Sunday, October 19, 2008

நானோ சொல்லும் பாடம்!

சிங்குரிலிருந்து குஜராத்திலுள்ள சானந்துக்கு "தப்பியோடி' இருக்கிறது டாடாவின் நானோ கார். இந்த விவகாரத்திலிருந்து நல்ல பாடத்தை டாடா கற்றுக் கொண்டிருக்கிறார். ஆட்சியாளர் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சமும் இதில் இருக்கிறது.
சிங்குரிலிருந்து புறப்பட்ட பயணம் அத்தனை சுகமாக இருக்காது என்று தெரிந்திருந்தாலும், பிரச்னை இத்துடன் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் தொழிற்சாலையை இடம் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டது. இடம் மாற்றுவது என்ற முடிவுக்கு டாடா வந்ததுமே, நானோ தொழிற்சாலையை வரவேற்க பல மாநிலங்கள் போட்டிபோட்டுக் கொண்டிருந்தன. அதில் குஜராத்தும் ஆந்திரப் பிரதேசமும் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டின. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நக்சலைட் பிரச்னையை டாடா கவனத்தில் எடுத்துக் கொண்டதால், நானோ வாய்ப்பு குஜராத்துக்கு போயிருக்கிறது. 2002ம் ஆண்டு நடந்த கலவரத்துக்குப் பிறகு குஜராத்துக்கும் மோடிக்கும் ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் நற்சான்றாகவே இது கருதப்படுகிறது.
ஆனால், இங்கும் பிரச்னை தொடர்கிறது. சானந்தில் நானோ தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் தங்களது முன்னோர்களுக்குச் சொந்தமானது; அதற்குரிய இழப்பீட்டை வழங்கியாக வேண்டும் என்று வலியுறுத்தி ராஜபுத்திரக் குடும்பத்தவர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். 1902ம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு 100 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மாநில அரசு திருப்பித் தரவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இடம் தங்களுக்கே சொந்தமானது எனவும் அதற்குரிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அரசு கூறியிருக்கிறது. என்ன ஆனாலும், சானந்த், இன்னொரு சிங்குராக மாறாது என டாடாவுக்கு மோடி உறுதியளித்திருக்கிறார்.
நானோ விவகாரம், நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஐரோப்பாவில் 3 லட்சம் கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை 250 ஏக்கரில் டொயோட்டா நிறுவனம் அண்மையில் அமைத்தது. அப்படியிருக்கும்போது, ஒரு லட்சம் நானோ கார்களை மட்டும் தயாரிப்பதற்கு டாடாவுக்கு 1000 ஏக்கர் நிலம் ஏன் தேவைப்படுகிறது? அதையும் அடிமாட்டு விலைக்கு அரசு ஏன் கொடுக்க வேண்டும்? எதற்காக வளமான விவசாய நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும்? நலிவடைந்த நிலையிலும் மூடப்பட்ட நிலையிலும் இருக்கும் தொழிற்பேட்டைகளில்கூட டாடாவுக்குத் தேவையான துணைத் தொழிற்சாலைகளை அமைக்க டாடா ஏன் முன்வரவில்லை? இந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் டாடாவிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ தெளிவான பதில்கள் இல்லை.
மேற்கு வங்க அரசியலில் தவிர்க்க முடியாத முக்கியத் தலைவரான மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்த டாடா நிறுவனத்தினர் ஏன் தவறினார்கள் என்பது புதிர். முதல்வருடனும் வர்த்தக அமைச்சருடனும் மட்டுமே பேச்சு நடத்தி ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்திவிட முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள் போலும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை. ஆளுநர் தலையிட்டதால் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் 150 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்குத் திருப்பியளிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. அதற்கு மம்தாவும் ஒப்புக்கொண்டார். ஆனால், உடனடியாகத் தனது நிலையை மாற்றிக் கொண்டு 300 ஏக்கர் நிலத்தை திருப்பியளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதற்கு டாடா சம்மதிக்கவில்லை. காரணம், அந்த இடத்தில் கிடைக்கும் நீர்வளம்தான். அதைப் பயன்படுத்துவதற்குத்தான் அந்த இடத்தையே டாடா நிறுவனம் தேர்வு செய்திருந்தது.
சூழ்நிலையை மிகத் தாமதமாகக் கணித்ததும் அதைச் சமாளிக்க முடியாததாலுமே சிங்குரிலிருந்து டாடா வெளியேற வேண்டியதாயிற்று. இதனால், பணத்தையும் தாண்டிப் பல இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.
நிலைமை மோசமானதற்கு, இடதுசாரி அரசின் நிர்வாகத் திறமையின்மையும் ஒரு காரணம். ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல், மம்தாவையே எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டி வந்ததால், வேறு வழியில்லாமல் அவரும் எதிர்ப்பு அரசியல் நடத்த வேண்டியதாயிற்று.
அரசியில் ரீதியாக இடதுசாரிகளுக்கு எதிராக காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் நெருங்கி வருவதற்கு இந்த விவகாரம் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு ஏற்றபடியாக, நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இயற்றும் என சோனியா காந்தி உறுதியளித்திருக்கிறார். ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால், இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டு சேருவதற்கான வாய்ப்புக் குறைவு என்பதால், திரிணமூல் காங்கிரஸை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைத்துக் கொள்வதற்கு காங்கிரஸ் முயன்று வருகிறது. இடதுசாரிகள் இல்லாத கூட்டணியில் சேருவதில் திரிணமூல் காங்கிரஸுக்கும் தயக்கம் ஏதும் இல்லை. அப்படியொரு கூட்டணி ஏற்பட்டால் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிகளுக்கு நெருக்கடி ஏற்படும்.
ஏற்கெனவே இதற்கான அஸ்திவாரம் போட்டாயிற்று. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸும் திரிணமூலும் ரகசியக் கூட்டு வைத்துப் போட்டியிட்டன. இந்தக் கூட்டு, இடதுசாரிகளுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு தொழிற்சாலை போனதால், அரசியல் மாற்றம் ஏற்பட்டிருப்பதுடன், இடதுசாரி அரசின் கௌரவமும் போய்விட்டது.
டாடா கார் தொழிற்சாலையை மாநிலத்திலிருந்து வெளியேற்றிதால், நகர்ப்புறத்தில் மம்தாவுக்கு இருந்த செல்வாக்குச் சரிந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும், நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக எழுந்த மக்களின் மன உணர்வைப் பயன்படுத்தி மம்தா நடத்திய அரசியல், கிராமப் பகுதிகளில் அவருக்குச் செல்வாக்கைப் பெற்றுத் தந்திருக்கிறது. போராட்டங்களும் அதையொட்டி நடந்த வன்முறைகளும்கூட அவரைப் பரபரப்பான தலைவராக மாற்றியிருக்கிறது. நந்திகிராமிலோ சிங்குரிலோ நடந்த வன்முறைகளுக்கு மம்தா எந்த வகையிலும் காரணமில்லை என்றாலும், அந்த வன்முறைகளால் எழுந்த கோபத்தை அவர்தான் வாக்குகளாக்கப் போகிறார்.
டாடா கார் தொழிற்சாலை மேற்கு வங்கத்திலிருந்து வெறியேறியதுடன் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளை நிலங்களைக் கட்டாயப்படுத்திப் பெறுவதற்கு எதிரான போராட்டத்தின் துவக்கம்தான் இது. ஏற்கெனவே, மகாராஷ்டிரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். தில்லியின் புறநகர்ப் பகுதியில் இதுபோன்றதொரு பிரச்னைக்காக மாவட்ட ஆணையர் அலுவகத்தையே மூடும் அளவுக்கு தீவிரமான போராட்டம் நடந்திருக்கிறது. ஒரிசாவில் தொழிற்சாலை அமைப்பதற்குத் தேவையான நிலத்தைப் பெற முடியாமல் தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனம் திணறி வருகிறது. மக்கள் போராட்டத்தால், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டத்தையே கோவா அரசு கைவிட்டிருக்கிறது.
ஆட்சியாளர்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இடைவெளியை சிங்குர் விவகாரம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் இதன் தாக்கம் பெரிய அளவில் வெளிப்படும்.
உண்மையில், அரசின் அதிகார பலத்தையும், பெரிய நிறுவனங்களின் பண பலத்தையும் எதிர்த்துப் போராடுவது என்பது விவசாயிகளுக்கு எளிதானதல்ல. ஆனால், அதை அவர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இதை இப்போதே கவனிப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் பின்னால் வருந்த நேரும்.
நீரஜா செளத்ரி
நன்றி :தினமணி