Friday, September 5, 2008

இதுவே தீர்வாகாது!

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி எடுத்திருக்கும் சில முடிவுகளை வரவேற்காமல் இருக்க முடியவில்லை. தனது கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகளையும், வரைமுறைகளையும் பின்பற்றப் போவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அறிவித்திருக்கிறார். இதே அளவுகோல் எல்லா மாநிலங்களிலும் பின்பற்றப்படுமானால், அது நிச்சயமாக காங்கிரஸ் கட்சியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருப்பவர்களே ஆனாலும், 70 வயதைக் கடந்த முதுபெரும் தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாது; தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய ஒருவர் மீண்டும் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்; டெபாசிட் தொகையைக்கூட பெறமுடியாமல் தோல்வி அடைந்தவர்கள் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள்; குறைந்தது 3 ஆண்டுகளாவது கட்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதிபெற மாட்டார்கள்; அரசு அதிகாரிகளாக இருந்து ஓய்வுபெற்று அல்லது ராஜிநாமா செய்து தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டிபோட முடியாது; கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு முடிந்துவிட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிட முடியும். இவையெல்லாம் அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்களைப்போல அல்லாமல், இன்றைய தலைவர்கள் மக்கள் செல்வாக்குப் பெறாமல் இருப்பதுதான். காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையின் செல்வாக்கையும், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்கிற பொதுவான நல்லெண்ணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டுதான் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு தொகுதியிலும் தனக்கென செல்வாக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பும் பெற்ற தலைவர்கள் இல்லாத நிலைமை.
அதற்கு முக்கியமான காரணம், முறையான உள்கட்சி ஜனநாயகம் என்பதே காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் போனதுதான். மத்திய தலைமைக்கு நெருக்கமான சிலரின் சிபாரிசின் பேரில் கட்சிப் பதவிகளையும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் அதிர்ஷ்டத்தையும் பெற்றுவிட முடிகிறது என்பதால், யாருமே மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும், கூட்டணி பலமும் அவ்வப்போது வீசும் அரசியல் அலையும் வெற்றியைத் தருகிறது என்பதால் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதிலோ, மக்கள் மத்தியில் தங்களுக்கு மரியாதை ஏற்படுத்திக் கொள்ளவோ யாரும் முனைவதில்லை.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி எடுத்திருக்கும் முடிவில், சில குறைபாடுகள் உள்ளன. தேர்தலில் நிற்கத் தகுதி இல்லாதவர் என்று கட்டம் கட்டப்படுபவரின் சிபாரிசோ, அல்லது உறவினரோகூட வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியை இழக்கிறார் என்கிற நிபந்தனையையும் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்கிற வழிமுறையையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி எதிர்பார்க்கும் சீர்திருத்தம் எதுவும் நடைமுறையில் சாத்தியமாகாது.
முன்னாள் தலைவர் அல்லது அமைச்சரின் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு எதுவும் இல்லாமலேயே சிலர் எளிதில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதும் நடைபெறுகிறது.
முறையான தேர்தல் நடத்தப்பட்டு, உள்கட்சி ஜனநாயகம் மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டும்தான், காங்கிரஸின் அடித்தளம் வலுப்படும். மத்தியில் ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இருப்பதால் மட்டும்தான் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை இருக்கிறது. மூன்றாவது மாற்று ஏற்படும்போது, தமிழகத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் நடந்ததுபோல, காங்கிரஸ் கட்சி தந்து செல்வாக்கை இழந்து விடுகிறது.
வாரிசு அரசியல், திறமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதைத் தடுக்கிறது. உள்கட்சி ஜனநாயகம் இல்லாமை, கட்சியின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி கட்சியை செல்லாக்காசாக்கி விடும்.
இதை உணர்ந்து செயல்படாத வரையில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது வீண் முயற்சி. அதே நேரத்தில் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒரு விஷயம் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கு நல்லதல்ல!

நன்றி : தினமணி

0 comments: