Thursday, August 14, 2008

கனிந்தது கனவு; திறந்தது புதிய பாதை!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவுக்குப் புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளார் அபிநவ் பிந்த்ரா. பல காலமாகக் கண்டு வந்த கனவு, இன்று நனவாகியிருக்கிறது.
பிந்த்ராவுக்கு கோடிகளும், லட்சங்களும் குவிந்து வருகின்றன. தொழில்முறையில் விளையாட்டை மேற்கொள்ள விரும்பும் எண்ணற்ற இந்திய இளைஞர்களுக்கு பிந்த்ராவின் வெற்றி, நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.
அபிநவைப் போன்ற ஏராளமான இளைஞர்கள் "உறுதி கொண்ட நெஞ்சும், தினவு பெற்ற தோளுமாக' வெற்றி இலக்கை நோக்கிக் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் உழைப்புக்கேற்ற உடல் உரம் இன்றி, களத்தில் இறங்கியவுடனேயே தோல்வியைத் தழுவுகிறார்கள்.
நம் விளையாட்டு வீரர்களின் தோல்வியில் மாபெரும் பங்கு வகிப்பது, உணவுப் பழக்கம். சத்துணவு இன்மையால் உடல் தளர்ந்து, உற்சாகம் குன்றி, தோல்வியைத் தழுவும் வீரர்கள் ஏராளம்.
விளையாட்டில் சாதனை படைத்தபிறகு வீரர்களுக்கு பணத்தையும், பரிசையும் அள்ளிக் கொடுக்கும் அரசு, அவர்களின் ஆரம்பகாலப் பயிற்சிக்கும், உணவுக்கும் ஒரு பைசாகூட கொடுப்பதில்லை என்பதே நிஜம்.
ஒரு மாணவனிடம் குறிப்பிட்ட விளையாட்டின் மீது ஆர்வமும், திறமையும் மறைந்திருந்தால், அதை வெளிக் கொண்டு வருபவர்கள் பெரும்பாலும் பெற்றோரே. தங்கள் கை காசைப் போட்டு பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முயற்சிப்பவர்களும் பெற்றோரே.
பள்ளியிலோ, கல்லூரியிலோ வாய்ப்புகள் கிடைத்தால், அதைப் பிடித்து முன்னேறும் இளைஞர்களே அதிகம்.
மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள், சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.
சத்தான உணவோ, தேர்ந்த பயிற்சியாளர்களோ இல்லாமல் மொட்டிலேயே கருகிப் போகும் வீரர்கள் பலர். கொண்டைக் கடலைக்குக்கூட வழியில்லாமல், சாதாரண அரிசிச் சாப்பாட்டைச் சாப்பிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், வீராங்கனைகள் ஏராளம்.
செஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ் உள்ளிட்ட தனிநபர் விளையாட்டுகளில், பயிற்சி பெற்ற, திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. நல்ல "கோச்' கிடைக்க வேண்டும் என்றால் வேறு மாநிலத்துக்கோ, மாவட்டத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. நிறையப் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
நடுத்தர விளையாட்டு வீரனால் பயிற்சிக்காகப் பெருந்தொகையைச் செலவிட முடிவதில்லை. உயிர் சுருங்கி, உடல் நோக கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஜொலிக்கும் வீரர்களுக்கு, மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோதான் வெற்றி கிடைக்கிறது. சர்வதேச அளவில் சாதனை படைக்கும் அளவுக்கு அவர்களின் உடலில் வலு இருப்பதில்லை.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, களத்திலிருந்தே விலகி வெற்றிக் கனவை தொலைத்துவிடுகிறார்கள். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்குப் பிறகு பயிற்சியாளர்களாக மாறிவிடுகிறார்கள்.
எல்லாத் தடையையும் தாண்டி, சர்வதேச அளவில் பிரகாசிப்பவர்கள் அபிநவ், விஸ்வநாதன் ஆனந்த், சானியா போன்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.
வெற்றிக்குப் பிறகு விளையாட்டு வீரர்களுக்கு பணமாகவும், பொருளாகவும் வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள், விதையிலேயே வேரூன்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்?
பழ மரத்தை நாடி வரும் பறவைகள்போல், வெற்றிக்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருவது இயல்புதானே. விதையிலிருந்து வேரூன்றி, செடியாகி மரமாவதுதான் கடினம்.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து உற்சாகமூட்டி, ஊக்குவிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் அக்கறை காட்டவேண்டும். தகுதியான வீரர்களின் உணவு, பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பதற்காகும் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றி பகல் கனவாகப் போனதற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், கல்வி. விளையாட்டா, கல்வியா என்ற கேள்விக்கு, கல்வியே பிரதானம் என்பதே பெரும்பாலானோரின், நடுத்தர வர்க்க இந்தியர்களின் பதிலாக இருக்கிறது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் விளையாட்டு வீரர்கள், பயிற்சிக்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் மற்ற மாணவர்களைப் போல தினமும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்க முடிவதில்லை. தினசரி சேரும் பாடச்சுமை அழுத்த, தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடுகிறது. அல்லது சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற நேரிடுகிறது.
இந்தத் தோல்வியை, சராசரி இந்தியப் பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொருளாதார ரீதியாகக் காலூன்ற "விளையாட்டைவிட படிப்பே மேல்' என்ற எண்ணமே பெரும்பாலான பெற்றோர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. அதனாலேயே விளையாட்டில் திறமையும், ஆர்வமும் இருக்கும் வீரர்களில் பலர், படிப்புடன் ஒதுங்கி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட வீரர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை. விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதும், அவர்களின் வசதிக்கேற்ப தேர்வு எழுத அனுமதிப்பதும் அவசியம்.
இதற்காக அந்த வீரர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருடன் பேசி, உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிப்பதற்கு ஆகும் செலவு, ஆசிரியர்களுக்கான கூடுதல் ஊதியம் போன்றவற்றை அளிக்கவும் அரசு முன்வரவேண்டும்.
இரும்புபோல் உடலும், சாதனை படைக்கத் துடிக்கும் நெஞ்சமும் கொண்டவர்கள் நம் இளைஞர்கள். வறுமையும், வசதியின்மையும் அவர்களின் ஆர்வத்தை எந்தவிதத்திலும் அணைபோட அனுமதிக்கக்கூடாது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள வெற்றியை, புதிய பாதைக்கான வாசலாக ஆட்சியாளர்கள் கருத வேண்டும். விளையாட்டுத் துறைக்காக கூடுதல் தொகையை ஒதுக்கி வீரர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்க வேண்டும்.
ஜி. மீனாட்சி
நன்றி : தினமணி

0 comments: