Friday, October 24, 2008

நாகரிகத்தின் முதல் அடையாளம்!

கழிவுநீர்க் குழாய்களுக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் முறைக்குத் தாற்காலிகத் தடை விதித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். "பாதம்' எனும் தன்னார்வ நிறுவனத்தை நடத்திவரும் பொதுநலச் சேவகர் ஏ. நாராயணனின் மனுவின் மீதான விசாரணையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, மனிதக் கழிவுகளை அகற்றுவதற்குத் துப்புரவுத் தொழிலாளிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று சட்டம் இருக்கும்நிலையில், இதுபோல அவ்வப்போது கழிவுநீர் சாக்கடைகள் அடைபடும்போது அதை அகற்ற உள்ளாட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளே இறங்கி அடைப்புகளை அகற்றுவது மட்டும் எந்தவிதத்தில் நியாயம் என்று நாராயணன் எழுப்பிய கேள்விக்கு நல்லதொரு விடை கிடைத்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 17 மற்றும் 23க்கு எதிரானது இதுபோன்று மனிதர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றுவது மற்றும் சாக்கடைகளை உள்ளே இறங்கிச் சுத்தப்படுத்துவது போன்ற செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டு, இதுபோன்ற சுயமரியாதைக் குறைவான செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிட சகோதரர்களின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கப்பட்டு வரும் வேளையில், சாக்கடைக் குழாய்களைச் சுத்தப்படுத்துவதற்கு இன்றும் துப்புரவுத் தொழிலாளிகளைப் பயன்படுத்துவது தொடர்கிறது என்பதுதான் நிஜம்.
மேலைநாடுகளில், சாலைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதைவிட அதிக முக்கியத்துவம் கழிவுநீர்க் குழாய்களுக்கும், வெள்ள வடிகால் குழாய்களுக்கும் தரப்படுகிறது. அடைமழை பெய்யும் மும்பை நகரத்தில், நமது சென்னையைப்போல, ஆங்காங்கே கழிவுநீர்க் குழாய்கள் அடைபடுவதில்லை. அதற்குக் காரணம், தொலைநோக்குப் பார்வையுடனும், முன்யோசனையுடனும் பெருகிவரும் மக்கள்தொகையை மனதில் கொண்டு கழிவு மற்றும் வெள்ள வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதுதான். அதுமட்டுமல்ல, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் மும்பை மாநகராட்சி சுறுசுறுப்பாக இயங்கி, அந்த மாநகரத்தின் அத்தனை கழிவுநீர்க் குழாய்களிலும் ராட்சத இயந்திரங்கள் மூலம் அடைப்பை அகற்றி விடுகிறார்கள்.
நமது தமிழகத்தில், சாக்கடைகளும், கழிவுநீர்க் குழாய்களும் தொடர்ந்து முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, பெருகிவரும் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு அடுத்த 50 ஆண்டுகளின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படவும் இல்லை. அது ஒருபுறம் இருக்க, கழிவுநீர் ஓடைகளைத் துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் நலன் பேணப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது.
இதுபோன்ற சாக்கடைக் குழாயில் நுழைந்து அடைப்புகளை சரிசெய்யவும், மலக்கிடங்குகளின் அடைப்பை அகற்றவும் முன்வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளோ, அவசரகால மருத்துவ உதவியோ தரப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது. மலக்கிடங்குகளிலிருந்தும், கழிவுநீர்க் குழாய்களிலிருந்தும் வெளிவரும் விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்கள் பலர். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பும் கிடையாது, மரணமடைந்தால் போதிய நஷ்ட ஈடும் கிடையாது என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.
மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுவிட்டதால், இந்த வேலைக்கு தாற்காலிக ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதால் நஷ்ட ஈடு அவர்களுக்கு மறுக்கப்பட்டு விடுகிறது. சமீபகாலமாக, இந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது என்றாலும் அதனால் எந்தப் பயனும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
சகிக்க முடியாத துர்நாற்றமும், விஷ வாயுவும் உள்ள குழாய்களில் நுழைய இந்தத் தொழிலாளர்கள் மது அருந்துவது வழக்கம். அதுவும் இல்லையென்றால் இந்தத் துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது. மது அருந்தி இருந்தார்கள் என்பதைக் காரணம் காட்டி, மரணமடைந்த தொழிலாளர்கள் பலருக்கு நஷ்ட ஈடு தரப்படவில்லை என்று தெரிகிறது. அரசோ, குடிநீர் வடிகால் வாரியமோ நஷ்ட ஈடு தந்தால், அதை ஒப்பந்தக்காரர்கள் வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இறுதி அடக்கத்துக்கான செலவைத்தான் தருகிறார்கள்.
மனித சமுதாயத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறி விட்டிருக்கும் பிளாஸ்டிக்குகள்தான் இந்தக் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கு மூலகாரணம். பொதுமக்கள் சமூக பிரக்ஞையுடன் இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதிலும், குப்பைத் தொட்டிகளில் போடுவதிலும் கவனம் செலுத்தினாலே, இந்தக் கழிவுநீர் அடைப்புகள் பிரச்னை முக்கால்வாசி குறைந்துவிடும்.
முறையான கழிவுநீர், சாக்கடைக் குழாய்கள், அவற்றை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் வழிமுறைகள் ஆகியவை காலத்தின் கட்டாயம். மனிதனை மனிதனாக நடத்தும் நாகரிகத்தின் முதல் அடையாளம் சாக்கடையை மனிதன் சுத்தம் செய்யாமல் இருப்பதுதான்!
நன்றி : தினமணி

0 comments: