Saturday, August 16, 2008

கசக்கப் போகிறது சர்க்கரை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும்புச் சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. கரும்பு சாகுபடிக்கு ஏற்றவாறு மழை வளம் இல்லையென்ற காரணம் ஒருபுறம் இருக்க, கரும்புக்கு நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலையும், விளைந்த கரும்பை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலைகள் செய்யும் தாமதமும், கரும்பைக் கொள்முதல் செய்த பிறகு அதற்குண்டான தொகையைத் தர சர்க்கரை ஆலைகள் எடுத்துக் கொள்ளும் அவகாசமும் விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளன.
மிகச் சாதாரணமான இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் மனமோ, அக்கறையோ இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியலில் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற சரத் பவாரை விவசாய அமைச்சராக நியமித்தபோது, ""பொருத்தமானவர்தான் பதவி ஏற்றிருக்கிறார்'' என்றே விவரம் தெரிந்தவர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் அவரோ விவசாயிகளின் நலனைவிட மகாராஷ்டிரத்திலும் பிற மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளின் நலனே முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.
20062007 சர்க்கரைப் பருவத்தில் 285 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி ஆனது. அதுவே பிறகு 20072008ல் 265 லட்சம் டன்களாகக் குறைந்தது. இப்போது 20082009ல் 220 லட்சம் டன்களாகச் சரியும் என்று புதிதாகத் திரட்டப்பட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மிகவும் கவலைதரத்தக்க விஷயமாகும்.
கரும்புச் சாகுபடியைவிட சோயா மொச்சை, மக்காச் சோளம் ஆகியவற்றை விவசாயிகள் நாடத்தொடங்கிவிட்டதால் கரும்புச் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. சோயா மொச்சை, மக்காச் சோளம் ஆகியவற்றுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கிறது. அதன் அறுவடைக்கு யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை.
மக்காச் சோளத்தையும் சோயா மொச்சையையும் கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிரம் காட்டுவதால் சர்வதேசச் சந்தையில் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. எனவே சோயா, மக்காச்சோள சாகுபடியில் அதிக விவசாயிகள் இறங்க ஆரம்பித்துள்ளனர்.
சர்க்கரை உற்பத்தி அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைக் காப்பதற்கு மட்டுமே நடவடிக்கைகளை எடுப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் சர்க்கரைக்கு இருக்கும் தேவையைவிட சர்க்கரை உற்பத்தி அதிகரித்துவிட்டது என்றால், கணிசமான அளவு சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஏன் என்று கேட்டால், அன்னியச் செலாவணி கையிருப்பை உயர்த்துவதற்காக என்று பதில் அளிக்கிறது.
சர்வதேசச் சந்தையில் இந்தியா தன்னுடைய சர்க்கரையை விற்காவிட்டால், உலக நாடுகள் சர்க்கரை கிடைக்காமல் திண்டாடப் போவதில்லை. உள்நாட்டில் செயற்கையாக சர்க்கரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்ற ""நல்லெண்ணத்தின்'' அடிப்படையில்தான் மத்திய அரசு சர்க்கரையை ஏற்றுமதி செய்துகொண்டே இருக்கிறது.
1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோதுதான் சர்க்கரைத் தொழிலில் அமலில் இருந்த ""இரட்டை விலைக் கொள்கை'' கைவிடப்பட்டது. அதன் பலன், ரேஷன் கடைகளைவிட மளிகைக் கடைகளில் சர்க்கரை விலை குறைந்தது. அந்த துணிச்சலான நடவடிக்கைக்கு அப்போதைய நிதியமைச்சர் எச்.எம். படேல், நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் மோகன் தாரியா போன்றோர் துணையாக இருந்தனர்.
இப்போதுள்ள மத்திய அரசு தன்னை, ""ஐக்கிய முற்போக்கு கூட்டணி'' என்று அழைத்துக் கொண்டாலும் அதன் பெருவாரியான முடிவுகள் விவசாய விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. சர்க்கரையைப் பொருத்தவரை இப்போதைக்கு கையிருப்பில் 110 லட்சம் டன் பழைய கையிருப்பு இருப்பதால் நிலைமையைச் சமாளித்துவிடலாம். ஆனால் வரும் ஆண்டுகளில் கரும்புச் சாகுபடி பரப்பு வெகுவேகமாகச் சரிந்துவிட்டால் இறக்குமதி செய்துதான் நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அப்போது அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும், அந்தச் சுமை முழுக்க நுகர்வோர் தலையில்தான் விழும் என்று இப்போதே எச்சரிக்கிறோம்.

0 comments: