Wednesday, August 13, 2008

அரசியலில் சிக்கிய அமர்நாத்

காஷ்மீரில் முஸ்லிம்கள் இருக்கும் வரையில் அமர்நாத் யாத்திரை தொடரும் என மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உமர் அப்துல்லா கூறினார். அப்துல்லாவின் இந்தக் கருத்தை அவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
பல்வேறு கலாசார, இன மக்கள் சேர்ந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படை இந்தியக் கோட்பாட்டையும், "காஷ்மீரியத்' கொள்கையின் உண்மையான அர்த்தத்தையும் விளக்க அவர் முற்பட்டார். அதனால்தான் அவருக்கு இந்தப் பாராட்டு.
ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை, இந்தியாவின் அடிப்படையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பையே சிதைத்திருக்கிறது.
கடந்த மே 20ல் அமர்நாத் கோயிலுக்கு 100 ஏக்கர் நிலத்தை தாற்காலிகமாக வழங்குவது என ஜம்முகாஷ்மீர் மாநில அமைச்சரவை முடிவெடுத்தது. இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால், அமர்நாத் கோயில், பிரச்னையின் மையப் புள்ளியானது. இந்த விவகாரத்தால், கடந்த 60 ஆண்டுகளாக மாநிலத்தில் நடந்துவரும் பல்வேறு பிரச்னைகளும் அரசியல் குறைபாடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஒன்றுமேயில்லாத விவகாரம் பெரிய பிரச்னையாவதற்கு இது நல்ல உதாரணம்.
காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் உள்ளிட்ட யாருமே அமர்நாத் யாத்திரையை நிறுத்த வேண்டும் எனக் கோரவில்லை. யாத்ரீகர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடு. அதனால், தற்போது நிகழ்ந்து வரும் பிரச்னை, நிலம் கொடுத்ததால் மட்டுமே ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது.
நிலத்தைக் கொடுப்பதால் சுற்றுச்சூழல் பிரச்னை எழும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதைப் பயன்படுத்தப் போகிறவர்கள் வெளியாட்கள் அல்லவே? அதனால், சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படும் என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது.
அதேபோல் 100 ஏக்கர் நிலத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்தி ஹிந்துக்கள் நிரந்தரமாகத் தங்கக்கூடும் என சிலர் கூறிவருகின்றனர். இதனால் காஷ்மீர் பகுதியில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. காரணம், 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் இருக்கும் அமர்நாத் கோயிலைச் சுற்றி மனிதர்களே வாழ முடியாது என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஓராண்டில் எட்டு மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், மனித வாழ்க்கை சாத்தியமேயில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அமர்நாத் கோயில் நிர்வாகத்துக்குத் தாற்காலிக அடிப்படையில்தான் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் விதிமுறைகள் மீறப்படும்போது திரும்பப் பெறும் உரிமை அரசுக்கு இருக்கிறது.
ஆனால், இந்த விவரங்களையெல்லாம் மாநில அரசு சரியான முறையில் விளக்காததால்தான், போராட்டம் வெடித்து, நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. தாற்காலிகமாகத்தான் நிலம் வழங்கப்பட்டது என்றாலும், "தேவைப்படும்வரை' பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதால், "நிரந்தரம்' என்பதே உண்மை என ஆளுநர் சின்ஹாவின் ஆலோசகர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலாயிற்று.
அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவது என்கிற முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசு இரு விஷயங்களைச் சிந்திக்கத் தவறிவிட்டது. ஒன்று எல்லையில் நிலவி வரும் பதற்றம், அடுத்தது கடந்த 60 ஆண்டுகளில் மத்திய அரசின் மீது காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மை. இந்த இரண்டையும் கணக்கில் கொண்டிருந்தால், இந்த விவகாரமே வந்திருக்காது.
உண்மையைக் கூறினால், அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கெனவே அமர்நாத் யாத்திரைக்குப் போதுமான ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டுதானிருந்தது. வேண்டுமானால் அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகவும், நவீனமாகவும்கூடச் செய்யலாம். அதற்கெல்லாம் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், அதைவிட்டுவிட்டு அரசியல் ரீதியாக அணுகியதுதான் பிரச்னைக்குக் காரணம்.
அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்மு பகுதி மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவது என்ற முடிவை குலாம் நபி ஆசாத் எடுத்தார்.
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் நிலம் வழங்கியதைப் போல, தாமும் எதையாவது செய்யவேண்டும் என்பதற்காக, அப்போதைய ஆளுநர் எஸ்.கே.சின்ஹா கொடுத்த ஆலோசனையாகவும் இது இருக்கலாம். அல்லது நண்பரான அவரை மகிழ்விக்க ஆசாத்தே இந்த முயற்சியைச் செய்திருக்கலாம்.
ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். வைஷ்ணவ தேவி கோயில் ஜம்மு பகுதியில் உள்ளது. அமர்நாத் குகைக் கோயில் முஸ்லிம்கள் நிறைந்த காஷ்மீர் பகுதியில் உள்ளது. அமர்நாத் குகைக் கோயில் இந்துக்களின் புனிதத் தலமாக இருந்தாலும், அதைக் கண்டுபிடித்த பெருமை முஸ்லிம்களையே சாரும். முஸ்லிம்கள் நிறைந்த பகுதியைத் தாண்டித்தான் அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல வேண்டும். 60 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், ஆண்டுதோறும் நடக்கும் யாத்திரை தடைபடுவதில்லை. முஸ்லிம்கள் எப்போதுமே அதைத் தடுக்க முனைந்ததுமில்லை.
இதில், அரசியல் புகுந்ததால்தான் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. நிலம் ஒதுக்கினால், காஷ்மீரை ஜம்முவிலிருந்து பிரித்து விடுவோம் என்று மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி கூறியது. இத்தனைக்கும், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவைதான் அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவதற்கும் ஒப்புதல் அளித்தது. அதிலும் இந்த விவகாரத்துக்கு பொறுப்பான வனத்துறை அமைச்சரே அந்தக் கட்சிக்காரர்தான்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்முவைச் சேர்ந்தவரான ஆசாத்துக்கு செல்வாக்கு கூடியது. அவர் சார்ந்த கட்சிக்கும் ஜம்முவில் அதிக இடங்கள் கிடைத்தன. இந்த ஆதரவை தங்கள் பக்கம் திருப்புவதற்காக அமர்நாத் நில விவகாரத்தை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம் ஆகியவையும் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு உதவுகின்றன.
மற்றொரு பக்கம், அமர்நாத் நில விவகாரத்தால் எழுந்துள்ள உணர்ச்சிபூர்வமான சூழலைப் பயன்படுத்தி மீண்டும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஹுரியத் தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.
ஜம்முவில் இந்துக்களின் விகிதாசாரம் அதிகரிக்கக்கூடும் என்ற முஸ்லிம்களின் பயத்தையும், தில்லி அரசின் மீது அவர்களுக்குள்ள அவநம்பிக்கையையும் ஹுரியத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில் ஹுரியத் மிதவாதி மிர்வைஸ் உமர் பரூக்குக்கும் தீவிரப் போக்குக் கொண்ட சையது அலி கிலானிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆக, ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த விவகாரத்தால் தாங்கள் அடையப் போகும் பலனைத்தான் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கோயிலுக்கு நிலம் வழங்குவதற்கு உத்தரவிட்ட பிறகு, நெருக்கடி ஏற்பட்டதால் அதைத் திரும்பப் பெற்றதே மோசமான அரசியலுக்கு உதாரணம். நிலம் வழங்குவதாக மாநில அரசு உத்தரவிட்ட அன்றே, அதைத் திரும்பப் பெற்றுவிடுமாறு உளவுத்துறை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்படிச் செய்திருந்தால்கூட, ஜம்முவில் வசிக்கும் ஹிந்துக்கள் இந்த அளவுக்குப் போராட்டத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள். ஆனால், சில வாரங்கள் கழித்துத்தான் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குள் விவகாரம் தீவிரமாகி, நடுநிலையான ஹிந்துக்கள்கூட போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
தற்போது அமர்நாத் நில விவகாரமும் அதைத் தொடர்ந்த வன்முறையும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்குள்ளேயே முடிந்துவிடும் நிலையில் இல்லை; நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையால் வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதியாகிவிட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீரில் பிரிவினைவாதிகளும் ஜம்முவில் பாஜகவும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.
நெருக்கடியான தருணங்களில் இந்தியாவை வழிநடத்தும் திறனுள்ள தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்பதுதான் பிரச்னை முடிவில்லாமல் தொடர்வதற்குக் காரணம். ஜம்முவும் காஷ்மீரும் மத அடிப்படையில் பிரிவதற்கான சாத்தியங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப் பிரிவதால் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.
அமர்நாத் நில விவகாரத்தால் புதிய காஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. முஸ்லிம்களுக்கு காஷ்மீர், ஹிந்துக்களுக்கு ஜம்மு, புத்த மதத்தினருக்கு லடாக் என மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரச்னை இன்னும் தீவிரமானால், இந்தியா எந்த மதத்தையும் சாராதது என்று கூறிக்கொள்ளும் அதே நேரத்தில் மாநிலங்களை மத அடிப்படையில் பிரிக்க நேரிடும். அப்படி நடந்தால், வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நமது தேசிய அடையாளம் அழிந்தே போகும், யாரும் விரும்பாவிட்டால்கூட.
நீரஜா சௌத்ரி

நன்றி : தினமணி

0 comments: