Thursday, August 21, 2008

ஆசை..ஆசை...பேராசை...

புதிதாக ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படும்போதும், ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களின்போதும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்கிற ஆசையும் வேகமும் நமது காங்கிரஸ்காரர்களுக்கு வரும். மேடையேறிப் பேசும்போது இருக்கும் அந்த ஆவேசமும் ஆசையும், அடுத்த நாள் காலையில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் விழாவில் பேசிய தலைவர்கள் அனைவரும் சேர்ந்து காமராஜ் அரங்கத்தில் வழக்கம்போல மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது, கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது போன்ற பேசிப்பேசிச் சலித்த விஷயங்களை மீண்டும் ஒருமுறை பேசி ஓய்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்வரை ஓயப்போவதில்லை என்று சூளுரை வேறு விடுத்திருக்கிறார்.
இதுவரை காமராஜ் ஆட்சி என்று சொன்னவர்கள் இப்போது காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். காமராஜ் மீண்டும் உயிர்த்தெழுந்து வரமுடியாது என்பதையும், அப்படியே வந்தாலும் அவரைப் போன்ற நேர்மையான ஆட்சியாளர்களுக்கு இங்கே இடமில்லை என்பதையும் இப்போதாவது நமது தமிழக காங்கிரஸ்காரர்கள் உணர்ந்தார்களே, அதுவரை மகிழ்ச்சி.
பெருந்தலைவர் காமராஜ் மறைவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ்காரர்கள் கோஷ்டிப் பூசலில் நேரத்தை வீணாக்காமல் ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால், தமிழக அரசியலின் போக்கே மாறியிருக்கும். அப்போதைய திண்டுக்கல் மற்றும் கோவை இடைத்தேர்தல்களின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸா அல்லது எம்.ஜி.ஆரின் அதிமுகவா என்கிற கேள்வி எழுந்து திமுக என்கிற கட்சி காணாமல் போயிருக்க வேண்டும். திமுக இப்போதும் பலமான அரசியல் சக்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் காங்கிரஸாரின் கையாலாகாத்தனம்தான் என்பது சிறு பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும்.
காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதைவிட தங்களை வளர்த்துக் கொள்வதில் முனைப்பு காட்டும் தலைவர்கள் ஒருபுறம். தமிழகத்தில் செல்வாக்குள்ள தலைவர் யாரும் வளர்ந்துவிடாமல் தலையாட்டி பொம்மைகள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ் மேலிடம் இன்னொருபுறம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்வது என்பது எப்படி சாத்தியம்?
தனிப்பட்ட முறையில் தமிழக மக்களுக்கு நேரு குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் மதிப்பும் மரியாதையும் இருப்பதை மறுப்பதற்கில்லை. 1984 பொதுத் தேர்தலில், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெற்ற வாக்குகளைவிட, அந்தத் தொகுதியில் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட கே.ஆர். நடராஜன் பெற்ற வாக்குகள் அதிகம். காரணம், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்ந்த அணியின் வேட்பாளர்களைத்தான் மக்கள் விரும்பினார்கள்.
இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக காங்கிரஸ் உருவாக வேண்டும் என்று நினைத்த மக்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப்போட்ட பெருமை காங்கிரஸ் தலைவர்களைத்தான் சாரும். திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பத்தோ, இருபதோ மக்களவை இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்று காங்கிரஸ் தலைமை மட்டும் அல்ல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களும் விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை.
தனித்துப் போட்டியிடுவது என்று 1977லும், 1989லும், 1998லும் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றதுமே, மீண்டும் திமுக மற்றும் அதிமுகவின் தோளில் சவாரி செய்ய முடிவெடுத்ததே தவிர, தனித்து நின்று கட்சியை வளர்க்கவோ ஆட்சியைப் பிடிக்கவோ முயலவில்லை.
ஒரு காலத்தில் திமுகவானாலும் சரி, அதிமுகவானாலும் சரி ஆட்சி அமைக்க வேண்டுமானால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால்தான் சாத்தியம் என்கிற நிலைமை இருந்தது. ஏறத்தாழ 15%க்கும் அதிகமான வாக்குகளுடன் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்குடன் திகழும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. தொடர்ந்து திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சாமரம் வீசி, தனது வாக்கு வங்கியைத் தேர்தலுக்குத் தேர்தல் சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது காங்கிரஸ். தேமுதிகவின் வளர்ச்சி என்பதே காங்கிரஸ் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்கான அடையாளம்தான்.
""தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி'' என்றெல்லாம் பேசினால், வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக தங்களுக்கு அதிக இடங்களைத் தராதா என்று தங்கபாலு எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?' என்கிற பழமொழி தங்கபாலுவுக்குத் தெரியுமோ என்னவோ, திமுக தலைவர் கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும்!
நன்றி : தினமணி

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார்?

வரும் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றால் மன்மோகன் சிங்தான் பிரதமராவார் என வாரத்துக்கு இருமுறை தவறாமல் கூறி வருகிறார் சரத்பவார். மன்மோகன் மீது இவருக்கு என்ன கரிசனம்? எதற்காக இந்த விஷயத்தை மக்கள் கவனிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்? பொதுவாகவே பரபரப்புக்காக உதவாக்கரை அறிக்கைகளை விடக்கூடியவர் அல்ல சரத்பவார். அதனால், மன்மோகனை முன்னிறுத்த வேண்டும் என்ற அவரது பேச்சு வேறு சில அர்த்தங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதில் முக்கியமானது, "ராகுல் காந்தி பிரதமராவதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது' என்பதுதான்.
காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருப்பது மன்மோகன்தான் என்பதையும் சரத்பவாரின் பேச்சு கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது சந்தேகத்துக்கிடமாக இருந்தபோது, பிரதமருக்கான வேட்பாளராக மன்மோகன் சிங்கை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மன்மோகன் சிங்கின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டியிருக்கின்றன. அதனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக அவர் உருவெடுத்திருக்கிறார். இதை மக்கள் மனதில் பதியச் செய்வதுதான் சரத்பவாரின் நோக்கம்.
மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியே இப்போதைக்கு இல்லை. அறிவிக்காவிட்டாலும் அவர்தான் முன்னிலையில் இருக்கிறார். தாம் பிரதமர் பதவிக்கு வருவதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று ராகுல் காந்தியே நினைக்கக்கூடும். அதையேதான் பவாரும் பிரதிபலிக்கிறார். தற்போதையை மக்களவை விட அடுத்த மக்களவையில் காங்கிரசின் மேலாண்மை குறைவாகவே இருக்கும்.
சிறு கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், அடுத்து அமையப்போகும் அரசுக்கு பூரண ஆயுள் இருக்கும் எனக் கூற முடியாது. இந்தச் சூழலில் தாமோ அல்லது ராகுல் காந்தியோ பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை சோனியா விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார் என்பதனாலேயே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தால், மன்மோகன்தான் பிரதமராவார் என்று அர்த்தமல்ல. எப்படிப் பார்த்தாலும், இடதுசாரிகளின் உதவி இல்லாமல் "மதச்சார்பற்ற' அணி ஆட்சி அமைக்க முடியாது. இப்போது இருக்கும் எண்ணிக்கையிலிருந்து குறைந்தது 30,40 இடங்களைத்தான் இடதுசாரிகள் பெறமுடிந்தாலும், ஆட்சியமைப்பதில் அவர்களது ஆதரவு கட்டாயத் தேவையாக இருக்கும். மன்மோகன் சிங் பிரதமராவதை இடதுசாரிகள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி வேறொருவரைப் பிரதமராக்க வேண்டியிருக்கும். இன்னொரு பக்கம், மாநிலக் கட்சிகளையும் இடதுசாரிகளையும் கொண்ட மூன்றாவது அணியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது. பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பதற்காகவே அந்த அரசை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், மாயாவதி, சரத் பவார், முலாயம் சிங், நிதீஷ் குமார், தேவ கௌடா, ஐ.கே. குஜ்ரால் உள்பட மிகப்பலர் பிரதமர் பதவிக்குப் போட்டியிடக்கூடும்.
மாநிலக் கட்சிகளை வழிநடத்தும் அளவுக்குத் திறன் வாய்ந்த தலைவராக மாயாவதி உருவெடுத்திருக்கிறார். மூன்றாவது அணியை மறுநிர்மாணம் செய்து, புதிய பெயரிட்டு அதை வழிநடத்தும் பொறுப்பையும் மாயாவதி ஏற்றுக்கொள்வார். மாநிலக் கட்சிகளை மூன்றாவது அணிக்கு அழைத்து வரும் பணியைச் செய்ய சந்திரபாபு நாயுடு இருக்கிறார். முடிந்தால், ஜெயலலிதாவுடனும் அவர் பேசுவார்.
மாயாவதி பிரதமராவதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த அணி வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு பாஜகவை முடக்குவதற்காக மாயாவதியை ஆதரிக்க வேண்டிய நிலை காங்கிரஸுக்குக்கூட ஏற்படலாம். மாயாவதி, சரத் பவார் ஆகிய இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டுமென்றால், தமக்கு யார் அதிக தொந்தரவு தர மாட்டார்கள் என்பதை சோனியா காந்தி சிந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் பவாருக்குத்தான் அதிக வாய்ப்பு. நிர்வாகத் திறன், மக்கள் ஆதரவு, இடதுசாரிகளிடம் நற்பெயர் ஆகியவற்றால் பவாருக்கு வாய்ப்புக் கிடைக்கும். எனினும், அவரது கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கின்றன என்பதைப் பொருத்துத்தான், அவருக்குப் பிரதமர் பதவி கிடைப்பது பற்றிய கணக்குகள் செல்லுபடியாகும்.
அடுத்தது முலாயம் சிங். அவர் பிரதமராவதற்குரிய சூழல் ஏற்பட்டால், காங்கிரஸ் குறுக்கே நிற்காது. ஆனால், முலாயம் சிங்கும் சமாஜவாதி கட்சியினரும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை முற்றிலும் ஒழித்து விடுவார்கள் என்ற சந்தேகம் சோனியாவுக்கு எப்போதுமே இருந்து வருகிறது. அது முலாயமின் வாய்ப்பைக் கொஞ்சம் குறைக்கும்.
மாநிலத் தலைவரில் யாராவது ஒருவரைப் பிரதமராக்கும் சூழ்நிலை வந்தால், சோனியா காந்தியின் தேர்வு லாலு பிரசாத்தாகத்தான் இருக்கும். ஆயினும், வரும் தேர்தலில் அவரது கட்சிக்கு அதிக இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்பதால் பிரதமர் பதவிக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படுவது சந்தேகம்தான்.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி