Wednesday, October 29, 2008

துயரை திசைதிருப்பும் துதிபாடிகள் - பழ. நெடுமாறன்

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவெறிப் படுகொலைகள் குறித்த பிரச்னையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வரவேற்கத்தக்க பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 14102008 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுவில் பெரும் உற்சாகத்தை ஊட்டியுள்ளன.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுமே இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவது குறித்து பெரும் கவலை தெரிவித்தனர். போரை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்றவற்றை உடனடியாக அனுப்பி வைக்கவும், இனப் பிரச்னைக்கு அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும், ராணுவ ரீதியான தீர்வு ஒருபோதும் கூடாது, இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவி எதையும் செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தெரிவித்தனர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெளிப்படுத்திய இந்த உணர்வுகளின் அடிப்படையில் அக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
போரை நிறுத்தி உடனடியாக அமைதியை ஏற்படுத்த இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். 15 நாள்களுக்குள் இவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்தும் தனித்தனியாகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளன. தமிழக முதலமைச்சர்களினால் அவ்வப்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப் பெற்றும் அனைத்துக் கட்சித் தூதுக் குழுவாக தில்லி சென்று பிரதமரிடம் முறையீடுகள் அளிக்கப்பட்டும் வந்துள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இந்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நிலையிலும் அதிகாரிகள் நிலையிலும் பலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்தியாவின் ஆழ்ந்த கவலைகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. பிரதமர் இந்திராவின் காலத்தில் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருதரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டினையும், அதைப்போல பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டினையும் மதித்துச் செயல்படுத்த இலங்கை அரசு முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் இப்போது தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்துள்ள முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். கடந்த காலத்தில் இத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் சார்பில் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இந்த முடிவுகள் கருதப்பட வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டிய தீர்மானமும் அதைச் செய்யத் தவறினால் தமிழகம் எத்தகைய நிலையை மேற்கொள்ளும் என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 30 ஆண்டு கால வரலாற்றில் இத்தகைய திட்டவட்டமான நிலைமையை தமிழகம் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து இந்திய அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழ் மக்கள் அனைவரின் விருப்பமும் இதுதான்.
ஆனால் சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் மனம் இரங்காத சிலர் அனைத்துக் கட்சிகள் மேற்கொண்ட முடிவுகளைத் திரித்துப் பொய்ப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் வாயும் மனமும் கூசாமல் பேச முன்வந்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து விமானத் தாக்குதலாலும் பீரங்கிக் குண்டு வீச்சினாலும் செத்து மடியும் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உண்ண உணவின்றியும் இருக்க இடமின்றியும் நோய்களுக்கு மருந்தின்றியும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காடுகளிலும் வெட்ட வெளியிலும் துடிப்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள வல்லரக்கர்களின் கொடுஞ்செயலைக் கண்டிக்கவும் அவர்கள் முன்வரவில்லை. சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதையே தங்களின் பிறவிப் பயனாகக் கருதுகிறார்கள்.
ராஜீவ்காந்தி காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ள இந்திய அரசுகள் இலங்கை இனப் பிரச்னையில் கையாண்டு வரும் தவறான கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் உருவாகி இருப்பதை மேற்கண்டவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.
இந்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.
1. ஈழத் தமிழர்கள் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசின் நலன்களைக் காக்கும் வகையிலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
ஈழத் தமிழர் பிரச்னையில் சிங்கள அரசு வகுத்த தீர்வை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக சிங்கள அரசு தனது இன அழிப்புப் போரைத் தங்குதடையின்றி தொடர்வதற்கு அனுமதித்தது.
2. சுய நிர்ணய உரிமையுள்ள தமிழ்த் தாயகத்தை பெறுவதற்காக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டம் அங்கீகாரமற்றதாகவும் அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. தமிழ்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என வர்ணித்து ஒழித்துக் கட்டுவதற்கு சிங்கள அரசு முற்பட்டதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
3. ஈழத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு தொடர்ந்து செய்த முயற்சிகளைத் தடுக்க இந்திய அரசின் அணுகுமுறைகளினால் முடியவில்லை.
4. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட நாடான இலங்கையில் நேரு, இந்திரா காலங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலையில் இருந்த அன்னிய நாடுகள் இலங்கையில் கால் ஊன்றுவதற்கு ராஜீவின் கொள்கை இடம் அளித்துவிட்டது.
இக்கொள்கையால் ஏற்பட்ட தடுமாற்றங்களின் விளைவாக தென் ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்கு இந்திய அரசு மறைமுகமாகத் துணைபுரிந்துவிட்டது. இப்பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். இந்தியா அதனுடைய எல்லைகளுக்குள்ளாகவே அடங்கிக் கிடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்குள்ளும் தென் ஆசிய பகுதிக்குள்ளும் பலமான நிர்பந்தங்களை அமெரிக்கா உருவாக்குகிறது. இலங்கை அரசுக்குத் தான் நேரிடையாக உதவி செய்வதை விட தனது நட்பு நாடான பாகிஸ்தான் மூலம் உதவி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுத்த ஆயுதங்களின் ஒரு பகுதி இலங்கைக்குத் திருப்பிவிடப்பட்டு உள்ளது.
இலங்கையிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது. மேலும் அராபிய நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாகவே செல்கின்றன. கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் இலங்கையைத் தொட்டுச் செல்கின்றன. இந்துமாக் கடலில் கப்பல் போக்குவரத்துப் பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. எனவே, இந்தக் கடல் பாதைகள் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால் இலங்கை தனது ஆதிக்கத்திற்கு உள்பட்ட நாடாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது.
சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குத் தாராளமாக ராணுவ உதவிகள் அளிப்பதற்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. இந்த நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை ஒரு பெரிய சந்தை அல்ல. இலங்கையினால் இந்த நாடுகளுக்கு எந்தவிதமான ஆதாயமும் கிடையாது. ஆனாலும், சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இந்நாடுகள் உதவி செய்வதற்குக் காரணமே இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்திய அரசின் தவறான கொள்கையின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானதை விட இந்தியா மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இந்தியாவின் தென்வாயிலில் பேரபாயம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே பலர் எச்சரித்துள்ளனர்.
நேருவின் நண்பரும் சீனாவில் இந்தியத் தூதுவராக இருந்தவருமான சர்தார் கே.எம். பணிக்கர் இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்திருந்தார். ""இந்தியாவும் இந்துமாக் கடலும்'' என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியுள்ள நூலின் 7வது பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
""இந்தியாவைப் பாதிக்கும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தில் கடல் பகுதியை அலட்சியமாக ஒதுக்கி விடுகிற போக்கு இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவின் பாதுகாப்பு என்பது வடமேற்கு எல்லைப் பகுதிகளை மட்டும் பொருத்தது என்ற முடிவுடன் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்காலத்தை நில எல்லைகள் முடிவு செய்யவில்லை. மாறாக கடல்தான் எதிர்காலத்தை முடிவு செய்தது என்பதை மறந்துவிடக் கூடாது.''
வரலாற்று அறிஞரான டி.ஆர். இராமச்சந்திரராவ் ""இந்தியாவும் இலங்கையும் ஓர் ஆய்வு'' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலின் 8வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
""இந்துமாக் கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை உள்ளது. இந்துமாக் கடலின் பாதுகாப்பு அதைப் பொருத்ததேயாகும். நிலவியல் அடிப்படையிலும் அது நடு மையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியாகச் செல்லும் விமானத் தடங்களுக்கும் கப்பல் தடங்களுக்கும் இலங்கை நடு நாயகமாக உள்ளது.''
இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் நெருங்கி உறவாட இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இலங்கை ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உடன்பாடுகள் செய்து கொள்வதற்கும் இலங்கை தயங்கியதில்லை. 1962ம் ஆண்டு இந்தியாவின் எல்லைகளை சீனா ஆக்கிரமித்தபோது இந்திய சீனப் படைகளின் மோதல்கள் நிகழ்ந்து இரு நாடுகளின் உறவும் மிகவும் சீர்கெட்டிருந்தது. அந்த நிலையில் 1963ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையும் சீனாவும் கடல் உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டன. சீனப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்து போவதற்கான உடன்பாடும் இந்த உடன்படிக்கையில் செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் இந்தப் போக்குகளைக் கண்ட இந்திய ராணுவத் தளபதிகளும் இந்திய அரசுக்குத் தங்கள் கவலைகளைத் தெரியப்படுத்தினார்கள். இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான இரவி கெளல் என்பவர் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
""பிரிட்டனுக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமோ, சீனாவுக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதுபோன்று இந்தியாவுக்கு இலங்கை முக்கியமானதாகும். இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும்வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவுக்கு அதனால் ஆபத்து வந்துசேரும்''.
இந்தியாவுக்கு வரவிருக்கும் அபாயத்தைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சிங்களத் துதிபாடிகளுக்கு கொஞ்சமும் கவலையில்லை. அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் நலனிலும் அக்கறை இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள அபாயம் குறித்தும் கவலையில்லை. சிங்கள இனவெறியருக்கு இந்தியா தொடர்ந்து எல்லாவகை உதவிகளையும் செய்து ஈழத் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாகும். அதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தச் சிங்களத் துதிபாடிகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மேலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிட முடியாது என்றும் அடிக்கடி சொல்கிறார்கள்.
சிலவேளைகளில் இந்தியப் பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இத்தகையோருக்கு இந்தியாவின் கடந்தகால வரலாறு கொஞ்சமும் தெரியவில்லை. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்திரா காந்தி காலம் வரை எத்தகைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா கையாண்டு வந்திருக்கிறது என்பதை நம்முடைய பிரதமரோ அவருக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகளோ அல்லது அந்த அதிகாரிகளைத் திசைதிருப்ப முயலும் சிங்களத் துதிபாடிகளோ எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளை அரசாங்கம் கருப்பின மக்களுக்கு எதிராகக் கையாண்ட நிறவெறிக் கொள்கையை ஜவாஹர்லால் நேரு மிகக் கடுமையாக எதிர்த்தார். நிறவெறியைப் பின்பற்றுவது அந்நாட்டின் சொந்தப் பிரச்னை என அவர் ஒதுங்கி நிற்கவில்லை. 1961ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி லண்டனில் காமன்வெல்த் பிரதமர்களின் மாநாடு நடைபெற்றபோது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுக்குத் தலைமை தாங்கி தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கடுமையாகக் கண்டித்தார் நேரு. அதுமட்டுமல்ல, நிறவெறிக் கொள்கையை அந்நாடு மாற்றிக்கொள்ளாவிட்டால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அவர் வற்புறுத்தி மற்ற நாடுகளையும் ஏற்க வைத்து தென்னாப்பிரிக்காவை வெளியேற்றினார். அதே மார்ச் மாதம் 13ம் தேதியன்று ஐ.நா. பேரவையில் பேசும்போதும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
தென்னாப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையைக் கையாண்டு நீக்ரோக்கள், இந்தியர்கள் ஆகிய கருப்பின மக்களை ஒடுக்கியது. இலங்கை, இனவெறிக் கொள்கையைக் கையாண்டு தமிழர்களை ஒடுக்கி வருகிறது. நிறவெறிக்கும் இனவெறிக்கும் வேறுபாடு இல்லை. நிறவெறிக்கு எதிராக நேரு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் சிங்கள இனவெறிக்கு ஆதரவாக மன்மோகன் அரசு நடந்து கொள்கிறது.
பாகிஸ்தானின் ஓர் அங்கமான கிழக்கு வங்கத்தில் திட்டமிட்டு இனப்படுகொலைகளை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியபோது அது அந்நாட்டின் உள்விவகாரம் எனக் கருதி பிரதமர் இந்திரா ஒதுங்கி நிற்கவில்லை. வங்க மக்களின் துயரம் குறித்தும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருப்பது குறித்தும் தனது கவலையை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். எந்தப் பயனும் இல்லாத நிலைமையில் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்க மக்களுக்கு விடுதலை தேடித் தந்தார்.
எனவே, ஈழத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை எனப் பேசுபவர்களும், பக்கம்பக்கமாக எழுதுபவர்களும், வரலாறு புரியாதவர்கள் அல்லர். அவர்கள் வரலாற்றுப் புரட்டர்கள். உண்மைகளை மறைத்தும் திரித்தும் சுயநல நோக்கத்துடன் செயல்படுபவர்கள். இவர்கள் என்றைக்குமே தமிழர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்காத சிங்களத் துதிபாடிகள் ஆவார்கள். எது உள்நாட்டுப் பிரச்னை எது சர்வதேசப் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமல் குழப்புபவர்கள்.
உலகமே சிறுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், எந்த ஒரு நாட்டின் பிரச்னையும் அண்டை நாடுகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு உலகம் நெருங்கிப் பிணைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், பழைய ஏகாதிபத்திய மனோபாவத்துடன் இவர்கள் பேசுகிறார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன் மனைவி இடையே நடைபெறும் சச்சரவில் தலையிடுவது நாகரிகமாக இருக்க முடியாது. ஆனால் அந்தக் கணவன், மனைவியைக் கொலை செய்ய அரிவாளுடன் விரட்டும்போது அது அவர்களின் குடும்பப் பிரச்னை என்று ஒதுங்கிக் கொள்பவன் கோழை மனித நேயம் அற்றவன். அதைப்போலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறுபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பவர்கள்.
நன்றி : தினமணி

ஏமாறாதே! ஏமாற்றாதே!!

ஜெயவர்த்தனே காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் இலங்கை அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பாசில் ராஜபக்ஷவிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பலமுறை தந்த உதட்டளவு உத்தரவாதத்தை மறுபடியும் பெற்றிருப்பது முதல்வரைத் திருப்திப்படுத்தி இருப்பது ஆச்சரியம்தான்.
அல்லல்படும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், பாதிக்கப்பட்டால் நிவாரணமும் தர வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. அதை அவர்கள் செய்யத் தவறி இருப்பதிலிருந்தே, எந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அவதிப்படும் இலங்கைப் பிரஜைகளான தமிழர்களுக்குத் தங்களது செலவில் நிவாரணம்கூடத் தரத் தயாராக இல்லாமல் அதை இந்தியாவிலிருந்து கேட்டுப் பெறுகிறது அந்த அரசு என்றால், நாம் ஏமாளிகளாக இருக்கிறோம் என்றுதானே பொருள்?
தன்மான உணர்வு, சுயமரியாதை என்று ஊருக்கு உபந்நியாசம் செய்யும் முதல்வர், தன்மானமும், சுயமரியாதையும் இல்லாமல் தனது நாட்டுக் குடிமக்களுக்கு அன்னிய நாட்டின் நிவாரணம் கேட்கும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் இங்கே நிவாரண நிதி திரட்ட முற்பட்டிருக்கிறார். முன்பு, பழ. நெடுமாறன் திரட்டி வைத்திருந்த மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருள்களை வீணடித்தபோது இல்லாத உத்வேகம், இப்போது திடீரென்று முதல்வருக்கு வந்திருக்கிறதே, அது ஏன்? புரியவில்லை!
விடுதலைப் புலிகள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்துவதால் அவர்கள், சிலவேளைகளில் பாதிப்புக்கு உள்ளாக நேர்கிறது என்பது இலங்கை அரசின் வாதம். நடத்துவது என்னவோ விமானக் குண்டு வீச்சு. அதில் எங்கிருந்து வருகிறது மனிதக் கவசம் என்று கேள்வி கேட்கக்கூடவா முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் தெரியாமல் போய்விட்டது?
கிளிநொச்சியில் இருக்கும் ஒரே மருத்துவமனையும் குண்டு வீச்சுக்கு இரையாகி விட்ட நிலையில் மருத்துவ வசதி இல்லாமல் அங்கே அப்பாவிகள் செத்து மடிகிறார்கள். போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு தான் பேச்சுவார்த்தை என்றல்லவா முதல்வர் இந்திய அரசை வற்புறுத்தி இருக்க வேண்டும்.
இலங்கைப் பிரச்னையில் அரசியல் தீர்வு என்று பேசுபவர்கள், முதலில் அதிகாரிகள் மூலம் இந்தப் பிரச்னையை அணுகுவதை நிறுத்த வேண்டும். இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்த தமிழக அரசியல்வாதி ஒருவரை உள்ளடக்கிய இந்தியக் குழுவால் மட்டும்தான் இலங்கையின் சமாதானத்துக்கு வழிகோல முடியுமே தவிர, அதிகாரிகளால் முடியாது என்று எடுத்துச் சொல்ல முதல்வர் ஏன் தயங்குகிறார்?
மத்திய அரசை வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதியும், இலங்கை அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசும் நிலைப்பாடு எடுத்திருக்கும்போது, அங்கே அன்றாடம் செத்து மடியும் அப்பாவித் தமிழர்களுக்கு எப்படி நிவாரணமும் நியாயமும் கிடைக்கும்? நாம் அனுப்பும் நிதியும், நிவாரணமும் இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நாற்பதாண்டுப் பிரச்னையை நான்கு நாள்களில் தீர்க்க முடியாது என்கிற முதல்வரின் கருத்து சிரிப்பை வரவழைக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போதும், எம்.பி.க்கள் ராஜிநாமாவின் போதும், மனிதச் சங்கிலி நடத்தியபோதும் தெரியாத இந்த உண்மை, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் வந்தவுடன்தான் முதல்வருக்குத் தெரிந்ததா என்ன? அது போகட்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இந்தப் பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முயற்சிக்கவில்லை?
பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கொழும்பில் பாகிஸ்தான் தூதராக அமர்ந்து ராஜபக்ஷ அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், சீனாவுடன் மிக நெருக்கமான உறவை இலங்கை அரசு வளர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு உதட்டளவு உத்தரவாதத்தை நம்புவது சரியான ராஜதந்திரம் ஆகாது!
நன்றி : தினமணி

Tuesday, October 28, 2008

அமெரிக்க நிதி நெருக்கடியும் இந்தியாவும்

உலகெங்கிலும் உள்ள அரசுகள் மற்றும் மத்திய வங்கிகள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்னை இதுதான். பூதாகரமாக எழுந்துள்ள அமெரிக்க நிதி நெருக்கடியின் தாக்கம் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சிதைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான்.
உலகப் பொருளாதாரம் ஒரே கூரையின் கீழ் வந்துவிட்ட நிலையில், அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சி இந்திய வங்கிகளை பாதிக்குமோ? என்று நம் நாட்டு முதலீட்டாளர்கள், கவலையில் இரவுத் தூக்கத்தை இழந்தது நிஜம்.
நல்லவேளையாக, இந்திய வங்கிகளுக்கு பாதிப்பில்லை என்ற உறுதிமொழி உரிய நேரத்தில் மத்திய அரசிடமிருந்து மக்களுக்குக் கிடைத்தது.
தற்போதைய நிலைமையைச் சற்று கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகும்.
இன்றுள்ள நிலையில் இந்தியாவில் வங்கிகளுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால், இந்தியப் பொருளாதாரம் பாதிப்பிலிருந்து தப்பிக்குமா? உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியப் பொருளாதாரத்துக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ பாதிப்பு இருக்கும் என்பது வெளிப்படை.
முதலில் வங்கிகளின் நிலையைப் பார்ப்போம். 1970, 1980களில் உலகிலேயே நிதி மேலாண்மையிலும், வங்கிச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியவர்கள் அமெரிக்கர்கள்தான் என்று பரவலாகக் கருதப்பட்டது. அதனால் அமெரிக்கர்களின் நிதித்துறை நிபுணத்துவம் மற்றும் நடைமுறைகள் பல வளரும் நாடுகளால் பின்பற்றப்பட்டன. இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல.
அந்த காலகட்டத்தில், பிரகாஷ் டாண்டன் குழு (1975), கே.பி. சோரே குழு (1979), எஸ்.எஸ். மராத்தே குழு (1983) ஆகிய நிபுணர் குழுக்கள் கடன் வழங்கும் நடைமுறைகளை நெறிமுறைப்படுத்தின. அவை பெரும்பாலும் அப்போதைய அமெரிக்கப் பாணியில்தான் அமைந்திருந்தன. சொல்லப்போனால், கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்.எஸ். மராத்தே குழுவின் பரிந்துரைகள் 1983ல் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் தற்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்.
இதுதவிர, வங்கிகளின் சொந்த மூலதனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து குறைந்தபட்ச மூலதனம் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இந்த நியதிகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்வகையில், இந்திய வங்கிகளுக்கு இன்றளவும் பேசல் 1, பேசல் 2 என்ற நியதிகள் அமலில் உள்ளன.
இந்த நியதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை பாரத ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
ஆனால், அமெரிக்க வங்கிகள் பிற நாடுகளுக்குக் கற்றுக் கொடுத்த நிதி மேலாண்மைத் தத்துவங்களை அவர்களே பின்பற்றவில்லை. அதனால்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவால் ஆயின.
இந்திய வங்கிகள் மூலதன விகிதம், கடன் வழங்கும் நியதிகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதுடன், வங்கிச் செயல்பாடுகளில் நிதானமான போக்கையே பின்பற்றுகின்றன. அத்துடன் வாராக்கடன்களின் அளவும் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாராக்கடனை வசூலிப்பதில் புதிய சட்டதிட்டங்கள் வங்கிகளுக்கு உதவிகரமாக உள்ளன. அதனால் இந்திய வங்கிகள் இன்றும் பாதுகாப்பாக உள்ளன.
ஒரே ஒரு தனியார் துறை வங்கி, அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட முதலீட்டு வங்கிகளுடன் நிதி கொடுக்கல், வாங்கல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் அந்த வங்கிக்கு இழப்பு என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களது நிகர சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்த இழப்பு மிக மிகக் குறைவுதான். எனவே இதுகுறித்து முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இதுபோன்ற இழப்புகள் பற்றிய விவரங்களை அனைத்து வங்கிகளிடமிருந்தும் பாரத ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. அந்த விவரங்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தவுடன் நிலைமை துல்லியமாகத் தெரிய வரும்.
அதேநேரம், அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்தியப் பொருளாதாரத்துக்கு எந்த எந்த வகையில் பாதிப்பு?
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து கணிசமான அளவு தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளன. இந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 8 பில்லியன் டாலர் அளவு முதலீடுகளை எடுத்துள்ளன.
இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை இந்த அளவுக்குச் சரிந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்தியப் பங்குச் சந்தையில் இப்போதுகூட 150 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நிறுவன முதலீடுகள் உள்ளன. இந்நிலையில் உலக அளவில் நிகழும் ஒவ்வோர் அசைவும் இந்தியப் பங்குச் சந்தையைப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாவதாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பல ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. இதனால் அன்னிய வர்த்தகத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் இந்த இடைவெளி 49 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்திய ஏற்றுமதிகள் வெகுவாக அதிகரித்த பின்பும், அன்னிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்க முடியவில்லை. ரூபாயின் மதிப்பு குறைந்தால் இறக்குமதியின் விலை கூடும்.
ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இந்திய ஏற்றுமதியாளர்களாவது லாபம் அடைந்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இதற்குக் காரணங்கள் இரண்டு: ஒன்று, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் கணிசமான பகுதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை.
இரண்டு, இப்படி ரூபாயின் மதிப்பு சரியும் என்பது முன்னதாக எதிர்பார்க்கப்படவில்லை. மாறாக, ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். எனவே, எதிர்கால ஊக பேர வர்த்தக அடிப்படையில் தங்களுக்கு வரவேண்டிய டாலர்களை குறைந்த மதிப்பில் நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். எனவே ரூபாயின் மதிப்பு சரிவால் கிடைக்க வேண்டிய ஆதாயம் கிடைக்காமல் போய்விட்டது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துறையில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களது வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆவார்கள். இவர்களுக்கு இப்போது சரிவு ஏற்பட்டிருப்பதால், இவர்களிடம் இருந்து கொஞ்சகாலம் பெரிய அளவில் வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது.
இவர்களும் எதிர்கால ஊக பேர அடிப்படையில் தங்களுக்கு வர வேண்டிய டாலர் தொகையை குறைந்த மதிப்புக்கு நிர்ணயம் செய்து கொண்டார்கள். எனவே இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்காமல் போய்விட்டது. ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்று இவர்கள் தவறாக கணக்கிட்டதுதான் இதற்குக் காரணம்.
பொதுவாக, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது சோதனை காலம். முன்னதாக ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் இழப்பு. இப்போது, அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்காவில் மட்டுமல்லாமல், பல ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய அளவில் ஏற்றுமதி ஆர்டர்களை எதிர்பார்க்க இயலாது.
மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரத்துக்கு மோசமான பாதிப்பு இருக்காது என்று நம்பப்படுகிறது. காரணம், மூலதனக் கணக்கை முற்றிலும் மாற்றிக்கொள்ளும் முறை ( ஊன்ப்ப் இர்ய்ஸ்ங்ழ்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் ர்ச் இஹல்ண்ற்ஹப் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) இந்தியாவில் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. எனினும், உலகமய சூழலில் உலக அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி, இந்தியாவை ஓரளவேனும் பாதிக்கவே செய்யும். அதை எதிர் கொள்வதற்குத் தேவையான உத்திகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ள சி.ஆர்.ஆர். விகிதக் குறைப்பு இத்திசையில் ஒரு ஆரம்பம். இந்தியாவில் மந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில்தான், பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 9 சதவிகிதத்தில் இருந்து 8.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதன் பயனாக, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதி ஆதாரம் ரூ.20,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும். இதன் பயனாக வங்கிகள் அத்தியாவசியக் கடன் வழங்குவது அதிகரிக்கும். சிறு தொழில் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர்,
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
நன்றி : தினமணி

மாறும் உலகில் மாறத்தான் வேண்டும்

இப்படியாகப் பேசினால் கைது செய்வார்கள் என்பது மதிமுக தலைவர் வைகோவுக்கு தெரியாத விஷயம் அல்ல. ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு இதெல்லாம் தெரிந்தவைதான்.
ஆகவேதான் பேசினார்.
அதற்கான காரணங்கள் இரண்டு.
முதலாவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசை எதிர்த்த அரசியல் தலைவர் என்ற புகழ் தனக்கே இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கு போய்விடக்கூடாது
இரண்டாவதாக, தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் தந்தாலும், தமிழ்நாட்டு மக்களிடையே 1980களில் நிலவிய உணர்ச்சிக் கொந்தளிப்பு காணப்படவில்லை.
அந்த கொந்தளிப்பை ஏற்படுத்தத்தான் தனித்தமிழ்நாடு பேச்சு, திரைத்துறை பேரணி, ரயில்எரிப்பு, ராஜீவ் சிலை உடைப்பு எல்லாமும். ஆனால் இவை தமிழக மக்களிடம் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பதிலாக, எதிர்நிலை கருத்தையே உண்டாக்குகின்றன.
1980களில் இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. ஆதரவு திரண்டது. நிதி திரண்டது. அவர்கள் சார்பில் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சிகளில் புத்தகமும் கையேடும் வாங்காத தமிழரே இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்காக மருந்துகளும், துணிகளும் மூட்டைமூட்டையாக எல்லா ஊர்களிலும் கொடுத்தார்கள்.
அன்றைய தினம் இலங்கைத் தமிழனை தமிழகத் தமிழன் பிரித்துப் பார்க்கவில்லை. பிரச்னையை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக காயமடைந்த, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு தமிழக கல்லூரி மாணவர்கள்தான் தோழர்களாக நின்றனர். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடைபெற்ற ஊர்வலங்களில் பங்குகொண்டோர் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழர்கள்.
இலங்கை ராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்து தாக்குதல்களும் புறநானூற்று வீரமாகக் கருதப்பட்டன.
திரைப்படத்தில், ஒரு வில்லனை வீழ்த்த ஓர் அப்பாவி கதாநாயகன் தானும் துப்பாக்கியைக் கையில் எடுத்து, வில்லனை கதிகலங்கச் செய்கிறபோது ரசிகர்களுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சிக்கு ஒப்பாக, இலங்கை ராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்து தாக்குதல்களும் ஆனந்தத்தைத் தந்தன. புலிகளின் மரணங்கள் கண்ணீரை வரவழைத்தன.
ஆனால் தமிழக மக்கள் அனைவரும் நெருப்பைத் தொட்டவர்கள் போல சுருண்டுபோன சம்பவமாக அமைந்தது ராஜீவ் காந்தி படுகொலை. அந்தக் கொலையை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், தமிழ் மண்ணில், இலங்கைத் தமிழ்ப் போராளிகளால் நடத்தப்பட்ட இந்த மனிதவெடிகுண்டு தாக்குதல், இதுநாள்வரை ஆதரித்த தமிழர்களை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ராஜீவ் கொலையை சிலர் மட்டும் நியாயப்படுத்திய போதிலும் பொதுவான தமிழர்களால் அந்த குற்றவுணர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை.
அதனால்தான் இன்று உணர்வு பூர்வமான கொந்தளிப்பு தமிழகத்தில் உருவாகவில்லை. அரசியல் கட்சியினரும், ஊடகங்களும் பேசிய போதிலும், இது ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் பேசுகிற, வேதனைப்படுகிற விஷயமாக மாறவில்லை.
இதற்கு ஓர் உதாரணம் இலங்கை அரசின் தாக்குதலை நிறுத்தக் கோரி மத்திய அரசுக்கு தந்தி கொடுக்கும்படி தமிழக முதல்வர் கருணாநிதி சொன்னார். எத்தனை தந்திகள் கொடுக்கப்பட்டன?.
இலங்கைத் தமிழர்வேறு விடுதலைப் புலிகள் வேறு என்று அரசியல் கட்சிகள் சொன்னாலும், அந்த சொல் தமிழக மக்களிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த உண்மை புரிந்திருந்தும் புரியாததுபோல தமிழக அரசியல் தலைவர்கள் நடித்துக் கொண்டிருப்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான விஷயமாக இதை மாற்றுகிறது.
இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை நிர்பந்திக்கும் தமிழக அரசியல் கட்சிகள், ஆயுதத்தைக் கைவிட்டு, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று விடுதலைப் புலிகளிடம் வலியுறுத்த தயங்குகிறார்கள். ஒரு சகோதர தமிழன் உலகின் 30 நாடுகளில் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவது பெருமையாக இருக்க முடியுமா?
விடுதலைப் புலிகளுக்குத் தேவையான "அனைத்தும்' தமிழக கடல்எல்லை வழியாகத்தான் செல்கின்றன என்பது தெரிந்திருந்தும், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இந்திய அரசு மௌனமாக இருப்பதும்கூட இலங்கைத் தமிழர் மீதான அக்கறைதான் என்பதை ஏன் தமிழக அரசியல் கட்சிகள் நினைத்துப்பார்க்கவில்லை?.
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடுதலைப் புலிகள் ஆயுதத்தை ஏந்தி நடத்திய கெரில்லா யுத்தம் தமிழரின் வீரமாக, அறப்போராகப் பார்க்கப்பட்டது. அவர்களைப் போராளிகள் என்றுதான் அழைத்தோம்.
ஆனால், கால்நூற்றாண்டில் உலகத்தின் போக்கு மாறிவிட்டது. "உள்நாட்டுப் போர்' என்ற சொல்லாடல் மறைந்து, ஆயுதம் எடுக்கும் எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் பயங்கரவாதி என்பதுதான் இன்றைய இன்றைய உலகத்தின் பார்வை. ஆகவே அரசியல் வழியில் தீர்வு காண்பது மட்டுமே இலங்கை தமிழர் பிரச்னைக்கு சரியானதாக வழிமுறையாக இருக்கும்.
இன்று இந்தியா தலையிட்டு இலங்கை அரசைப் போர்நிறுத்தம் செய்ய வைத்தாலும் எத்தனை நாளைக்கு நீடிக்கும்? கால நிபந்தனை உண்டா? மீண்டும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கியதும், மீண்டும் தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் போராட்டத்தை கையில் எடுப்பார்களா? இன்னும் எத்தனை காலத்துக்கு இது தொடரும்?
விடுதலைப் புலிகள் ஒரு மாபெரும் சக்தி என்பதை இலங்கை அரசுக்கும் உலகுக்கும் நிரூபித்தாகிவிட்டது. இனியும் ஆயுதம் தேவைதானா?
கொடுமையை எதிர்க்க, ஒரு மாணிக்கம் மாணிக்"பாட்சா'வாக மாறி வில்லனுக்குத் தான் யார் என்பதைக் காட்டிய பிறகு, மீண்டும் பழைய மாணிக்கமாக மாற வேண்டும். மாறினால்தான் சுபம்.
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

Monday, October 27, 2008

சாது மிரண்டால்...

குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பினால் இன்றைய சூழலில் இது சாத்தியமற்றது என்றுதான் எல்லோரும் பதிலளிப்பார்கள். ஒவ்வொரு நாளும் பத்திரிகையைப் புரட்டினாலோ, தொலைக்காட்சி அலைவரிசைகளை அலசினாலோ குற்றம் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் பிரதானமாகத் தெரிகின்றன.
குற்ற நிகழ்வுகளுக்குப் பல காரணங்கள் கூறலாம். சமுதாய ஏற்றத்தாழ்வுகள், அரசின் திட்டங்களின் பயன்கள் எல்லோரையும் சென்றடையாததால் ஏற்படும் ஏமாற்றங்களின் வெளிப்பாடு, தனிப்பட்ட நபர்களின் முன்விரோதங்கள், நுகர்வணிகமயமாக்கத்தின் தாக்கம், நுகர் பொருள்களை அடைவதில் பேராசை, திடீர் பணக்காரனாகிவிடலாம் என்ற பகற்கனவின் தூண்டலில் நிகழும் மோசடிகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். குற்றங்கள் களையப்பட வேண்டும், குற்றங்கள் நடவாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
1861ல் அமலுக்கு வந்த இந்திய காவல் சட்டத்தில், குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, தகவல்கள் சேகரிப்பது என்பவை காவல்துறைக்கு அடிப்படைப் பணிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. சமுதாயம் சீராக இயங்கிட நடைமுறையில் உள்ள சட்டங்களைத் தனக்குக் கொடுக்கப்பட்ட வரம்புக்குள் அமல்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. காவல்துறை தனது பணிகளைத் திறம்படச் செய்திட மக்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். காவல்துறை தனிமையில் செயல்பட முடியாது. ஆங்கிலேயர் ஆட்சியில் காவல்துறையின் நிலைப்பாடு வேறு; சுதந்திர இந்தியாவில் அதன் அணுகுமுறை மக்கள் நலன் காப்பது ஒன்றுதான்.
சுமுகமான, அமைதியான சூழ்நிலை சமுதாயத்தில் நிலவிட காவல்துறை சட்டம் ஒழுங்கினை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எடுத்துக்கொண்ட திட்டங்களைச் செம்மையாக நிறைவேற்றிட முடியும். காவல்துறை தனது பணிகளில் மக்களின் ஒத்துழைப்பைப் பெற சமுதாயக் காவல்பணி என்ற சித்தாந்தம் உருவாக்கப்பட்டது.
உலகெங்கிலும் எந்த அளவு சமுதாயம் முன்னேறியுள்ளதோ அந்த அளவுக்குக் குற்றங்களின் பரிமாணங்களும் வளர்ந்துள்ளன. சட்ட மீறல் ஒரு படி மேலே சட்டம் கீழே என்ற நிலைதான் காணப்படுகிறது. சமீபத்தில் பெங்களூர், ஆமதாபாத் மற்றும் தில்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் எவ்வளவு எளிதாக தீவிரவாதிகள் தங்களது திட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என்பது பயங்கர உண்மையாகக் காட்சியளித்தாலும் அதை எவ்வாறு எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூ மெக்சிகோ நகரில் சமுதாய நல விரும்பிகள், சட்ட அமலாக்கப் பிரிவுகள், ஊடகங்கள் இவைகளின் கூட்டு முயற்சியோடு "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (குற்றங்கள் தடுத்தல்) என்ற அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் வளரும் குற்றங்களை கூட்டு முயற்சியோடு எதிர்கொள்வது. உரிய நேரத்தில் தகவல் கிடைத்தால்தான் குற்றங்களைத் தடுக்க முடியும். தகவல் சேகரிப்பது, தகவல் கொடுப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது என்பவை முக்கியக் குறிக்கோள்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கு ஏதுவாகக் கட்டணமில்லா தொலைபேசி, மக்கள் தொடர்பு கொள்வதற்கு க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பில் வைக்கப்பட்டது. குற்ற நிகழ்வுகள் பற்றி நேரில் பார்த்தவர்கள், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிந்திருந்தாலும் காவல்துறையிடம் நேரில் சென்று சொன்னால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் காவல்துறை விசாரணை, நீதிமன்றம், வழக்கு என்று அலைய வேண்டும் என்பதால் "நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி விடுகின்றனர் என்பது உண்மை நிலை. ஆனால் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பில் தகவல் மட்டும் கொடுத்தால் போதும். தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் தெரிவிக்க வேண்டியதில்லை. அவர்களது அடையாளம் காக்கப்படும் என்பது முக்கியமான அம்சம். மேலும் இந்த தொலைபேசித் தகவல்களைப் பெறுபவர்கள் காவல்துறை அல்லாத பொதுப் பணியாளர்கள். இந்தப் பணியாளர்களுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுப்பவரிடம் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு தகவல் பெற வேண்டும் என்று சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாகத் தகவல் கொடுப்பவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது. பொறுமையாகவும், கனிவாகவும் பேச வேண்டும். தகவல் கொடுப்பவர் விரும்பினால் மட்டுமே தங்களைப் பற்றிய அடையாளம் கொடுக்கலாம். அந்த அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும்.
தகவல் சேகரிக்கும் கூட்டு முயற்சி தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று 1200க்கும் மேற்பட்ட "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்புகள் உலகெங்கிலும் உள்ளன. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பெண்களைக் கடத்துதல், மோசடிகள் போன்ற குற்றங்களில் முக்கியமான தகவல்கள் சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்குக் கிடைக்கப் பெற்று குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் குற்றத் தடுப்பு அமைப்புகள் ஓய்வு பெற்ற நீதித்துறை, காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், சமுதாயத்தில் நல்லெண்ணம் படைத்தவர்கள் கொண்ட குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இந்த நிர்வாக அமைப்பு அந்த இடங்களின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் தகவல் சேகரிக்கும் முறையில் மாற்றமில்லை.
உதாரணமாக நெதர்லாந்து நாட்டில் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' தனியார் பொதுத்துறை கூட்டமைப்பாகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் மூலம் நிர்வாகச் செலவிற்கான தேவையான நிதி திரட்டப்படுகிறது. 2002ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2007 முடிய 50,000க்கும் மேற்பட்ட உபயோகமான தகவல்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 6,000 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 4,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு மையம் காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 தொலைபேசி அழைப்புகள் பெறப்படுகின்றன. பெறப்படும் தகவல்களில் காவல்துறைக்கு உபயோகமானவை 57 சதவீதம், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை 16 சதவீதம், மின் திருட்டு சம்பந்தப்பட்டவை 7 சதவீதம் என்பது இந்த அமைப்புக்குக் கிடைத்த கணிசமான வெற்றி.
குற்றத்தடுப்பு நடைமுறைகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாகச் செயல்படுகின்றன. உலக அளவில் குற்றத்தடுப்பு கூட்டுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்த அமைப்பிற்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவிலும் குற்றத்தடுப்பு முறை அமைக்க வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் தடய அறிவியல் துறையில் ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற காந்தி காஜா இதை நிறுவுவதற்கு பெருமுயற்சி எடுத்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் "க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' பிரிவு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யாவால் தொடங்கப்பட்டது.
உலகில் முக்கியமான 20 நாடுகளுக்கு மேலாக உள்ள க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பின் வெற்றிக்கு முக்கியமான காரணம்: 1) சமுதாயத்தில் அமைதி காப்பதற்கு பொதுமக்களின் பங்கு பற்றி பெருகி வரும் விழிப்புணர்ச்சி 2) லாப நோக்கமின்றி தனியார், பொது மக்களின் கூட்டமைப்பு 3) அரசியல், அரசாங்கத் தலையீட்டிற்கு அப்பாற்பட்டு பொது நலம் ஒன்றையே குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தல். மேலை நாடுகளில் இத்தகைய தகவல் பரிவர்த்தனையால் கடந்த 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள போதைப் பொருள்களும், திருட்டு சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தகவல் கொடுப்பவர்கள் விரும்பினால், அவர்கள் கொடுக்கும் தகவல் உபயோகமான தகவலாகும்பட்சத்தில் வெகுமதியும் கொடுக்கப்படுகிறது.
பயமின்றி குற்ற நிகழ்வுகள் பற்றி தகவல் கொடுக்க மக்களுக்கு உதவும் மையமாக அமைந்துள்ளது. சில நாடுகளில் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் நிர்வாகக் குழுவில் அரசு பிரதிநிதிகள் இருந்தாலும் அவர்கள் அன்றாட நடைமுறையில் தலையிடுவதில்லை. சொல்லப்போனால் பல நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறது. பெறப்படும் தகவல்கள் காவல்துறை புலனாய்விற்குப் பெரிதும் பக்கபலமாக இருப்பதால் சட்ட அமலாக்கத் துறைகளும் தங்களது பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்குகின்றன.
சாதாரண வழக்குகள் தவிர ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள், மோசடி முறைகள், சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை இந்த அமைப்பு மூலம் பெற முடியும். குற்றத்தடுப்பு முறை வேரூன்றி வலுவு பெற்றால் தீவிரவாத இயக்கங்களின் நாட்டு விரோத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும்.
தமிழகத்தில் இத்தகைய குற்றத் தடுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும். பொது நலம் காப்பதில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு நிறுவுவதற்கு சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளும் ஒத்துழைப்பு நல்கும் என்று உறுதியாக நம்பலாம்.
இந்தியர்களுக்கு அதிலும் தமிழர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம். நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவற்றை பெறுவதற்குத் தயங்குகிறோம். சிபாரிசு இருந்தால் தான் நடக்கும் என்று எண்ணுகிறோம். கடைகளில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கும்பொழுது அதன் தரத்தைப் பற்றி நாம் பார்ப்பதில்லை. நுகர்வோர் விழிப்புணர்ச்சி மந்தநிலையில் உள்ளது. உரிமைகள் பாதிக்கப்பட்டால் நாம் கேள்வி கேட்பதில்லை. சுயமரியாதை பறிபோனால் கண்டுகொள்வதில்லை. அரசு அலுவலர்கள் கடமை தவறினால் முறையிடுவதில்லை. இந்த சகிப்புத் தன்மைதான் குற்ற நிகழ்வுகளில் காண முடிகிறது. நம்மைப் பாதிக்காதவரை நாம் ஒதுங்கியிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். போர் பயங்கர விளைவுகளை உள்ளடக்கியதால் ராணுவத் தளபதிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது'' என்பது முதுமொழி. அதேபோல் உள்நாட்டு அமைதி காப்பது காவல்துறையால் மட்டும் இயலாது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். திரண்டு பலப்படுத்துவதற்குப் பதிலாக மருண்டு விடுகிறோம். சமுதாயக் குற்றங்களுக்கெதிராக வெகுண்டெழுவதில்லை. சுருண்டு விடுகிறோம். சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைந்த எதிர்கொளல்தான் உள்நாட்டு அமைதிக்கு அடித்தளம். அதற்கு க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பு போர் வாளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

திவாலாகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தானை இப்போது இரண்டு பிரச்னைகள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று தீவிரவாதம்; மற்றொன்று பொருளாதார நெருக்கடி. இந்த இரண்டுமே தற்போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் பிரச்னைதான். ஆனால், பாகிஸ்தானில் இவற்றின் வீரியம் அதிகம்.
பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு 400 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைந்து விட்டது. இன்னும் 6 வார இறக்குமதிக்கே இது போதாது. கடன்பெறத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கும் அந்த நாடு, சர்வதேச கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் 300 கோடி டாலர்கள் கிடைக்காவிட்டால் நெருக்கடி முற்றிப்போகும்.
கடந்த சில மாதங்களாகவே பிரச்னை இருந்து வந்தாலும், அதை யாரும் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய அறிக்கை ஒன்று பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை, "பணம் இல்லை, எரிசக்தி இல்லை, அரசும் இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை திட்டமிட்டே ஊடகங்களுக்கும் கசியவிடப்பட்டது. இதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானின் உண்மையான நிதி நிலைமை வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவி செய்து வருவதால், தேவையான பண உதவியை அமெரிக்கா செய்யும் என பாகிஸ்தான் நம்பி வந்தது. அதனால்தான், வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டது. நாட்டின் எல்லைப் பகுதியில் அமெரிக்க விமானங்கள் குண்டுமழை பொழிந்தபோதுகூட பெரிய அளவில் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
ஆனால், நிதிப் பிரச்னை தீவிரமாகி பணம் தேவை என்கிறபோது அமெரிக்கா கையை விரித்துவிட்டது. யாராவது நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்பது போன்ற பரிதாப நிலைமையில் இருக்கும் அமெரிக்காவிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். பாகிஸ்தான் வந்த அந்நாட்டு அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் அதை பாகிஸ்தான் பிரதமரிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டார்.
அமெரிக்காவிடம் இல்லாவிட்டாலும் சீனாவிடம் பணத்தைப் பெற்றுவிடலாம் என்றுதான் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் நினைத்திருந்தார்கள். அதற்காகத்தான் அதிபர் ஜர்தாரி சீனாவுக்குச் சென்றார். அங்கு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பல திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனா சம்மதித்து. இரண்டு அணுமின் திட்டங்களை அமைப்பதற்கு உதவி செய்யவும் ஒப்புக் கொண்டது. ஆனால், பணம் தர முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டது. கடன் கேட்டு ஒவ்வொரு நாட்டுக்காகச் செல்லாமல், முறையான பொருளாதாரத் திட்டங்களுடன் சர்வதேச நாடுகளை அணுகுமாறு அறிவுரையும் கூறியது. ஜர்தாரிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்.
உண்மையில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமல்ல, உலகின் எந்த நாடும் பாகிஸ்தானை நம்பத் தயாராக இல்லை. இதற்குக் காரணம் "கடந்தகால' அனுபவங்கள்தான். இது தவிர, உலக நாடுகள் அனைத்தும் தங்களது நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பாகிஸ்தானுக்கு உதவுவதில் விருப்பம் காட்டவில்லை.
சீனாவும் கைவிட்ட பின்னர்தான் பாகிஸ்தான் எவ்வளவு பெரிய சிக்கலான நிலையில் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். "அனைத்து வழிகளும்' அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், சர்வதேச செலாவணி நிதியத்தை பாகிஸ்தான் நாடியிருக்கிறது. ஆனால், கடன் தருவதற்கு அந்த அமைப்பு விதிக்கும் நிபந்தனைகள் மிகக் கடுமையானவை. எதற்கும் மானியம் தரக்கூடாது என்பது அவற்றில் முக்கியமானது. இதுபோன்ற நிபந்தனைகளால் ஏழைகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமாகும். இந்த முடிவுக்குப் போக வேண்டாம் என நவாஸ் ஷரீபும் எச்சரித்திருக்கிறார். எனினும், பணம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், எத்தகைய நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளவதென பாகிஸ்தான் முடிவு செய்திருக்கிறது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்ததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு. முஷாரப் காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்துக்கும் மானியம் அளித்தது அவற்றுள் ஒன்று. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்தபோதும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. இரண்டாவது, பேநசீர் படுகொலையால் எழுந்த அரசியல் ஸ்திரமற்ற சூழல். இதனால், ரூபாயின் மதிப்பு சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, பணவீக்கம் உயர்வு என பொருளாதாரம் பலவீனமாகிவிட்டது.
இந்த நெருக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற சில நண்பர்கள் முயற்சித்து வருவதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். உண்மையில், அந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டியது உலகத்தின் கடமை. இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டுக்குள்ளே அடங்கிவிடக் கூடியதல்ல. அது, உலகத்தையே பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. ஏனெனில் அங்கு அணுகுண்டும் இருக்கிறது, கூடவே அல்காய்தாவும் இருக்கிறது.
எம். மணிகண்டன்
நன்றி : தினமணி

Saturday, October 25, 2008

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை அதாவது ஹிந்துத் தன்மை அதாவது ஹிந்துத்துவம்.
இதன் சிறப்புகள் பல; ஆண் பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.
ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.
""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.
இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.
ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.
எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.
இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.
எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.
ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?
அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.
நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.
""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.
பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!
எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!
இந்த நாட்டின் தனித்தன்மைபண்பாடுமண்வாசனைஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.
இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.
நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.
மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.
ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.
கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.
திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.
அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.
மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.
படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.
மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?
எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இல. கணேசன்
நன்றி : தினமணி

கேட்டால் கிடைப்பதில்லை!

தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலரும் இந்த மாதத்தை நியாயவிலைக் கடைகள் மூலம் சமாளிக்கலாம் என்ற எண்ணம் பொய்யாகி வருகிறது.
ரூ. 50க்கு 10 மளிகைப் பொருள் திட்டத்தை தமிழக அரசு அக்டோபர் 2ம் தேதி தொடங்கி வைத்தது. ஆனால் இத்திட்டத்தின் பயன் சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. பலருக்குக் கிடைக்கவில்லை.
இந்த 10 மளிகைப் பொருள்களில் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் மளிகைப் பொருள், தற்போது உணவுப்பொருள் சந்தையில் முன்னிலையில் உள்ள நிறுவனத்தின் பொருள் என்பதால், எல்லா குடும்ப அட்டைதாரர்களும் ரூ.50 க்கு 10 மளிகைப் பொருள்களை வாங்கச் செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் இருப்பு இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
ஒவ்வொரு கடைக்கும் முதல்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பொருள்கள் கொடுத்ததாகவும், வரவேற்பு அதிகரித்தால் அதற்கேற்ப விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள். பத்து மளிகைப் பொருள்களையும் ஒரே பாக்கெட்டில் போடுவதற்கு ஆள்பற்றாக்குறையால் தாமதம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், நியாயவிலைக் கடைகளில் மிகவும் வேண்டியவர்களுக்கு மட்டும் தடையின்றி வழங்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்துக்குத் தேவையான அனைத்து மளிகைப் பொருள்களும் மாவட்டத் தலைநகரில் வைக்கப்பட்டு பிரித்து அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நடைமுறைதான் ஊழலின் ஊற்றுக்கண். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இது புரியாததோ தெரியாததோ அல்ல.
இதேபோன்றுதான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்திலும் அரசின் ரகசியம் காக்கும் முறைகளால் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது.
தரமான அரிசியைத்தான் வழங்குகிறோம் என்று தமிழக அரசு சொன்னபோதிலும் பல நியாயவிலைக் கடைகளில் தரம் குறைந்த அரிசிதான் கிடைக்கிறது. மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
நியாயவிலைக் கடை ஊழியர்கள் தரும் விளக்கம் வேறுவிதமானது: அரசு நல்ல அரிசியைக் குறைந்த அளவிலும், தரம் குறைந்த அரிசியை அதிக அளவிலும் வழங்குகிறது. அவற்றை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அதே விகிதாசாரத்தில் அனுப்ப முடிவதில்லை. இதனால் நல்ல அரிசி முழுதும் பிரச்னை ஏற்படாமல் இருக்க நகர்ப்புறங்களுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது. தரம் குறைவான அரிசி புறநகர்ப் பகுதிகளுக்கு அதிகம் திருப்பி விடப்படுகிறது.
இதில் எது உண்மை? அரசு கொடுக்கும் நல்ல பொருள் குறைவாக விநியோகிக்கப்படுகிறதா? அல்லது நல்ல பொருள் நியாயவிலைக் கடைக்கே வராமல் திசை திருப்பப்படுகிறதா? அல்லது நியாயவிலைக் கடை ஊழியர்கள் மக்களுக்குத் தராமல் இருக்கிறார்களா? இத்தகைய ஊழல் நடப்பதற்கு காரணமே தமிழக அரசு எல்லாவற்றையும் ரகசியமாகச் செய்ய வேண்டும் என்ற மனப்போக்குதான்.
வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.30க்கு விற்கப்படும்போது, தகுதியுடைய அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசியை எப்போதும் முதல்தரமாக வழங்குவது நடைமுறைக்குச் சாத்தியமே இல்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று.
அனைத்து அட்டைகளுக்கும் முதல் 5 கிலோ தரமான அரிசியாகவும், அடுத்த 10 கிலோ அரிசி இரண்டாம் தரத்திலான அரிசியாகவும், அதன் பின்னர் வண்டுகள் நெளிவதாகக் குறைகூறும் மூன்றாம் தர அரிசி 5 கிலோ என்றும் அரசே ஒரு வரையறையை வகுத்துவிட்டால், தமிழகத்தில் அனைவருக்கும் தரமான அரிசி 5 கிலோவாவது கிடைக்கும். அதற்குமேல், விருப்பப்பட்டவர்கள் தரம் குறைவான அரிசியை வாங்கிக்கொள்வர். ஊழலுக்கும் ஒரு தடை உண்டாகும்.
இதேபோன்றுதான் பாமாயிலும். அனைத்து அட்டைகளுக்கும் பாமாயில் கொடுக்கப்படுவதில்லை. குறைவாக வந்துள்ளது, ஒரு கார்டுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்று நியாயவிலைக்கடை ஊழியர்களே சட்டம் வகுக்கிறார்கள்.
எல்லாமும் எல்லாருக்கும் கிடையாது என்றால், யாருக்காக இந்தத் திட்டங்கள்?
நன்றி : தினமணி

Friday, October 24, 2008

தயாராகிறார் பவார்!

தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் சொன்னார். அமெரிக்காவும் அதன் கொள்கைகளும் முஸ்லிம்களை நசுக்குவதாக உள்ளதாகவும் அதனால் அவர்கள் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இராக் மீதான தாக்குதலையும் சுட்டிக் காட்டினார். இரண்டாவதாக அவர் குறிப்பிட்டது பாபர் மசூதி இடிப்பு. அதற்கு முன்பு பயங்கரவாத நடவடிக்கைகள் இருந்தன என்றாலும் இப்போது நடப்பது போன்று குண்டு வெடிப்புகளெல்லாம் நடந்தனவா என்று அவர் கேட்டார்.
சில நாள்களுக்கு முன்பு நடந்த வேறொரு நிகழ்ச்சியில், முஸ்லிம்களுக்கு எதிரான சூழல் உருவாகி வருவது குறித்து பவார் கவலை வெளியிட்டார். விசாரணைக்காக முஸ்லிம்களை போலீஸார் அழைத்துச் செல்லும்போது அவர்களது முகத்தைக் கருப்புத் துணியால் மூடும் வழக்கத்தைச் சாடிய அவர், ஹிந்துகளுக்கு இதுபோல நடக்கிறதா என ஆதங்கப்பட்டார். மீடியாவையும் அவர் விட்டுவைக்கவில்லை. பயங்கரவாதச் செயல்களுக்கு "மூளையாகச் செயல்பட்டவர்' என்று அவசர, அவசரமாகச் செய்தி வெளியிடுவதாகக் குறை கூறினார். ஹிந்துக்களை இப்படிச் சித்திரித்ததுண்டா எனவும் கேட்டார்.
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள மேரியோட் ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்தபோதும் சரத் பவார் இந்த ரீதியில்தான் கருத்தை வெளியிட்டார். பாகிஸ்தான் அரசைக் கேட்காமலேயே, அந்நாட்டு எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசினால், அந்நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்து எழாமல் என்ன செய்வார்கள்? எந்த நாட்டுக் குடிமகனும் இதைப் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்றார். அத்துடன் விடவில்லை, இந்த மாதிரியானதொரு சூழல்தான் பகத் சிங் உருவாகக் காரணமாக இருந்ததாக ஒரே போடாகப் போட்டார்.
சிறுபான்மை சமூகத்தினர் மீது சரத் பவாருக்கு வந்திருக்கும் இந்தத் திடீர் அக்கறையை அரசியல் நோக்கர்கள் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். பிரதமர் பதவியை அவர் குறிவைத்திருக்கிறாராம். மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கணக்குகள், பிராந்திய தலைவர் ஒருவர் தலைமையிலான அரசு அமைவதற்கான சூழலை ஏற்படுத்தினால், இது சாத்தியம்தான். அதற்கு மகாராஷ்டிரத்தில் கொஞ்சம் அதிக இடங்களை அவர் கைப்பற்றியாக வேண்டும். அதற்குத்தான் இந்தத் "திடீர் அக்கறை'.
உத்தரப்பிரதேசத்தில் உயர்வகுப்பினர், தலித்துகள், முஸ்லிம்கள் அடங்கிய வாக்கு வங்கியை காங்கிரஸிடமிருந்து மாயாவதி வளைத்தது போல, மகாராஷ்டிரத்தில் மராத்தியர்கள், முஸ்லிம்கள், மஹர்கள் ஆகியோரின் வாக்குகளை கைப்பற்ற பவார் திட்டமிட்டிருக்கிறார்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக பவார் பேசி வருவதால் ஹிந்துக்கள் ஓரணியில் திரளுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் அது சிவசேனைக்கு சாதகமாகிவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
தனது இலக்கை நோக்கிய பயணத்தில் பவார் செய்ய வேண்டிய முதல் பணி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸிடம் பேரம் பேசி அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுதான். அவரது வழக்கமான 50:50 கோரிக்கை நிறைவேறினால், மகாராஷ்டிரத்தில் உள்ள 48 தொகுதிகளில் 24 தொகுதிகள் கிடைக்கும். கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்த அவருக்கு இது போதும்.
பவார் முன் இருக்கும் இரண்டாவது சவால், தேர்தலில் வெற்றி பெறுவது. தற்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதுடன், கூடுதலாக நான்கைந்து இடங்களைப் பெற்றால்தான் பிரதமர் கனவு பலிக்கும்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மும்பையில் நடந்த கலவரங்களில் தொடர்புடையவர் என்ற கோணத்தில்தான் சரத்பவாரை முஸ்லிம் சமூகத்தினர் இதுவரை பார்த்து வந்தனர். ஆனால் தற்போது சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. தங்களுக்கு ஆதரவாகப் பேசும் ஒரு தலைவராகவே பவாரை முஸ்லிம்கள் தற்போது பார்க்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு பவார் மீது சந்தேகம்; பாஜக மீது வெறுப்பு. இதனால், அவர்கள் தங்களை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என காங்கிரஸ் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், பெரிய கட்சிகளை ஆதரித்து என்ன கண்டோம் என முஸ்லிம்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவியில் இருந்த பல முஸ்லிம்கள் அண்மையில் பதவி விலகியதே இதற்கு சாட்சி.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் சுயேச்சைகளை மறைமுகமாக ஆதரிக்க பவார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மராத்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இது காங்கிரஸைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. இது தவிர, மகாராஷ்டிரத்துக்கு வெளியிலும் அவருக்கு சில தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். பப்பு யாதவ், முக்தர் அன்சாரி போன்ற சுயேச்சைகள் வெற்றி பெற்றால் அவர்கள் பவாரை ஆதரிப்பார்கள். இந்தக் கணக்கில் 22 முதல் 25 பேரின் ஆதரவு பவாருக்குக் கிடைக்கும். இப்படியாக, வரும் மக்களவைத் தேர்தலில் மற்ற எந்த பிராந்திய தலைவரைக் காட்டிலும் அதிக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவராக பவார் இருப்பார்.
உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் நிலையிலும், மற்ற தலைவர்களே வெட்கப்படும்படியாக, மகாராஷ்டிரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சளைக்காமல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் பவார். தொண்டர்களோடு தொண்டராகப் பழகுவது, குக்கிராமத்தில் உள்ளவர்களைக்கூட பெயர் சொல்லி அழைப்பது என அவர் ஜனரஞ்சகமானவர். மகாராஷ்டிரத்தின் அனைத்துப் பகுதிகளையும் அவரை விட வேறு யாரும் துல்லியமாக அறிந்து வைத்திருக்க முடியாது. இது அவருடைய பலம்.
தற்போதிருக்கும் அரசியல் சூழலே தொடருமானால், மத்தியில் அடுத்து அமையவிருக்கும் அரசு பிராந்திய கட்சிகள் இணைந்து அமைப்பதாக இருக்கும் என பலரும் நம்புகிறார்கள். அப்படியொரு அரசை பாஜக ஆதரிப்பதைவிட காங்கிரஸ் ஆதரிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
தேர்தலில் தோற்றாலும், அரசை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இருக்கும் வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்றுதான் காங்கிரஸ் நினைக்கும். அந்த நிலையில், அந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறதோ அவர்தான் பிரதமராக முடியும். அந்தத் தருணத்தை எதிர்பார்த்துத்தான் பவார் காத்திருக்கிறார். நிர்வாக அனுபவம், பணபலம், மக்கள் ஆதரவு, இடதுசாரிகளிடம் நற்பெயர் போன்ற கூடுதல் தகுதிகள் அப்போது அவருக்கு உதவும்.
சோனியா வெளிநாட்டவர் என்ற பிரச்னையைக் கிளப்பி அவர் பிரதமராவதற்கு முட்டுக்கட்டை போட்டவர் பவார். அதை இன்னும் சோனியா மறக்கவில்லை. அதனால், பவார் பிரதமராவதற்கு சோனியா காந்தி தாமாக முன்வந்து ஆதரவளிக்க மாட்டார். ஆனால், மாயாவதியா பவாரா என்ற நிலை ஏற்படும்போது பவாரைத்தான் பிரதமராக்குவார்.
நான்கு முறை மகாராஷ்டிரத்தின் முதல்வராக இருந்தவர், மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், தற்போது வேளாண் அமைச்சராக இருந்து வருபவர் என்பன போன்ற பல தகுதிகளைக் கொண்ட பவார், ராஜீவ் படுகொலைக்குப் பிறகு பிரதமர் வாய்ப்பை 4 முறை தவற விட்டிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் தேர்தலில் தோல்வியையே சந்தித்திராத அவருக்கு இப்போது வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் பவார் தீவிரமாக இருக்கிறார் என்பதையே அவரது பேச்சுகள் காட்டுகின்றன.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

நாகரிகத்தின் முதல் அடையாளம்!

கழிவுநீர்க் குழாய்களுக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் முறைக்குத் தாற்காலிகத் தடை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். "பாதம்' எனும் தன்னார்வ நிறுவனத்தை நடத்திவரும் பொதுநலச் சேவகர் ஏ. நாராயணனின் மனுவின் மீதான விசாரணையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, மனிதக் கழிவுகளை அகற்றுவதற்குத் துப்புரவுத் தொழிலாளிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று சட்டம் இருக்கும்நிலையில், இதுபோல அவ்வப்போது கழிவுநீர் சாக்கடைகள் அடைபடும்போது அதை அகற்ற உள்ளாட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளே இறங்கி அடைப்புகளை அகற்றுவது மட்டும் எந்தவிதத்தில் நியாயம் என்று நாராயணன் எழுப்பிய கேள்விக்கு நல்லதொரு விடை கிடைத்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 17 மற்றும் 23க்கு எதிரானது இதுபோன்று மனிதர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றுவது மற்றும் சாக்கடைகளை உள்ளே இறங்கிச் சுத்தப்படுத்துவது போன்ற செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டு, இதுபோன்ற சுயமரியாதைக் குறைவான செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிட சகோதரர்களின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கப்பட்டு வரும் வேளையில், சாக்கடைக் குழாய்களைச் சுத்தப்படுத்துவதற்கு இன்றும் துப்புரவுத் தொழிலாளிகளைப் பயன்படுத்துவது தொடர்கிறது என்பதுதான் நிஜம்.
மேலைநாடுகளில், சாலைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதைவிட அதிக முக்கியத்துவம் கழிவுநீர்க் குழாய்களுக்கும், வெள்ள வடிகால் குழாய்களுக்கும் தரப்படுகிறது. அடைமழை பெய்யும் மும்பை நகரத்தில், நமது சென்னையைப்போல, ஆங்காங்கே கழிவுநீர்க் குழாய்கள் அடைபடுவதில்லை. அதற்குக் காரணம், தொலைநோக்குப் பார்வையுடனும், முன்யோசனையுடனும் பெருகிவரும் மக்கள்தொகையை மனதில் கொண்டு கழிவு மற்றும் வெள்ள வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதுதான். அதுமட்டுமல்ல, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் மும்பை மாநகராட்சி சுறுசுறுப்பாக இயங்கி, அந்த மாநகரத்தின் அத்தனை கழிவுநீர்க் குழாய்களிலும் ராட்சத இயந்திரங்கள் மூலம் அடைப்பை அகற்றி விடுகிறார்கள்.
நமது தமிழகத்தில், சாக்கடைகளும், கழிவுநீர்க் குழாய்களும் தொடர்ந்து முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, பெருகிவரும் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு அடுத்த 50 ஆண்டுகளின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படவும் இல்லை. அது ஒருபுறம் இருக்க, கழிவுநீர் ஓடைகளைத் துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் நலன் பேணப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது.
இதுபோன்ற சாக்கடைக் குழாயில் நுழைந்து அடைப்புகளை சரிசெய்யவும், மலக்கிடங்குகளின் அடைப்பை அகற்றவும் முன்வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளோ, அவசரகால மருத்துவ உதவியோ தரப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது. மலக்கிடங்குகளிலிருந்தும், கழிவுநீர்க் குழாய்களிலிருந்தும் வெளிவரும் விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்கள் பலர். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பும் கிடையாது, மரணமடைந்தால் போதிய நஷ்ட ஈடும் கிடையாது என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.
மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுவிட்டதால், இந்த வேலைக்கு தாற்காலிக ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதால் நஷ்ட ஈடு அவர்களுக்கு மறுக்கப்பட்டு விடுகிறது. சமீபகாலமாக, இந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது என்றாலும் அதனால் எந்தப் பயனும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
சகிக்க முடியாத துர்நாற்றமும், விஷ வாயுவும் உள்ள குழாய்களில் நுழைய இந்தத் தொழிலாளர்கள் மது அருந்துவது வழக்கம். அதுவும் இல்லையென்றால் இந்தத் துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது. மது அருந்தி இருந்தார்கள் என்பதைக் காரணம் காட்டி, மரணமடைந்த தொழிலாளர்கள் பலருக்கு நஷ்ட ஈடு தரப்படவில்லை என்று தெரிகிறது. அரசோ, குடிநீர் வடிகால் வாரியமோ நஷ்ட ஈடு தந்தால், அதை ஒப்பந்தக்காரர்கள் வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இறுதி அடக்கத்துக்கான செலவைத்தான் தருகிறார்கள்.
மனித சமுதாயத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறி விட்டிருக்கும் பிளாஸ்டிக்குகள்தான் இந்தக் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கு மூலகாரணம். பொதுமக்கள் சமூக பிரக்ஞையுடன் இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதிலும், குப்பைத் தொட்டிகளில் போடுவதிலும் கவனம் செலுத்தினாலே, இந்தக் கழிவுநீர் அடைப்புகள் பிரச்னை முக்கால்வாசி குறைந்துவிடும்.
முறையான கழிவுநீர், சாக்கடைக் குழாய்கள், அவற்றை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் வழிமுறைகள் ஆகியவை காலத்தின் கட்டாயம். மனிதனை மனிதனாக நடத்தும் நாகரிகத்தின் முதல் அடையாளம் சாக்கடையை மனிதன் சுத்தம் செய்யாமல் இருப்பதுதான்!
நன்றி : தினமணி

கிராம வங்கிகளின் நோக்கம் நிறைவேறுகிறதா?

ஏழைகளுக்குக் கடன் வழங்குவதில் ""பாங்க்ளா கிராமீன் பேங்க்'' போல மற்றொரு அமைப்பு உண்டா என்று உலகம் முழுக்க இப்போது பாராட்டுகிறார்கள்; அத்தோடு விட்டார்களா, அதைப் போலவே நம் நாட்டிலும் வங்கிகள் தேவை என்று அதன் பாணியைப் பின்பற்றி வங்கிகளைத் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வங்கிக்கும் அதைத் தோற்றுவித்த முகம்மது யூனுஸுக்கும் ஒரு சேர நோபல் விருது கூட தந்துவிட்டார்கள்.
அந்த வங்கிக்கு இணையாக சொல்லக்கூடிய நம்முடைய ""பிராந்திய ஊரக வங்கிகள்'' (ஆர்.ஆர்.பி.) கூட சமீபத்தில் ஒரு சாதனையைப் படைத்துள்ளன. அச் சாதனை ஏழைகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்த சாதனை அல்ல; 1993ல் மரணப்படுக்கையில் விழுந்துவிட்ட பிராந்திய ஊரக வங்கிகள், அரசு அடுத்தடுத்து எடுத்த சீரமைப்பு நடவடிக்கைகளால் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து நடமாடும் அளவுக்குத் தெம்பைப் பெற்றதுடன் லாபமும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டன.
அப்படியானால் நாமும் அதுகுறித்து சந்தோஷப்படலாம்தானே? அதுதான் இல்லை. எந்த நோக்கத்துக்காக இந்த வங்கிகள் தொடங்கப்பட்டனவோ அவற்றையெல்லாம் கைவிட்டு, லாபம் ஒன்றே குறி என்று பாதை மாற்றப்பட்டதால்தான் இந்த புத்துயிரும், மீட்சியும் என்னும்போது எப்படி பாராட்ட முடியும்?
இலக்குகள் என்ன? பிராந்திய கிராமப்புற வங்கிகளின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் அது தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் அதிலிருந்து வெகுதூரம் விலகி வந்திருப்பதையும் நம்மால் உணர முடியும்.
1975ல் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது இந்த வங்கிகள் திறக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழிக்கேற்ப இதற்கு கிராம வங்கி, கிராமின் பேங்க், கிராம்ய பேங்க், கிராமீனா பேங்க், எலாகாய் திஹாட்டி பேங்க், காவோன்லியா பேங்க் என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டது.
சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள், வீதிகளில் கூவி வியாபாரம் செய்யும் தலைச்சுமை வியாபாரிகள், வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் ஏழைகள் ஆகியோருக்குக் கடன் தரத்தான் இந்த கிராம வங்கிகள் திறக்கப்படுகின்றன என்று இந்த வங்கி பற்றிய அரசின் விளக்கக் குறிப்பின் முதல் வாசகமே தெரிவிக்கிறது.
வணிக வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் ஏதோ ஒரு காரணத்தால் கிராமப்புற ஏழைகளுக்குக் கடன் தரும் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதால், அந்தக் குறையை இட்டு நிரப்பவே கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டன.
எம். நரசிம்மன் தலைமையில் அவசர அவசரமாக நிறுவப்பட்ட ஒரு செயல்பாட்டுக்குழு அளித்த பரிந்துரைகளின்பேரில்தான் இந்த கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன. வங்கித்துறையின் கூடுதல் செயலராகப் பதவி வகித்தவரும், 1990களின் தொடக்கத்தில் நிதித்துறை சீர்திருத்தம் குறித்து பரிந்துரைகளை அளித்தவருமான அதே நரசிம்மன்தான் இவர்.
இந்த கிராமப்புற வங்கி தொடங்கப்பட்டபோது மத்திய அரசு, வங்கி இருந்த மாநிலத்தின் அரசு, இந்த வங்கியைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய மூன்றும் சேர்ந்து பங்கு மூலதனத்தை 50:15:35 என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும் என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது.
சமூகப் பலனும், செலவும்: இந்த வங்கி ஏழைகளுக்கும், தொலைதூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடன் தரப்போகிறது என்பதால் இது லாபகரமாக இருக்க முடியாது, நஷ்டம்தான் ஏற்படும் என்று முதலிலேயே எதிர்பார்த்து அதற்கேற்பச் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை நஷ்டங்களே அல்ல, ஏழைகளை முன்னேற்ற அரசு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கான செலவுகளே இவை என்று முதலில் கருதப்பட்டன.
இவை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1990க்குள் இவற்றின் எண்ணிக்கை 196 ஆகவும் இவற்றின் கிளைகளின் எண்ணிக்கை 14,500 ஆகவும் உயர்ந்தன. அதுவரை வங்கிச் சேவை என்றால் என்னவென்றே தெரியாத காடு, மலை, பழங்குடி பகுதிகளுக்கெல்லாம் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டது. 12 கோடியே 30 லட்சம் பேர் இந்த வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றனர்.
இந்த வங்கிகள் செய்த சேவையை இப்படியெல்லாம் மதிப்பிடாமல் அதன் லாபநஷ்ட கணக்கைப் பார்த்தனர் அதிகாரிகள். தொடங்கிய நாள்தொட்டு 199192 வரையில் இந்த வங்கிகளால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் வெறும் 621 கோடி ரூபாய்தான்; அப்போதிருந்த 196 கிராமவங்கிகளில் 152 லாபம் ஈட்டாமல் செயல்பட்டுவந்தன. அந்த நஷ்டத்தை மொத்த வங்கிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் ஒரு வங்கிக்கு ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய்தான் வருவாய் இழப்பு. ஏழைகளுக்கு அது ஆற்றிய தொண்டுடன் ஒப்பிட்டால் இது ஒரு நஷ்டமே அல்ல.
லாபமே குறி: அரசின் கொள்கைகளை வகுக்கும் அதிகாரிகளுக்கு இந்த கிராமப்புற வங்கிகள் லாபம் சம்பாதிக்காமல் இருப்பது பெரிய உறுத்தலாக இருந்தது. எனவே சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்கள். அதற்காக இந்த வங்கிகள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அந்த லட்சியங்களிலிருந்து விலகினாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்தார்கள்.
முதல் நடவடிக்கையாக, ஏழைகளுக்கு மட்டுமே கடன் தருவது என்ற முடிவை மாற்றி, தேவை என்று கேட்டால் பணக்காரர்களுக்கும் கடன் கொடுக்கலாம் என்று அனுமதித்தார்கள்.
குறைந்த வட்டியில் கடன் என்ற லட்சியம் அடுத்து காவு கொடுக்கப்பட்டது. வங்கி அதிகாரிகளுக்குக் கொடுத்த செயல்பாட்டுச் சுதந்திரம் காரணமாக, பிற வணிக வங்கிகளைவிட அதிக வட்டியை வசூலிக்க ஆரம்பித்தார்கள்.
கிராமப்புறங்களில் டெபாசிட்டுகளைத்திரட்டி அவற்றை கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும், நகர்ப்புறங்களில் கிடைக்கும் தொகையையும் கிராமப்புறங்களில் கடன்தர திருப்பிவிட வேண்டும் என்ற லட்சியம் அடுத்து கைவிடப்பட்டது. விளைவு, டெபாசிட்டாகத் திரட்டப்பட்ட தொகையில் சரிபாதிதான் அந்தந்த பகுதியில் கடனாக வழங்கப்பட்டது.
தலைகீழாகிவிட்டது: நகர்ப்புற நிதி கிராமப்பகுதி வளர்ச்சிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக, கிராமப்புறத்தவர்கள் போடும் டெபாசிட் தொகையில் கணிசமான பகுதி நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குக் கடன்தர திருப்பிவிடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்குக் கிடைக்கும் டெபாசிட்டுகளை நகர்களில் முதலீடு செய்யும் அளவை 55% முதல் 60% வரை இந்த வங்கிகள் உயர்த்திக் கொண்டுள்ளன.
2007ல் கிராமப்புற வங்கிகள் டெபாசிட்டாகத் திரட்டிய தொகையின் அளவு ரூ.83,143.55 கோடி. அதில் ரூ. 45,666.14 கோடியை அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காக பங்கு பத்திரங்களில் முதலீடு செய்தனர்.
கிராமப்புறங்களில் ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிச் சேவையைக் கொண்டு செல்வதுதான் நாலாவது பெரிய லட்சியமாக இருந்தது. ஆனால் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த நோக்கத்துக்கு உகந்ததாக இல்லை. நஷ்டம் ஏற்பட்டதால் 1.014 கிராமப்புற கிளைகள் மூடப்பட்டு நகர்ப்புறங்களிலும் பெரு நகரங்களிலும் புதிய கிளைகளாக முகிழ்த்தன.
2008 மார்ச் மாத கணக்குப்படி மொத்த கிராம வங்கிக்கிளைகள் 14,458. அவற்றில் உண்மையிலேயே கிராமங்களில் இப்போதும் உள்ளவற்றின் எண்ணிக்கை 11,353. பாதி நகர்ப்புறங்களாக வளர்ந்துவிட்ட பகுதிகளில் 2,561 கிளைகளும், நகரப்பகுதிகளில் 584ம் உள்ளன. இதைவிட அதிசயம் பெரு நகரங்களில் 60 வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன.
2005 செப்டம்பரிலிருந்து தொடங்கப்பட்ட வங்கிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இவ்வங்கிகளின் பிராந்தியத் தன்மையும் அடிபட்டுப்போனது. 196 ஆக இருந்த பிரந்திய கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 2008 மே மாதத்தில் 88 ஆகக் குறைக்கப்பட்டது. ஒரே மாதிரியான வேளாண் பருவநிலை உள்ள பகுதியில் கிராம வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற முடிவுகள் கைவிடப்பட்டன. வங்கியின் செயல்பாட்டுக்கு உரிய மாவட்டங்கள் அடுத்தடுத்து இருக்க வேண்டும் என்ற வரையறையும் கைவிடப்பட்டது.
கடைசியாக, இந்த வங்கிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றனவோ அந்த மாநில அரசு ஊழியர் வாங்கும் ஊதியமே இவர்களும் பெற வேண்டும் என்று, வங்கியின் செலவைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கால், பிற வணிக வங்கிகளின் ஊதிய விகிதமே கிராமப்புற வங்கிகளின் ஊழியர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று தேசிய நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி அந்த நோக்கத்தையும் முறியடித்தது.
இப்படியாக, பிற வணிக வங்கிகளைவிட அதிக லாப நோக்கமுள்ள வங்கியாக பிராந்திய கிராமப்புற வங்கிகள் மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் வங்கியின் லாபம் அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது.
200708ம் ஆண்டில் கிராமப்புற வங்கிகள் மூலம் கிடைத்த நிகர லாபம் ரூ.625.11 கோடி. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.617.13 கோடி. அதற்கும் முந்தைய ஆண்டு ரூ.748.11 கோடி.
தன்னுடைய சமூகப் பொறுப்பை உதறித்தள்ளிவிட்ட இந்த வங்கிகளால் இனி வணிக வங்கிகளாகக் கூட செயல்பட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடன் தள்ளுபடி, தவணைக்காலம் நீட்டிப்பு, வாராக்கடன் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் நிதி நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகமாகி வருகிறது.
நாட்டில் உள்ள மொத்த வங்கிக்கிளைகளுடன் ஒப்பிடும்போது கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கையானது 19.58 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இவை திரட்டும் டெபாசிட்டுகளோ மற்ற வங்கிகள் திரட்டும் டெபாசிட்டுகளுடன் ஒப்பிட்டால் வெறும் 2.01 சதவீதமாக இருக்கிறது. அதே போல கிராமப்புறங்களில் செயல்படும் பிற வங்கிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 36.94% ஆக இருக்கிறது, ஆனால் அது தரும் வங்கிக் கடன் அளவு வெறும் 10% தான்.
கிராமப்புற வங்கிகளைச் சீரமைக்க எடுத்த நடவடிக்கைகளால் அது தன்னுடைய ஆரம்பகால லட்சியங்களிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டன; அப்படியும் அவை பிற வணிக வங்கிகளைவிட அதிக டெபாசிட்டுகளைத் திரட்டிவிடவில்லை, லாபத்தையும் சம்பாதிக்கவில்லை. கிராமப்புற வங்கிகள் இன்னமும் தனி அமைப்பாகத்தான் செயல்பட வேண்டுமா, அதன் நோக்கம் என்ன, லாபம் சம்பாதிப்பதா, கிராமங்களுக்குச் சேவை செய்வதா? அரசுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளால் ஏழைகள், சிறுகுறு விவசாயிகள், கிராமப்புற கைவினைஞர்கள் போன்றோருக்குக் கடன் தர முடியவில்லை என்பதற்காகத்தானே கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டன, அவர்களுக்குக் கடன் தர மாற்று அமைப்புகள் உருவாகிவிட்டனவா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேவை. சில கேள்விகளுக்கு இந்த சீர்திருத்தங்களால்கூட விடை காண முடியாது.
பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

Thursday, October 23, 2008

மறையும் வயல்கள்

நன்செய் நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, "நன்செய் நிலம் என்பதில் எதனையெல்லாம் சேர்க்கலாம்' என்று ஆலோசனை வழங்கும்படி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒவ்வொரு மாநிலத்தையும் கேட்டுக்கொண்டது. இதில், கேரள மாநில பல்லுயிர்பெருக்க வாரியம் (Biodiversity Board) ஒரு ஆலோசனையை கூறியுள்ளது. அதாவது, நெல்வயலுடன் தொடர்புள்ள ஏரி, குளம், ஓடை, வாய்க்கால் மற்றும் பாசன கட்டுமானம் போன்ற அனைத்தையும் நன்செய் நிலவரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்த யோசனை.
கேரளத்தைக் காட்டிலும் அதிக நெல் உற்பத்தி செய்வது தமிழகம்தான். நாம்தான் இத்தகைய ஆலோசனையை வலியுறுத்தி, சட்டவரம்பை விரிவு செய்து, நெல்வயல்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சி நடந்ததற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழகத்தின் எந்த நகருக்குப் பயணம் செய்தாலும், சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு, பச்சை வயல் பின்நகர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது மாநிலச் சாலை, தேசியச் சாலை எதுவாக இருந்தாலும், இரு மருங்கிலும் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு, விவசாயத்தைக் கொன்றதன் அடையாளமாக "நடுகல்' நடப்பட்டு (வீட்டுமனைகளாக) இருப்பதைக் காணலாம்.
விளைநிலத்தை வீட்டுமனையாக மாற்ற வேண்டும் என்றால், அந்த நிலத்தில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயம் நடைபெறவில்லை என்பதற்கான சான்று முக்கியம். இதற்காகவே பல ஆயிரம் ஏக்கர் வயல்களில் பயிர் செய்யாமல், நடுகல் நடுவதற்கான காலத்தை நோக்கி, கறம்பாக விட்டுவைத்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை குத்தகை வயல்கள்.
தமிழகத்தின் சாலையோரம் வீட்டுமனை வாங்குவோர், ஒரு முதலீடாகவும், பின்னாளில் மனைவிலை கூடும் என்றும் வாங்கிப்போடுகின்றனர். இந்த நிலங்களில் குத்தகைக்குப் பயிர்செய்து கொண்டிருந்த விவசாயிகள் வேறுவழியின்றி, கிராமத்தைவிட்டு வெளியேறியதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லை.
ஒரு நீர்நிலை அதிகபட்சமாக நிரம்பும்போது, எந்த எல்லை வரை தண்ணீர் பரவி நிற்குமோ, அதிலிருந்து 100 மீட்டருக்குள் எந்தவிதமான நிரந்தர கட்டடங்களையும் கட்டக்கூடாது என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது. ஆனாலும் அதையெல்லாம் மறைத்து, வீட்டுமனைகளாக மாற்றும் மோசடி தமிழகத்தில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
கிராமத்தைவிட்டு வெளியேறும் விவசாயத் தொழிலாளர்கள் இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கின்றனர். ஆரம்பப்பள்ளியைத் தாண்டாதவர்கள் கட்டட வேலைகளுக்கும், கடின உழைப்புக்கும் செல்கின்றனர். எஸ்எஸ்எல்சி, அல்லது பிளஸ்2 வரை படித்த இளைஞர்கள் கட்டட வேலை செய்யத் தயங்கி, நகரங்களில் கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் குறைந்த மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்த புதிய சூழ்நிலையை புரிந்துகொண்ட ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநில பண்ணையாளர்கள், படித்த இளைஞர்களுக்கு ரூ.3,000 வரை மாதச் சம்பளம் கொடுத்து பணியமர்த்தும் புதிய கலாசாரம் அங்கே உருவாகி வருகிறது. இந்தப் பண்ணைகளில் நவீன வேளாண் கருவிகள் இருப்பதால் கடின உழைப்புக்கான தேவை இல்லை.
ஆனால் பருவமழை பொய்க்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள தமிழகத்தில், விளைச்சலில் பங்கு என்கிற நல்ல வழக்கம் முன்பு இருந்தது. அதனால், நிலத்திலேயே தங்கி விவசாயம் செய்த குடும்பங்கள் இருந்தன. ஆனால் சில பண்ணையாளர்கள் இவர்களுக்கு முறையாகப் பணம் தராமலும், தந்த பணத்தைக் கடனாக எழுதிக்கொண்டதாலும், ஒரு கட்டத்தில் "எங்களை கொத்தடிமையாக வைத்திருந்தனர்' என்று புகார் கொடுத்துவிட்டு, நகர நெரிசலில் கலந்துபோன விவசாயக் குடும்பங்கள் பல.
காலங்காலமாக இருந்துவந்த நல்ல விதைகள், நல்ல விவசாய முறைகள், நல்ல கூலிப்பகிர்வுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்போது நல்ல விளைநிலங்களையும் இழந்துகொண்டிருக்கிறோம்.
இன்று தமிழகத்தின் முன் இரு பெரிய பிரச்னைகளில் முதலாவது, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதைத் தடுப்பது; இரண்டாவதாக, கல்வியறிவு பெற்ற கிராம இளைஞர்களை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, ஊக்கம் தருவது.
தமிழகத்திற்கு உணவுப் பஞ்சம் வருமா வராதா என்பது, இந்த இரு பிரச்னைகளை தமிழக அரசு எவ்வளவு வேகமாக, விவேகமாக கையாளப் போகிறது என்பதில்தான் இருக்கிறது.
நன்றி : தினமணி

இருண்ட தமிழகமா? மாற்று மின்திட்டமா?

வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது மனித வாழ்க்கையில் மின்சாரம் அத்தியாவசியமாகிறது. மின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கும்போது அதற்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தவில்லை.
தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி 3ல் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. இதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கப் போகிறது.
முந்தைய ஆட்சியினரை ஒப்பிட்டு குறை கூறுவதை விடுத்து மின் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தமிழக அரசு தொழில்கள் தொடங்கியது வரவேற்கத்தக்கதுதான். இந்த நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.60 வீதம் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தொழில் தொடங்க அந்த பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.85 வீதம் செலுத்த வேண்டியது உள்ளது.
மேலும் சென்னை தவிர மற்ற நகரங்களில் தினசரி 9 மணி முதல் 10 மணி நேரம் மின் தடையை சந்திக்க வேண்டியது உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் நசித்து வருகின்றன.
அதிக மின் தடையினால் இந்த நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு பொருள்களே உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளுக்குத் தொடர்ந்து மின் விநியோகம் கிடைத்தால்தான் உற்பத்தியைத் தடையின்றி செய்ய முடியும்.
தற்போதைய தமிழக அரசின் மின் விநியோகக் கொள்கை விருந்தாளியை உபசரித்து, நமது குடும்பத்தில் உள்ளவர்களைப் பட்டினி போடுவதற்கு ஒப்பாகும்.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை நசிய விட்டுவிட்டு, பன்னாட்டு தொழில்களுக்கு சலுகை அளிப்பதால் தமிழகம் எந்தவித லாபமும் அடையப் போவதில்லை.
மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடாமல் இலவச கலர் டிவி பல லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் வழக்கமான மின் செலவைவிட தற்போது கூடுதல் மின்சாரத் தேவை அவசியமாகிவிட்டது. அதைச் சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தினால் உடனடியாக மின் உற்பத்திக்கு வழி ஏற்படாது. இதனால் தனியார் துறைகளுக்கு அதிக மானியம், சலுகை அளித்து மின் உற்பத்திக்கு அரசு வழிவகுக்க வேண்டும்.
மேலும் உணவுத் தட்டுப்பாட்டின்போது வாரத்திற்கு ஒரு நாள் உபவாசம் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டதுபோல, ஆடம்பர மின் உபயோகம், தெரு விளக்குகள் உள்ளிட்ட மின் விளக்குகளின் உபயோகத்தைக் குறைப்பது, மின் பயன்பாட்டை குறைப்பவர்களுக்கு கட்டணத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முனைப்போடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைக் கழிவுகள் உள்ளிட்ட பிற மாற்று மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரித்து வழங்கும்போது அதற்கான மின் கட்டணம் சற்று கூடுதல் தொகையாக இருந்தாலும் அதைச் செலுத்த தொழிற்சாலை நடத்துவோர் தயக்கம் காட்டமாட்டார்கள்.
ஏனெனில், தற்போதுள்ள மின் தட்டுப்பாடு தொடர்ந்தால் அது அவர்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரம், மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.1 சலுகை என்பது அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும். அதேவேளை, இங்குள்ள தொழிற்சாலைகள் மின் தட்டுப்பட்டால் பாதிக்கப்படுவதும், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பதும் எவ்விதத்திலும் நியாயமில்லை.
ரூ. 7 ஆயிரம் கோடியில் புதிய மின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது வரவேற்புக்குரியதே. எனினும், அவற்றால் பலன் கிடைப்பதற்கு காலதாமதமாகும்.
குப்பைக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். தில்லியிலும், கர்நாடகத்திலும் குப்பைக் கழிவிலிருந்தும், ஆந்திர மாநிலத்தில் உமியிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இதேபோன்றதொரு திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
மயிலாடுதுறையில் கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அந்த ஆலையின் மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
தற்போதைய மின் பற்றாக்குறையை தீர்ப்பது மட்டுமன்றி எதிர்கால மின்தேவையைக் கருத்தில் கொண்டும் இதுபோன்ற மாற்றுவழி மின் திட்டங்களை ஊக்குவிக்கவும், தொடங்கவும் தமிழக அரசு ஏன் முன்வரவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் "பயோமாஸ்' துறைகளில் உரிய ஆராய்ச்சிமேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி ஊக்குவிக்க வேண்டும்.
தமிழகத்தின் பெரிய நகரங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து வருகின்றன. இதன்மூலம் குப்பையில் இருந்தும், மனித கழிவுகளில் இருந்தும் மின் உற்பத்தி செய்யும் மாற்று வழித் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மின் தட்டுப்பாடு பிரச்னை இப்போதைக்கு தீராது என்ற நிலையில், மாற்றுவழி மின் உற்பத்தித் திட்டங்களை மேற்கொள்ளவும், அது தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்கவும் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களாட்சியில், அரசு என்பது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், மக்களின் நம்பிக்கையையும், நல்லுணர்வையும் பெற்றதாக இருப்பது என்பதுதான் எதிர்பார்ப்பு. மின்பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, அன்னிய ஆக்கிரமிப்பு, இயற்கைச் சீற்றங்கள் போன்ற வேளைகளில் அரசு மக்களுடன் கைகோர்த்துச் செயல்பட்டால் ஒழிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது.
பொதுமக்கள் மத்தியில் மின்சாரச் சிக்கனம் தங்களது சமூகக் கடமை என்கிற சிந்தனையை ஏற்படுத்த அரசு தவறி விட்டதால்தான், மின்வெட்டு அரசின் மீதான அதிருப்தியை அதிகரித்திருக்கிறது.
அதேபோல, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கிறோம் என்கிற பெயரில், பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் முடக்கப்படுவதும், மின்வெட்டால் பாதிக்கப்படுவதும் எந்தவிதத்தில் நியாயம்?
சொல்லப்போனால், தமிழகத்தின் தொழில் வளத்துக்கு அடித்தளமாக இருப்பதும், எந்தவித வரிச்சலுகையும் பெறாமல் அரசுக்கு வருமானம் தருவதும் நமது சிறுதொழில்கள்தான். அவைகள் பாதிக்கப்பட்டால், செயல்படுவது தடைபட்டால் அதன் விளைவு, வேலையில்லாத் திண்டாட்டமாக இருக்கும் என்பதை அரசு ஏனோ உணரத் தவறுகிறது.
இலவச மின்சாரம் என்பதால் கணக்கு வழக்கில்லாமல் பம்ப் செட்டுகளை ஓட்டவிடும் விவசாயிகளுக்கு மின் சிக்கனம் பற்றி யாராவது அறிவுறுத்தி இருக்கிறார்களா? ஒருபுறம் மின்வெட்டி, மறுபுறம் எந்தவிதத் தடையுமில்லாமல் இலவச மின்சாரம் என்பது நியாயமாகப்படவில்லையே!
சுபாஷ் சந்திரபோஸ்
(கட்டுரையாளர்: செயலர், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம்)
நன்றி : தினமணி

Wednesday, October 22, 2008

பின்தங்குகிறோமே, ஏன்?

அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள் சில வெளியாகி இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய அரசுப் பணியில் தொடங்கி, எல்லா அகில இந்திய ரீதியிலான தேர்வுகளிலும் தமிழகம் முதலிடம் வகித்ததுபோக, இப்போது அறிஞர் அண்ணா எழுதியதுபோல "ஏ, தாழ்ந்த தமிழகமே....' என்று நாமெல்லாம் அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது. அதற்குக் காரணம், நமது தவறான கல்விக் கொள்கையும், தவறான அணுகுமுறையும்தான்!
இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மிக அதிகமான இடங்களில் ஆந்திரப் பிரதேசம், புது தில்லி, மகாராஷ்டிரம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்திருக்கும்போது, தமிழகம் எங்கோ பின்னணியில் பரிதாபமாக இருக்கும் நிலைமை. வெற்றி பெற்று இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படிக்க நுழைவு பெற்றவர்களில் 1,697 பேர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 202 பேர்தான். மிகவும் பின்தங்கிய, சிறிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 236 பேர் நுழைவு பெற்றிருக்கும்போது, அந்த அளவுக்குக் கூடத் தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியவில்லையே, ஏன்?
இந்தியத் தொழில்நுட்பக் கழக நுழைவுத் தேர்வுகளில் மட்டுமல்ல, எல்லா அகில இந்திய ரீதியிலான தேர்வுகளிலும் நமது தமிழக பாடத்திட்ட முறையில் படிக்கும் மாணவர்கள், ஏனைய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் போட்டி போட முடியாத நிலைமை காணப்படுகிறது.
நமது மாநிலக் கல்வித் திட்டத்தில், பழைய "மெக்காலே' கல்வி முறையின் மனப்பாடம் செய்யும் அடிப்படை தொடர்கிறது. ஆனால், மத்திய பள்ளிக் கல்வி ஆணையம் என்று சொல்லப்படும் சி.பி.எஸ்.சி. முறையில் செய்முறை அடிப்படையில் கல்வி அளிக்கப்படுகிறது. அகில இந்திய ரீதியிலான எல்லாத் தேர்வுகளும் இந்த செய்முறை அடிப்படையிலான கல்வியை ஆதாரமாகக் கொண்டவை என்பதால் நமது மாணவர்களால், அந்த தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றிபெற முடிவதில்லை.
மதிப்பெண்கள் பெறுவதிலும் சரி, நமது மாநிலத் தேர்வு முறை மாணவர்களுக்கு பாதகமாக இருக்கிறது. "சி.பி.எஸ்.இ.' முறையில் ஒரு தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையில் மாணவர்களுக்குப் படித்ததை மறு ஆய்வு செய்ய வசதியாக நான்கைந்து நாள்கள் இடைவெளி தரப்படுகிறது. மாநிலத் தேர்வு முறையில் அதற்கு வாய்ப்பளிப்பதில்லை. கேட்டால், கேள்வித் தாள் வெளியாகிவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். பத்திரமாகக் கேள்வித் தாளை பாதுகாக்கக்கூட கையாலாகாத நிலையில் நமது மாநிலத் தேர்வு ஆணையம் செயல்படுகிறது என்றால், அதைவிட வெட்கக்கேடான விஷயம் இருக்க முடியுமா?
திருச்சியில் பிராந்திய பொறியியற் கல்லூரி என்று இருந்ததை இப்போது தேசிய தொழில்நுட்பக் கழகம் என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். அங்கே போய்ப் பார்த்தால், படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் வெளிமாநிலத்தவர். ஆனால், ஆசிரியர்கள் நம்மவர்கள். மாநிலத்துக்கு முன்பு தரப்பட்ட ஒதுக்கீடு இப்போது தேசிய தொழில்நுட்பக் கழகமானபோது ரத்து செய்யப்பட்டு விட்டது. தேசிய அளவிலான தேர்வில் தமிழக மாணவர்களால் பெருமளவில் வெற்றி பெற முடியவில்லை என்பதால், பெருவாரியான இடங்கள் அகில இந்திய ரீதியில் வெற்றி பெற்ற வெளிமாநில மாணவர்களுக்குப் போய்விடுகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இல்லாத பாதுகாப்பான சூழ்நிலையில் அமைந்த தென்னிந்தியாவிலுள்ள மூன்று தேசிய தொழில்நுட்பக் கழகங்களை வடநாட்டு மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்வதில் ஆச்சரியமில்லை. பாதுகாப்புக்குப் பாதுகாப்பும், படிக்க வசதியான சூழலும், சிறந்த தென்னிந்திய ஆசிரியர்களும் அமைந்திருக்கும்போது, அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்!
கேந்த்ரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள், மத்திய பள்ளிக் கல்வி ஆணையம் போன்றவை நமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், அகில இந்திய ரீதியில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் மாற்றங்களுக்கும் தயாராக இருந்தும் நமது மாநில ஆட்சியாளர்கள் அதற்குத் தடையாய் இருப்பதுதான், உயர்கல்வியில் தமிழகம் பின்னடைவை சந்திப்பதற்குக் காரணம். தமிழகத்தில் தமிழும் ஒரு கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையுடன், தேசிய அளவிலான கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இதற்குத் தீர்வு!
நன்றி : தினமணி

சந்திரனுக்கு எதற்கு விண்கலம்?

அமெரிக்கா 1969ம் ஆண்டு தொடங்கி சந்திரனுக்கு அப்போலோ விண்கலங்கள் மூலம் 12 விண்வெளி வீரர்களை அனுப்பி சந்திரனை ஆராய்ந்தது. சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து கல்லையும் மண்ணையும் அள்ளி வந்தனர். அவை விரிவாக ஆராயப்பட்டு விட்டன. ரஷ்யாவோ (அப்போதைய சோவியத் யூனியன்) சந்திரனுக்கு ரஷ்ய விண்வெளி வீர்ரகளை அனுப்பாமலேயே தானியங்கிக் கருவிகள் மூலம் சந்திரனிலிருந்து இதே போல கல்லையும் மண்ணையும் கொண்டு வந்தது. இதெல்லாம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
இந்த நிலையில் 2007 செப்டம்பரில் ஜப்பான் ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பியது. அது சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே ஆண்டு அக்டோபரில் சீனா இதே போல ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்ப அதுவும் சந்திரனை சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திராயன்1 என்று பெயர் சூட்டப்பட்ட ஆளில்லா விண்கலத்தை இந்தியா இப்போது சந்திரனுக்கு அனுப்ப இருக்கிறது.
இந்தியா எதற்கு இப்போது சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும்? எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இத் திட்டத்துக்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது? இதுவரை கண்டுபிடிக்காத விஷயங்களை இந்திய விண்கலம் போய் கண்டுபிடிக்கப் போகிறதா? எங்களாலும் சாதிக்க முடியும் என்ற வெறும் பெருமைக்காக இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இப்படியெல்லாம் கேட்க முடியும்.
முதலாவதாக ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சந்திரனைப் பற்றி எல்லா விஷயங்களும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்தால் அது தவறு. சந்திரனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. சொல்லப்போனால் சந்திரன் தோன்றியது எப்படி என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சந்திரனில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று அண்மைக்காலமாக ஒரு கருத்து இருந்தாலும் இதுவும் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்திரனில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கிறது என்று தெரிய வந்தால் விண்வெளி வீரர்களும் ஆராய்ச்சியாளர்களும் சந்திரனில் தளம் அமைத்துக் கொண்டு அங்கேயே தங்கி பல ஆய்வுகளை நடத்த முடியும்.
சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்று கண்டுபிடிப்பதில் இந்திய விண்கலம் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது. 2020ம் ஆண்டு வாக்கில் சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஒரு தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இப் பின்னணியில் இந்திய விண்கலம் செய்யும் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். இதிலிருந்து இந்தியாவின் விண்கல திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
சந்திராயன் விண்கலத்தில் 11 ஆராய்ச்சிக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் படப்பிடிப்புக் கருவிகள் உள்பட ஐந்து கருவிகள் இந்தியா உருவாக்கியவை. அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா அனுப்பிய இரு கருவிகள், ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய மூன்று கருவிகள், ரஷ்யா அளித்துள்ள ஒரு கருவி என ஆறு கருவிகள் இந்த விண்கலத்தில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க நாஸா அமைப்பும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தை எந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதுகிறது என்பதை இது காட்டுகிது.
இங்கு வேறு ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு செயற்கைக்கோளிலிருந்து நுட்பமான படங்களை எடுப்பது தொலையுணர்வு தொழில் நுட்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் பல செயற்கைக்கோள்கள் உயரே பறந்தபடி பூமியைப் படம் எடுப்பதில் ஈடுபட்டுள்ளன. இத் தொழில் நுட்பத்தில் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை வகிக்கிறது இந்தியா. இப்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனுக்கு மேலாகப் பறந்து சந்திரனைச் சுற்றிச் சுற்றி வரும்போது இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சந்திரனை முப்பரிமாணப் படங்களை எடுக்கப் போகிறது. சந்திரனில் மேடு, பள்ளம் எது, சமதரை எது என்பதை இப் படங்கள் விவரமாகக் காட்டும்.
இதுவரை சந்திரனின் மிகத் துல்லியமான முப்பரிமாணப் படங்கள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இது குறித்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளது என்றாலும் இதில் அமெரிக்காவை இந்தியா முந்திக்கொண்டுவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க வீரர்கள் சந்திரனின் தென் துருவப் பகுதியில் போய் இறங்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக தென் துருவப் பகுதியில் உள்ள நில அமைப்பு பற்றி அறிந்து கொள்ள பூமியிலிருந்தபடி ராடார் கருவிகள் மூலம் தென் துருவப் பகுதியின் முப்பரிமாணப் படங்களைத் தயாரிப்பதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அப்படிப் பார்க்கும் போது சந்திரன் முழுவதுக்குமான விரிவான முப்பரிமாணப் படங்களை முதன் முதலாக எடுக்கப் போவது இந்திய விண்கலமாகவே இருக்கும்.
இந்தியா 2011ம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திராயன்2 என்னும் பெயர் கொண்ட இன்னொரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. அந்த விண்கலத்திலிருந்து ஓர் ஆய்வுக் கலமும் தானியங்கி வாகனமும் கீழே சந்திரனின் தரையில் இறங்கும். இவற்றை சந்திரனில் எங்கு இறக்குவது என்று முடிவு எடுப்பதில் இப்போது எடுக்கப்பட இருக்கும் முப்பரிமாணப் படங்கள் மிகவும் உதவியாக இருக்கும். சந்திரனில் சமதரை என்பது அபூர்வம். சந்திரனின் நிலப்பரப்பில் சிறியதும் பெரியதுமாக சுமார் 5 லட்சம் பள்ளங்கள் உள்ளன. சந்திரனில் இறக்கப்படும் ஆய்வுக் கலம் சரிவான இடத்தில் இறங்கினால் உருண்டு விழுந்து செயல்படாமல் போகலாம்.
இந்திய விண்கலம் சந்திரனில் இப்போது மேற்கொள்ள இருக்கும் இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் உள்ளதா என்பது தொடர்பானது. தண்ணீர் ஆராய்ச்சிக்கு மட்டும் சந்திராயன்1 விண்கலத்தில் நான்கு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ள வேறு ஒரு கருவி சந்திரனின் நிலத்துக்கு அடியில் சில மீட்டர் ஆழம் வரை ஊடுருவி ஆராயும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரனின் நிலப்பரப்பில் யுரேனியம், தோரியம் போன்ற அணுசக்தி வளங்கள் உள்ளனவா என்று கண்டறிவதும் சந்திராயனின் ஆய்வுத் திட்டங்களில் அடங்கும்.
இந்தியா கடந்த பல ஆண்டுகளில் பூமியைச் சுற்றும் வகையில் எவ்வளவோ செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. ஆனால் சந்திரனைச் சுற்ற ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது இதுவே முதல் தடவை.
சந்திராயன் விண்கலம் சென்னைக்கு வடக்கே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும். அந்த விண்கலம் முதலில் பூமியை சில முறை சுற்றி வரும். அதன் பிறகு அது சந்திரனை நோக்கிக் கிளம்பும். பூமியிலிருந்து சந்திரன் 3 லட்சத்து 86 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சந்திராயன் விண்கலம் சந்திரனுக்குப் போய்ச்சேர ஐந்தரை நாட்கள் ஆகும். அதன் பின்னர் அது சந்திரனை சுற்றிவர ஆரம்பிக்கும். சந்திரனின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி அது சந்திரனைச் சுற்றும். சந்திரனை அது நிலையாக சுற்ற ஆரம்பித்த பிறகு 29 கிலோ எடையுள்ள ஆய்வுக்கலம் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனை நோக்கி கீழே இறங்கி இறுதியில் தரையில் மோதி நொறுங்கும். சந்திரனுக்கு அடுத்த தடவை ஒரு விண்கலத்தை அனுப்பும் போது இறங்கு கலத்தை எப்படி கீழே இறக்குவது என்பதற்கு இப்போதைய பரிசோதனை உதவியாக இருக்கும்.
சந்திராயன் விண்கலம் சுமார் 2 ஆண்டுகள் சந்திரனை சுற்றிச் சுற்றி வந்து படங்களை எடுக்கும். பல ஆய்வுகளை நடத்தும்.
சந்திரனுக்கு விண்கலத்தை செலுத்த இருக்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டானது பிற நாடுகளின் ராக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில் எடை அளவிலும் திறன் அளவிலும் சிறியதுதான். ஆனால் மூர்த்தி (உருவம்) சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்ற அளவில் அந்த ராக்கெட் தொடர்ந்து 12 தடவை வெற்றி கண்டுள்ளதாகும்.
இந்தியாவின் இப்போதைய திட்டம் எதிர்காலத்தில் சந்திரனில் ஆய்வுகளை நடத்துவதற்கும் அங்குள்ள கனி வளங்களை எடுத்து வருவதற்கும் இந்தியாவுக்கு உரிமை கிடைக்க வழி செய்யலாம்.
முன்னர் இந்தியா ஆழ்கடல்களில் தரையில் கிடைக்கின்ற விலை மதிப்பு கொண்ட உலோக உருண்டைகள் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்தியது. பின்னர் இவற்றை மேலே எடுப்பது குறித்து உலகின் பல நாடுகளும் மாநாடு நடத்தி உடன்பாட்டை உருவாக்கிய போது ஏற்கெனவே இத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்ட முன்னோடி நாடு என்ற முறையில் இந்துமாக்கடலின் தரையில் கிடக்கின்ற உலோகக் கட்டிகளை மேலே எடுப்பதற்கு இந்தியாவுக்கு தனி உரிமை வழங்கப்பட்டது. அதுபோல இந்தியா இப்போது சந்திரனில் மேற்கொள்கிற ஆய்வுகளின் பலனாக எதிர்காலத்தில் சந்திரனில் உள்ள அரிய கனி வளங்களை எடுப்பதற்கு இந்தியாவுக்கு உரிமை கிடைக்கலாம். அந்த அளவில் சந்திரனுக்கு இப்போது விண்கலத்தை அனுப்புவதை வீணான முயற்சி என்று கருதிவிடலாகாது.
என். ராமதுரை
நன்றி : தினமணி

தீர்க்க முடியாததல்ல

தமிழகத்தையே வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது மின்வெட்டுப் பிரச்னை. இது தாற்காலிகமானதல்ல என்னும் உண்மை நிலைமையை மேலும் மோசமானதாக்குகிறது.
அரசு எந்தளவுக்கு பிரச்னையை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ரூபாய் அரிசியையும் ஐம்பது ரூபாய் மளிகைப் பொருள்களையும் காட்டி இப்பிரச்னையை எதிர்கொண்டுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் இந்த அரசை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை வேறொன்று இருக்க முடியாது.
இப்போதும்கூட பிரச்னை கை மீறிப் போய்விடவில்லை. பிரச்னையை நேர்மையாகக் கையாளும் மனமிருந்தால் அடுத்த கோடைக்குள் நிலைமையை ஓரளவு சீரமைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். சில தீர்வுகள்:
1. முதலாவதாக அரசு. அடுத்து, உண்மையான நிலைமையை மக்களுக்கு விளக்க வேண்டும். பிரச்னையின் தீவிரத்தையும் மின் சிக்கனத்தின் அவசியத்தையும் மக்கள் புரிந்துகொள்ளவும் ஒத்துழைப்பு அளிக்கவும் இது உதவும்.
2. தமிழக மின் விநியோகத்தில் தொழில் துறை 39.6 சதமும் விவசாயத் துறை 27 சதமும் குடியிருப்புகள் 24 சதமும் நுகர்கின்றன என்று கூறப்பட்டாலும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் 45 சதம் வரை தண்ணீருக்காகவே நாம் பயன்படுத்துகிறோம்.
நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தினால் நம்முடைய மின் தேவையை வெகுவாகக் குறைக்க முடியும். தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 961.9 மி.மீ. இதில் 67 சதத்துக்கும் மேலான நீர் வீணாகிறது. மழைநீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மையைக் கட்டாயமாக்கினால் பெரியளவில் நம்மால் நீரையும் மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.
மேலும், நம்முடைய நீர்த்தேவையில் 40 சதவீதத்துக்கும் மேலாக பூர்த்திசெய்யும் நிலத்தடி நீராதாரத்தையும் இதன் மூலம் பாதுகாக்க முடியும்.
3. சிறிய அணைத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். 20 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு, குறு அணைத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நம்முடைய நீர் மின் உற்பத்தியை மூன்று மடங்காக்க முடியும்.
4. ஆண்டின் பெரும்பாலான நாட்கள் முழு சூரிய வெளிச்சத்தைப் பெறும் நாம், சூரிய மின் சக்தியை அற்புதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழகத்தின் நிலப்பரப்பில் 0.25 சதத்தை சூரிய மின்சக்தி உற்பத்திக்காக நாம் ஒதுக்கினால்கூட நம்முடைய மின் தேவையில் சரி பாதியை அது பூர்த்தி செய்யும். மற்றொரு வகையில், சுதந்திரமான சுயசார்பிலான தனிநபர் மின் உற்பத்திக்கும்கூட சூரிய மின்சக்தி வழிவகுக்கும்.
ஒழுங்காக திட்டமிட்டால், வீடுகள்தோறும் சூரிய மின் உற்பத்திச் சாதனங்களை நிறுவி அந்தந்த வீடுகளின் மின் தேவையை அவரவரே பூர்த்தி செய்துகொள்ள வழிவகுக்க முடியும்.
5. காற்றாலை மின்சாதனச் சந்தையில் சர்வதேச அளவில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும், காற்றாலை மின்சார உற்பத்தியில் நம்முடைய பங்களிப்பு மிகக் குறைவு. வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் காற்றாலைகளை நிறுவுவதன் மூலம் மரபுசாரா எரிசக்தித் துறையில் புதிய பயணத்தைத் தொடங்க முடியும்.
6. மின் விநியோகத்தில் 17% வரை வீணாவதாக அரசே ஒப்புக்கொள்கிறது. மின் திருட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மாநாடுகளிலிருந்தே தொடங்கலாம்.
7. குடியிருப்புகளின் முக்கிய தேவை விளக்குகள், மின்விசிறிகள். குடியிருப்புகளுக்கான அதிக மின் பயன்பாட்டை கோருபவையும் இவைதான்.
குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் "காம்பாக்ட் ஃப்ளோரசன்ட்' மற்றும் "லைட் எமிட்டிங் டயோடு' விளக்குகளை அரசே சலுகை விலையில் அளிக்கலாம். தமிழகத்தில் இந்த விளக்குகளின்
பயன்பாடு ஒரு சதவீதத்தைக்கூட எட்டவில்லை. இவ்விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் விளக்குகளுக்கான மின் பயன்பாட்டில் 60 சதம் வரை மிச்சப்படுத்த முடியும்.
8. பிரச்னையின் தீவிரம் குறையும்வரை மின் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்படுத்தலாம். ஐந்து பேர் கொண்ட சாதாரண ஒரு குடும்பம் வாழ்வதற்கான வீட்டின் மின் தேவையைக் கணக்கிட்டு மின் பயன்பாட்டுக்கு வரையறையைநிர்ணயிக்கலாம்.
9. குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனம், குளிர்பதனப்பெட்டி, வெப்பக்கலன், மின்கணப்பு உள்ளிட்ட அதீத மின் பயன்பாட்டு சாதனங்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தலாம். அதாவது, கூடுதல் வரி, கூடுதல் பயன்பாட்டுக் கட்டணம்.
இவையெல்லாம் தொலைநோக்கிலான நீண்ட கால பயனளிக்கக்கூடிய தீர்வுகள். பிரச்னையை எப்படியேனும் தீர்க்க
வேண்டும் என்று நினைக்கக்கூடிய, பிரச்னையை ஆக்கபூர்வமாக அணுகக்கூடிய அரசு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள்.
இதிலெல்லாம் நம்பிக்கையில்லை எனில், எளிதாக இன்னொரு "தீர்வு' இருக்கிறது. இந்த அரசுக்கு ரொம்பவும் அது பிடித்தமானதாக இருக்கக்கூடும். ஆம், மின்சாரமும் இலவசம் என்று அறிவித்துவிடலாம்!
மன்னை சமஸ்
நன்றி : தினமணி

Monday, October 20, 2008

நல்ல யோசனைதான்!

சந்தேகப்படும்படியான நடத்தை, வேலையில் ஆர்வக்குறைவு போன்ற காரணங்களுக்காக சார்புநிலை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளில் 50 வயதை எட்டியவர்கள், அதைத் தாண்டியவர்களின் பணியேட்டை ஆய்வு செய்து பணி ஓய்வு கொடுத்து அனுப்பிவிடலாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் யோசனை கூறியிருக்கிறார். இது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய யோசனைதான்.
இந்த யோசனையை அவர் அனைத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதமாக எழுதியிருக்கிறார். பணிக்காலம் முடியும் முன்னரே ஓய்வுபெறுவது என்பதை ஒரு சாபமாக யாரும் கருத வேண்டியதில்லை என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதித்துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் நடத்தை, அவர்களுடைய பணியின் தரம், அவர்களுடைய நேர்மை, அவர்களுடைய நடுநிலைமை, அவர்கள் வழங்கும் தீர்ப்பின் தரம் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஓய்வு பெற வேண்டியவரா, பணி நீட்டிப்புக்கு உகந்தவரா என்று பார்க்க வேண்டும், இதற்காக நீதிபதிகளுக்கான பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபகாலமாக சார்புநிலை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் சிலரின் நேர்மையற்ற நடத்தைகள் குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளை அடுத்தே இந்த யோசனையை அவர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறு 50 வயதை எட்டியவர்களின் பணியேடுகளை ஆய்வு செய்வது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் பிரிவு 56 (ஜே)யின் படியும் சரியானதுதான் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
50 வயதை எட்டிய அரசு அதிகாரியின் நடத்தையோ, திறமையோ சரியில்லை என்றால் பொதுநலன் கருதி அவரைப் பதவியிலிருந்து ஓய்வுபெறச் செய்யலாம் என்று 56 (ஜே) பிரிவு கூறுவதை அமல் செய்வதில் தவறே இல்லை என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார். தாங்கள் வகிக்கும் பதவிக்குத் தகுதி அற்றவர்கள், திறமை அற்றவர்கள், சந்தேகப்படும்படியான நடத்தை உள்ளவர்கள் (ஊழல் செய்கிறவர்கள்) ஆகியோரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவின் உண்மையான நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இந்த முறையைக் கையாண்டு, உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த பல அதிகாரிகளின் பணியேட்டை ஆராய்ந்து, சிலரைப் பதவி நீக்கம் செய்தது நல்ல பலனைத் தந்திருப்பதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இந்த யோசனை நீதித்துறையில் உயர் அதிகாரிகள், குறிப்பாக நீதிபதிகள் பற்றியது என்றாலும் மத்திய, மாநில அரசுகளிலும் அரசுத்துறை நிறுவனங்களிலும் இதைப் பின்பற்றுவது நாட்டு நலனுக்கு உகந்ததாகும். திறமை இருந்தும், விஷயம் தெரிந்திருந்தும், பணி செய்யாமல் சோம்பிக்கிடக்கும் அதிகாரிகளைக் கடமையைச் செய்யவைக்க இது நல்ல தூண்டுகோலாக அமையும். அதிகாரிகள் மட்டும் அல்ல, அவருக்குக் கீழே பணிபுரிகிறவர்களும் நேர்மையாக, சிறப்பாக மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் பணியாற்ற இது பேருதவியாக இருக்கும். எப்படிச் செயல்பட்டாலும் ஓய்வுபெறும் வயதுவரை நம்மை யாராலும் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்ற எண்ணமே பெரும்பாலான அரசு ஊழியர்களிடம் காணப்படுகிறது. மிகவும் அசாதாரணமான நிலைமைகளில் மட்டுமே அரசு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி ஓய்வு தருவது, வேலையிலிருந்து நீக்குவது போன்ற செயல்களில் மேல் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
ஊழல், சோம்பேறித்தனம், கீழ்ப்படியாமை, திறமைக்குறைவு, வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் யாரையும் தயவு தாட்சண்யம் பாராமல் தண்டித்துக் கொண்டே இருந்தால்தான் ஊழல், விரயம் குறையும். ஆனால் அப்படி தண்டிப்பது என்பது மேல் அதிகாரிகளின் பழிவாங்கும் போக்குக்கு உதவியாக அமைந்துவிடாமல், சட்டப்படியும், வெளிப்படையான நிர்வாக நடவடிக்கைகள் வாயிலாகவும் நடைபெற வேண்டும். தண்டனை பெறும் யாரும் முறையிடவும், உரிய பரிகாரம் காணவும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
முழுதாக எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை வைத்துள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை மட்டும் அல்ல, சட்டப்படியான ஆட்சி நடைபெறும் நாடு என்ற புகழுக்கும் உரியவர்கள் நாம். இடைக்காலத்தில் நீதித்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் படிந்துவிட்ட கறைகளை அகற்ற தலைமை நீதிபதியின் இந்தப் பரிந்துரையைத் தீவிரமாக அமல் செய்வது மிகவும் நல்லது என்றே நாம் கருதுகிறோம்.
நன்றி : தினமணி

ஈழப் பிரச்னை இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும்!

இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பு 65 ஆயிரத்து 525 சதுரகிலோ மீட்டர். இதில் 29 சதவீதம் தமிழ் மரபுவழித் தாயகமாகும். இன்றைக்கு சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்குப் பகுதியில் 7 ஆயிரம் சதுர கிலோமீட்டரும், வடக்குப் பகுதியில் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டரும் பரப்பளவு உள்ள தமிழர்களின் எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் சிங்களர் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
பண்டித நேரு, பெருந்தலைவர் காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அனைவரும் 1950 60களில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களைக் குறித்து சிலாகித்துள்ளனர். மூதறிஞர் ராஜாஜி தொடக்கத்தில் இலங்கைத் தமிழர்கள் பூர்வீகத் தமிழர்கள் இல்லை என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு பூர்வீக மைந்தர்கள் என்று திருத்திக் கொண்டேன் என்பதை 1963ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி "மெயில்' ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சாஸ்திரி, இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பிறகு இலங்கை அரசுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தியா கேட்கும் என்ற தைரியம் ஏற்பட்டது. அதனால் ஈழத் தமிழர்களை இலங்கையின் பூர்வீக மண்ணின் மைந்தர்கள் என்று கருதாத நிலைமை ஏற்பட்டதால் தான் பிரச்னைகள் சிக்கலுக்கு மேல் சிக்கலாக்கியது.
1948ல் இலங்கை விடுதலை பெற்றது முதலே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கையின் பூர்வகுடியினராக விளங்குகின்ற தமிழ்மக்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். அதனால்தான் தந்தை செல்வா இதை எதிர்த்து 1949ல் தமிழ் அரசு கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1956ல் திரிகோணமலையில் நடைபெற்ற தமிழ் அரசு கட்சி மாநாட்டில் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை, தமிழர் அனைவருக்கும் குடியுரிமை, தமிழர் பகுதிகளில் சிங்களவரைக் குடியமர்த்துவதைத் தடுப்பது போன்ற கோரிக்கைகள் தீர்மானிக்கப்பட்டு மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக 1957ல் செல்வாவும், பண்டார நாயகாவும் இது குறித்து ஓர் ஒப்பந்தத்தைச் செய்த பின்பும் சிங்கள அரசு அதைக் கிடப்பில் போட்டது. 1958ல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டு தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
1958ல் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தமிழில் எழுத முடியாமல் தவித்தனர். 1960ல் நீதிமன்றம் சிங்களத்தை மட்டும் பயன்படுத்தியது. 1965ல் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சிக்குப் பெரும்பான்மை இடம் கிடைக்காமல், செல்வா தலைமையில் தமிழ் அரசு கட்சியின் ஆதரவோடு டட்லி சேனநாயகா பிரதமரான பிறகும்கூட தமிழர்களுக்கு மாவட்ட மன்றங்கள், தமிழ் நிர்வாக மொழி என்று அறிவிக்கப்பட்ட உறுதிமொழி குப்பையில் போடப்பட்டது.
1970ல் சிங்கள மாணவர்களைவிட தமிழ் மாணவர்கள் உயர்கல்விக்குச் சேர வேண்டும் என்றால் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது இலங்கை அரசு. கொதித்தெழுந்தார்கள் தமிழ் மக்கள். அதுதான் தமிழ்ச் சமுதாயம் வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. 1972ம் ஆண்டு வரை தமிழர்கள் அதிகாரங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பையே வலியுறுத்தினர். இந் நிலையில் தமிழர்களைக் கலந்தாலோசிக்காமல் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு விரோதமாக ஒற்றை ஆட்சி முறை நிறுவப்பட்டது. 24 ஆண்டுகள் இவ்வாறு தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் 1976ல் தமிழ் அரசுக் கட்சியும், மலையகத் தமிழர்களும் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தமிழர்களுக்குத் தனி நாடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி அதன்பின் செல்வா மறைவுக்குப் பின்பு நடந்த தேர்தலில், இக்கோரிக்கையை முன்வைத்து 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது. அப்போதுதான் அங்குள்ள தமிழ் மக்கள் முதன்முதலாகத் தனிநாடு கோரிக்கைக்குத் தேர்தல் மூலம் ஆதரவு தெரிவித்தனர்.
1983ல் நடந்த கொடுமையான இனப்படுகொலையைக் கொடிய அரசு பயங்கரவாதம் என உலகமே கண்டித்து கண்ணீர் வடித்தது. இந்திரா காந்தி காலத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கின்ற ஓர் அணுகுமுறையை, அதேநேரத்தில் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களையும் பாதுகாத்துக் கொள்கின்ற தொலைநோக்குச் சிந்தனை கொண்ட ஓர் அணுகுமுறையை அவர் வகுத்தார் என்பதை மறுக்க இயலாது. இந்திரா அம்மையாரின் மறைவுக்குப் பிறகுதான், இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை முற்றிலுமாக மாறத் தொடங்கியது எனலாம். ஈழத் தமிழர் பிரச்னையில் நடந்த கசப்பான சம்பவங்களைக் கொண்டே பிரச்னையைப் புறந்தள்ள முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கவலைகள், துக்கங்கள் இருந்தாலும் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் பஞ்சாப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்பட அக்கறை செலுத்தியது போலவே ஈழப் பிரச்னையிலும் கடந்தகால துன்பவியல் சூழலை மட்டும் மனதில் கொள்ளாமல் ஈழத் தமிழரைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியாவின் பாதுகாப்புப் பிரச்னையும் அடங்கியுள்ளது. 1970களில் இந்திய மகா சமுத்திரத்தில் அமெரிக்க ஆயுத தளம் டீகோகரசியா பிரச்னையில் இந்தியாவும், சோவியத் யூனியனும் கண்டனக் குரல் எழுப்பியபோது இலங்கை அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தது. ஒரு காலத்தில் திரிகோணமலை துறைமுகத்தை மேற்கத்திய ஆதிக்க சக்திகள் இந்தியாவை மனத்தில் கொண்டு அப்பகுதியைக் குத்தகைக்குக் கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டன.
அப்போதெல்லாம் இந்திய பாதுகாப்புக்குப் பிரச்னை ஏற்படும் என்று ஈழத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதை நாம் மறுக்க முடியாது.
ஈழத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவையும் நேசிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவோடு சீனா, பாகிஸ்தான் போர் தொடுத்தபோது நிதி அளித்தது மட்டுமல்லாமல் சகோதர பாசத்தோடு இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர் என்பது வரலாற்றுச் செய்திகள். அன்றைக்கு ஈழத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் சீனாவையும், பாகிஸ்தானையும் கடுமையாகக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இந்தியாவுக்கு நிதி சேர்த்து அங்குள்ள தமிழர்கள் நேரு பிரதமராக இருந்தபோது அனுப்பினர். ஆனால், சிங்கள அரசோ சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக மெளனம் சாதித்தது.
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்றபோது, இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த ரோகனா விஜய் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியும், 1990ம் ஆண்டு அக்கொடியவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட செய்தி, இலங்கை ஒருமைப்பாட்டை கவலைகொள்ளும் இந்திய அரசுக்குத் தெரியுமா?
இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதராகச் செயல்படும் பசீது வாலி முகமது முயற்சியால் பாகிஸ்தானிலிருந்து இரண்டு கப்பல் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அக்கப்பல் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 14ல் இலங்கைத் துறைமுகத்திற்கு வந்தது. இந்த பசீது வாலி வேறு யாருமில்லை; இந்தியாவில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் ஊக்குவித்த ஐ.எஸ்.ஐ.இன் முன்னாள் தலைவர் என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? இன்றைக்கு இந்த பசீது வாலி இலங்கை அரசுக்கு உண்மைத் தோழனாக உற்ற நண்பராக இருக்கிறார். இது மத்திய அரசுக்குத் தெரியுமா?
இலங்கையின் ஒருமைப்பாடு என்று சொல்லிக்கொண்டே இந்தியா இருக்காமல் எதார்த்த நிலை அறிந்து கடமையாற்ற வேண்டும். இலங்கைக்கு வழங்கிய ராடார்கள் திரும்பப் பெற வேண்டும்; அங்கு அனுப்பப்பட்ட ராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும். இந்தியா கடன் கொடுப்பதாகச் சொன்ன உத்தரவாதத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் ஏற்றுக்கொண்ட தகவல் பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும். இந்தியாவில் ஒருபொழுதும் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கக் கூடாது. ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் தொடங்குவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை இந்தியா அனுப்ப வேண்டும். சிங்களத் தலைவர்கள் இந்தியத் தலைவர்களை அடிக்கடி சந்திப்பதைப் போன்று ஈழத் தமிழர் தலைவர்களும் இந்திய அரசாங்கத்தையும், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தங்களுடைய பிரச்னைகளை விவாதிக்க வாய்ப்புத் தர வேண்டும்.
பாலஸ்தீனத்திற்கும், வங்க தேசத்திற்கும் கிழக்குத் தைமூருக்கும், ருவாண்டா பட்டினிப் பிரச்னையிலும் ஈரான், இராக், நேபாளம் போன்ற சர்வதேச பிரச்னைகளில் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகளைப் போன்று அருகில் உள்ள இலங்கையின் பிரச்னையைத் தீர்க்கவும் இந்தியா முன்வர வேண்டும் என்பதுதான் தமிழினத்தின்மீது அக்கறை உள்ளவர்களின் கோரிக்கை, வேண்டுகோள் எல்லாமே!
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
நன்றி : தினமணி