Wednesday, August 13, 2008

புகையும் பணவிரயமும்

கடந்த பத்து ஆண்டுகளில் நெடுஞ்சாலைகள் பல போடப்பட்டு, உலகத் தரமான போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டிருப்பது உண்மை. அதேபோல கப்பல்களிலிருந்து "கன்டெய்னர்கள்' என்று அழைக்கப்படும் சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களின் தயாரிப்பும் உலகத் தரத்திற்கு உயர்ந்திருப்பதும், அவைகளின் உற்பத்தி கணிசமாக அதிகரித்திருப்பதும் உண்மை.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல சாலைகள் இன்றியமையாதவை. மனித உடலின் ரத்த நாளங்களைப் போன்றவை இந்த நெடுஞ்சாலைகள். தங்கு தடையின்றி ரத்த ஓட்டம் இல்லாமல் போனால் எப்படி அது இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்குமோ அதேபோன்று சாலைகள் அகலமாகவும், சீராகவும் இருந்தால் மட்டும்தான் உற்பத்தியானவையும், கச்சாப் பொருள்களும் எடுத்துச் செல்லப்படும். பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தேவை இந்த நெடுஞ்சாலைகள்தான் என்பதில் சந்தேகமில்லை.
மத்திய அரசின் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் பயனால் இப்போது நெடுஞ்சாலைகள் ஓரளவு பராமரிக்கப்பட்டு, உலகத் தரத்தில் புதிய சாலைகள் போடப்பட்டும் வருகின்றன. ஆனால், அதே அளவு முனைப்பும் உற்சாகமும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புறச் சாலைகளுக்குத் தரப்படுவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். குறிப்பாக, நகரங்களின் சாலைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை.
தில்லி, மும்பை, கோல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வந்த நிலைமை மாறி இப்போது அனைத்து மாநிலத் தலைநகரங்களும், இரண்டாம் நிலை நகரங்களும்கூடப் பெரிய வளர்ச்சிகளை எதிர்நோக்கும் காலகட்டம் இது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாலோ என்னவோ, வட்ட மற்றும் மாவட்டத் தலைநகரங்களில்கூட மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இத்தனை வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் இருக்கின்றனவா என்றால், இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். விளைவு? எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலும், தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது போக்குவரத்தில் வீணாக்க வேண்டிய நிர்பந்தமும் மக்களுக்கு ஏற்படுகிறது. மனித உழைப்பு வீணாகிறது. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதுடன் நின்றுவிடாமல் விலைமதிக்க முடியாத பெட்ரோல் மற்றும் டீசல் வீணாக்கப்படுகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் என்கிற அமைப்பு சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தில்லியில் மட்டும் ஆங்காங்கே நிற்கும் வாகனங்களால் வீணாகும் எரிபொருளின் அளவு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ. 1,000 கோடி என்கிறது அந்த அறிக்கை. வேடிக்கை என்னவென்றால், தில்லியில் மட்டும் நாளொன்றுக்கு 950 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்படும், எந்த அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வீணாகும் என்பதை நாம் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
சென்னை மாநகரப் பேருந்துகளின் எரிவாயு பயன்பாடு பற்றிய கணிப்பொன்றை மாநகரப் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில் குமார் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சென்னை நந்தனம் சிவப்பு விளக்கிலிருந்து பார்க் ஷெராட்டன் ஹோட்டல்வரை உள்ள சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றி, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டிருப்பதால் ஆண்டொன்றுக்கு மாநகரப் பேருந்து சுமார் ரூ. 62 லட்சம் சேமிக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பாதையில் மட்டும் தினசரி சுமார் 60,000 வாகனங்கள் காலையிலும் மாலையிலும் அலுவலக நேரத்தில் செல்கின்றன. அவர் சொல்லும் கணக்குப்படி ஆண்டொன்றுக்கு இந்த ஒரு மாற்றத்தால் ஏற்படும் தேசிய சேமிப்பு சுமார் ரூ. 25 கோடி என்றாகிறது.
முறையான போக்குவரத்து விதிகளும், அகலமான, மேடுபள்ளமில்லாத சாலைகளும், தங்கு தடையற்ற சீரான போக்குவரத்தும் அமையுமானால் இந்தியாவின் எரிவாயுத் தேவை பலமடங்கு குறையும் என்பதும், கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகும் என்பதும் தெரிகிறது.
மக்களைக் கடனாளியாக்கி அளவுக்கு அதிகமாக வாகனங்களை சாலையில் பயணிக்க விடுவது என்பது புத்திசாலித்தனமான முடிவல்ல. சாலைகள் முறையாக இல்லாத நிலையில் வாகனங்கள் இருந்தும் என்ன பயன்? புகையும் பணவிரயமும்தான் மிச்சம்!

நன்றி : தினமணி

0 comments: