Friday, August 15, 2008

காந்திக்காக ஏங்கும் உலகு

"மகாத்மா காந்தி' என்றும், "தேசப்பிதா' என்றும் இன்றளவும் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அண்ணல் காந்தியடிகள். ஆனால் அவரோ, தான் அவ்வாறு அழைக்கப்படுவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கவே விரும்பினார். சென்ற இடமெல்லாம் இடைவிடாத மக்களின் ஏகோபித்த இக்கோஷங்களிடையே அவர் நினைத்தது நடைபெறாமல் போனது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் தரிசனத்திற்குச் சென்ற காந்தி, மக்கள் கூட்டம் "மகாத்மா காந்திக்கு ஜே' என்று கோஷமிட்டபோதும் மிகவும் எரிச்சலடைந்தார். "கோயிலுக்குள் மகாத்மாவை (விஸ்வநாதர்) தரிசனம் செய்ய இங்கு வந்தால் இங்குள்ள மகாத்மாக்களின் (தன்னை மகாத்மா என்று கோஷமிடும் மக்கள்) தொல்லை தாங்க முடியவில்லையே. நீங்கள் மகாத்மா என்று கோஷமிடுவதை முதலில் நிறுத்துங்கள். கோயிலை இவ்வளவு அசுத்தமாக வைத்திருக்கிறீர்களே. வெளிநாட்டினர் இக்கோயிலைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக நம்மை நினைப்பார்கள்' என்று கோபமாகப் பேசினார் காந்தி.
அண்ணல் காந்தியடிகளை, மகாத்மா காந்தி என்று அழைக்கும்போது அவரது சிறந்த அரசியல் மேதமை, மனித நேயப் பண்புகள் சார்ந்த ஆளுமை குறைத்து மதிப்பிடப்படுவதாகவே யோகேஷ் சதா போன்ற வரலாற்று அறிஞர்கள் உணர்கிறார்கள். ஏனெனில் ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா என்ற பதங்களுக்கு விளக்கவுரை ஆற்றிய ஆன்மிகவாதியல்ல காந்தி. மிகச் சாதாரண மனிதராகத் தன்னை ஏற்றுக்கொள்ளும் சுபாவமே காந்தியிடம் கடைசி வரையிலும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் தன்னை ஓர் அற்ப ஆத்மாவாக என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சாதாரண மனிதராகவே தன்னை நினைத்து வந்தார்.
1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு ஜவாஹர்லால் நேரு தலைமை வகித்தார். உடனடியாக சுதந்திரப் பிரகடனத்தை அறிவியுங்கள் என்று எங்கும் குரல் ஒலித்தபோது என்ன செய்வதென்று தெரியவில்லை. முழுச் சுதந்திரம் எனும் அர்த்தம் பொதிந்த சுயராஜ் (நஜ்ஹழ்ஹத்) தீர்மானத்தை மிக அவசரமாக காந்தி கொண்டு வந்தார். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். சுயராஜ் பற்றி விளக்கம் கேட்டபோது தாகூரிடம் "என்னைச் சுற்றி இருட்டு பரவியுள்ளது. ஏதேனும் ஒரு ஒளி கூட எனக்குத் தோன்றவில்லை, என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை' என்று ஒரு சாதாரண மனிதரைப் போல் தனது இயலாமையை வெளிப்படுத்துகிறார் காந்தி. ஒரு தீர்க்கதரிசியைப் போன்றோ, எல்லாம் முற்றுணர்ந்த மகாத்மா போன்றோ அவர் என்றும் தன்னைக் காண்பித்துக் கொள்ளவில்லை.
காந்தியடிகளை தேசப்பிதா என்று அழைக்கும்போதும் மறுபடியும் இதுபோன்ற கேள்விகள்தான் மேலோங்கி வருகிறது. ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு காந்தி ஒரு மிகப் பெரிய காரணமாக இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து அவர் இந்தியாவிற்கு வருவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வரலாற்று அரசியல் தீவிர தன்மையோடு நடைபெறத்தான் செய்தது. இருப்பினும் தலைவர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்ட இந்திய விடுதலை உணர்வை மக்களுக்கு எடுத்துச் சென்ற மாமனிதராக காந்தி ஒருவரே இருந்தார். காந்தியை தேசப்பிதா என்று அழைக்கும்போதும், இந்தியா என்ற குறுகிய சிமிழுக்குள் காந்தியை அடைக்கும் முயற்சியாகவே பொருத்தமற்ற ஒன்றாக இருக்கிறது என்று இன்றைய வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியும், தலைசிறந்த மனிதப் பண்பும், உலக அநீதியை எதிர்க்கும் குரலாகவும் உள்ள காந்தியின் ஆளுமை இவ்விதமான அடைமொழி வார்த்தைகளால் நீர்த்துப் போவதும், சில நேரங்களில் அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், இன்றைய வன்முறை சார்ந்த உலக அரசியல் சூழலில், நீதி சார்ந்த ஒரு தலைவனுக்காக ஏங்கும் உலக மக்களுக்கான ஒரு குறியீடாகத் திகழ்கிறார் காந்தி.
அன்றைய தேசியத் தலைவர்களையும், மக்களையும் ஒரு சேர நேசித்தது, அவர்களுடன் பழகியது, தமக்கு எதிரான கருத்துகளுடைய அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தது போன்ற சமூக நட்புறவுப் பண்புகள் காந்தி ஒருவரிடமே குவிந்திருந்தன. ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், முகம்மது அலி ஜின்னா, அம்பேத்கர், மவுன்ட்பேட்டன் பிரபு, இர்வின் போன்ற வைஸ்ராய்கள் போன்ற பல எதிரெதிரான கொள்கைகள் உடைய தலைவர்களிடம் நல்லுறவு வைத்துக் கொள்ளும் சமூகப் பண்பு காந்தி ஒருவரிடமே இருந்தது. பால்ய காலத்திலும், தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும் மற்றவரோடு பழகுவதில் மிகக் கூச்ச சுபாவம் உடையவராகவே காந்தி திகழ்ந்தார். பிற்காலங்களில்தான் தனக்கு எதிரான கருத்து உடையவர்களோடும், ஏன் முப்பது கோடி மக்களால் கவரப்படக்கூடிய அளவிற்கு சமூக நட்புணர்வுப் பண்புகளைப் பெற்றிருந்தார் காந்தி. டேனியல் கோல்மேன் போன்ற நவீன நிர்வாகவியல் அறிஞர்கள் வலியுறுத்தி வரும் இந்த சமூக நட்புணர்வுப் பண்புகளை காந்தி அக்காலத்தே பெற்றிருந்தது இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த எளிய மனிதரிடம் முப்பது கோடி மக்களைத் தன் பக்கம் இழுத்த அரிய சக்தி எப்படி வந்தது என்றெல்லாம் உலகம் வியக்கும் அளவிற்கு அதிசயமான மனிதராகவே இன்றும் தோன்றுகிறார் காந்தி. வாலிபத்தில் சிறைக்குச் சென்று வயோதிகராக வெளிவந்த, "சிறையிலும் வாடாத கறுப்பு மலர்' என்று அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா சிறையிலிருந்தபோது தினம்தினம் அண்ணல் காந்தியையே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.
தென்னாப்பிரிக்காவில் மைக்கேல் கோட்ஸ் என்ற பாதிரியார் காந்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற நினைத்தபோதும், அவர் கழுத்தில் அணிந்துள்ள துளசி மாலையை உடைக்க முயன்ற போதும் கோபம் கொள்ளவில்லை காந்தி. மாறாக எனது அன்னை அளித்த புனிதமான அன்பளிப்பு இது; கிறிஸ்தவத்தை எப்போதும் மதிக்கின்ற நான் ஓர் இந்துவாகவே இருக்க விரும்புகிறேன் என்று அன்போடு மறுத்தார்.
சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் பிரிந்த பிறகு, காந்தியை தீர்த்துக் கட்டும் அபாயம் இருப்பதால் காந்திக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வல்லபபாய் பட்டேல் அவரிடம் வேண்டிக்கொண்ட போதும் காந்தி பிடிவாதமாக அதை மறுத்துவிட்டார். "எனது பிரார்த்தனைக் கூட்டத்தில் வருபவரைச் சோதனை இடுவதைப் போன்ற அநாகரிகம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. எனது உயிருக்கு அளிக்கும் பாதுகாப்பை, சாதாரண மனிதருக்கு உங்களால் அளிக்க முடியுமா? என் உயிரை உங்களால் பாதுகாக்க முடியாது. கடவுள் ஒருவர் மட்டும் தான் அதைப் பாதுகாக்க முடியும் என்று படேலிடம் கோபமாகப் பேசினார் காந்தி.
தன் கடைசி நாளில் தன்னைப் பார்க்க வந்த வல்லபாய் பட்டேலிடம் "லண்டனிலிருந்து வெளிவந்த டைம்ஸ் இதழைக் காண்பித்து உங்களுக்கும் நேருவுக்கும் உள்ள கருத்து வேற்றுமை லண்டன் வரை சென்றுள்ளதைப் பாருங்கள். உங்கள் கருத்து வேற்றுமை நாட்டின் அழிவிற்குத்தான் வழிவகுக்கும். இருவரில் ஒருவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். அதை யார் என்று பிறகு சொல்கிறேன் என்றார் காந்தி. மாலை 5 மணி. கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடங்கள் காலதாமதமாகவே சென்றார். பொதுமக்களைப் பார்த்து அவர்களைக் காக்க வைத்த குற்ற உணர்வோடு "நமஸ்கார்' என்று இரு கரங்களாலும் மக்களை வணங்கினார் காந்தி. சிறிது நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காக்கி உடை அணிந்த கோட்சே எனும் வாலிபன் ஒருவன் கூட்டத்தை விலக்கி விட்டு வேகமாக காந்தி முன் வந்து நின்றான். அவரை இருகரம் கூப்பி வணங்கினான். அடுத்த நொடியே, மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான். காந்தியின் கும்பிட்ட கரங்கள் தற்போது அவிழ்ந்து விழுந்தன. ஹே ராம் என்று காந்தியின் உதடுகள் முணுமுணுத்தன. ரோஜாப் பூ போன்ற மென்மையான காந்தியின் உடல் தரையில் விழுந்தது. இன்றும் காந்திக்காக ஏங்கி நிற்கிறது இந்த உலகு.

தேனுகா

நன்றி : தினமணி

2 comments:

said...

//மகாத்மா காந்தி' என்றும், "தேசப்பிதா' என்றும் இன்றளவும் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அண்ணல் காந்தியடிகள். ஆனால் அவரோ, தான் அவ்வாறு அழைக்கப்படுவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கவே விரும்பினார்.//

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்
காந்தியை திரு.ஹ.மோகனதாஸ் என்று அழைப்பதுதான் பொருந்தும் எழைமக்களைப்போல் உடையுடுத்து அவர்போல வாழ நினைத்த காந்தியை காங்கிரஸ் அரசியலார் சுயநலத்தொடு அவரை மகாத்மா ஆக்கி ஏழைமக்களை ஏமாற்று அரசியல் லாபம் பெற்றார்கள். ஏழைகளிடமிருந்து காந்தியைப்பறித்துக்கொண்டார்கள். நாம் மக்களை அழைப்பது பொலவே காந'தியையும் திரு. ஹ.மோகனாதாஸ் என்னேற அழைப்போம் அதையெ அவர் விரம்புவார் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்க காந்தி ஒரு போதும் விரும்பியதில்லை

காந்தி பற்றிய மேத்தாவின் பழையவரிகளை ஞாபகம் கொள்ளுங்கள் காந்தி மகாத்மா ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவக்ள தெரியும் கவிதையின் ஆரம் இப்படி இருக்ககும்

"உன் படங்கள் ஊர்வலம் பொகிறது
நீயேன் நிற்கிறாய்
நடுத்தெருவில் தலைகுனிந்தபடி"..........

நட்புடன்
எஸ்.சத்யன்

said...

இந்த பதிவு படிக்கும் போது, நாம் எப்போற்பட்ட தலைவரை இழந்து விட்டோம் என்று மனது கனக்கிறது. நேற்று கலைஞர் டிவியில் ஹேராம் படம் பார்த்தேன், சே, இந்த மதவாதிகாளினால் எவ்வளவு தொல்லை...

கண்டிப்பாக் காந்தி போல் ஒரு தலைவர் இப்போது நமக்கு தேவை, மதங்களால் மனிதரை பிளவு படுத்தும் மிருகங்களை ஒழிக்க கண்டிப்பாக் காந்தி தேவை.

காந்திக்காக ஏங்கும்...