Thursday, August 14, 2008

தங்கப் பதக்கத்துக்குப் பின்னே...

இந்தியாவின் 108 வருடக் கனவு நனவாகி இருப்பதை நாம் பதிவு செய்யாமல் இருந்தால் அதைத் தமிழ்கூறு நல்லுலகம் மன்னிக்காது. 29வது ஒலிம்பிக் போட்டி இந்திய சரித்திரத்தில் ஓர் அழுத்தமான நினைவாக, பொன்னெழுத்துப் பதிவாக நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை. 1980ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு, இப்போதுதான் மீண்டும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது. அந்த வகையில் அபிநவ் பிந்த்ராவின் சாதனை ஒவ்வோர் இந்தியனையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருப்பதில் வியப்பில்லை.
அபிநவ் பிந்த்ராவின் துணிவும், தன்னம்பிக்கையும், உறுதியும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு வருடம் முன்பு அந்த இளைஞனுக்கு ஏற்பட்ட முதுகு வலியையும் பொருள்படுத்தாமல், ஜெர்மனிக்குச் சென்று இடைவிடாத பயிற்சி பெற்று ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் என்றால் அது அவரது உழைப்புக்கும் உறுதிக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
உலக அரங்கில் 17வது இடத்தில் இருந்த பிந்த்ரா, முதல் இடத்தில் இருந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற சீனாவின் ஜு கினானையும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினெனையும் பின்னால் தள்ளி உலக சாதனை படைத்திருக்கிறார். 1900 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கலந்து கொண்டாலும், தனிநபர் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது இப்போதுதான் என்பது நிச்சயமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்.
துப்பாக்கி சுடுவதில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே உலக அரங்கில் முன்னேறி வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் ராஜ்யவர்தன்சிங் ராத்தோரும், கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அபிநவ் பிந்த்ரா மற்றும் மானவ்ஜித்சிங் சாந்துவும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜஸ்பால் ராணாவும் துப்பாக்கி சுடுவதில் சாதனைகள் புரிந்து வந்திருக்கிறார்கள். ஆயினும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பது என்பது நிச்சயம் கனவாகத்தான் இருந்தது.
நம்மால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்தாகி விட்டது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், பழம்பெருமை பேசுவதுடன் நின்று விடலாகாது என்பதுதான் நாம் அழுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலையை உடைய ஒரு நாடு, ஒரு தங்கப் பதக்கத்தை வென்றதுடன் திருப்தி அடைந்தால் எப்படி?
சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் அழுகையே வருகிறது. நாம் இப்போதைய ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தைப் பெற்றிருக்கும் வேளையில் சீனா இதுவரை குவித்திருக்கும் தங்கப் பதக்கங்கள் 17. இதே வேகத்தில் போனால் மொத்தப் பதக்கங்களின் பட்டியலில் அமெரிக்காவை சீனா விஞ்சிவிடும் என்று தோன்றுகிறது. 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்தான் சீனா தனது முதன்முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. இப்போது முதலிடத்துக்குப் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. அதற்குக் காரணம், துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல் போன்ற அதிகமாக போட்டியில்லாத பல விளையாட்டுகளை அடையாளம் கண்டு, அதில் தனது வீரர்களுக்கு முனைப்புடன் பயிற்சி அளிக்கிறது சீனா. விளைவு? சீனா தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்குப் போட்டிபோட முடிகிறது.
கடந்த 2004 ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இந்தியா வாங்கியிருக்கும் மொத்த ஒலிம்பிக் பதக்கங்களைவிட அதிகப் பதக்கங்களை 17 நாடுகள் பெற்றிருந்தன. இதற்குக் காரணம் இந்தியாவில் திறமைசாலிகள் இல்லை என்பதல்ல பொருள். திறமைசாலிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதுதான் அர்த்தம்.
நமது ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்தால், உலக அளவில் சிறந்த சைக்கிள் ஓட்டும் வீரர்களாக முடியாதா? கேரள மாநிலம் தலைச்சேரி, கண்ணூரைச் சேர்ந்த சர்க்கஸ் வீராங்கனைகள் முறையான பயிற்சி இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்கம் வெல்ல மாட்டார்களா? நமது இந்திய மீனவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தால் உலக அரங்கில் படகுப் போட்டியிலும், நீச்சலிலும் பரிசுகளைக் குவிக்க மாட்டார்களா?
அரசுக்கு இதைப் பற்றிய அக்கறை வேண்டும். அதிகாரிகள் விளையாட்டுப் பயிற்சி மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளாமல் இந்தியாவை உலக அரங்கில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட வேண்டும். திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் போக்கு பொதுநல விரும்பிகளிடமும், ஊடகங்களிடையேயும் வளர வேண்டும்.
இந்தியா வளர்ச்சி அடைகிறது, பொருளாதார ரீதியாக முன்னேறுகிறோம் என்று மார்தட்டிக் கொள்வதால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்று வளர்ச்சி அடைந்த நாடாகிவிட முடியாது. ஒருவகையில் ஒலிம்பிக் பதக்கங்களும் உலக அரங்கில் நமது அந்தஸ்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. அபிநவ் பிந்த்ராவின் வெற்றி அதற்கு வழிகோலுமாக!
நன்றி : தினமணி

0 comments: