Monday, October 20, 2008

நல்ல யோசனைதான்!

சந்தேகப்படும்படியான நடத்தை, வேலையில் ஆர்வக்குறைவு போன்ற காரணங்களுக்காக சார்புநிலை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளில் 50 வயதை எட்டியவர்கள், அதைத் தாண்டியவர்களின் பணியேட்டை ஆய்வு செய்து பணி ஓய்வு கொடுத்து அனுப்பிவிடலாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் யோசனை கூறியிருக்கிறார். இது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய யோசனைதான்.
இந்த யோசனையை அவர் அனைத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதமாக எழுதியிருக்கிறார். பணிக்காலம் முடியும் முன்னரே ஓய்வுபெறுவது என்பதை ஒரு சாபமாக யாரும் கருத வேண்டியதில்லை என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதித்துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் நடத்தை, அவர்களுடைய பணியின் தரம், அவர்களுடைய நேர்மை, அவர்களுடைய நடுநிலைமை, அவர்கள் வழங்கும் தீர்ப்பின் தரம் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஓய்வு பெற வேண்டியவரா, பணி நீட்டிப்புக்கு உகந்தவரா என்று பார்க்க வேண்டும், இதற்காக நீதிபதிகளுக்கான பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபகாலமாக சார்புநிலை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் சிலரின் நேர்மையற்ற நடத்தைகள் குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளை அடுத்தே இந்த யோசனையை அவர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறு 50 வயதை எட்டியவர்களின் பணியேடுகளை ஆய்வு செய்வது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் பிரிவு 56 (ஜே)யின் படியும் சரியானதுதான் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
50 வயதை எட்டிய அரசு அதிகாரியின் நடத்தையோ, திறமையோ சரியில்லை என்றால் பொதுநலன் கருதி அவரைப் பதவியிலிருந்து ஓய்வுபெறச் செய்யலாம் என்று 56 (ஜே) பிரிவு கூறுவதை அமல் செய்வதில் தவறே இல்லை என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார். தாங்கள் வகிக்கும் பதவிக்குத் தகுதி அற்றவர்கள், திறமை அற்றவர்கள், சந்தேகப்படும்படியான நடத்தை உள்ளவர்கள் (ஊழல் செய்கிறவர்கள்) ஆகியோரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவின் உண்மையான நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இந்த முறையைக் கையாண்டு, உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த பல அதிகாரிகளின் பணியேட்டை ஆராய்ந்து, சிலரைப் பதவி நீக்கம் செய்தது நல்ல பலனைத் தந்திருப்பதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இந்த யோசனை நீதித்துறையில் உயர் அதிகாரிகள், குறிப்பாக நீதிபதிகள் பற்றியது என்றாலும் மத்திய, மாநில அரசுகளிலும் அரசுத்துறை நிறுவனங்களிலும் இதைப் பின்பற்றுவது நாட்டு நலனுக்கு உகந்ததாகும். திறமை இருந்தும், விஷயம் தெரிந்திருந்தும், பணி செய்யாமல் சோம்பிக்கிடக்கும் அதிகாரிகளைக் கடமையைச் செய்யவைக்க இது நல்ல தூண்டுகோலாக அமையும். அதிகாரிகள் மட்டும் அல்ல, அவருக்குக் கீழே பணிபுரிகிறவர்களும் நேர்மையாக, சிறப்பாக மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் பணியாற்ற இது பேருதவியாக இருக்கும். எப்படிச் செயல்பட்டாலும் ஓய்வுபெறும் வயதுவரை நம்மை யாராலும் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்ற எண்ணமே பெரும்பாலான அரசு ஊழியர்களிடம் காணப்படுகிறது. மிகவும் அசாதாரணமான நிலைமைகளில் மட்டுமே அரசு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி ஓய்வு தருவது, வேலையிலிருந்து நீக்குவது போன்ற செயல்களில் மேல் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
ஊழல், சோம்பேறித்தனம், கீழ்ப்படியாமை, திறமைக்குறைவு, வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் யாரையும் தயவு தாட்சண்யம் பாராமல் தண்டித்துக் கொண்டே இருந்தால்தான் ஊழல், விரயம் குறையும். ஆனால் அப்படி தண்டிப்பது என்பது மேல் அதிகாரிகளின் பழிவாங்கும் போக்குக்கு உதவியாக அமைந்துவிடாமல், சட்டப்படியும், வெளிப்படையான நிர்வாக நடவடிக்கைகள் வாயிலாகவும் நடைபெற வேண்டும். தண்டனை பெறும் யாரும் முறையிடவும், உரிய பரிகாரம் காணவும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
முழுதாக எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை வைத்துள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை மட்டும் அல்ல, சட்டப்படியான ஆட்சி நடைபெறும் நாடு என்ற புகழுக்கும் உரியவர்கள் நாம். இடைக்காலத்தில் நீதித்துறையிலும் அரசு நிர்வாகத்திலும் படிந்துவிட்ட கறைகளை அகற்ற தலைமை நீதிபதியின் இந்தப் பரிந்துரையைத் தீவிரமாக அமல் செய்வது மிகவும் நல்லது என்றே நாம் கருதுகிறோம்.
நன்றி : தினமணி

0 comments: