Friday, September 5, 2008

வாழ்க, காங்கிரஸ் கலாசாரம்!

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் ஆரம்பம் முதல் இன்று வரை மக்களாட்சி தத்துவத்தையும் நாடாளுமன்ற ஜனநாயக முறையையும் தொடர்ந்து பின்பற்றி வரும் ஒரே நாடு இந்தியாதான்.
இவ்வளவு அதிகமான மக்கள் தொகையுடன் படிப்பறிவே இல்லாத கணிசமான மக்களை உள்ளடக்கிய ஒரு நாடு எப்படி வெற்றிகரமாக மக்களாட்சியைத் தொடர்கிறது என்று வியக்காத மேலை நாட்டவரே கிடையாது.
ஜனநாயகம் இந்த அளவுக்கு வலுவான அடித்தளத்துடன் செயல்படுவதற்கு சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத் தலைவர்கள்தான் காரணம் என்று கூற வேண்டும். பண்டித ஜவாஹர்லால் நேரு தன்னை ஒரு சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்க வழியில்லை.
ஆயினும் ஜனநாயக மரபுகளுக்கு மதிப்புக் கொடுத்த அவரது பண்புகள் இந்தியா ஒரு வலுவான ஜனநாயக நாடாக உருவாகக் காரணமாக இருந்தது.
நல்லொழுக்கமும் மக்கள் சேவையில் நாட்டமும் உள்ள தலைவர்கள் மக்களின் அறியாமையை தங்களது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள் என்று நமது அரசியல் சட்டத்தை வகுத்த அரசியல் மேதைகள் கருதினார்கள்.
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலங்களில் தனிமனித ஒழுக்கமும் பொது வாழ்வில் தூய்மையும் தலைவர்களது அடிப்படை தகுதிகளாக இருந்தன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் மறைவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைக் கவரும் புதிய தலைமுறை அரசியல் வாதிகளின் வளர்ச்சியும் பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தின.
1967ம் ஆண்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவும் அதைத் தொடர்ந்து 1969ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவும்தான் இந்திய அரசியலின் போக்கையே மாற்றி சுயநல சக்திகளின் பிடியில் நமது ஜனநாயகத்தைச் சிக்க வைத்தது என்று சொல்லலாம்.
இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்கும்போது, இவர்கள் உண்மையிலேயே பழைய கால காங்கிரஸ் பெரியோர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க முனைகிறார்களா அல்லது நாமும் ஏதேனும் செய்து பதவியில் பங்கு பெற வேண்டும் என முயலுகிறார்களா எனும் சந்தேகம் நமக்கு எழுகிறது.
திராவிடக் கட்சிகளின் அரசியல் கலாசாரம் காங்கிரஸ்காரர்களை தமிழகத்தில் வெகுவாகப் பாதித்துள்ளது.
அதுதான் தமிழக அரசியலின் சீர்கேடுகளுக்கு முக்கியமான காரணமோ என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது.
1969ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார் காமராஜ். ஓர் ஊர் முகப்பில் பெருந்தலைவர் வந்திறங்கியபோது தாரை தப்பட்டைகள் முழங்க, யானை ஒன்று துதிக்கையில் மாலையுடன் நின்றிருந்தது. இதனைக் கண்ட காமராஜ் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக வேதனைப்பட்டார். எல்லாவற்றையும் நிறுத்தச் சொல்லிவிட்டு, அமைதியாகக் கலைந்து சென்று கூட்ட மைதானத்தில் அமருங்கள் எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
""நான் பொதுக்கூட்டங்களுக்கு வருவது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நாம் என்ன செய்ய இருக்கின்றோம் என்பதைச் சொல்வதற்காகத்தான். ஆடம்பரமும் கலை நிகழ்ச்சிகளும், நமது நடவடிக்கை ஒரு பொழுதுபோக்கு எனும் தவறான எண்ணத்தை உருவாக்கும். நம்மையும் தேசத்தையும் எதிர்நோக்கும் பிரச்னையின் கௌரவத்தைப் புரிந்து கொள்ள இயலாதபடி இதுபோன்ற கேளிக்கைகள் மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடும்'' என்று கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த தொண்டர்களிடம் விளக்கினார் அவர்.
அப்படியே இன்றைய காலத்திற்கு வருவோம். சென்னையின் பிரதான வீதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஒருவரின் பெரிய டிஜிட்டல் போர்டில், ""வாழும் காமராஜரே!'' என எழுதிய ஆளுயர மாலையுடன் அவர் காட்சியளிக்கின்றார். காங்கிரஸின் பெண் மாநிலங்களவை எம்.பி. யின் இல்லம் அமைந்திருக்கும் ஆழ்வார்பேட்டை பகுதியில் பெரிய டிஜிட்டல் போர்டில் அவரது ஆளுயர உருவத்தின் கீழ் ""பிறந்தநாள் காணும் தென்னக இந்திராவே!'' எனும் வாக்கியம்.
நமது நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு தரமான ஒரிஜினல் காங்கிரஸ்காரராக கட்சிப் பணிக்கு வந்தது நம் நினைவில் நிற்கின்றது. மிகச்சிறந்த வக்கீலாகப் பணியாற்றிய, வசதியான ஒரு சமூகத் தட்டிலிருந்து கட்சிக்கு வந்து உயரிய காங்கிரஸ் நடைமுறைகளைப் பின்பற்றிய ஒரு காங்கிரஸ்காரராக அப்போது அவர் இருந்தார்.
எம்.ஜி. ஆர். மரணமடைந்தபோது நடந்த இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள் அண்ணா சாலையில் இன்றைய முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையைத் தகர்த்தெறிந்து, பல ஹோட்டல்களில் புகுந்து உணவுப் பண்டங்களையும், ஏனைய கடைகளில் மற்ற பொருள்களையும் சூறையாடினார்கள். கடைகளிலிருந்து தொலைகாட்சிப் பெட்டிகளையும், மரச் சாமான்களையும் தொண்டர்கள் சுமந்து சென்றதை முதல் பக்கத்தில் தேசிய பத்திரிகைகள் பிரசுரித்தன.
அப்போது சிதம்பரம், ""தலைநகர் தில்லியில் வேட்டி கட்டிக் கொண்டு வெளியில் நடமாடவே கூச்சமாயிருக்கின்றது'' என்று ஒரு போடு போட்டார். அவரைப் பற்றிய மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
முன்பெல்லாம் இவரிடம் சிபாரிசுக்காக மிகச் சாதாரணமாக யாரும் நெருங்க முடியாது. ஆனால் இப்போது அப்படியல்ல எனும் செய்தி பரவலாகியுள்ளது.
ஒவ்வொரு முறையும் இவர் சென்னை வரும்போது சுவர்களை அலங்கரிக்கும் இவரது போஸ்டர்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.
இவருக்குமா இந்த விளம்பர மோகம் என்று கேட்கத் தோன்றுகிறது. இவர் வங்கியின் கிளைகளைத் திறப்பதற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டு மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது.
யுகோ வங்கி அவர்கள் செய்யும் வேலையை விளம்பரமாக எழுதி சென்னை விமான நிலையத்தில் பெரிய போஸ்டர்களாக வைத்திருக்கிறார்கள். அதன் மேல் பெரிய சைஸில் நிதியமைச்சர் சிதம்பரத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் கலாசாரம் அல்ல.
தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர், தன்னை வாழும் காமராஜ் என வர்ணித்து போர்டு வைத்தவர்களைத் தடுத்து அந்த போர்டை அகற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து அவரது மகனின் டிஜிட்டல் போர்டுகள், ""எங்கள் உயிரே'' என வைக்கப்பட்டதை அவர் ரசிப்பதாகத் தெரிகிறது!. முதலில் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜைப் பின்பற்றி அவர் கொள்கைகளை தங்கள் நடவடிக்கையில் பிரதிபலிக்க வேண்டும். அதன்பின் காமராஜ் ஆட்சி அமைக்க முயற்சி செய்யட்டும். இல்லையென்றால் காமராஜ் ஆட்சியையே கேவலப்படுத்துவதாக அமையும்.
திமுக ஆரம்பித்தபோது அண்ணா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என மூன்று அம்சங்களைப் பறைசாற்றினார். பெருந்தலைவர் காமராஜோ, நேர்மை, எளிமை, தூய்மை என அறைகூவல் விடுத்தார். அதாவது கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகள் நேர்மையாக இருத்தல் வேண்டும். தனிவாழ்வில் எளிமை வேண்டும், பொதுவாழ்வில் தூய்மை வேண்டும்.
திமுகவில் கடமையையும் கட்டுப்பாட்டினையும் முன்நிறுத்தினார்கள். நேர்மை பற்றி கூறவில்லை என்பதைக் கவனிக்க.
காமராஜ் கூறிய எளிமையிலும் தூய்மையிலும் ஆள் உயர கட்அவுட்கள் வராது. சென்னை கார்ப்பரேஷன் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் கீழ் நிலை அரசு ஊழியர்களிடம் கமிஷன் கேட்டு தகராறு செய்தது சென்ற ஆண்டு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. எல்லா காங்கிரஸ் தலைவர்களும் பொதுவாழ்வில் நேர்மை எனும் விஷயத்தில் உறுதியாக இருத்தல் வேண்டும். இவையெல்லாம் முடியாது என்றால் கழகங்களின் அடிச்சுவட்டில் விளம்பர அரசியல், வண்ண விளக்குகள், டிஜிட்டல் போர்டுகள், சாப்பாட்டு பொட்டலங்கள் மற்றும் தினக்கூலிக்கு லாரியில் ஆள்களைக் கொண்டு வந்து கரகோஷம் செய்ய வைக்கும் பெரிய பொதுக் கூட்டங்கள் என தங்கள் அரசியல் பயணத்தைத் தொடரலாம்.
மேலும், காமராஜ் ஆட்சி அமைப்போம் எனும் கோஷத்தை விட்டுவிடுவது என்கிற ஒரு முடிவை தமிழக காங்கிரஸார் எடுத்துவிட்டார்களோ எனும் சந்தேகம் நம்மில் பலருக்கு உருவாகும் வகையில் சில நாள்களுக்கு முன் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேசி இருக்கிறார்.
""தற்போது தமிழகத்தில் நடக்கும் ஆட்சி காமராஜ் ஆட்சியே'' என அவர் கூறியிருக்கிறார். படித்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஜால்ரா சப்தம் கோபாலபுரத்தில் கேட்பதற்காக இப்படி எல்லாமா பேசுவது?.
காமராஜ் காலத்தில் காங்கிரஸ் தொண்டர்களாக இருந்தவர்களுக்கும், இன்னும் காங்கிரஸ் பழைய நிலைமைக்கு வரும் என நம்பி ஓட்டளித்து வரும் பொது மக்களுக்கும் இன்றைய காங்கிரஸார் காமராஜ் ஆட்சியை அமைக்காவிட்டாலும் பரவாயில்லை. காமராஜை இழிவுபடுத்தும் வகையில் இன்றைய ஆட்சியை அவரது பொற்கால ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது எனும் எண்ணமே தோன்றுகின்றது!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் பேச்சு வீரபாண்டி கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும், "" எட்டப்பா ஈனமொழி பேசாதே. வாழ விரும்பினாய், வல்லவனை அழித்தாய், நீ வாழ்ந்து கொள். அன்னியர் உன்னை போற்ற வேண்டும், அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே'' என்கிற வசனத்தை பல காமராஜ் காலத்தவர்களுக்கு நினைவுபடுத்துவதாக அமைகிறது.
என். முருகன்
(கட்டுரையாளர்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.)
நன்றி : தினமணி

2 comments:

said...

இந்த விளமபர வெட்ககேடு சமாச்சாரம் கல்வி நிறுவனங்கள் வரை வந்துவிட்டதுதான் வேதனை. அண்ணா பல்கலை கழகத்தின் முந்தய துணைவேந்தர் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் போஸ்டர்கள், அவரின் போட்டோவோடு எல்லா டிபார்ட்மென்டிலும் ஒட்டவே ஒரு ஆளைப் போட்டிருந்தார். அங்குள்ள ஸ்டேட் பாங்கிலும் போஸ்டர் ஓட்டுவார்கள் (அவர் சட்டவிரோதமாக காரில் சிகப்பு விளக்கு வேறு வைத்திருந்தார்).

இப்ப வந்த புது துணைவேந்தர் பத்திரிக்கையில் சோனியாவிற்கும் கலைஞருக்கும் சென்னை ப'கழகம் டாக்டர் பட்டம் கொடுப்பதை வாழ்த்தி தனது போட்டோவோடு பொன்முடி போட்டா போட்டு பத்திரிக்கை விளம்பரம் தருகிறார். இந்த லட்சணத்தில் யூஜிசி தரும் உதவி பணம் அண்ணா ப'கழகத்திற்க்கு போதாதாம். இந்த மக்கள் பண வீணடிப்பை வேறு சில பல்கலைகழகங்களூம் செய்துள்ளன. கல்விக்கான மக்களின் வரி பணத்தில் தங்களுக்கு விளம்பரம் தேடுவதோடு அரசியல்வியாதிகளையும் சொம்படிக்கின்றனர் இந்தக் கல்வியாளர்கள்.

said...

thenali வருகைக்கு நன்றி