Friday, October 24, 2008

தயாராகிறார் பவார்!

தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் சொன்னார். அமெரிக்காவும் அதன் கொள்கைகளும் முஸ்லிம்களை நசுக்குவதாக உள்ளதாகவும் அதனால் அவர்கள் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இராக் மீதான தாக்குதலையும் சுட்டிக் காட்டினார். இரண்டாவதாக அவர் குறிப்பிட்டது பாபர் மசூதி இடிப்பு. அதற்கு முன்பு பயங்கரவாத நடவடிக்கைகள் இருந்தன என்றாலும் இப்போது நடப்பது போன்று குண்டு வெடிப்புகளெல்லாம் நடந்தனவா என்று அவர் கேட்டார்.
சில நாள்களுக்கு முன்பு நடந்த வேறொரு நிகழ்ச்சியில், முஸ்லிம்களுக்கு எதிரான சூழல் உருவாகி வருவது குறித்து பவார் கவலை வெளியிட்டார். விசாரணைக்காக முஸ்லிம்களை போலீஸார் அழைத்துச் செல்லும்போது அவர்களது முகத்தைக் கருப்புத் துணியால் மூடும் வழக்கத்தைச் சாடிய அவர், ஹிந்துகளுக்கு இதுபோல நடக்கிறதா என ஆதங்கப்பட்டார். மீடியாவையும் அவர் விட்டுவைக்கவில்லை. பயங்கரவாதச் செயல்களுக்கு "மூளையாகச் செயல்பட்டவர்' என்று அவசர, அவசரமாகச் செய்தி வெளியிடுவதாகக் குறை கூறினார். ஹிந்துக்களை இப்படிச் சித்திரித்ததுண்டா எனவும் கேட்டார்.
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள மேரியோட் ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்தபோதும் சரத் பவார் இந்த ரீதியில்தான் கருத்தை வெளியிட்டார். பாகிஸ்தான் அரசைக் கேட்காமலேயே, அந்நாட்டு எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசினால், அந்நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்து எழாமல் என்ன செய்வார்கள்? எந்த நாட்டுக் குடிமகனும் இதைப் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்றார். அத்துடன் விடவில்லை, இந்த மாதிரியானதொரு சூழல்தான் பகத் சிங் உருவாகக் காரணமாக இருந்ததாக ஒரே போடாகப் போட்டார்.
சிறுபான்மை சமூகத்தினர் மீது சரத் பவாருக்கு வந்திருக்கும் இந்தத் திடீர் அக்கறையை அரசியல் நோக்கர்கள் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். பிரதமர் பதவியை அவர் குறிவைத்திருக்கிறாராம். மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கணக்குகள், பிராந்திய தலைவர் ஒருவர் தலைமையிலான அரசு அமைவதற்கான சூழலை ஏற்படுத்தினால், இது சாத்தியம்தான். அதற்கு மகாராஷ்டிரத்தில் கொஞ்சம் அதிக இடங்களை அவர் கைப்பற்றியாக வேண்டும். அதற்குத்தான் இந்தத் "திடீர் அக்கறை'.
உத்தரப்பிரதேசத்தில் உயர்வகுப்பினர், தலித்துகள், முஸ்லிம்கள் அடங்கிய வாக்கு வங்கியை காங்கிரஸிடமிருந்து மாயாவதி வளைத்தது போல, மகாராஷ்டிரத்தில் மராத்தியர்கள், முஸ்லிம்கள், மஹர்கள் ஆகியோரின் வாக்குகளை கைப்பற்ற பவார் திட்டமிட்டிருக்கிறார்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக பவார் பேசி வருவதால் ஹிந்துக்கள் ஓரணியில் திரளுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் அது சிவசேனைக்கு சாதகமாகிவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
தனது இலக்கை நோக்கிய பயணத்தில் பவார் செய்ய வேண்டிய முதல் பணி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸிடம் பேரம் பேசி அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுதான். அவரது வழக்கமான 50:50 கோரிக்கை நிறைவேறினால், மகாராஷ்டிரத்தில் உள்ள 48 தொகுதிகளில் 24 தொகுதிகள் கிடைக்கும். கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்த அவருக்கு இது போதும்.
பவார் முன் இருக்கும் இரண்டாவது சவால், தேர்தலில் வெற்றி பெறுவது. தற்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதுடன், கூடுதலாக நான்கைந்து இடங்களைப் பெற்றால்தான் பிரதமர் கனவு பலிக்கும்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மும்பையில் நடந்த கலவரங்களில் தொடர்புடையவர் என்ற கோணத்தில்தான் சரத்பவாரை முஸ்லிம் சமூகத்தினர் இதுவரை பார்த்து வந்தனர். ஆனால் தற்போது சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. தங்களுக்கு ஆதரவாகப் பேசும் ஒரு தலைவராகவே பவாரை முஸ்லிம்கள் தற்போது பார்க்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு பவார் மீது சந்தேகம்; பாஜக மீது வெறுப்பு. இதனால், அவர்கள் தங்களை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என காங்கிரஸ் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், பெரிய கட்சிகளை ஆதரித்து என்ன கண்டோம் என முஸ்லிம்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவியில் இருந்த பல முஸ்லிம்கள் அண்மையில் பதவி விலகியதே இதற்கு சாட்சி.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் சுயேச்சைகளை மறைமுகமாக ஆதரிக்க பவார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மராத்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இது காங்கிரஸைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. இது தவிர, மகாராஷ்டிரத்துக்கு வெளியிலும் அவருக்கு சில தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். பப்பு யாதவ், முக்தர் அன்சாரி போன்ற சுயேச்சைகள் வெற்றி பெற்றால் அவர்கள் பவாரை ஆதரிப்பார்கள். இந்தக் கணக்கில் 22 முதல் 25 பேரின் ஆதரவு பவாருக்குக் கிடைக்கும். இப்படியாக, வரும் மக்களவைத் தேர்தலில் மற்ற எந்த பிராந்திய தலைவரைக் காட்டிலும் அதிக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவராக பவார் இருப்பார்.
உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் நிலையிலும், மற்ற தலைவர்களே வெட்கப்படும்படியாக, மகாராஷ்டிரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சளைக்காமல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் பவார். தொண்டர்களோடு தொண்டராகப் பழகுவது, குக்கிராமத்தில் உள்ளவர்களைக்கூட பெயர் சொல்லி அழைப்பது என அவர் ஜனரஞ்சகமானவர். மகாராஷ்டிரத்தின் அனைத்துப் பகுதிகளையும் அவரை விட வேறு யாரும் துல்லியமாக அறிந்து வைத்திருக்க முடியாது. இது அவருடைய பலம்.
தற்போதிருக்கும் அரசியல் சூழலே தொடருமானால், மத்தியில் அடுத்து அமையவிருக்கும் அரசு பிராந்திய கட்சிகள் இணைந்து அமைப்பதாக இருக்கும் என பலரும் நம்புகிறார்கள். அப்படியொரு அரசை பாஜக ஆதரிப்பதைவிட காங்கிரஸ் ஆதரிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
தேர்தலில் தோற்றாலும், அரசை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இருக்கும் வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்றுதான் காங்கிரஸ் நினைக்கும். அந்த நிலையில், அந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறதோ அவர்தான் பிரதமராக முடியும். அந்தத் தருணத்தை எதிர்பார்த்துத்தான் பவார் காத்திருக்கிறார். நிர்வாக அனுபவம், பணபலம், மக்கள் ஆதரவு, இடதுசாரிகளிடம் நற்பெயர் போன்ற கூடுதல் தகுதிகள் அப்போது அவருக்கு உதவும்.
சோனியா வெளிநாட்டவர் என்ற பிரச்னையைக் கிளப்பி அவர் பிரதமராவதற்கு முட்டுக்கட்டை போட்டவர் பவார். அதை இன்னும் சோனியா மறக்கவில்லை. அதனால், பவார் பிரதமராவதற்கு சோனியா காந்தி தாமாக முன்வந்து ஆதரவளிக்க மாட்டார். ஆனால், மாயாவதியா பவாரா என்ற நிலை ஏற்படும்போது பவாரைத்தான் பிரதமராக்குவார்.
நான்கு முறை மகாராஷ்டிரத்தின் முதல்வராக இருந்தவர், மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், தற்போது வேளாண் அமைச்சராக இருந்து வருபவர் என்பன போன்ற பல தகுதிகளைக் கொண்ட பவார், ராஜீவ் படுகொலைக்குப் பிறகு பிரதமர் வாய்ப்பை 4 முறை தவற விட்டிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் தேர்தலில் தோல்வியையே சந்தித்திராத அவருக்கு இப்போது வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் பவார் தீவிரமாக இருக்கிறார் என்பதையே அவரது பேச்சுகள் காட்டுகின்றன.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

நாகரிகத்தின் முதல் அடையாளம்!

கழிவுநீர்க் குழாய்களுக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் முறைக்குத் தாற்காலிகத் தடை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். "பாதம்' எனும் தன்னார்வ நிறுவனத்தை நடத்திவரும் பொதுநலச் சேவகர் ஏ. நாராயணனின் மனுவின் மீதான விசாரணையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, மனிதக் கழிவுகளை அகற்றுவதற்குத் துப்புரவுத் தொழிலாளிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று சட்டம் இருக்கும்நிலையில், இதுபோல அவ்வப்போது கழிவுநீர் சாக்கடைகள் அடைபடும்போது அதை அகற்ற உள்ளாட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளே இறங்கி அடைப்புகளை அகற்றுவது மட்டும் எந்தவிதத்தில் நியாயம் என்று நாராயணன் எழுப்பிய கேள்விக்கு நல்லதொரு விடை கிடைத்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 17 மற்றும் 23க்கு எதிரானது இதுபோன்று மனிதர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றுவது மற்றும் சாக்கடைகளை உள்ளே இறங்கிச் சுத்தப்படுத்துவது போன்ற செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டு, இதுபோன்ற சுயமரியாதைக் குறைவான செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிட சகோதரர்களின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கப்பட்டு வரும் வேளையில், சாக்கடைக் குழாய்களைச் சுத்தப்படுத்துவதற்கு இன்றும் துப்புரவுத் தொழிலாளிகளைப் பயன்படுத்துவது தொடர்கிறது என்பதுதான் நிஜம்.
மேலைநாடுகளில், சாலைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதைவிட அதிக முக்கியத்துவம் கழிவுநீர்க் குழாய்களுக்கும், வெள்ள வடிகால் குழாய்களுக்கும் தரப்படுகிறது. அடைமழை பெய்யும் மும்பை நகரத்தில், நமது சென்னையைப்போல, ஆங்காங்கே கழிவுநீர்க் குழாய்கள் அடைபடுவதில்லை. அதற்குக் காரணம், தொலைநோக்குப் பார்வையுடனும், முன்யோசனையுடனும் பெருகிவரும் மக்கள்தொகையை மனதில் கொண்டு கழிவு மற்றும் வெள்ள வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதுதான். அதுமட்டுமல்ல, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் மும்பை மாநகராட்சி சுறுசுறுப்பாக இயங்கி, அந்த மாநகரத்தின் அத்தனை கழிவுநீர்க் குழாய்களிலும் ராட்சத இயந்திரங்கள் மூலம் அடைப்பை அகற்றி விடுகிறார்கள்.
நமது தமிழகத்தில், சாக்கடைகளும், கழிவுநீர்க் குழாய்களும் தொடர்ந்து முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, பெருகிவரும் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு அடுத்த 50 ஆண்டுகளின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படவும் இல்லை. அது ஒருபுறம் இருக்க, கழிவுநீர் ஓடைகளைத் துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் நலன் பேணப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது.
