Friday, October 24, 2008

தயாராகிறார் பவார்!

தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் சொன்னார். அமெரிக்காவும் அதன் கொள்கைகளும் முஸ்லிம்களை நசுக்குவதாக உள்ளதாகவும் அதனால் அவர்கள் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இராக் மீதான தாக்குதலையும் சுட்டிக் காட்டினார். இரண்டாவதாக அவர் குறிப்பிட்டது பாபர் மசூதி இடிப்பு. அதற்கு முன்பு பயங்கரவாத நடவடிக்கைகள் இருந்தன என்றாலும் இப்போது நடப்பது போன்று குண்டு வெடிப்புகளெல்லாம் நடந்தனவா என்று அவர் கேட்டார்.
சில நாள்களுக்கு முன்பு நடந்த வேறொரு நிகழ்ச்சியில், முஸ்லிம்களுக்கு எதிரான சூழல் உருவாகி வருவது குறித்து பவார் கவலை வெளியிட்டார். விசாரணைக்காக முஸ்லிம்களை போலீஸார் அழைத்துச் செல்லும்போது அவர்களது முகத்தைக் கருப்புத் துணியால் மூடும் வழக்கத்தைச் சாடிய அவர், ஹிந்துகளுக்கு இதுபோல நடக்கிறதா என ஆதங்கப்பட்டார். மீடியாவையும் அவர் விட்டுவைக்கவில்லை. பயங்கரவாதச் செயல்களுக்கு "மூளையாகச் செயல்பட்டவர்' என்று அவசர, அவசரமாகச் செய்தி வெளியிடுவதாகக் குறை கூறினார். ஹிந்துக்களை இப்படிச் சித்திரித்ததுண்டா எனவும் கேட்டார்.
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள மேரியோட் ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்தபோதும் சரத் பவார் இந்த ரீதியில்தான் கருத்தை வெளியிட்டார். பாகிஸ்தான் அரசைக் கேட்காமலேயே, அந்நாட்டு எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசினால், அந்நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்து எழாமல் என்ன செய்வார்கள்? எந்த நாட்டுக் குடிமகனும் இதைப் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்றார். அத்துடன் விடவில்லை, இந்த மாதிரியானதொரு சூழல்தான் பகத் சிங் உருவாகக் காரணமாக இருந்ததாக ஒரே போடாகப் போட்டார்.
சிறுபான்மை சமூகத்தினர் மீது சரத் பவாருக்கு வந்திருக்கும் இந்தத் திடீர் அக்கறையை அரசியல் நோக்கர்கள் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். பிரதமர் பதவியை அவர் குறிவைத்திருக்கிறாராம். மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கணக்குகள், பிராந்திய தலைவர் ஒருவர் தலைமையிலான அரசு அமைவதற்கான சூழலை ஏற்படுத்தினால், இது சாத்தியம்தான். அதற்கு மகாராஷ்டிரத்தில் கொஞ்சம் அதிக இடங்களை அவர் கைப்பற்றியாக வேண்டும். அதற்குத்தான் இந்தத் "திடீர் அக்கறை'.
உத்தரப்பிரதேசத்தில் உயர்வகுப்பினர், தலித்துகள், முஸ்லிம்கள் அடங்கிய வாக்கு வங்கியை காங்கிரஸிடமிருந்து மாயாவதி வளைத்தது போல, மகாராஷ்டிரத்தில் மராத்தியர்கள், முஸ்லிம்கள், மஹர்கள் ஆகியோரின் வாக்குகளை கைப்பற்ற பவார் திட்டமிட்டிருக்கிறார்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக பவார் பேசி வருவதால் ஹிந்துக்கள் ஓரணியில் திரளுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் அது சிவசேனைக்கு சாதகமாகிவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
தனது இலக்கை நோக்கிய பயணத்தில் பவார் செய்ய வேண்டிய முதல் பணி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸிடம் பேரம் பேசி அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுதான். அவரது வழக்கமான 50:50 கோரிக்கை நிறைவேறினால், மகாராஷ்டிரத்தில் உள்ள 48 தொகுதிகளில் 24 தொகுதிகள் கிடைக்கும். கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்த அவருக்கு இது போதும்.
பவார் முன் இருக்கும் இரண்டாவது சவால், தேர்தலில் வெற்றி பெறுவது. தற்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதுடன், கூடுதலாக நான்கைந்து இடங்களைப் பெற்றால்தான் பிரதமர் கனவு பலிக்கும்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மும்பையில் நடந்த கலவரங்களில் தொடர்புடையவர் என்ற கோணத்தில்தான் சரத்பவாரை முஸ்லிம் சமூகத்தினர் இதுவரை பார்த்து வந்தனர். ஆனால் தற்போது சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. தங்களுக்கு ஆதரவாகப் பேசும் ஒரு தலைவராகவே பவாரை முஸ்லிம்கள் தற்போது பார்க்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு பவார் மீது சந்தேகம்; பாஜக மீது வெறுப்பு. இதனால், அவர்கள் தங்களை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என காங்கிரஸ் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், பெரிய கட்சிகளை ஆதரித்து என்ன கண்டோம் என முஸ்லிம்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவியில் இருந்த பல முஸ்லிம்கள் அண்மையில் பதவி விலகியதே இதற்கு சாட்சி.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் சுயேச்சைகளை மறைமுகமாக ஆதரிக்க பவார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மராத்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இது காங்கிரஸைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. இது தவிர, மகாராஷ்டிரத்துக்கு வெளியிலும் அவருக்கு சில தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். பப்பு யாதவ், முக்தர் அன்சாரி போன்ற சுயேச்சைகள் வெற்றி பெற்றால் அவர்கள் பவாரை ஆதரிப்பார்கள். இந்தக் கணக்கில் 22 முதல் 25 பேரின் ஆதரவு பவாருக்குக் கிடைக்கும். இப்படியாக, வரும் மக்களவைத் தேர்தலில் மற்ற எந்த பிராந்திய தலைவரைக் காட்டிலும் அதிக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவராக பவார் இருப்பார்.
உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் நிலையிலும், மற்ற தலைவர்களே வெட்கப்படும்படியாக, மகாராஷ்டிரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சளைக்காமல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் பவார். தொண்டர்களோடு தொண்டராகப் பழகுவது, குக்கிராமத்தில் உள்ளவர்களைக்கூட பெயர் சொல்லி அழைப்பது என அவர் ஜனரஞ்சகமானவர். மகாராஷ்டிரத்தின் அனைத்துப் பகுதிகளையும் அவரை விட வேறு யாரும் துல்லியமாக அறிந்து வைத்திருக்க முடியாது. இது அவருடைய பலம்.
தற்போதிருக்கும் அரசியல் சூழலே தொடருமானால், மத்தியில் அடுத்து அமையவிருக்கும் அரசு பிராந்திய கட்சிகள் இணைந்து அமைப்பதாக இருக்கும் என பலரும் நம்புகிறார்கள். அப்படியொரு அரசை பாஜக ஆதரிப்பதைவிட காங்கிரஸ் ஆதரிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
தேர்தலில் தோற்றாலும், அரசை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இருக்கும் வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்றுதான் காங்கிரஸ் நினைக்கும். அந்த நிலையில், அந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறதோ அவர்தான் பிரதமராக முடியும். அந்தத் தருணத்தை எதிர்பார்த்துத்தான் பவார் காத்திருக்கிறார். நிர்வாக அனுபவம், பணபலம், மக்கள் ஆதரவு, இடதுசாரிகளிடம் நற்பெயர் போன்ற கூடுதல் தகுதிகள் அப்போது அவருக்கு உதவும்.
சோனியா வெளிநாட்டவர் என்ற பிரச்னையைக் கிளப்பி அவர் பிரதமராவதற்கு முட்டுக்கட்டை போட்டவர் பவார். அதை இன்னும் சோனியா மறக்கவில்லை. அதனால், பவார் பிரதமராவதற்கு சோனியா காந்தி தாமாக முன்வந்து ஆதரவளிக்க மாட்டார். ஆனால், மாயாவதியா பவாரா என்ற நிலை ஏற்படும்போது பவாரைத்தான் பிரதமராக்குவார்.
நான்கு முறை மகாராஷ்டிரத்தின் முதல்வராக இருந்தவர், மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், தற்போது வேளாண் அமைச்சராக இருந்து வருபவர் என்பன போன்ற பல தகுதிகளைக் கொண்ட பவார், ராஜீவ் படுகொலைக்குப் பிறகு பிரதமர் வாய்ப்பை 4 முறை தவற விட்டிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் தேர்தலில் தோல்வியையே சந்தித்திராத அவருக்கு இப்போது வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் பவார் தீவிரமாக இருக்கிறார் என்பதையே அவரது பேச்சுகள் காட்டுகின்றன.
நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

0 comments: