Friday, September 5, 2008

"நானோ', நீயோ

தங்களது நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்பட்டு, சுமுகமான முடிவு ஏற்படாவிட்டால், சிங்கூரிலிருந்து தங்களது "நானோ' கார் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றப் போவதாக "டாடா' நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. ""நாங்கள் அழையா விருந்தாளியாகத் தொடர விரும்பவில்லை'' என்கிற அவரது அறிவிப்பு வேண்டுகோளா அல்லது அச்சுறுத்தலா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
""சுமார் ரூ. 1,500 கோடி மூலதனம் "நானோ' கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் முதலீடு செய்யப்பட்டிருப்பதால், நாங்கள் வேறு இடத்துக்குத் தொழிற்சாலையை மாற்ற மாட்டோம் என்று யாராவது நினைத்தால் அது தவறு. தொடரும் எதிர்ப்பும், தடைகளும், வன்முறையும், எங்கள் தொழிலாளர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் உதவியுடன் ஒரு தொழிற்சாலையை நடத்த முடியாது. அதனால், சுமுகமான சூழ்நிலை ஏற்படாவிட்டால் நஷ்டத்தை பொருட்படுத்தாமல் நாங்கள் இந்தத் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற நேரிடும்'' என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும், வர்த்தக மற்றும் தொழில் துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சிங்கூரில் தொடங்கப்பட இருக்கும் டாடா நிறுவனத்தின் நானோ மோட்டார் கார் தொழிற்சாலையின் வருங்காலம் ஒரு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது என்பதைவிட மேற்கு வங்கத்தின் பொருளாதார வளர்ச்சியும், தொழில்துறை வளர்ச்சியும் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு அலறுகின்றன.
இந்தப் பிரச்னையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜிதான் பிரதான வில்லனாகச் சித்திரிக்கப்படுகிறார். டாடா நிறுவனத்திற்காக மேற்கு வங்க அரசு நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் அவர் முன்வரிசையில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.
டாடா நிறுவனம் தனது குறைந்த விலை மோட்டார் கார் தொழிற்சாலையை அமைக்கப் பல்வேறு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் டாடா நிறுவனத்துக்காக விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் கையகப்படுத்தித் தர மறுத்தன. அப்போதுதான், மேற்கு வங்க அரசு யாருமே தர முன்வராத குறைந்த விலையில் நீண்டநாள் குத்தகை அடிப்படையில் நிலத்தைத் தர வாக்குறுதி அளித்து விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த முற்பட்டது.
அரசு நிர்ணயித்த விலையில் நிலங்களைத் தர முன்வந்த விவசாயிகள் பலர். அந்த நிலத்தில் டாடா நிறுவனம் தனது தொழிற்சாலைப் பணிகளைத் தொடங்கிவிட்டது. ஆனால் அரசு தரும் குறைந்த விலைக்குத் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கத் தயாராக இல்லாத விவசாயிகள் வற்புறுத்தப்பட்டபோதுதான் அவர்கள் சார்பாக மம்தா பானர்ஜி களம் இறங்க நேரிட்டது என்பதை மறுக்க முடியாது. இந்த விஷயத்தில் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது.
நீண்ட நாள் குத்தகை என்கிற பேரில் அரசு அளிக்கும் நிலம் காலப்போக்கில் அந்த நிறுவனத்துக்கே சொந்தமாகிவிடும் என்பதுதான் உண்மை. அதற்கு அரசு ஆணை ஒன்று பிறப்பித்தால் போதும். நாளையே தொழிற்சாலை நஷ்டமடைந்தாலும் அந்த நிலம் டாடா நிறுவனத்தின் சொத்தாக மாறிவிடும். ஆனால் அந்த ஏழை விவசாயியின் நிலைமை என்ன? குறைந்த விலைக்குத் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் அந்த ஏழை விவசாயிக்கு, தொழிற்சாலையில் வேலையோ, தொழில்நிறுவனத்தின் லாபத்தில் பங்கோ கிடைக்குமா என்றால் கிடையாது. அதனால் தனக்குத் தேவையான நஷ்ட ஈட்டை அவர் தொழில் நிறுவனத்திடம் நேரடியாகக் கேட்டுப் பெறுவதை அரசு ஏன் தடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.
டாடா நிறுவனம் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறினால் அதற்குப் பிறகு எந்த நிறுவனமும் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய முன்வராது என்கிற வாதம் ஏற்புடையதல்ல. "என்ரான்' வெளியேறினால் இந்தியாவுக்கு அன்னிய முதலீடு கிடைக்காது என்று கூறியவர்கள் பலர். "என்ரான்'தான் காணாமல் போனதே தவிர, அன்னிய முதலீடு இந்தியாவை அன்னியப்படுத்தவில்லை. ஆகவே, ரத்தன் டாடாவின் அச்சுறுத்தலில் அர்த்தம் கிடையாது.
அதேநேரத்தில், ரத்தன் டாடா கூறுவதுபோல ஒரு தொழிற்சாலையை நிறுவி நடத்த சுமுகமான சூழ்நிலை நிலவ வேண்டும். அரசியல் லாப நஷ்டங்களை மட்டும் கருதி செயல்படுவதை விட்டு, மேற்கு வங்கத்தின் வருங்காலத்தை முன்னிலைப்படுத்திச் செயல்படுவது மம்தா பானர்ஜி போன்ற அரசியல் தலைவர்களின் அணுகுமுறையாக இருத்தல் அவசியம். "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று இடதுசாரி அரசு செயல்படுவதும் சரியல்ல.
சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு கூடுதல் நஷ்ட ஈடும், டாடா நிறுவனத்திலிருந்து வேலைக்கான உத்தரவாதமும் அளித்து நிலத்தைக் கையகப்படுத்தினால் என்ன? டாடா நிறுவனமேகூட கெளரவம் பார்க்காமல் மம்தா பானர்ஜியிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவு காண முற்படாதது ஏன்?
சிங்கூரிலிருந்து "டாடா' நிறுவனம் வெளியேறுவது என்பது அந்த நிறுவனத்திற்குத் தலைக்குனிவு; மேற்கு வங்க அரசின் "கையாலாகாத்தனம்'; மம்தா பானர்ஜிக்கு, மேற்கு வங்கத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார் என்கிற அவப்பெயர்; மேற்கு வங்கத்தின் வருங்காலத்துக்குப் பேரிழப்பு!

3 comments:

said...

மம்தா பானர்ஜி செய்வது சரியென்று சொல்கின்றீர்களா?

said...

ரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க. நான் இந்த விஷயத்தில் பாலோ செய்தவரை பிரச்சினைக்கு இடதுசாரி அல்லது புத்ததேவின் ஈகோதான் மிகப்பெரியக் காரணம் என்பது என் கருத்து.

said...

ஜோசப் பால்ராஜ் மற்றும் rapp வருகைக்கு நன்றி

// மம்தா பானர்ஜி செய்வது சரியென்று சொல்கின்றீர்களா? //

இங்கு சரியா தவறா என்பதை காட்டிலும் , சுமுகமாக முவரும் தீர்வு (டாட்டா ,மம்தா ,புத்ததேவ் ) கண்டு இருக்கலாம் என்பதே என் கருத்து .