Friday, August 22, 2008

சிறு தொழிலுக்கு உதவிக்கரம்


சிறு தொழிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. சமீப காலம் வரை, இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொழில் உற்பத்தியில், கிட்டத்தட்ட 40 சதவீதம் சிறு தொழில்களின் பங்களிப்பே. அதேபோல் ஏற்றுமதியில் இதன் பங்கு 40 முதல் 45 சதவீதம் ஆகும். முக்கியமாக வேலைவாய்ப்புகள் அளிப்பதில் சிறு தொழில்களின் பங்களிப்பு 40 சதவீதத்துக்குக் குறையாமல் இருந்து வந்தது.
வேலைவாய்ப்புகள் தொடர்பாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரு தொழில் முனைவோர் ரூ.10 லட்சம் வங்கிக்கடன் வாங்கி சிறு தொழில் தொடங்கினால் அதன் மூலம் 10 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை இருந்தது. தற்போது, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பெரிய அளவில் முதல் போட்டு தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் சராசரியாக ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.
சிறு தொழில்களுக்கு இருந்த சிறப்புகள் பழம் கதையாகி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்துள்ள இந்திய தொழில் சங்கங்களின் சம்மேளனம் (Assocham) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கவலை அளிக்கிறது.
ஏற்கெனவே நலிவுற்று இருந்த சிறு தொழில்கள் மேலும் சரிந்துள்ளதை அது படம் பிடித்துக் காட்டுகிறது. ஒட்டு மொத்த உற்பத்தியில், சிறு தொழில்களின் பங்கு 10 சதவீதம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 7 சதவீதம் குறைந்து விட்டது என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதற்குக் காரணம், பெரிய தொழில் கூடங்களும் நடுத்தர தொழில் கூடங்களும் தங்களது உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருள்களின் தேவைகளை மலிவான இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றன என்பதுதான்.
அதிலும் குறிப்பாக தற்போது தலை தூக்கியுள்ள பொருளாதார மந்தநிலையின் காரணமாக, சிறு தொழில் நிறுவனங்களால் பெரும் மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் தேவைகளை சகாயமான விலையில் வழங்க முடியவில்லை. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில், சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்கூடங்களை நவீனமாக்கிக் கொள்ள இயலவில்லை. தொழில் நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள தேவையான நிதி ஆதாரம் இல்லை. இதனால், சிறு தொழில்கள், அதிகரித்துவரும் போட்டிகளை எதிர்கொள்ளும் சக்தியை இழந்துவிட்டன.
""அசோசெம்'' தலைவர் சஜ்ஜன் ஜின்டால் கூற்றின் படி, கடந்த நிதி ஆண்டு இறுதியில் 44 லட்சமாக இருந்த சிறு தொழில் நிறுவனங்கள் தற்போது 40 லட்சமாகக் குறைந்து விட்டன. இத்துறையில் 2 கோடியே 38 லட்சம் பேர் பணியாற்றி வந்தார்கள். அவர்களில் 13 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். இவ்வளவும் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்துள்ளன.
தொழிற் சங்கங்களின் சம்மேளனம் தரும் தகவல்கள், பிரச்னையின் விளிம்பை மட்டுமே தொட்டுள்ளன. முழுமையான பிரச்னை இன்னும் கடுமையானது என்பதே உண்மை.
200102ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் சிறு தொழில் பிரிவுகளில் மூன்றில் ஒரு பங்கு நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. இவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மூடப்படும் நிலையை எட்டிவிட்டன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகியவை இதில் முக்கிய இடம் வகிக்கின்றன.
1970 முதல் 1990 களின் தொடக்கம் வரை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதை முன் உரிமை அடிப்படையில் செய்தன. 1992இல் இருந்து பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் என்ற பெயரில் வங்கிகள் பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதில் காட்டிய அக்கறையை சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் காட்டவில்லை. காரணம் வங்கிகளின் லாப நோக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சிறு தொழில் பிரிவுகளுக்கு முன்னுரிமை கடன் வழங்கும் மரபு பின்னுக்குத் தள்ளப்பட்டது.
சிறு தொழில்களுக்கு வழங்கும் கடன் வாராக்கடனாக மாறிவிடுமோ என்று வங்கிகள் அஞ்சின. பின்னர் வந்த நாயக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் கடன் உத்திரவாத நிதி (Credit Guarantee Fund) போன்ற திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
உலகமயமாக்கல் விளைவாக, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அந்நியநாட்டுப் பொருள்கள் மலிவு விலையில் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டன.
இதனால் சிறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அவற்றின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதில் முன் எப்போதும் இல்லாத அளவு கடும் போட்டி ஏற்பட்டது.
அதே நேரம், எண்ணற்ற சட்டதிட்டங்கள், ஆய்வு அதிகாரிகளின் கெடுபிடி ஆகியவை சிறு தொழில் நிறுவனங்களின் குரல்வளையை சுற்றி வளைக்கின்றன. இதனால், சிறு தொழில்கள் திணறுகின்றன.
மீண்டும் சிறு தொழில்கள் புத்துயிர் பெறவேண்டுமானால் பாரத ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.
சிறு தொழில்கள் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் கடனுதவியை உரிய நேரத்தில், போதிய அளவில் வங்கிகள் அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை வகுத்து செயல்படுத்த வேண்டும். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது விவசாயம், சிறு தொழில் ஆகிய இரண்டும் முன்னுரிமை பெற்ற பிரிவுகளாகக் கருதப்படும் என நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்படி வங்கிகள் மீண்டும் செயல்பட்டாலே போதுமானது. வங்கிக் கடன்கள் மூலம்தான் சிறு தொழில்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச முடியும்.
மின்சாரம், தண்ணீர் ஆகிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதற்கு மாநில அரசுகள் முன்னுரிமை வழங்கவேண்டும். ஆய்வு அதிகாரிகளின் இடைவிடாத கெடுபிடிகள் குறைக்கப்பட வேண்டும்.
உற்பத்தியாகும் பொருள்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில், சர்வதேச தரத்துக்கு உற்பத்தி முறையையும், சாதனங்களையும் மாற்றிக்கொள்ள சிறு தொழில்கள் முன் வரவேண்டும். இதற்கு உதவியாக, ஜவுளித்துறைக்கு ஏற்கெனவே இருப்பதுபோல், தொழில்நுட்ப மேம்பாடு நிதி (Credit Guarantee Fund) போன்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு சிறு தொழில்களுக்கும் உருவாக்கலாம். இதன் மூலம் ஏற்றுமதிக்கும் ஊக்குவிப்பு தரமுடியும்.
சிறு தொழில்கள் நவீன இயந்திரங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தால், இறக்குமதி தீர்வையை மத்திய அரசு குறைத்து இறக்குமதி செய்ய உதவ வேண்டும்.
சிறு தொழில் உற்பத்திப் பொருள்களை மத்திய, மாநில அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் முடிந்த அளவு வாங்குவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அவை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். ஏற்கெனவே இருந்த இது போன்ற நடைமுறைகள் காலப்போக்கில் கைவிடப்பட்டன. பெரிய நிறுவனங்கள், சிறு தொழில் பிரிவுகளிலிருந்து கொள்முதல் செய்திடும் பொருள்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்வதற்கு பல மாதங்கள் ஆகின்றன. பொருள்களுக்கான தொகை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற நியதிகள் இருந்தன.
உதாரணமாக பெரிய தொழில் நிறுவனங்கள் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்கு விண்ணப்பிக்கையில், மேற்கூறிய இனத்தில் நிலுவை ஏதும் இல்லை என உறுதி அளிக்க வேண்டும்.
ஆனால் இந்த நியதிகள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. செயலளவில் நீர்த்துப்போய்விட்டன.
இதுபோல் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விரிவான சிறுதொழில் கொள்கையை வகுத்து அதனை பாரத ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஆகியவை முனைப்புடனும் இதய சுத்தியுடனும் செயல்படுத்தினால்தான் சிறு தொழில்கள் மீண்டும் தழைக்க முடியும்.

எஸ். கோபாலகிருஷ்ணன்
(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர்சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

நன்றி : தினமணி

0 comments: