Friday, September 5, 2008

விபத்தைத் தொடரும் "விபத்து'கள்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. அப்படியானதொரு சம்பவம் தில்லி உயர் நீதிமன்றத்தில் சென்ற வாரம் நடைபெற்றது. மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.கே. ஆனந்த், ஐ.யு.கான் ஆகிய இருவருக்கும் தில்லி நீதிமன்றத்தில் ரூ.2000 அபராதமும், நான்கு மாதங்களுக்கு வழக்காடக் கூடாது என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனைக்கான காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். கடற்படையின் முன்னாள் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரன் ஓட்டிய கார் மோதியதில் 6 பேர் இறந்தனர். நந்தா தரப்பில் ஆர்.கே. ஆனந்த் வாதாடினார். ஐ.யு. கான் அரசுத் தரப்பு வழக்குரைஞர். ஆனால் இருவரும் ஒன்றுசேர்ந்து, குற்றவாளிக்கு எதிரான சாட்சியைப் பிறழ் சாட்சியாக மாற்ற முயற்சித்ததை தனியார் தொலைக்காட்சி படம்பிடித்து வெளியிட்டது. அதனால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை மிகக் குறைவானது என்று பலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் எல்லா நீதிமன்றங்களிலும் பரவலாக, ஊர் அறிந்த ரகசியமாக, நடைபெற்று வருகின்றன என்பது மட்டும் உறுதி.
ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையை காப்பாற்றுவதற்காக அரசு வழக்குரைஞரும் எதிர்தரப்பு வழக்குரைஞரும் ஒன்று சேர்ந்து சாட்சியை பிறழ் சாட்சியாக மாற்றுவதென்பது எப்போதோ, எங்கோ நடைபெறும் ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், விபத்து வழக்குகள் பலவற்றில் காவல்துறை, வாதிபிரதிவாதிகளின் வழக்குரைஞர்கள் கூட்டணி அண்மைக்காலமாக பலம் பெற்று வருகிறது என்பதை மறுக்க முடியாது. இதனால் அதிக இழப்பை சந்திப்பது பெரும்பாலும் விபத்தில் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.
விபத்து நடைபெற்ற விதத்தைப் பொருத்தும், உயிரிழப்பு அல்லது உடலுறுப்பு இழப்பைப் பொருத்தும் இழப்பீட்டுத்தொகை அதிகரிக்கும். விபத்தில் சிக்கியவர்தான் விபத்து ஏற்பட காரணம் என்ற பாதகமான சூழ்நிலை நிரூபிக்கப்பட்டால், விபத்தை ஏற்படுத்திய வாகனஓட்டுநர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே அத்தகைய சாதகமான சூழ்நிலைக்கு எப்போதும் விலை உண்டு.
விபத்து வழக்கிற்காக காவல்நிலையத்தை நாடினால், "நீங்கள் இந்த வழக்குரைஞரிடம் போங்கள்' என்ற வழிகாட்டப்படுகிறது. காவல்துறை அன்பர் சொல்லும் வழக்குரைஞர் திறமையானவர் அல்லர் என்பது பற்றியோ அல்லது உங்களுக்கு மிக நெருக்கமான வேறு வழக்குரைஞர் இருக்கிறார் என்பது பற்றியோ பேசுவது அங்கு பயன் தராது. காவல்துறை அன்பர் கைகாட்டியபடி நடந்துகொண்டால் இழப்பீடு (குறைவாக என்றாலும்) கைக்குக் கிடைப்பது உறுதி என்ற சூழல்தான் பலரது இன்றைய அனுபவமாகும்.
சில தருணங்களில் விபத்தில் சிக்கியவர் விபத்தை ஏற்படுத்தியவர் இருவரும் சமரசம் செய்துகொள்ள முற்படுவதுண்டு. மருத்துவச்செலவுகளை முழுமையாக ஏற்கவும் ஓரளவு நஷ்டஈடு தரவும் முன்வருவர். இத்தகைய சமரசம்கூட இந்த "கூட்டணி' திருப்தி அடைந்தால்தான் சாத்தியம் என்ற வேதனையான சூழ்நிலையைத்தான் பல சம்பவங்களில் காணமுடிகிறது.
இழப்பீட்டுத் தொகை கிடைத்தாலும்கூட, இழப்பீட்டுத் தொகையில் 20 முதல் 25 சதவீதம் வரை வழக்குரைஞருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிலை மேலும் மனச்சோர்வு தருவதாக அமைகிறது. கூட்டணிக்குக் காரணமே கணிசமான இழப்பீட்டுத் தொகைதான்.
மரணங்கள் நிகழாத வெறும் வாகன விபத்துகளில் காப்பீட்டுத் தொகை பெற்ற போலியான சம்பவங்களில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சில வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். ஆனால் அந்த வழக்கு விசாரணை என்ன ஆனது என்ற சுவடே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடிகள் காவல்துறையின் துணையுடன்தான் நடத்தப்பட்டுள்ளன என்கிற உண்மை அத்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் மெல்ல கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள். விபத்து வழக்குகளைப் பொருத்தவரை, காவல்துறை தரும் ஆவணங்கள், வழக்குரைஞர்களின் வாதங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் முடித்தவுடன், வாதிபிரதிவாதி இருவரையும் நீதிபதி தனித்தனியாக அழைத்து தனிஅறையில் பேசினாலே போதும், உண்மைகள் "மனம் உடைந்து' கொட்டும்!
நன்றி : தினமணி

0 comments: