பெற்றவர். அவருடைய நூல் 23 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. அவர் நடுநிலையோடு பேசுகிறார். ஙண்க்க்ப்ங் உஹள்ற் பகுதி நாடுகளில் இஸ்லாமியர்களும், யூதர்களும் பண்டைக் காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையே எழுந்துள்ள பிரச்னை சுமுகமாகத் தீர்ந்து விடும். அவர்களுக்கிடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கிடையே இறுதியில் சமாதானமாக முடியும் என்று அந்த உலகம் போற்றும் எழுத்தாளர் கூறியுள்ளார்.
ஏசுகிறிஸ்துவைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற வெறுப்புணர்வு உலக நாடுகளில் வளர்ந்தது. பண்டைக்காலத்து யூதர்கள் அரசு, ரோமானிய சாம்ராஜ்யத்தால் போரில் அழிக்கப்பட்டது. பிற்காலத்தில் நெப்போலியன் போனபார்ட்டின் உதவியால் யூதர்கள் மறுவாழ்வு பெற்றனர்.
மீண்டும் முதல் உலகப் போரில் 1920ஆம் ஆண்டு பிரிட்டன் தலைமையில் இர்ம்ம்ர்ய்ஜ்ங்ஹப்ற்ட் நாடுகளின் படை, பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியது.
இரண்டாவது உலகப் போர் முடியும்வரை பல நிகழ்ச்சிகள் யூதர்களையும், பாலஸ்தீன மக்களையும் பகை உணர்ச்சியோடு போராட வைத்தன. அதிகமான யூதர்கள் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியேறி வாழ்க்கையைத் தொடங்கினர்.
பாலஸ்தீனர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்ற அனைவரும் சமத்துவத்துடன் வாழ்ந்திட சட்டங்கள், திட்டங்கள் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியினர் முயற்சித்தனர். ஆங்கிலம், அரபிக், ஹீப்ரு ஆகிய மூன்று மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்கினர். 1926ஆம் ஆண்டு நகராட்சிகள் சட்டத்தின் மூலம் அந்தந்த சமுதாய மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ளாட்சி மூலம் சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதிக்கப்பட்டது. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் மதவேறுபாட்டு உணர்ச்சிகள் மறையவில்லை. மக்கள்தொகையில் இருந்த ஏற்றத்தாழ்வு பாலஸ்தீனம் ஒரு நாடு என்ற கொள்கைக்கு வெற்றியைத் தரவில்லை.
1922ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் 78 சதவிகிதம் இஸ்லாமியர்கள், 11 சதவிகிதம் யூத இன மக்கள், 9.6 சதவிகிதம் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். வெளிநாடுகளில் குடிபெயர்ந்த யூதர்கள் திரும்பி வரத் தொடங்கினர். 1945ஆம் ஆண்டில் யூதர்கள் 31 சதவிகிதம் என்று மக்கள்தொகை பெருகின.
பிரிட்டன் ஆட்சிக்கு எதிராக அரேபிய நாடுகளில் போராட்டங்கள் தொடங்கின. யூதர்களின் தனிநாடு கோரிக்கையை அரேபிய நாடுகள் எதிர்த்தன. ஜெர்மன் நாட்டு ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி தோன்றிய காலகட்டம். ஹிட்லரும், முசோலினியும் கூட்டாக அரேபிய நாடுகளின் சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுத்தனர். பாலஸ்தீனத்தில் தோன்றிய யூதர்களின் சுதந்திரம் அழிக்கப்படும் என்று ஹிட்லரின் கூட்டணி அரசுகள் உறுதி அளித்தன. ஜெர்மன் நாட்டில் குடியேறியிருந்த யூத இன மக்கள், ஹிட்லர் ஆட்சியில் அழிக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் 28.4.1947இல் உலக நாடுகளின் சபையாகிய ஐக்கிய நாடுகளின் சபை பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்னை பற்றி விவாதித்தது. இந்தப் பிரச்னை பற்றி விசாரித்து பரிந்துரை வழங்கிட 13.5.1947இல் ஐ.நா. சபையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியப் பிரதிநிதியும் இடம்பெற்றிருந்தார். இக்குழுவின் பெரும்பான்மையான நாடுகள் பாலஸ்தீன நாட்டைப் பிரித்து யூதர்கள் விரும்பும் இஸ்ரேல் என்றும், அரேபியர்களுக்கு பாலஸ்தீனம் என்றும் இரு நாடுகளாகப் பிரிவினை செய்து அங்கீகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தன. சில நிபந்தனைகளையும் விதித்தன. இந்தியா உள்பட சில நாடுகளின் பிரதிநிதிகள் இரு இன மக்களும் வாழும் இரு மாநிலங்களின் கூட்டாட்சி அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.
ஜெருசலேம் மத்திய அரசுக்குத் தலைநகர் என்றும், இரு மாநிலங்களும் மாநிலங்களுக்குள்ளே உள்ள பிரச்னைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெறும் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அதிகாரங்கள் மத்திய அரசுக்குத் தரப்படும் என்றும் பரிந்துரைகள் செய்தன. யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுவதற்கு சில கட்டுப்பாடுகளையும் இந்தியாவோடு இணைந்த நாடுகளின் பிரதிநிதிகள் நிபந்தனையாகக் கூறினர்.
இந்தியாவோடு சில நாடுகளும் சேர்ந்து கூறிய யோசனைகளை இரு பிரிவினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக் கொள்கையை யூதர்கள் ஏற்றனர். அரேபியர்கள் எதிர்த்தனர். அரேபிய நாடுகள் இரு யோசனைகளையும் எதிர்த்து போர் மூளும் என்று எச்சரித்தனர்.
ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குழு இந்தப் பிரச்னையைப் பரிசீலிக்கும் என்று முடிவெடுத்து அறிவித்தது. கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன. சோவியத் யூனியன் பிரதிநிதி ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டத்தில் 1947ஆம் ஆண்டு பேசும்போது, ""யூதர்களுக்கென்று தனிநாடு அமைய வேண்டும்'' என்று வாதிட்டார். அரேபியர்கள் யூதர்கள் இணைந்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்வதால் பிரிவினை செய்வதுதான் சரியான தீர்வாகும் என்று பேசினார். 13.10.1947ஆம் நாள் பெரும்பான்மை நாடுகள் விரும்பிய அரேபியர், யூதர்கள் தனிநாடு பிரியும் விருப்பத்தை சோவியத் யூனியன் ஆதரிப்பதாக அந்நாட்டின் பிரதிநிதி பேசினார். ட்ரூமன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த நேரம். ஒருபக்கம் அரேபிய நாடுகளில் உள்ள பெட்ரோல் தேவை. மறுபக்கம் பணச் செல்வாக்குள்ள அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களின் செல்வாக்கு. இறுதியில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஐ.நா. சபை அமைத்த பாலஸ்தீனக் குழுவினர் நாட்டைப் பிரிவினை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் முடிவு எடுத்துள்ளனர். 4,500 சதுர மைல் பரப்பும் அதில் வாழ்ந்த 8,04,000 அரேபியர்களும் 10,000 யூதர்களும் கொண்ட பகுதி அரேபியரின் பாலஸ்தீன நாடாக முடிவு செய்தார்கள். 5,500 சதுர மைல் பரப்பில் வாழ்ந்த 5,38,000 யூதர்கள், 3,97,000 அரேபியர்கள் வாழ்ந்த பகுதியை யூதர்கள் நாடாக உருவாக்கிவிட வேண்டும் என்ற பெரும்பான்மை குழுவினர்கள் முடிவு எடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் பிரிவினையை அகில உலக நாடுகளின் குழு கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டது.
1947 நவம்பர் 29ஆம் நாள் மேற்கண்ட பிரிவினைத் திட்டம் ஐ.நா. சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அமெரிக்காவும், சோவியத் ரஷியாவும் இந்தத் திட்டத்தை ஆதரித்தன. இந்தியா உள்பட சில நாடுகள் இத்திட்டத்தை எதிர்த்தன. இந்தத் திட்டம் ஒரு தீர்மானமாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் இந்தப் பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தன. யூதர்களும் அரேபியர்களும் இணைந்து வாழும் கூட்டாட்சி முறை அமைந்திட வேண்டும் என்ற திட்டத்தை இருசாராரும் ஏற்கவில்லை.
ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி இஸ்ரேல் நாடு சுதந்திர நாடாகப் பரிணமித்தது. அமெரிக்கா, சோவியத் ரஷியா உள்பட உலக நாடுகள் இஸ்ரேல் நாட்டுக்கு அங்கீகாரம் அளித்தன. 1920ஆம் ஆண்டு முதல் உலகப் போரில் தொடங்கிய பிரிட்டிஷ் ஆட்சி, முடிவுக்கு வந்தது. அரேபிய நாடுகள் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை. அரேபிய நாடுகளும், அரேபியா பகுதி என்று பிரிவினை செய்யப்பட்ட பாலஸ்தீனம் பகுதியில் வாழ்ந்த அரேபியர்களும் இஸ்ரேல் பகுதி மீது 1948ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாக்குதலைத் தொடங்கினார்கள். பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேல் மீது கொண்ட பகை பல்லாண்டுகள் தொடர்ந்தன. உலக சபையால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு நாடுகள் அதிகரித்தன. எகிப்து போன்ற அரேபிய நாடும் இரு நாடுகளும் சுதந்திரமாக நட்பு நாடுகளாக தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆதரவு தரத் தொடங்கின. பல்வேறு போர்களுக்குப் பிறகு பாலஸ்தீன அரேபியர் பகுதி நாடு சுதந்திர நாடாகத் தோன்றியது. ஆனால் இன்றும் எல்லைகளை வரையறுக்கும் பிரச்னை பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
இஸ்ரேல் நாட்டுப் பகுதி யூதர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பகுதி என்பது உண்மை. அந்தப் பகுதியில் அரேபியர்களின் எண்ணிக்கை பெருகியதும், யூதர்கள் பல போர்களில் கொல்லப்பட்டதும், நாட்டிலிருந்து விரட்டப்பட்டதும் சரித்திர நிகழ்ச்சிகள். இன்று நடைபெறும் எல்லைப் பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்ந்து இரு நாடுகளும் சுதந்திரமாக நட்பு நாடுகளாக வாழும் சரித்திரம் தோன்ற வேண்டும்.
இந்திய நாடு உலக சபையில் 1947இல் ஆதரித்த பாலஸ்தீனம் இஸ்ரேல் பகுதிகள் இணைந்து கூட்டாட்சி முறை அமைய வேண்டும் என்ற திட்டம் ஏற்கப்பட்டிருந்தால் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
5 லட்சம் மக்கள்தொகையில் உருவான இஸ்ரேல் நாடு, கடின உழைப்பாலும், அறிவியல் நுட்பங்களின் வளர்ச்சியாலும், பொதுத் துறைகள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளோடு போட்டியிடும் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
அறிவு நுட்ப வளர்ச்சியின் மூலமும் ராணுவ பலத்திலும் உலக வல்லரசு நாடுகளோடு இணைந்து செயல்படும் வலிமையோடு வளர்ந்திருக்கும் இஸ்ரேல் நாட்டின் வளர்ச்சி உலக சரித்திரத்தில் நிலையான இடம் பெற்றுவிட்டது.
செ. மாதவன்
நன்றி : தினமணி

Saturday, August 16, 2008

குதிரை, கழுதை எல்லாம் ஒரே விலை!

சந்தையில் ஒரே மாதிரியான பொருள்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் நேரத்தில் இதில் யாருடைய விலை நிர்ணயம் சரியானதாக இருக்கும் என்ற கேள்வி எழும்போது "சந்தை தீர்மானிக்கும்' என்று சொல்வது வழக்கம்.
கல்விச் சந்தையில் நுகர்வோராக இருக்கும் பெற்றோர்களுக்கு இந்த தீர்மானிக்கும் சக்தி மறுக்கப்படுகிறது.
முதல் கலந்தாய்வுக் கூட்டத்தின் முதல் 10 நாள்களிலேயே சிறந்த கல்லூரிகள் அனைத்திலும் அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் இடம்பிடித்து விட்டனர்.
அடுத்த 10 தினங்களில் நடந்த கலந்தாய்வில் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் உள்ள ஒரே காரணத்தால் சில கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவில் மட்டும் மாணவர்கள் சேர்ந்தார்கள். மற்ற பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேரவே இல்லை என்ற நிலைதான் நீடித்தது.
மாணவர்கள், பெற்றோர் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலேயே அக்கல்லூரி பற்றிய மதிப்பீடு வெளிப்படுகிறது. இந்த வகையில், முதல் கலந்தாய்வில் 50 சதவீத இடங்கள் பூர்த்தியாகாத கல்லூரிகள் அனைத்துமே இரண்டாம்தர கல்லூரிகள் என்று முடிவுசெய்வதற்கு எந்த நிபுணர் குழு ஆய்வும் தேவையில்லை.
முதல் கலந்தாய்வில் (20 நாள்களில்) 50 சதவீத இடங்கள் கூட காலியாகாத சுயநிதி கல்லூரிகளும் ரூ. 32,500 கல்விக்கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இத்தகைய கல்லூரிகள் (அதாவது முதல் 20 நாள்களில் 50 சதவீதத்தும் அதிகமான இடங்கள் காலியாக உள்ள கல்லூரிகள்) கல்விக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கினால் என்ன?
ஆயத்த ஆடைகள் முதல் காய்கறி வரை, குறையுடையன யாவும் விலை குறைத்து விற்கப்படும்போது, கல்விச் சந்தையில் மட்டும் எல்லாமும் ஒர் நிறை, எல்லாமும் ஓர் விலை என்பது சரியல்ல.
தரமான கல்லூரியாக மாறும்போது தானாகவே மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். அப்படியான சூழல் வரும்போது அக்கல்லூரிகள் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்ளட்டுமே!
கல்விக் கட்டணம் ரூ. 32,500 என்று அரசு சொன்ன போதிலும், எந்த தனியார் சுயநிதி கல்லூரிகள் எதுவுமே குறைந்தபட்சம் ரூ. 75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றோரிடம் கறந்துவிடுவதுதான் நிகழாண்டின் உண்மை நிலை. நூலகம், ஆய்வுக் கூடம், கணினிக்கூடம், திரும்பத் தரக்கூடிய முன்வைப்புத் தொகை என்ற புதுப்புது தலைப்புகளில் சுயநிதிக் கல்லூரிகள் வசூலிக்கும் தொகை பற்றி அண்ணா பல்கலைக்கழகமும், உயர் கல்வி அமைச்சரும் தமிழக அரசும் கவலைப்படுவதே இல்லை.
பல கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 62,500ஐ எந்த வகையிலும், எந்தத் தலைப்பின்கீழும் இரக்கமின்றி வசூலிப்பதில்தான் ஆர்வம் காட்டப்படுகிறது.
இந்த காரணத்தாலேயே, அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு விழுப்புரம், திண்டிவனம், திருக்குவளை, பண்ருட்டி, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய இடங்களில் தொடங்கியுள்ள கல்லூரிகளில், எந்த வசதியும் இல்லை என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தும், ஆசிரியர்கள் நியமனம்கூட இன்னும் நடத்தப்படவில்லை என்று தெரிந்திருந்தும் அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை வேகமாக முடிந்துபோனது. இக்கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் அனைத்தும் சேர்ந்தால்கூட ரூ. 20,000க்கு அதிகமில்லை.
சிறுபான்மையினர் கல்லூரிகள் நீங்கலாக அனைத்து சுயநிதி கல்லூரிகளும் 65 சதவீத இடங்களை அளித்துள்ளதாக சொல்லப்பட்டாலும், முன்னிலையில் உள்ள பல கல்லூரிகள் 50 சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்தன என்ற குற்றச்சாட்டை பெற்றோர் முன்வைக்கின்றனர்.
மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான இடங்கள் காலியாக இருந்தால், கலந்தாய்வு முடிந்த பின்னர் அவற்றை நிர்வாக ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்வதற்கான, காத்திருப்போர் பட்டியலை கல்லூரி நிர்வாகங்கள் இப்போதே வைத்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
சில கல்லூரிகள் சில புதிய பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்தின் அங்கீரத்தைப் பெற்றுள்ளன. ஆனால் அவை தங்கள் புதிய பாடப்பிரிவுகளை கலந்தாய்வில் இடம்பெறச் செய்யவில்லை. கலந்தாய்வு முடிந்தபிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைப்படுத்திக்கொண்டு, சட்ட சிக்கல் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்ய காத்திருக்கின்றன என்று தெரிகிறது.. இந்த பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை பட்டியல் அவர்களிடம் தயாராக உள்ளது.
மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் பாடப்பிரிவுகள் வாரியாக எத்தனை இடங்கள் கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டன. பூர்த்தியாகாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கான ஒதுக்கீடுகள் எந்த வகைப்படி பூர்த்தி செய்யப்பட்டன, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற ஒவ்வொரு மாணவரிடமும் கல்லூரிகள் வசூலித்த மொத்த தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

கசக்கப் போகிறது சர்க்கரை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும்புச் சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு மழை வளம் இல்லையென்ற காரணம் ஒருபுறம் இருக்க, கரும்புக்கு நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலையும், விளைந்த கரும்பை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலைகள் செய்யும் தாமதமும், கரும்பைக் கொள்முதல் செய்த பிறகு அதற்குண்டான தொகையைத் தர சர்க்கரை ஆலைகள் எடுத்துக் கொள்ளும் அவகாசமும் விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளன.
மிகச் சாதாரணமான இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் மனமோ, அக்கறையோ இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியலில் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற சரத் பவாரை விவசாய அமைச்சராக நியமித்தபோது, ""பொருத்தமானவர்தான் பதவி ஏற்றிருக்கிறார்'' என்றே விவரம் தெரிந்தவர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் அவரோ விவசாயிகளின் நலனைவிட மகாராஷ்டிரத்திலும் பிற மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளின் நலனே முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.
20062007 சர்க்கரைப் பருவத்தில் 285 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி ஆனது. அதுவே பிறகு 20072008ல் 265 லட்சம் டன்களாகக் குறைந்தது. இப்போது 20082009ல் 220 லட்சம் டன்களாகச் சரியும் என்று புதிதாகத் திரட்டப்பட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மிகவும் கவலைதரத்தக்க விஷயமாகும்.
கரும்புச் சாகுபடியைவிட சோயா மொச்சை, மக்காச் சோளம் ஆகியவற்றை விவசாயிகள் நாடத்தொடங்கிவிட்டதால் கரும்புச் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. சோயா மொச்சை, மக்காச் சோளம் ஆகியவற்றுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கிறது. அதன் அறுவடைக்கு யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை.
மக்காச் சோளத்தையும் சோயா மொச்சையையும் கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிரம் காட்டுவதால் சர்வதேசச் சந்தையில் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. எனவே சோயா, மக்காச்சோள சாகுபடியில் அதிக விவசாயிகள் இறங்க ஆரம்பித்துள்ளனர்.
சர்க்கரை உற்பத்தி அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைக் காப்பதற்கு மட்டுமே நடவடிக்கைகளை எடுப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் சர்க்கரைக்கு இருக்கும் தேவையைவிட சர்க்கரை உற்பத்தி அதிகரித்துவிட்டது என்றால், கணிசமான அளவு சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஏன் என்று கேட்டால், அன்னியச் செலாவணி கையிருப்பை உயர்த்துவதற்காக என்று பதில் அளிக்கிறது.
சர்வதேசச் சந்தையில் இந்தியா தன்னுடைய சர்க்கரையை விற்காவிட்டால், உலக நாடுகள் சர்க்கரை கிடைக்காமல் திண்டாடப் போவதில்லை. உள்நாட்டில் செயற்கையாக சர்க்கரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்ற ""நல்லெண்ணத்தின்'' அடிப்படையில்தான் மத்திய அரசு சர்க்கரையை ஏற்றுமதி செய்துகொண்டே இருக்கிறது.
1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோதுதான் சர்க்கரைத் தொழிலில் அமலில் இருந்த ""இரட்டை விலைக் கொள்கை'' கைவிடப்பட்டது. அதன் பலன், ரேஷன் கடைகளைவிட மளிகைக் கடைகளில் சர்க்கரை விலை குறைந்தது. அந்த துணிச்சலான நடவடிக்கைக்கு அப்போதைய நிதியமைச்சர் எச்.எம். படேல், நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் மோகன் தாரியா போன்றோர் துணையாக இருந்தனர்.
இப்போதுள்ள மத்திய அரசு தன்னை, ""ஐக்கிய முற்போக்கு கூட்டணி'' என்று அழைத்துக் கொண்டாலும் அதன் பெருவாரியான முடிவுகள் விவசாய விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. சர்க்கரையைப் பொருத்தவரை இப்போதைக்கு கையிருப்பில் 110 லட்சம் டன் பழைய கையிருப்பு இருப்பதால் நிலைமையைச் சமாளித்துவிடலாம். ஆனால் வரும் ஆண்டுகளில் கரும்புச் சாகுபடி பரப்பு வெகுவேகமாகச் சரிந்துவிட்டால் இறக்குமதி செய்துதான் நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அப்போது அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும், அந்தச் சுமை முழுக்க நுகர்வோர் தலையில்தான் விழும் என்று இப்போதே எச்சரிக்கிறோம்.

Friday, August 15, 2008

காந்திக்காக ஏங்கும் உலகு

"மகாத்மா காந்தி' என்றும், "தேசப்பிதா' என்றும் இன்றளவும் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அண்ணல் காந்தியடிகள். ஆனால் அவரோ, தான் அவ்வாறு அழைக்கப்படுவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கவே விரும்பினார். சென்ற இடமெல்லாம் இடைவிடாத மக்களின் ஏகோபித்த இக்கோஷங்களிடையே அவர் நினைத்தது நடைபெறாமல் போனது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் தரிசனத்திற்குச் சென்ற காந்தி, மக்கள் கூட்டம் "மகாத்மா காந்திக்கு ஜே' என்று கோஷமிட்டபோதும் மிகவும் எரிச்சலடைந்தார். "கோயிலுக்குள் மகாத்மாவை (விஸ்வநாதர்) தரிசனம் செய்ய இங்கு வந்தால் இங்குள்ள மகாத்மாக்களின் (தன்னை மகாத்மா என்று கோஷமிடும் மக்கள்) தொல்லை தாங்க முடியவில்லையே. நீங்கள் மகாத்மா என்று கோஷமிடுவதை முதலில் நிறுத்துங்கள். கோயிலை இவ்வளவு அசுத்தமாக வைத்திருக்கிறீர்களே. வெளிநாட்டினர் இக்கோயிலைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக நம்மை நினைப்பார்கள்' என்று கோபமாகப் பேசினார் காந்தி.
அண்ணல் காந்தியடிகளை, மகாத்மா காந்தி என்று அழைக்கும்போது அவரது சிறந்த அரசியல் மேதமை, மனித நேயப் பண்புகள் சார்ந்த ஆளுமை குறைத்து மதிப்பிடப்படுவதாகவே யோகேஷ் சதா போன்ற வரலாற்று அறிஞர்கள் உணர்கிறார்கள். ஏனெனில் ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா என்ற பதங்களுக்கு விளக்கவுரை ஆற்றிய ஆன்மிகவாதியல்ல காந்தி. மிகச் சாதாரண மனிதராகத் தன்னை ஏற்றுக்கொள்ளும் சுபாவமே காந்தியிடம் கடைசி வரையிலும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் தன்னை ஓர் அற்ப ஆத்மாவாக என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சாதாரண மனிதராகவே தன்னை நினைத்து வந்தார்.
1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு ஜவாஹர்லால் நேரு தலைமை வகித்தார். உடனடியாக சுதந்திரப் பிரகடனத்தை அறிவியுங்கள் என்று எங்கும் குரல் ஒலித்தபோது என்ன செய்வதென்று தெரியவில்லை. முழுச் சுதந்திரம் எனும் அர்த்தம் பொதிந்த சுயராஜ் (நஜ்ஹழ்ஹத்) தீர்மானத்தை மிக அவசரமாக காந்தி கொண்டு வந்தார். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். சுயராஜ் பற்றி விளக்கம் கேட்டபோது தாகூரிடம் "என்னைச் சுற்றி இருட்டு பரவியுள்ளது. ஏதேனும் ஒரு ஒளி கூட எனக்குத் தோன்றவில்லை, என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை' என்று ஒரு சாதாரண மனிதரைப் போல் தனது இயலாமையை வெளிப்படுத்துகிறார் காந்தி. ஒரு தீர்க்கதரிசியைப் போன்றோ, எல்லாம் முற்றுணர்ந்த மகாத்மா போன்றோ அவர் என்றும் தன்னைக் காண்பித்துக் கொள்ளவில்லை.
காந்தியடிகளை தேசப்பிதா என்று அழைக்கும்போதும் மறுபடியும் இதுபோன்ற கேள்விகள்தான் மேலோங்கி வருகிறது. ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு காந்தி ஒரு மிகப் பெரிய காரணமாக இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து அவர் இந்தியாவிற்கு வருவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வரலாற்று அரசியல் தீவிர தன்மையோடு நடைபெறத்தான் செய்தது. இருப்பினும் தலைவர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்ட இந்திய விடுதலை உணர்வை மக்களுக்கு எடுத்துச் சென்ற மாமனிதராக காந்தி ஒருவரே இருந்தார். காந்தியை தேசப்பிதா என்று அழைக்கும்போதும், இந்தியா என்ற குறுகிய சிமிழுக்குள் காந்தியை அடைக்கும் முயற்சியாகவே பொருத்தமற்ற ஒன்றாக இருக்கிறது என்று இன்றைய வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியும், தலைசிறந்த மனிதப் பண்பும், உலக அநீதியை எதிர்க்கும் குரலாகவும் உள்ள காந்தியின் ஆளுமை இவ்விதமான அடைமொழி வார்த்தைகளால் நீர்த்துப் போவதும், சில நேரங்களில் அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், இன்றைய வன்முறை சார்ந்த உலக அரசியல் சூழலில், நீதி சார்ந்த ஒரு தலைவனுக்காக ஏங்கும் உலக மக்களுக்கான ஒரு குறியீடாகத் திகழ்கிறார் காந்தி.
அன்றைய தேசியத் தலைவர்களையும், மக்களையும் ஒரு சேர நேசித்தது, அவர்களுடன் பழகியது, தமக்கு எதிரான கருத்துகளுடைய அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தது போன்ற சமூக நட்புறவுப் பண்புகள் காந்தி ஒருவரிடமே குவிந்திருந்தன. ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், முகம்மது அலி ஜின்னா, அம்பேத்கர், மவுன்ட்பேட்டன் பிரபு, இர்வின் போன்ற வைஸ்ராய்கள் போன்ற பல எதிரெதிரான கொள்கைகள் உடைய தலைவர்களிடம் நல்லுறவு வைத்துக் கொள்ளும் சமூகப் பண்பு காந்தி ஒருவரிடமே இருந்தது. பால்ய காலத்திலும், தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும் மற்றவரோடு பழகுவதில் மிகக் கூச்ச சுபாவம் உடையவராகவே காந்தி திகழ்ந்தார். பிற்காலங்களில்தான் தனக்கு எதிரான கருத்து உடையவர்களோடும், ஏன் முப்பது கோடி மக்களால் கவரப்படக்கூடிய அளவிற்கு சமூக நட்புணர்வுப் பண்புகளைப் பெற்றிருந்தார் காந்தி. டேனியல் கோல்மேன் போன்ற நவீன நிர்வாகவியல் அறிஞர்கள் வலியுறுத்தி வரும் இந்த சமூக நட்புணர்வுப் பண்புகளை காந்தி அக்காலத்தே பெற்றிருந்தது இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த எளிய மனிதரிடம் முப்பது கோடி மக்களைத் தன் பக்கம் இழுத்த அரிய சக்தி எப்படி வந்தது என்றெல்லாம் உலகம் வியக்கும் அளவிற்கு அதிசயமான மனிதராகவே இன்றும் தோன்றுகிறார் காந்தி. வாலிபத்தில் சிறைக்குச் சென்று வயோதிகராக வெளிவந்த, "சிறையிலும் வாடாத கறுப்பு மலர்' என்று அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா சிறையிலிருந்தபோது தினம்தினம் அண்ணல் காந்தியையே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.
தென்னாப்பிரிக்காவில் மைக்கேல் கோட்ஸ் என்ற பாதிரியார் காந்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற நினைத்தபோதும், அவர் கழுத்தில் அணிந்துள்ள துளசி மாலையை உடைக்க முயன்ற போதும் கோபம் கொள்ளவில்லை காந்தி. மாறாக எனது அன்னை அளித்த புனிதமான அன்பளிப்பு இது; கிறிஸ்தவத்தை எப்போதும் மதிக்கின்ற நான் ஓர் இந்துவாகவே இருக்க விரும்புகிறேன் என்று அன்போடு மறுத்தார்.
சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் பிரிந்த பிறகு, காந்தியை தீர்த்துக் கட்டும் அபாயம் இருப்பதால் காந்திக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வல்லபபாய் பட்டேல் அவரிடம் வேண்டிக்கொண்ட போதும் காந்தி பிடிவாதமாக அதை மறுத்துவிட்டார். "எனது பிரார்த்தனைக் கூட்டத்தில் வருபவரைச் சோதனை இடுவதைப் போன்ற அநாகரிகம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. எனது உயிருக்கு அளிக்கும் பாதுகாப்பை, சாதாரண மனிதருக்கு உங்களால் அளிக்க முடியுமா? என் உயிரை உங்களால் பாதுகாக்க முடியாது. கடவுள் ஒருவர் மட்டும் தான் அதைப் பாதுகாக்க முடியும் என்று படேலிடம் கோபமாகப் பேசினார் காந்தி.
தன் கடைசி நாளில் தன்னைப் பார்க்க வந்த வல்லபாய் பட்டேலிடம் "லண்டனிலிருந்து வெளிவந்த டைம்ஸ் இதழைக் காண்பித்து உங்களுக்கும் நேருவுக்கும் உள்ள கருத்து வேற்றுமை லண்டன் வரை சென்றுள்ளதைப் பாருங்கள். உங்கள் கருத்து வேற்றுமை நாட்டின் அழிவிற்குத்தான் வழிவகுக்கும். இருவரில் ஒருவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். அதை யார் என்று பிறகு சொல்கிறேன் என்றார் காந்தி. மாலை 5 மணி. கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடங்கள் காலதாமதமாகவே சென்றார். பொதுமக்களைப் பார்த்து அவர்களைக் காக்க வைத்த குற்ற உணர்வோடு "நமஸ்கார்' என்று இரு கரங்களாலும் மக்களை வணங்கினார் காந்தி. சிறிது நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காக்கி உடை அணிந்த கோட்சே எனும் வாலிபன் ஒருவன் கூட்டத்தை விலக்கி விட்டு வேகமாக காந்தி முன் வந்து நின்றான். அவரை இருகரம் கூப்பி வணங்கினான். அடுத்த நொடியே, மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான். காந்தியின் கும்பிட்ட கரங்கள் தற்போது அவிழ்ந்து விழுந்தன. ஹே ராம் என்று காந்தியின் உதடுகள் முணுமுணுத்தன. ரோஜாப் பூ போன்ற மென்மையான காந்தியின் உடல் தரையில் விழுந்தது. இன்றும் காந்திக்காக ஏங்கி நிற்கிறது இந்த உலகு.

தேனுகா

நன்றி : தினமணி

தேசியக் கொடிக்கு வீர வணக்கம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பரப்பளவில் 7வது பெரிய நாடாகவும் விளங்கும் இந்தியாவின் கடந்தகால வரலாறுகளை இக்கால இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய மகான்களும், ரிஷிகளும் பிறந்த இந்த புண்ணிய பூமியை, இன்றைய அரசியல்வாதிகள் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக் கூறுபோடப் பார்க்கின்றனர்.
இளைஞர்களே! நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள்! ஊழல் களமாக மக்களவை மாறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பணம் கட்டுக்கட்டாய் பறக்கிறது.
ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்றோம்! இன்றோ அழுக்கு நிறைந்த அரசியல்வாதிகளே வெளியேறி விடுங்கள் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
நமது நாட்டைக் காக்க எத்தனை பேர் எப்படி எல்லாம் போராடி மறைந்தார்கள். அரசுப் பதவியில் இருந்த ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் ஆட்சி செய்தார்கள் என்பதை சுதந்திர தின நாளன்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்! நாகரிகத் திருடர்களாக வலம் வரும் அரசியல்வாதிகளும் தெரிந்து கொள்ளட்டும். ஒவ்வொரு கசையடிக்கும் மகாத்மா காந்தி வாழ்க என்று மகிழ்ச்சியோடு உரக்கக் கத்திய இளைஞன் யதீந்திர தாஸ்; கிரிமினல் குற்றவாளியைப் போல் என்னைத் தூக்கில் தொங்கவிட்டு விடாதீர்கள்; துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுங்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சினான் பகத்சிங்.
எனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடாதீர்கள். என்னைப் போல் பலபேர் உருவாக என்னைத் தூக்கில் போடுவதுதான் நல்லது என்ற இளைஞனின் பெயர் சந்திரசேகர ஆசாத்.
எத்தனை முறை அடித்தாலும் என் கையில் இருக்கும் என் நாட்டின் கொடியை மட்டும் விட்டுவிட மாட்டேன் என அடிக்க அடிக்க கையில் கொடியுடன் மண்ணில் சாய்ந்த இளைஞன் திருப்பூர் குமரன்.
நம் தாய்நாட்டுக்காக மரணத்தை மகிழ்ச்சியோடு முத்தமிட்ட இந்த முத்துகள் அத்தனையும் 25 வயது கூட நிரம்பாத சின்னஞ்சிறு பிஞ்சுகள்.
ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் ஆங்கில ஆதிக்கத்தை சாடிவிட்டு எல்லோரையும் போல் மேடையை விட்டு இறங்காமல் அந்த மேடையிலேயே நம் நாட்டின் தேசியக் கொடியைப் பறக்க விட்டவர் மும்பையைச் சேர்ந்த மேடம் காமா என்ற பெண்மணி. அந்தக் கொடியில் காவி, சிவப்பு, பச்சை வண்ணங்கள் இருந்தன. அப்போது இந்தியாவின் 8 மாகாணங்களைக் குறிக்கும் வகையில் 8 தாமரை மலர்களும் வந்தே மாதரம் என்ற வாசகமும், கொடியின் ஒரு புறத்தில் பிறையும் மறுபுறத்தில் உதயசூரியனும் இடம்பெற்றிருந்தன.
மேடம் காமாவின் கணவர் இந்திய விடுதலையில் ஆர்வம் இல்லாதவராக இருந்ததால் அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த மேடம் காமா தான், நம் நாட்டின் தேசியக் கொடியை (1907) முதன் முதலில் பறக்க விட்ட முதல் பெண்மணி.
பாரதத் தாய் சிலை அமைக்க முடிவு செய்த போது சிலை ஏழ்மையாக இருக்க வேண்டுமா அல்லது ஆபரணங்களுடன் இருக்கட்டுமா என்று சிற்பி கேட்டார் மகாகவி பாரதியிடம்.
போதுமான வளங்களும், நிறைவான செல்வங்களும் என் பாரதத் தாய்க்கு இருப்பதால் ஆபரணங்களுடன் இருக்கட்டும் என்றாராம் பாரதி.
என் தாயை எப்படி ஏழ்மையாக இருக்கட்டுமா என்று கேட்டீர்கள் என்று சிற்பியிடம் கோபமாகத் திருப்பிக் கேட்டாராம் அவர். பெற்ற தாயைவிட பிறந்த மண்ணை பாரதி உயிராக நேசிப்பதை அறிந்த சிற்பி வியந்து போனாராம். பாரதியின் வேண்டுகோளின்படி பாரதத்தாய் பூரண ஆபரணங்களுடன் வடிவமைக்கப்பட்டாள்.
வாக்களித்த மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு அமைச்சர்கள் காரில் சென்றது அந்தக் காலம். வாக்களித்தவர்கள் பெருமைப் பட வேண்டும் என்பதற்காகவே 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க அமைச்சர்கள் செல்வது இந்தக் காலம்.
அரசு தனக்கு அனுப்புகிற சம்பளத்தில் ரூ. 25 மிச்சமாகிறது. இனி சம்பளம் அனுப்பும் போது ரூ. 25ஐ எடுத்துக் கொண்டு மிச்சத்தை அனுப்பினால் போதும் என்று கடிதம் எழுதியவர் நம் நாட்டின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி.
மகள் தேர்வில் தோற்று விட்டாள். மறு மதிப்பீடு செய்ய தந்தையிடம் கேட்டபோது, வேண்டாம் என்று மீண்டும் தேர்வு எழுதச் சொல்லி விட்டார்.
மறுமதிப்பீட்டில் நீ வெற்றி பெற்றதாக அறிவித்தால் நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிட்டேன் என்பார்கள் என்றார். மனம் வெறுத்த மகளோ தற்கொலை செய்து கொண்டார். இப்படிச் சொன்னவர் நம் நாட்டின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்.
ஆசிரியர் ஒருவர் காமராஜை பார்த்து அவருக்கு மாலை அணிவித்தார். என்னய்யா இது! படிக்காதவர்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய நீங்கள், படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே என்றாராம்.
மரியாதை செய்ய வந்த ஆசிரியர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதாம். 5 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 4 முறை எம்.பி.யாகவும், 9 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த படிக்காத மேதை காமராஜ்.
அரசு மருத்துவமனையில் உடல் நலம் குன்றி உயிரிழந்த பின்பே அவர் காமராஜ் ஆட்சிக் காலத்தில் காவல்துறை மந்திரியாக இருந்தவர் என்பது தெரியும். அவர் தான் கக்கன்.
விமான நிலையத்தில் காத்திருந்த தொழில் அதிபரின் காரில் ஏற மறுத்து வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்த முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். பாரதிக்கு நினைவு மண்டபம் கட்ட தன்னிடம் கடைசியாக இருந்த 50 ரூபாயையும் மகிழ்ச்சியாகக் கொடுத்த மற்றொரு முதல்வர் குமாரசாமிராஜா. இந்த மாமனிதர்கள், தடம் பார்த்து நடக்கவில்லை. தடம் பதித்து நடந்தார்கள்.
அரசுப் பணி செய்ய ஒரு விளக்கையும், சொந்தப் பணி செய்ய ஒரு விளக்கையும் பயன்படுத்தியது அந்தக் கால அரசியல்வாதிகள். அரசுப்பணி செய்ய ஒரு பேனாவும், சொந்த விஷயங்களை எழுத ஒரு பேனாவும் வைத்திருந்தார்கள் அன்றைய அரசியல்வாதிகள். ஆனால் இன்றோ அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்லும் போது தன் மகனையும் அழைத்துச் செல்கிறார் ஒருவர்.
நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்காத அரசியல்வாதிகளைப் பார்ப்பது இன்று அரிதாக இருக்கிறது.
கத்தரிக்காய், வெண்டைக்காய் வாங்கும்போதுகூட பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனிமேலாவது மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருப்போம் என்று இன்று உறுதி எடுத்துக் கொண்டு நம் நாட்டின் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
தேசத்தின் வாழ்வுக்கும், மேன்மைக்கும் சிறந்த பாலமாக இருந்து சுதந்திர வானில் சிறகடித்துப் பறப்போம், வாருங்கள்!
எஸ். ஜோதிதாசன்
நன்றி : தினமணி

Thursday, August 14, 2008

இந்திய சுதந்திரத்தின் குறிக்கோள்

ஆயிரம் ஆண்டுகளாக தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத நாடு, 1947 ஆகஸ்டு 15இல் சுதந்திர நாடாக வெளிப்பட்டது. ஆண்டுதோறும் அந்த நன்னாளை இந்திய வரலாற்றின் பொன்னாளாகக் கொண்டாடுகிறோம்.
விடுதலை விழாவை நாம் கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களை, நாடு ஒளிபெற இருண்ட வெஞ்சிறைகளில் வீழ்ந்து கிடந்த மேலோர்களை, உருண்டு வரும் செக்கடிகளில் சுருண்டு மடிந்த நல்லோர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு தாய்நாடு திரும்பாமல், விடுதலை பெறும் நன்னாளைக் காண முடியாமலே அங்கேயே புதைகுழிகளில் அடங்கிவிட்ட தியாக சீலர்களை நாம் நினைவு கூர வேண்டும். வாழ்த்தி வணங்க வேண்டும்.
குதூகலத்துடன் கோலாகலமாக விடுதலை நாளைக் கொண்டாடும்பொழுது தியாகத் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், எத்தகைய குறிக்கோள்களுக்காக சுதந்திரத்தைப் பெற தியாகிகள் பாடுபட்டார்களோ அந்தக் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும் தற்பொழுது நமக்கு இருக்கிறது.
அடிமைப்பட்ட நாடு விடுதலை பெறுவது எவ்வளவு கடினமோ, அதைவிட கடினம் விடுதலை பெற்ற நாடு மீண்டும் அடிமைப்படாது இருக்க பாடுபடுவதாகும்.
1947 ஆகஸ்டு 15ஆம் நாளன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மக்களுக்கு அளித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்:
""எதிர்காலம் நம்மை அழைக்கிறது. நாம் எங்கு போகிறோம்; எப்படிப்பட்ட செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பவை குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் பெற்ற சுதந்திரத்தை சுதந்திரம் தரும் வாய்ப்புகளை, பஞ்சத்திலும், அறியாமையிலும், நோய்நொடிகளிலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்குப் பயன்படுமாறு நாம் செயல்பட வேண்டும். வளமான, முற்போக்கான, ஜனநாயக முறையை அவர்களுக்கு நாம் தர வேண்டும். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவருக்கும் சமுதாய, பொருளாதார நீதிகள் முறையாகக் கிடைக்க நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.''
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த மாமனிதர் மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, 1948 ஜனவரி கடைசிவாரத்தில் பின்வருமாறு எழுதினார்:
""இந்தியாவின் அரசியல் விடுதலையைக் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. மேற்கொண்டு பொருளாதார, சமுதாய நேர்மை உணர்வு ஆகியவற்றில் இந்திய மக்களுக்குத் தேவையான விடுதலையையும் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது. அரசியல் விடுதலையைவிட மேற்குறிப்பிட்டவைகளுக்காக நாம் நடத்த வேண்டிய போராட்டம் கடுமையானதாக இருக்கும். காங்கிரஸ் கட்சி அதிகாரங்களைக் கைப்பற்றும் வீணான போராட்டங்களில் ஈடுபட்டால், திடீரென ஒரு நாள் அக்கட்சி ஒன்றுமே இல்லாமல் போய்விடும். எனக்கு போதிய நேரமும், உடல்நலமும் இருந்தால் இது குறித்து தேசத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நான் கலந்தாலோசிக்கப் போகிறேன்''.
அவர் எழுதிய இந்தக் குறிப்பு 1948 பிப்ரவரி 1 "ஹரிஜன்' இதழில் வெளிவந்தது. ஆனால் அதற்குள் காந்தியடிகள் மறைந்துவிட்டார்.
காந்தியார் மறைந்துவிட்ட பிறகு, அவர் சொல்லிய அறிவுரைகளும் மறைந்துவிட்டன. அதற்குப் பின் வந்த காங்கிரஸ் கட்சியினரும் அவற்றை மறந்துவிட்டனர்.
தற்பொழுது எழுந்துள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் முக்கிய காரணம் மகாத்மா அச்சப்பட்டபடி அதிகாரங்களைக் கைப்பற்றும் போராட்டம்தான் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. காந்தியார் வகுத்த அரசியல், தியாகத்தின் இருப்பிடமாக இருந்தது. நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்தது. தற்பொழுது அரசியல் என்றாலே சாதாரண மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
உலக அரங்கில் மற்ற பெரிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக ஆக்குவதற்கு இந்திய ஆட்சியாளர்கள் முனைந்து திட்டமிடுகிறார்கள். ஆனால், இந்திய மக்களுக்கு ஒரு நல்லரசைத் தர கடந்த அறுபத்தோரு ஆண்டுகளில் தவறிவிட்டனர்.
சுதந்திர இந்தியாவில் போடப்பட்ட பல்வேறு சட்டங்கள், திட்டங்கள், தீர்மானங்கள் எல்லாம் வெறும் ஏட்டளவில் நின்றனவே தவிர, நாட்டு மக்களுக்கு நிலையான வளர்ச்சியைத் தரவில்லை. நாட்டின் வருமானமாகப் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பட்டியல்கள் தரப்படுகின்றன. அத்தகைய வளர்ச்சி லட்சாதிபதிகளை கோடிசுவரர்களாக, கோடிசுவரர்களை உலகக் கணிப்பில் பில்லியனர்களாக ஆக்கவே பயன்பட்டது. ஆனால் ஏழைகள் பரம ஏழைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். கிடைத்த வளர்ச்சி சரியான முறையில், நீதியான வகையில் பங்கிடப்படவில்லை.
இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக கிராம சுதந்திரம் இருக்க வேண்டும் என்று காந்தியார் வலியுறுத்தினார். கிராமப்புறத்தின் அடிப்படையாக இருப்பது விவசாயம். கடந்த 61 ஆண்டு இந்திய வளர்ச்சியைப் பார்த்தால் பயிர்த்தொழில் தான் மிகவும் பரிதாபகரமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரமடைந்தபொழுது விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 70 சதவிகிதமாகவும், நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத் துறைக்கான பங்கு 60 சதவிகிதமாகவும் இருந்தன. மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள 2007 08ஆம் ஆண்டு பொருளாதாரக் கணிப்பின்படி தற்பொழுது 52 சதவிகிதம் உள்ள விவசாய உழைப்பாளிகளுக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் 18.5 சதவிகிதம் தான் கிடைக்கிறது. இந்த நிலைமையில் கடன்படாமல், தூக்குக்கயிற்றைத் தேடாமல் விவசாயி எப்படி இருப்பான்? கடன்படாத நிலைமைக்கு விவசாயத்தை வளர்த்துவிட, அரசாங்கம் கடந்த அறுபது ஆண்டுகளில் தவறிவிட்டது.
சுதந்திர இந்தியாவின் அடிப்படைச் சட்டத்தில் பத்து ஆண்டு காலத்திற்குள் 14 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு முழுமையான கட்டாய இலவசக் கல்வி தருவதாகக் கூறப்பட்டது. 61 ஆண்டுகள் கழித்தும் இன்றளவில்கூட அந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தின் பற்று வரவுக் கணக்கு நன்றாக இல்லை. நாட்டின் வரவுக்கணக்கு ஆண்டுதோறும் அதிகமானால்கூட, எழுதிவைத்த "பத்து ஆண்டு'க் கணக்கை ஆளவந்தவர்கள் மறந்துவிட்டனர். கிராமப்புற மக்களைப் பற்றி பற்றற்ற கணக்குத்தான் இப்பொழுது இருக்கிறது.
2004இல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 6 சதவிகிதமும், சுகாதாரத் துறைக்கு 2 3 சதவிகிதமும் தரப்படும் என்று வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் கடந்த நான்காண்டு காலத்தில், மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுத் திட்டங்களை மொத்தமாகப் பார்த்தால், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 2.88 சதவிகிதத்துக்கு மேற்பட்டு எந்த ஆண்டிலும் செலவிடப்படவில்லை.
அதேபோல், சுகாதாரத் துறைக்கு 1.39 சதவிகிதத்துக்கு உட்பட்டுத்தான் செலவு விகிதம் வந்திருக்கிறது.
கல்வி அறிவு தரப்படாமல், உடல் நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல், உழுபவனுக்கு உண்ண உணவில்லாமல், உழைப்பவனுக்கு வாழ்வு இல்லாமல், உலகில் பலவகைகளில் வளம் மிக்க நாடான இந்தியாவில் வறுமை மிக்க மக்கள் பெரும்பாலாக இருப்பதுதான் இன்றைய நிலைமை.
ஒரு நாட்டின் சுதந்திரத்தையும் சமுதாய நீதியையும் காப்பாற்ற, அதிகாரம் மிக்க நிர்வாகம் நாடாளுமன்றம் நீதிமன்றங்கள் ஆகியவை அடங்கிய அரசியல் அமைப்பு மட்டும் போதாது. மக்களின் தொடர்ந்த கண்காணிப்புதான் நாட்டில் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நிலைபெறச் செய்யும். தனிப்பட்டு ஒவ்வொரு குடிமகனையும் வளர்த்திடப் போடப்படும் மனிதவள முதலீடுதான் நாட்டின் மிக முக்கிய முதலீடாக இருக்க வேண்டும்.
நாட்டின் மண்வளத்தை மக்களின் வாழ்க்கை வளமாக மாற்றிட ஏற்றப்பட்ட சுதந்திர தீபம் என்றும் அணையாது ஒளிவிட, சுதந்திர நன்னாளில் மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் குரலுக்கு நாடாளும் மகேசர்கள் அடிபணியும் காலம் பிறக்கும்.
இரா. செழியன்

நன்றி : தினமணி

கனிந்தது கனவு; திறந்தது புதிய பாதை!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவுக்குப் புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளார் அபிநவ் பிந்த்ரா. பல காலமாகக் கண்டு வந்த கனவு, இன்று நனவாகியிருக்கிறது.
பிந்த்ராவுக்கு கோடிகளும், லட்சங்களும் குவிந்து வருகின்றன. தொழில்முறையில் விளையாட்டை மேற்கொள்ள விரும்பும் எண்ணற்ற இந்திய இளைஞர்களுக்கு பிந்த்ராவின் வெற்றி, நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.
அபிநவைப் போன்ற ஏராளமான இளைஞர்கள் "உறுதி கொண்ட நெஞ்சும், தினவு பெற்ற தோளுமாக' வெற்றி இலக்கை நோக்கிக் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் உழைப்புக்கேற்ற உடல் உரம் இன்றி, களத்தில் இறங்கியவுடனேயே தோல்வியைத் தழுவுகிறார்கள்.
நம் விளையாட்டு வீரர்களின் தோல்வியில் மாபெரும் பங்கு வகிப்பது, உணவுப் பழக்கம். சத்துணவு இன்மையால் உடல் தளர்ந்து, உற்சாகம் குன்றி, தோல்வியைத் தழுவும் வீரர்கள் ஏராளம்.
விளையாட்டில் சாதனை படைத்தபிறகு வீரர்களுக்கு பணத்தையும், பரிசையும் அள்ளிக் கொடுக்கும் அரசு, அவர்களின் ஆரம்பகாலப் பயிற்சிக்கும், உணவுக்கும் ஒரு பைசாகூட கொடுப்பதில்லை என்பதே நிஜம்.
ஒரு மாணவனிடம் குறிப்பிட்ட விளையாட்டின் மீது ஆர்வமும், திறமையும் மறைந்திருந்தால், அதை வெளிக் கொண்டு வருபவர்கள் பெரும்பாலும் பெற்றோரே. தங்கள் கை காசைப் போட்டு பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முயற்சிப்பவர்களும் பெற்றோரே.
பள்ளியிலோ, கல்லூரியிலோ வாய்ப்புகள் கிடைத்தால், அதைப் பிடித்து முன்னேறும் இளைஞர்களே அதிகம்.
மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள், சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.
சத்தான உணவோ, தேர்ந்த பயிற்சியாளர்களோ இல்லாமல் மொட்டிலேயே கருகிப் போகும் வீரர்கள் பலர். கொண்டைக் கடலைக்குக்கூட வழியில்லாமல், சாதாரண அரிசிச் சாப்பாட்டைச் சாப்பிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், வீராங்கனைகள் ஏராளம்.
செஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ் உள்ளிட்ட தனிநபர் விளையாட்டுகளில், பயிற்சி பெற்ற, திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. நல்ல "கோச்' கிடைக்க வேண்டும் என்றால் வேறு மாநிலத்துக்கோ, மாவட்டத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. நிறையப் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
நடுத்தர விளையாட்டு வீரனால் பயிற்சிக்காகப் பெருந்தொகையைச் செலவிட முடிவதில்லை. உயிர் சுருங்கி, உடல் நோக கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஜொலிக்கும் வீரர்களுக்கு, மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோதான் வெற்றி கிடைக்கிறது. சர்வதேச அளவில் சாதனை படைக்கும் அளவுக்கு அவர்களின் உடலில் வலு இருப்பதில்லை.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, களத்திலிருந்தே விலகி வெற்றிக் கனவை தொலைத்துவிடுகிறார்கள். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்குப் பிறகு பயிற்சியாளர்களாக மாறிவிடுகிறார்கள்.
எல்லாத் தடையையும் தாண்டி, சர்வதேச அளவில் பிரகாசிப்பவர்கள் அபிநவ், விஸ்வநாதன் ஆனந்த், சானியா போன்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.
வெற்றிக்குப் பிறகு விளையாட்டு வீரர்களுக்கு பணமாகவும், பொருளாகவும் வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள், விதையிலேயே வேரூன்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்?
பழ மரத்தை நாடி வரும் பறவைகள்போல், வெற்றிக்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருவது இயல்புதானே. விதையிலிருந்து வேரூன்றி, செடியாகி மரமாவதுதான் கடினம்.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து உற்சாகமூட்டி, ஊக்குவிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் அக்கறை காட்டவேண்டும். தகுதியான வீரர்களின் உணவு, பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பதற்காகும் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றி பகல் கனவாகப் போனதற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், கல்வி. விளையாட்டா, கல்வியா என்ற கேள்விக்கு, கல்வியே பிரதானம் என்பதே பெரும்பாலானோரின், நடுத்தர வர்க்க இந்தியர்களின் பதிலாக இருக்கிறது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் விளையாட்டு வீரர்கள், பயிற்சிக்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் மற்ற மாணவர்களைப் போல தினமும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்க முடிவதில்லை. தினசரி சேரும் பாடச்சுமை அழுத்த, தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடுகிறது. அல்லது சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற நேரிடுகிறது.
இந்தத் தோல்வியை, சராசரி இந்தியப் பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொருளாதார ரீதியாகக் காலூன்ற "விளையாட்டைவிட படிப்பே மேல்' என்ற எண்ணமே பெரும்பாலான பெற்றோர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. அதனாலேயே விளையாட்டில் திறமையும், ஆர்வமும் இருக்கும் வீரர்களில் பலர், படிப்புடன் ஒதுங்கி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட வீரர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை. விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதும், அவர்களின் வசதிக்கேற்ப தேர்வு எழுத அனுமதிப்பதும் அவசியம்.
இதற்காக அந்த வீரர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருடன் பேசி, உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிப்பதற்கு ஆகும் செலவு, ஆசிரியர்களுக்கான கூடுதல் ஊதியம் போன்றவற்றை அளிக்கவும் அரசு முன்வரவேண்டும்.
இரும்புபோல் உடலும், சாதனை படைக்கத் துடிக்கும் நெஞ்சமும் கொண்டவர்கள் நம் இளைஞர்கள். வறுமையும், வசதியின்மையும் அவர்களின் ஆர்வத்தை எந்தவிதத்திலும் அணைபோட அனுமதிக்கக்கூடாது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள வெற்றியை, புதிய பாதைக்கான வாசலாக ஆட்சியாளர்கள் கருத வேண்டும். விளையாட்டுத் துறைக்காக கூடுதல் தொகையை ஒதுக்கி வீரர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்க வேண்டும்.
ஜி. மீனாட்சி
நன்றி : தினமணி

தங்கப் பதக்கத்துக்குப் பின்னே...

இந்தியாவின் 108 வருடக் கனவு நனவாகி இருப்பதை நாம் பதிவு செய்யாமல் இருந்தால் அதைத் தமிழ்கூறு நல்லுலகம் மன்னிக்காது. 29வது ஒலிம்பிக் போட்டி இந்திய சரித்திரத்தில் ஓர் அழுத்தமான நினைவாக, பொன்னெழுத்துப் பதிவாக நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை. 1980ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு, இப்போதுதான் மீண்டும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது. அந்த வகையில் அபிநவ் பிந்த்ராவின் சாதனை ஒவ்வோர் இந்தியனையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருப்பதில் வியப்பில்லை.
அபிநவ் பிந்த்ராவின் துணிவும், தன்னம்பிக்கையும், உறுதியும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு வருடம் முன்பு அந்த இளைஞனுக்கு ஏற்பட்ட முதுகு வலியையும் பொருள்படுத்தாமல், ஜெர்மனிக்குச் சென்று இடைவிடாத பயிற்சி பெற்று ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் என்றால் அது அவரது உழைப்புக்கும் உறுதிக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
உலக அரங்கில் 17வது இடத்தில் இருந்த பிந்த்ரா, முதல் இடத்தில் இருந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற சீனாவின் ஜு கினானையும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினெனையும் பின்னால் தள்ளி உலக சாதனை படைத்திருக்கிறார். 1900 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கலந்து கொண்டாலும், தனிநபர் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது இப்போதுதான் என்பது நிச்சயமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்.
துப்பாக்கி சுடுவதில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே உலக அரங்கில் முன்னேறி வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் ராஜ்யவர்தன்சிங் ராத்தோரும், கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அபிநவ் பிந்த்ரா மற்றும் மானவ்ஜித்சிங் சாந்துவும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜஸ்பால் ராணாவும் துப்பாக்கி சுடுவதில் சாதனைகள் புரிந்து வந்திருக்கிறார்கள். ஆயினும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பது என்பது நிச்சயம் கனவாகத்தான் இருந்தது.
நம்மால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்தாகி விட்டது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், பழம்பெருமை பேசுவதுடன் நின்று விடலாகாது என்பதுதான் நாம் அழுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலையை உடைய ஒரு நாடு, ஒரு தங்கப் பதக்கத்தை வென்றதுடன் திருப்தி அடைந்தால் எப்படி?
சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் அழுகையே வருகிறது. நாம் இப்போதைய ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தைப் பெற்றிருக்கும் வேளையில் சீனா இதுவரை குவித்திருக்கும் தங்கப் பதக்கங்கள் 17. இதே வேகத்தில் போனால் மொத்தப் பதக்கங்களின் பட்டியலில் அமெரிக்காவை சீனா விஞ்சிவிடும் என்று தோன்றுகிறது. 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்தான் சீனா தனது முதன்முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. இப்போது முதலிடத்துக்குப் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. அதற்குக் காரணம், துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல் போன்ற அதிகமாக போட்டியில்லாத பல விளையாட்டுகளை அடையாளம் கண்டு, அதில் தனது வீரர்களுக்கு முனைப்புடன் பயிற்சி அளிக்கிறது சீனா. விளைவு? சீனா தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்குப் போட்டிபோட முடிகிறது.
கடந்த 2004 ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இந்தியா வாங்கியிருக்கும் மொத்த ஒலிம்பிக் பதக்கங்களைவிட அதிகப் பதக்கங்களை 17 நாடுகள் பெற்றிருந்தன. இதற்குக் காரணம் இந்தியாவில் திறமைசாலிகள் இல்லை என்பதல்ல பொருள். திறமைசாலிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதுதான் அர்த்தம்.
நமது ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்தால், உலக அளவில் சிறந்த சைக்கிள் ஓட்டும் வீரர்களாக முடியாதா? கேரள மாநிலம் தலைச்சேரி, கண்ணூரைச் சேர்ந்த சர்க்கஸ் வீராங்கனைகள் முறையான பயிற்சி இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்கம் வெல்ல மாட்டார்களா? நமது இந்திய மீனவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தால் உலக அரங்கில் படகுப் போட்டியிலும், நீச்சலிலும் பரிசுகளைக் குவிக்க மாட்டார்களா?
அரசுக்கு இதைப் பற்றிய அக்கறை வேண்டும். அதிகாரிகள் விளையாட்டுப் பயிற்சி மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளாமல் இந்தியாவை உலக அரங்கில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட வேண்டும். திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் போக்கு பொதுநல விரும்பிகளிடமும், ஊடகங்களிடையேயும் வளர வேண்டும்.
இந்தியா வளர்ச்சி அடைகிறது, பொருளாதார ரீதியாக முன்னேறுகிறோம் என்று மார்தட்டிக் கொள்வதால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்று வளர்ச்சி அடைந்த நாடாகிவிட முடியாது. ஒருவகையில் ஒலிம்பிக் பதக்கங்களும் உலக அரங்கில் நமது அந்தஸ்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. அபிநவ் பிந்த்ராவின் வெற்றி அதற்கு வழிகோலுமாக!
நன்றி : தினமணி

Wednesday, August 13, 2008

புகையும் பணவிரயமும்

கடந்த பத்து ஆண்டுகளில் நெடுஞ்சாலைகள் பல போடப்பட்டு, உலகத் தரமான போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டிருப்பது உண்மை. அதேபோல கப்பல்களிலிருந்து "கன்டெய்னர்கள்' என்று அழைக்கப்படும் சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களின் தயாரிப்பும் உலகத் தரத்திற்கு உயர்ந்திருப்பதும், அவைகளின் உற்பத்தி கணிசமாக அதிகரித்திருப்பதும் உண்மை.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல சாலைகள் இன்றியமையாதவை. மனித உடலின் ரத்த நாளங்களைப் போன்றவை இந்த நெடுஞ்சாலைகள். தங்கு தடையின்றி ரத்த ஓட்டம் இல்லாமல் போனால் எப்படி அது இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்குமோ அதேபோன்று சாலைகள் அகலமாகவும், சீராகவும் இருந்தால் மட்டும்தான் உற்பத்தியானவையும், கச்சாப் பொருள்களும் எடுத்துச் செல்லப்படும். பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தேவை இந்த நெடுஞ்சாலைகள்தான் என்பதில் சந்தேகமில்லை.
மத்திய அரசின் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் பயனால் இப்போது நெடுஞ்சாலைகள் ஓரளவு பராமரிக்கப்பட்டு, உலகத் தரத்தில் புதிய சாலைகள் போடப்பட்டும் வருகின்றன. ஆனால், அதே அளவு முனைப்பும் உற்சாகமும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புறச் சாலைகளுக்குத் தரப்படுவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். குறிப்பாக, நகரங்களின் சாலைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை.
தில்லி, மும்பை, கோல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வந்த நிலைமை மாறி இப்போது அனைத்து மாநிலத் தலைநகரங்களும், இரண்டாம் நிலை நகரங்களும்கூடப் பெரிய வளர்ச்சிகளை எதிர்நோக்கும் காலகட்டம் இது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாலோ என்னவோ, வட்ட மற்றும் மாவட்டத் தலைநகரங்களில்கூட மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இத்தனை வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் இருக்கின்றனவா என்றால், இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். விளைவு? எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலும், தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது போக்குவரத்தில் வீணாக்க வேண்டிய நிர்பந்தமும் மக்களுக்கு ஏற்படுகிறது. மனித உழைப்பு வீணாகிறது. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதுடன் நின்றுவிடாமல் விலைமதிக்க முடியாத பெட்ரோல் மற்றும் டீசல் வீணாக்கப்படுகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் என்கிற அமைப்பு சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தில்லியில் மட்டும் ஆங்காங்கே நிற்கும் வாகனங்களால் வீணாகும் எரிபொருளின் அளவு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ. 1,000 கோடி என்கிறது அந்த அறிக்கை. வேடிக்கை என்னவென்றால், தில்லியில் மட்டும் நாளொன்றுக்கு 950 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்படும், எந்த அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வீணாகும் என்பதை நாம் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
சென்னை மாநகரப் பேருந்துகளின் எரிவாயு பயன்பாடு பற்றிய கணிப்பொன்றை மாநகரப் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில் குமார் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சென்னை நந்தனம் சிவப்பு விளக்கிலிருந்து பார்க் ஷெராட்டன் ஹோட்டல்வரை உள்ள சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றி, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டிருப்பதால் ஆண்டொன்றுக்கு மாநகரப் பேருந்து சுமார் ரூ. 62 லட்சம் சேமிக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பாதையில் மட்டும் தினசரி சுமார் 60,000 வாகனங்கள் காலையிலும் மாலையிலும் அலுவலக நேரத்தில் செல்கின்றன. அவர் சொல்லும் கணக்குப்படி ஆண்டொன்றுக்கு இந்த ஒரு மாற்றத்தால் ஏற்படும் தேசிய சேமிப்பு சுமார் ரூ. 25 கோடி என்றாகிறது.
முறையான போக்குவரத்து விதிகளும், அகலமான, மேடுபள்ளமில்லாத சாலைகளும், தங்கு தடையற்ற சீரான போக்குவரத்தும் அமையுமானால் இந்தியாவின் எரிவாயுத் தேவை பலமடங்கு குறையும் என்பதும், கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகும் என்பதும் தெரிகிறது.
மக்களைக் கடனாளியாக்கி அளவுக்கு அதிகமாக வாகனங்களை சாலையில் பயணிக்க விடுவது என்பது புத்திசாலித்தனமான முடிவல்ல. சாலைகள் முறையாக இல்லாத நிலையில் வாகனங்கள் இருந்தும் என்ன பயன்? புகையும் பணவிரயமும்தான் மிச்சம்!

நன்றி : தினமணி

அரசியலில் சிக்கிய அமர்நாத்

காஷ்மீரில் முஸ்லிம்கள் இருக்கும் வரையில் அமர்நாத் யாத்திரை தொடரும் என மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உமர் அப்துல்லா கூறினார். அப்துல்லாவின் இந்தக் கருத்தை அவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
பல்வேறு கலாசார, இன மக்கள் சேர்ந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படை இந்தியக் கோட்பாட்டையும், "காஷ்மீரியத்' கொள்கையின் உண்மையான அர்த்தத்தையும் விளக்க அவர் முற்பட்டார். அதனால்தான் அவருக்கு இந்தப் பாராட்டு.
ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை, இந்தியாவின் அடிப்படையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பையே சிதைத்திருக்கிறது.
கடந்த மே 20ல் அமர்நாத் கோயிலுக்கு 100 ஏக்கர் நிலத்தை தாற்காலிகமாக வழங்குவது என ஜம்முகாஷ்மீர் மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால், அமர்நாத் கோயில், பிரச்னையின் மையப் புள்ளியானது. இந்த விவகாரத்தால், கடந்த 60 ஆண்டுகளாக மாநிலத்தில் நடந்துவரும் பல்வேறு பிரச்னைகளும் அரசியல் குறைபாடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஒன்றுமேயில்லாத விவகாரம் பெரிய பிரச்னையாவதற்கு இது நல்ல உதாரணம்.
காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் உள்ளிட்ட யாருமே அமர்நாத் யாத்திரையை நிறுத்த வேண்டும் எனக் கோரவில்லை. யாத்ரீகர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடு. அதனால், தற்போது நிகழ்ந்து வரும் பிரச்னை, நிலம் கொடுத்ததால் மட்டுமே ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது.
நிலத்தைக் கொடுப்பதால் சுற்றுச்சூழல் பிரச்னை எழும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதைப் பயன்படுத்தப் போகிறவர்கள் வெளியாட்கள் அல்லவே? அதனால், சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படும் என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது.
அதேபோல் 100 ஏக்கர் நிலத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்தி ஹிந்துக்கள் நிரந்தரமாகத் தங்கக்கூடும் என சிலர் கூறிவருகின்றனர். இதனால் காஷ்மீர் பகுதியில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. காரணம், 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் இருக்கும் அமர்நாத் கோயிலைச் சுற்றி மனிதர்களே வாழ முடியாது என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஓராண்டில் எட்டு மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், மனித வாழ்க்கை சாத்தியமேயில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அமர்நாத் கோயில் நிர்வாகத்துக்குத் தாற்காலிக அடிப்படையில்தான் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் விதிமுறைகள் மீறப்படும்போது திரும்பப் பெறும் உரிமை அரசுக்கு இருக்கிறது.
ஆனால், இந்த விவரங்களையெல்லாம் மாநில அரசு சரியான முறையில் விளக்காததால்தான், போராட்டம் வெடித்து, நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. தாற்காலிகமாகத்தான் நிலம் வழங்கப்பட்டது என்றாலும், "தேவைப்படும்வரை' பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதால், "நிரந்தரம்' என்பதே உண்மை என ஆளுநர் சின்ஹாவின் ஆலோசகர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலாயிற்று.
அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவது என்கிற முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசு இரு விஷயங்களைச் சிந்திக்கத் தவறிவிட்டது. ஒன்று எல்லையில் நிலவி வரும் பதற்றம், அடுத்தது கடந்த 60 ஆண்டுகளில் மத்திய அரசின் மீது காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மை. இந்த இரண்டையும் கணக்கில் கொண்டிருந்தால், இந்த விவகாரமே வந்திருக்காது.
உண்மையைக் கூறினால், அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கெனவே அமர்நாத் யாத்திரைக்குப் போதுமான ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டுதானிருந்தது. வேண்டுமானால் அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகவும், நவீனமாகவும்கூடச் செய்யலாம். அதற்கெல்லாம் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், அதைவிட்டுவிட்டு அரசியல் ரீதியாக அணுகியதுதான் பிரச்னைக்குக் காரணம்.
அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்மு பகுதி மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவது என்ற முடிவை குலாம் நபி ஆசாத் எடுத்தார்.
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் நிலம் வழங்கியதைப் போல, தாமும் எதையாவது செய்யவேண்டும் என்பதற்காக, அப்போதைய ஆளுநர் எஸ்.கே.சின்ஹா கொடுத்த ஆலோசனையாகவும் இது இருக்கலாம். அல்லது நண்பரான அவரை மகிழ்விக்க ஆசாத்தே இந்த முயற்சியைச் செய்திருக்கலாம்.
ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். வைஷ்ணவ தேவி கோயில் ஜம்மு பகுதியில் உள்ளது. அமர்நாத் குகைக் கோயில் முஸ்லிம்கள் நிறைந்த காஷ்மீர் பகுதியில் உள்ளது. அமர்நாத் குகைக் கோயில் இந்துக்களின் புனிதத் தலமாக இருந்தாலும், அதைக் கண்டுபிடித்த பெருமை முஸ்லிம்களையே சாரும். முஸ்லிம்கள் நிறைந்த பகுதியைத் தாண்டித்தான் அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல வேண்டும். 60 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், ஆண்டுதோறும் நடக்கும் யாத்திரை தடைபடுவதில்லை. முஸ்லிம்கள் எப்போதுமே அதைத் தடுக்க முனைந்ததுமில்லை.
இதில், அரசியல் புகுந்ததால்தான் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. நிலம் ஒதுக்கினால், காஷ்மீரை ஜம்முவிலிருந்து பிரித்து விடுவோம் என்று மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி கூறியது. இத்தனைக்கும், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவைதான் அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவதற்கும் ஒப்புதல் அளித்தது. அதிலும் இந்த விவகாரத்துக்கு பொறுப்பான வனத்துறை அமைச்சரே அந்தக் கட்சிக்காரர்தான்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்முவைச் சேர்ந்தவரான ஆசாத்துக்கு செல்வாக்கு கூடியது. அவர் சார்ந்த கட்சிக்கும் ஜம்முவில் அதிக இடங்கள் கிடைத்தன. இந்த ஆதரவை தங்கள் பக்கம் திருப்புவதற்காக அமர்நாத் நில விவகாரத்தை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம் ஆகியவையும் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு உதவுகின்றன.
மற்றொரு பக்கம், அமர்நாத் நில விவகாரத்தால் எழுந்துள்ள உணர்ச்சிபூர்வமான சூழலைப் பயன்படுத்தி மீண்டும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஹுரியத் தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.
ஜம்முவில் இந்துக்களின் விகிதாசாரம் அதிகரிக்கக்கூடும் என்ற முஸ்லிம்களின் பயத்தையும், தில்லி அரசின் மீது அவர்களுக்குள்ள அவநம்பிக்கையையும் ஹுரியத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில் ஹுரியத் மிதவாதி மிர்வைஸ் உமர் பரூக்குக்கும் தீவிரப் போக்குக் கொண்ட சையது அலி கிலானிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆக, ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த விவகாரத்தால் தாங்கள் அடையப் போகும் பலனைத்தான் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கோயிலுக்கு நிலம் வழங்குவதற்கு உத்தரவிட்ட பிறகு, நெருக்கடி ஏற்பட்டதால் அதைத் திரும்பப் பெற்றதே மோசமான அரசியலுக்கு உதாரணம். நிலம் வழங்குவதாக மாநில அரசு உத்தரவிட்ட அன்றே, அதைத் திரும்பப் பெற்றுவிடுமாறு உளவுத்துறை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்படிச் செய்திருந்தால்கூட, ஜம்முவில் வசிக்கும் ஹிந்துக்கள் இந்த அளவுக்குப் போராட்டத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள். ஆனால், சில வாரங்கள் கழித்துத்தான் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குள் விவகாரம் தீவிரமாகி, நடுநிலையான ஹிந்துக்கள்கூட போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
தற்போது அமர்நாத் நில விவகாரமும் அதைத் தொடர்ந்த வன்முறையும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்குள்ளேயே முடிந்துவிடும் நிலையில் இல்லை; நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையால் வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதியாகிவிட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீரில் பிரிவினைவாதிகளும் ஜம்முவில் பாஜகவும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.
நெருக்கடியான தருணங்களில் இந்தியாவை வழிநடத்தும் திறனுள்ள தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்பதுதான் பிரச்னை முடிவில்லாமல் தொடர்வதற்குக் காரணம். ஜம்முவும் காஷ்மீரும் மத அடிப்படையில் பிரிவதற்கான சாத்தியங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப் பிரிவதால் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.
அமர்நாத் நில விவகாரத்தால் புதிய காஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. முஸ்லிம்களுக்கு காஷ்மீர், ஹிந்துக்களுக்கு ஜம்மு, புத்த மதத்தினருக்கு லடாக் என மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரச்னை இன்னும் தீவிரமானால், இந்தியா எந்த மதத்தையும் சாராதது என்று கூறிக்கொள்ளும் அதே நேரத்தில் மாநிலங்களை மத அடிப்படையில் பிரிக்க நேரிடும். அப்படி நடந்தால், வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நமது தேசிய அடையாளம் அழிந்தே போகும், யாரும் விரும்பாவிட்டால்கூட.
நீரஜா சௌத்ரி

