Tuesday, September 2, 2008

இதற்கு முஷாரபே தேவலாம்!

பாகிஸ்தானில் நடைபெறும் ஜனநாயகக் கூத்துகளைப் பார்க்கும்போது, நமது இந்திய ஜனநாயகமும் அரசியல்வாதிகளும் எவ்வளவோ மேல் என்று சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் "இரு கோடுகள்' கதைதான்.
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆசிப் அலி ஜர்தாரி போட்டியிடுவது என்பது ஒரு வருடத்திற்கு முன் யாரும் கனவுகூடக் கண்டிருக்க முடியாத விஷயம். சொல்லப்போனால், தனது கணவர் தன்னுடன் இருப்பதுகூட வெளியே தெரியாத விதத்தில் நடந்து கொண்டார் பேநசீர் புட்டோ. காரணம்? ஜர்தாரிக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு நல்ல பெயர்!
பேநசீர் புட்டோவின் ஆட்சிக்காலங்களில், மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டவரும், அவரது ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தித் தந்தவரும் கணவர் ஜர்தாரிதான். "மிஸ்டர். பத்து சதவிகிதம்' என்று கேலி செய்யப்பட்ட அவரது தலையீடு இல்லாமல் எந்தக் காரியமும் அரசில் நடைபெறாது என்று சொல்லுமளவுக்கு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் பேநசீரின் கணவர் ஜர்தாரி.
பேநசீரின் எதிர்பாராத படுகொலைக்கு முன்னர், இங்கிலாந்திலும், சுவிட்சர்லாந்திலும் அவருக்கும் பேநசீருக்கும் எதிராக நடைபெற்று வந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளைச் சந்திப்பதுதான் ஜர்தாரியின் வேலையாக இருந்தது. தான் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டதாகவும், மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருக்கும் விண்ணப்பங்கள் ஏராளம். மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி வழக்குகளிலிருந்து விடுதலை பெற அவர் செய்த உபாயம் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பி இருப்பதில் ஆச்சரியமில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 11 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி. நீதிமன்ற ஆதாரங்களின்படி, கடந்த 2007 மார்ச் மாதம் நியூயார்க்கைச் சேர்ந்த மனோதத்துவ மருத்துவர் பிலிப் சால்ஷியல் தாக்கல் செய்திருக்கும் மருத்துவச் சான்றிதழில், சிறைவாசத்தால் அவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இப்போது அந்த ஜர்தாரிதான் பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்!
பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆசிப் அலி ஜர்தாரி, நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் சார்பில் முன்னாள் நீதிபதி சயீத் உஸ் ஜமான் சித்திக் மற்றும் கைதே ஆசாம் பிரிவு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த முஷாஹித் ஹுசேன் சையத் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மிகவும் புத்திசாலித்தனமாகக் காயை நகர்த்தித் தன்னை ஓர் அரசியல் சக்தியாக ஜர்தாரி நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. மக்கள் செல்வாக்கே இல்லாத, சொல்லப்போனால் மக்களால் வெறுக்கப்படும் ஒரு மனிதர், மக்களாட்சித் தத்துவத்தை எப்படித் தனக்குச் சாதகமாக்கிப் பதவியில் அமர முடியும் என்பதற்கு பாகிஸ்தான் சம்பவங்கள் ஓர் எடுத்துக்காட்டு.
பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் நவாஸ் ஷெரீபுடன் கைகோர்த்து, ஆட்சியில் தனது கைப்பாவையாகச் செயல்படும் ஒருவரைப் பிரதமராக அமர்த்தியது ஜர்தாரியின் முதல் வெற்றி. கட்சித் தலைமையை தனது மகனிடம் அளித்துவிட்டுத் தான் கட்சியின் இணைத் தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், அதிபர் பதவிக்கு போட்டிபோடப் போகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்களுக்குக்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நவாஸ் ஷெரீபை அதிபர் முஷாரபுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க வைத்து, தான் வேண்டா வெறுப்பாகவும், நவாஸ் ஷெரீபின் வற்புறுத்தலுக்காகவும் முஷாரபுக்கு எதிராக இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, முஷாரபை ராஜிநாமா செய்ய வைத்ததுகூட ஜர்தாரியின் ராஜதந்திரம்தான்.
யார் கண்டது, முஷாரபிடம் ரகசிய ஒப்பந்தம் ஏதாவது செய்து கொண்டு, தான் அதிபராவதற்கு உதவினால், அவர்மீது எந்த வழக்குகளும் இல்லாமல் காப்பாற்றுவதாக ஜர்தாரி வாக்களித்திருக்கிறாரோ என்னவோ? அதிபர் பதவியில் ஜர்தாரி அமர்ந்துவிட்டால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தல் வராமல் தள்ளிப்போட்டு நவாஸ் ஷெரீபின் ஆட்சிக் கனவில் நிரந்தரமாக மண்ணைத் தூவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம், தார்மிக ரீதியாகவும், தனிமனித ஒழுக்க ரீதியாகவும் ஒரு தவறான மனிதர் பாகிஸ்தானின் அதிபராகப் போகிறார். ஜர்தாரி அதிபராவதற்கு, முஷாரபே மேல்!
நன்றி : தினமணி

0 comments: