Friday, September 5, 2008

விபத்தைத் தொடரும் "விபத்து'கள்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. அப்படியானதொரு சம்பவம் தில்லி உயர் நீதிமன்றத்தில் சென்ற வாரம் நடைபெற்றது. மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.கே. ஆனந்த், ஐ.யு.கான் ஆகிய இருவருக்கும் தில்லி நீதிமன்றத்தில் ரூ.2000 அபராதமும், நான்கு மாதங்களுக்கு வழக்காடக் கூடாது என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனைக்கான காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். கடற்படையின் முன்னாள் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரன் ஓட்டிய கார் மோதியதில் 6 பேர் இறந்தனர். நந்தா தரப்பில் ஆர்.கே. ஆனந்த் வாதாடினார். ஐ.யு. கான் அரசுத் தரப்பு வழக்குரைஞர். ஆனால் இருவரும் ஒன்றுசேர்ந்து, குற்றவாளிக்கு எதிரான சாட்சியைப் பிறழ் சாட்சியாக மாற்ற முயற்சித்ததை தனியார் தொலைக்காட்சி படம்பிடித்து வெளியிட்டது. அதனால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை மிகக் குறைவானது என்று பலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் எல்லா நீதிமன்றங்களிலும் பரவலாக, ஊர் அறிந்த ரகசியமாக, நடைபெற்று வருகின்றன என்பது மட்டும் உறுதி.
ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையை காப்பாற்றுவதற்காக அரசு வழக்குரைஞரும் எதிர்தரப்பு வழக்குரைஞரும் ஒன்று சேர்ந்து சாட்சியை பிறழ் சாட்சியாக மாற்றுவதென்பது எப்போதோ, எங்கோ நடைபெறும் ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், விபத்து வழக்குகள் பலவற்றில் காவல்துறை, வாதிபிரதிவாதிகளின் வழக்குரைஞர்கள் கூட்டணி அண்மைக்காலமாக பலம் பெற்று வருகிறது என்பதை மறுக்க முடியாது. இதனால் அதிக இழப்பை சந்திப்பது பெரும்பாலும் விபத்தில் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.
விபத்து நடைபெற்ற விதத்தைப் பொருத்தும், உயிரிழப்பு அல்லது உடலுறுப்பு இழப்பைப் பொருத்தும் இழப்பீட்டுத்தொகை அதிகரிக்கும். விபத்தில் சிக்கியவர்தான் விபத்து ஏற்பட காரணம் என்ற பாதகமான சூழ்நிலை நிரூபிக்கப்பட்டால், விபத்தை ஏற்படுத்திய வாகனஓட்டுநர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அத்தகைய சாதகமான சூழ்நிலைக்கு எப்போதும் விலை உண்டு.
விபத்து வழக்கிற்காக காவல்நிலையத்தை நாடினால், "நீங்கள் இந்த வழக்குரைஞரிடம் போங்கள்' என்ற வழிகாட்டப்படுகிறது. காவல்துறை அன்பர் சொல்லும் வழக்குரைஞர் திறமையானவர் அல்லர் என்பது பற்றியோ அல்லது உங்களுக்கு மிக நெருக்கமான வேறு வழக்குரைஞர் இருக்கிறார் என்பது பற்றியோ பேசுவது அங்கு பயன் தராது. காவல்துறை அன்பர் கைகாட்டியபடி நடந்துகொண்டால் இழப்பீடு (குறைவாக என்றாலும்) கைக்குக் கிடைப்பது உறுதி என்ற சூழல்தான் பலரது இன்றைய அனுபவமாகும்.
சில தருணங்களில் விபத்தில் சிக்கியவர் விபத்தை ஏற்படுத்தியவர் இருவரும் சமரசம் செய்துகொள்ள முற்படுவதுண்டு. மருத்துவச்செலவுகளை முழுமையாக ஏற்கவும் ஓரளவு நஷ்டஈடு தரவும் முன்வருவர். இத்தகைய சமரசம்கூட இந்த "கூட்டணி' திருப்தி அடைந்தால்தான் சாத்தியம் என்ற வேதனையான சூழ்நிலையைத்தான் பல சம்பவங்களில் காணமுடிகிறது.
இழப்பீட்டுத் தொகை கிடைத்தாலும்கூட, இழப்பீட்டுத் தொகையில் 20 முதல் 25 சதவீதம் வரை வழக்குரைஞருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிலை மேலும் மனச்சோர்வு தருவதாக அமைகிறது. கூட்டணிக்குக் காரணமே கணிசமான இழப்பீட்டுத் தொகைதான்.
மரணங்கள் நிகழாத வெறும் வாகன விபத்துகளில் காப்பீட்டுத் தொகை பெற்ற போலியான சம்பவங்களில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சில வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். ஆனால் அந்த வழக்கு விசாரணை என்ன ஆனது என்ற சுவடே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடிகள் காவல்துறையின் துணையுடன்தான் நடத்தப்பட்டுள்ளன என்கிற உண்மை அத்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் மெல்ல கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள். விபத்து வழக்குகளைப் பொருத்தவரை, காவல்துறை தரும் ஆவணங்கள், வழக்குரைஞர்களின் வாதங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் முடித்தவுடன், வாதிபிரதிவாதி இருவரையும் நீதிபதி தனித்தனியாக அழைத்து தனிஅறையில் பேசினாலே போதும், உண்மைகள் "மனம் உடைந்து' கொட்டும்!
நன்றி : தினமணி

சரித்திரம் படைத்த சுதேசிக் கப்பல்..!

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்தை பி.ஐ.எஸ்.என். (British India Steam Navigation Company) என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தங்கு தடையின்றி நடத்தி வந்தது. இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் கடல்வழி வாணிபம் அக்காலகட்டத்தில் செழித்தோங்கியிருந்தது.
இச் சூழலில் தூத்துக்குடியில் வாழும் வர்த்தகப் பிரமுகர்களில் சிலர் ஒன்று கூடி, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே சுதேசிக் கப்பல் விட முயற்சித்தனர். வ.உ.சி.யின் நண்பர் சிவபுரம் நிலக்கிழார் சி.வ.நல்லபெருமாள் பிள்ளையைக் குறிக்கும் வகையில் "சி.வ. கம்பெனி' என்ற பெயரில் ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினர். இந்த சுதேசிக் கப்பல்கள் பம்பாய் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகைக்கு எடுக்கப்பட்டவையாகும்.
தூத்துக்குடியில் ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த ஆங்கிலேயக் கப்பல் கம்பெனியினர், சுதேசிக் கப்பலைக் குத்தகைக்குக் கொடுத்து உதவிய பம்பாய் வர்த்தகரை அணுகி, அவரைத் தங்களது சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைத்து சுதேசிக் கப்பல் முயற்சியை மூழ்கடித்தனர்.
குத்தகைக்குக் கப்பல்களை எடுத்து ஓட்டுவதால் ஏற்பட்ட இடையூறுகளை உணர்ந்த வ.உ.சி. சொந்தமாகக் கப்பல்களை வாங்கி ஓட்டத் துணிந்து முடிவெடுத்தார்.
1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்' என்ற பெயரில் ஒரு கப்பல் கம்பெனியை அமைத்தனர். இச் செய்தியைக் கேட்டறிந்த பாலகங்காதர திலகர் "திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்' என்று பாராட்டிய செய்தி 24.10.1906ம் தேதிய சுதேசமித்திரன் இதழில் வெளியாகியிருந்தது.
புதிய சுதேசிக் கப்பல் முயற்சிகள் குறித்த திட்டத்தை விளக்கி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கப்பல் கம்பெனியின் மொத்த மூலதனம் ரூபாய் பத்து லட்சம் என்றும், பங்கு ஒன்றுக்கு ரூபாய் இருபத்தைந்து வீதம் நாற்பதாயிரம் பங்குகள் சேர்க்கப்படும் என்றும், இந்தியர், இலங்கையர் முதலிய ஆசிய கண்டத்தாரிடமிருந்து பங்குகள் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாலவநத்தம் ஜமீன்தாரும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான பாண்டித்துரைத் தேவர் சுதேசிக் கப்பல் கம்பெனியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ் கௌரவ செயலாளர்களாகவும், வ.உ.சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளராகவும், வழக்கறிஞர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார், திருநெல்வேலி வழக்கறிஞர் கே.ஆர்.குருசாமி அய்யர், கோழிக்கோடு வழக்கறிஞர் எம்.கிருஷ்ண நாயர், தூத்துக்குடி வழக்கறிஞர் டி.எல்.வெங்கு அய்யர் ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கம்பெனியின் இயக்குநர்களாக 15 முக்கியப் பிரமுகர்கள் செயல்பட்டனர். அவர்களுள் புகழ்மிக்க வர்த்தகக் குழுவான ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ், முகமது ஹாகீம் சேட், சி.வ. கப்பல் கம்பெனியைச் சேர்ந்த சி.வ.நல்லபெருமாள் பிள்ளை ஆகியோரும் அடங்குவர்.
இக் கம்பெனி தொடங்கப்படும்போதே இதன் நோக்கம் இன்னதுதான் என்று தெளிவாக உலகறியக் கூறிவிட்டனர். இக் கம்பெனியினர் பிரகடனப்படுத்திய எட்டு நோக்கங்களையும் ஆழக்கற்றுணர்ந்தால் வெள்ளையர்களிடமிருந்து முற்றாக விடுபட்டு, சொந்தக்காலில் நிற்கத் தூண்டுகிற போர் முரசாகவே அவை புரிந்து கொள்ளப்படும்.
வெறும் கப்பல் விடுவது மட்டுமல்லாது இந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் ஆசியக் கண்டத்தவர் அனைவருக்கும் கப்பல் நடத்தும் தொழிலைப் பழக்குவித்து, அதன் மூலம் வரும் லாபத்தை அவர்களே அனுபவிக்கச் செய்வது கம்பெனியின் நோக்கங்களில் ஒன்றாகும். கப்பல் நடத்தும் தொழிலோடு, கப்பல் நிர்மாணம் செய்யும் தொழிலையும் கற்பித்தல், கப்பல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கற்றுத் தருகிற பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துதல், கப்பல் தொழிலும் இன்னபிற வியாபார முறைகளிலும் இந்தியாஇலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்தி, ஒன்றுபட்டு உழைக்கும் மனோபலத்தை வளர்த்தல், வணிகம் நிறைந்த ஊர்களுக்கு இந்தியா, இலங்கை முதலிய ஆசியக் கண்டத்தவர்களை ஏஜெண்டுகளாக நியமித்தல், நீராவிப் படகு, நீராவிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கும், அவற்றைச் செப்பனிடுதல், சுத்தப்படுத்துதல் போன்றவற்றிற்குமான தனித்தனி துறைகளை ஏற்படுத்துதல், கம்பெனியார் விரும்பும் வேறுபல சுதேசி தொழில்களிலும், வியாபாரங்களிலும் ஈடுபடுதல் ஆகியவையே சுதேசிக் கப்பல் கம்பெனியின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.
வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் முயற்சிக்கு முன்னோடிகள் உள்ளனர். 1884ம் ஆண்டு வங்கத்தில் தொடங்கப்பட்ட உள்நாட்டு நதிவழி நீராவிக் கப்பல் போக்குவரத்து பணி முதல் முயற்சியாகும். வெள்ளையர் இந்த முயற்சியைத் தோற்கடித்த பின்னர், 1905ல் சுதேசி இயக்கம் சுடர்விட்டு பிரகாசித்தபோது "பெங்கால் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி' உருவாயிற்று. 1905 முதல் 1930 வரை சுமார் இருபது சுதேசிக் கப்பல் கம்பெனிகள் இந்தியாவில் தோன்றின.
இவை அனைத்தும் சுதேசி முயற்சிகளாக இருப்பினும், வணிக நோக்கு, தனி மனித லாபம் முதலியவை உள்ளடங்கியதாக அமைந்திருந்தன. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வ.உ.சி. யின் முயற்சி திகழ்ந்தது. முழுக்க முழுக்க இந்தியர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற சுதேசி உணர்வும், அந்நியர்களின் ஆதிக்கத்தை அடியோடு எதிர்க்கும் தன்னலமற்ற தன்மானச் சிந்தனையும், வெள்ளையர்களின் அடிமைகளாக இந்தியர்கள் இருக்கலாகாது என்ற விடுதலை வேட்கையும் ஒன்றிணைந்த கருத்துக் கலவையாகத் திகழ்ந்தவர் வ.உ.சி.
சுதேசிக் கப்பல் முயற்சியில் தனக்கு முன்னோடிகள் இருப்பினும், புரட்சிகர சிந்தனைகளின் மூலம் தானே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வ.உ.சி.
திட்டத்தை அறிவித்த பின்னர், அத்திட்டத்தைச் செயல்படுத்த சூறாவளிபோல் சுழன்று சுழன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அவர்.
நிதி திரட்டும் பணிக்காக பம்பாய் புறப்பட்டுச் சென்றபோது, மீண்டும் தமிழ்நாட்டுக்கு சுதேசிக் கப்பல்களோடுதான் வரப்போவதாகவும், அவ்வாறு கப்பல்களுடன் திரும்ப இயலாத சூழல் ஏற்படுமெனில், அங்கேயே கங்குகரை காணாத கடலில் மூழ்கி தனது உயிரை தானே மாய்த்துக் கொள்ளப்போவதாகவும் சபதமேற்றுத்தான் தமிழ்நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார் வ.உ.சி.
வ.உ.சி. பம்பாய் சென்றிருந்தபோது, அவரது மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோன செய்தி அவரை எட்டியது. அப்போது வ.உ.சி.யின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. வ.உ.சி. யை உடனே ஊருக்குத் திரும்புமாறு உறவினர்கள் வலியுறுத்தினர். ஆழ்ந்த கவலைக்குள்ளான வ.உ.சி., தகவல் தந்தவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, சுதேசிக் கப்பல் பணியை அங்கிருந்தவாறே தொடர்ந்து மேற்கொண்டார்.
கப்பல் முயற்சியின் ஒரு கட்டமாக வ.உ.சி. இலங்கைக்குச் சென்றார். இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ்கள் இவரின் வருகையைப் பாராட்டி தலையங்கம் எழுதின. வ.உ.சி. யின் பெருத்த முயற்சிக்குப் பின்னர் 1907 மே மாதத்தில் "எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ். லாவோ' என்ற இரண்டு கப்பல்களும் வெவ்வேறு நாள்களில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. இந்திய தேச பக்தர்கள் வ.உ.சி. யின் பகீரத முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.
"வெகுகாலமாய் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி, ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால் எத்தனை அளவற்ற ஆனந்தமடைவாளோ, அத்தனை ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாரத தேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது திண்ணமே. ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளையும், அவருடனின்றுதவிய மற்ற நண்பர்களும், தாம் பிறந்து வளர்ந்த தாய் நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டார்கள்' என்று 1907 ஜூன் 15ம் தேதி வெளிவந்த "இந்தியா' இதழில் அதன் ஆசிரியர் மகாகவி பாரதியார் குதூகலத்துடன் குறிப்பிட்டார்.
தூத்துக்குடிகொழும்புக்கு இடையிலான சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றி நடை போட்டது. இத்தகைய இமாலய சாதனையை சற்றும் எதிர்பாராத பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியினர் அதிர்ச்சியடைந்தனர். சுதேசிக் கப்பல் கம்பெனி திவாலாக சதித்திட்டம் தீட்டினர். எடுத்த எடுப்பிலேயே பயணக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தனர். படிப்படியாகக் கட்டணம் இல்லாமலேயே ஏற்றிச் செல்வதாக அறிவித்தனர். பொதுமக்களிடம் தேசபக்த உணர்ச்சியைத் தூண்டி, சுதேசிக் கப்பலை ஆதரிக்கச் செய்வதில் வெற்றி பெற்ற வ.உ.சி., பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட பங்குதாரர்களிடம் வெற்றிபெற முடியவில்லை.
வ.உ.சி. க்கு பங்குதாரர்கள் ஒரு பக்கம் நெருக்கடி கொடுத்தனர்; ஆட்சியாளர்கள் இன்னொரு பக்கம் இறுக்கிப் பிடித்தனர். எவ்வளவோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையிலும் வ.உ.சி. யின் தனிப்பெரும் மக்கள் செல்வாக்கால் சுதேசிக் கப்பல் வணிகம் சுருண்டு படுக்காமல் காப்பாற்றப்பட்டது.
இருப்பினும், சுதேசிக் கப்பல் நிர்வாகிகள், கப்பல் கம்பெனிக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சியினர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையைக் கண்டு அஞ்சினர். தங்களது கம்பெனி நிர்வாகக்குழுக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டினர். கம்பெனி பிழைத்துத் தப்பிக்க வேண்டுமானால் வ.உ.சி. தனது அரசியல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் கேட்டுக் கொண்டவாறு அரசியலில் இருந்து விலகுவதற்கு பதிலாக, சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகி, முன்னிலும் தீவிரமாக அரசியலில் மூழ்கினார் வ.உ.சி.
எந்தக் கப்பல் கம்பெனியாரை எதிர்த்து வ.உ.சி. சுதேசிக் கப்பலை மிதக்க விட்டாரோ, அதே பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியினருக்கு சுதேசிக் கப்பலை விலைக்கு விற்றுவிட்ட செய்தி சிறையிலிருந்த வ.உ.சி.யை எட்டியது.
இதைக் கேட்டுக் கொதித்தெழுந்த பாரதியார், "சிதம்பரம், மானம் பெரிது! ஒருசில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே அக் கப்பலை விற்றுவிட்டார்களே, பாவிகள்! அதைவிட அதைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கி, வங்காள விரிகுடாக் கடலில் மிதக்கவிட்டாலாவது என் மனம் ஆறுமே! இந்தச் சில காசுகள் போய்விட்டாலா தமிழ்நாடு அழிந்துவிடும்? பேடிகள்!' என்று ஆவேசத்தோடு எழுதினார்.
"அந்தக் கப்பல் கம்பெனி முறிந்து போனாலும், அதனால் தேசத்துக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. குறைந்த சார்ஜை வசூலித்ததினாலும் கம்பெனிக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆயினும் அந்தப் பணம் நம்முடைய தேசத்தை விட்டுப் போய்விடவில்லை. நாங்கள் குறைந்த சார்ஜுக்கு விடுவதை உத்தேசித்து வெள்ளைக்காரக் கம்பெனியார்களும் குறைந்த சார்ஜில்விட, ஆரம்பத்தில் அவர்களுக்கு 95 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்தப் பணமும் நமது தேசத்தில்தான் இருந்திருக்கிறது. ஆகவே, அந்தக் கம்பெனி முறிந்து போனாலும் இந்தியாவுக்கு லாபமே தவிர நஷ்டமில்லை' என்று சுதேசிக் கப்பல் கம்பெனியின் வீழ்ச்சி குறித்து 1919ம் ஆண்டு வெளியான சுதேசமித்திரனில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி.

த. ஸ்டாலின் குணசேகரன்
(இன்று வ.உ.சி. பிறந்த தினம்; சுதேசி கப்பல் நிறுவன நூற்றாண்டு விழா)

நன்றி : தினமணி

இதுவே தீர்வாகாது!

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி எடுத்திருக்கும் சில முடிவுகளை வரவேற்காமல் இருக்க முடியவில்லை. தனது கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகளையும், வரைமுறைகளையும் பின்பற்றப் போவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அறிவித்திருக்கிறார். இதே அளவுகோல் எல்லா மாநிலங்களிலும் பின்பற்றப்படுமானால், அது நிச்சயமாக காங்கிரஸ் கட்சியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருப்பவர்களே ஆனாலும், 70 வயதைக் கடந்த முதுபெரும் தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாது; தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒருவர் மீண்டும் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்; டெபாசிட் தொகையைக்கூட பெறமுடியாமல் தோல்வி அடைந்தவர்கள் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள்; குறைந்தது 3 ஆண்டுகளாவது கட்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதிபெற மாட்டார்கள்; அரசு அதிகாரிகளாக இருந்து ஓய்வுபெற்று அல்லது ராஜிநாமா செய்து தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டிபோட முடியாது; கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு முடிந்துவிட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிட முடியும். இவையெல்லாம் அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்களைப்போல அல்லாமல், இன்றைய தலைவர்கள் மக்கள் செல்வாக்குப் பெறாமல் இருப்பதுதான். காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையின் செல்வாக்கையும், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்கிற பொதுவான நல்லெண்ணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டுதான் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு தொகுதியிலும் தனக்கென செல்வாக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பும் பெற்ற தலைவர்கள் இல்லாத நிலைமை.
அதற்கு முக்கியமான காரணம், முறையான உள்கட்சி ஜனநாயகம் என்பதே காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் போனதுதான். மத்திய தலைமைக்கு நெருக்கமான சிலரின் சிபாரிசின் பேரில் கட்சிப் பதவிகளையும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் அதிர்ஷ்டத்தையும் பெற்றுவிட முடிகிறது என்பதால், யாருமே மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும், கூட்டணி பலமும் அவ்வப்போது வீசும் அரசியல் அலையும் வெற்றியைத் தருகிறது என்பதால் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதிலோ, மக்கள் மத்தியில் தங்களுக்கு மரியாதை ஏற்படுத்திக் கொள்ளவோ யாரும் முனைவதில்லை.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி எடுத்திருக்கும் முடிவில், சில குறைபாடுகள் உள்ளன. தேர்தலில் நிற்கத் தகுதி இல்லாதவர் என்று கட்டம் கட்டப்படுபவரின் சிபாரிசோ, அல்லது உறவினரோகூட வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியை இழக்கிறார் என்கிற நிபந்தனையையும் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்கிற வழிமுறையையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி எதிர்பார்க்கும் சீர்திருத்தம் எதுவும் நடைமுறையில் சாத்தியமாகாது.
முன்னாள் தலைவர் அல்லது அமைச்சரின் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு எதுவும் இல்லாமலேயே சிலர் எளிதில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதும் நடைபெறுகிறது.
முறையான தேர்தல் நடத்தப்பட்டு, உள்கட்சி ஜனநாயகம் மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டும்தான், காங்கிரஸின் அடித்தளம் வலுப்படும். மத்தியில் ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இருப்பதால் மட்டும்தான் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை இருக்கிறது. மூன்றாவது மாற்று ஏற்படும்போது, தமிழகத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் நடந்ததுபோல, காங்கிரஸ் கட்சி தந்து செல்வாக்கை இழந்து விடுகிறது.
வாரிசு அரசியல், திறமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதைத் தடுக்கிறது. உள்கட்சி ஜனநாயகம் இல்லாமை, கட்சியின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி கட்சியை செல்லாக்காசாக்கி விடும்.
இதை உணர்ந்து செயல்படாத வரையில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது வீண் முயற்சி. அதே நேரத்தில் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒரு விஷயம் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கு நல்லதல்ல!

நன்றி : தினமணி

வாழ்க, காங்கிரஸ் கலாசாரம்!

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் ஆரம்பம் முதல் இன்று வரை மக்களாட்சி தத்துவத்தையும் நாடாளுமன்ற ஜனநாயக முறையையும் தொடர்ந்து பின்பற்றி வரும் ஒரே நாடு இந்தியாதான்.
இவ்வளவு அதிகமான மக்கள் தொகையுடன் படிப்பறிவே இல்லாத கணிசமான மக்களை உள்ளடக்கிய ஒரு நாடு எப்படி வெற்றிகரமாக மக்களாட்சியைத் தொடர்கிறது என்று வியக்காத மேலை நாட்டவரே கிடையாது.
ஜனநாயகம் இந்த அளவுக்கு வலுவான அடித்தளத்துடன் செயல்படுவதற்கு சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத் தலைவர்கள்தான் காரணம் என்று கூற வேண்டும். பண்டித ஜவாஹர்லால் நேரு தன்னை ஒரு சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்க வழியில்லை.
ஆயினும் ஜனநாயக மரபுகளுக்கு மதிப்புக் கொடுத்த அவரது பண்புகள் இந்தியா ஒரு வலுவான ஜனநாயக நாடாக உருவாகக் காரணமாக இருந்தது.
நல்லொழுக்கமும் மக்கள் சேவையில் நாட்டமும் உள்ள தலைவர்கள் மக்களின் அறியாமையை தங்களது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள் என்று நமது அரசியல் சட்டத்தை வகுத்த அரசியல் மேதைகள் கருதினார்கள்.
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலங்களில் தனிமனித ஒழுக்கமும் பொது வாழ்வில் தூய்மையும் தலைவர்களது அடிப்படை தகுதிகளாக இருந்தன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் மறைவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைக் கவரும் புதிய தலைமுறை அரசியல் வாதிகளின் வளர்ச்சியும் பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தின.
1967ம் ஆண்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவும் அதைத் தொடர்ந்து 1969ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவும்தான் இந்திய அரசியலின் போக்கையே மாற்றி சுயநல சக்திகளின் பிடியில் நமது ஜனநாயகத்தைச் சிக்க வைத்தது என்று சொல்லலாம்.
இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்கும்போது, இவர்கள் உண்மையிலேயே பழைய கால காங்கிரஸ் பெரியோர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க முனைகிறார்களா அல்லது நாமும் ஏதேனும் செய்து பதவியில் பங்கு பெற வேண்டும் என முயலுகிறார்களா எனும் சந்தேகம் நமக்கு எழுகிறது.
திராவிடக் கட்சிகளின் அரசியல் கலாசாரம் காங்கிரஸ்காரர்களை தமிழகத்தில் வெகுவாகப் பாதித்துள்ளது.
அதுதான் தமிழக அரசியலின் சீர்கேடுகளுக்கு முக்கியமான காரணமோ என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது.
1969ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார் காமராஜ். ஓர் ஊர் முகப்பில் பெருந்தலைவர் வந்திறங்கியபோது தாரை தப்பட்டைகள் முழங்க, யானை ஒன்று துதிக்கையில் மாலையுடன் நின்றிருந்தது. இதனைக் கண்ட காமராஜ் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக வேதனைப்பட்டார். எல்லாவற்றையும் நிறுத்தச் சொல்லிவிட்டு, அமைதியாகக் கலைந்து சென்று கூட்ட மைதானத்தில் அமருங்கள் எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
""நான் பொதுக்கூட்டங்களுக்கு வருவது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நாம் என்ன செய்ய இருக்கின்றோம் என்பதைச் சொல்வதற்காகத்தான். ஆடம்பரமும் கலை நிகழ்ச்சிகளும், நமது நடவடிக்கை ஒரு பொழுதுபோக்கு எனும் தவறான எண்ணத்தை உருவாக்கும். நம்மையும் தேசத்தையும் எதிர்நோக்கும் பிரச்னையின் கௌரவத்தைப் புரிந்து கொள்ள இயலாதபடி இதுபோன்ற கேளிக்கைகள் மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடும்'' என்று கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த தொண்டர்களிடம் விளக்கினார் அவர்.
அப்படியே இன்றைய காலத்திற்கு வருவோம். சென்னையின் பிரதான வீதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஒருவரின் பெரிய டிஜிட்டல் போர்டில், ""வாழும் காமராஜரே!'' என எழுதிய ஆளுயர மாலையுடன் அவர் காட்சியளிக்கின்றார். காங்கிரஸின் பெண் மாநிலங்களவை எம்.பி. யின் இல்லம் அமைந்திருக்கும் ஆழ்வார்பேட்டை பகுதியில் பெரிய டிஜிட்டல் போர்டில் அவரது ஆளுயர உருவத்தின் கீழ் ""பிறந்தநாள் காணும் தென்னக இந்திராவே!'' எனும் வாக்கியம்.
நமது நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு தரமான ஒரிஜினல் காங்கிரஸ்காரராக கட்சிப் பணிக்கு வந்தது நம் நினைவில் நிற்கின்றது. மிகச்சிறந்த வக்கீலாகப் பணியாற்றிய, வசதியான ஒரு சமூகத் தட்டிலிருந்து கட்சிக்கு வந்து உயரிய காங்கிரஸ் நடைமுறைகளைப் பின்பற்றிய ஒரு காங்கிரஸ்காரராக அப்போது அவர் இருந்தார்.
எம்.ஜி. ஆர். மரணமடைந்தபோது நடந்த இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள் அண்ணா சாலையில் இன்றைய முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையைத் தகர்த்தெறிந்து, பல ஹோட்டல்களில் புகுந்து உணவுப் பண்டங்களையும், ஏனைய கடைகளில் மற்ற பொருள்களையும் சூறையாடினார்கள். கடைகளிலிருந்து தொலைகாட்சிப் பெட்டிகளையும், மரச் சாமான்களையும் தொண்டர்கள் சுமந்து சென்றதை முதல் பக்கத்தில் தேசிய பத்திரிகைகள் பிரசுரித்தன.
அப்போது சிதம்பரம், ""தலைநகர் தில்லியில் வேட்டி கட்டிக் கொண்டு வெளியில் நடமாடவே கூச்சமாயிருக்கின்றது'' என்று ஒரு போடு போட்டார். அவரைப் பற்றிய மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
முன்பெல்லாம் இவரிடம் சிபாரிசுக்காக மிகச் சாதாரணமாக யாரும் நெருங்க முடியாது. ஆனால் இப்போது அப்படியல்ல எனும் செய்தி பரவலாகியுள்ளது.
ஒவ்வொரு முறையும் இவர் சென்னை வரும்போது சுவர்களை அலங்கரிக்கும் இவரது போஸ்டர்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.
இவருக்குமா இந்த விளம்பர மோகம் என்று கேட்கத் தோன்றுகிறது. இவர் வங்கியின் கிளைகளைத் திறப்பதற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டு மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது.
யுகோ வங்கி அவர்கள் செய்யும் வேலையை விளம்பரமாக எழுதி சென்னை விமான நிலையத்தில் பெரிய போஸ்டர்களாக வைத்திருக்கிறார்கள். அதன் மேல் பெரிய சைஸில் நிதியமைச்சர் சிதம்பரத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் கலாசாரம் அல்ல.
தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர், தன்னை வாழும் காமராஜ் என வர்ணித்து போர்டு வைத்தவர்களைத் தடுத்து அந்த போர்டை அகற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து அவரது மகனின் டிஜிட்டல் போர்டுகள், ""எங்கள் உயிரே'' என வைக்கப்பட்டதை அவர் ரசிப்பதாகத் தெரிகிறது!. முதலில் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜைப் பின்பற்றி அவர் கொள்கைகளை தங்கள் நடவடிக்கையில் பிரதிபலிக்க வேண்டும். அதன்பின் காமராஜ் ஆட்சி அமைக்க முயற்சி செய்யட்டும். இல்லையென்றால் காமராஜ் ஆட்சியையே கேவலப்படுத்துவதாக அமையும்.
திமுக ஆரம்பித்தபோது அண்ணா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என மூன்று அம்சங்களைப் பறைசாற்றினார். பெருந்தலைவர் காமராஜோ, நேர்மை, எளிமை, தூய்மை என அறைகூவல் விடுத்தார். அதாவது கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகள் நேர்மையாக இருத்தல் வேண்டும். தனிவாழ்வில் எளிமை வேண்டும், பொதுவாழ்வில் தூய்மை வேண்டும்.
திமுகவில் கடமையையும் கட்டுப்பாட்டினையும் முன்நிறுத்தினார்கள். நேர்மை பற்றி கூறவில்லை என்பதைக் கவனிக்க.
காமராஜ் கூறிய எளிமையிலும் தூய்மையிலும் ஆள் உயர கட்அவுட்கள் வராது. சென்னை கார்ப்பரேஷன் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் கீழ் நிலை அரசு ஊழியர்களிடம் கமிஷன் கேட்டு தகராறு செய்தது சென்ற ஆண்டு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. எல்லா காங்கிரஸ் தலைவர்களும் பொதுவாழ்வில் நேர்மை எனும் விஷயத்தில் உறுதியாக இருத்தல் வேண்டும். இவையெல்லாம் முடியாது என்றால் கழகங்களின் அடிச்சுவட்டில் விளம்பர அரசியல், வண்ண விளக்குகள், டிஜிட்டல் போர்டுகள், சாப்பாட்டு பொட்டலங்கள் மற்றும் தினக்கூலிக்கு லாரியில் ஆள்களைக் கொண்டு வந்து கரகோஷம் செய்ய வைக்கும் பெரிய பொதுக் கூட்டங்கள் என தங்கள் அரசியல் பயணத்தைத் தொடரலாம்.
மேலும், காமராஜ் ஆட்சி அமைப்போம் எனும் கோஷத்தை விட்டுவிடுவது என்கிற ஒரு முடிவை தமிழக காங்கிரஸார் எடுத்துவிட்டார்களோ எனும் சந்தேகம் நம்மில் பலருக்கு உருவாகும் வகையில் சில நாள்களுக்கு முன் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேசி இருக்கிறார்.
""தற்போது தமிழகத்தில் நடக்கும் ஆட்சி காமராஜ் ஆட்சியே'' என அவர் கூறியிருக்கிறார். படித்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஜால்ரா சப்தம் கோபாலபுரத்தில் கேட்பதற்காக இப்படி எல்லாமா பேசுவது?.
காமராஜ் காலத்தில் காங்கிரஸ் தொண்டர்களாக இருந்தவர்களுக்கும், இன்னும் காங்கிரஸ் பழைய நிலைமைக்கு வரும் என நம்பி ஓட்டளித்து வரும் பொது மக்களுக்கும் இன்றைய காங்கிரஸார் காமராஜ் ஆட்சியை அமைக்காவிட்டாலும் பரவாயில்லை. காமராஜை இழிவுபடுத்தும் வகையில் இன்றைய ஆட்சியை அவரது பொற்கால ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது எனும் எண்ணமே தோன்றுகின்றது!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் பேச்சு வீரபாண்டி கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும், "" எட்டப்பா ஈனமொழி பேசாதே. வாழ விரும்பினாய், வல்லவனை அழித்தாய், நீ வாழ்ந்து கொள். அன்னியர் உன்னை போற்ற வேண்டும், அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே'' என்கிற வசனத்தை பல காமராஜ் காலத்தவர்களுக்கு நினைவுபடுத்துவதாக அமைகிறது.
என். முருகன்
(கட்டுரையாளர்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.)
நன்றி : தினமணி

"நானோ', நீயோ

தங்களது நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்பட்டு, சுமுகமான முடிவு ஏற்படாவிட்டால், சிங்கூரிலிருந்து தங்களது "நானோ' கார் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றப் போவதாக "டாடா' நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. ""நாங்கள் அழையா விருந்தாளியாகத் தொடர விரும்பவில்லை'' என்கிற அவரது அறிவிப்பு வேண்டுகோளா அல்லது அச்சுறுத்தலா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
""சுமார் ரூ. 1,500 கோடி மூலதனம் "நானோ' கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் முதலீடு செய்யப்பட்டிருப்பதால், நாங்கள் வேறு இடத்துக்குத் தொழிற்சாலையை மாற்ற மாட்டோம் என்று யாராவது நினைத்தால் அது தவறு. தொடரும் எதிர்ப்பும், தடைகளும், வன்முறையும், எங்கள் தொழிலாளர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் உதவியுடன் ஒரு தொழிற்சாலையை நடத்த முடியாது. அதனால், சுமுகமான சூழ்நிலை ஏற்படாவிட்டால் நஷ்டத்தை பொருட்படுத்தாமல் நாங்கள் இந்தத் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற நேரிடும்'' என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும், வர்த்தக மற்றும் தொழில் துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சிங்கூரில் தொடங்கப்பட இருக்கும் டாடா நிறுவனத்தின் நானோ மோட்டார் கார் தொழிற்சாலையின் வருங்காலம் ஒரு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது என்பதைவிட மேற்கு வங்கத்தின் பொருளாதார வளர்ச்சியும், தொழில்துறை வளர்ச்சியும் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு அலறுகின்றன.
இந்தப் பிரச்னையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜிதான் பிரதான வில்லனாகச் சித்திரிக்கப்படுகிறார். டாடா நிறுவனத்திற்காக மேற்கு வங்க அரசு நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் அவர் முன்வரிசையில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.
டாடா நிறுவனம் தனது குறைந்த விலை மோட்டார் கார் தொழிற்சாலையை அமைக்கப் பல்வேறு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் டாடா நிறுவனத்துக்காக விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் கையகப்படுத்தித் தர மறுத்தன. அப்போதுதான், மேற்கு வங்க அரசு யாருமே தர முன்வராத குறைந்த விலையில் நீண்டநாள் குத்தகை அடிப்படையில் நிலத்தைத் தர வாக்குறுதி அளித்து விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த முற்பட்டது.
அரசு நிர்ணயித்த விலையில் நிலங்களைத் தர முன்வந்த விவசாயிகள் பலர். அந்த நிலத்தில் டாடா நிறுவனம் தனது தொழிற்சாலைப் பணிகளைத் தொடங்கிவிட்டது. ஆனால் அரசு தரும் குறைந்த விலைக்குத் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கத் தயாராக இல்லாத விவசாயிகள் வற்புறுத்தப்பட்டபோதுதான் அவர்கள் சார்பாக மம்தா பானர்ஜி களம் இறங்க நேரிட்டது என்பதை மறுக்க முடியாது. இந்த விஷயத்தில் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது.
நீண்ட நாள் குத்தகை என்கிற பேரில் அரசு அளிக்கும் நிலம் காலப்போக்கில் அந்த நிறுவனத்துக்கே சொந்தமாகிவிடும் என்பதுதான் உண்மை. அதற்கு அரசு ஆணை ஒன்று பிறப்பித்தால் போதும். நாளையே தொழிற்சாலை நஷ்டமடைந்தாலும் அந்த நிலம் டாடா நிறுவனத்தின் சொத்தாக மாறிவிடும். ஆனால் அந்த ஏழை விவசாயியின் நிலைமை என்ன? குறைந்த விலைக்குத் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் அந்த ஏழை விவசாயிக்கு, தொழிற்சாலையில் வேலையோ, தொழில்நிறுவனத்தின் லாபத்தில் பங்கோ கிடைக்குமா என்றால் கிடையாது. அதனால் தனக்குத் தேவையான நஷ்ட ஈட்டை அவர் தொழில் நிறுவனத்திடம் நேரடியாகக் கேட்டுப் பெறுவதை அரசு ஏன் தடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.
டாடா நிறுவனம் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறினால் அதற்குப் பிறகு எந்த நிறுவனமும் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய முன்வராது என்கிற வாதம் ஏற்புடையதல்ல. "என்ரான்' வெளியேறினால் இந்தியாவுக்கு அன்னிய முதலீடு கிடைக்காது என்று கூறியவர்கள் பலர். "என்ரான்'தான் காணாமல் போனதே தவிர, அன்னிய முதலீடு இந்தியாவை அன்னியப்படுத்தவில்லை. ஆகவே, ரத்தன் டாடாவின் அச்சுறுத்தலில் அர்த்தம் கிடையாது.
அதேநேரத்தில், ரத்தன் டாடா கூறுவதுபோல ஒரு தொழிற்சாலையை நிறுவி நடத்த சுமுகமான சூழ்நிலை நிலவ வேண்டும். அரசியல் லாப நஷ்டங்களை மட்டும் கருதி செயல்படுவதை விட்டு, மேற்கு வங்கத்தின் வருங்காலத்தை முன்னிலைப்படுத்திச் செயல்படுவது மம்தா பானர்ஜி போன்ற அரசியல் தலைவர்களின் அணுகுமுறையாக இருத்தல் அவசியம். "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று இடதுசாரி அரசு செயல்படுவதும் சரியல்ல.
சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு கூடுதல் நஷ்ட ஈடும், டாடா நிறுவனத்திலிருந்து வேலைக்கான உத்தரவாதமும் அளித்து நிலத்தைக் கையகப்படுத்தினால் என்ன? டாடா நிறுவனமேகூட கெளரவம் பார்க்காமல் மம்தா பானர்ஜியிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவு காண முற்படாதது ஏன்?
சிங்கூரிலிருந்து "டாடா' நிறுவனம் வெளியேறுவது என்பது அந்த நிறுவனத்திற்குத் தலைக்குனிவு; மேற்கு வங்க அரசின் "கையாலாகாத்தனம்'; மம்தா பானர்ஜிக்கு, மேற்கு வங்கத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார் என்கிற அவப்பெயர்; மேற்கு வங்கத்தின் வருங்காலத்துக்குப் பேரிழப்பு!