நன்றி : தினமணி

Tuesday, August 12, 2008

உரத்தின் சுமையுடன் உற்பத்தி உயர...

""ஆடிப்பட்டம் தேடி விதை'' என்பது பழமொழி. ஆடி பிறந்துவிட்டால் தானிய விதைகளைத் தேடி விதைப்பவர்கள் குறைந்தும், பக்தி விதைப்பவர்கள் பெருகியும் வருகிறார்கள். ஒரு பக்கம் பார்த்தால் கிராமங்களில் ஆடி மாதம் அம்மன் திருவிழாக்கள்.
மறுபக்கம், டி.வி.யைத் திருப்பினால், ஊருக்கு ஊர் திருவிழா நடத்தும் அதே விவசாயிகள், ""விதை உண்டு, மழை உண்டு, ஆனால், உரம் இல்லையே'' என்று உரத்த குரலில் பேட்டி தருகின்றனர் ஆமாம். இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு மிகவும் கடுமையாகத்தான் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உரப் போராட்டம் வீதிக்கு வந்துவிட்டது.
ஏன் இந்த உரத் தட்டுப்பாடு? சொல்லப்படும் பல காரணங்களில் உரத்தின் விலையேற்றம், உரத்தில் கள்ளச்சந்தை, உரம் அழுத்தும் நிதிச்சுமை, தேவையுள்ள இடத்தில் கிட்டாத நிலை. பசுமைப்புரட்சி தொடங்கிய காலகட்டத்தில் ஒரு விவசாயியின் சம்மதம் இல்லாமலேயே இலவசமாக வயல்களில் யூரியா தெளித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று கேட்டாலும் கிடைப்பதாக இல்லையாம். இப்படி ஒரு சோகம் இருந்தாலும் இந்த உரத்தட்டுப்பாட்டால் தமிழ்நாடு காவிரி டெல்டா பகுதிகளில் பல விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறியுள்ளனர்.
ரசாயன உரம் என்பது புதைவு எரிசக்தி நெருக்கடியுடன் தொடர்புடையது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் யூரியா விலையும் உயரும் என்ற உண்மையை முன்கூட்டியே உணர்ந்து விழிப்புணர்வுடன் என்றுமே கிடைக்கும் இயற்கை உரங்களை நம்பியவர்கள் விழித்துக் கொண்டவர்கள் என்றாலும்கூட, குறட்டை விட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய யதார்த்தங்களைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.
யூரியா, அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களுக்குரிய மூலப்பொருள் நாஃப்தா. இதுவும் ஒரு பெட்ரோலியப் பொருள். இது முழுக்கவும் இறக்குமதி செய்துதான் யூரியா உற்பத்தியாகிறது. இது நான்கு மடங்கு விலை உயர்ந்துவிட்டது. மைய அரசு நாஃப்தாவுக்கு மானியம் வழங்குகிறது. அப்படியும் உரம் ஒரு டன் அடக்கவிலை ரூ. 17,000. நாஃப்தா விலை உயர்வால் இன்றைய அடக்கவிலை டன் ஒன்றுக்கு ரூ. 50,000.
நிதிச்சுமை காரணமாக விலையேற்றத்திற்கு ஏற்ப மைய அரசின் மானியச் சலுகை நின்றுவிட்டதால் உரக் கம்பெனிகள் உற்பத்தியைக் குறைத்துவிட்டன என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை காரணம் கூறியுள்ளார். மைய அரசு வழங்கும் தகவலின்படி உரமானியம் 2004 05 இல் 15,779 கோடி ரூபாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து 2008 09இல் 95,000 கோடி ரூபாய் என்றாகிவிட்டது. இது மொத்த இந்திய வருமான மதிப்பில் (எ.ஈ.ட.) 1.9 சதம். இந்த நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் உர மானியம் 2,00,000 (இரண்டு லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு உயர்ந்துவிடும். மைய அரசின் கஜானா காலியாகிவிடும். சுகத்தைத் தரவேண்டிய உரம் இன்று விவசாயிகளுக்கும் அரசுக்கும் சுமையாகிவிட்டது. இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. இச்சுமையை நீக்கி உற்பத்தி உயர என்ன செய்ய வேண்டும்?
புதைவு எரிசக்தி (ஊர்ள்ள்ண்ப் உய்ங்ழ்ஞ்ஹ்) இருப்புக்குறைவதால் ஏறும் பெட்ரோல் விலைக்கு மாற்றாகக் கண்ணுக்குத் தெரியும் காளை மாட்டையும், கரும்பு எத்தனாலையும் மறந்துவிட்டுக் கவைக்கு உதவாத காட்டாமணக்கையும் ஆபத்தான அணுசக்தியையும், சுற்றாத காற்றாடிகளையும், சுடாத சூரிய ஒளி சாதனங்களையும் நினைக்கத் தெரிந்த மனம், ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உர உற்பத்தியை மறப்பது ஏனோ புரியவில்லை.
உற்பத்தித்திறன் மிகுந்த அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் அதிகபட்சமாக இயற்கை உரம் இட்ட பின்னர் அளவோடு ரசாயன உரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு மிகவும் குறைவாக இயற்கை உரத்தை இட்டு, அதிகபட்சமாக ரசாயன உரம் இடும் ஒரு தவறான மரபால் மண் வளம் இழக்கப்பட்டு உணவு உற்பத்தி குறைகிறது.
மண் பற்றிய ஓர் அடிப்படையான விஷயத்தை நமது விவசாயப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பது இல்லை. விவசாயிகளிடமும் சொல்வது இல்லை. ஒரு பிடி மண்ணில் நுண்ணுயிரிகள் மில்லியன், பில்லியன் அளவில் இருந்து பணிபுரிந்தால்தான் உற்பத்தி உயரும். சத்துள்ள மண் பொலபொலப்பாகவும், அதேசமயம் ஈரமண் பிள்ளையார் பிடிக்கும் அளவில் சற்று கெட்டித் தன்மை (ஈரம் காக்க) யுடையதாகவும் இருக்க வேண்டும். நீர் விட்டால் வேர் சுவாசிக்க வேண்டும். மண்புழு, எறும்பு, கரையான் உள்ள மண்களில் இந்நிலை கிட்டும். இக்கால நுண்ணுயிரிப் படிப்பில் (ஙண்ஸ்ரீழ்ர் ஆண்ர்ப்ர்ஞ்ஹ்) மண்ணில் பயன் தரும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா, காளான், வைரஸ் போன்றவற்றின் பெருக்கம் போதிக்கப்படுகிறது. அதை மண்ணில் செயல்பட வைக்கும் நடைமுறை பலவீனமாயுள்ளது.
வேதகாலத்தில் மைக்ராஸ்கோப் இல்லாமலேயே மண்ணில் நுண்ணுயிரிகளைப் பெருக்கும் வித்தைகளை சித்தர்களும் முனிவர்களும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதை விருட்சாயுர் வேதம் கூறுகிறது. மண்ணில் குணபம் (அதாவது இறந்து நொதித்த உடலி, இறைச்சி, மீன், கோழி) செயல்படுகிறது. நுண்ணுயிரிப் பெருக்கத்திற்கு இறந்த உடலிகளில் கழனீர், சாணம், புளிப்பு ஏறிய சாத்தூத்தம், மது, கள், பால், மோர், நெய், தேன், பிண்ணாக்கு (எள், கடுகு) போன்றவற்றை எவ்வாறு சேர்த்து நொதிக்க வைத்துப் பக்குவம் செய்யும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கால நுண்ணுயிரிப் படிப்பில் பெருக்கம் தரவேண்டிய அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ஈ.எம். திறமி நுண்ணுயிரி சூடோமோனோபாஸ், விருடி போன்றவை எல்லாமே குணபஜலத்தில் அடக்கம்.
ரசாயன உரப் பயன்பாட்டில் உள்ள பல தவறான எண்ணங்கள் மாறினால்தான் வேளாண் உற்பத்தித் திறன் கூடும். ரசாயன உரம் என்பது எரியும் தன்மையுள்ள மெழுகுத்துகள் ஊட்டங்களாயுள்ளன.
உதாரணமாக மணிச்சத்து என்ற அமோனியம் பாஸ்பேட்டில் நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்வரம் உண்டு. அதில் ட3ஞ5 என்ற ஃபார்முலாவில் பாஸ்வரம் (எரியம்) பணி செய்தாலும்கூட இந்த வடிவில் 5 சதம் உரம் மட்டுமே வேர் எடுத்துக் கொள்ளும். மீதி 95 சதம் உரம் மண்ணை இறுக்கி நுண்ணுயிரிகளை அழிக்கும். இவ்வாறே யூரியா, பொட்டாஷ் உரம் எல்லாமே முழுமையாகப் பயனுறாமல் மண்ணைக் கெட்டிப்படுத்தி வேர் வளராத நிலை உருவாகிறது. ஆகவே, பன்மடங்கு இயற்கை உரங்களை இட்டு சிறிது ரசாயன உரம் மட்டும் வழங்குவது நல்லது. மெல்ல மெல்ல அந்தச் சிறு அளவு ரசாயனத்தையும் நிறுத்திவிட்டால், மண்ணில் நுண்ணுயிரிகள் சிறப்புடன் பணிபுரியும்.
ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் நுண்ணுயிரிகளின் பண்பாடு நன்கு செயல்பட்டு உற்பத்தித்திறன் உயர்வாயுள்ளது. ஒழுங்குடன் திட்டமிட்டால் நகரக்குப்பைகளை உயிர் உரங்களாக மாற்றலாம்.
நகரக்குப்பைகளையும், அறுவடைக் கழிவுகளையும், காய்கறி அங்காடி, பழ அங்காடிக் கழிவுகளையும் வீணாக்காமல் உரமாக்கினால் இன்றுள்ள ரசாயன உரத் தட்டுப்பாட்டிலிருந்து இன்று இல்லாவிட்டாலும் நாளை மீளும் வழி உண்டு. ஆனாலும் அது இன்னமும் தேடுதலாயுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பச்சை வைரம் என்ற திட்டம் நகராட்சிக் குப்பைகளை மக்கிய உரமாக மாற்றி வருவது ஒரு தொடக்கம். தமிழ்நாட்டில் இங்குமங்குமாக ஒரு சில ஊராட்சி, நகராட்சிகளில் அற்ப சொற்பமாக இப்பணி நிகழ்கிறது. புதுச்சேரி பச்சை வைரம் ஆண்டுக்கு 70 டன் உரம் உற்பத்தி செய்கிறது.
ஊர் நகரக்குப்பை குறித்த புள்ளிவிவரம் நம்மைச் சிந்தையில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியா 1,20,000 டன்கள் குப்பைகளைக் குவித்து சுகாதாரக் கேடுகளை உருவாக்குகிறது. இவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் யோசனைகள் ஒப்புதல் பெற்றுச் சில பெருநகரங்களில் ""ஆஸ்திரேலியத் தொழில்நுட்பம், அது இது'' என்று அமர்க்களம் செய்து, கோடிகளைச் சுருட்டி, ஆலைகளைக் கட்டி முடித்துச் செயல்படும்போதுதான் ஒன்று புரிந்தது. ""இக்குப்பைகளில் உள்ள ஈரத்தைப் போக்கிப் பக்குவப்படுத்துவதற்குத் தேவையான மின்சாரம், இக்குப்பைகளிலிருந்து பெறக்கூடிய மின் உற்பத்தியை விடக் குறைவு'' என்பதால், அது தோல்வியில் முடிந்தது. எனினும் தேங்காய் உரிமட்டை மற்றும் செக்கு மட்டைகளை எரித்துச் செய்யும் அனல் மின்சாரம் வெற்றி தருகிறது என்றாலும், அதே உரிமட்டைகளைப் பொடி செய்து தூவினால் பொட்டாசிய உர இறக்குமதியை நிறுத்திவிடலாம்.
""திடக்கழிவு மேலாண்மை'', ""கிளீன் சிட்டி'' என்றெல்லாம் திட்டம் தீட்டிப் பல தொண்டு நிறுவனங்கள் உண்டு கழிக்கின்றனவே தவிர, ஊர்க்குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் உருப்படியாக எதுவும் இல்லை. ஊர்க்குப்பைகள், பெருநகரக் குப்பைகளில் உள்ள நச்சுப்பொருள், பிளாஸ்டிக் ஆகியவற்றை நீக்கிவிட்டு கவனித்தால் ஒவ்வொரு நாளும் 50,000 டன் மக்குப்பொருள் கிட்டும் வாய்ப்பு உள்ளது. ஊர்க்குப்பைகளை உரமாக மாற்றும் விஷயத்தில் தென் அமெரிக்க நாடுகளும், மத்திய ஆசிய நாடுகளும், வளர்ச்சி பெற்ற வடக்கு நாடுகளும் சிறப்பாகச் செயல்படுவதைக் கவனிக்க வேண்டும். மென்பொருள், சாஃப்ட்வேர், செல்ஃபோன், கார் ஆகியவற்றில் அவர்களைப் பின்பற்றும் நாம், அதே நாடுகளிலிருந்து குப்பைகளைச் செல்வமாக்கி எவ்வாறு ரசாயன உர இறக்குமதியையும், பயன்பாட்டையும் குறைக்கலாம் என்பதையும் கற்றுக்கொள்வது நன்றல்லவா? மறுசுழற்சி நுட்பங்களை உகந்தவாறு பயன்படுத்தினால் ஒருபோதும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. உற்பத்தி உயர்ந்திடும்.

ஆர்.எஸ். நாராயணன்
(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொருளியல் நிபுணர்)

நன்றி : தினமணி

"உளி' இல்லாத நவீன சிற்பிகள்!

மாதா, பிதா, குரு தெய்வம்' என்பது முதுமொழி. பெற்றோருக்கு அடுத்து பிள்ளைகள் வணங்கும் தெய்வமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. எனவேதான் "எழுத்தறிவித்தவன் இறைவன்' என நமது முன்னோர் முன்மொழிந்தனர்.
ஆனால் தற்போது குழந்தைகளும் பெற்றோரும் ஆசிரியர்களை நண்பர்களாகக் கூட பார்ப்பது இல்லை என்பதே துரதிருஷ்டமான உண்மை.
பெருகிவிட்ட தனியார் பள்ளிகளால் வர்த்தகமாகிவிட்ட கல்வி; எதார்த்தத்தை இழந்துவிட்ட பள்ளிக்கூடச் சூழல்; ஊதியத்தை மையமாக்கி உழைக்கும் ஆசிரியர் என்ற சூழல்களே கற்பிப்போர் மீதான சமூகப் பார்வையை மாற்றிவிட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மாணவ, மாணவியருக்கு ஏற்படும் தனிப்பட்ட பாதிப்புக்கெல்லாம் ஆசிரியர்களது முரட்டுத்தனமான அணுகுமுறையே காரணம் என்பது போல அதிக அளவில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் இப்போது கற்பித்தல் என்பது "கம்பி மீது நடக்கும் வித்தை' போலாகிவிட்டது என ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.
பள்ளிக்கூடம் என்பது வெறும் மொழி, கருத்துகளை மட்டும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் கூடமல்ல. சமூகத்தில் மேம்பட்ட நாகரிக மனிதனை உருவாக்கும் "பட்டறை' என்பது அறிஞர்களின் கருத்து.
எனவே "அறுக்கி வளர்க்காத மரம் உத்தரத்துக்கு ஆகாது; அடித்து வளர்க்காத பிள்ளை வாழ்க்கையில் உருப்படாது' என்ற பழமொழியை நினைவில் கொள்வது நல்லது.
ஆனால் கண்டிப்பு என்ற பெயரில் ஆசிரியர் சிலர் அத்துமீறுவதால் மாணவர்கள் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படுவதை மறுக்க முடியாது. சிற்பத்தை உருவாக்கும் உளியால் கற்களுக்கு சேதம் ஏற்படுவது சரியல்ல என்பது சமூகவியலாளர்கள் கருத்து.
சிற்பிகளான ஆசிரியர்களுக்கு நாவன்மை என்ற கூர்மையே முக்கியம். ஆனால் இன்றோ பேச இயலாதவர் கூட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி சான்று வைத்திருந்தால் பாடம் நடத்தலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.
வாக்கு வன்மையால் மாணவர்களைத் தன்பால் ஈர்க்கும் திறமைமிக்க ஆசிரியர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். திறமையற்றவர்களே மிரட்டல், உருட்டல் வழிமுறை மூலம் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதனால்தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியரின் திறமை குறித்து பணி ஓய்வு பெறும் வயதிலும் ஒருவரால் நினைவு கூர்ந்து பேச முடிந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஊதியம் ஈட்டலுக்கான தொழிலாகவே பெரும்பாலானோர் இதைக் கருதுகின்றனர்.
அத்துடன் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்போரே சிறந்த ஆசிரியர் என்ற கருத்தும் பரவலாக ஏற்கப்படுவதால் மாணவர்களை மனப்பாட எந்திரமாக்குவதிலே ஆசிரியர் கவனம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.
பெற்றோரும் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறுவதே முக்கியம் என எண்ணுவதால், ஒழுக்க நிலைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இல்லாத நிலையில், கண்டிப்பதால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தாலும் பலர் பிள்ளைகளது ஒழுக்கமீறல்களைக் கண்டுகொள்வதில்லை.
அம்மாக்கள் பலர் தொலைக்காட்சித் தொடர் மோகத்தில், பிள்ளைகளின் நடமாட்டத்தைக்கூட தொல்லையாகக் கருதுகின்றனர். இதனால் மாலை நேரத்தில் பிள்ளைகள் டியூஷன் நேரக் கைதிகளாகவோ, வழிகாட்டுதல் இல்லாத நிலையிலோ நேரத்தைக் கழிக்கின்றனர்.
மொத்தத்தில் கண்டிப்பு என்பது வீட்டிலும், வெளியிலும் இல்லாத சூழல் இளைய தலைமுறைக்கு ஏற்பட்டிருப்பது நல்லதல்ல.
மாணவர்கள் மதிக்கத்தக்க தனித்திறமைகளை ஆசிரியர் கொண்டிருப்பது அவசியம். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தங்களது திறன்களை ஆசிரியர் மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே!
இதற்கிடையே மாணவர்களை அடிக்காமல் படிக்க வைப்பது குறித்து யுனிசெஃப் அமைப்பும், தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநரகமும் ஆசிரியர் கருத்தை அறியும் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளன.
அதில் பங்கேற்றவர்கள் கரடுமுரடான கற்களைப் போன்ற மனநிலையில் வரும் மாணவர்களைத் தண்டனை என்ற "உளி'யால் செதுக்கி ஒழுக்கமுள்ள சிற்பங்களாக்குவது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், டாக்டர்களைப் போல தங்களுக்கும் மாணவர்கள் தரப்பு புகாரிலிருந்து பாதுகாக்க தனிச் சட்டம் தேவை எனவும் வாதிடத் தொடங்கியுள்ளனர். ஆக, தவறுகளைத் திருத்த வேண்டியவர்களே தங்களைச் சட்டத்தின் மூலம் பாதுகாக்க முயற்சிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
மொத்தத்தில், நல்ல சிந்தனை; அதை எடுத்துக்கூறும் நாவன்மை என்ற உளிகள் இல்லாமல் நாகரிக சமுதாயச் சிற்பங்களை ஒருபோதும் உருவாக்க முடியாது என்ற உண்மையை இந்த நவீன காலச் சிற்பிகள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ?
வ. ஜெயபாண்டி

நன்றி : தினமணி