இதுபோன்ற சாக்கடைக் குழாயில் நுழைந்து அடைப்புகளை சரிசெய்யவும், மலக்கிடங்குகளின் அடைப்பை அகற்றவும் முன்வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளோ, அவசரகால மருத்துவ உதவியோ தரப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது. மலக்கிடங்குகளிலிருந்தும், கழிவுநீர்க் குழாய்களிலிருந்தும் வெளிவரும் விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்கள் பலர். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பும் கிடையாது, மரணமடைந்தால் போதிய நஷ்ட ஈடும் கிடையாது என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.
மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுவிட்டதால், இந்த வேலைக்கு தாற்காலிக ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதால் நஷ்ட ஈடு அவர்களுக்கு மறுக்கப்பட்டு விடுகிறது. சமீபகாலமாக, இந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது என்றாலும் அதனால் எந்தப் பயனும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
சகிக்க முடியாத துர்நாற்றமும், விஷ வாயுவும் உள்ள குழாய்களில் நுழைய இந்தத் தொழிலாளர்கள் மது அருந்துவது வழக்கம். அதுவும் இல்லையென்றால் இந்தத் துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது. மது அருந்தி இருந்தார்கள் என்பதைக் காரணம் காட்டி, மரணமடைந்த தொழிலாளர்கள் பலருக்கு நஷ்ட ஈடு தரப்படவில்லை என்று தெரிகிறது. அரசோ, குடிநீர் வடிகால் வாரியமோ நஷ்ட ஈடு தந்தால், அதை ஒப்பந்தக்காரர்கள் வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இறுதி அடக்கத்துக்கான செலவைத்தான் தருகிறார்கள்.
மனித சமுதாயத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறி விட்டிருக்கும் பிளாஸ்டிக்குகள்தான் இந்தக் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கு மூலகாரணம். பொதுமக்கள் சமூக பிரக்ஞையுடன் இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதிலும், குப்பைத் தொட்டிகளில் போடுவதிலும் கவனம் செலுத்தினாலே, இந்தக் கழிவுநீர் அடைப்புகள் பிரச்னை முக்கால்வாசி குறைந்துவிடும்.
முறையான கழிவுநீர், சாக்கடைக் குழாய்கள், அவற்றை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் வழிமுறைகள் ஆகியவை காலத்தின் கட்டாயம். மனிதனை மனிதனாக நடத்தும் நாகரிகத்தின் முதல் அடையாளம் சாக்கடையை மனிதன் சுத்தம் செய்யாமல் இருப்பதுதான்!
நன்றி : தினமணி

கிராம வங்கிகளின் நோக்கம் நிறைவேறுகிறதா?

ஏழைகளுக்குக் கடன் வழங்குவதில் ""பாங்க்ளா கிராமீன் பேங்க்'' போல மற்றொரு அமைப்பு உண்டா என்று உலகம் முழுக்க இப்போது பாராட்டுகிறார்கள்; அத்தோடு விட்டார்களா, அதைப் போலவே நம் நாட்டிலும் வங்கிகள் தேவை என்று அதன் பாணியைப் பின்பற்றி வங்கிகளைத் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வங்கிக்கும் அதைத் தோற்றுவித்த முகம்மது யூனுஸுக்கும் ஒரு சேர நோபல் விருது கூட தந்துவிட்டார்கள்.
அந்த வங்கிக்கு இணையாக சொல்லக்கூடிய நம்முடைய ""பிராந்திய ஊரக வங்கிகள்'' (ஆர்.ஆர்.பி.) கூட சமீபத்தில் ஒரு சாதனையைப் படைத்துள்ளன. அச் சாதனை ஏழைகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்த சாதனை அல்ல; 1993ல் மரணப்படுக்கையில் விழுந்துவிட்ட பிராந்திய ஊரக வங்கிகள், அரசு அடுத்தடுத்து எடுத்த சீரமைப்பு நடவடிக்கைகளால் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து நடமாடும் அளவுக்குத் தெம்பைப் பெற்றதுடன் லாபமும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டன.
அப்படியானால் நாமும் அதுகுறித்து சந்தோஷப்படலாம்தானே? அதுதான் இல்லை. எந்த நோக்கத்துக்காக இந்த வங்கிகள் தொடங்கப்பட்டனவோ அவற்றையெல்லாம் கைவிட்டு, லாபம் ஒன்றே குறி என்று பாதை மாற்றப்பட்டதால்தான் இந்த புத்துயிரும், மீட்சியும் என்னும்போது எப்படி பாராட்ட முடியும்?
இலக்குகள் என்ன? பிராந்திய கிராமப்புற வங்கிகளின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் அது தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் அதிலிருந்து வெகுதூரம் விலகி வந்திருப்பதையும் நம்மால் உணர முடியும்.
1975ல் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது இந்த வங்கிகள் திறக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழிக்கேற்ப இதற்கு கிராம வங்கி, கிராமின் பேங்க், கிராம்ய பேங்க், கிராமீனா பேங்க், எலாகாய் திஹாட்டி பேங்க், காவோன்லியா பேங்க் என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டது.
சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள், வீதிகளில் கூவி வியாபாரம் செய்யும் தலைச்சுமை வியாபாரிகள், வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் ஏழைகள் ஆகியோருக்குக் கடன் தரத்தான் இந்த கிராம வங்கிகள் திறக்கப்படுகின்றன என்று இந்த வங்கி பற்றிய அரசின் விளக்கக் குறிப்பின் முதல் வாசகமே தெரிவிக்கிறது.
வணிக வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் ஏதோ ஒரு காரணத்தால் கிராமப்புற ஏழைகளுக்குக் கடன் தரும் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதால், அந்தக் குறையை இட்டு நிரப்பவே கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டன.
எம். நரசிம்மன் தலைமையில் அவசர அவசரமாக நிறுவப்பட்ட ஒரு செயல்பாட்டுக்குழு அளித்த பரிந்துரைகளின்பேரில்தான் இந்த கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன. வங்கித்துறையின் கூடுதல் செயலராகப் பதவி வகித்தவரும், 1990களின் தொடக்கத்தில் நிதித்துறை சீர்திருத்தம் குறித்து பரிந்துரைகளை அளித்தவருமான அதே நரசிம்மன்தான் இவர்.
இந்த கிராமப்புற வங்கி தொடங்கப்பட்டபோது மத்திய அரசு, வங்கி இருந்த மாநிலத்தின் அரசு, இந்த வங்கியைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய மூன்றும் சேர்ந்து பங்கு மூலதனத்தை 50:15:35 என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும் என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது.
சமூகப் பலனும், செலவும்: இந்த வங்கி ஏழைகளுக்கும், தொலைதூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடன் தரப்போகிறது என்பதால் இது லாபகரமாக இருக்க முடியாது, நஷ்டம்தான் ஏற்படும் என்று முதலிலேயே எதிர்பார்த்து அதற்கேற்பச் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை நஷ்டங்களே அல்ல, ஏழைகளை முன்னேற்ற அரசு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கான செலவுகளே இவை என்று முதலில் கருதப்பட்டன.
இவை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1990க்குள் இவற்றின் எண்ணிக்கை 196 ஆகவும் இவற்றின் கிளைகளின் எண்ணிக்கை 14,500 ஆகவும் உயர்ந்தன. அதுவரை வங்கிச் சேவை என்றால் என்னவென்றே தெரியாத காடு, மலை, பழங்குடி பகுதிகளுக்கெல்லாம் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டது. 12 கோடியே 30 லட்சம் பேர் இந்த வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றனர்.
இந்த வங்கிகள் செய்த சேவையை இப்படியெல்லாம் மதிப்பிடாமல் அதன் லாபநஷ்ட கணக்கைப் பார்த்தனர் அதிகாரிகள். தொடங்கிய நாள்தொட்டு 199192 வரையில் இந்த வங்கிகளால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் வெறும் 621 கோடி ரூபாய்தான்; அப்போதிருந்த 196 கிராமவங்கிகளில் 152 லாபம் ஈட்டாமல் செயல்பட்டுவந்தன. அந்த நஷ்டத்தை மொத்த வங்கிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் ஒரு வங்கிக்கு ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய்தான் வருவாய் இழப்பு. ஏழைகளுக்கு அது ஆற்றிய தொண்டுடன் ஒப்பிட்டால் இது ஒரு நஷ்டமே அல்ல.
லாபமே குறி: அரசின் கொள்கைகளை வகுக்கும் அதிகாரிகளுக்கு இந்த கிராமப்புற வங்கிகள் லாபம் சம்பாதிக்காமல் இருப்பது பெரிய உறுத்தலாக இருந்தது. எனவே சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்கள். அதற்காக இந்த வங்கிகள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அந்த லட்சியங்களிலிருந்து விலகினாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்தார்கள்.
முதல் நடவடிக்கையாக, ஏழைகளுக்கு மட்டுமே கடன் தருவது என்ற முடிவை மாற்றி, தேவை என்று கேட்டால் பணக்காரர்களுக்கும் கடன் கொடுக்கலாம் என்று அனுமதித்தார்கள்.
குறைந்த வட்டியில் கடன் என்ற லட்சியம் அடுத்து காவு கொடுக்கப்பட்டது. வங்கி அதிகாரிகளுக்குக் கொடுத்த செயல்பாட்டுச் சுதந்திரம் காரணமாக, பிற வணிக வங்கிகளைவிட அதிக வட்டியை வசூலிக்க ஆரம்பித்தார்கள்.
கிராமப்புறங்களில் டெபாசிட்டுகளைத்திரட்டி அவற்றை கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும், நகர்ப்புறங்களில் கிடைக்கும் தொகையையும் கிராமப்புறங்களில் கடன்தர திருப்பிவிட வேண்டும் என்ற லட்சியம் அடுத்து கைவிடப்பட்டது. விளைவு, டெபாசிட்டாகத் திரட்டப்பட்ட தொகையில் சரிபாதிதான் அந்தந்த பகுதியில் கடனாக வழங்கப்பட்டது.
தலைகீழாகிவிட்டது: நகர்ப்புற நிதி கிராமப்பகுதி வளர்ச்சிக்குக் கிடைப்பதற்குப் பதிலாக, கிராமப்புறத்தவர்கள் போடும் டெபாசிட் தொகையில் கணிசமான பகுதி நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குக் கடன்தர திருப்பிவிடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்குக் கிடைக்கும் டெபாசிட்டுகளை நகர்களில் முதலீடு செய்யும் அளவை 55% முதல் 60% வரை இந்த வங்கிகள் உயர்த்திக் கொண்டுள்ளன.
2007ல் கிராமப்புற வங்கிகள் டெபாசிட்டாகத் திரட்டிய தொகையின் அளவு ரூ.83,143.55 கோடி. அதில் ரூ. 45,666.14 கோடியை அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காக பங்கு பத்திரங்களில் முதலீடு செய்தனர்.
கிராமப்புறங்களில் ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிச் சேவையைக் கொண்டு செல்வதுதான் நாலாவது பெரிய லட்சியமாக இருந்தது. ஆனால் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த நோக்கத்துக்கு உகந்ததாக இல்லை. நஷ்டம் ஏற்பட்டதால் 1.014 கிராமப்புற கிளைகள் மூடப்பட்டு நகர்ப்புறங்களிலும் பெரு நகரங்களிலும் புதிய கிளைகளாக முகிழ்த்தன.
2008 மார்ச் மாத கணக்குப்படி மொத்த கிராம வங்கிக்கிளைகள் 14,458. அவற்றில் உண்மையிலேயே கிராமங்களில் இப்போதும் உள்ளவற்றின் எண்ணிக்கை 11,353. பாதி நகர்ப்புறங்களாக வளர்ந்துவிட்ட பகுதிகளில் 2,561 கிளைகளும், நகரப்பகுதிகளில் 584ம் உள்ளன. இதைவிட அதிசயம் பெரு நகரங்களில் 60 வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன.
2005 செப்டம்பரிலிருந்து தொடங்கப்பட்ட வங்கிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இவ்வங்கிகளின் பிராந்தியத் தன்மையும் அடிபட்டுப்போனது. 196 ஆக இருந்த பிரந்திய கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 2008 மே மாதத்தில் 88 ஆகக் குறைக்கப்பட்டது. ஒரே மாதிரியான வேளாண் பருவநிலை உள்ள பகுதியில் கிராம வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற முடிவுகள் கைவிடப்பட்டன. வங்கியின் செயல்பாட்டுக்கு உரிய மாவட்டங்கள் அடுத்தடுத்து இருக்க வேண்டும் என்ற வரையறையும் கைவிடப்பட்டது.
கடைசியாக, இந்த வங்கிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றனவோ அந்த மாநில அரசு ஊழியர் வாங்கும் ஊதியமே இவர்களும் பெற வேண்டும் என்று, வங்கியின் செலவைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கால், பிற வணிக வங்கிகளின் ஊதிய விகிதமே கிராமப்புற வங்கிகளின் ஊழியர்களுக்கும் தரப்பட வேண்டும் என்று தேசிய நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி அந்த நோக்கத்தையும் முறியடித்தது.
இப்படியாக, பிற வணிக வங்கிகளைவிட அதிக லாப நோக்கமுள்ள வங்கியாக பிராந்திய கிராமப்புற வங்கிகள் மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் வங்கியின் லாபம் அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது.
200708ம் ஆண்டில் கிராமப்புற வங்கிகள் மூலம் கிடைத்த நிகர லாபம் ரூ.625.11 கோடி. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.617.13 கோடி. அதற்கும் முந்தைய ஆண்டு ரூ.748.11 கோடி.
தன்னுடைய சமூகப் பொறுப்பை உதறித்தள்ளிவிட்ட இந்த வங்கிகளால் இனி வணிக வங்கிகளாகக் கூட செயல்பட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடன் தள்ளுபடி, தவணைக்காலம் நீட்டிப்பு, வாராக்கடன் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் நிதி நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகமாகி வருகிறது.
நாட்டில் உள்ள மொத்த வங்கிக்கிளைகளுடன் ஒப்பிடும்போது கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கையானது 19.58 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இவை திரட்டும் டெபாசிட்டுகளோ மற்ற வங்கிகள் திரட்டும் டெபாசிட்டுகளுடன் ஒப்பிட்டால் வெறும் 2.01 சதவீதமாக இருக்கிறது. அதே போல கிராமப்புறங்களில் செயல்படும் பிற வங்கிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 36.94% ஆக இருக்கிறது, ஆனால் அது தரும் வங்கிக் கடன் அளவு வெறும் 10% தான்.
கிராமப்புற வங்கிகளைச் சீரமைக்க எடுத்த நடவடிக்கைகளால் அது தன்னுடைய ஆரம்பகால லட்சியங்களிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டன; அப்படியும் அவை பிற வணிக வங்கிகளைவிட அதிக டெபாசிட்டுகளைத் திரட்டிவிடவில்லை, லாபத்தையும் சம்பாதிக்கவில்லை. கிராமப்புற வங்கிகள் இன்னமும் தனி அமைப்பாகத்தான் செயல்பட வேண்டுமா, அதன் நோக்கம் என்ன, லாபம் சம்பாதிப்பதா, கிராமங்களுக்குச் சேவை செய்வதா? அரசுடைமையாக்கப்பட்ட வணிக வங்கிகளால் ஏழைகள், சிறுகுறு விவசாயிகள், கிராமப்புற கைவினைஞர்கள் போன்றோருக்குக் கடன் தர முடியவில்லை என்பதற்காகத்தானே கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டன, அவர்களுக்குக் கடன் தர மாற்று அமைப்புகள் உருவாகிவிட்டனவா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேவை. சில கேள்விகளுக்கு இந்த சீர்திருத்தங்களால்கூட விடை காண முடியாது.
பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி