Saturday, August 16, 2008

குதிரை, கழுதை எல்லாம் ஒரே விலை!

சந்தையில் ஒரே மாதிரியான பொருள்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் நேரத்தில் இதில் யாருடைய விலை நிர்ணயம் சரியானதாக இருக்கும் என்ற கேள்வி எழும்போது "சந்தை தீர்மானிக்கும்' என்று சொல்வது வழக்கம்.
கல்விச் சந்தையில் நுகர்வோராக இருக்கும் பெற்றோர்களுக்கு இந்த தீர்மானிக்கும் சக்தி மறுக்கப்படுகிறது.
முதல் கலந்தாய்வுக் கூட்டத்தின் முதல் 10 நாள்களிலேயே சிறந்த கல்லூரிகள் அனைத்திலும் அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் இடம்பிடித்து விட்டனர்.
அடுத்த 10 தினங்களில் நடந்த கலந்தாய்வில் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் உள்ள ஒரே காரணத்தால் சில கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவில் மட்டும் மாணவர்கள் சேர்ந்தார்கள். மற்ற பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேரவே இல்லை என்ற நிலைதான் நீடித்தது.
மாணவர்கள், பெற்றோர் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்திலேயே அக்கல்லூரி பற்றிய மதிப்பீடு வெளிப்படுகிறது. இந்த வகையில், முதல் கலந்தாய்வில் 50 சதவீத இடங்கள் பூர்த்தியாகாத கல்லூரிகள் அனைத்துமே இரண்டாம்தர கல்லூரிகள் என்று முடிவுசெய்வதற்கு எந்த நிபுணர் குழு ஆய்வும் தேவையில்லை.
முதல் கலந்தாய்வில் (20 நாள்களில்) 50 சதவீத இடங்கள் கூட காலியாகாத சுயநிதி கல்லூரிகளும் ரூ. 32,500 கல்விக்கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இத்தகைய கல்லூரிகள் (அதாவது முதல் 20 நாள்களில் 50 சதவீதத்தும் அதிகமான இடங்கள் காலியாக உள்ள கல்லூரிகள்) கல்விக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கினால் என்ன?
ஆயத்த ஆடைகள் முதல் காய்கறி வரை, குறையுடையன யாவும் விலை குறைத்து விற்கப்படும்போது, கல்விச் சந்தையில் மட்டும் எல்லாமும் ஒர் நிறை, எல்லாமும் ஓர் விலை என்பது சரியல்ல.
தரமான கல்லூரியாக மாறும்போது தானாகவே மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். அப்படியான சூழல் வரும்போது அக்கல்லூரிகள் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்ளட்டுமே!
கல்விக் கட்டணம் ரூ. 32,500 என்று அரசு சொன்ன போதிலும், எந்த தனியார் சுயநிதி கல்லூரிகள் எதுவுமே குறைந்தபட்சம் ரூ. 75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றோரிடம் கறந்துவிடுவதுதான் நிகழாண்டின் உண்மை நிலை. நூலகம், ஆய்வுக் கூடம், கணினிக்கூடம், திரும்பத் தரக்கூடிய முன்வைப்புத் தொகை என்ற புதுப்புது தலைப்புகளில் சுயநிதிக் கல்லூரிகள் வசூலிக்கும் தொகை பற்றி அண்ணா பல்கலைக்கழகமும், உயர் கல்வி அமைச்சரும் தமிழக அரசும் கவலைப்படுவதே இல்லை.
பல கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 62,500ஐ எந்த வகையிலும், எந்தத் தலைப்பின்கீழும் இரக்கமின்றி வசூலிப்பதில்தான் ஆர்வம் காட்டப்படுகிறது.
இந்த காரணத்தாலேயே, அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு விழுப்புரம், திண்டிவனம், திருக்குவளை, பண்ருட்டி, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய இடங்களில் தொடங்கியுள்ள கல்லூரிகளில், எந்த வசதியும் இல்லை என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தும், ஆசிரியர்கள் நியமனம்கூட இன்னும் நடத்தப்படவில்லை என்று தெரிந்திருந்தும் அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை வேகமாக முடிந்துபோனது. இக்கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் அனைத்தும் சேர்ந்தால்கூட ரூ. 20,000க்கு அதிகமில்லை.
சிறுபான்மையினர் கல்லூரிகள் நீங்கலாக அனைத்து சுயநிதி கல்லூரிகளும் 65 சதவீத இடங்களை அளித்துள்ளதாக சொல்லப்பட்டாலும், முன்னிலையில் உள்ள பல கல்லூரிகள் 50 சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்தன என்ற குற்றச்சாட்டை பெற்றோர் முன்வைக்கின்றனர்.
மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான இடங்கள் காலியாக இருந்தால், கலந்தாய்வு முடிந்த பின்னர் அவற்றை நிர்வாக ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்வதற்கான, காத்திருப்போர் பட்டியலை கல்லூரி நிர்வாகங்கள் இப்போதே வைத்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
சில கல்லூரிகள் சில புதிய பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்தின் அங்கீரத்தைப் பெற்றுள்ளன. ஆனால் அவை தங்கள் புதிய பாடப்பிரிவுகளை கலந்தாய்வில் இடம்பெறச் செய்யவில்லை. கலந்தாய்வு முடிந்தபிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைப்படுத்திக்கொண்டு, சட்ட சிக்கல் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்ய காத்திருக்கின்றன என்று தெரிகிறது.. இந்த பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை பட்டியல் அவர்களிடம் தயாராக உள்ளது.
மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் பாடப்பிரிவுகள் வாரியாக எத்தனை இடங்கள் கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டன. பூர்த்தியாகாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கான ஒதுக்கீடுகள் எந்த வகைப்படி பூர்த்தி செய்யப்பட்டன, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற ஒவ்வொரு மாணவரிடமும் கல்லூரிகள் வசூலித்த மொத்த தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

0 comments: